Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Sari Paathi

Un Sari Paathi 2

நானே உன் சரிபாதி…

2

“கன்யா சதாசிவம்” 

கன்யா என்ற பெயரின் பின்னால் சதாசிவம் என்ற பெயர் சேர்ந்து ஐந்து வருடமாகிறது. மிக மிக விரைவாக வந்து சேர்ந்து கொண்ட பெயர் இது. அதை விட விரைவாக, பெயரை மட்டும் விட்டு பிரிந்து சென்றவனும் அவன்தான்.



Advertisement

அன்று தாலி கட்டியவன் முகம் பார்க்க திரும்பியவள்… பார்த்தது அவனின் வேக நடையைத்தான். என்ன நினைப்பது, பேசுவதா வேண்டாமா, நிற்பானா, திரும்பி வருவானா… ஐயோ அருகில் கூட பார்க்கவில்லையே முகத்தை… என பல கேள்விகள்… ஆசைகள், தேடல்கள் என ஒன்றுக்கு கூட இதுவரை விடை இல்லை.  

அதன்பின் அரைமணி நேரத்தில் ரீஜிஸ்டர் மேரேஜ் செய்யும் போது… அவசராமாக எங்கோ செல்லும் பரபரப்பில் இருந்தான் போல… 

பரபரவென என் தலைஎழுத்தையும் சேர்த்து அவனின் பேனாவில் ஊற்றி… புரியாத கிறுக்கலாய்… கிறுக்கிவிட்டே சென்றான்.

Advertisement

ஐந்து ஆண்டுகள் ஆகியும் விடை கிடைக்கவில்லை. மேலும் கேள்வி கேட்பதற்கு அவன் அருகிலேயும் இல்லை… 

Advertisement

ஆண்டவா ஆஞ்சநேயா… எனக்கு வல்லமை கொடப்பா… என் முன் அவன் வரும்போது அவன் கழுத்தை பிடித்து தூக்கி…. சுவற்றி சாய்த்து… “ஏண்டா… இப்படி” என அவன் கண்களை நிமிர்ந்து பார்த்து கேள்வி கேட்கும் வல்லமை மட்டும் கொடு…. என வியாழன் தோறும் வெற்றிலை மாலை சாற்றுவாள் கன்யா.  

ஆனால், அவன் குடும்பம் முற்றிலும் வேறாய் முழுவதும் உரிமையாய்  இவள் தங்கள் வீட்டிற்கு வரமாட்டாளா… என அவள் முகம் பார்த்து நிற்கும்.

ம்… எப்படி போவது, யாரின் கைபிடித்து போவது… “வா”வென சொல்ல அவளின் மாமனார் மாமியார் என எல்லோரும் உண்டு… 

Advertisement

ஆனால் உரிமையானவன்… உயிரோடிருக்கிறான் என மட்டுமே தெரியும்… மற்றபடி, அவன் எப்படியிருப்பான் அவன் குரல் எப்படியிருக்கும்… அவனின் நிறம் என்ன… நிழல் படத்தில் உள்ளது போல் சிரித்தபடி இருப்பானா… முதலில், என் பெயர் தெரியுமா… என இன்னும் தீராத பல கேள்விகள்…

இப்போதும் அவள் நினைவடுக்கில்… அவனின் முகம் அமைதியாகத்தான் தெரிந்தது… அருகில் உணர்ந்த அவன் வாசம்… ஏதோ ஆப்டர் ஷேவர் ஸ்மெல்தான்… வேறு ஏதும் தெரியவில்லை…

ஆனால், எப்போது அவனின் பெயரை மட்டுமே தன்னுடம் சேர்த்துக் கொண்டாள்… அவளின் கல்லூரி சர்டிப்க்கேட்டிலிருந்து பாஸ்போர்ட் வரை கன்யாசதாசிவம்தான். 

மற்றபடி தாலி பேங்க் லாக்கரில் இருக்க… இவள் இரண்டு பௌன் செயின்னில்… சின்னதாக இரண்டு கிராமில்.. தாலி ஒன்று போட்டிருக்கிறாள். 

ஆக அவளில், அவனாக இருப்பது… அவளுடன் ஒட்டியிருக்கும் அவன் பெயர்தான்… அதைதான் எப்போதும் அழுத்தி அழுத்தி சொல்லுவாள்.. “கன்யா சதாசிவம்” என. 

யாருக்கு எனதான் தெரியவில்லை தனக்கா… இல்லை பிறருக்கா… தெரியாது…

                          %%%%%%%%%%%  

சதாசிவம்… 

வெங்கட்ராமன் கல்யாணி தம்பதிக்கு முதலில் யசோதா என்ற பெண், அவருக்கு அடுத்து சதாசிவம்,  அடுத்து சண்முகம் என இரண்டு மகன்கள்.

வெங்கட்ராமன் எல்.ஐ.சியில் இருகிறார்… கல்யாணி இல்லத்தரசி, யசோதா… திருமணம் முடித்து சிங்கப்பூரில் இருக்கிறார். இரண்டு பிள்ளைகள். 

சதாசிவத்தின் தம்பி சண்முகம்… அப்போதுதான் கல்லூரி முதல் வருடம்…        

சதாசிவம்… எப்படி சொல்லுவது… ஒரு பித்தன்… 

அவனிற்கு பிறரை உயிர்பிக்கும் கலை மட்டுமே தெரிந்த பித்தன். எப்போதும் அவனிற்கு மருந்து நெடிகள் வேண்டும் உயிர் வாழ… ம்… அப்படிதான் அவன். 

பள்ளியிலிருந்தே எப்போதுமே படிப்பாளி அவன். ஓடியாடி விளையாட தெரியாது. தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பான். 

அவனின் மூச்சு காற்று போன்றது படிப்பு… நின்றால், நடந்தால் படிப்பு குறித்த பேச்சுதான் அவனிடம்.

ஆனால் பாவம் அது பற்றி பேசுவதற்கு யாரும் வருவதில்லை அவனுடன்.. அதனாலேயே மனிதர்களிடமிருந்தும், உறவுகள், நட்புகள் என எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கினான். 

எப்போதும் கையில் புத்தகம்தான். கை ரேகைகள் கூட புத்தத்தை தவிர வேறு எவற்றிலும் பதியாது போல… அப்படி ஒரு படிப்பாளி.

அவனின் தோழன், உறவு, எதிரி, பொழுதுபோக்கு, என எல்லாம் தன் மருத்துவம் சார்ந்ததாகத்தான் இருந்தது. எப்போதும் அதை குறித்த தேடல்தான் அவனிடமிருக்கும்.

MBBS படிப்பு இங்குதான் தமிழ்நாட்டில். அப்போதெல்லாம் வீட்டில் இருந்தவரை எப்போதும் உண்பதற்காக மட்டும்தான் அவன் அறையிலிருந்து வெளியே வருவான். சில சமயம், அதுவும் இல்லை. மறந்தபடி படித்துக் கொண்டிருப்பான். 

அவனின் அன்னைதான் சென்று உணவு தருவார். ஆனால் அவரையும் நிமிர்ந்து கூட பார்க்கமாட்டான். 

இரண்டு தரம் உரக்க அழைத்தால்தான் திரும்புவான்… “சாப்பிட்டு படிடா” என அவனின் அன்னை விரட்டினாலும் “ம்..” என்ற சத்தம் மட்டுமே வரும். பின் எவ்வளவு நேரம் நின்று கத்தினாலும் பயன் இருக்காது. கல்யாணியும் தன் வேலையை பார்க்க சென்றுவிடுவார்.

அப்போதெல்லாம் பெற்றோராக பெருமைதான் வெங்கட் தம்பதியருக்கு… பெருமையாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி கர்வமாகவே தன் மகனை நினைப்பார்.

அவனின் படிப்பால் செலவே இல்லாமல் மருத்துவ கல்லூரி சீட் கூப்பிட்டு கொடுத்தனர்… எப்போதும் முதலிடம்தான் சதாசிவம். அவனால் எங்கும் மரியாதைதான் அவனின் பெற்றோர்க்கு… 

சதாசிவம் MBBS முடித்து, ஆறுமாதம் ப்ராக்டிஸ்… முடித்து அப்போது டெல்லியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இருதயம் சார்ந்த படிப்பினை தொடர்ந்து கொண்டிருந்தான். 

அவனின் அறிவு… எல்லாவற்றையும் அவன் காலடியில் கொண்டு வந்தது. கல்லூரியே அவன் பின்னால் சுற்றும்… பேராசிரியர்கள் அவனிற்குதான் முதலில் உதவி செய்வர். 

மிடில் கிளாஸான வெங்கட் குடும்பத்தாருக்கு… அவ்வளோ பெரிய கல்லூரி என்பதே.. பெரிய விஷயமாக இருக்க… அதில் தன் மகன் படிக்கிறான் என்பது இன்னும் நம்ப முடியவில்லை அவர்களால்… சந்தோசம் மட்டுமே… 

ஆனால் சதாவிற்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை போல..  எல்லாவற்றையும் சமமாக எடுத்து, அடுத்து அடுத்து என படித்துக் கொண்டும், தெரிந்து கொண்டும் இருந்தான். தலைக்கேராத கர்வம்… அவனை இன்னும் இன்னும் வளர்த்தது.

ஆனால், இப்போது இன்னும் ஒதுங்கினான். அங்கு சென்றுடன் அவனின் பரிமாணம் மாறியது… அப்போது இருதயம் மாற்று அறுவை சிகிச்சை… என்பது பெரிதாக இருந்தது.

எனவே அதை நோக்கி தனது தேடலை தொடங்கினான்… அங்கிருந்த பலருக்கும் தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டான். நிறைய இன்னும் இன்னும் படித்தான். 

இப்போதும் நிறைய அசிஸ்ட் செய்ய தொடங்கினான்.. அவன் இன்று வர தேவையில்லை என்ற நிலை இருந்தாலும் இவன் போய் நிற்பான் தனது சீனியருடன்.

இதனால் மற்றவர்கள் எரிச்சலைடைந்தாலும் இவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவதில்லை. அனைத்தையும் கவனித்தபடி தனியே நிற்பான்.

எனவே டெல்லி சென்ற கொஞ்ச நாட்களில்… வாரத்திற்கு ஒரு முறை போன் செய்தால், எடுத்து பேசுபவன்… தானே போன் செய்து பேசமாட்டான்.

ஒரு வருடம் சென்ற நிலையில் அவனின் ஆர்வம் பார்த்த அவனின் பேராசிரியர்கள்… இவனிர்காக வெளிநாட்டில் படிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

இப்போதெல்லாம் போனை எடுப்பதேயில்லை சதா… ஆனால், ஒரு தகவல் அதாவது “படிப்பிற்காக வெளிநாடு செல்வதாக வந்திருந்தது” அதுவும் அவனின் கல்லூரியில் இருந்துதான் வந்திருந்தது கடிதம்.    

வெளிநாடு செல்லும் விஷயத்தை வீட்டில் கூட சொல்லவில்லை அவன். எனவே வீட்டினர் சதாசிவத்தை போனில் அழைத்து கேட்க… “ம்… நான் இன்னும் ஆறு வாரத்தில் கிளம்பனும்… என்னால அங்கு வர முடியாது, அப்புறமா ஆறு மாசம் கழித்து வரேன்“ என்றான் அசால்ட்டாக.

வார்த்தைகளை எண்ணி எண்ணித்தான் பேசினான்… இப்போது பேசும் சத்தம் கூட குறைந்து ஒலித்ததோ… அவனின் அன்னை கல்யாணி தனக்குள் நடுங்கிக் கொண்டிருந்தார்… எங்கே பையன் தங்களை விட்டு பிரிந்து விடுவானோ என…

ஆனால், சதாவிற்கு மருத்துவம் என்பது படிப்பாகவோ வேலையாகவோ பார்க்கவில்லை போல… அது மூச்சானது… தான் வெளிநாடு செல்வதை கூட வீட்டினரிடம் சொல்லாத அளவுக்கு பிடித்தது… “அவனின் மருத்துவம்”.  

அவனிற்கு அவன் அம்மாவின் பேச்சு காதில் ஒலிக்க தொடங்கியது “இப்படி இருந்தால் எப்படி” என அவனின் அம்மா எப்போதும் கேட்பார். அவனின் அம்மா கல்யாணிதான் அவனிடம் அதிகமாக பேசும் ஒரே நபர்… அதுவும் எப்போதாவது… அப்போதெல்லாம் தவறாமல் கேட்பார் “ஏண்டா இப்படி வீட்டிலேயே ஒதுங்கி இருக்க…” என..

ஆனால் அவனிற்கு பதில் தெரியாதே… சின்னாதாக சிரிப்பான். அப்போது முகம் ஒளிரும்… ஏதோ அர்த்தசாமத்தில் நிலவொளியில் தெரியும் வைரமென மின்னும் அவன் முகம்… இப்படியே வாய் திறக்காமல் தன் அன்னையை சமாளிக்கவும் செய்வான் சதா.

ஆனால், இப்போது சதா சொன்ன பயணம் குறித்து கேட்டிருந்த குடும்பத்திற்கு மூச்சைடைத்தது…. என்ன செய்வதென்றே தெரியவில்லை… ஒரு வாரம் முழுவதும் இதே யோசனை… 

அப்போதுதான் வெங்கட்ராமன் அவனிற்கு திருமணம் செய்து அனுப்பிவிட்டால்… அவனின் பிடி இங்கிருக்கும்… திரும்பி வருவான் என நினைத்தார்.

                       %%%%%%%%%

வேலை முடிந்து மாலை ஆறரை மணிக்கு மேல் வீடு வந்தாள் கன்யா. சின்ன கேட்டை வண்டியை வைத்தே திறந்தபடி உள்ளே வந்தாள். 

நல்ல அகலமாக இருந்த, கார் நிறுத்துமிடத்தி அவர்களின் இன்னோவா நிறுத்தியிருந்தது போக மீதமுள்ள இடத்தில் தனது ஜுபிட்டர்ரை பார்க் செய்துவிட்டு நிமிர, கதவை திறந்து கொண்டு அவளின் அன்னை மைதிலி நின்றிருந்தார். பெண் பிள்ளைகள் வீடு வரும்வரை இப்படிதான் போல அன்னைகள்.

அங்கேயே தன் அம்மாவின் கையில் தன் லஞ்ச் பாக்கை கொடுத்தவள்… உள்ளே தனது அறைக்கு சென்றுவிட்டாள்… பத்து நிமிடம் சென்று முகத்தை துடைத்தபடி வந்தவளிடம்… மைதிலி அவல் உப்மாவை நீட்ட… அதனை மென்றபடி… ஏதோ யோசனியில் அமர்ந்திருந்தாள்.

மைதிலி… “டீ போடவாடி… இல்ல அண்ணன் வரட்டுமா” என்றார்.

இவளும் “பத்து நிமிழத்துல வந்துட்டா பரவாயில்ல… இல்லேன்னா எனக்கு மட்டும் கொடும்மா” என்றாள்.

மைதிலிக்கு கோவமும் சிரிப்பும் ஒருங்கே வந்தது. அவளுடனேயே அமர்ந்து கொண்டார். இவள் ஏதோ பாட்டு சேனல் போட… அவரும் அதனை பார்த்துக் கொண்டிருந்தார்.

வாசலில் கார்த்தியின் வண்டி சத்தம் கேட்டது… இப்போது உள்ளே எழுந்து சென்றார் மைதிலி. உள்ளே வந்த கார்த்தி, கன்யாவை பார்த்து “ஹாய் ..” என்றுவிட்டு அப்படியே அமர்ந்து கொண்டான் அவள் அருகில்… சோபாவில்.

கார்த்தி காலையில் நேரமே சென்றுவிடுவான்… அவனிற்கு எட்டு மணிக்கெல்லாம் உள்ளே இருக்க வேண்டும்… வீட்டிலிருந்து கொஞ்சம் பக்கம்தான் கார்த்தி ஆபிஸ். எனவே ஹரி பரி இல்லாமல் செல்வான். கன்யாதான் ஓடவேண்டும். 

கன்யாவிற்கு ஒரு அக்கா அனுஷ்யா, அடுத்து அண்ணன் கார்த்தி, கடை குட்டிதான் கன்யா… அப்பா தனபால் ஒரு நெடுச்சாலை துறை அதிகாரி. அம்மா மைதிலி வீட்டு நிர்வாகம்.

அப்பா இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார் உடல்நிலை சரியில்லாமல்… அதைவிட தன் பெண்ணின் நிலை… நினைத்தே பாதி படுத்து விட்டார்.

அவளின் அண்ணன்தான் இப்போது குடும்பத்தை பார்க்கிறான்… அவன் IT யில் வேலை… நல்ல பெரிய கம்பெனி. ஒருமுறை அப்ராடு சென்று வந்திருக்கிறான். பொறுப்பாக குடும்பத்தை பாதுகாப்பவன்.

அனுஷ்யாவிற்கு தனபால் இருந்த போதே திருமணம் முடிந்து இருந்தது. எட்டு வயதில் ரித்விக் என்ற மகன் இருக்கிறான். அவளின் கணவன் செந்தில்குமார். தனியார் கல்லூரியில் வேலை. மாடம்பாக்கதில்தான் குடியிருக்கிறார்கள்.

கன்யாவின் வீடு வேளசேரி… அழகான தனி வீடு… கொஞ்சம் பழைய மாடல்.. கீழே இரண்டு படுக்கை அறை, மேலே இரண்டு படுக்கை அறை என பெரிதாகவே இருக்கும். எல்லா வசதிகளும் கொண்டு… அழகா இருக்கும். அவளின் அப்பா… பார்த்து பார்த்து கட்டியது.    

தனபாலின் சொந்த ஊர் சத்தியமங்களம். அங்குள்ள… பூர்வீக வீட்டில்தான் இவர்களின் எல்லா நிகழ்வுகளும் நடைபெறும். இப்போதும் அங்குதான் கார்த்தியின் திருமணமும் நடக்க உள்ளது.

இரண்டு பெண்களின் திருமணமும் அங்குதான் செய்தார்… தனபால். கார்த்திக்கு இப்போது திருமணம் செய்வதில் விருப்பமில்லைதான், 

ஆனால், கன்யாவின் போராட்டம்தான்… சம்மதம் சொன்னதன் காரணம். ஆனால் சும்மா சொல்லவில்லை சத்தியம் வாங்கியிருக்கிறான் கார்த்தியும்.

திருமணத்திற்கு சதாசிவம் வரவேண்டும் என கீர்த்தனா வீட்டிலும்… நூற்றில் ஒருபங்காக சதாக்கு உன்னை பிடிக்கவில்லை என்றாள் நீ வேறு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தன் தங்கையிடமும் சத்தியம் வாங்கியிருக்கிறான்.

கார்த்திக்கும் அந்த பெண், அதாவது தான் கட்டிக்கொள்ள போகும் பெண் கீர்த்தனா மீது விருப்பமே. தங்கைகாக என தள்ளி போட்டுக் கொண்டிருந்தான். மேலும் சதாசிவத்தின் சித்தப்பா பெண்தான் இந்த கீர்த்தனா…

இப்படி பல சிந்தனைகள் அவரவர்க்கு…. அதே சிந்தனையுடன் உள்ளிருந்து மைதிலி… டீயுடனும்… அவலுடனும் வர… கார்த்தி “ம்மா… டீ மட்டும் போதும்” என்றான் அசதியாக கார்த்தி.

எதுவும் சொல்லாமல் அதனை மட்டும் அவன் கையில் கொடுத்தவர்… “என்னடா… போன் நம்பர் வாங்கிட்டியா..” என்றார்.

கார்த்தி அசதியாக கண்களை மூடிக் கொண்டு… “ம்மா… எல்லாம் இருக்குமா… ஆனா அவனா பேசனும்ன்னு நினைச்சாதான் நடக்கும்… நாம முட்டி மோதினாலும்… ஒன்னும் பண்ண முடியாது… முடியல” என்றான் குரலில் என்ன இருந்தது… ஆற்றாமையா… சலிப்பா… வலியா தெரியவில்லை.

கன்யா காதில் இது விழுந்தாலும்… எதுவுமே கேட்காதவள் போல் தனது டீயை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருத்தாள். பார்த்திருந்த அன்னைக்கு கோவம்தான் வந்தது.

மைதிலி “எப்படி டி… இப்படி இருக்க… எத பத்தியும் கவல படாம… ஒரு போன் பண்ண மாட்டியா… உன் புருஷனுக்கு” என்றார் என்ன செய்வதென்றே தெரியவில்லை அவர்க்கு. 

இத்தனை நாள் இருந்த.. பொறுமை போய் பயத்தை காட்டியது அவர் முகம். இப்போது பையனுக்கு வேறு திருமணம் நடக்க போகிறது. வருபவள் நல்லவளாகவே இருந்தாலும் எத்தனை நாள் தன் பெண்ணை தாங்குவாள் என பயம்.

மேலும் இவர்களின் அண்ணன் தங்கை ஒப்பந்தம் அறிந்தது முதல் அதைவிட பெரிய பயம். தன் கணவன் இருந்து இப்படி என்றால் பரவாயில்லை… 

அவரில்லை, எத்தனை நாட்களுக்கு, இல்லை இல்லை வருடங்கள் கேட்பவர்க்கு பதில் சொல்லுவது என பெரிய பயம் பயம் மட்டுமே.

கன்யாவிற்கு,  தன் அம்மா சொன்னது தெரிந்தாலும், காதில் போடாமல்… தன் போல் சேனல் மாற்றிக் கொண்டிருந்தாள்… கைகள் அந்த வேலையை செய்ய கண்கள் வெறித்தது டிவியை… 

கார்த்திக்கும் புரிகிறதுதான் இருவரின் மனநிலையும். ஆனால், தன் கோவத்தையும் இலயாமையும் எங்கேயையும் காட்ட முடியாமல் அமர்ந்திருந்தான்.

கார்த்திக்கு இப்போது எல்லா பக்கமும் இடி… தங்கைக்காக இந்த திருமணம் என்றாலும், ஒரு கணவனாக வருபவளை அவன் மனம் விரும்பவே செய்கிறது.

எனவே கார்த்தியின் முகம் கவலை கோடுகள் தெரிய… அப்படியே அமர்ந்திருந்தான்… தன் அண்ணனிடம் சத்தம் இல்லை என்றவுடன் திரும்பி பார்த்தாள் கன்யா… அவன் அங்கு நிலையில்லாமல் அமர்ந்திருப்பது தெரிய… 

கன்யாவே பேசினாள் “ம்மா.. நீங்கதானே பார்த்து செய்து வைத்தீங்க… என்னமோ ஊரிலேயே இல்லாத… தங்க மாப்பிளை… தங்கமாய் தாங்குவான்னு செய்தீங்க…. 

அதான் ஊரிலேயே இல்லை… நான் என்ன செய்ய…. புருஷனாம்… புருஷன்… அடிக்கடி சொல்லுங்க இல்லை எனக்கே மறந்திடும்” என நக்கலாக சொல்லி டிவியில் பாட்டு சத்தத்தை இன்னும் பெரிதாக வைத்தாள்… அது அலற தொடங்கியது அவளின் மனம்போல்…

இதெல்லாம் பழக்கம்தான் என மைதிலி பெருமூச்சு விட்டார் இவர்களின் நிலை குறித்து… காரணம்… அண்ணன்… தங்கை… இருவரும் சேர்ந்து எடுத்திருக்கும் முடிவு தெரிந்ததிலிருந்துதான். சொன்னாலும் கேட்பதில்லை இருவரும்.

மேலும் அவருக்கு போராடவும் வலுவில்லை… ஏதோ அவர்கள் சொல்வது போல் நடந்தால் சரிதான் என கடவுள் மேல் பாரத்தை போட்டு தன் பிள்ளைகளின் பேச்சிற்கு தலையாட்ட தொடங்கினார்.

   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!