“உண்மையை சொல்லட்டுமா எனக்கு இந்த கலர் பிடிக்கவே பிடிக்காது. நீங்க சொன்னீங்களே எடுப்பா இருக்கும்ன்னு சோ நான் இதை கட்டிப்பார்க்க போறேன்…”
“ஹேய் எனக்காக எல்லாம் கட்ட வேண்டாம், அந்த ஷாப்ல வேற மாத்திக்கற ஆப்ஷன் இருந்தா மாத்திக்கலாம், நான் பில் தரேன்…” என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம் இதுவே எனக்கு பிடிச்சிருக்கு, கிப்ட் எல்லாம் யாராச்சும் ரீபிளேஸ் பண்ணுவாங்களா” என்றாள்.
காஞ்சனா தயங்கிக் கொண்டே நின்றாள். விஸ்வாவுடையதை கொடுக்கலாமா வேண்டாமா என்று. “ஓகே கிளம்பலாம்…” என்று எழுந்திருந்தான் விஜய். “ஹ்ம்ம்” என்றவாறே அவளும் உடன் எழுந்தாள்.
“சங்கவி நீ வீட்டுக்கு போய்டு நான் இவங்களை ஏர்போர்ட்ல டிராப் பண்ணிடறேன்”
“நானும் உங்களோட ஏர்போர்ட் வர்றேன், திரும்பி வரும் போது உன்கிட்ட நெறைய பேச வேண்டி இருக்கு, கேட்கவும் வேண்டி இருக்கு…” என்று காஞ்சனாவை காட்டி அவனுக்கு புரியுமாறு சொன்னாள்.
“பாவம் நீ திரும்பி வரும் போது தனியா தானே வருவே, பேச்சு துணைக்காச்சு” என்றாள்.
“அவங்களும் வரட்டுமே” என்று காஞ்சனாவும் சொல்லிவிட “நீ அடங்கவே மாட்டியா” என்று சங்கவிக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான்.
“நீ ஒரே ஒரு முத்தம் கொடு நான் எதுவுமே கேட்க மாட்டேன்…”
“உன்னை அப்புறம் வைச்சுக்கறேன்…”
“இப்போவே வைச்சுக்கோ…”
“போடி…”
ஏர்போர்ட்டில் அவளை இறக்கிவிட்டு இவர்கள் விடைபெற “விஜய்” என்று ஒரு வழியாய் அழைத்துவிட்டாள் காஞ்சனா.
“சொல்லுங்க” என்று திரும்பினான் அவன்.
“இது நான் தங்கியிருந்த ரூம் ரெண்ட்” என்று கணிசமான தொகையை அவன் கையில் திணித்தாள்.
“இது வேணாமே??”
“ப்ளீஸ் மறுக்காதீங்க” என்று அவள் சொல்லிவிட அவன் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.
“இ… இது… இது அவர்க்கு கொடுத்திடுங்க… உங்க பிரண்டு மித்ரன்னு நினைச்சு கொடுத்தாலும் சரி, என்னோட ஹஸ்பெண்ட் விஷ்வான்னு நினைச்சு கொடுத்தாலும் சரி…” என்றுவிட்டு திரும்பி பாராமல் உள்ளே சென்றுவிட்டாள் அவள்.
“என்ன நடக்குது இங்க??” என்றாள் சங்கவி.
“ஒண்ணும் இல்லை நீ வா…” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றான். காரில் ஏறிய பின்னே “இப்போவாச்சும் சொல்லேன் என்ன நடக்குதுன்னு, எனக்கு சஸ்பென்ஸ் தாங்காதுன்னு உனக்கே தெரியும்ல”
“காலையில இருந்து ரெண்டு விஷயத்துக்காக உன் பின்னாடியே சுத்தி சுத்தி வர்றேன், கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா” என்றாள்.
அவர்களின் குடியிருப்பு வந்து சேர்ந்திருந்தனர். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு “இறங்கு, இங்கவே தூங்குறதா உத்தேசமா உனக்கு” என்றான் விஜய்.
“கொஞ்சம் இரு…”
“ஏன்??”
“இதுக்கு தான்…” என்றுவிட்டு இவளே அவனை இழுத்து அவன் இதழில் இதழ் பதித்தாள்.
“சரியா கொடுக்க வரலைன்னா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று வேறு சொல்ல இவனுக்கு சிரிப்பு வந்தது.
“கொடுக்கறதையாச்சும் ஒழுங்கா கொடேன்” என்றான்.
“நீயும் கொடுக்க மாட்டா, நான் கொடுத்தாலும் பேசிட்டே இருக்க”
“நானா பேசறேன், நீ தான் பேசறே” என்றவன் இப்போது அவள் ஆரம்பித்து வைத்ததை தனதாக்கி கொண்டான்.
அடுத்தொரு காரின் ஹார்ன் சத்தம் கேட்க இருவரும் சுதாரித்து விலகினர். “சங்கவி உன்னோட கார் கீ” என்று விஜய் நீட்ட இவள் அவன் முகம் பார்க்கவில்லை. “சங்கவி…” என்று இவன் அழுத்தி சொல்லவும் தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் கிளம்பறேன்… தேங்க்ஸ் விஜய்…”
“எதுக்கு தேங்க்ஸ்??”
“நான் கேட்டதை கொடுத்ததுக்கு”
“நீ கேட்டதை நான் இன்னும் கொடுக்கவேயில்லை…” என்று அவன் சொல்ல “அப்போ கொஞ்ச நேரம் முன்னாடி நடந்ததுக்கு அர்த்தம் என்னவாம்” என்று அவள் கேட்க “அது நீ கொடுத்ததை திருப்பி கொடுத்தேன் அவ்வளவு தான்…”
“நானா உனக்கு ஒரு நாள் தருவேன், நீ எதிர்பார்க்காத போது அது நடக்கும்… இப்போ நீ கிளம்பு, பை…” என்று சொல்லி அவளை வழியனுப்பி வைத்தான்.
காஞ்சனா அனவுன்ஸ்மென்ட் வரவும் உள்ளே சென்றாள். பிளைட்டில் ஏறி அமர்ந்ததும் கண்கள் கலங்கிப் போனது அவளுக்கு.
அவன் முன்னே இருந்தால் தான் இன்னும் பலவீனப்படுவோம் என்று உணர்ந்தாள். தவிர விஸ்வாவும் அவளை விலக்கி விலகிச் செல்லுவான், அதை தாங்கிக் கொள்ளும் சக்தி அவளுக்கு இல்லை.
விஸ்வாவை மேலும் டென்ஷனாக்கவும் அவளுக்கு விருப்பமில்லை. இன்றைய நிகழ்வு அவனுக்குள் என்னைப் பற்றிய தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கும் என்று உறுதியாக நம்பினாள் அவள்.
விமானம் ஏறுவதற்கு முன்பே வீட்டிற்கு அழைத்து சொல்லிவிட்டாள், அமுதன் ஏர்போர்ட் வந்துவிடுவதாக கூறியிருந்தான்.
விஜய் அறைக்கதவை திறந்து நுழையும் போது பின்னோடே வந்தான் விஸ்வா.
“என்னடா டல்லா இருக்க?? நான் கூப்பிடும் போதே வந்திருக்கலாம்ல…” என்றான் விஜய்.
“வேணாம் அவளை பார்த்தா நான் கண்ட்ரோல் லூஸ் பண்ணிருவேன் அதான் வரலை…”
“இப்போ மட்டும் நீ என்ன டைட்டாவா இருக்கே??” என்று சிரித்தான் விஜய்.
“ஐ யம் டயர்ட்”
“டீ குடிக்கறியா, காஞ்சனா போட்டது…” என்று அவன் சொல்ல இவனோ ‘இதென்ன கேள்வி கொடு’ என்பது போல் பார்த்தான்.
“இந்தாப்பா உன் பொண்டாட்டி போட்ட டீ” என்று உள்ளே சென்று எடுத்து வந்து அவனுக்கு ஒரு கப்பை நீட்டி தனக்கும் ஒன்று எடுத்துக் கொண்டான். காஞ்சனா விஸ்வாவுக்காகவே போட்டதாக தான் தோன்றியது விஜய்க்கு. பின்னே மூன்று பேருக்கு இவ்வளவு டீ போட்டிருக்க தேவையில்லையே.
மீதமிருந்ததை பிளாஸ்கில் ஊற்றி வைத்திருக்கிறேன் என்று சொன்ன போது கூட ஏதோ கொஞ்சமிருக்கும் என்று இவன் நினைத்திருக்க அது இருவர் குடிக்கும் அளவுக்கு மேலேயே இருந்ததை இப்போது தான் பார்த்தான்.
“அப்புறம் இந்தாடா இது உன் வீட்டு வாடகையாம் காஞ்சனா கொடுத்தது”
“இதை எதுக்கு வாங்கினே??
“வேணாம்ன்னு சொன்னா கேட்கலை… புருஷன் வீட்டில பொண்டாட்டி தங்குறதுக்கு வாடகை கொடுக்கறது இது தான் முதல் முறை”
“அப்புறம் இன்னொரு விஷயம்”
“என்னன்னு புதிர் போடாம சொல்லுடா??”
“அவங்க கிளம்பும் போது அவங்க ஹஸ்பெண்ட்கிட்ட கொடுக்கச் சொல்லி ஒரு கிப்ட் கொடுத்தாங்க. நான் அதை என்ன செய்யட்டும்” என்றவனை கொலைவெறியாய் பார்த்தான் விஸ்வா.
“நீ தான் இப்போ மித்ரனாச்சே”
“டேய்…”
“சரி சரி இந்தாப்பா உன்னோட கிப்ட்” என்று அவள் கொடுத்த அந்த சிறிய பாக்சை நண்பனிடம் கொடுத்தான் விஜய்.
“இதைவிட பெரிய கிப்ட் ஒண்ணு காலையில உனக்கு கிடைச்சிருக்கும் போலவே” என்று சொல்லிவிட்டு பதிலைக் கூட பெறாமல் நண்பனுக்கு தனிமை கொடுத்து நகர்ந்தான் விஜய்.
அவள் அவனுக்காய் கொடுத்ததை வேகமாய் பிரித்தவன் அதில் இருந்ததை எடுத்து கையில் வைத்துக் கொண்டே பார்த்திருந்தான். அவள் முதன்முதலாய் அவனுக்காய் வாங்கிய செயின் அது. என்று அவள் அதில் கேமரா வைத்திருந்தாள் என்று தெரிந்ததோ அப்போதே அதை கழற்றிவிட்டான். அதை அவளுக்கு திருப்பியும் அனுப்பி இருந்தான்.
இப்போது அதே செயினை கொடுத்திருக்கிறாள், என்னவொன்று புதிதாய் இருவரின் முதல் எழுத்தை கொண்டு டாலர் செய்து அதில் மாட்டியிருந்தாள்.