Skip to content
Post Views: 211
தன்னெதிரில் அமர்ந்திருந்தவனை தீர்க்கமாக நோக்கியவள்
“எனக்கு என் ஆதவ் போதும்…. அவனுக்கு அப்பாவும் வேண்டாம், எனக்கு புருஷனும் வேண்டாம்…. இன்பன் கிட்டயும் பருவதம்மா கிட்டயும் நீங்க சொல்றீங்களா? இல்ல நானே அவங்க கிட்ட….” என்று ஆழினி முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
Advertisement
“ஐ லவ் யூ….” என்று அழகான குறுநகையுடன் கூறிய விஜய சிவமாறனை நெற்றிக்கண் திறந்துவிடும் அளவிற்கு தீயாய் முறைத்து கொண்டிருந்தாள் ஆழினி.
“நானென்ன சொல்லிட்டு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க?” என்று கோபமாய் வினவிய ஆழினியை கண்டு மந்தாகாச புன்னகை சிந்தியவன்
Advertisement
Advertisement
“ஏன்? நான் சொன்னது சரியா கேட்கலையா? வேணும்னா திரும்பவும் சொல்லட்டுமா?” என்று வினவியவாறு அவ்விடத்திலிருந்து எழுந்து தன்முன்னிருந்த மேசையில் தன் இரு கைகளை ஊன்றி தீர்க்கமான பார்வையுடன் அழினியின் அருகில் செல்ல, அவனது செயலில் ஒருநொடி திகைத்தவள் எழவும் முடியாமல் அமரவும் முடியாமல் பலவித அவஸ்த்தியில் சிக்கி கொண்டிருந்தாள்.
“ஐ.. லவ்.. யூ….” என்று இம்முறை இன்னும் அழுத்தமாய் குறிப்பாக உறுதியாய் கூறியிருந்தான் விஜய சிவமாறன்.
Advertisement
தன்னெதிரில் நின்றிருந்தவனின் செயலால் வெகுண்டு எழுந்தவள்
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நான் சொல்றது உன் மரமண்டைக்கு ஏறுதா இல்லையா? எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்ட்டமில்ல…. எனக்கு என் பையன் ஆதவ் தான் முக்கியம், அவனை தவிர வேற யாருக்கும் என் வாழ்க்கையில இடம் கிடையாது….” என்று ஆழினி அவ்விடமே அதிரும் வண்ணம் கோபத்தில் கத்தி கொண்டிருக்க, தன்னெதிரில் நின்றிருந்தவளை தன்னுள் இறுக்கமாக அணைத்துக்கொள்ள துடிக்கும் கரங்களை வெகுசிரமப்பட்டு அடக்கி வைத்திருந்தான் விஜய சிவமாறன்.
தன் நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுத்தவன்
“நீ எதுக்காக இப்போ பயப்படுற ஆழினி?” என்று பொறுமையாக வினவியவனை தீயாய் முறைத்தவள் ஏதோ கூற வருவதற்குள்
“என்ன சொல்லப்போற? ‘நான் கோபமா பேசுறது உனக்கு பயப்படுற மாதிரி இருக்கான்னு’ கேட்கப்போற? ஆனா நான் சொல்றது தான் உண்மை, நீ பயப்படுற…. உன் பயத்தை கோபத்தால மூடி மறைக்க பார்க்குற…. ஏனா, உனக்கு கல்யாணம் பண்றது மட்டுமில்ல ‘எங்க அந்த கல்யாணம் உன்னையும் ஆதவையும் பிரிச்சிடுமோன்னு’ பயம்….” என்று உறுதியாய் கூறிய சிவமாறனை விழியகலாமல் பார்த்து கொண்டிருந்தாள் ஆழினி.
“அப்போ நான் சொல்றது உண்மை தான் இல்ல? நீ கல்யாணம் வேண்டாம்னு என் கிட்ட சொல்லும்போது கூட ‘உன் புருஷனை மறக்கமுடியாம தான் அப்படி சொல்றன்னு’ நினைச்சேன்…. ஆனா நீ சொன்னதெல்லாத்தையும் கேட்டதுக்கு அப்புறம் தான் கல்யாணம் மட்டுமில்ல, இதுவரை நீ யாரையுமே காதலிச்சது கூட இல்லன்னு நல்லாவே தெரிஞ்சிடுச்சு…. என்ன பார்க்குற? ஓஹோ, எழிலரசனை பத்தி சொல்லப்போறியா? அவனை இந்த லிஸ்ட்லேயே சேர்க்காத…. அவன் தான் உன்னை லவ் பண்ணான் ஆனா நீ அவனை லவ் பண்ணலன்னு எனக்கு தெரியும் ஏனா அவனை பத்தி நீ பேசும்போது உன் கண்ணுல அவனுக்கான காதல் இல்ல, அதை நான் பார்த்தேன்…. உன் அப்பா அம்மாவுக்காக தான் அவனை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருந்திருப்பன்னு எனக்கு புரியுது….” என்று சிவமாறன் கூற, அவன் கூறியதை கேட்டவள் எதுவும் கூறாது அமைதியாகவே நின்றிருந்தாள்.
“உன்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவன் ‘ஆதவ் நீ சுமந்து பெத்தாலும் சட்டப்படி அவன் உன் குழந்தை இல்ல, உனக்கும் அவனுக்கும் சம்பந்தமேயில்ல, அவன் நமக்கு வேண்டாம் பேசாம அவனை ஏதாவதொரு ஆஷ்ரமத்திலேயோ ஹாஸ்ட்டலேயோ சேர்த்துடுன்னு’ சொல்லுவான்னு தான நீ பயப்படுற? உன்னை பத்தி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஆழினி, நீ நினைச்சிருந்தா உனக்கு சம்பந்தமில்லாத கருவை கலைச்சிட்டு உனக்கான வாழ்க்கையை நீ வாழ்ந்திருக்கலாம் ஆனா ஒரு உயிரை கொல்லக்கூடாதுன்னு முடிவு பண்ணி உன் உயிரை கொடுத்து ஆதுவ நீ பெத்திருக்க…. உன் மனசு யாருக்கு வரும் சொல்லு? உன்னை பத்தி தெரிஞ்ச அந்த நிமிஷமே நான் முடிவு பண்ணிட்டேன் நீதான் என் பொண்டாட்டின்னு…. உன்னை எனக்கு பிடிக்கும்னா அப்போ உன் உயிரிலிருந்து வந்தவன் ஆதவ், அவனையும் எனக்கு பிடிக்கும் ஆழினி…. எனக்கு என் அப்பா அம்மா தான் எல்லாமே, அவங்க மேல சத்தியம் பண்ணி சொல்றேன்…. உன்னை மட்டுமில்ல நம்ம பையன் ஆதவையும் என் உயிருக்கு உயிரா நான் பார்த்துப்பேன்…. என்னை நம்பு ஆழினி….” என்று விஜய சிவமாறன் தீர்க்கமாக கூற, அவன் கூறியதை கேட்டவளின் மனம் முன்பைவிட அதிகமாய் முரண்டு பிடிக்க தொடங்கியிருந்தது.
“வசனமெல்லாம் நல்லாயிருக்கு ஆனா என்னால என் முடிவை மாத்திக்க முடியாது…. பிளீஸ் சார், புரிஞ்சிக்கோங்க…. எனக்கு கல்யாணம் வேண்டாம்….” என்று முடிவாக கூறியவளை இமைக்காமல் பார்த்தவனிடம்
“இனிமேல் நான் இங்க வரமாட்டேன் சார்…. இத்தனையும் நடந்ததுக்கு அப்புறம் மறுபடியும் இங்க வந்து….” என்று ஆழினி முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
“ஓஹோ…. எங்க என்னை லவ் பண்ணிடுவியோன்னு பயப்படுறியா?” என்று நக்கலாக வினவிய சிவமாறனை தீயாய் முறைத்து கொண்டிருந்தாள் ஆழினி.
“எதே? நான்? நான் எதுக்கு பயப்படுனும்?” என்று ஆழினி கோபமாக வினவ
“அப்புறம் எதுக்கு நாளையிலிருந்து இங்க வரமாட்டேன்னு சொல்ற? மனசுல எதுவும் இல்லன்னா இதை இப்படியே விட்டுட்டு அடுத்த வேலையை பார்த்துட்டு போக வேண்டியது தான? ஏன் தேவையில்லாம நொண்டி சாக்கு சொல்லிட்டு இருக்க?” என்று வினவிய விஜய சிவமாறனை முறைத்தவள் எதுவும் கூறாது இல்லத்திற்குள் செல்ல எத்தனிக்க
“ஆழினி….” என்று அழைத்தவனின் குரலை கேட்டு அவனை என்ன என்பதை போல் பார்த்தவளிடம்
“ஐ லவ் யூ….” என்று அதே மந்தகாச புன்னகையுடன் விஜய சிவமாறன் கூற, அவன் கூறியதை கேட்டவள் தன்முன் நின்றிருந்தவனை பார்வையாலேயே பொசுக்கிவிட்டு இல்லத்திற்குள் சென்றிருந்தாள்.
விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் வருகைக்காக இன்பன், பருவதம்மா மற்றும் செல்வி அக்கா மூவரும் இல்லத்தின் கூடத்தில் ஆர்வமாய் காத்திருக்க, ஆதவ் கிருஷ்ணனோ செல்வி அக்கா அளித்த தின்பண்டகளை வாயில் போட்டு அரைத்தவாறு தன் வண்ணப்புத்தகத்தை பலவித வண்ணங்களால் நிறைத்து கொண்டிருந்தான்.
இல்லத்திற்குள் கோபமாக நுழையும் ஆழினியின் அருகில் வேகமாய் சென்றவன்
“ஆழினி, என்னாச்சு? சார் கிட்ட பேசிட்டியா? கல்யாணத்துக்கு உனக்கு ஓகே தான?” என்று இன்பன் ஆர்வமாய் வினவ, அவனை தீயாய் முறைத்தவள் விஜய சிவமாறன் மேலிருந்த கோபத்தைமெல்லாம் அவன் மீது கொட்ட தொடங்கிய நேரத்தில் இன்பனை காப்பாற்றியிருந்தான் அவனின் பப்பாளி.
“அம்மா, இங்க பாரு ஷின்சான் ட்ராயிங்ல கலர் பண்ணிட்டேன்…. நல்லாயிருக்கா?” என்று ஆதவ் கிருஷ்ணன் ஆழினியிடம் வினவ, அவனை கண்டு சிரித்தவள்
“ரொம்ப அழகாயிருக்கு கண்ணா…. மீதி ட்ராயிங்க்கும் இதே மாதிரி கலர் பண்ணுங்க….” என்று கூறிவிட்டு தன்னெதிரில் நின்றிருந்தவனை முறைத்தவள்
“போடா பன்னு….” என்று அடிக்குரலில் மிரட்டிவிட்டு சென்ற ஆழினியை புரியாமல் பார்த்து கொண்டிருந்தான் இன்பன்.
ஆழினியை கேள்வியாக பார்த்து கொண்டிருந்த பருவதம்மாவின் அருகில் சென்றவள்
“பிஸியோக்கு டைமாச்சு, வாங்கம்மா மெல்ல மெல்ல நடக்க முயற்சி பண்ணலாம்….” என்று எதுவும் நடவாதவாறு சாதாரணமாக கூறிய ஆழினியை திகைப்பாய் பார்த்தவர்
“ஆழினிம்மா, நீயும் சிவாவும்….” என்று பருவதம்மா முழுதுமாய் கூறி முடிப்பதற்குள்
“அதெல்லாம் சரியா வராதும்மா…. அந்த எண்ணத்தையே மறந்துடுங்க….” என்று தீர்க்கமாக கூறிய ஆழினியின் கூற்றை கேட்டு பருவதம்மா மட்டுமல்லாது கூடத்திலிருந்த இன்பனும் செல்வி அக்காவும் அதிர்ச்சியடைய, இல்லத்தின் வாயிலில் நின்றிருந்த விஜய சிவமாறனோ தன் கரங்களை மார்புக்கு நடுவில் கட்டிக்கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் படம் பார்ப்பது போல் தீவிரமாக (கூலாக) பார்த்து கொண்டிருந்தான்.
ஆழினியின் பதிலை கேட்டு பருவதம்மாவின் முகம் சோகத்தில் சுருங்கிவிட, அவளெதிரில் நின்றிருந்தவன்
“என்ன ஆழினி பேசுற? எது பேசுறதாயிருந்தாலும் ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சு பேசு…. நீ எடுத்திருக்க முடிவு சரியில்ல ஆழினி, ஆதவ் பத்தியும் கொஞ்சம் யோசி….” என்று இன்பன் கோபமாக கூற, அவனை தன் கண்களிடுங்க முறைத்தவள்
“ஆதவ் கூட்டிட்டு வீட்டுக்கு போ இன்பா….” என்று ஆழினி கூறியதை கேட்டதும் உற்சாகமாக வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த ஆதவ் கிருஷ்ணனின் முகம் முற்றிலுமாய் சுருங்கிவிட்டது.
ஆழினியின் புடவை முந்தானையை பிடித்து மென்மையாக இழுத்தவன்
“அம்மா….” என்று அழைத்த தன் மகனை என்ன என்பதை போல் பார்த்து கொண்டிருந்தவளிடம்
“நாம இங்கேயே கொஞ்ச நேரம் இருக்கலாமே?” என்று ஆதவ் கிருஷ்ணன் வினவியவாறு வாயிலில் நின்றிருந்த விஜய சிவமாறனை ஏக்கமாக பார்த்து வைத்தான்.
ஆதவ் கிருஷ்ணனின் மனநிலையை உணர்ந்தவன் அவனை தன் கரங்களில் ஏந்தியவாறு
“ஆது கண்ணா, நானும் அம்மாவும் பருவதம் பாட்டியை கூட்டிட்டு ஹாஸ்பிடல் போறோம்டா…. நீ உன் பன்னு மாமா கூட வீட்டுக்கு போங்க, அம்மா ஹாஸ்பிடல் போயிட்டு சாய்ந்திரம் வந்துடுவாங்க….” என்று விஜய சிவமாறன் கூற, அவனிடம் சரியென்பதை போல் அரைமனதாய் தலையசைத்தவன் தன் அன்னையை ஒருநிமிடம் பார்த்துவிட்டு
“நீங்க…. நீங்க நம்ம வீட்டுக்கு வரமாட்டீங்களா அப்பா?” என்று நாதழுதழுக்க வினவிய ஆதவ் கிருஷ்ணனின் கேள்வியில் விஜய சிவமாறன் மட்டுமல்லாது ஆழினியும் ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.
தன் மகனின் மனதில் சிறு ஆசை தோன்றினாலும் அதை அவனது நீலநிற கண்களின் வழியே கண்டுக்கொள்பவள் இன்று ஆதவ் கிருஷ்ணனின் கண்கள் விஜய சிவமாறனை ஏக்கமாக பார்ப்பதும் குறிப்பாக பழகிய சில மணிநேரங்களிலேயே இருவரிடத்தில் தோன்றிய ஒட்டுதலையும் கண்டு ஆழினியின் மனம் திடுக்கிட்டிருந்தது. ஆனால் இப்பொழுது அவனின் அப்பா என்ற அழைப்பு ஆழினியை கோபம் கொள்ள வைக்க, அவளருகில் நின்றிருந்த இன்பனின் கண்கள் மகிழ்ச்சியில் கலங்க தொடங்கிவிட்டது.
இதற்காக தானே அவன் இத்தனை வருடம் காத்திருந்தான். அவன் நினைத்தது போலவே ஆதவ் கிருஷ்ணனுக்கு தந்தை கிடைத்துவிட்டார் ஆனால் அது உண்மையாக வேண்டுமெனில் அது ஆழினியின் வார்த்தையில் தான் உள்ளது. வெகுவிரைவில் ஆழினிக்கும் விஜய சிவமாறனுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கடவுளிடம் இன்பன் மன்றாடி கொண்டிருக்க, அவனை போலவே கடவுளிடம் பிரார்த்தனை செய்த பருவதம்மா மற்றும் செல்வி அக்காவின் மனமோ ஆதவ் கிருஷ்ணன் மற்றும் விஜய சிவமாறனின் இணைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்துவிட்டது.
தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவனின் தோள்களை சுரண்டியவன்
“சொல்லுங்க அப்பா…. நம்ம வீட்டுக்கு வரமாட்டீங்களா?” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறி தன் உதட்டை பிதுக்க, அவனது அப்பா என்ற அழைப்பிலேயே உள்ளம் நெகிழ்ந்தவன் தன் கண்களிலிருந்து வழிய காத்திருக்கும் கண்ணீரை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவாறு அவனிடம் ஏதோ கூற வருவதற்குள்
“ஆதவ் அவங்கொன்னும் உன் அப்பா….” என்று ஆழினி தன் வாக்கியத்தை முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள் விஜய சிவமாறனின் தீப்பார்வையில் சட்டென்று அமைதியாகிவிட்டாள்.
தன் செயலை நினைத்து தன்மீதே கோபம் கொண்டவள்
“ச்சே, இவன் பார்த்தா நான் ஏன் அமைதியாகுறேன்?” என்று தன் மனதில் நினைத்த ஆழினியை சிறிதும் கண்டுகொள்ளாதவன் தன் கரங்களில் வாகாய் அடங்கியவனிடம்
“அப்பாவுக்கு நிறையா வேலையிருக்கு கண்ணா, நீங்க இப்போ வீட்டுக்கு போங்க நான் அப்புறமா வரேன்…. வரும்போது உங்களுக்கு நிறையா டாய்ஸ் வாங்கிட்டு வரேன் சரியா?” என்று விஜய சிவமாறன் கூறிவிட்டு ஆதவ் கிருஷ்ணன் கன்னத்தில் முத்தமிட, அதில் கன்னக்குழி தெரியும் அளவிற்கு அழகாய் சிரித்தவன் முத்தத்தை இரட்டிப்பாய் அளித்திருந்தான்.
இன்பனின் கைகளில் ஆதவ் கிருஷ்ணனை கொடுத்தவன்
“நாம பொறுமையா பேசலாம் இன்பா…. இப்போ நீங்களும் ஆதவும் வீட்டுக்கு போங்க….” என்று கூறிய விஜய சிவமாறனை குழப்பமாக பார்த்தவன்
“எப்படி சார்? ஆழினி இன்னும்….” என்று இன்பன் ஏதோ கூற வருவதற்குள்
“எது சாரா? மாமான்னு கூப்பிடு இன்பா….” என்று சிவமாறன் கூறியதை கேட்டு ஆழினி அதிர்ச்சியடைய, அவளை தவிர்த்து கூடத்திலிருந்த அனைவரும் எல்லையில்லா மகிழ்ச்சியில் திலைத்துவிட்டனர்.
விஜய சிவமாறனின் கூற்றை கேட்டதும் இன்பனின் கண்கள் கலங்க ஆரம்பிக்க, அதை சிரமப்பட்டு அடக்கியவன்
“நீங்க…. நீங்க ஆழினியை…. நிஜமாத்தான் சொல்றீங்களா?” என்று கூறிய இன்பன் சந்தோஷத்தில் வார்த்தை வராமல் தடுமாற, அவனை கண்டு மெலிதாக சிரித்தவன்
“நீங்களும் ஆதவும் வீட்டுக்கு போங்க, நான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்து உங்க கிட்ட பேசுறேன்….” என்று கூறிய விஜய சிவமாறனிடம் சரியென்பதை போல் தலையசைத்தவன் அனைவரிடமும் விடைப்பெற்று ஆதவ் கிருஷ்ணனை தன்னுடன் அழைத்து சென்றிருந்தான் இன்பன்.
தன்னெதிரில் தன்னை முறைத்தவாறு நின்றிருந்த ஆழினியை கண்டு குறுநகை சிந்தியவன் செல்வி அக்காவிடம்
“அம்மாவை கூட்டிட்டு போய் அவங்க கிளம்புறதுக்கு ஹெல்ப் பண்ணுங்க அக்கா…. இன்னும் அரைமணிநேரத்துல ஹாஸ்பிடல் கிளம்பனும்….” என்று விஜய சிவமாறன் கூற, அவன் சொல்படியே பருவதம்மாவை நகரும் நாற்காலியில் அழைத்து கொண்டு அவரின் அறைக்குள் செல்வியும் சென்றிருந்தார்.
பருவதம்மாவின் அறைக்குள் சென்றவர்கள் அறைக்கதவை சாற்றும்வரை காத்திருந்தவன் தன்னை முறைத்து கொண்டிருந்தவளிடம்
“நீ நினைச்ச மாதிரியே நாம இப்போ தனியா இருக்கோம், என் கிட்ட என்ன பேசணும் சொல்லு?” என்று ஆழினி நினைத்ததை அவள் கூறும் முன்பே செயல்படுத்தியவனை நினைத்து திகைத்தவள் அதை தனக்குள் மறைத்தவாறு
“உங்களுக்கு என்ன தான் சார் வேணும்? நான் தான் உங்க கிட்ட சொல்லிட்டேனே எனக்கு கல்யாணம் வேண்டாம்னு…. ஏன் மறுபடியும் மறுபடியும் என்னை டார்ச்சர் பண்றீங்க? உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையிருந்தா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாமே? ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க?”
“ஏன் உனக்கு என்னை கல்யாணம் பண்ண பிடிக்கல?”
“உங்களை இல்ல, யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது…. எனக்கு என் ஆதவ் தான் முக்கியம்….”
“ஆனா அவனே என்னை அப்பான்னு கூப்பிட்டுட்டான் இதுக்கு மேல என்ன வேணும்? ஆதவ்க்கு நல்ல அப்பாவை நான் இருப்பேன் ஆழினி…. அதுவுமில்லாம நான் உன்னை….” என்று விஜய சிவமாறன் முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
“என் பையன் உன்னை அப்பான்னு கூப்பிட்டா, நான் உடனே உன்னை கல்யாணம் பண்ணிக்கனுமா? அது இந்த ஜென்மத்துல நடக்காது….” என்று ஆழினி கோபமாக கூற, அவளை கண்டு நக்கலாக நகைத்தவன்
“நடக்கும்…. உனக்கும் எனக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும் அதுவும் உன் சம்மதத்தோட…. சொல்ல மறந்துட்டேன், இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு கல்யாணம் ரெடியா இரு….” என்று தீர்க்கமாக கூறிய விஜய சிவமாறனிடம்
“நீ நினைக்கிறது கனவுல கூட நடக்காது….” என்று உறுதியாக கூறியவாறு அவனை கண்டு ஏளனமாக சிரித்து வைத்தாள் ஆழினி.
கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு நாட்கள் ஆர்பாட்டமாய் கடந்திருக்க, அவன் கூறியது போலவே அவளின் முழு சம்மதத்துடன் தன்னவளின் கழுத்தில் மஞ்சள் நாணினை அணிவித்து அவளவனாய் மாறியிருந்தான் ஆழினியின் விஜய சிவமாறன்.
ஒளி வீசும்….
error: Content is protected !!