ஊஞ்சலாடும் முகிலே 34
அத்தியாயம் 34
“உன் கையில இப்படி இருக்கே ஈஸ்வர்” என்ற லதா மகன் அப்பொழுது தான் அவனை அவனே கவனிப்பதைக் கண்டு செவிலியரை அழைத்தார்.
Advertisement
சின்ன சின்னதாய் சிராய்ப்புகள் தான் என்றாலும் இரு கைகளிலும் கை முட்டுகளிலும் என இப்பொழுது தான் கீர்த்திஸ்வரனும் அன்னை சொல்லிய பின் தான் கவனித்து அந்த சிறு எரிச்சலையும் உணர்ந்தான்.
அவனுக்கும் மருத்துவ உதவிகள் கொடுக்கப்பட மகேஸ்வரனுக்கு சிகிச்சை முடிந்து வெளிவந்தார் மருத்துவர்.
Advertisement
Advertisement
“விழுந்த வேகத்துல கால் முட்டில பலமா அடிபட்டிருக்கு. கையை ஊனி தான் பேலன்ஸ் பண்ணிருக்காங்க. அதனால தான் கையிலயும் ஃபிராக்ச்சர். டிரீட்மென்ட் குடுத்திருக்கோம். சரியாக நாள் எடுக்கும். கண்டிப்பா ஃபுல் ரெஸ்ட் வேணும். பார்த்துக்கோங்க. இன்னைக்கு ஒருநாள் இங்கேயே இருக்கட்டும். செக்கப் பண்ணி நாளைக்கு அனுப்புறோம்” என்று சொல்லி அவர் சென்றுவிட, ஈஸ்வரனும் கை காயங்களுக்கு மருந்திட்டுவிட்டு வந்துவிட்டான் அன்னையிடம்.
“பெருசா எதுவுமில்லைன்னு சந்தோஷப்பட்டுக்கணும் ம்மா. அதுவும் செப்டிக்காக தோண்டின பள்ளம் வேற. நல்லவேளை எந்த அசம்பாவிதமும் இல்லை சைட்ல வேற யாருக்கும்” என்றான் மீண்டும் சமாதானமாய்.
Advertisement
“பயமா இருக்கு ண்ணா. டாக்டர் என்னவோ சொல்றாங்க!” அஞ்சலி சொல்ல,
“அப்பாக்கு கை கால் ரெண்டுலயும் அடியாம் ஈஸ்வர்!” என அன்னையும் சொல்ல,
“ஹ்ம் ம்மா! வரும் போதே பார்த்துட்டேன். அதுவும் ஆபரேஷன் பண்ற அளவுக்கு இல்லைல? அதை தான் சொன்னேன் இதோட முடிஞ்சதேனு சந்தோசப்பட்டுக்கணும்னு. இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம் அப்பா!” என ஈஸ்வர் சொல்லிக் கொண்டிருக்க,
“நீங்க போய் பார்க்கலாம்!” என சொல்லிவிட்டு சென்றனர் மகேஸ்வரன் அறையில் இருந்து வெளிவந்த நர்ஸ்.
வலது கையிலும் இடது காலிலும் முழுதாய் முட்டிவரை நீண்டிருந்தது வெள்ளைநிறக் கட்டு.
வலியின் சாயல் முகத்தில் தெரிய கண்களை மூடியபடி படுக்கையில் மகேஸ்வரனைக் கண்டதும் அத்தனை கவலை லதாவிற்கு.
இத்தனை வருட திருமண வாழ்க்கையில் இப்படி கணவன் ஓரிடத்தில் இருந்து பார்த்ததே இல்லையே.
“ப்பா!” என அஞ்சலி அழைக்கவும் கண்களை திறந்த மகேஸ்வரன் இவர்களைப் பார்த்ததும் மீண்டுமாய் கண்களை மூடிக் கொண்டார்.
“கவனமா இருந்திருக்கலாம்ல? வலி இருக்கா?” என்றது கீர்த்திஸ்வரன்.
“எல்லாம் அந்த மேனேஜர்னால. எங்க அவனை? நான்பாட்டுக்கு சுத்தி கவனிச்சு கணக்கெடுத்துட்டு இருந்தேன். அவன் தான் அளவு எடுக்கணும்ன்னு சொல்லி காட்டுறேன்னு கூட்டிட்டு போனான். பாவிப்பய. “ என்றவர் வலியோடு பல்லைக் கடிக்க,
“அவருக்கும் அடி தான் ப்பா. இப்ப தான் வீட்டுக்கு போக சொல்லிட்டு வந்தேன்!”
“வீட்டுக்கு போக சொன்னியா? என்னை பார்க்க வராமலே கிளம்பிட்டானா? வந்திருந்தா தெரிஞ்சிருக்கும் அவனுக்கு நான் யார்னு” என்றவர் பேச்சில் இந்த நிலையிலும் இவருக்கு இது தேவையா” என்று பார்த்தார் லதா.
“ப்ச்! அவரே பயந்து போய் தான் இருக்கார். நீங்க என்ன ப்பா!” என்ற ஈஸ்வர்,
“நாம தான் கவனமா இருக்கனும். அவரும் என்ன பண்ணுவார்? உங்களுக்கு ஹெல்ப் பண்ண போய் தான் அவருக்கும் இப்ப காயம்!” என்ற மகனை,
“நீ என்னைக்கு தான் என் பேச்சை கேட்ட?” என்றவர்,
“இப்ப நான் எப்படி நடக்க?” என்றார் கோபமாகவே.
“இப்ப எங்க நடக்க போறீங்க? நாளைக்கு தான் டிஸ்சார்ஜ். அப்புறமும் ஒரு மாசம் பெட் ரெஸ்ட் தான்” என்றவனை,
“என்ன?” என அதிர்ந்து பார்த்தவர் கையையும் அதே வேகத்தில் அசைத்துவிட, வலியில் கத்திவிட்டார்.
“ப்ச்! ப்பா. சும்மா சும்மா ஷாக் ஆகி டென்ஷன் எடுத்து இன்னும் கஷ்டமாக்கிடாதிங்க” என்றவனுக்கு கொஞ்ச நேரம் முன்பிருந்த தந்தை மீதான பாவம் என்ற நிலை போய் கொஞ்சம் கடுப்பாகி இருந்தது அவர் பேச்சினில்.
லதா கணவனின் இந்த விதமான பேச்சில் வாயே திறக்கவில்லை அவரிடம். ஏன் வாயைக் கொடுத்து வாங்கிக் கொள்வானேன் என இருந்து கொண்டார்.
“என்னை இன்னைக்கே வீட்டுக்கு கூட்டிட்டு போ ஈஸ்வர்!” என அவ்வளவு கெஞ்சல் மகேஸ்வரனிடம்.
“சின்ன பசங்க மாதிரி பண்ணாதீங்க ப்பா. டாக்டர்ஸ் என்ன சும்மாவா சொல்லுவாங்க!” என ஒரே வார்த்தையில் ஒன்றும் செய்ய முடியவில்லை மகேஸ்வரனுக்கு.
வேறு வழியே இல்லை என்று அன்றைய நாள் முழுதும் அங்கேயே தான் அவரின் வாசம். அன்னையையும் தங்கையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டான் ஈஸ்வர்.
லதா தானும் இருப்பதாய் சொல்லி இருக்க, மறுத்தவன், “நான் பாத்துக்குறேன். நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவோம்!” என சொல்லிவிட்டு அடுத்தநாள்,
“நான் ஒரு நர்ஸ் அரேஞ் பண்றேன் வீட்டுக்கு வந்து உங்களை பார்த்துக்க!” என தந்தையிடம் சொல்ல,
“நர்ஸ்ஸா? என்ன டா நினைச்சுட்டு இருக்க நீ? என்னை இந்த பாடு படுத்துறதுக்கும் எதாவது விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க!” என அத்தனை பேச்சு.
“வேற என்ன பண்ண சொல்றிங்க?” என்றான். அதிகத்திற்கும் இதென்ன இத்தனை செய்கிறார் என ஆகிவிட்டது ஈஸ்வருக்கு.
“ஏன் உன் அம்மாக்கு வேற என்ன வேலை? சும்மா தானே இருக்கா? எனக்கு நர்ஸ் எல்லாம் எதுவும் வேண்டாம்!” என்று அதுவும் சத்தமாய் வேறு அவர் சொல்ல,
“என் அம்மா ஏன் உங்களுக்கு பார்க்கணும்?” என்றான் அடக்கப்பட்ட கோபமான குரலில்.
“ம்ம்ம் என்னால தானே அந்த வீட்டுல அவ இருக்கா? நான் இல்லாம அந்த வசதி அவளுக்கு எப்படி வந்துச்சாம்?” என்று வாயை விட, அதற்கு மேலும் பேசாமல் இருக்க முடியவில்லை கீர்த்திஸ்வரனுக்கு.
“வசதி, சொத்து, பணம், அந்தஸ்து இது தவிர எதுவுமே தெரியாதா ப்பா உங்களுக்கு? இது மட்டும் தான் அம்மா அங்க இருக்க காரணமா? ஒரு மனைவியா அவங்க உங்களுக்கு பார்க்கணும் அது கடமைனு சொல்லிருந்தா கூட பரவால்ல. எப்ப பாரு காசு, பணம், சொத்துனு!” என சுள்ளேன்று கேட்டவன்,
“அம்மாவும் தான் உடம்புக்கு முடியாம வீட்டுல இருந்தாங்க. நீங்க அவங்களை பார்த்தீங்களா என்ன? அவங்களும் வசதியான வீட்டு பொண்ணு தான். என்ன ஒண்ணு உங்களை நம்பி வந்தவங்க. அப்ப அவங்க கணவனா நீங்க அவங்களை கவனிச்சிருக்கணும் தானே!” என பேசியவனை தலை சுற்றப் பார்த்தார் மகேஸ்வரன்.
“நான் என்ன சொல்றேன். நீ என்ன டா சொல்ற?” என்றவர் கோபம் மட்டும் குறையவே இல்லை.
“ப்ச்! உங்களுக்கு சொல்லி என்னால புரிய வைக்க முடியாது ப்பா. நர்ஸ் வருவாங்க . அவங்க தான் உங்களைப் பார்த்துப்பாங்க. அவ்வளவு தான்!” என்றுவிட்டான்.
சொல்லிய கையோடு அன்னைக்கு அழைத்து விஷயத்தை சொல்லி தந்தையிடம் பேசியதையும் சொல்ல அவரிடம் அத்தனை அமைதி.
“என்ன ம்மா? அப்பா அப்படித்தான்னு சொல்லுவீங்களே. இப்ப என்ன ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று லதா மௌனத்தில் கீர்த்திஸ்வரன் கவலையாகிறாரோ என நினைத்து கேட்கவும்,
“ப்ச்! அது தெரிஞ்சது தான். ஆனா நான் இப்ப வேறொன்னு யோசிச்சேன்!” என்றதும் கண்கள் சுருங்க என்னவென்று அவன் பார்க்க,
“கை காலோட வாயும் திறக்க முடியாம போயிருக்கலாம்ல. அதுல கூட கடவுளுக்கு என்னவொரு ஓர வஞ்சனை பாரு!” என்று லதா சொல்லவும் எழுந்த புன்னகையை இதழ் கடித்து அடக்கினான் கீர்த்திஸ்வரன்.
“ம்மா!” என்று சின்னதாய் அவன் சிரிக்க,
“மனுஷனுக்கு வாய் மட்டும் தான். அடங்குவேனாங்குது. அந்த ஆத்திரம் தான் வேறென்ன!” என்று சொல்லியவர்,
“ஆனா அவருக்கு நர்ஸ் எல்லாம் வேண்டாம் நான் பாத்துக்குறேன்!” என்று சொல்லவும் ஒற்றை புருவம் ஏற்றி அவன் வியப்பாய் பார்க்க,
“நான் பார்த்தா தான் எனக்கு வசதி. நர்ஸ் வந்து நல்லா பார்த்துகிட்டா மறுபடியும் கையில பிடிக்க முடியாது அந்த ஆளை!” என்றதில் வெடித்து வர இருந்த புன்னகையை அடக்க பெரும்பாடானது ஈஸ்வருக்கு.
“உங்களால தான் ம்மா இதெல்லாம் முடியும்!” என்று சொல்லி ஒரு பெருமூச்சோடு அன்னை சொல்லை ஏற்றுக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.
‘நான் சொல்லும் போது வேண்டாம்னு ஒத்த காலுல நின்னான். இப்ப எப்படி நர்ஸ்ஸை நிறுத்தினான்!’ எனும் கேள்வி ஓடிக் கொண்டே இருந்தது மண்டையினுள்.
ஆனாலும் வாய் திறந்து கேட்டு தவளை தன் வாயால் கெட்ட நிலை வேண்டாம் என்று தான் அமைதியாகிவிட்டார்.
லதா கால் எழுந்து கொள்ள முடியாத நேரம் எந்த அறையில் இருந்தாரோ அங்கே தான் இப்பொழுது மகேஸ்வரனின் வாசம். அதுவும் லதா சொல்படி.
திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தையை தந்தையிடத்தில் கொண்டு வர நினைத்த நேரமா இப்படி நடக்க வேண்டும் என கீர்த்திஸ்வரன் யோசிக்க,
“ஏதாச்சும் வழி கிடைக்கும். நீ சொன்ன மாதிரி அந்த சின்ன அம்பானிகிட்ட எப்படி பேசுறதுன்னு நீ பாரு. உன் அப்பாவை நான் பாத்துக்குறேன்” என லதா கூறினார்.
சொன்னது போலவே செயலையும் ஆரம்பித்து இருந்தார்.
மகேஸ்வரனுக்கு காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை என உதவிக்கு யாரேனும் ஒரு துணை தேவையாய் தான் இருந்தது.
மகன் சொல்லியதைப் போல நர்ஸ் வந்திருந்தால் பரவாயில்லையோ என தோன்றிவிட்டது ஒவ்வொரு நேரமும் லதா என்று அழைக்கையில் எல்லாம்.
“லதா!” என முதல் நாள் காலை அவ்வளவு சத்தம் மகேஸ்வரனிடம்.
“எனக்கு பாத்ரூம் போகணும்!” என்று சொல்லவும் லதாவும் அமைதியாய் உதவி நின்றார்.
அடுத்தடுத்த நாட்களில் லதா என்று அழைக்கும் குரலில் சத்தம் மட்டும் குறைய ஆரம்பித்துவிட்டது.
“என்ன எப்ப பாரு லதா லதான்னு? வேற வேலை எல்லாம் முடிச்சுட்டு தானே வர முடியும்? நானும் இந்த ரூம்ல இப்படி தான் படுத்திருந்தேன்.. உங்க பேரை சொல்லி கூப்பிட்டுட்டேவா இருந்தேன். சும்மா நொய் நொய்னு!” என்று நேரே சொல்லியே விட்டார்.
அவர் இருந்த நிலையில் எதிர்த்து பேசி சண்டையிடவும் முடியவில்லை. இவளிடம் இப்படி நிற்க வேண்டியுள்ளதே என்று தோன்ற ஆரம்பித்து ஒரு கட்டத்தில் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருந்ததில் வாழ்க்கை வெறுக்கவே தொடங்கிவிட்டது.
“எனக்கு நீ தானே பார்க்கணும். சும்மா சும்மா கோவப்பட்டுட்டு இருக்க நீ? நான் நல்லா இருந்தா இப்படியா நாலு சுவத்துக்குள்ள இருந்து உன்கிட்ட எல்லாம் பேச்சு வாங்கிட்டு இருப்பேன்?“ என்று ஒரு வேகத்தில் ஒரு நாள் கேட்டும் விட்டார்.
“ஆனா நான் நல்லா இருக்கேனே! நல்லா இல்லாம கொஞ்ச நாள்ன்றதுக்கே இந்த ரூம்குள்ள இருந்ததுக்கு இந்த பேச்சு. நான் வருஷம் முழுக்க இந்த வீட்டுக்குள்ள நாலு சுவத்துக்குள்ள இருந்து உங்ககிட்ட பேச்சும் வாங்கிகிட்டு இருக்கேனே. அது எதுல சேர்த்தி ஆகும்? அதுக்காக உங்களுக்கு கட்டி வச்சாங்க என் அம்மா அப்பா?” என்று கேட்டார் லதாவும்.
அவர் அதிராமல் அவ்வளவு அசால்ட்டாய் கேட்ட விதமே இதற்கென்றே இத்தனை நாட்கள் காத்திருந்ததாய் தெரிந்துவிட்டது.
