Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 18

அத்தியாயம் – 18

சென்னை, விமான நிலையம்.



Advertisement

வருணன் மிகுந்த பதட்டத்துடன் உதயனுக்காகக் காத்திருந்தார். தில்லியில் இருந்த அவரது தொடர்புகள் யாரிடமும் இருந்து எந்த சரியான பதிலும் பெறமுடியவில்லை. 

தொலைக்காட்சியிலும், சமூக ஊடகங்களிலும் வந்த செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்க, அது வேறு வருணனை மிகுந்த மன அழுத்தத்திற்குள் தள்ளியது. எதுவும் முழுமையாகத் தெரியாத நிலையில், கோவையில் இருந்த பெரியவர்களை மேலும் பதட்டப்படுத்த வேண்டாம் என்ற கட்டாயத்தில் அமைதி காத்தார்.

Advertisement

Advertisement

சென்னையில் இறங்கியதும் பார்த்த செய்தியில் அதிர்ந்து நின்ற அவரை உதயன் மணிவாசகத்திடம் இருந்து வந்த அழைப்பே நிகழுலகிற்குள் இழுத்து வந்தது.

“வருண், எமர்ஜென்சி. நாம உடனே டெல்லி போகணும். உன்னைய பிக் பண்ண அனுப்பின டிரைவர் அங்க தான் வெயிட் பண்ணிட்டு இருக்கார். உன்னைக் கூப்பிடுவார் இப்போ. நீ கெஸ்ட் ஹவுஸ் போகாம நேரா ஏர்போர்ட் வந்துடு” என்றார் படபடவென.

Advertisement

“அண்ணா, என்னாச்சு? வசு ஓகேவா?” என்றார் வருணன் நடுங்கிய குரலில்.

“தெரில வருண். நீ வா பேசிக்கலாம்” என்ற உதயன், வருணன் வந்த சிறிது நேரத்திலேயே விமான நிலையத்திற்கு வந்து விட்டார். அவரது வழமையான வெள்ளை சட்டை, கருப்பு காற்சட்டையுடன் வேக நடையில் வந்தவருக்கு விமான நிலைய அதிகாரிகள் வணக்கம் வைத்து தனி விமானம் இருந்த இடத்திற்கு வழிகாட்டினர்.

அவரைப் பார்த்ததும் ஏதோ கேட்க வந்த வருணனை, பார்வையில் அடக்கினார் உதயன். படு வேகமாக தேவையான பாதுகாப்பு சோதனைகளை முடித்தவர்கள் இருவரும் விமானத்தில் ஏறினர். விமானக் கதவு மூடும் வரை கஷ்டப்பட்டு பொறுமை காத்த வருணன்,

“அண்ணா, ப்ளீஸ்…இங்க என்ன நடக்குது? வசுந்தராவுக்கு ஒன்னும் இல்லையே?” என்றார் தவிப்புடன்.

“நியூஸ்ல பாத்தது தான் எனக்கும் தெரியும் வருண்! அதை டெல்லிக்குக் கால் பண்ணி கன்பர்ம் பண்ணிக்கிட்டேன். நீ தான் தைரியமா இருக்கணும். அங்க முழுசா என்ன சிச்சுவேஷன் தெரில. செக்யூரிட்டி இஷ்யூனால கான்ஃபிடென்சியலா வைச்சிருக்காங்க”

“ஷூட்டிங்னு மட்டும் தானே நியூஸ்ல ரீப்பிட்ல ஓடுது. ஃபுட்டேஜ் எதுவும் காட்டலியே. நீங்க யார்கிட்ட பேசினீங்க?”

“லலிதா நாயர்”

“ஓ, அப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க. கண்டிப்பா அவங்க சொல்லிருப்பாங்களே அண்ணா” என படபடக்க, உதயன் அவருக்குத் தெரிந்த விவரங்களைக் கூற ஆரம்பித்தார்.

“அவங்களால ரொம்ப நேரம் எல்லாம் பேச முடியலை வருண். நேத்து லேட் நைட் பி.எம்.ஓ மீட்டிங் முடிச்சிட்டு வெளில நின்னு பேசிட்டு இருந்திருக்காங்க. திடீர்னு ஒரு செக்யூரிட்டி கார்ட் பி.எம் அ எய்ம் பண்ணி ஷூட் பண்ண ஆரம்பிச்சுட்டான்”

“அய்யய்யோ, செக்யூரிட்டி கார்ட்டா?” எனக் கத்தி விட்டார் வருணன்.

“ம்ம்ம்…தெய்வாதீனமா பக்கத்தில சித்தார்த் தான் நின்னிருக்காரு. அவரு கரெக்ட் டைம்ல வசுந்தராவை தள்ளி விட்டதுல, புல்லட் அவர் மேல இறங்கிருச்சு” என்றார் உதயன் கவலை தோய்ந்த குரலில். 

“என்ன சொல்றீங்க? எஸ்.பி.ஜி எல்லாரும் என்ன பண்ணிட்டு இருந்தாங்க அண்ணா? ப்ரதாப் எங்க இருந்தாரு?” என்றார் வருணன் குழப்பத்துடன். 

அவரால் உதயன் கூறிய விடயத்தை நம்ப முடியவில்லை. சித்தார்த் குண்டை ஏற்றார் என்ற உண்மை ஒரு நொடி வருணனின் இதயத்துடிப்பை ஸ்தம்பிக்கச் செய்தது.

“அதுக்கப்புறம் தான் எஸ்.பி.ஜி ஃபையர் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அந்த செக்யூரிட்டி கார்ட் அ ஷூட் பண்ணிட்டாங்க போல. ப்ரதாப் சிங்கும் அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கார்”

“அண்ணா, சி…சிட் இப்போ எப்படி இருக்கார்?” என்றார் வருணன் அவருக்கே கேட்காத குரலில்.

“ஹி அண்ட் ப்ரதாப் ஆர் இன் க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் வருண்” என்றார் உதயன் சோர்ந்த குரலில்.

“வசு?” என்றார் வருணன், எதிர்மறையான பதில் எதுவும் வந்து விடக் கூடாதென மனதில் பெரும் வேண்டுதலுடன்.

“ஷி இஸ் ஸ்டில் அண்டர் அப்சர்வேஷன். ப்ரசிடெண்ட்க்கு லலிதா தான் லாஸ்ட் அப்டேட் கொடுத்துருக்காங்க”

“வீட்ல எல்லாரும் டென்ஷன்ல இருப்பாங்க அண்ணா. நான் அவங்கட்ட பேசணுமே…” 

“அவங்களும் இந்நேரம் கிளம்பிருப்பாங்க வருண். நான் தேவராஜன் அங்கிள் கிட்ட பேசிட்டேன். வசுந்தராவோட பேரண்ட்ஸையும் கூட்டிட்டு அவங்களும் வர்றாங்க. நான் உன்னைக் கூட்டிட்டு வர்றேன்னும் சொல்லிட்டேன். மத்தது டெல்லில போய் பாத்துக்கலாம்”

“எப்டி எஸ்.பி.ஜி இவ்ளோ கேர்லெஸ்ஸா இருந்தாங்க?” என்றார் வருணன் ஆற்றாமையுடன்.

“அதெல்லாம் போஸ்ட் மார்ட்டம் வருண்! இப்போ நோ மோர் இன்பர்மேஷன். இட்ஸ் கோயிங் டு பி அ லாங் டே. நீ ஏதாச்சும் சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்ற உதயன் கண் மூடி சாய்ந்து விட, வருணனால் மட்டும் கண்களை மூட முடியவில்லை. 

விமானத்தின் சாளரத்தின் வழியே இலக்கில்லாமல் நகரும் மேகங்களை வெறித்தபடி அமர்ந்தார். உடல் மட்டுமே அங்கிருக்க மனமோ ஏற்கெனவே தில்லிக்குப் பறந்து விட்டது.

சில மணி நேரங்களில் தில்லியில் தரை இறங்கியபோது, நேராக எங்கு செல்ல அனுமதி கிடைக்கும் என்பதே அவர்களிருவருக்கும் குழப்பமாக இருந்தது.

“வருண் நாம இப்ப AIIMS ஹாஸ்பிட்டல் போன உள்ள விடுவாங்களான்னு தெரியல! கெஸ்ட் ஹவுஸ் போய் வெயிட் பண்ணலாம். வசுந்தராவோட பேரண்ட்ஸ் வந்துடட்டும். அதுக்கப்புறம் போகலாம்” என்றார் யோசனையாக.

வருணனுக்கோ அவ்வளவு பொறுமை இருக்கவில்லை. 

“இல்லண்ணா, நாம நேரா ஹாஸ்பிட்டலுக்கே போயிடலாம்” என்றார் அதி தீவிரத்துடன்.

“சொன்னாக் கேளு வருண். நான் வெறும் கேபினட் மினிஸ்டர். நீ பி.எம்மோட டிஸ்டெண்ட் ரிலேட்டிவ். செக்யூரிட்டியே முதல்ல அலோவ் பண்ண மாட்டாங்க. 

நீ நேத்து நைட்டும் டிராவல் பண்ணிருக்க. இன்னிக்கு காலைல இரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நேரா ப்ளைட் ஏறியாச்சு. சோ, போய் கொஞ்சம் ரிஃப்ரெஷ் பண்ணு, அதுக்குள்ள உன் பேரண்ட்ஸ் வந்துடுவாங்க, நானும் வேற எதுவும் செய்ய முடியுமா பாக்குறேன்” என்றபடி வருணனைப் பார்த்துக் கொண்டே, யாருக்கோ அழைப்பு விடுத்தார்.

“ம்ப்ச்”  என சலித்த வருணன், அவர்களுக்காகக் காத்திருந்த வாகனத்தில் ஏறி அமர்ந்து இருக்கையில் சாய்ந்தார். சில நொடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், தாராதேவிக்கு அழைத்தார்.

அழைப்பை ஏற்றதுமே,

“ஆர் யூ ஓகே வருண்?” என்றார் தாரா.

“டிரையிங் டு பி மேம்… ஐ நீட் அ ஃபேவர்”

“நேம் இட்!”

“எனக்கு வசுவைப் பார்க்கணும்” என்க, சில நொடிகள் எதிர்முனையில் மௌனம்.

“எங்க இருக்க இப்போ நீ?”

“டெல்லி ஏர்போர்ட். உதயன் கூட இருக்கேன்”

“சரி, நீ AIIMS போய்டு. நான் பிரசிடெண்ட் ஆஃபிஸ்க்கு பேசுறேன். நான் வர்றதுக்கு இன்னும் ஒரு டூ ஆர் த்ரீ அவர்ஸ் ஆகிடும். ஐ’ல் மீட் யூ தேர்!” என்றவர் அழைப்பைத் துண்டித்து விட்டார்.

அதற்குள் உதயனும் வாகனத்தில் ஏறி அமர்ந்து, ஓட்டுனரிடம்

“நேரா AIIMS போய்டுங்க” என்க வருணன் அவரைக் கேள்வியாகப் பார்த்தார். 

“விக்ரம் தேசாய், NSA மூலமா கிளியரன்ஸ் வாங்கிட்டேன். சோ டைம் வேஸ்ட் பண்ணாம நேரா அங்க போய்டலாம். ஓகே?”

“ம்ம்ம், நானும் தாரா மேம் கிட்ட பேசினேன். அவங்களும் வந்துட்டு இருக்காங்களாம், என்னைய ஹாஸ்பிட்டல் போக சொன்னாங்க”

“நல்லதாப் போச்சு. நாம போகலாம். நான் இன்னொரு கார் அரேஞ் பண்ணிருக்கேன். தேவராஜன் அங்கிள் வரவும் அதுல வர சொல்லிடு”

“விக்ரம் தேசாய்க்கு என்ன இன்வால்வ்மென்ட்?” என்றார் வருணன் யோசனையுடன்.

அவரை ஒரு மாதிரியாகப் பார்த்த உதயன்,

“என்னடா கேள்வி இது? நமக்கு தான் அஃபிசியல் டெபுடி பி.எம் இல்லல்ல. அவர் தான் நெக்ஸ்ட் சீனியர் கேபினர் மினிஸ்டர். இன்சிடெண்ட் நடந்தப்போ அவரும் பக்கத்தில தான் இருந்துருக்கார். சோ இப்போதைக்கு அவர் தான் இந்த சிச்சுவேஷன் ஹேண்டில் பண்றாரு” 

“ரைட், மூளை வேலை செய்றத நிறுத்திடுச்சுன்னு நினைக்கிறேன்” என்றார் வருணன் விரக்தியாக.

அவர் கைகளை ஆறுதலாகத் தட்டிய உதயன்,

“ஸ்டே ஸ்ட்ராங் மேன். வீ ஆல் நீட் யூ” என்கவும்,

“ணா, வசுக்கு ஒன்னும் ஆகிருக்காதுல்ல” என்றார் கலங்கிய கண்களுடன்.

“டேய்” என்று அவரை தோளோடு அணைத்துக் கொண்ட உதயன்,

“ஒன்னும் ஆகாது! நீ வேண்ணா பாரு, என்னையப் பார்த்த உடனே மிஷன் 4 என்னாச்சுன்னு கேள்வி கேப்பாங்க உங்க மேடம்” என்றதும், ‘செய்யக் கூடிய ஆள் தான்’ என வசுந்தராவை நினைத்து மிக மெல்லிய புன்னகை வருணனிடம். 

மருத்துவமனை அடைந்தவர்கள், சரியான தகவலைப் பெற்று, பாதுகாப்பு சோதனைகளைத் தாண்டி வசுந்தரா இருந்த பகுதிக்குச் சென்று அவரைப் பார்ப்பதற்குள் வருணனுக்கு ஒரு யுகம் கடந்தது போலிருந்தது. 

கண்காணிப்பிற்காக வசுந்தரா வைக்கப்பட்டிருந்த அறையின் கண்ணாடி வழியே பார்க்க, அவரோ மயக்கத்தில் இருந்தார். இடது கை மேல் பகுதியில் சிறிய கட்டு இருந்தது. அங்கிருந்த மருத்துவரிடம் பேசி விவரங்களை அறிந்த பின்னரே வருணனுக்கு மூச்சு விட முடிந்தது. 

அதற்குள் உதயன், சித்தார்த், ப்ரதாப் மற்றும் பிற காவலர் நிலைகளை கேட்டறிந்து வந்தார்.

“சிட் எப்டி இருக்கார் அண்ணா? வாங்க நானும் வர்றேன், போய் பார்த்துட்டு வரலாம்” என வருணன் துரிதப்படுத்த, அவரைத் தடுத்த உதயன்,

“இல்ல வருண், நாம பார்க்க முடியாது. சிட் இன்னும் ஐ.சி.யூல தான் இருக்கார். அவர் கண்டீஷன் ரொம்ப சீரியஸ்! ஸ்பைனல் கார்ட் ரொம்ப மோசமா டேமேஜ் ஆகிருக்கு, சிவியர் ப்ளட் லாஸ் வேற. டாக்டர்ஸ் ஹோப் இ..இல்லன்னு தான்டா சொல்றாங்க” என்றார் சற்று தயங்கியவாறே.

அதைக் கேட்டவுடன், தலையில் கை வைத்தபடி நாற்காலியில் சரிந்து அமர்ந்தார் வருணன். எப்படியாவது சித்தார்த் பிழைக்க வேண்டுமென்று மனம் இறைவனை இடைவிடாமல் வேண்டியது.  

“நான் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது வருண். நான் கெளம்புறேன். அங்கிள் கிட்ட பேசினியா?”

“ம்ம்ம், அவங்க இன்னும் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துடுவாங்கண்ணா”

“சரி பார்த்துக்கோ வருண், எதுனாலும் எனக்கு கால் பண்ணு. எல்லாம் கொஞ்சம் செட்டில் ஆகுற வரை அப்பா என்னைய டெல்லில தான் இருக்க சொல்லிருக்காங்க. நம்ம கெஸ்ட் ஹவுஸ் ரெடியா தான் இருக்கு. உனக்கு கம்பர்ட்டபுள்னா அங்கயே வந்துடுங்க நைட்” என்று விட்டு உதயன் கிளம்பி விட்டார்.

கிளம்பிய சில நிமிடங்களிலேயே கோவையில் இருந்து பெரியவர்கள் வந்து விட, அதன் பிறகு வருணனுக்கு தனிமை சிறிதும் கிட்டவில்லை. தேவராஜன் பெண்கள் இருவரையும் சமாளித்து அழைத்து வந்திருக்க, வனதேவனோ அவரது இயல்பிலேயே இல்லை.

அஞ்சலி அழுதழுது முகம் சிவந்து, கண்கள் தடித்திருந்தது. மகளைப் பார்த்த வனதேவன் கண்களும் கலங்கிச் சிவந்திருந்தது. அஞ்சலி மீண்டும் அழுகையை ஆரம்பிக்க, தேவராஜன்,

“அஞ்சலி” என அதட்டியவர்,

“சொல்லி தானே அம்மணி கூட்டிட்டு வந்தேன். பாரு, நம்ம கண்ணுக்கு ஒன்னுமில்ல. மயக்கம் தெளிஞ்சு ஜம்முன்னு எழுந்து நடந்து வரப்போறாங்க” என்க, ராஜியும்,

“ஆமா அஞ்சலி. புள்ள எழுந்து வர்றப்போ நீ அழுது உடம்புக்கு இழுத்துக்காதே’ எனவும், அது சற்று வேலை செய்தது. 

அமைதியாக வருணன் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். வனதேவன் மருத்துவரிடம் பேசிய பின்னர் மனைவியிடம் வந்தவர்,

“வசுக்கு ஒன்னுமில்ல அஞ்சலி. அடியெல்லாம் பெருசா எதுவும் இல்ல. அதிர்ச்சி தான்! செடேஷன் கொடுத்திருக்காங்க” என்றபடி வருணனைப் பார்க்க, அவரோ வெளிறிய முகமும், வெறித்த பார்வையுமாய் அமர்ந்திருந்தார். 

“வருண்?” என வனதேவன் கூப்பிட, வருணனுக்கு அது காதில் விழுந்தாலும், கருத்தில் பதியவில்லை.

“வருண்! மாமா கூப்பிடுறாங்க பாரு” என தேவராஜன் தனது வெங்கலக் குரலில் கூற, அதன் பின்னரே,

“ஹாங்…என்ன கேட்டீங்க மாமா?” என்றார் வனதேவனிடம்.

அவரை ஆழ்ந்து பார்த்த வனதேவன்,

“வர்றீங்களா தம்பி, ஒரு காபி குடிச்சிட்டு வருவோம்? தலை வலிக்குது” என்றார்.

“ம்ம்ம், சரி மாமா” என்ற வருணன்,

“அப்பா உங்களுக்கு?” என்க,

“எங்க எல்லாருக்கும் டீ வாங்கிக்கோங்க கண்ணு. கூட பிஸ்கட், பழம் ஏதாச்சும் வாங்கிக்கோங்க. காலைல யாரும் ஒன்னும் சாப்பிடல. போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டோம். அத்தை மாத்திரை போடணும்” என்றார் தேவராஜன். 

ஆமோதிப்பாக தலையை ஆட்டிய வருணன் யோசனையுடன் வனதேவனை அங்கிருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்று ஒரு இருக்கையில் அமர வைத்தார்.

“ஒரு நிமிஷம் மாமா” என்றவர், இருவருக்கும் குடிப்பதற்கு வாங்கிக் கொண்டு வந்தார்.

ஒரு கோப்பையை வனதேவனிடம் நகர்த்தி விட்டு,

“என்னங்க மாமா பேசணும்?” என்க வனதேவன் அவரை மெச்சுதலாகப் பார்த்தார்.

“வசுந்தராவைத் தவிர என்ன பிரச்சனை வருண்?” என்க வருணனிடம் லேசான அதிர்வு. 

“சித்தார்த் ரொம்ப சீரியசா இருக்காரு மாமா. அவர் தான் வசுவைக் காப்பாத்தியிருக்கார்”

“ஓ, எனக்கு அது தெரியாது தம்பி. நான் வசுவைப் பத்தி மட்டும் தான் விசாரிச்சேன்” என்றார் வனதேவன் அதிர்ச்சியாக.

இருவருக்கும் அடுத்து என்ன பேசுவதென தயக்கம். மனதில் ஒரே விடயம் தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அதை யார் முதலில் வார்த்தையாக்குவது என்ற பயத்தில் இருவருமே மௌனம் காத்தனர். வருணன் கீழே வைத்திருந்த கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டார்.

அதற்கு மேல் அந்த அமைதியே ஒரு அழுத்தத்தைத் தர, வனதேவன் வருணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, 

“கவலைப்படாதீங்க தம்பி. நல்லதையே நினைப்போம்” என்ற அவர் கரத்தை ஆறுதலாக தட்டிக் கொடுத்தார்.

“இல்ல மாமா, டாக்டர்ஸ் ஹோப்பே குடுக்கல. அவர் பிழைச்சு வர்றது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டாங்க” என்று தலையைக் குலுக்கியபடி.

“ம்ம்ம், வருத்தமான விஷயம் தான் வருண். ஆனா நாம என்ன பண்ண முடியும் சொல்லு? வசுந்தரா வந்ததும் அவளை எப்படி தேத்துறது தான் ஒரே யோசனையா இருக்கு” என்றார் சோர்வுடன்.

“எ..எனக்கு பயமா இருக்கு மாமா” என்றார் வருணன் நடுங்கும் குரலில்.

“ஏன் வருண்? இதுல்ல நீ என்ன பண்ணிருக்க முடியும்? இது ஒரு ஆக்சிடெண்ட்!” என்றார் வனதேவன் குழப்பமாக.

“இல்ல மாமா, சித்தார்த்துக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா கண்டிப்பா வசு என்னைய மன்னிக்க மாட்டா” என்றார் எங்கோ வெறித்துக் கொண்டு.

“மன்னிக்க முடியாத அளவுக்கு நீ என்ன தப்பு பண்ண வருண்?” என்றார் அவரை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி.

“சித்தார்த்தை இந்தப் போஸ்ட்டுக்கு கொண்டு வந்தது வசுந்தராவுக்கு இஷ்டமே இல்ல மாமா. அவர் இங்க இருந்ததுனால தானே இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் வந்து அவர் உயிருக்குப் போராடிட்டு இருக்கார். 

அவ கான்ஷியஸ் திரும்ப வந்து இந்தக் கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்லப் போறேன் மாமா?” என்றவர் கைகளில் தன் முகத்தை பொதித்துக் கொண்டார்.

“வருண், லுக் அட் மீ” என்றார் வனதேவன் மறுக்க முடியாத குரலில்.

கைகளை ஊன்றிய படி முகத்தை மட்டும் நிமிர்த்திப் பார்க்க,

“நீ ஒன்னும் கையக் காலைக் கட்டி சித்தார்த்தை இந்த போஸ்ட்டுக்கு கூட்டிட்டு வரல. இதுல பாதி சித்தார்த்தோட மூவும் தான். தெரியும்ல?” எனக் கேட்க, தலையசைத்தார் வருணன்.

“எவ்ரிதிங் வாஸ் டன் இன் அ குட் இன்டென்ஷன்! சித்தார்த் இந்த போஸ்ட்டுக்கு வந்தது பல காரணங்கள் இருக்கு. அதுல பல பேர் இன்வால்வ் ஆகிருக்காங்க. ஹி இஸ் அன் அசெட் டு திஸ் கன்ட்ரி! அதை இன்னொருவாட்டி ப்ரூவ் பண்ணிருக்காரு. இது உன்னோட தப்புன்னு ஏன் முடிவு பண்ற?” என்க, அப்போதும் தெளியவில்லை வருணன்.

“லிசன் வருண், இப்டி யோசிச்சுப் பாரு. ஒரு வேளை சித்தார்த் இடத்தில வேற யாராச்சும் இருந்திருந்தா மே பி, வசு தான் அவர் இடத்தில படுத்திருப்பா” என்க,

“நோ” என குரலுயர்த்தி விட்டார் வருணன். 

சுற்றி இருந்தவர்கள் திரும்பிப் பார்க்க,

“வருண்! காம் டவுன்” என்ற வனதேவன்,

“என்ன நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும். என்னைப் பொருத்தவரை நீ எந்தத் தப்பும் பண்ணல. சின்னதா ஒரு பெர்சனல் டைமென்ஷன் இருந்தாலும், அதுவும் கூட நீ சுயநலமா பண்ணலை வருண்” என்றார் ஆதுரமாக. 

“ஆனா வசு அப்டி நினைக்க மாட்டா மாமா. முடிஞ்சு போனதை நான் தான் திரும்பி கிளறிவிட்டு அவளை இன்னும் டென்ஷன் பண்ணிட்டேன்னு நினைச்சுப்பா” என்றார்.

“சரி, வசு அப்டி நினைப்பா, இப்டி நினைப்பான்னு நீயே குழம்புறதுக்கு அவ வரட்டும். கேள்வி கேட்டா அப்போ பாத்துக்கலாம். எதுனாலும் ஐ’ல் பி வித் யூ. இப்ப வாங்க போகலாம். அஞ்சலி பசியோட இருப்பா” என்றதும் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வசுந்தரா இருந்த அறைக்கு அருகில் வந்தனர்.

தேவராஜன் அங்கு பதட்டமாக நடந்து கொண்டிருக்க, அதைப் பார்த்த வருணன்,

“என்னாச்சுப்பா? வசு ஓகே தானே?” என்று கேட்டபடி அவர் அருகில் வந்தார்.

சுற்றிலும் ஒரு பார்வை பார்த்த தேவராஜன், வருணனிடம் சற்று குரலைத் தளர்த்தி, 

“அவரு இறந்துட்டாராம் கண்ணு. இப்ப தான் விக்ரம் தேசாய் வந்து சொல்லிட்டு போனாரு” என்றார்.

தடதடக்கும் நெஞ்சுடன்,

“யாருப்பா?” என தவிப்புடன் கேட்டார் வருணன்.

தேவராஜன் சில நொடிகள் பதில் சொல்லாமல் மௌனம் காத்தார். பின்னர் வருணனின் தவிப்பை தாளாதவராய்,

“பிரின்சிபல் செக்ரட்டரி கண்ணு, சித்தார்த்” என்றார். 

அதைக் கேட்ட நொடியில் வருணனின் காலடியில் பூமி நழுவியது. அவர் கையில் இருந்த தேநீர் கோப்பை கீழே விழுந்து நொறுங்கியது!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!