Skip to content
Post Views: 361
அத்தியாயம் – 22
புது தில்லி, தலைமை அமைச்சர் இல்லம்
Advertisement
வருணனின் பெற்றோரை வரவேற்ற வசுந்தராவின் கண்கள் அவர்களுக்குப் பின்னால் வருணன் வருகிறாரா எனப் பலமுறை தேடி அலைந்து ஓய்ந்தது. எதிர்பார்ப்புடன் ஒளிர்ந்த முகத்தில், இப்போது ஏமாற்றம் கலந்த ஏக்கம்!
ராஜியின் கண்கள் அதைத் தெளிவாகக் குறிப்பெடுத்துக் கொண்டாலும், பூனைக்குட்டி தானாய் வெளியில் வரும் போது வரட்டும் என எதுவும் கேட்கவில்லை.
Advertisement
Advertisement
“டின்னர் ரெடி” என்றபடி பெரியவர்களை உணவு மேசைக்கு அழைத்து வந்தார் வசுந்தரா.
உணவு மேசையில், அவ்வப்போது பாத்திரங்களை நகர்த்தும் ஒலியும், இசையின் லயம் போல தேக்கரண்டிகள் தட்டில் உரசும் ஓசையையும் தவிர்த்து, மௌனமே ஆட்சி செய்தது. ஒவ்வொருவரும் வெவ்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர்.
Advertisement
ராஜி தான் அந்த அறையில் நிலவிய அசௌகர்ய மௌனத்தை முதலில் கலைத்தார்.
“என்ன வசு கொறிக்கிற? வைச்ச ரெண்டு இட்லி அப்டியே இருக்கு” என ஆரம்பித்தார்.
ஏதோ உறக்கத்தில் இருந்து விழிப்பவர் போல்,
“ஹாங்…என்னத்த கேட்டீங்க?” எனவும், பெரியவர்கள் கவனம் முழுவதும் இப்போது வசுந்தராவிடம் திரும்பியது.
ராஜியை முந்திக் கொண்டு,
“ம்ம்ம், சொல்றாங்க சுரைக்காய்க்கு உப்பில்லன்னு” என்றார் அஞ்சலி கடுப்பாக.
“அஞ்சலி” என குரல் உயர்த்த, கப்பென வாயை மூடிக்கொண்ட அஞ்சலி கணவனை முறைத்தார்.
வசுந்தரா தட்டில் இன்னுமிரண்டு இட்லிகளை வைத்த ராஜி,
“சாப்பிடு கண்ணு” என்று ஒரு அதட்டலிட, அது சற்று வேலை செய்தது.
உணவை மருந்தாக விழுங்கி வைத்த வசுந்தரா,
“வ…வருண் வரலையா அத்த?” என்றார் வேறு வழியின்றி.
‘அப்டி வழிக்கு வா மருமகளே’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டவர்,
“உன்கிட்ட எதுவும் சொல்லலையா வசு?” என்று வேண்டுமென்றே இழுத்தடிக்க,
“இன்னிக்கு கிளம்புறேன்ற மாதிரி சொன்னாங்க. ஆனா கன்ஃப்ர்ம் பண்ணல அத்த” என்றார் தயக்கத்துடன்.
“சாயந்தரமே தம்பி உதயனோடவே சென்னைக்கு கெளம்பிட்டார் அம்மணி” என்று ராஜியை முந்திக் கொண்டு தேவராஜன் பதிலளிக்க, அது வசுந்தராவிற்கு புதிய செய்தி.
வருணனிடம் பேசும் போது அவர் குறிப்பு கொடுத்திருந்தாலும், வசுந்தரா அதை அந்த நேரத்து பேச்சாக மட்டுமே எடுத்துக் கொண்டார்.
“சென்னைல என்ன மாமா?”
வசுந்தராவைப் புதிராகப் பார்த்த தேவராஜன்,
“அங்கிருந்து தானே அம்மணி உங்களைப் பார்க்க வந்தாரு. உங்க கிட்ட எதுவும் சொல்லலையா என்ன?” எனக் கேட்டார்.
“இ..இல்ல மாமா. அந்த அளவு டீடெயிலா பேச எங்க நேரம்?” என்ற மகளை ஆராய்ச்சியாகப் பார்த்தார் வனதேவன். தன்னிடம் வருணன் எதையும் பகிரவில்லை என்ற தாக்கத்தில் வசுந்தராவின் முகம் சுண்டிப் போயிற்று. தான் அதற்கான எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை என்ற உண்மையை அந்நேரம் வசதியாக மறந்து விட்டார்.
“அதுவும் சரிதான்” என ஒத்துக் கொண்ட தேவராஜன்,
“ஏங்கண்ணு, அம்மாவும், அப்பாவும் இங்க இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டுமே. உங்களுக்கும் ஒரு ஆதரவா இருக்கும். உங்கம்மாவும் உங்களைப் பத்தி கவலைப்படாம கொஞ்சம் நிம்மதியா இருப்பா” என்றார் யோசனையாக.
மகளை நோக்கி யாருடைய கைகளும் குற்றஞ்சாட்டுவது போன்ற பாவனையை விரும்பாத வனதேவன்,
“இங்க செக்யூரிட்டி ரெஸ்ட்ரிக்ஷன் ரொம்ப அதிகமா இருக்கு மச்சான். அஞ்சலியும் புலம்பிட்டே இருந்தா. உங்களைப் பார்க்கவே பிரம்ம பிரயத்தனம் பண்ண வேண்டியிருக்கு! வசு ஏதோ ஸ்பெஷல் பெர்மிஷன் எல்லாம் வாங்கி தான் உங்களை இன்னிக்கு இங்க வர வைக்க முடிஞ்சது. அதுனால நாங்க தான் கெளம்புறோம்னு சொன்னோம்” என்று இடையிட்டார்.
வசுந்தரா தந்தையை திடுக்கிட்டுப் பார்க்க, அஞ்சலியோ மகளை முறைத்தார்.
“ம்ம்ம்…இந்தப் பதவிக்கான பொறுப்புகள் அப்டி. உங்களுக்குத் தெரியாததா?” என்று தேவராஜனும் அதை ஒத்துக்கொள்ள, அந்தப் பேச்சு அத்துடன் நின்றது.
அன்னையர் இருவரும் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டனர். வசுந்தரா மனதில் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பை ஆண்கள் இருவரும் குழி தோண்டி புதைத்து விட்ட எரிச்சலில், உணவு மேசையில் இருந்த மீதி நேரத்தில் உண்பதற்கு மட்டுமே வாயைத் திறந்தனர்.
தேவராஜனிடமும், ராஜியிடமும் முறையாக விடைபெற்று அலுவலக அறைக்கு திரும்பி விட்ட வசுந்தரா, மனதை திசை திருப்ப வழமை போல் கோப்புகளில் புதைந்து கொண்டார்.
பின்னிரவு வேளையில் தூக்கம் வராமல் கொஞ்ச நேரம் நடக்கலாம் என்ற வெளியே வந்த வனராஜன், மகள் அறையில் இன்னும் விளக்கெரிவதை யோசனையாகப் பார்த்தார்.
சிறிது தயக்கத்திற்குப் பின், கதவை லேசாகத் தட்டி,
“வசும்மா” என மெதுவாக அழைக்க,
“ஹாங்…வாங்கப்பா” என எழுந்து வந்தார்.
கதவருகே வந்தவர், வனதேவனைக் கண்டதும்,
“என்னப்பா, தூங்கலியா? அம்மா?” எனக் கேட்டார்.
“இல்லடாம்மா. தூக்கம் வரலை. அம்மா தூக்க மாத்திரை போட்டுட்டு தூங்கிட்டா”
“ஓ” என சில நொடிகள் அமைதி காத்தவர்,
“சரி வாங்க, பால் ஏதாச்சும் குடிக்கலாமா?” என்றார்.
“உனக்கு வேணும்னா கம்பெனி கொடுக்குறேன்”
“ம்ம்ம், ரோஸ் மில்க் போடுறேன்” என்றவர் சமையலறையில் நுழைய, அங்கிருந்த பணியாளர் அவசரமாக எழுந்து வந்தார்.
“மேம்?” என்றவர், வசுந்தராவையும், வனதேவனையும் பார்த்து மரியாதையாக தலையசைத்தார்.
“ஒன்னும் இல்ல ராஜ், ஜஸ்ட் ஒரு ரோஸ் மில்க் வேணும். எசென்ஸ் எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்க. நானே மிக்ஸ் பண்ணிக்கிறேன்”
“2 மினிட்ஸ் மேம்! நீங்க வெயிட் பண்ணுங்க, நான் கொண்டு வந்துட்றேன்” என்றவர், ஒரு தட்டில் இரு குவளைகளில் வசுந்தரா கேட்ட பானத்தையும், நறுக்கிய சில பழங்களையும் எடுத்து வந்தார்.
“சாப்பிடுங்கப்பா” என்றதும், வனதேவன் அரை மனதாக குவளையை கையில் எடுத்தார்.
ஒரு மிடறு விழுங்கிய வசுந்தரா,
“ம்ம்ம்…ரொம்ப மைல்ட்டா தான் இருக்கு அன்ட் லைட் சில்னஸ்! சோ தைரியமா குடிங்க” என்று சிரித்து, தந்தையிடம் தான் இலகுவாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றார்.
மகளின் முயற்சி புரிந்த வனதேவனும், சில மிடறுகள் அருந்திவிட்டு,
“போதும்டா. ஒரு குட்டி வாக் போகலாமா?” என்று எழுந்து விட, வசுந்தராவும் அவருடன் நடந்தார்.
பாதுகாப்பு கருதி, துப்பாக்கி சூடு நடந்த இடம் இன்னும் மூடப்பட்டே இருக்க வனதேவன் இங்கிருந்த வரை உபயோகித்த, மற்றொரு தோட்டப்பகுதி நோக்கிச் சென்றனர்.
அந்தப் பகுதியில் நுழைவதற்கு முன்னரே, பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்து விட கௌதமும் விருவிருவென நடந்து வந்து வணங்கினார்.
“எனி பிராப்ளம் மேம்?”
“இல்ல கௌதம், அப்பா நாளைக்கு ஊருக்கு போயிடுவாங்க. ஃப்ரெஷ் ஏர்ல ஒரு வாக் போக வந்தோம்”
“யெஸ் மேம்” என்று நகர்ந்தவர் கண்கள் சுற்றுபுறத்தை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தது. தனது குழுவினருக்கு ஆணைகள் பிறப்பித்தவண்ணம், சற்று இடைவெளி விட்டு அவர்களை பின் தொடர்ந்தார் கௌதம்.
எல்லாவற்றையும் கவனித்த வனதேவன்,
“ம்ம்ம், கொஞ்சம் கஷ்டம் தான்” என்றார்.
“எனக்கு பழகிடுச்சுப்பா. அம்மாவும் புலம்பினாங்க. உங்களையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான்…அத்தை, மாமாவோடயே கெளம்பிட்டா தேவலைன்னு பிளான் பண்ணேன்ப்பா…நீ..நீங்க எதுவும் தப்பா எடுத்துக்கலியே?
ஒரு பெருமூச்சை வெளியேற்றிய வனதேவன்,
“தப்பா எல்லாம் எடுத்துக்கலடாம்மா. உண்மையை சொல்லனும்னா…கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு”
தந்தையை திரும்பிப் பார்த்தார் வசுந்தரா.
“ஏன்ப்பா?
“நீ எங்களைப் பத்தி தான் யோசிக்கிற. ஆனா உன்னைப் பத்தி சுத்தமா யோசிக்க மாட்டேங்குற. அது தான் வருத்தமா இருக்கு!”
“ப்..ப்பா?”
“இங்க எங்களுக்கு ரெஸ்ட்ரிக்ஷன் இருக்கு தான். அது கொஞ்சம் கஷ்டம் தான்…இல்லைங்கல. ஆனா உனக்காக இது கூட பொறுத்துக்க மாட்டோமா? அங்க போனா மட்டும் நாங்க நிம்மதியா இருப்போமா?”
வசுந்தராவிடம் அந்தக் கேள்விகளுக்கு பதிலில்லை. அவர் ஒரு கோணத்தில் யோசிக்க, தந்தையின் எண்ணவோட்டத்திலும் தவறில்லையே.
“எல்லாத்துக்கும் மேல, நீ எனக்கு ஒரு விஷயம் ஓப்பனா சொல்லு!” என்று அழுத்தமாக கேட்க, வரப்போவதை எண்ணி வசுந்தரா மனம் தடதடத்தது.
“வருணை ஏன் அவாய்ட் பண்ற வசு?”
அவரை அதிர்ந்து பார்த்த வசு,
“அ..அப்பா…நீங்க…நினைக்கிற மாதிரி எதுவுமில்லப்பா” என்றார் உள்ளே போய்விட்ட குரலில்.
“நான் நினைக்கிறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னிக்கு உன் கண்ணு முழுசும் வருணைத் தான் தேடுச்சு. அது இன்னிக்கு மட்டும் இல்லன்னு உனக்கே தெரியும்…எதுக்கு இந்த இரட்டை வாழ்க்கை வசு?”
சாட்டையடியாக தந்தையின் வார்த்தைகள் சுழற்றியடிக்க, அவரை பேச்சற்று பார்த்தார் வசுந்தரா.
“தனக்கு சரின்னு தோனுறதை தைரியமா வெளில சொல்லி, செஞ்சு தான் என் பொண்ணுக்குப் பழக்கம். அவளை எங்கயோ தொலைச்சிட்டேன்னு தோனுது!”
தந்தையின் நேரடி குற்றச்சாட்டில் வசுந்தராவிற்கு கண்கள் கலங்கியது. தற்போதைய வாடிக்கையாக, வந்த அழுகையை விழுங்கியவர்,
“ஏதோ ஒரு வகைல சித்தார்த்தோட இறப்புக்கு நானும் ஒரு காரணம் தானே” என்றார் வரவழைத்த திடத்துடன்.
ஒரு நொடி நின்று மகளை தீர்க்கமாகப் பார்த்த வனதேவன்,
“அது உண்மையில்லன்னு உனக்கே தெரியும்! ஒரு இழப்பை…ஜீரணிச்சு…மீண்டு வர டைம் எடுத்துக்குறது தப்பில்ல வசு. ஆனா அந்த ப்ராசஸ்ல ஏன் எல்லாரையும் தள்ளி வைக்கணும்னு நினைக்கிற?” என நிறுத்தியவர்,
“வருண் ஒன்னும் யாரோ கெடையாது நீ இப்டி இழுத்தடிக்க! ஹி இஸ் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட். முப்பது வருஷத்துக்கு மேல உன்னோட நல்லது, கெட்டது எல்லாத்தையும் தன்னோடதா பாக்குறவன்” என்றார்.
மறுத்துச் சொல்ல காரணம் இல்லாமல் தந்தை சொல்வதை அவதானித்தபடி, மெதுவாக நடந்தார் வசுந்தரா.
ஒரு சுற்று நடந்து முடிந்து, திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்தவுடன்,
“கடைசியா ஒன்னு மட்டும் சொல்றேன் வசு. உன்னோட பதவி ரொம்ப பெரிய பொறுப்பு! அதோட இந்த சுமை தேவையில்லாததது. ஒரு கட்டத்துல இது உன்னையே உடைச்சிடும் கண்ணா” என்று நிறுத்திய வனதேவன்,
“கண்டிப்பா உனக்கு சாய்ஞ்சுக்க ஒரு தோள் வேணும் வசு. கரெக்டா யோசிப்பன்னு நம்புறேன். குட் நைட்டா” என்று மகளின் தோளில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்து விட்டு, தான் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தார்.
சில நிமிடங்கள் அந்தக் கதவையே பார்த்த வசுந்தரா, ஒரு நீண்ட பெருமூச்சுடன் தனது படுக்கையறைக்குள் நுழைந்தார். உறக்கம் எங்கோ தூரப்போயிருக்க, கண்ணீர் தலையணையை நனைத்தது.
உறக்கத்தை தொலைத்த இன்னொரு இதயம் சென்னையில் சொல்லொண்ணா துயரத்தில் உழன்று தவித்தது. வசுந்தராவின் மற்றுமொரு முகத்திருப்பலை ஏற்க முடியாமல் மனம் உடைந்து போயிருந்தார் வருணன் தேவராஜன்.
அதை உணர்ந்தாற் போல், வருணன் எதிர்பாராத விதமாய், உதயன் அவரது இல்லத்துக்கே அழைத்துச் சென்று விட்டார். மரியாதை நிமித்தமாய் முதலமைச்சருடன் சில வார்த்தைகள் பேசிவிட்டு, தனக்களித்த அறையில் முடங்க நினைத்தவரை உதயன் தனியே விடவில்லை.
“வருண் ரிஃபெரஷ் பண்ணிட்டு வா, முதல்ல சாப்ட்றலாம்”
“வேண்டாம்ணா. ரொம்ப லேட் ஆகிடுச்சு. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க, அண்ணி வெயிட் பண்ணுவாங்கல்ல” என தன்மையாக மறுக்க, உதயன் எதையும் காதில் வாங்கவில்லை.
“அந்த ஈரவெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும். நீ வா, நான் வெயிட் பண்றேன்” என அங்கேயே அமர்ந்து விட, வருணனுக்கு தர்ம சங்கடமான சூழல்.
“இதுக்கு தான் அண்ணா நான் கெஸ்ட் ஹவுஸ்கே போறேன்னு சொன்னேன்”
“வருண்!”
“ம்ப்ச், சரி ஒரு ஃபைவ் மினிட்ஸ்” என்றவர், மடமடவென தயாராகி வர, அந்த இரவு நேரத்திலும் உதயன் வீட்டில் வருணனுக்கு பெரிய விருந்தே தயாராகி இருந்தது.
உதயனிடம் மெதுவாக,
“எதுக்குண்ணா இவ்வளவு? அன்டைம், நான் ஹெவியா சாப்பிட மாட்டேன்” என தயங்க,
“அடேய் நல்லவனே, டெல்லி சாப்பாட்டால எனக்கு நாக்கு செத்து போச்சு. உனக்கும் அதே தான்னு தெரியும். ஒழுங்கா சாப்பிடு” என்று தன் கையாலயே பரிமாற, வருணனுக்கு மனம் நெகிழ்ந்தது.
வசுந்தராவின் புறக்கணிப்பால் புண்பட்டிருந்த மனதை உதயனின் அக்கறையும், அன்பான உபசரிப்பும் மயிலிறகு போல் வருடியது. மறுக்காமல் நிறைவாக இரவு உணவை முடித்தார்.
அதற்கு பிறகாவது தனிமை கிட்டும் எனப் பார்க்க உதயனோ,
“இப்ப உடனே தூங்க முடியாது வருண். சும்மா ரெண்டு ரவுண்ட்…எனக்கு கொஞ்சம் கம்பெனி கொடு” என அழைக்க, வருணன் தயக்கமாக உதயனின் மனைவியைப் பார்க்க,
“என்ன? உங்கண்ணி எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டா” என்ற உதயன்,
“நீ போய்ப் படு வானு, நான் வந்துடுறேன்” என்று விட்டு, வருணனை அழைத்துக் கொண்டு மாடியில் இதற்காகவே அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்தார்.
“என்னடா பியராச்சும் எடுத்துப்பியா?”
“இல்லண்ணா, ஜஸ்ட் லெமனேட் போதும்”
“ஹ்ம்ம்ம்…எப்டி இந்த மாதிரி காலத்தை ஓட்றியோ தெரியல” என்றவர் வருணன் கேட்டதைக் கொடுத்து விட்டு, தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
“இப்போ சொல்லுடா…என்ன பிரச்சனை?”
“ம்ப்ச், எதுவும் சொல்லிக்கிற நிலைமல இல்லண்ணா” என்றார் வருணன் சலிப்பாக.
அவரை கூர்ந்து பார்த்த உதயன்,
“ஹிவ் ஹெர் சம் டைம்டா…” என்றார் யோசனையுடன்.
“எவ்ளோ டைம்ணா?” என்று குரலுயர்த்தியவர், உதயன் பதில் சொல்லும் முன்னரே விரக்தியாக சிரித்தார்.
“பல வருஷமா டைம் குடுத்துட்டே தான் இருக்கேன்!” என்று நிறுத்தியவர்,
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நீங்க அவளுக்கு ப்ரோப்போஸ் பண்ணப்போ தான் எனக்கு என்னோட ஃபீலிங்கஸ் தெளிவா புரிஞ்சது.” எனவும், உதயன் முறைத்தார்.
“பின்ன ஏன்டா மௌனகுரு மாதிரி மூடிக்கிட்டு உக்காந்திருக்க” என காட்டமாகக் கேட்டார்.
“இங்க நான் என்ன நினைக்கிறேன்றது பிரச்சனையில்ல! மேடம் மனசுல என்ன இருக்குன்றது தான் முக்கியம்”
“சரிடா, முன்ன எப்டியிருந்தாலும், சித்தார்த்தோட லாஸ் பெருசு தானே. அதுலேர்ந்து வெளில வர்றதுக்குள்ள, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துட்டாங்க. நான் எதிர்பார்த்தத விட எல்லாத்தையும் ரொம்ப நல்லா ஹேண்டில் பண்ணாங்க. சோ இந்த சிச்சுவேஷன் கொஞ்சம் செட்டில் டவுன் ஆக டைம் கொடுடா”
“அண்ணா!”
“ஏன்டா சும்மா பொங்குற?”
“பின்ன என்ணண்ணா? ஏதோ நான் நாளைக்கு எனக்கு முடிவு சொல்லுன்னு லவ் டார்ச்சர் பண்ற மாதிரி பேசுறீங்க?”
“டேய், நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசுற?”
“விடுங்க, இது யாருகிட்டயும் சொல்லவும் முடியாது. யாருக்கும் புரியாது”
“ம்ப்ச், உடனே சலிச்சுக்காத. என்னன்னு சொன்னா தானே தெரியும்?”
“மேடம் என்னவோ முடிவு பண்ணிட்டாங்க. கண்டிப்பா எனக்கு சாதகமான முடிவு இல்லன்னு மட்டும் எனக்கு தெரியும்” எனவும், உதயன் சற்று நேரம் அமைதி காத்தார்.
அதை உணராத வருணன், தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தார்.
“சித்தார்த் இறந்து போனது ரொம்ப கஷ்டமான விஷயம் தான். அதை இங்க யாருமே மறுக்கலை. ஆனா அவர் உயிரோட இருந்திருந்தா கூட வசு என்கிட்ட தாண்ணா வந்துருப்பா!” என்க, உதயன் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்.
“எப்டிடா, இவ்ளோ கன்பார்மா சொல்ற?”
“அவ என்னோட வசுண்ணா! ஐ கேன் ஃபீல் ஹெர். சித்தார்த்கிட்ட நோ சொல்ல தான் சரியான டைம் பார்த்திருப்பா, அதுக்குள்ள இந்த மாதிரி அசம்பாவிதம் நடந்துருச்சு!”
“ம்ம்ம்”
“இப்போ எல்லாம் போச்சு! அம்மணி பிடிவாதம் பிடிச்சா அவ்ளோ தான்”
“நீ நேரா உங்க மாமாட்ட பேசேன்டா…”
“நோ! அவங்க கிட்ட பேசணும்னா எப்பவோ பேசிருப்பேன். எந்த விதமான நிர்பந்தமும் இல்லாம அவளா என்கிட்ட வரலைன்னா என்னோட காதலுக்கு என்ன மரியாதை?”
“ஷப்பா உன்னோட காதல் காவியம் தாங்க முடியலடா! என்ன பண்றதா இருக்க? அதைச் சொல்லு முதல்ல”
வருணன் பதில் பேசாமல் அமைதி காத்தார்.
“டேய்…பேசித் தொலையேன்டா…எனக்கு ஏறின கொஞ்ச நஞ்ச போதை கூட எறங்கிடுச்சு!”
“ம்ப்ச் நீங்க வேற ஏண்ணா? இங்க எலக்ஷன் முடியட்டும். அது வரைக்கும் தான் அம்மணிக்கு டைம். அதுக்கப்புறம் ஸ்டெரெயிட் ஆக்ஷன் தான்” என்றார் வருணன் மிக அழுத்தமாக.
“ஆக்ஷன்னா?”
“ஆக்ஷன்ஸ் ஸ்பீக் லவுடர் தேன் வோர்ட்ஸ்! கேள்விப்பட்டதில்ல?”
“அடேய், எனக்கு இப்ப இங்க்லீஷ் லெசன் எடுக்குறதா முக்கியம்? என்ன செய்யப் போறன்னு தெளிவா சொல்லு?”
“வெயிட் அண்ட் வாட்ச்ணா”
“உனக்கு பாவம் பார்த்து கூட்டிட்டு வந்தேன்ல, கண்டிப்பா எனக்கு இது தேவை தான்” என்றபடி, வருணனைத் திட்டிக் கொண்டே கீழிறங்க, அந்த இரவின் ஏகாந்தம் வருணனின் உள்ளத்து வெம்மையை சற்று தணித்தது.
இருக்கையில் சாய்ந்து அமர்ந்து நிலவை வெறித்தவரின் உதடுகளோ,
“வருணோட வெயிட்டிங் இங்க முடியுது அம்மணி…” என முணுமுணுத்து, சிறு புன்னகையில் வளைந்தது.
error: Content is protected !!