Skip to content
Post Views: 587
“ஐ ஆம் ஜஸ்ட் ஃபாலோயிங் புரோட்டொகால்ஸ் அண்ட் டூயிங் மை ஜாப் மேம். நீங்க கேட்டது தான் சொல்லிட்டு இருக்கேன். ஐ ஆம் சாரி இஃப் ஐ ஹேவ் அஃபெண்டட் யூ!” என்றார் நொடியில் தன்னை சமன்படுத்திக் கொண்டு.
வசுந்தராவுக்குத் தெரியாமல் இல்லை. சித்தார்த் அவரளவில் வேலையில் சரியாகத் தான் இருக்கிறார் என்று. ஆனால் இன்னும் வருணிடம் பேசிய தாக்கம் கொஞ்சம் எஞ்சி இருந்தது போலும்! கண் முன்னே சித்தார்த் தானே சிக்கி இருக்கிறார். அதனால் வசுந்தராவின் எல்லா வருத்தங்களும், ஆதங்கங்களும் பாவம், அவர் தலையில் தான் விடிகிறது.
Advertisement
இறுக்கமான முகத்துடனே,
“ம்ப்ச், ஐ’ல் சீ யூ ஆஃப்டர் த மீட்டிங்” என்ற வசுந்தரா, கையில் இருந்த கோப்புடன் விறுவிறுவென்று அமைச்சரவை கூட்டம் நடக்கும் அறைக்குள் நுழைந்து விட, ஒரு நாளிலேயே மண்டை காய்ந்தது சித்தார்த்திற்கு!
Advertisement
Advertisement
‘இவளுக்கு அந்த சைனீஸ் பிரிமீயரே தேவலை போல. எப்படிதான் என்னோட டிப்ளமேட் டிரெயினிங் எல்லாம் செகண்ட்ஸ்ல அடிச்சு துவைச்சி காயப்போட்டு என்னைய டென்ஷன் பண்றான்னு புரியல.
நேத்து நைட் கூட ஒழுங்கா தானே பேசினா. ஆனா இன்னிக்கு காலைல இருந்து மேடம் முகமே சரியில்ல. அதுக்குள்ள புதுசா என்ன பிரச்சனைன்னு தெரியலயே. ஒரு நாளுக்கே நாக்கு தள்ளுது! அஞ்சு வருஷம் எப்படி சமாளிக்கப் போறேனோ. ’ என்று மனதிற்குள் வசுந்தராவை வறுத்தெடுத்துக் கொண்டே, அணிந்திருந்த மேற்சட்டையின் இரண்டு பொத்தான்களை பிரித்து விட்டு அமைச்சரவை கூட்டம் நடக்கும் அறைக்கு வெளியே, ஒரு நீண்ட பெருமூச்சுடன் அமர்ந்தார் சித்தார்த்.
Advertisement
‘நீதானே அவ கூட இருக்கணும்னு ஆசையா இந்த போஸ்ட் வாங்கிட்டு வந்த. இப்போ நல்லா அனுபவி சிட்!’ என மனசாட்சி வேறு ஒருபுறம் வசை பாட, எப்போதும் போல் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது சித்தார்த்தால்!
முதல் அமைச்சரவை கூட்டம் வசுந்தரா எதிர்பார்த்ததற்கும், சித்தார்த்தும், வருணனும் அவரை எச்சரித்ததற்கும் மேலாகவே அனலடித்தது! வசுந்தராவின் பெரும்பான்மையான ம.ம.க வின் உறுப்பினர்கள், தாரா தேவியின் உத்தரவின்படி கொஞ்சம் அடக்கியே வாசித்தனர்.
ஆனால் அரசமைக்க ஆதரவாக இருந்த சில ‘துக்கடா’ மாநில கட்சிகள் தான், முக்கியத்துவம் வாய்ந்த இலாக்காக்களின் பொறுப்பை கைப்பற்றிக் கொண்டு துள்ளிக் கொண்டு இருந்தனர். விக்ரம் தேசாய் தான் அதற்கு பெரிய தூண்டு கோல் என்றாலும், கூட்டணியில் இருந்த ஒவ்வொரு கட்சிக்கும், அவர்களது மாநிலம் குறித்தான சுயநலமிக்க, மறைமுக எதிர்பார்ப்புகள் இருந்தது. அதை முழுவதும் தவறென்றும் ஒதுக்க முடியாதே!
தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று, சம்பிரதாய வணக்கங்களுடனும், நன்றிகளுடனும் தனது உரையை துவக்கிய வசுந்தரா, முன்னிருந்த திரையை இயக்கி,
“நமது நாட்டின் தாரக மந்திரமான, வேற்றுமையில் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு, சமத்துவமான, நீதியான, உள்ளடக்கிய, மற்றும் நிலைத்திருக்கக்கூடிய இந்தியாவை உருவாக்குவதே நமது கூட்டணி அரசின் குறிக்கோள்!
2030திற்குள் இந்த குறிக்கோளை நிறைவேற்ற, முக்கியமான ஐந்து மிஷன்களை (Missions – பணிகள்), மாற்றத்திற்கான திட்டமாக நமது அரசு முன் வைக்கிறது.
-
மிஷன் 1 – உள்நாட்டு பாதுகாப்பு, உறுதியான எல்லைகள், உலக அரங்கில் வலிமையான இந்தியா:
இனி…
நமது எல்லைகளை அத்து மீறும் அந்நிய சக்திகள்…இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு… எந்த வித சமரசத்திற்கும் அப்பாற்பட்டது.
இந்தியாவின் இறையாண்மையை… எந்த விலையையும் கொடுத்து காப்போம்.
உலக அரங்கில்…இந்தியா…தலைமை வகிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
-
மிஷன் 2 – அனைவருக்கும் சம வாய்ப்பு, வளர்ச்சி, பொருளாதார நீதியுடன் முன்னேறும் இந்தியா:
இதுவரை வெகு சிலருக்கே, மிக அரிதாக கிடைத்த வாய்ப்புகள்… இனி… அனைவருக்கும் கிடைக்கும்.
பெண்கள்… ஒதுக்கப்பட்டோர்… பின்தங்கியோர் — இவர்கள் முன்னேறும் வரை… நமது வளர்ச்சி முழுமை பெறாது.
வளர்ச்சி… தலைநகரங்களில் மட்டுமல்ல.
அது… ஒவ்வொரு கிராமத்திலும்… நாட்டின் மூலை முடுக்கெங்கும்… மலரும்.
-
மிஷன் 3 – மதச்சார்பற்ற ஆட்சி, சமூக ஒற்றுமை, நீதியை நிலைநாட்டும் இந்தியா:
மதத்தின் பெயரில் பிரித்து ஆளும் அரசியல்… இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
நாம் யார் என்பதை… நமது மதமோ, பிறப்பு சூழ்நிலைகளோ தீர்மானிக்காது.
இந்திய குடிமகனாக இருப்பதே… நாம் ஒவ்வொருவரின் மாறாத அடையாளம்.
நீதியும்… ஒற்றுமையும்… இந்த அரசின் இரு கண்களாக போற்றப்படும்.
-
மிஷன் 4 – கல்வி மேம்பாடு, வறுமையும், வேலையின்மையும் இல்லாத இந்தியா:
நமது இளைஞர்கள்… வேலை தேடி அலைவதை மாற்றி, வேலைவாய்ப்புகள் அவர்களை தேடி வரும் சூழல் மேம்படும்.
உலகத்தரம் வாய்ந்த கல்வி… தொழில்நுட்ப திறன்… புதுமை சிந்தனை — இவை நாட்டின் உறுதியான அடிப்படை உள்கட்டமைப்பாக மாறும்.
வறுமையும்… வேலையின்மையும்… அறியாத ஒரு புதிய தலைமுறை இந்திய மண்ணில் உருவாகும்.
-
மிஷன் 5 – பசுமை, பாரம்பரிய மீட்பு, பருவநிலை சவாலை முன்னணியில் எதிர்கொள்ளும் இந்தியா:
பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரில்… இந்தியா முன்னணி வகிக்கும்.
பசுமையையும், பாரம்பரியத்தையும் காத்து… இயற்கை செல்வங்களைப் பேணுவோம்.
அடுத்த தலைமுறையினர்… பெருமையுடன் வாழும் இந்தியாவை விட்டுச் செல்ல இந்த அரசு அயராது உழைக்கும்.”
என்று அரசின் திட்டத்தை கம்பீரமாக முழங்கியவர், கண்ணாடியை லேசாக கீழிறக்கி மேசையை சுற்றி அமர்ந்திருந்த அமைச்சர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார்.
எல்லாரையுடைய கவனமும் தன் மீதிருப்பதை உறுதி செய்து, அதில் திருப்தி கொண்டவராய்,
“அடுத்த வாரம் கூடவிருக்கும் அமைச்சரவை கூட்டத்திற்கு ஒரு நாள் முன்பதாக, அனைத்து அமைச்சர்களும், தங்களது துறை, அடுத்த ஐந்து வருடத்தில் இந்தப் பணிகளை செயல்படுத்தும் விதத்தை ஒரு உயர்மட்ட திட்ட அறிக்கையாக எனக்கு அனுப்புங்க.
அதில் இருந்து எனக்கு அதிகமாக கேள்விகள் இருக்கும் துறைகளுடைய திட்ட அறிக்கையை கலந்தாய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். மாற்றத்திற்கான இந்த பணித்திட்டத்தில் யாருக்காவது கேள்விகளோ, ஆட்சேபனைகளோ இருக்கிறதா?” என்று முடிக்க, அந்த அறையில் குண்டூசி விழுந்தால் கூட கேட்டு விடும் அமைதி!
ஆனால் அந்த அமைதி சில நிமிடங்கள் கூட நீடித்திருக்காது. ம.ம.க உறுப்பினர்கள் தலைமை அமைச்சரின் உரைக்கு கை தட்டி, ஆரவாரமாய் ஆர்ப்பரிக்க, மற்ற கட்சி அமைச்சர்களுக்கு நடுவிலோ பெரும் சலசலப்பு!
அது வரை, எதுவும் கேள்விகள் வரும் என காத்து நின்ற வசுந்தரா இருக்கையில் அமர்ந்து, தன் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு, வட்ட மேசையில் இரு கைகளையும் கோர்த்து நிறுத்தி, கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக அமர்ந்தார்.
அமைச்சர்கள் அவர்களுக்குள்ளாக பேசிக் கொண்டார்களேயன்றி, யாருக்கும் தலைமை அமைச்சரிடம் முதல் ஆளாக, தனியாக கேள்வி எழுப்ப துணிவு வரவில்லை. பலரும் கூட்டத்தோடு கூட்டமாக ‘கோவிந்தா’ போட்டு பழகிவிட்டவர்கள்.
மீதமிருந்தவர்களுக்கும் கூட எதற்கு வம்பு என்ற முன்னெச்சரிக்கை போலும். ஆக மொத்தம் ‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்ற குழப்பத்தில் அமைச்சர்கள் கூட்டம் இருக்க, அது நான் தானென்று தொண்டையை கனைத்து தன் இருப்பை உணர்த்தினார் விக்ரம் தேசாய்!
வசுந்தராவுக்கு நேரெதிராக அவர் அமர்ந்திருக்க, விக்ரமை நோக்கி தன் பார்வையை திருப்பினார் வசுந்தரா.
“முதல்ல இந்த மாதிரி முதல் கூட்டத்துக்கே முழு செயல் திட்டத்தோட வந்ததுக்கு வாழ்த்துகள் வசுந்தரா ஜி. ஒத்த ஆளா, தீயா வேலை செஞ்சிருக்கீங்கன்னு நல்லா தெரியுது” என்று தனது உதடுகளை இழுத்துப் பிடித்து போலிப் புன்னகை சிந்திய விக்ரம்,
“ஆனா பாருங்க, இதுல இருந்தே உங்களுக்கு இந்த பதவிக்குத் தேவையான வயசும், அனுபவமும் பத்தாதுன்னு நல்லா தெரியுது. இது ஒன்னும் உங்க எஸ்.பி.பி கட்சியோட தனி ஆட்சி கிடையாது. கூட்டணி ஆட்சி!
அதுனால நீங்க எங்க எல்லாரையும் கலந்து தான் அரசாங்கத்தோட திட்டம் என்னன்னு முடிவு எடுக்கணும். எல்லாரையும் இல்லாட்டி கூட எஸ்.பி.பிக்கு அடுத்து அதிக எண்ணிக்கை எம்.பிக்கள் இருக்குற என்னோட கட்சியோட கருத்துகளையாவது கேட்டுருக்கணும்.
அப்டி இல்லாம இந்த மாதிரி தன்னிச்சையா செயல்படணும்னு நினைச்சா என்னோட ஆதரவை மறு பரீசலனை செய்ய வேண்டி இருக்கும் வசுந்தரா ஜி! நான் சமர்ஜித் ஜி கிட்டப் போய் ஒரு வார்த்தை…ஒரே ஒரு வார்த்தை, அவர் ஆட்சி அமைக்க ஆதரவு தர்றேன்னு சொன்னா, எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தான்! தெரியும்ல உங்களுக்கு?” என்று பெரும் கர்வத்துடன் வசுந்தராவுக்கு சவால் விடுத்தார்.
தனது தலைமையை வெளிப்படையாக, குறைத்து மதிப்பிடும் விக்ரமின் தந்திரத்தில் மனதிற்குள் எரிச்சல் மூண்டாலும், வெளியில் சிறிதும் அசராமல்,
“ரொம்ப நல்லாவே தெரியும் விக்ரம் ஜி. ஆனா ஏன் போகாம இருக்கீங்க?” என்று தீவிரமாகவே கேட்டு, சிறிது இடைவெளி விட்ட வசுந்தரா,
“அப்புறம் என்ன சொன்னீங்க – தேவையான வயசு இல்லையா? எந்தக் காலத்தில இருக்கீங்க விக்ரம் ஜி? இப்ப வயசு வெறும் நம்பர் தான். பதவிக்கும், வயசுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.
இங்க இருக்குற எல்லாரையும் விட, இந்த பதவிக்குத் தேவையான பயிற்சி எனக்கு இருக்குன்னு தான் நம்புறேன். பதினைஞ்சு வயசுல இருந்து, அடிமட்ட அரசியல் எல்லாம் அத்துப்படி.
எல்லாத்துக்கும் மேல நாட்டை எப்படி நிர்வாகம் செய்யணும்னு எனக்கு ஐ.ஏ.எஸ் டிரெயினிங் ரொம்ப நல்லாவே சொல்லிக் கொடுத்திருக்கு. வேற என்ன அனுபவம் வேணும்னு நீங்க நினைக்கிறீங்க? சொன்னீங்கன்னா அதுக்கும் என்ன வழின்னு பாத்துடுவேன்” என்றார் சிரித்துக் கொண்டே.
இன்னொரு முறை யாரும் அவரது வயது, அனுபவம் என்ற பேச்சுக்கே போகக்கூடாது என்ற முடிவுடனே சற்று நக்கலாகவே தான் இருந்தது வசுந்தராவின் பேச்சு!
விக்ரம் கேட்டதிலேயே, அவருக்கு எதிராக அதிருப்தியாக சலசலக்க ஆரம்பித்த ம.ம.க அமைச்சர்கள், வசுந்தராவின் பதிலில் மீண்டும் சந்தோஷக் கூச்சலிட்டனர். என்ன தான் அவர்களுக்குள் உட்கட்சி பூசல்கள் இருந்தாலும், அதை பொது வெளியில், முக்கியமாக மற்ற கட்சியினர் முன் வெளியிடக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையை தனது கட்சி அமைச்சர்களுக்கு விதித்திருந்தார் தாரா தேவி.
தன்னை இதுபோன்ற இக்கட்டான சூழலில் நிறுத்தி விட்டதில், பல்லைக் கடித்த விக்ரம் தேசாய், வசுந்தராவின் குறிப்பிட்ட அந்த முதல் கேள்வியை வெகு கவனமாகத் தவிர்த்து விட்டு,
“உங்களுக்கு அனுபவம் இருக்குன்னு ஒரு பேச்சுக்கு ஒத்துக்கிட்டாலும், நீங்க சொல்ற இந்த மிஷன்ஸ் எதுவும் நடக்குறதுக்கு சாத்தியமே இல்லை! ஏதோ அதிர்ஷ்ட வசமா நமக்கு அரசாங்கம் பண்ண ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. அதை வைச்சி என்ன லாபம் பார்க்கலாம் அப்டின்றது தான் புத்திசாலித்தனம் வசுந்தரா ஜி” என்றார் காட்டத்துடன்.
“எந்த ஒரு விஷயத்தையும், முயற்சியே பண்ணாம, சாத்தியமா இல்லையான்னு முடிவு பண்றது தான் உங்க அகராதில புத்திசாலித்தனம்னா, எனக்கு அது தேவையில்லன்னு நினைக்கிறேன்” என்று பதிலளித்த வசுந்தரா, மற்ற அமைச்சர்களை நோக்கி,
“விக்ரம் ஜி அவரோட கருத்தை ரொம்ப வெளிப்படையா சொல்லி இருக்கார். இதை தான் உங்க எல்லார்கிட்டயும் எதிர்பார்க்குறேன். ஓப்பன்னஸ் & டிரான்ஸ்பரன்ஸி! விக்ரம் ஜி தெளிவா சொல்லிட்டார். அவர் என்ன லாபம் பார்க்கலாம்னு தான் அரசமைக்க ஆதரவு கொடுத்திருக்கார், மக்களோட நலனுக்காக இல்ல! நன்றி விக்ரம் ஜி” என்று விக்ரம் தேசாய் பேசியதை அவருக்கெதிராகவே திருப்பி விட்டு, அவரிடம் திரும்பி ஒரு போலிப் புன்னகையையும் சிந்தி,
“வேற யாருக்கும் கேள்விகளோ, ஆட்சேபனையோ இல்லாட்டி, அடுத்த வாரம் உங்களோட திட்ட அறிக்கைகள் விவாதம் பண்ணலாம். அது தவிர, உங்க துறைகள் இப்ப செஞ்சுட்டு இருக்குற முக்கியமான பணிகள் குறித்தும் எனக்கு ஒரு ஆய்வு அறிக்கை அனுப்புங்க. அதையும் பார்த்துட்டு, தனிப்பட்ட துறைகள் வாரியான சந்திப்பு தேவைப்பட்டா என்னோட ஆஃபிஸ் ரீச் பண்ணுங்க” என்று கை கூப்பி எழுந்தார்.
“எங்களுக்கும் ஆட்சேபனை இருக்குங்க மேடம்” என்று மேசையின் கடைசி முனையில் இருந்து திருத்தமான தமிழில், அழுத்தமும், கம்பீரமும் நிறைந்த ஒரு ஆண் குரல் ஒலிக்க, அந்த குரலை வைத்தே அது யார் என்று எளிதாக அடையாளம் கண்டிருந்தார் வசுந்தரா!
‘ஷப்பா, அடுத்து நீயா ராசா? கொஞ்சம் கேப் விட்டு அடிங்களேண்டா’ என்றது வசுந்தராவின் மைண்ட் வாய்ஸ்!
error: Content is protected !!