Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தமிழிசை 18

தமிழிசை 18

மறுநாள் காலை உணவு முடிந்த கையோடு தன் அறைக்குள் நுழைந்த பார்த்தி எங்கோ செல்லக் கிளம்பிக் கொண்டிருக்க,



Advertisement

“எங்க கிளம்பிட்டீங்க பார்த்தி?” கேட்டுக் கொண்டே வந்த தமிழ், அவன் கையிலிருந்த பாஸ்போர்ட் இன்ன பிற டாக்குமெண்ட்களைப் பார்த்ததும் ஒரு நொடி அசைவின்றி நின்றவள் பின்…

“ஓ… அங்க திரும்பிப் போற மாதிரிதான எல்லாப் பதிவும் இருக்கும்? இப்போ அது இல்லனு இங்க பதிவு பண்ணனும்ல?” கேட்டவளை மறுத்து எதுவும் சொல்லாமல்,

Advertisement

Advertisement

“வேலை முடிய கொஞ்சம் லேட்டாகும் தமிழ். என்னைத் தேடாத!” இன்றைக்குப் பொழுதுக்காக அவன் இதை சொல்லவில்லை. அடுத்த இரண்டு வருடங்களுக்கு சேர்த்துதான் சொன்னான்.

அதை அறியாத தமிழ், “ரொம்ப நேரமாகுமா?” என்று கேட்டிருந்தாள்.

Advertisement

அழுது விடுவோமோ என்றஞ்சியவன் அவளுக்காகவே அடக்கியும் கொண்டான்.

“ஏம்மா, எதுவும் வேலை இருக்கா?” முயன்று சாதாரணமாக கேட்டான்.

“இல்ல, ‘உங்கப்பனுக்குப் பயந்து உன்னை மறுவீட்டுக்குக் கூட கூப்பிட முடியலனு அம்மா நேத்து அழுதிட்டாங்க. அண்ணாவும் சடங்கு சம்பிரதாயத்தை விட எல்லாரோட மன நிம்மதியும் முக்கியம்னு சொல்லி அம்மாவை அழைச்சுட்டுப் போயிட்டாரு. ஆனா அவருக்குமே அந்தக் கவலை இருக்கு. அதான் அவங்களை இங்க கூப்பிட்டுப் பார்க்கலாம்னு நினைச்சேன். நீங்களும் ஒருவார்த்தை கூப்டீங்கனா…”

“உன் வீட்டுக்கு உங்க அம்மாவையும் அண்ணனையும் கூப்பிடுறதுக்கு எதுக்கு இவளோ தயக்கம்? இதுல என்கிட்ட பர்மிஷன் வேற? அவங்களை வர சொல்லு. மதியம் சாப்டுதான் போகணும்னும் சொல்லு. நானும் அண்ணாகிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்.”

என்ற,

அவன் குணத்தில் கர்வம் கொண்டவள் அவனை வழியனுப்பி வைக்க வாசல் வரை சென்றாள்.

ராஜேஷ் நிர்மலாவைக் கவனித்துக் கொள்ளவென்று நேற்று மாலையாகவே கிளம்பிச் சென்றிருந்தான். தருண், நிரஞ்சனா, மித்து உட்பட மற்றவர்கள் அனைவரும் ஹாலில்தான் இருந்தார்கள்.

காலையுணவை முடித்த கையோடு ஆங்காங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

யாரையும் கவனிக்கும் மனநிலையில் இல்லாத பார்த்தி, வாசலைப் பார்த்தவாறே நடந்து போக நிரஞ்சனா,

“எங்கண்ணா கிளம்பிட்ட?” என்றாள்.

“வெளிய வேலையா போறாங்க. நிரஞ்சா. இனி அங்க போகமாட்டார்ல? அது சம்மந்தமான வேலைதான்.”

அவனுக்கு முந்தித் தமிழ் பதில் சொல்லிவிட, பார்த்தி நிம்மதியாய் உணர்ந்தான். தான் பதில் சொல்லப் போயிருந்தால் நிச்சயம் தங்கை எதையும் கண்டுகொண்டிருப்பாள் என்பது அவனுக்கு உறுதி.

தன்னோடு இருப்பதற்கான வேலையை செய்யக் கணவன் கிளம்புகிறான் என்ற பூரிப்பில் விகசித்த தமிழின் முகத்தை நெஞ்சில் ரணமாய் சுமந்து கொண்டே கால்களில் கல்லைக் கட்டிப் போட்டது போல் அடிகளை சிரமப்பட்டு நகர்த்தி இன்டெர்நெட் சென்டருக்கு சென்றான்.

அங்கே எல்லாம் முடித்துக் கொண்டவன் மறக்காமல் ஆனந்தனுக்கு அழைத்து மனைவியின் கோரிக்கையை நிறைவேற்றினான்.

மதிய உணவுக்கு நேரமிருக்கவே வீட்டுக்குச் செல்லத் தோணாது அருகே திறந்திருந்த ஒரு அம்மன் கோவிலுக்குள் நுழைந்து கொண்டான்.

முடிந்து விட்டது. மீண்டும் குவைத் செல்லப் போகிறேன் என்று இமிகிரேட்டில் பதிவு செய்துவிட்டான்.

‘தமிழின் முகத்தைப் பார்த்து இதை எப்படி சொல்லப் போகிறேன்?’ உள்ளம் ஓலமிட்டது.

‘வேண்டாம்… இப்போதே எதையும் சொல்ல வேண்டாம். இங்கே இருக்கப் போகும் நாட்கணக்கை அவள் அழுத முகத்தைப் பார்த்துக் கழிக்க வேண்டாம். அவளும்தான் கொஞ்சம் சந்தோஷமாக இருந்து விட்டுப் போகட்டுமே!’

யோசித்தாலும் அவளிடம் மறைத்துப் பொய்யாக நடிக்கவும் வரவில்லை அவனுக்கு.

அன்று சொன்னானல்லவா மனசாட்சிக்கு உண்மையாக இருப்பவன்தான் மனிதன் என்று!

இன்றிலிருந்து அவன் மனிதனல்ல!

‘இருந்துவிட்டுப் போகட்டும். நிரந்தரமாய் அவள் முகத்தில் நிம்மதி நிலைக்க, இரண்டு வருடங்கள் அவளை இருளில் தள்ளப் போகிறேன். அந்தக் கார்காலத்தின் கதகதப்புக்காக இந்தத் தற்காலிக சந்தோஷத்தை அவளுக்கு நினைவுகளாக்கிக் கொடுப்போமே!’ என்று சிந்தித்தவன் தன் தொலைபேசியை எடுத்து சேகரை அழைத்திருந்தான்.

இங்கே நடந்த கலவரங்களால் இன்னும் அவன் கொடுத்த பார்சலை அவன் மனைவி மக்களிடம் சேர்க்கவில்லை.

இப்போது அதை சாக்காக வைத்து தமிழோடு தனியே ஒரு பயணத்தைத் திட்டமிட்டான். வீட்டில் அவளோடு மூச்சு முட்டுகிறது.

திருமணத்தின் பின்னான அவளோடான நேரங்கள் எப்படியெல்லாம் கழியும் என்ற அவன் கற்பனைகளை நிகழ்காலம் தின்று தீர்த்ததை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அதை நிவர்த்தி செய்யவே இந்தத் திட்டம். ‘தமிழோடு நான் உங்கள் வீட்டுக்கு செல்லவா?’ என்று கேட்டவனை,

“ஏன் இதை நீ என்கிட்ட கேட்டுட்டுத்தான் போவியா? மரியாதையா ரெண்டு பேரா வீட்டுக்குப் போ.” என்று திட்டி வைத்தான் சேகர்.

இன்னும் அவனிடம் கூட விஷயத்தை சொல்லியிருக்கவில்லை அவன். திருமணம் என்று மட்டும் கீதன் மற்றும் சேகருக்கு சொல்லியிருந்தான்.

மகிழ்ந்து போன சேகர், “நீ அங்கேயே இரு. இரு வருடம் கழித்து உன்னோடு உன் குழந்தையையும் வந்து பார்த்துக் கொள்கிறேன்.” என்றிருந்தார்.

இப்போது இதைச் சொன்னால் நிச்சயம் இவனைக் கத்துவான் என்பதைத் தாண்டி தமிழிடம் சொல்லாமல் வேறு யாருக்கும் சொல்லவும் மனமில்லை அவனுக்கு.

அவனுடன் பேசி முடித்தும் வீடு செல்லும் எண்ணமே இல்லாமல் எங்கோ வெறித்திருந்தவனைத் தமிழின் அழைப்புத் திசை திருப்பியது.

அழைப்பை ஏற்றதும் அவள் கேட்ட முதல் கேள்வி, “எல்லாம் ஓகே தானேங்க? அங்க வந்தே ஆகணும்னு முன்னாடி போட்ட ஒப்பந்தம் வச்சு எதுவும் பிரச்சனை ஆகலயே?” என்பதுதான்.

அவள் குரலின் படபடப்பில் இங்கே இவன் தொண்டைக் குழிக்குள் முள் சிக்கிக் கொண்டது.

“ஹலோ… பார்த்தி? இருக்கீங்களா? ஏன் பேச மாட்டுறீங்க?”

“ஹா… இருக்கேன் தமிழ். இங்க சிக்னல் அவ்ளோவா கிடைக்கல.”

“ஆஹ் ஓகேங்க.” என்றவள், மீண்டும் “எல்லாம் ஓகேதான?” என்ற, கண்களை இறுக மூடித் திறந்தவன்,

“ஒ… ஒரு பிரச்சனையும் இல்ல, தமிழ்! எல்லாம் ஓகே ஆகிடுச்சு,” ‘நான் போறது.’ என்ற விகுதியை மனதோடு சொல்லிக் கொண்டான்.

“ஹ்ம்ம்… இப்போதான் நிம்மதியா இருக்கு.”

அவள் சந்தோஷப் பெருமூச்சு இவன் நெஞ்சுக்குள் வேதனைக் கதிர்வீச்சுக்களாய் ஊடுருவியது.

“சரி வேலை முடிஞ்சா சீக்கிரம் வீட்டுக்கு வாங்க. அம்மாவும் அண்ணனும் இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவாங்க.”

“சரிம்மா வரேன்.” என்று வைத்தவன் வெறுமை தங்கிய மனதோடு வீடிருக்கும் திசையில் நடந்தான்.

உணவுவேளை முடிந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் பார்த்தி, தான் மேற்கொள்ள இருக்கும் பயணம் பற்றி சொல்ல,

“நேத்துதான பார்த்தி கல்யாணம் முடிஞ்சிருக்கு? இப்போவே போயாகணும்னு என்ன அவசரம்? தூரப் பயணத்துக்கு அட்லீஸ்ட் ஒரு வாரமாச்சும் போகட்டுமே!”

‘ஒரு வாரம் போனா எனக்கு மீதி மூணு நாலு நாள்தானே பாக்கி இருக்கும்?’ மனதோடு கதறியவன்,

“இல்லண்ணா இதுவே லேட். போயிட்டு வந்துட்டா தேவலாம்னு இருக்கு.”

“விடுங்க ஆனந்த் அண்ணா. அங்க போய்ட்டு அப்பிடியே ஒருவாரம் பத்து நாள் வேற எங்கேயும் தங்கிட்டு வரட்டும்.”

மறைமுகமாய் தமையனுக்குத் தேனிலவு ஏற்பாடு செய்து கொடுத்தாள் நிரஞ்சனா.

பார்த்திக்கு சிரிக்கவா அழவா என்றிருந்தது. வீட்டிலே அவள் அருகாமையை விலக்கவே எவ்வளவு மெனக்கெடுகிறான்? இதில் ஹனிமூன் ஒன்றுதான் குறைச்சல்! ஆனால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான் என்று ஒப்புக் கொண்டான்.

ஒன்றை மறைக்க எத்தனை தில்லுமுல்லுகளும் திட்ட வட்டங்களும்? பேசாமல் அவளோடு கருந்துளைக்குள் விழுந்து காணாமல் போனால் என்ன என்று இருந்தது அவனுக்கு.

“அப்பிடினா ஓகே பார்த்தி, நீ எங்க போகணும்னு முடிவெடுத்து சொல்லு. நான் அதுக்குண்டான அரேஞ்ச்மென்ட்ஸ பார்த்துக்கிறேன்.”

“அதெல்லாம் வேணாம்ணா. நானே பார்த்துக்கிறேன். சேகர் அண்ணா மச்சான் டூரிஸ்ட் கைட்தான். அவரும் ஹெல்ப் பண்ணுவாரு.” என்ற, அவன் சரியென்றவன் லஞ்ச் டைம் முடிந்ததாக விடைபெற்றுக் கொண்டான்.

தன்னிடம் இது பற்றி ஒரு வார்த்தை சொல்லாது பொதுவில் பேசிய பார்த்தியின் செய்கையில் குழம்பி நின்றிருந்த தமிழ்,

“நானும் கிளம்பறேன் தமிழ்! உங்கப்பா வந்து பார்த்து வீட்டுல ஆள் இல்லனா தொலைஞ்சுது” என்ற தாயின் வார்த்தைகளில் அவரை வழியனுப்ப சென்றாள்.

அடுத்து தருணும் விடை பெற்றுத் தன் ஜெராக்ஸ் கடைக்கு சென்றான். அதன் பின் மித்துவைத் தன் கைப்பற்றிக் கொண்டான் பார்த்தி.

அன்று மாலையே தருண் குடும்பம் தங்கள் வீட்டைப் பார்த்து சென்றிருந்தது.

நிரஞ்சனா, மித்து இருக்கும் வரை கூட ஓரளவு சாதாரணமாக இருந்த பார்த்தி அவர்களும் சென்ற பின் தமிழைத் தவிர யாருடனும் பேசப் பிடிக்காது அறைக்குள் முடங்கிக் கொண்டான்.

சித்ரா என்னவோ அன்று எந்த சித்துக்களும் செய்யாமல் அதீத அமைதியாக இருந்தாள்.

அதனால் தமிழும் சித்ராவோடு ஒட்டியும் ஒட்டாமலும் வேலைகளைப் பகிர்ந்து கொண்டாள். ஆனால் அவர்களின் பிள்ளைகளிடம் நன்றாகவே பழகினாள். வரதன் எப்போதும்போல் தன் வேலையென்று இருந்து கொண்டான்.

பர்வதம்தான் மகனின் பாராமுகத்தில் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தார். அதில் மற்ற யாரின் போக்குவரத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை அவர்.

இன்னும் ஒரு நாள் போயிருந்தால் அந்த வீட்டின் அசாதாரண சூழ்நிலையை தமிழ் கண்டு கொண்டிருப்பாளோ என்னவோ, ஆனால் அது கூடாதென்று பார்த்தி அடுத்தநாளே அவளைப் பெட்டியைக் கட்ட வைத்து விட்டான்.

சேகரின் வீட்டுக்கு சென்றவர்கள் சேகரின் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, அங்கே ஒருநாள் தங்கி குழந்தைகளுடன் பொழுதை ரம்மியமாகக் கழித்தனர்.

அடுத்த நாள் காலை அவர்களிடம் விடைபெற்று கொடைக்கானல் பயணப்பட்டு இருந்தனர் இருவரும்.

கிட்டத்தட்ட ஏழரை, எட்டு மணித்தியால பயணம். அலைச்சல்தான். ஆனால் பயணத்தில் பாதி நேரத்தையும் பயணக் களைப்பில் மீதி நேரத்தையும் விரயம் செய்யும் அவன் திட்டத்துக்கு சரியாகவே இருந்தது.

இரவுகளின் நீளம் போதாது, உதய சூரியன் உதிக்க வேண்டும் தாமதமாக என்று கொண்டாட வேண்டிய புதுமணத் தம்பதிகள்… அதுவும் காத்திருந்து காதல் கூடிய தம்பதிகள்… இருவருக்கும் இந்தக் காட்சியை எழுதிய இறைவனின் இரக்கத்தை என்னவென்று சொல்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!