Skip to content
Post Views: 3,748
கணவனின் ஆசைக்கு பணம் ஒரு தடையாக இருப்பது கண்டு உள்ளம் வருந்திய தமயந்தி கொஞ்சமும் யோசிக்காது தன் நகைகளை கொடுத்தாள் அடகு வைக்க…
திருமணமாகி மூன்று மாதம் கூட ஆகாத நிலையில் மனைவியிடம் நகைகளை பெற்றுக் கொள்ள வெட்கி வேதனை அடைந்தான் சங்கரன்.
உங்களுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? நீங்க தொழில் செய்து நல்ல முறையில் முன்னேறினால் எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கும் தெரியுமா?
உங்களோடது வேற என்னோடது வேறன்னு எதுவும் இல்லை… எல்லாமே நம்முடையது… நாளைக்கு நீங்கள் தொழில் செய்து நல்ல விதமா சம்பாதிக்கும் போது எனக்கு அதில் உரிமை இல்லாமல் போயிடுமா என்ன? பலவிதமாக கணவனுக்கு ஆறுதல் கூறி நகையை கொடுத்து அனுப்பினாள் தமயந்தி.
Advertisement
தான் கேட்காமலே தன் துன்பம் கண்டு பொறுக்காமல் நகையை கொடுத்த மனைவிக்கு எவ்வளவு விரைவாக மீட்டுக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அவள் நகைகளை மீட்டுக் கொடுத்து விட வேண்டும் என்று மனதில் சங்கல்பம் கொண்டான் சங்கரன்.
சங்கரன் தனியே தொழில் செய்வது கண்டு அண்ணன் பரமசிவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றாலும் அவன் மனைவிக்கு புகைச்சல்.
பரமசிவம் சேற்றில் உழண்டு புரண்டு விவசாயம் செய்கிறான் என்றால் சங்கரனும் க்ரீஸ் பூசிக் கொண்டு எஞ்சின் ஆயில் அப்பி கரிவண்டியாய் தான் வேலை பார்க்கிறான்.
Advertisement
ஆயினும் மனித மனசு தராசு தட்டோடு அலையுமல்லவா? தன்னிடம் இல்லாதது எதிராளியிடம் இருப்பதாக எப்போதுமே எண்ணி எண்ணி மருகும்.
Advertisement
“——————“
இந்தாம்மா இந்த சோத்துப் பானையை அப்படி அந்த மேடையில தூக்கி வச்சி வடி தட்டை இறுக்கி பிடிச்சு வடிச்சு விடு… சுசிலா மாமியாராக வேலையை ஏவி நிற்க…
ஒரு மரக்கால் அரிசியை தூக்கி எப்படி வடிக்க என்று தெரியாமல் பயந்து நின்றாள் தமயந்தி.
Advertisement
என்ன அப்படி பார்க்கிற…?
இல்லத்த எனக்கு இவ்வளவு பெரிய பானையை தூக்கி வடிக்க தெரியாது… தயங்கியவளின் குரல் உள்ளே போனது.
சரியா போச்சு…. உனக்கு என்ன தான் தெரியும்?
அது சரி நாலு காணி பூமி உள்ள இடத்தில் பிறந்து இருந்தா பம்பரமா வேலை செய்ய தெரிஞ்சிருக்கும்… காட்டு வேலையும் தெரியாது வீட்டு வேலையும் தெரியாதா?நொடித்துக் கொண்டார்.
அதாவது தமயந்தி நிலப்புலன் உள்ள குடும்பத்தில் பிறந்து வளரவில்லை என்று நேரடியாகவே தாக்கி விட்டார் சுசிலா.
விழி நீர் பெருக அமைதியாக தலை குனிந்து நின்றாள் தமயந்தி.
இந்தா இப்ப என்ன சொல்லி புட்டேன்னு இப்படி அழுது வடிக்கிற…?
புருஷன் சோத்துக்கு சம்பாதிச்சா பொண்டாட்டி உப்புக்காவது சம்பாதிக்கணும்!
நானெல்லாம் எப்படி பாடு எடுத்தேன் தெரியுமா? ஆம்பளைக்கு சமமா வயக்காட்டுல நடவு நடனும், களை பறிக்கணும்,கதிர் அறுக்கணும், கட்டு தூக்கணும், களத்தில் கதிர் அடிச்சு தூத்தணும், புடைக்கணும்…! பொம்பளையா பொறந்தா புள்ளைக்குட்டி பெத்துக்கிட்டா மட்டும் போதுமா?
அப்படி எல்லாம் பாடுப்பட்டு ஒன்ன நாலாக்கி சேர்த்து வச்ச சொத்து சுகம் தான் இதெல்லாம்…
எதிரில் இருப்பவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்றெல்லாம் யோசிக்காமல் அவர் பாட்டுக்கு கொட்டி தீர்த்தார்.
நான் கத்துக்குறேன் அத்த…. தளும்பிய குரலில் கூறினாள்.
மச மசன்னு நிக்காம அந்த கத்திரிக்காயை நாலு நாலா வெட்டி போடு! அந்தக் கிண்ணத்தில் புளியையும் தக்காளியையும் ஊத்தி கரைச்சு வை…ரசம் தாளிக்கணும்…!
சுசிலாவின் ஏவலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தட்டு தடுமாறி பதட்டத்துடன் செய்து முடித்தாள் தமயந்தி.
ஏன் காலத்துக்கும் நானே செய்யணுமா….? உன் சின்ன மருமக பெரிய மகாராணியா?
நான் என்ன ஒத்த மருமகளா? நீ மொத்தமா எனக்கே குடுத்துடப் போறியா…? தாளம் தீர்த்து விட்டுப் போய் படுத்துக்கொண்டாள் ஜெயலட்சுமி.
இந்தாம்மா இந்த சோத்தை தூக்கி அந்த அன்ன கூடையில கொட்டு… அந்தப் பெரிய தூக்கு வாளியில சாம்பார ஊத்து… சின்ன வாளியில ரசத்தை வை… அந்த அலுமினிய டப்பாவுல வறுத்து வச்ச மோர் மிளகாய எடுத்து வை!
மாமியார் சொல்வதை எல்லாம் பரபரப்பாக செய்து கொண்டு இருந்தாள் தமயந்தி.
சேறு பூசிய லுங்கியும் பணியனுமாக வந்து நின்றான் பரமசிவன்.
வியர்வை பூக்க தட்டு தடுமாறி தமயந்தி வேலை செய்வதை கண்டவன்… ஏம்மா ஜெயா எங்க போனா? இந்தப் புள்ள பாவம் ஒண்டியா கிடந்து லோள் படுது.. எதார்த்தமாக தான் கேட்டான்.
ஆங்காரமாய் வெளியில் வந்த ஜெயலட்சுமி ஆடி தீர்த்துவிட்டாள்… என்ன பேசுற நீ… உன் தம்பி பொண்டாட்டி ஒசத்தினா உனக்கு பொண்டாட்டியா வந்த நான் அவ்வளவு இளப்பமா?
இல்ல… ஜெயா நான் என்ன சொன்னேன்னா… அவன் எச்சில் விழுங்கினான்.
நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை… கூட்டுக்குடும்பமுன்னா எல்லாரும் தான் வேலை செய்யணும்!
உங்க அப்பா ஒன்னும் நமக்கே எல்லாத்தையும் பட்டா போட்டு கொடுத்துடல… என் உடம்ப இரும்பால அடிச்சு வைக்கல… எனக்கும் நோவும்…
ஒரு நாள் வேலை செஞ்சதுல உன் தம்பி பொண்டாட்டி ஒம்பது கிலோ குறைஞ்சுடல… நொடித்துக் கொண்டவள் மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.
பரமு நீ சோத்த தூக்கிக்க தமயந்தி சாம்பார் ரசம் தூக்கிட்டு வருவா… சீக்கிரம் கிளம்புங்க… சூரியன் உச்சிக்கு வந்துடுச்சு இன்னும் சோறு போடலன்னு வேலை ஆளுங்க காத்து கிடப்பாங்க…
சோறாக்கி முடித்த அடுப்பை விறகை வெளியில் தள்ளி அணைத்துக் கொண்டிருந்தார் சுசிலா.
கண்ணீர் முட்ட ஒரு கையில் சாம்பார் வாளியும் மறுக்கையில் ரசம் வாளியுமாய் தமயந்தி நிற்க… மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்த சங்கரன் மனைவியின் முகவாட்டம் பொறுக்காது தளர்ந்து நின்றான்.
தமயா நான் எடுத்துட்டு போறேன் நீ போ…. மனைவியின் பதிலை எதிர்பாராது தூக்கு வாளிகளை டிவிஎஸ் ஃபிப்ட்டியில் வைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் சங்கரன்.
தன்னை வேலை வாங்க மாமியாருக்கு உரிமை இல்லாமல் இல்லை… எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறதல்லவா…?
சோறாக்கி குழம்பு வைத்து முடிப்பதற்குள் அவளை தாளித்து கிண்டி கிளறி கொதிக்க வைத்து விட்டார் சுசிலா.
தங்கள் அறைக்கு சென்று கட்டிலில் கவிழ்ந்து படுத்தவள்… மனதின் வலியும் கையின் வலியும் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதாள்.
பையன் நல்லவன்னு பொண்ணு கொடுத்திட முடியாது குடும்பமும் சரியா அமையனும் என்று அவள் தாய் அன்று சொன்னதன் அர்த்தம் இன்று புரிந்தது…!
அவசரப்பட்டு சங்கரனுக்கு கழுத்தை நீட்டி விட்டோமோ என்று உள்ளம் விம்மியது.
சங்கரன் நல்ல கணவன் தான் ஆனால் அதைவிட ரொம்ப ரொம்ப நல்ல மகனாய் இருந்து தொலைக்கிறானே…
வீட்டில் மனைவி சந்திக்கும் சங்கடங்களை எல்லாம் சங்கரன் கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கிறான்… ஏன் இப்படி பண்றீங்க ஏன் இப்படி பேசுறீங்க என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டால் அதற்கும் தமயந்தியை தான் படுத்தி எடுப்பார்கள்.
மெக்கானிக் ஷாப்பில் தோள்பட்டை வலிக்க வலிக்க வேலை செய்து விட்டு வீட்டிற்கு வரும் கணவனிடம் குடும்பத்தில் நடக்கும் உரசல்களை சொல்லி அவனை வருத்தப்பட வைக்க தமயந்தியும் விரும்பியதில்லை.
சங்கரன் மனைவியை மிகமிக அன்பாக நடத்தினான்.
இரவு வீட்டுக்கு வரும்போது அவளுக்கு பிடித்த தின்பண்டம் வாங்கி வருவான்.
அவள் கேட்கும் ராணி முத்து,குங்குமம், தேவியின் கண்மணி போன்ற புத்தகங்கள் வாங்கி வருவான்.
அவள் விரும்பும் போது அம்மா வீட்டிற்கும் அழைத்து சென்று வருவான்.
தன்னை தங்கமாய் தாங்கும் கணவனுக்காக சில சங்கடங்களை தாங்கிக் கொள்வதில் தவறில்லை என்றுதான் தமயந்தியும் பொறுத்து பொறுத்து போகிறாள்.
“—————-“
வீட்டில் மறுத்தும் தன் விருப்பத்தின் பேரில் தெரிவு செய்த வாழ்க்கை இது… இன்று கண்ணை கசக்கிக் கொண்டு போய் நின்றால்” அன்றே சொன்னேனே நீ கேட்டாயா” என்று கேட்பார்களே…
தாயிடம் கூட புகுந்த வீட்டை பற்றி புகார் வாசித்தது இல்லை…
இந்நிலையும் மாறும் என்ற நம்பிக்கை மட்டுமே அவள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
என்ன சங்கரா இப்போல்லாம் வருமானத்தை அதிகம் கண்ணில் காட்ட மாட்டேங்கிற…நேரெதிரே நின்று கேட்டார் ஆதிமூலம்.
சுர்ரென்று கோபம் நாடி நரம்பை எல்லாம் முறுக்கேற்றிய போதும் கூட்டுக் குடும்பத்தில் பணிந்து போதலும் அனுசரித்து செல்வதும் அவசியம் என்று தன்னையே நிதானப்படுத்திக் கொண்டவன்… அப்பா மழை நாளில் அதிகம் வேலை இருக்காது என்றான்.
“நம்புறேன்” என்று துண்டை உதறி தோளில் போட்டு சென்றவரை சற்று அச்சதுடனே பார்த்தான்.
விவசாய வருமானம் பொது என்னும் போது சங்கரனின் ஒர்க் ஷாப் வருவாயும் பொது என்று அவனுக்கு திருமணம் பேசி முடிக்கும் போதே தெளிவு படுத்தி இருந்தார் ஆதிமூலம்.
அப்பா பார்த்துக் கொள்வார்… எல்லாம் அப்பாவுக்குத் தெரியும் என்று அப்பாதாசனாய் இருந்த சங்கரன் சற்று சிந்திக்கத் தொடங்கினான்.
வளைகாப்பு முடிந்து பிள்ளை பெற்றுக் கொள்ள தாய் வீட்டுக்கு வந்த கலா தமயந்தியை படுத்தி எடுத்தாள்.
உட்கார்ந்து கொண்டே அவ்வளவு வேலை ஏவினாள்.
சாப்பிட்டது நெஞ்சு மேலேயே நிற்குது சுடு தண்ணி கொண்டு வா! சட்டமாய் கால் ஆட்டிக் கொண்டு சன் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவ்வளவு சூடா இருக்கு… எப்படி குடிக்க முடியும்? பதமா ஆத்தி கொடு!
நீங்க ஆத்தி குடிங்க…எனக்கு அடுப்படியில் கொஞ்சம் வேலை இருக்கு…! தன்மையாய் தான் சொன்னாள் தமயந்தி.
அப்போ நான் தெண்டமா உட்கார்ந்து இருக்கேன்னு சொல்லி காட்டுறியா?
அய்யோ அண்ணி நான் எப்போ அப்படி சொன்னேன்… பட படத்து நின்றாள் தமயந்தி.
நீ சுத்தி வளைச்சு பேசினா எனக்கு புரியாதுன்னு நினைப்பா…?
வயித்து புள்ளகாரி எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க…? சுசிலா வேகமாய் வந்து நின்றார்.
ம்ம்ம்ம்… எனக்கு வேண்டுதல்…!
எதுக்கு கோவிக்கிற?
உன் மருமக என்னை தெண்டமா ஓசி சோறுன்னு சொல்லாம சொல்லி காட்டுறா….
அய்யோ அத்த சத்தியமா நான் அப்படி சொல்லலை.. நினைக்க கூட இல்லை.
நினைச்சாலும் நினைப்படி அம்மா… முகத்தை முறுக்கிக் கொண்டவர்.இவ இந்த வீட்டு பொண்ணு… உனக்கு இருக்கிற உரிமையை விட வீட்டுல பொறந்த பொண்ணுக்கு உரிமை சாஸ்தி… திட்டவட்டமாய் கண்களை உருட்டி கையை நீட்டி எச்சரித்தார்.
எதுவும் பேசாது அமைதியாய் நின்றாள் தமயந்தி.
போ.. போய்… முருங்கை கீரையை உருவிட்டு அந்த ஈரக்கை எடுத்து தனியா வை… எப்படி கஷாயம் செய்யறதுன்னு பக்குவம் சொல்றேன் அதுபடி செய் ! கலாவுக்கு நீர் வடிய கஷாயம் கொடுக்கணும்!
அத்த… இதெல்லாம் அவளை போய் செய்ய சொல்ற. எல்லாத்திலும் சாஸ்திரம் பார்ப்ப… இப்போ அவளை கஷாயம் வைக்க ரெடி பண்ண சொல்ற… சம்மன் இல்லாமல் ஆஜராகி நின்றாள் ஜெயலட்சுமி.
திருமணமாகி எட்டு மாதம் தான் ஆகிறது அதற்குள்ளே அவளுக்கு மலடி பட்டம் கட்டி விட துடித்தாள் ஓரகத்தி.
வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு உள்ளே ஓடிய தமயந்தியை மற்ற மூன்று பெண் ஜென்மங்களுமே கண்டு கொள்ளவில்லை.
கேவி கேவி அழுது ஓய்ந்து படுக்கையில் அயர்ந்து கிடந்தவள் வெளியே சத்தம் கேட்டு எழுந்து ஓடிவந்தாள்.
“—————–“
என்ன சங்கரா பேச்சு நடத்தை எல்லாம் ஒரு தினுசா இருக்கு?
சிந்திக்க நேரம் கொடுக்காமல் கிடுக்கி பிடி போட்டு விசாரிக்கும் சிபிஐ அதிகாரி போல் மிரட்டலுடன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் ஆதிமூலம்.
அப்பா நான் என்ன தப்பு பண்ணினேன்? சங்கரன் கடுத்த குரலை சாந்தப் படுத்தி பேசிக் கொண்டிருந்தான்.
என்ன தப்பு பண்ணினியா?
வீட்டுக்கு தெரியாம RVR சீட்டு கம்பெனியில் அம்பதாயிரம் ரூபா சீட்டு போட்டிருக்க… அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.
ஆமா… தமயந்தி நகையை அடகு வச்சிருக்கேன் அதை மீட்டு கொடுக்கணுமில்ல…
அதுக்கு? எகத்தாளமாய் கேட்டார்.
அதுக்குன்னா… நான் தானே வாங்கி அடகு வச்சேன்… அப்போ நான் தானே திருப்பி தரணும்?
நகைக்கு இப்போ என்ன அவசரம்?
அப்பா அவ அறுபது வயசு கிழவி இல்ல… போட்டு ரசித்து அனுபவிக்கிற வயசு… நகை அடகு வச்சது அவ அம்மா வீட்டுக்கு தெரியாது… அதுக்குள்ள மீட்டு தரணும்!
மொத்தமா சம்பாத்தியத்தை என்கிட்ட கொடுத்திருந்தா என்ன செய்யலாம்னு யோசிச்சிருப்பேன்.
எப்படிப்பா… தொழில் செய்ய கேட்ட போது கையை விரிச்சீங்க தானே… எவ்வளவு சம்பாதிச்சு கொடுத்தாலும் கடைசியில் கையை விரிக்க தான் போறீங்க…? பொறுக்க இயலாது பொங்கி விட்டான்.
டேய் சங்கரா யாருகிட்ட பேசற…? சுசிலா உச்ச ஸ்தாயியில் கத்தினார்.
எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அது நடந்துடுச்சு! இவன் இஷ்டத்துக்கு கல்யாணம் கட்டிக்கிறானே… இவன் இஷ்டத்துக்கு தான் வாழுவான்னு நினைச்சேன்… அச்சு பிசக்காம அப்படியே நடந்துக்குறான்… முகம் சுழித்து கடுமையாய் தன் அதிருப்தியை காட்டினார் ஆதிமூலம்.
அவன் என்ன தன் புத்திக்கா நடந்துகிறான்… வாழ வந்த மகராசி என்ன ஏத்தி விட்டு அனுப்புறாளோ அப்படியே நடந்துக்குறான்… சுசிலா பார்வையால் மருமகளை பொசுக்கினார்.
அவளை ஏம்மா வம்புக்கு இழுக்குற…? எனக்கு சுய புத்தி கிடையாதா? கேக்குறேன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்… ஒரு சீட்டு போட்டேன்.. அதுவும் நேத்து தான் போட்டேன்.
உங்களுக்கு தெரியாம இதுவரை என்ன செய்திருக்கேன்?
அது தாண்டா கேட்குறேன் இது வரை எங்களுக்கு தெரியாமல் எதுவும் செய்ய தைரியம் இல்லாம இருந்த உன்னை உசுப்பி விட்டது யாரு? சுசிலா சீறினார்.
ம்ம்மா அவளை ஏன் கரிச்சு கொட்டறீங்க…?
அண்ணன் தனியா காய்கறி பயிர் வச்சு விற்குதே அது பொது கணக்கு தானே… நீ ஸ்டடோர்ல பால் ஊத்துறியே அதுவும் பொது கணக்கு தானா…?
இந்தா அப்பன் புள்ளைக்குள்ள பேசிட்டு இருக்கீங்க அது நியாயம். எங்களை எதுக்கு நடுவால கொண்டு வர…அறைக்குள் நின்று கொண்டு சீரியல் காட்சி போல் இதுவரை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த ஜெயலட்சுமி
ஆவேசமாய் புடவையை இழுத்து சொருகி கொண்டு சண்டைக்கு பாய்ந்தாள்.
——–தொடரும் ——–
error: Content is protected !!