Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-21

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல்

மு.வ விளக்க உரை: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

திருமண வேலைகள் மொத்தமும் பெண்களின் பொறுப்பில் தான் என்பதால் கயல்விழியும் காயத்ரியும் தாய் வீட்டிற்கு குழந்தைகளோடு வந்து விட்டிருந்தனர்.

கிட்டதட்ட பாதி பொள்ளாச்சியே விருந்தினர்கள் லிஸ்ட்டில் இருந்தது என்று தான் கூற வேண்டும்.



Advertisement

இது போக தொழில் வட்டம் அசலூர்காரர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்கள் என நீண்டு கொண்டே போனது.

திருமணத்திற்கு நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து மறுநாள் மாலை ரிசெப்ஷன் போல் ஏற்பாடு செய்து அதில் அனைவரையும் அழைக்கலாம் என்று முடிவு செய்தனர்.

கோவையின் நம்பர் ஒன் ஈவெண்ட் மேனேஜ்மெண்டைத் தேர்ந்தெடுத்து பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.

Advertisement

இந்நிலையில் அந்த மருத்துவக் கல்லூரியை வாங்கும் பேச்சு வார்த்தை வெற்றிகரமாய் முடிந்து பத்திர பதிவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

Advertisement

இத்தனை பொறுப்புகளும் வேலைகளும் நிறைந்திருக்கும் ஒவ்வொரு நாள் காலையும் தேவாவிற்குத் தொடங்குவதோ அவன் அனுப்பும் பாடல்களில் தான்.

ஒவ்வொரு ஒரு நிமிட வீடியோவும் அந்தப் பாடலைத் தேடி கண்டுபிடித்து முழுப் பாடலையும் கேட்கச் செய்வதாய் இருக்கும்.

அதை விட அவனின் வேலைகளுக்கு இடையில் அவளுக்காக மெனக்கெட்டு அவளுக்காகவே பாடுவதான பாடல்களாய் ஒவ்வொன்றும் இருப்பதில் பெண்ணவள் மொத்தமாய் அவனிடம் வீழ்ந்து தான் போனாள்.

Advertisement

இன்று கூட காலையிலேயே அவன் அனுப்பிய வீடியோ பாடலைக் கேட்ட படி தான் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள் தேவா.

கண்ணிரண்டு போதவில்ல கட்டழக பாத்து சொல்ல
ஒட்டுமொத்த ஒயில காண பத்து சென்மம் எடுப்பேனே
கட்டுசெட்டா கனிஞ்ச ஒன்ன கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி ஒன போல பாக்கல

இப்போதும் அவனிடத்தில் வார்த்தைகள் குறைவு தான் அலுவலகத்தில்.

ஆனாலும் இதையெல்லாம் செய்பவன் அவன் தான் என நம்புவதற்கே தேவாவிற்கு சிரிப்பாய் இருந்தது.

அலுவலகத்தில் அவனை சந்தித்த நேரம் அதை நேரடியாக அவனிடம் கூறியும் விட்டாள்.

“எப்படி இவ்வளவு பாட்டு அதுவும் உங்க மைண்ட்செட்க்கு ஏத்த மாதிரியே கிடைக்குது?”

“ஐ வாஸ் அ டேன்சர். அதனால பாட்டு மேல இன்ட்ரெஸ்ட் அதிகம்.”, என்றதில் விழி விரித்தாள் தேவா.

“எல்லாமே எனக்குப் பிடிச்ச பாட்டு. தினமும் இருக்குற லிஸ்ட்டில் இப்போ ஒருத்திக்காக சிலதெல்லாம் புதுசா சேர்ந்துருக்கு..”

“நீங்க இவ்வளவு..”

“இவ்வளவு?”

“ஒண்ணுமில்ல நத்திங்.. நான் வரேன்.”

“ரஞ்சு ஐ நீட் யுவர் ஹேண்ட்ஸ்..”, என்றதில் மெதுவாய் அவனருகில் வந்து தனது கரங்களை நீட்ட அதை அவன் பற்றிக் கொள்ளும் அழகே அவளை உள்ளுக்குள் மொத்தமாய் கரைத்து விடும்.

மிக மென்மையாய் பஞ்சுப் பொதிகள் நம்மை வருடுவது போன்றதொரு தொடுகை. கரங்களின் பின்புறம் கட்டை விரல் கொடுக்கும் சிறு அழுத்தமும் வருடலும் அவள் மீதான அவனின் அளவு கடந்த ஆசையை தெளிவாய் உணர்த்தியது.

விழிகள் அவளையேப் பார்த்திருக்க தவிர்க்க நினைத்தாலும் முடியாதவளாய் அவன் கண்களை ஒரு நொடி ஏறிட்டாள் தேவா.

இறுதியாய் ஒரு அழுத்தம் கொடுத்து கரங்களை விடுவித்தவன் அவளது கழுத்து மச்சத்தை பட்டும் படாமல் வருடி விட்டு பின் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

“ரொம்ப கஷ்டம் டி திமிரழகி. இரண்டு மாசம்!!!”

“நல்ல பேரு? என்னைப் பார்த்தா அப்படி தெரியுதா உங்களுக்கு?”

“ஊருக்கே அப்படி தான் தெரியுது திமிரானவளா.. ஆனால் எனக்கு மட்டும் அழகி.”

“கண்ணசைவிலேயே என்னை கவுத்தவர் இப்படியெல்லாம் பேசினால் நான் எங்கே போறது!!”, என்றதில் தனது மார்பை சுட்டிக் காட்டினான் அதிரன். லேசாய் அவனருகில் சென்று மார்பில் கை வைத்தவளாய்,

“அங்கே நான் போய் பட்டா போட்டு ரொம்ப நாள் ஆச்சு.”, என்றவள் சுட்டு விரலால் லேசாய் தட்டி விட்டு கரத்தை எடுத்திருந்தாள்.

“தேவையில்லாத வேலையா உன் பக்கத்தில் வரக் கூடாதுனு முடிவெடுத்துட்டேனோ?”

“இது ஆபீஸ்னு கொஞ்சமாவது நியாபகம் வைக்கணும். நான் வரேன்.”, என்றவளின் வேக நடை அதிரனின் முகத்தில் சிரிப்பை கொடுத்திருந்தது.

இப்படி உலகம் அறிந்திடாத அதிரனை சமாளிக்கத் திணறிக் கொண்டிருந்தாள் தேவ ரஞ்சனா. இப்படியான இனிய நாட்களைக் கெடுக்கும் விதமாய் அன்று தேவாவின் தந்தை வழி சொந்தங்கள் அவள் வீட்டிற்கு வந்து கத்த ஆரம்பித்திருந்தனர்.

“பார்த்தாலும் பார்த்தோம் இப்படி ஒரு பொட்டச்சியை எங்கேயும் பார்க்கலை. என்ன நெஞ்சழுத்தம் டி உனக்கு? ஊர் மெச்ச நிச்சயமே முடிஞ்சுருக்கு ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணாதா?”

“எதுக்கு சொல்லணும்? நீங்க எல்லாம் வரணும்னு நினைச்சுருந்தா தான் சொல்லிருப்பேன்.”

“பேச்சை பார்த்தியா!! இப்படி வாயாடி தான் முதலாளியவே முந்தானையில் முடிஞ்சு வைச்சுருக்கா..”

“இன்னொரு தடவை தேவையில்லாம பேசினீங்க நடக்குறதே வேற. என் வீட்டிலேயே வந்து என்னைப் பத்தியே கண்டதெல்லாம் பேசுவீங்களா? வெளியே போங்க முதல்ல..”

“சொந்த பந்தத்தை எல்லாம் தள்ளி வைச்சுட்டு பணக்காரனை நம்பி போறியே அவனுங்க கொன்னு போட்டாலும் கேட்க நாதியில்லனு தான் கல்யாணமே பண்றானுங்களோ என்னவோ..”

“இவ்வளவு தான் மரியாதை உங்களுக்கு எல்லாம். கிளம்ப போறீங்களா இல்லையா இப்போ..”

“உண்மையை சொன்னா கோவம் பொத்துகிட்டு வருதாக்கும். பின்ன வேற என்னத்துக்கு ஒண்ணுமில்லாத உன்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சாங்களாம்.

உள்ளுக்குள்ளே இருக்குற பிரச்சனையை மறைக்க தான் இந்த கண் துடைப்பு.”

“என் அப்பா அம்மா செத்து தூக்கிட்டு போன ஒரு நாள்ல உங்ககிட்ட வாங்கின பணத்துக்கு ஈடா கிடைச்ச பொருளை எடுத்துட்டு எங்களைப் பார்த்துக்க முடியாதுனு சொல்லிட்டு போனீங்களே உங்களை விட மோசமானவங்களா அவங்க இருக்கப் போறதில்ல.”

“தனியா இருந்து என்ன பண்ணுவீங்கனு கேட்க அன்னைக்கு ஒரு ஆள் வரலை. எங்க பிள்ளைங்களை வளர்க்குறதே கஷ்டம் இதில் இவளையும் இவ தம்பியையும் எங்கே கூட்டிட்டு போகனு வாய் கூசாம பேசிட்டு இன்னைக்கு என்ன திடீர் சொந்தமும் பந்தமும்.”

“…”

“இதுக்கு மேல சொந்தம்னு சொல்லிட்டு என்னையோ என் தம்பியையோ பார்க்கணும் பேசணும்னு யாராவது வந்தீங்க.. நான் மனுஷியா இருக்க மாட்டேன். போங்க எல்லாரும்..”, என்றவள் கத்தியதில் அனைவருமாய் கிளம்பியிருக்க கதவைச் சாற்றியவள் அப்படியே கதவில் சாய்ந்து அமர்ந்து விட்டிருந்தாள்.

அலுவலகத்தில் அவளை காணவில்லை என்றதும் அதிரன் தேவாவிற்கு அழைக்க அவள் அழைப்பை ஏற்றதுமே,

“உங்களைப் பார்க்கணும் இப்போவே..”, என்று கூறி அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

அரை மணி நேரத்திற்குள் வந்தவன் கதவைத் தட்ட அடுத்த நொடி திறந்தவள் அவனை அப்படியே கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.

என்னவென்று புரியாமல் நின்றவனின் வலது கரம் அவளது இடை சுற்றி அப்படியே தன்னோடு இறுக்கிக் கொண்டது.

அவளோடு உள்ளே வந்தவன் கதவை வெறுமனே சாற்றிய படி அவளது முதுகை ஆதரவாய் வருடிக் கொடுத்தான்.

“எப்பவுமே பொண்ணுங்க தான் ஆம்பளைங்களை மயக்குவாங்களா? இது தான் எங்களுக்கு எல்லாம் வேலையா?”

“…”

“இவங்களுக்கெல்லாம் யாரு புரிய வைக்குறது இந்த மனுஷன் தான் கண்ணாலேயே என்னை அவர் மேல பைத்தியம் ஆக்கி மயக்கினாருனு.”

“..”

“உங்க காசும் பணமும் இப்போ வரை எனக்கு பொருட்டில்ல. என்னை எனக்காக ஏத்துகிட்ட இந்த மனசு மட்டும் தான் நான் எதிர் பார்க்குற ஒரே விஷயம்.”

“..”

“உங்களுக்கும் மனசுல ஒரு ஓரத்தில் அந்த நினைப்பு இருக்கா? பணத்துக்காக தான் நான் உங்களை..”, என்றவளைப் பிரித்து அவளது உதட்டின் மேல் தனது விரலை வைத்து அழுத்தியிருந்தான்.

“எந்த கோவமா இருந்தாலும் நிதானம் இழக்க கூடாது.”

“உங்களை மாதிரி என்னால இருக்க முடியலை. என்ன பண்றது நான் இப்படி தான்.”

“..”

“இப்போவே சொல்லிட்றேன் கல்யாணத்துக்கு பிறகு யாராவது வந்து இப்படி பேசினால் நான் பொறுத்துகிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்.”

“..”

“அப்பறம் நீங்க வந்து ஏன் என் சொந்தகாரங்களை மரியாதை இல்லாம பேசினனு சண்டை போடக் கூடாது.”

“…”

“நிஜமாவே உங்களுக்கு என்னைப் பிடிச்சுருக்கா?”

“என் கண்ணுல பொய் தெரியுதா?”

“நான் கொஞ்சம் அடமெண்ட் சில நேரம் சைக்கோ.”

“பொண்ணுனால் அப்படி தான் இருக்கணும். எப்பவுமே ரொமேன்ஸ் மோட் செட் ஆகாதுல?”, என்றதில் அவன் மார்பில் குத்தியவள் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையை வெளிப்படுத்த அப்படியே தரையில் அமர்ந்து மன அழுத்தம் தீர கதறியிருந்தாள்.

அதிரன் அவளது பக்கவாட்டில் அமர்ந்தவனாய் அப்படியே அவளை தன் கைகளுக்குள் அழுத்திக் கொண்டு நெற்றி ஓரத்தில் முத்தம் வைத்த வண்ணம் அவள் அழுகையை நிறுத்துவதற்காக காத்திருந்தான்.

சில நிமிடத்தில் தெளிந்தவளாய் நேராக அமர்ந்தவள் ஏங்கிய படி அடிப்பார்வை அதிரனைப் பார்த்தாள்.

“இனி இப்படி அழுறதுக்கு காரணம் இருக்கக் கூடாது.”

“..”

“உன்னை பாதிக்குற விஷயத்தை மாத்துறதுக்கு எதிர்த்து நிக்கணும் இல்ல அதை ஏத்துக்கணும். அதை விட்டுட்டு இப்படி அழறதெல்லாம்..”

“இனி இப்படி பண்ண மாட்டேன்..”

“குட். போலாமா? முக்கியமான மீட்டிங் இருக்கு.”, என்றவன் நிதானமாய் எழுந்து கொள்ள அவசரமாய் எழுந்தவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அவனருகில் வந்து நின்றாள்.

“திமிரழகிக்கு திமிர் எப்பவும் குறைய கூடாது. புரிஞ்சுதா?”, என்றதில் அதிரனைப் பார்த்தவள் எவ்வித யோசனையுமின்றி அவன் காலரைப் பற்றி இழுத்து கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்திருந்தாள்.

“நீங்க என் கூடவே இருந்தா திமிருக்கு எப்பவும் எந்த குறைச்சலும் வராது.”, என்றவளைப் பார்த்த வண்ணம் தனது கன்னத்தை ரசனையாய் தடவியவன் வாசலை நோக்கி கை காட்ட அவனது பார்வையின் சிரிப்பை உணர்ந்தவள் ஒன்றும் பேச முடியாமல் வெளியேறியிருந்தாள்.

கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க அதிரன் வாயே திறக்கவில்லை.

தேவாவிற்கோ என்ன செய்து விட்டோம் என்ற தர்ம சங்கடம் ஒரு புறம் அவனின் அமைதி மறுபுறமும் என தவிப்பாய் இருந்தாள்.

அவளால் வாய் திறந்து நினைப்பதைக் கேட்கவும் முடியாமல் அவனை எதிர்கொள்ளவும் முடியாத அவளின் நிலை உணர்ந்தவனாய் தனது கைப்பேசியில் எதையோ தேடிய படி காரை ஓட்டினான்.

அவன் நினைத்தது கிடைத்ததும் உதட்டோர புன்னகையோடு மொபைலை அவள் மடியில் வைக்க என்னவென ஏறிட்டவளைப் பார்த்த வண்ணம் அந்த ப்ளே பட்டனை அழுத்தினான் அதிரன்.

என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு

என்ற வரிகளில் முகம் மொத்தமும் வெட்கத்தில் நனைந்திருக்க மொத்தமாய் வெளியில் தலையை திருப்பிய வண்ணம் தனது இடது கரத்தால் விழிகளை மூடிக் கொண்டாள் தேவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!