Skip to content
Post Views: 5,578
“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்
மு.வ விளக்க உரை: சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.”
மறுநாள் மதியத்திற்கு மேல் அதிரனும் தேவாவும் பொள்ளாச்சிக்கு கிளம்பியிருந்தனர்.
அவர்கள் அங்கு சென்ற நேரம் கயல் குடும்பத்தோடு கிளம்பியிருக்க காயத்ரி மட்டும் அங்கேயே இருந்தாள்.
Advertisement
சாருகேஷும் அவினாஷுமாய் அவுட் ஹவுசை அவினாஷிற்காக தயார் படுத்தியிருந்தனர்.
தங்கை மட்டுமாய் இங்கு இருப்பதில் அதிரன் யோசனையாய் பார்த்தாலும் அப்போதைக்கு ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.
தேவா மாமியாரோடும் நாத்தனாரோடும் அமர்ந்து விட அதிரன் அலுவலக அறைக்குள் சென்றிருந்தான்.
Advertisement
காயத்ரி எப்போதும் போல் இல்லாமல் அமைதியாகவே இருக்க தேவாவும் அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் காத்யாயினியோடு பேசிக் கொண்டிருந்தாள்.
Advertisement
“இரண்டு நாளில் கயல் அவங்க வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டுருக்கா தேவா. காயூ நீங்க போகும் போது உங்களோட வர்றதா சொல்லிட்டா.”
“ஓ சரி ம்மா. நான் அவர்கிட்ட சொல்லிடுறேன். காயூ குழந்தை எங்கே தூங்குறானா?”
“ஆமா அண்ணி. ரூமில் தான் இருக்கான்.”, என்றவளிடம் புன்னகைத்து மேலும் சிறிது நேரம் இருவரோடும் பேசி விட்டு தனதறைக்குச் சென்ற போது யுவனின் இசை அறையை நிறைத்திருந்தது.
Advertisement
“வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசை கேட்டால்
நீதான் என்று பார்த்தேன் அடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி”
“உங்களைப் பார்த்தா இந்தளவு பாட்டு பிடிக்கும்னு தெரியவே இல்லங்க..”, என்றவள் அவனருகில் அமர்ந்தாள்.
“பாட்டு எல்லாருக்கும் தான் பிடிக்கும் ரஞ்சு..”
“கரெக்ட் தான் ஆனால் சிலருக்கு மட்டும் அது அடிக்ஷன். அதிலேயும் இளையராஜாவை தான் கொண்டாடுவாங்க. யுவன் பொதுவா யங்க்ஸ்டர்ஸ் சாய்ஸ் தான? அதனால கேட்டேன்.”
“யுவன் பீக்கில் இருந்த காலகட்டத்தில் நாம எல்லாம் யங்ஸ்டர்ஸ் தான? 90’ஸ் கிட்ஸோட ஸ்கூல் காலேஜ் காலம் இந்த பாட்டெல்லாம்..”
“ம்ம்..”
“உனக்குத் தெரியுமா இப்போ கேட்குற பாட்டெல்லாமே கிட்டதட்ட ஒரு ஆறேழு வருஷத்துக்கு அப்பறம் தொடர்ந்து கேட்டுட்டு இருக்கேன்.
இதெல்லாம் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தா கேட்குற பாட்டு.
இப்போ ஒருத்தி வந்து தான் அதை எல்லாம் தூசி தட்டி எடுக்க வைச்சுருக்கா.”
“முதல் நாள் முதலாளி சீட்டில் உட்காந்து முகத்தை முறைச்சு பார்த்த அதிரனை எவ்வளவு தேடினாலும் கண்டு பிடிக்க முடியலையே!”
“இந்த ஆறேழு மாசம் வாழ்க்கையை நிறையவே மாத்திருக்கு.”, என்றவனுக்குமே அன்றைய தினத்தின் நினைவுகள் புன்னகையைக் கொடுத்திருந்தது.
தம்பியைப் பார்க்க தேவா அவுட் ஹவுஸ் சென்ற நேரம் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தான் அவினாஷ்.
“அவி..”
“வாக்கா..”, என்றவனின் குரலில் உற்சாகம் என்பது பெயருக்கு கூட இருக்கவில்லை.
“என்னாச்சு டா ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“எனக்கு இங்கே இருக்க ஒரு மாதிரி இருக்கு கா..”
“..”
“ஏதோ உன்னோட சேர்ந்து நானும் தொத்திட்டு வந்த மாதிரி தோணுது.”
“என்ன டா இப்படியெல்லாம் பேசுற?”
“நம்ம வீட்டிலேயே இருந்திருந்தா கூடத் தனியா இருக்குறதா தோணிருக்காது போல. இங்கே..”, என்றவனின் கண்கள் கலங்கின.
“சுயநலமா முடிவெடுத்துட்டேனா அவி?!”, என்றவள் தம்பியின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“க்கா நான் சொல்றதை தயவுசெஞ்சு சரியா புரிஞ்சுக்கோ. இந்தக் கல்யாணத்தில் உன்னை விட நான் தான் சந்தோஷமா இருக்கேன்.
ஆனால் நான் இங்கே இருக்குறது தான்..”, என்றவனுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று புரியாமல் தவித்தாள் தேவா.
“அவ்வளவு பெரிய மனுஷன்னால் கிளம்பி வெளியே போடா பார்க்கலாம்.”, என்ற படி வந்தான் சாருகேஷ்.
“…”
“என்ன அண்ணிகிட்ட அவ்வளவு வாய் பேசின. இப்போ பேசு டா. நான் பதில் சொல்றேன் உனக்கு.”
“மச்சான் அது..”
“அப்போ இங்கே நாங்க எல்லாம் உன்னை பார்த்துக்குறது உனக்குப் பிடிக்கலை. நீங்க பெரிய இவரு. தனியாவே இருந்தா தான் கெத்தா இருக்குமோ?”
“..”
“உனக்கு எப்போவாவது நீ சொன்ன மாதிரி இங்கே பாரமா இருக்கனு நினைச்சா என்னை மனசில் நினைச்சுக்கோ.
உன்னை மாதிரி பொறுப்பு கிடையாது. சமைக்கத் தெரியாது.
ஜாலியா அம்மாவோடயும் அண்ணனோடயும் வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கேன். பத்தாததுக்கு இப்போ அண்ணி வேற வந்தாச்சு.
அப்போ நான் எல்லாம் எவ்வளவு ஃபீல் பண்ணணும். கூடப் பிறந்தவங்க எல்லாரும் அண்ணி மாதிரி கிடையாது அவி. உன்னை எங்கேயோ விட்டுட்டு அவங்க இங்க நிம்மதியா இருக்க முடியுமா சொல்லு?”
“இத்தனை வருஷம் அவங்க உனக்காக எவ்வளவோ பண்ணிருக்காங்க தான?
இப்போ கொஞ்ச வருஷம் அவங்களுக்காக நீ பெருசா எதுவும் பண்ண போறதில்ல. அவங்க கண் பார்வையில் இருந்துக்கோயேன். அதில் உனக்கு அவ்வளவு கஷ்டமா டா?”
“..”
“வேணும்னால் சொல்லு நானும் இங்கேயே வந்துரேன்.”
“மச்சான் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.”
“அண்ணி நீங்க எதுவும் கவலைப்படாதீங்க. எப்படியும் பாதி நேரம் நான் இங்கே தான் இருக்கேன். பேச்சுலர்ஸ் வீடு மாதிரி ஜாலியா இருக்கு அண்ணி.
இவன் அதுக்கு ஆப்பு வைக்கப் பாக்குறான். நாங்க கொஞ்ச வருஷத்தை இங்கே என்ஜாய் பண்ண போறோம்.”, என்றதற்கு புன்னகைத்து தேவா தம்பியைப் பார்க்க அவனுமே சற்று தெளிந்தது போல் தான் இருந்தது.
“தேங்க்ஸ் கேஷா..”, என்றவள் அவனின் முன்னந்தலையை செல்லமாய் ஆட்டிய படி தம்பியைத் தவிப்பாய் பார்த்தாள்.
“சாரிக்கா. நீ தான் என்னை இப்படி செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சுருக்க..
அதான் உலகமே தெரியாம இருந்துருக்கேன்.”, என்றவன் சிரித்த படி தேவாவைக் கட்டிக் கொண்டான்.
அடுத்த இரு தினங்களில் தங்கைகள் வீட்டு விருந்திற்கு கிளம்பித் தயாரனவர்கள் கீழே வர அதிரன் தாயோடு அமர்ந்திருக்க தேவா காயத்ரியின் குழந்தையை கையில் வாங்கிய படி அவளிடம்,
“என்ன காயூ எங்க அண்ணனைப் பார்க்காம முகம் வாடிப் போயிருக்க. சீக்கிரமே போகலாம்.”, என்றவள் சாதாரணம் போல் கண்சிமிட்ட காயத்ரியோ,
“இதுக்கு மேல இங்கே இருக்காதனு சொல்லாம சொல்றீங்களா அண்ணி..”, என்று வெடுக்கென கேட்டதில் திகைத்தாள் தேவா.
“காயூ நான் சாதாரணமா தான்.”
“தெரியும் அண்ணி இங்கே இனிமே நான் கெஸ்டா தான் வர முடியும். அதுக்காக சும்மா சும்மா எதாவது சொல்லாதீங்க.”, என்றவள் குழந்தையை வாங்கிக் கொள்ள காத்யாயினி மகளைப் பார்த்து குரலை உயர்த்தியிருந்தார்.
“என்ன பேச்சு இது காயூ. அண்ணிட்ட மன்னிப்பு கேளு.”
“ம்மா அதெல்லாம் வேண்டாம். நீங்க டென்ஷன் ஆகாதீங்க.”
“காயூ..”, என்று கணவன் அழைத்ததில் அவசரமாய் அவனருகில் வந்தவள் அவனது கரத்தை அழுந்தப் பற்றி விடுவித்தவாறு காயத்ரியை உள்ளே அழைத்துச் சென்றிருந்தாள்.
காயத்ரி கண்ணீரைத் துடைத்த படி தனது பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டிருக்க பொறுமையாய் அவளின் தோள் தொட்ட தேவாவின் மீது சாய்ந்து கொண்டாள்.
“சாரி அண்ணி அம்மாவும் ஜாடை மாடையா எதோ பேசி என்னை சமாதானப் படுத்த முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க.
அதான் நீங்களும் பேசினதில் நான் இங்கே இருக்குறதே அவ்வளவு பெரிய தப்போனு தோணிடுச்சு.”
“என்கிட்ட பேச உனக்கில்லாத உரிமையா எங்க எல்லாருக்குமே நீ நார்மலா இல்லனு தெரியுது. அப்போ உங்க அம்மாவுக்கு இன்னும் அதிக பயம் இருக்கும் தான காயூ.”
“..”
“இது உன் வீடு எப்போ வேணாலும் வரலாம் எத்தனை நாள் வேணாலும் தங்கலாம்.
யாரும் உன்னை எதுவும் சொல்லப் போறதில்ல. ஆனால் உனக்கு என்ன பிரச்சனையோ அதை மறைக்காம எங்ககிட்ட சொல்லிட்டால் எங்களால என்ன பண்ண முடியும்னு பார்ப்போம் தான.”
“…”
“எதையும் போட்டு மனசைக் குழப்பிக்காத. உனக்குத் திரும்பவும் இங்கே வரணும்னு தான் எண்ணம் இருக்குனால் தாராளமா எங்களோடயே வந்துரு.”
“…”
“நீ முகத்தை துடைச்சுட்டு வா நான் வெளியில் இருக்கேன்.”, என்றவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றிருந்தாள்.
வரவேற்பறையில் தாயும் மகனுமாய் இளைய மகளைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்.
தேவா அவர்கள் அருகில் வந்து அமர காத்யாயினி அவளிடம்,
“நீ எதுவும் மனசில் வைச்சுக்காத தேவா.”
“என்ன ம்மா அவளே பாவம் ஏதோ குழப்பத்தில் இருக்கா. இல்லைனால் அவ இப்படி பேசுற ஆளே இல்ல.”
“நான் மச்சானுக்கு போன் பண்ணி விசாரிக்குறேன். இந்தக் கயல் கூட ஏன் எதையுமே சொல்லல?”
“ஏங்க அங்கே தான போறோம் நீங்க நேரிலேயே பேசுங்க. என்னைக் கேட்டால் அவங்களே பேசித் தீர்த்துக்குறது தான் நல்லது.”
“இல்ல தேவா இவ இப்படியெல்லாம் ஏன் பண்றானு தெரியலையே?!”
“என்ன காரணமா இருந்தாலும் அவ நம்மகிட்ட பிரச்சனைனு சொல்லல தான ம்மா.
அதுக்குள்ளே நாம எல்லாம் மூக்கை நுழைச்சால் பிரச்சனை பெருசாகவும் வாய்ப்பிருக்கு இல்ல..”
“என்னவோ கதை சொல்லிட்டு இருக்க நீ. இதெல்லாம் பட்டுனு பேசி முடிக்க வேண்டிய விஷயம். சும்மா இழுத்தடிச்சுகிட்டு.
என்னவோ பண்ணுங்க. ம்மா நீங்க பேசணும்னு சொன்னால் நான் பேசுறேன் அவ்வளவு தான்.”, என்றவன் மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு காருக்குச் சென்றிருந்தான்.
“இவர் எதுக்கு இப்போ இவ்வளவு கோவப்படுறாரு ம்மா?”
“காயூவை இப்படி பார்க்குறதுக்கு எனக்கே கஷ்டமா இருக்குக் இதில் அவனைப் பத்தி கேட்கணுமா? நேத்து நைட் கூட போனில் புருஷனும் பொண்டாட்டியும் ஒரே சண்டை.
அதை அவன்கிட்ட சொன்னேன். அந்தக் கடுப்பில் இருக்கான் இதில் இவ வேற தேவையில்லாம பேசி இன்னும் கோபப்படுத்திட்டா தேவா.”, என்றதில் கணவனை நோக்கி செல்ல நினைத்தவள் காயத்ரியின் குரலில் அவளிடம் கவனத்தைத் திருப்பி அனைவரையுமாய் அழைத்துக் கொண்டு காருக்குச் சென்றாள்.
அதிரனோடு முன்னிருக்கையில் தேவா அமர அவன் அவள் புறம் பார்வையைத் திருப்பவே இல்லை. அவனின் கோபம் உணர்ந்தவளாய் லேசாய் தனது கரத்தை கியரில் இருந்த அவனது கரத்தின் அருகில் கொண்டு செல்ல காத்யாயினி ஏதோ பேசியதில் பதட்டப்பட்டு கரத்தை பின்னிழுத்துக் கொண்டாள்.
அதை ஓரக் கண்ணால் பார்த்தவனுக்கு மனநிலை மொத்தமாய் மாறி சிரிப்பு வரும் போல் இருந்தது.
அவளுக்குத் தன்னை சமாதானப்படுத்துவதே பிரதானம் என்றது புரிந்து போக என்ன தான் செய்கிறாள் பார்க்கலாம் என அமைதியாகவே இருந்து கொண்டான் அதிரன்.
error: Content is protected !!