Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-13

வழக்கமாக சோம்பலுடனே விடியும் திங்கட்கிழமை அன்றும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாகவே விடிந்தது.

உமையாள் காலை சீக்கிரமே எழுந்து, பரபரப்பில்லாமல் நிதானமாக தயாராக, வசீகரன் தான் அவளுக்கும் சேர்த்து பரபரப்போடு சுற்றி கொண்டு இருந்தான்.

இங்கு கிருஷ்ணாவோ, காலை எழுந்தது முதலே, வழக்கத்தை விட கொஞ்சம் துள்ளலுடன் தயாராகி கொண்டு இருந்தான்.

எப்பொழுதும் இல்லாத திருநாளாக இன்று சற்று சிரத்தை எடுத்து தேர்ந்தெடுத்த, இளம் ரோஜா நிற லினன் சட்டையும், நீல நிற ஜீன்சும் அணிந்து அலுவலகம் செல்ல தயாராவதற்காக கண்ணாடி முன் சென்று நின்றான்.



Advertisement

கைகள் இயல்பு போல, நீண்ட குழலின், முன் நெற்றியில் புரலும் முடிகளை அள்ளி முடிய, மனதில் அவன் மனம் கவர்ந்த, காரிகையின் ஊர்வலம்.

அன்று தலை சாய்த்து, ஒரு கண் மூடி, புன்னகை புரிந்த உமையாள் தோற்றம் கண் முன்னே தோன்ற, அன்றைக்கு போலவே இன்றும் அழகான
புன்னகை உதடுகளில் பூக்க, நிஜத்தில் அவனும், நிழலாக அவனின் உள்ளம் கவர்ந்தவளும் அந்த அறையில் நிறைந்து இருக்க, கண்ணாடியை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான் கிருஷ்ணா.

கண்களில் கசியும் காதலோடு, புன்னகை சிந்தும் அதரங்களோடு உறைந்து நிற்கும் தன் பிம்பத்தை கண்ணாடியில் கண்ட கிருஷ்ணா, “இது நானா??” என்று அதிசயித்து அப்படியே நின்றான்.

Advertisement

அவனை அறியாமல் அவனின் கைகள், மெல்ல எழும்பி அவனின் பிம்பத்தை வருட, “எண்னை என்ன செய்து கொண்டிருக்கிறாய் பெண்ணே” என மனம் ஆர்பரிக்க, தனக்குள்ளே மீண்டும் ஒரு முறை சிரித்து கொண்டான் அவன்.

Advertisement

அவன் கண்களின் பாவம், அவனுக்கு அவனின் அன்றைய கனவை நினைவூட்ட, அப்போதும் வாடாத புன்னகை தான் அவனின் முகத்தில்.

கனவை தொடர்ந்து, அன்றைய நாளின், அவனின் எண்ணங்கள், போராட்டங்கள் என அப்படியே விரிய, ஒரே நிமிடத்தில் அவனின் புன்னகை எல்லாம் சூடான தோசை கல்லில் இட்ட நீரென மாயமாய் மறைந்தது போனது.

ஆயிரம் நிகழ்வுகள், நினைவுகள், நீ, நான் என போட்டிபோட்டு கொண்டு ஒரே நேரத்தில் மூளைக்குள் காட்சிகளாய்,

Advertisement

என்ன கிருஷ்ணா ஆச்சு உனக்கு???
காதலா???
உனக்கா????
உன் பெற்றோர் அளவு உண்மையான காதலோ????
அப்போ அடுத்த கிருஷ்ணாவை உருவாக்க, நீயும் தயாராகிட்ட, அப்படி தானே???

என மனசாட்சி வேறு அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு, அவனை பார்த்து கேலியாய் சிரிக்க, தன்னை அறியாமல்,

“வேண்டாம், இன்னொரு கிருஷ்ணா வேண்டாவே வேண்டாம்” என வாய்விட்டே சற்று உரக்கவே சொல்லி இருந்தான் அவன்.

[the_ad id=”6605″]

மனச்சாட்சி காட்சிப்படுத்திய, எண்ணங்களின் விளைவாக, வழக்கத்தை விட முகத்தில் கடுமை தீயாய் தகிக்க, அலுவலகம் செல்ல தயாரானான் கிருஷ்ணா.

இங்கு உணவு மேசையில் உமையாளும், வசீகரனும் பேசியபடியே சாப்பிட, வசீகரன் தான் முதல் நாள் பிள்ளையை பள்ளி அனுப்பும் தாயின் மனநிலையில் நிலைகொள்ளாமல் இருந்தான்.

ஒருவழியாக உணவை முடித்துவிட்டு, வசீகரன் சொல்லியபடியே, உமையாள் மைக்கேலோடு ஒரு காரில் கிளம்ப, பின்னாடியே இன்னொரு காரில் வசீகரனும் அலுவலகத்திற்கு கிளம்பினான்.

அலுவலகத்திற்கு இப்போது தான் முதல் முறையாக உமையாள் வருகிறாள், காரில் இருந்து இறங்கி, ஒரு பார்வை கொண்டு மொத்த வளாகத்தையும் அளந்தவள், வசீகரன் சொல்லி இருந்தபடி, தரைதளம் சென்று எச்.ஆர் காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

வசீகரன் என்ன சொல்லி இருந்தானோ தெரியாது, வந்தவுடன் உமையாளை தன்னுடன் அழைத்து சென்ற எச்.ஆர், ஒரு கேள்வியும் கேட்காமல், அவள் இந்த நிறுவனத்தில் சேர்வதற்கான எல்லா வேலைகளையும் முடித்து, அவளுக்கான உடைகளையும், காலணிகளையும் ஏற்பாடு செய்தார்.

இப்போது அடுத்தகட்டமாக, தொழிற்சாலையின் உள்ளே சென்று அவள் சேர இருக்கும் துறையின் மேனேஜரை சந்திக்க வேண்டும். உமையாள் அதற்கு தயாராக, அவளுக்கு முன்னரே தயராகி, வசீகரனும், பாலாவும் ஒரு புன்னகையுடன், அவளுக்காக அங்கு காத்திருந்தனர்.

முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கும், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சுத்ததிற்கு தான் முதல் முக்கியத்துவம்.

இவர்களின் தொழிற்சாலையில், உள்ளே செல்வதற்கு மட்டும் மொத்தம் நான்கு வழிகள் உண்டு. தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஆண்கள் செல்வதற்கு தனி வழி.

அலுவலக ஊழியர்கள், ஏதேனும் வேலை விஷயமாக உள்ளே வரும் பட்சத்தில் அவர்களுக்கு தனி வழி. நண்பர்கள் மூவரும் உபயோக படுத்துவதும் இந்த வழி தான்.

இந்த மூன்று வழிகளிலும், அவர்களின் உடமைகளை வைக்க ஏதுவான சிறு பாதுகாப்பு பெட்டகங்களும், உள்ளே செல்ல தயாராவதற்காக ஏதுவாக பொது அறைகளும் உண்டு.

நான்காவது மூலப்பொருட்கள் உள்ளே வருவதற்கும், தயாரான மருந்துகள் ஏற்றுமதி செய்ய எடுத்துசெல்ல பயன்படும் வழி.

தொழிற்சாலையின் உள்ளே செல்லும் முன் யாராக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் உண்டு.

அணிந்திருக்கும் உடையின் மேல், இடையை விட்டு சற்று இறங்கிய வெள்ளை நிற ஒரு மேல் அங்கி, அதற்கு மேலாக முட்டி வரையிலான வெள்ளை நிற மேல் அங்கி, தலை முடிகளை முற்றிலும் மறைக்கும் விதமாக வெள்ளை நிறத்தில் தொப்பி, எதையாவது தொடும் பட்சத்தில் நிச்சயம் பயன்படுத்த வேண்டிய கையுறை, முகமூடி எல்லாமே இருக்கும்.

நாம் அணியும் காலணிகளையும் அணிந்து கொண்டு உள்ளே செல்ல இயலாது. உள்ளே மட்டும் அணிவதற்கு என்று தனியான மிக சாதாரணமான காலணிகள் இருக்கும்.

வேலை முடிந்து செல்லும் போது அங்கிகளை அங்கு இருக்கும் அலமாரிகளில் வைத்துவிட்டு சென்றால், நிர்வாகமே முறையாக சுத்தப்படுத்தி மீண்டும் அதே இடத்தில் வைத்துவிடுவார்கள்.

அந்த அங்கிகளை உடைமாற்றும் அறையை தாண்டி, அதாவது தொழிற்சாலைக்கு வெளியே ஒரு போதும் அணிந்து செல்ல கூடாது. வெளியே செல்லும் பட்சத்தில் அவைகளை உரிய இடத்தில் வைத்துவிட்டு தான் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு பணியாளருக்கும் ஒரு குறிப்பிட்ட எண் இட்ட, அங்கிகள் அளிக்கப்படும். ஒருவருடையதை மற்றவர் அணிவதை தடுப்பற்காக.

உமையாளும் அவர்கள் சொன்ன எண் உள்ள அங்கி அணிந்து, பெண்கள் அறையில் இருந்து வெளியே வரும் போது, அங்கு அதே மாதிரி உடை அணிந்து வசீகரனும், பாலாவும் புன்னகையுடன் அவளை பார்த்து, “வெல்கம்”, என ஒருசேர வரவேற்றனர்.

பிறகு அவளை அப்படியே அழைத்து சென்று ஒவ்வொரு பிரிவாக காட்டி, அங்கு நடக்கும் வேலைகளை தெளிவாக, இருவரும் மாற்றி மாற்றி விளக்கி, முழு தொழிற்சாலையையும் சுற்றி காட்டினர்.

அடிக்கடி தங்களின் முதலாளிகள் வேலைகளை பார்க்க வருவார்கள் என்றாலும், இப்படி இருவர் ஒன்றாக வந்து, புதிதாக வந்த ஒரு பெண்ணுக்கு எல்லாவற்றையும் விளக்குவது இதுவே முதல் முறை.

அவர்கள் கடந்து சென்ற பிரிவில் வேலை பார்த்த அனைவருமே, தங்களுக்குள் ரகசிய கண் ஜாடை காட்டிக்கொள்ள, வசீகரன், பாலா, என இருவருமே, உமையாளிடம் பேசிய உடல் மொழியில், ஏக மனதாக அப்பெண் தங்களின் முதலாளிகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் மிகவும் வேண்டிய பெண் என்றே முடிவுக்கே வந்தனர்.

வசீகரனுடன் காரில் வந்ததால் அனைவருக்கும், தான் அவனின் உறவு என்று தெரிந்துவிடும் என உமையாள் மறுக்க, வசீகரனோ அவள் எண்ணத்தின் படி, தங்கள் உறவு முறையை சொல்லாமலே, அதே நேரம் எல்லாருக்கும், “இவள் தனக்கு வேண்டபட்ட பெண்” என சத்தமில்லாமல் தான் நினைத்ததை சதித்துவிட்டான்.

கியூ.ஏ (Q.A) பிரிவில் வேலை செய்பவர்கள் எல்லா பிரிவின் வேலை முறைகளையும் அறிவது அவசியம்.

எனவே எல்லா கியூ.ஏ (Q.A)வையும் போலவே உமையாளும், ஒரு பிரிவிற்கு அரைநாள் வீதம், எல்லாம் பிரிவிற்கு சென்று, அந்த பிரிவின் வேலைகளை, அதன் நடைமுறைகளை அறிவது என முடிவானது.

இதற்குள் மதிய உணவு இடைவேளை வந்து இருக்க, உமையளை மீண்டும் அங்கிகளை, உரிய இடத்தில் வைக்க சொல்லிவிட்டு, தொழிற்சாலையை விட்டு,தங்களின் அறை இருக்கும் தளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

இப்போது உமையாளுக்கு புதிகாக ஒரு சந்தேகம் வர, வசீகரனை பார்த்து,

“ஆமா கரன், நான் உங்க கூட சாப்பிட வந்தா, மத்தவங்களுக்கு தெரிஞ்சிடாதா நான் உன்னோட ரிலேஷன்னு” என அதிமுக்கிய கேள்வியை கேட்க, பாலா, வசீகரன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

[the_ad id=”6605″]

அவர்களின் சிரிப்பில் “இதுங்க ரெண்டும் என்னமோ பண்ணி வச்சி இருக்குங்க போலவே” என புரிந்துகொண்ட உமையாள், அவர்களை பார்த்து,

“என்ன பண்ணிங்க ரெண்டு பேரும்” என கேட்க, பாலா உமையாளை கிண்டல் பண்ண கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல்,

“ஆமா எந்த ஊருல, ஒரு நியூ ஜாய்னிக்கு, எம்.டி ரெண்டு பேரும் வந்து ஆபிஸ் அஹ சுத்தி காட்டுவாங்க” என கேள்வி கேட்க, இதை பற்றி யோசிக்காத தன் மடத்தனத்தை நொந்தவாறே,

“டேய் கரன், நீ பிளான் பண்ணி தானே பண்ண, போடா, இதுக்கு நான் உன்கூட கார்லையே வந்து இருக்கலாம்” என சிறு பெண் என சிணுங்க, வசீகரனோ,

“இங்க பாரு பாப்பு, உன்னோட பாதுகாப்பு எனக்கு ரொம்ப முக்கியம், உடனே பெண்களுக்கு இங்க பாதுகாப்பு இல்லையான்னு ஆரம்பிக்காத, உனக்கு அதை தாண்டிய மரியாதையும் அவசியம் பாப்பு அதையும் புரிஞ்சிக்கோ, என் கூட கார்ல வந்து இருந்தா ரிலேஷனு தெரிஞ்சி இருக்கும், ஆனா இப்போ, எல்லாரும் நீ எங்களுக்கு வேண்டபட்ட பொண்ணுனு தான் நினைச்சி இருப்பாங்க, சோ உன்னோட கண்டிஷன் படி, நீ என்னோட ரிலேஷன்னு நான் எங்கேயும் சொல்லல தானே” என நீண்ட விளக்கம் கொடுத்தான்.

வசீகரனின் விளக்கத்தில், அவன் சொல்லாமல் விட்டதும் புரிய, தலைஅசைப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை அவளுக்கு. இதற்குள் மூவரும் கிருஷ்ணாவின் அறை வாசலுக்கு வந்து இருந்தனர்.

அலுவலக நாட்களில் பாலாவின் வீட்டில் இருந்து தான் நண்பர்கள் மூவருக்கும் உணவு வரும். பாலாவின் தாயார் பார்த்து பார்த்து சமைத்து அனுப்புவார்.

முக்கிய வேலைகளுக்காக, வெளியே செல்லும் நாட்களை தவிர மற்ற நாட்களில், கிருஷ்ணாவும் இவர்களுடன் உணவுவேளையில் இணைந்து கொள்வான்.

தங்களின் வழக்கம் போல, நண்பர்கள் இருவரும் உமையாளோடு கிருஷ்ணாவின் அறைக்கு வர, கிருஷ்ணாவும் உமையாளை எதிர்கொள்ள தயாராகவே இருந்தான்.

இன்று நேரடியாக இங்கே வராமல், தன் தந்தையின் அலுவலகம் சென்று, தான் பார்க்க வேண்டிய முக்கிய வேலைகளை முடித்து, இங்கு வந்ததும், ஒரு மனம் தழல் என தகித்தாலும், இன்னொரு மனமோ உமையாளை பற்றியே சிந்தித்தது.

இந்நேரம் வேலையில் சேர்ந்து இருப்பாள் அல்லவா என மூளை யோசிக்க, கைகள் தானாக தொழிற்சாலையில் இருக்கும் கண்காணிப்பு காமிராவின் காட்சிகளை மடிக்கணினியில் ஓடிவிட, கண்களோ அக்காட்சிகளில், அவளின் பிம்பத்தை தேடி அலசியது.

இவன் பார்த்த நேரம், பாலாவும் வசீகரனும் அவளுக்கு தொழிற்சாலையை சுற்றி காட்டிக்கொண்டு இருந்தனர்.

தன்னையும் மீறி சில நொடிகளோ, நிமிடங்களோ அவளின் பிம்பத்தை திரையில் பார்திருந்தவன், முயன்று மனதை திசைதிருப்பி, வேளையில் கவனத்தை செலுத்தினான்.

இப்போது அவர்கள் மூவரும் உள்ளே நுழைய, முதல் முறையாக உமையாள் தன் அறைக்குள் நுழையும் அந்நிகழ்வை மனம் ஆவலாக எதிர்பார்க்க, அந்நிமிடங்களை அவனின் ஆழ்மனம் பொக்கிஷமாய் பதித்துக்கொண்டது, அவன் அறியாமல், அவனின் அனுமதியின்றியே.

இது வெறும் அலுவலக அறை என்பதோ, இங்கு இவனை சந்திக்க, தினம் நூறே பேர் வந்து செல்வார்கள் என்பதோ, அவனுக்கு ஏனோ அந்நேரத்தில் தோன்றவேயில்லை .

மனம் மட்டும் நெகிழ, முகம் இன்னும் இறுக்கம் எனும் போர்வையிலே இருக்க, முதல் முறை அலுவலகம், அதும் வேலைக்காகவே என்றாலும் அவள் வந்து இருக்க, வசீகரனின் உறவு என்ற முறையில், தான் நிச்சயம் வரவேற்க வேண்டும் என்பதால், உள்ளே வந்த உமையாளை பார்த்து,

“வெல்கம் உமையாள்” என வரவேற்க, முதல் முறை வாய்விட்டு உச்சரித்த அவளின் பெயரில், அடிநாக்கு வரை தித்திக்கும் உணர்வு அவனுக்கு.

“தேங்க் யு கிருஷ்ணா”என ஒரு விரிந்த புன்னகையுடன் அவனுக்கு பதில் தர, அவளின் புன்னகையில் நழுவ துடித்த மனதை இறுக்கி பிடித்தான் கிருஷ்ணா.

பின்பு நால்வரும், கிருஷ்ணாவின் அறையில் இருந்த சோபாக்களை உணவு உண்ண ஏதுவாக மாற்றி, அமர பாலாவின் வீட்டில் இருந்து வந்திருந்த பணியாள் உணவு பரிமாற நால்வரும் உண்டனர்.

கிருஷ்ணாவின் மனம், உமையாள் பரிமாறி உண்ட அந்நாளுக்கு செல்ல, இது தான் நிதர்சனம், நிரந்தரம் என மனதில் பதியவைக்க முயன்றவாரே சாப்பிட, நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் முகம் இன்னும் இறுக ஆரம்பித்தது.

[the_ad id=”6605”]

பணியாள் இருந்த போதும், தனக்கு தானே பரிமாறி உண்ட கிருஷ்ணா, விரைவாகவே உண்டு முடிக்க, மற்றவர்கள் ஏதோ ஏதோ பேசியபடியே உண்டு முடித்தனர்.

உணவு இடைவேளை ஏற்கனேவே முடிந்து இருக்க, வசீகரன் உமையாளிடம்,

“சரி வா பாப்பு, உன்ன நீ போக வேண்டிய டிபார்ட்மெண்ட்ல விட்டுட்டு வரேன்” என அழைக்க, அவனை முறைத்த உமையாள்,

“தினமும் நான் சாப்பிட வருவேன், தினமும் நீ என்ன கூட்டிட்டி போய் விடுவியா, ஏன் எனக்கு போக தெரியாதா, ஓவர் அஹ போய்கிட்டு இருக்கடா நீ” என அவன் தன்னை சின்ன பெண் போல நடத்துவதில் கடுப்பாகி கடித்து வைத்தாள்.

அவள் சொன்ன விதத்தில் வசீகரன் சிரிப்புடன் முன்னே செல்ல, அவனுக்கு பின் பாலாவும் சென்றான். அவர்களுடனே வாசல் வரை சென்ற உமையாள், வெளியே போகாமல் வாசலிலே தயங்கி நின்றாள்.

வேலை செய்வது போல, கண்களும், கைகளும் மடிகணியில் விளையாடி கொண்டு இருந்தாலும், புலன்கள் அனைத்தும் அவளை கவனித்துக்கொண்டு இருக்க, கிருஷ்ணா அவளின் தயக்கம் உணர்ந்து அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவனின் பார்வைக்காகவே காத்திருந்ததை போல, உமையாள் கொஞ்சம் தயக்கத்துடனே அவனை பார்த்து,

“ஆர் யு ஒகே கிருஷ்ணா” என, தன்னிடம் பேச அவள் தயங்குவது, கொஞ்சம் கடுப்பாக இருக்க, அதேநேரம் அவளின் அக்கறை, மழைக்கு முன் வீசும் குளிர் தென்றலாய் அவனை வருட, முகத்தில் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் வெறுமனே,

“ம்ம்ம்ம்” என்று சொல்ல, இந்த “ம்ம்ம்ம்”யை எந்த விதத்தில் சேர்ப்பது என்று தெரியாமல் தயங்கிய உமையாள்,

“நீங்க சரியாவும் சாப்பிடலையே” என அடுத்த கேள்வி கேட்க, கிருஷ்ணாவின் மனதிற்குள் மெல்லிய சாரல், இந்த முறை என்ன முயன்றும் முகம் இலகுவதை தடுக்க முடியாமல் போக, கனிந்த முகத்துடனே,

“ஐ அம் ஓகே உமையாள்” என அவளின் கேள்விக்கு விடைபகர, இவனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கத்தை தொலைக்க, அவளின் முகமோ புன்னகை தத்தெடுத்தது.

கனிந்த முகத்தில் புன்னகையை பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும் எனும் உத்தேசத்துடன் இருந்து இருப்பாள் போல உமையாள்.

கிருஷ்ணாவை பார்த்து, அன்றைக்கு போலவே, தன் தலையை அழகாக வலது பக்கத்தில் சரித்து, ஒரு கண்ணை மூடி, ஆள்காட்டி விரலையும், கட்டைவிரலையும் ஒன்றாக அதரங்களின் அருகே கொண்டு வந்தவள், அதை அப்படியே மெல்ல விரித்து புன்னகை செய்ய சொல்ல, அன்றைக்கு போலவே, கிருஷ்ணாவின் அதரங்கள் அழகான புன்னகையை சூடி கொண்டன.

கிருஷ்ணாவின் புன்னகையை பார்த்த உமையாள்,

“கீப் ஸ்மைலிங் கிருஷ்ணா, பாய்” என்று அவனிடம் விடைபெற்று செல்ல, கிருஷ்ணாவின் மனதிற்குள் அவளின் அக்கறை அடைமழையாய் நனைத்தது.

அன்று வசீகரன் உமையாளை பற்றி சொல்லியது கிருஷ்ணாவின் மனதில் நிழலாடியது. எல்லா விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பவள், அதனால் தானோ என்னமோ இவனின் முக இறுக்கத்தையும், கண்டு கொண்டிருக்கிறாள்.

இது அவளின் இயல்பான குணம். இவன் இதில் அகமகிழ்ந்து போக எதுவும் இல்லை என்று மூளை அறிவுருத்தினாலும், மனம் நிறைவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

அவளை விட்டு விலக நினைத்து, இவன் ஒரு அடி எடுத்துவைத்தால், அவள் அவனை நோக்கி இரண்டு எட்டு வைத்து முன்னேற, அவளிற்கான அவனின் காதலை, எந்த அணையிட்டு தான் தடுப்பான் அவனும்.

“இன்னுமொரு கிருஷ்ணா” என்ற மானசாட்சியின் குரல், முனுக்கென மனதில் ஒரு வலியை விதைக்க, “இந்த வலிகளுடனே தான், தன் வாழ்க்கையா” என சிந்தனைகள் சிறகு விரிக்க, இலக்கின்றி வெறித்தவண்ண்ணம் அமர்ந்து இருந்தான்.

நாட்கள் அதன் போக்கில் நகர, உமையாளும் ஆரம்பகட்ட நடைமுறைகளை, அதாவது எல்லா பிரிவின் வேலை முறைகளை அறிந்துகொண்ட பிறகு, அவளுக்கான பணி அவளுக்கு ஒதுக்கப்பட்டது.

மூலப்பொருட்களை அன்றைய மருந்து தயாரிப்பதற்கு தேவையான அளவில், பணியாளர்கள் எடுக்கும் போது, அருகில் இருந்து, சரியான மூலப்பொருளை சரியான அளவில் தான் எடுக்கிறார்களா என கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அவளுக்கு ஒதுக்கபட்டு இருந்தது.

முதலில் அந்த அறையின் சுத்தத்தை கியூ.ஏ(Q.A) என்ற முறையில் உறுதி செய்து, அவள் அனுமதி அளித்த பிறகு, மூலப்பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் உமையாள் முன்னணியில் பிரிக்கபட்டு, மாத்திரை செய்வதற்கு தயாராக எடுத்துவைக்க பட்டன.

அளக்கும் பணியாளர்கள் மதிய உணவு இடைவெளிக்கு செல்ல, இவ்வளவு நேரம் அந்த சிறிய இடத்தில், முகத்தில் முகமூடி, கையுறை, முட்டி வரையிலான அங்கி என அணிந்து, நீண்ட நேரம் நின்று தன் பணியை முடித்து வெளியே வந்த உமையாள், இப்போது கொஞ்சம் இலகுவாக முகமூடியை தளர்த்தி ஆசுவாசமானாள்.

அவளின் கண்களோ, அங்கு சாக்குகளில் அடுக்கிவைக்க பட்டிருந்த மூலப்பொருள்களை பார்வையிட்டு கொண்டே வந்தது.

அவளின் கண்களில் அங்கு ஒரு இடத்தில் அப்படியே நிற்க, அதன் அருகில் சென்று ஒரு முறை அதை உறுதி செய்து கொண்டவள், நேராக மூலப்பொருள்களை கணக்கு வைக்கும் ஸ்டாக் டிபார்ட்மெண்ட் மேனஜரை சந்தித்து சில சந்தேகங்களை கேட்டு கொண்டாள்.

இது ஒரு சிறிய தவறாக இருக்கலாம், அல்லது கவனக்குறைவாக கூட இருக்கலாம். ஆனால் இதனால் மிக பெரிய பாதங்கள் விளைய வாய்ப்புகள் அதிகம் என்பது புரிய, சம்பந்தப்பட்டவர்களை கேள்வி கேட்க, அது அவளின் மேனஜர் வரை சென்றது.

அவளின் மேனேஜர், அவளை விசாரிக்க, அவள் குற்றச்சாட்டை செவி மடுத்தவர்,

“லுக் மிஸ்.உமையாள், இது தப்பு தான், நாம அவங்களை கூப்பிடு வார்னிங் கொடுப்போம், பட் சில சமயம் இதை அவாய்ட் பண்ண முடியாது” என இவளை சமாளிக்க பார்க்க, பதிலுக்கு இவள் தன் தரப்பை விளக்க, அது வாக்குவாதமாக மாறியது.

இவர்களின் நீண்ட நேரே பேச்சுவார்த்தை, கிருஷ்ணாவின் கவனத்தை ஈர்க்க, எதோ பிரச்சனை என்று புரிய, அவன் அந்த மேனேஜருக்கு அலுவலக அலைபேசியில் அழைத்தான்.

கிருஷ்ணாவின் கவனத்தை ஈர்த்தது, வசீகரனின் கவனத்தையும் ஈர்த்து இருக்க வேண்டும். அவனின் பாப்புவின் மீது எப்போதும் ஒரு கண் வைத்து இருப்பவனின், கவனத்தை அந்த வாக்குவாதம் கவரவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.

இது கிருஷ்ணாவின் பொறுப்பில் இருக்கும் துறை, அதனால் அவன் கிருஷ்ணாவின் அறைக்கு வர, அந்த நேரம் தான் கிருஷ்ணாவும் மேனேஜரை அழைத்திருந்தவன், உள்ளே நுழைந்த வசீகரனை பார்த்தவாறே, அவர்கள் இருவரையும் தனது அறைக்கு வர சொல்லி அழைப்பு துண்டித்தான்.

அலுவலகம் வந்த மூன்று நாட்களில், பணியில் அமர்ந்த அரை நாளில் முதல் பிரச்சனை, வெகு சிறப்பு.

காதல் கொள்வோம்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!