Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-25

மயங்கி விழுந்த உமையாளை தன் கைகளில் தாங்கிய வசீகரன், அவளை அருகில் இருந்த சோபாவில் படுக்க வைத்தப்படியே பாலாவிடம்,

“என்ன ஆச்சு பாலா” என்று பதட்டமாக கேட்க, பாலாவோ, கண் முன்னே அரங்கேறும் நிகழ்வுகளின் கணத்தை தாங்க முடியாத தடுமாற்றதுடன்,

“அது…..அது…. வந்து….. கரன், உமா திடிர்னு மூச்சு விட முடியாம கஷ்டப்பட்டா, அப்புறம் மயங்கிட்டடா” என்று உமையாளின் நிலையை மட்டும் விளங்கினான் பாலா.

உமையாளுக்கு அதீத மன அழுத்தத்தில் தான் இப்படி நடக்கும் என்று அறிந்த வசீகரனோ, தன் பாப்புவை சோதனை செய்தவாறே, எதனால் அவளுக்கு இப்படி ஆனது என்று அறியும் பொருட்டு,



Advertisement

“நீயும், பாப்புவும் டீ.வி தானே பார்த்து கிட்டு இருந்தீங்க, ஏன் பாப்புக்கு திடீர்னு இப்படி ஆச்சி, அதிர்ச்சியாகுற அளவுக்கு என்ன பார்த்தீங்க” என்று கேட்க, பாலாவோ குரல் கசங்க,

“அது…..வந்து….., நம்ப கிருஷ்ணா வரேனு சொன்ன ப்பிலைட் கிராஷ் ஆகிடுச்சாம், எல்லா பேசஞ்சரும் இறந்து இருப்பாங்கன்னு, நியூஸ்ல சொல்றாங்க கரன், எனக்கு பயமா இருக்கு, கிருஷ்ணாவுக்கு ஒன்னும் ஆகி இருக்காது தானே” என்று வசீகரனிடம் கேள்வியும் கேட்டான்.

பாலா சொல்லிய தகவலை கேட்ட வசீகரன், மொழி புரியாத பாலகன் என, விழித்து விழித்து பாலாவை பார்த்தவன், சற்று அதிக நேரம் தான் எடுத்துக்கொண்டான், பாலா சொல்லியதை கிரகித்து கொள்ள.

Advertisement

அன்று கிருஷ்ணா ஊருக்கு செல்கிறேன் என சொல்லும் போது, மனம் முழுதும் வியாபித்த உணர்வு, இப்படி ஒரு ஆசம்பாவிதம் நடக்க போவதை தான் முன்னரே உணர்த்தியாதா என்று அதிர்ந்தது.

Advertisement

அதே நேரம் இதுவரை ஒரு முறை கூட கிருஷ்ணா தன்னுடைய விமனத்ததை தவறவிட்டது இல்லை என்று மூளை நிதர்சனத்தை சொல்ல, மனமோ கிருஷ்ணா அந்த விமானத்தை தவறவிட்டு இருப்பான் என்று ஆருடம் சொன்னது.

உள்ளம் உருகி,உருகி உலகில் உள்ள அனைத்து கடவுள்களிடமும் தன்னுடைய நண்பனுக்கு ஏதும் ஆகி இருக்க கூடாது என்று பிராதிக்க, கண்களோ சோபாவில் மயக்கத்தில் இருந்த தன் பாப்புவின் மீது விழுந்தது.

தனக்கு நெருக்கமான ஒரு ஜீவன், இன்னும் ஜீவனுடன் தான் இருக்கிறதா என்று தெரியாமல் தவிக்க விட, மிக நெருக்கமான மற்றொரு ஜீவனோ, தன் கண் முன்னாடியே சுயநினைவு இல்லாமல் மயக்கத்தில்.

Advertisement

எதிர்பாரா இந்த சூழ்நிலையில் மனமும், மூளையும், அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று தெரியாமல் செயலிழந்து நிற்க, மனமோ “கிருஷ்ணாவுக்கு ஒன்றும் ஆகி இருக்காது” என்று உருப்போட்டு கொண்டிருந்தது.

மசமசத்த மூளையை தட்டி எழுப்பி, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முயன்று யோசித்தவன், முதலில் பாப்புவின் மயக்கத்தை தெளிய வைக்க எண்ணி, பாலாவை பார்த்து,

“பாலா போய் கிட்சன்ல இருந்து தண்ணி, அப்புறம் சக்கரை கொண்டு வா சீக்கிரம்” என்று அவனை ஏவ, பாலாவும் தன்னை நிலைப்படுத்தி கொண்டு, விரைந்து சென்று எடுத்து வந்தான்.

முதலில் உமையாள் முகத்தில் நீரை தெளித்தவன், அவளின் உதடுகளில் கொஞ்சம் சக்கரையும் வைத்தான், அவளின் மயக்கம் விரைவாக தெளிய வேண்டி.

உமையாளுக்கு கொஞ்சம், கொஞ்சமாக மயக்கம் தெளிய ஆரம்பிக்க, முழு நினைவு திரும்ப இன்னும் சற்று நேரம் எடுக்கும் என்பதால், அவளை தொந்தரவு செய்யாமல் சற்று தள்ளி வந்தான் வசீகரன்.

வந்தவன் பாலாவை அழைத்து, விமான நிலையத்தில் அவனுக்கு தெரிந்த நபருக்கு அழைத்து, விஷயத்தை சொல்லி, கிருஷ்ணா அந்த விமானத்தில் தான் பயணம் செய்தானா என்று விசாரிக்க சொன்னான்.

பாலாவும் அந்த நபருக்கு அழைத்து பேச, பேசும் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தான் வசீகரன்.

ஏதாவது ஒரு விதத்தில், யாரேனும், “தன் நண்பனுக்கு ஒன்றும் ஆகவில்லை, அவன் நலமாக இருக்கிறான்” என்று உரைக்க மாட்டார்களா என்ற ஏக்கம் தோன்ற, அப்படியே அமர்ந்து இருந்தான் வசீகரன்.

பாலா அவரிடம் பேசிவிட்டு வர, அவர் தான் பார்த்துவிட்டு மீண்டும் அழைப்பது தானே தகவல் சொல்வதாக சொல்லி இருக்க, இருவருமே அவரின் அழைப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

அதற்குள் உமையாள் முழுதாக மயக்கம் தெளிந்து, எழுந்து அமர்ந்தாள். எழுந்து அமர்ந்தவளுக்கு, தலை பாரமாக இருக்க, தலையை கைகளில் பிடித்து, குனிந்து அமர்ந்தவளுக்கு, மயக்கமாகும் முன் பார்த்த செய்தி மின்னலென நினைவுக்கு வந்தது.

அடுத்த நிமிடம் பதறி எழுந்தவள், தனக்கு முன்னால் சற்று தள்ளி இருந்த வசீகரனை பார்த்தவள், அவனிடம் விரைந்து, அவனின் சட்டையை தன் இரு கைகளால் பற்றியபடி,

“கரன்….. கரன்…….. கி…ரு….ஷ்….ணா.……” என்று மீண்டும் பேச முடியாமல் மூச்சுக்கு தவிக்க ஆரம்பிக்க, அவளின் நிலையை உணர்ந்த வசீகரன்,

“இங்கு பாரு பாப்பு, கிருஷ்ணாவுக்கு ஒன்னும் இல்ல, நீ பஸ்ட் ப்ரீத் பண்ணு, மூச்சை இழுத்து வெளியவிடு, ப்ரீத் பண்ணு, ப்ரீத் பண்ணு” என்று சொன்னவன், அவளுடன் சேர்ந்து தானும் ஆழ்ந்து மூச்செடுக்க ஆரம்பித்தான்.

“கிருஷ்ணாவுக்கு ஒன்றும் இல்லை” என்ற வார்த்தை உமையளிடம் மாயம் செய்ய, கிருஷ்ணாவின் நிலை பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணம் உந்த, தற்போது மயங்காமல் இருக்க வேண்டும் என்று அவளும் முயன்று, வசீகரன் சொல்லியபடி, ஆழ்ந்து மூச்சை எடுத்தாள்.

கொஞ்ச நேரத்தில் தன்னை திடப்படுத்தி கொண்டவள், வசீகரனை பார்த்து, கண்களில் கண்ணீர் வழிய, அவனின் பதிலில் தான் தன் ஜீவன் இருக்கு எனும் விதமாக, மொத்த உயிரையும் தன் கண்களில் தேக்கி,

“நீ சொன்னது உண்மை தானே, கிருஷ்ணா, கிருஷ்ணா நல்லா இருக்காங்க தானே, சொல்லு கரன்” என்று அவனை உலுக்க, உமையாளின் கேள்வியில், அவளின் பாவனையில் மொத்தமும் உடைந்து தான் போய் விட்டான் வசீகரன், இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டு,

“நம்மளை விட்டு அவ்ளோ சீக்கிரம், அவன் எங்கயும் போக மாட்டான் பாப்பு, நம்பு” என்று ஆறுதலாக சொல்ல, உமையாளோ,

“எனக்கு இ…ப்…போ…வே…, இ..ப்..போ.…வே…, கிருஷ்ணா கிட்ட பேசணும், போன் பண்ணு கரன், போன் பண்ணு” என்று தன்னிலை இழந்து கத்த, அவளின் நிலை கண்டு, வசீகரனின் கண்களிலும் கண்ணீர் வழிய, அவளை ஆறுதலாக அணைத்து பிடித்தவாறு,

“அவனுக்கு தான்டா ட்ரை பண்ணி கிட்டு இருக்கோம்” என்று சொல்ல, அவளோ,

“அப்போ அவங்க நல்லா இருக்காங்கன்னு எப்படி சொன்ன, எனக்காக சொன்னியா, உண்மையை சொல்லு கரன், உண்மையை சொல்லு, எனக்கு எனக்கு கிருஷ்ணா வேணும் கரன், என்னால கிருஷ்ணா இல்லாம இருக்க முடியாது, கிருஷ்ணாவுக்கு ஒன்னும் ஆகி இருக்காது தானே”

என்று ஏதோ வசீகரனுக்கு தான் எல்லாம் தெரியும் எனும் விதமாக அவனிடமே கேட்டாள் உமையாள்.

இப்படி தன்னிலை இழந்து, அரட்டும் தன் பாப்புவை, அவளை எப்படி தேற்ற என்று தெரியாமல் வசீகரன் தான் தவிக்க ஆரம்பித்தான்.

உமையாளோ தன்பாட்டில் அவனிடம் கேள்வி கேட்டவள், அவனின் பதிலை கூட எதிர்பார்க்காமல், அப்படியே தரையிலே கால்களை மடிந்து அமர்ந்து விட்டாள்.

கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிய, கண்கள் எங்கோ நிலைகுத்தி இருக்க, எந்த ஒரு அசைவும் இல்லாமல் சித்திரம் என அமர்ந்து இருந்தாள்.

வசீகரன் அவளை எப்படி நெருங்க என தவிக்க, அந்நேரம் அவனின் கைப்பேசி அழைத்து தன் இருப்பை உணர்த்த, ஏனோ அந்த அழைப்பு ஒரு நடுக்கத்தை தர, அழைத்தவரை பார்த்தவன் கண்களிலும் கண்ணீர்.

நொடி கூட தாமதிக்காமல் அழைப்பை ஏற்றவன், குரல் கம்ம, “கிருஷ்ணா” என, இவ்வளவு நேரம் உமையாளின் தவிப்பை பார்த்து உறைந்து நின்ற
பாலா, வசீகரனின் “கிருஷ்ணா” என்ற அழைப்பில் , வேகமாக அவனின் அருகில் வர, கைப்பேசியிலோ,

“கரன் நான் நல்லா தான் இருக்கேன், நான் அந்த பிளைட் அஹ மிஸ் பண்ணிட்டேன்டா” என்று தன் நண்பனின் நிலை அறிந்து, தன் நலத்தை உறுதி செய்ய,

“கிருஷ்ணா நல்லா இருக்கான் பாலா, நல்லா இருக்கான், ஒன்னும் ஆகல அவனுக்கு” என்று திரும்ப திரும்ப அதையே சொல்லி கொண்டிருந்த வசீகரனுக்கு, அதை தவிர வேறு வார்த்தையை பேச வரவில்லை.

வசீகரனின் சொல்லியதை கேட்ட பாலாவோ, கிருஷ்ணாவுக்கு ஏதும் ஆகவில்லை என்பதில் அகமகிழ்ந்து விட, அப்படி ஒரு மகிழ்ச்சி அவனுக்கு.

சற்று முன்பு வரை இல்லாமலே போய்விட்டானோ என்று பயந்தவனிடம், வசீகரன் பேசி கொண்டிருக்க, அவன் பேசுவதையே தான் கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் பாலா.

இவ்வளவு நேரம் சிலையென அமர்ந்து இருந்த உமையாள், வசீகரன் சொல்லிய பெயரில் அவனை நிமிர்ந்து பார்க்க, வசீகரன், முயன்று தன்னை நிலைப்படுத்தி கொண்டு,

“கிருஷ்ணா நீ பஸ்ட் பாப்பு கிட்ட பேசு, அவளை, அவளை என்னால இப்படி பார்க்க முடியலைடா” என்று சொல்லியவன், கிருஷ்ணா ஏதோ சொல்ல வர, அதை கேட்காமல் உமையாளிடம் கைபேசியை கொடுத்தான்.

இயங்க மறுத்த கைகளை சிரமப்பட்டு நீட்டி, கைபேசியை வாங்கிய உமையாள், கண்ணீர் குரலில், மெதுவாக,

“ஹலோ” என, ஏனோ அந்த பக்கம் சத்தமே இல்லை, அவனின் குரலை கேட்டே ஆகவேண்டும் என்று வெறி எழ, உமையாள் மீண்டும் “ஹலோ, ஹலோ” என்று கத்த ஆரம்பித்தாள்.

வசீகரனோ என்ன ஆயிற்று என்று புரியாமல் பார்த்தவன், உமையாளிடம் இருந்து வலுக்கட்டாயமாக கைபேசியை பறித்து பார்க்க, அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

அதற்குள் உமையாள் அவனிடம், “என்ன ஆச்சு கரன், என்ன ஆச்சு கரன்” என்று ஆயிரம் முறை கேட்க, வசீகரனோ அவளை சமாளிக்கும் விதமாக,

“லைன் கட் ஆகி இருக்கு, இரு நான் மறுபடியும் கால் பண்றேன்” என்று அவனுக்கு அழைக்க போக, அதற்குள் கிருஷ்ணாவிடம் இருந்தே, முகம் பார்த்து பேசும் அழைப்பு வந்தது.

வசீகரன் அழைப்பை ஏற்று, தன் அருகில் நிலை கொள்ளாமல் தவித்தப்படி நின்றிருந்த தன் பாப்புவிடம் கொடுக்க, நடுங்கும் கரங்களால் அதை வாங்கினால் உமையாள்.

கிருஷ்ணாவின் பிம்பத்தை பார்க்க விடாமல் கண்ணீர் நிற்காமல் வழிந்து, திரையிட்டு கொண்டே இருக்க, அதை ஒரு கையால் துடைத்தாவாறே, திரையில் தெரிந்த கிருஷ்ணாவின் உருவத்தை பார்த்தவள், உயிர் உருகும் குரலில்,

“வசீ” என்றவாறு அவனின் நிழல் பிம்பத்தை, மிருதுவாக தன் விரல் கொண்டு தீண்ட, அந்த பக்கம் கிருஷ்ணா என்று எல்லோராலும் அழைக்கப்படும் வம்சி கிருஷ்ணாவின் கண்களிலும் கண்ணீரின் தடயம்.

“எனக்கு ஒன்னும் இல்ல உமையாள், நான் நல்லா இருக்கேன், பாரு உன் கண்ணு முன்னாடி தான் முழுசா நிக்கிறேன்” என்று கரகரத்த குரலில் சொல்ல, அவன் சொல்லுவதை கிரகித்து கொள்ள முயன்ற அவளோ,

“வசீ, வசீ ” என்று அவன் ஏதோ நேரில் நிற்பது போல, அவனை வருடி கொண்டே, “என்னோட வசிக்கு ஒன்னும் இல்லை” என்று திரும்ப திரும்ப, கண்களில் வழிந்த கண்ணீரோடு வாய்விட்டே சொல்லி, தன் மனதில் பதியவைக்க முயன்றாள்.

தன்னவள் படும் துன்பம் கண்டு, சகிக்காத கிருஷ்ணாவுக்கோ, இந்த நிமிடமே, அவளை தன் கை அணைப்பில் வைத்து, அவளின் கண்ணீரை துடைக்க மனம் ஆர்பரிக்க, அதை செய்ய முடியாத தன் நிலையை நொந்தவாறு,

“இங்க பாரு உமை, இங்க பாரு, எனக்கு ஒன்னும் இல்லடா, நான் நல்லா இருக்கேன்” என்று மீண்டும் அழுத்தி சொல்லி, அவளின் மனதில் பதியவைக்க முயல, அந்த அழுத்ததில் சற்று தெளிந்த உமையாளோ,

“எனக்கு உன்னை இப்போவே நேரில் பார்க்கணும் வசீ” என்று மழலை என அடம்பிடிக்க, அவனோ,

“நான் இன்னும் மும்பைல தான் இருக்கேன்டா, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வரேன்” என்று அவளுக்கு உண்மை நிலையை எடுத்து சொல்ல, அவளோ,

“நீ இப்போவே எனக்கு நேருல, என் பக்கத்துல வேணும் வசீ” என்று சொல்ல, மீண்டும் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.

அவளின் பயத்தை புரிந்து கொண்டு, தன் முகம் பார்க்காமல் அவள் சமாதனம் ஆகமாட்டாள் என்று புரிந்து, தெரிந்து தானே, அந்த குரல் மட்டும் கேட்கும் அழைப்பை துண்டித்து, முகம் பார்த்து பேச அழைத்தான் கிருஷ்ணா.

ஆனால் இப்போதும் அவள் சமாதானம் ஆகாமல் கண்ணீர் சிந்த, அவளின் கண்ணீர் இவனையும் சுட தவறவில்லை.

தன்னவள் தனக்காக, தன்பொருட்டு படும் வேதனையை சகிக்க முடியாமல் கிருஷ்ணா, அடைத்த தொண்டையை சரி செய்து கொண்டு, கரகரப்பான குரலில்,

“இத்தனை வருஷ வாழ்க்கையில், நான் எனக்கு கிடைக்காதனு ஏங்குன பாசம், அக்கறை, காதல் எல்லாத்தையும் கடவுள் உன் உருவத்தில், எனக்கு மொத்தமாக கொடுத்து இருக்கார் உமை, உன் கூட நான் திகட்ட திகட்ட ஒரு வாழ்க்கை வாழனும், எனக்கு கிடைக்காததை எல்லாம் நம்ப குழந்தைக்கு கொடுத்து வளர்க்கனும், வயசாகி முடி எல்லாம் நரைத்து, தள்ளாடும் வயசுல கூட, உன் மேல இதே அளவு காதலோடு நான் இருக்கணும், பேரன் பேத்தி கிட்ட எல்லாம் நம்ப காதல் கதையை ரசிச்சு ரசிச்சு சொல்லணும், அது வரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகாது, இப்போ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரமா உன் கிட்ட வரேன், கண்ணை துடை உமை”

என்று கிருஷ்ணா கண்களில் இவளுக்கான காதலோடும், எதிர்கால கனவோடும் பேச, அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த உமையாளுக்கு, அவன் சொல்லிய வார்த்தைகள், கண் முன்னே காட்சிகளாக விரிய, அதன் இனிமையில் மூழ்கினாள்.

அதரங்களில் ஒரு மந்தகாச புன்னகை உதயமாக,
கண்களில் இன்னும் கண்ணீர் மிச்சம் இருந்தாலும், அக்கண்களில் தன் வசீக்கான கரைக் காணா காதல் வழிய, தன் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி, அவனின் கண்களை பார்த்தவாறே,

“ஐ லவ் யூ வசீ” என்று தன் இத்தனை வருட அவனுக்கான காதலை, அவனிடமே வார்த்தைகளால் சேர்ப்பித்தாள் உமையாள்.

தன்னவளின் வாய்மொழியாக காதலை கேட்ட கிருஷ்ணாவின், வலது கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர், அவனின் இமைதாண்டி கன்னத்தில் இறங்க, இமைக்க மறந்தது உமையாளை தான் பார்த்தான் கிருஷ்ணா.

அவளின் குரலில், அவளின் பாவத்தில் என மொத்தமாக கவரப்பட்ட கிருஷ்ணா, தன் மனைவிக்கு, “ஐ லவ் யூ” என்று பதில் அளிக்காமல், மெல்லிய குரலில், “ஐ வான்னா குரோ ஓல்டு வித் யூ” என்ற ஆங்கில பாடலை பாட ஆரம்பித்தான்.

அந்த பாட்டில், அதன் வரிகளில், அந்த வரிகள் சொல்லிய அர்த்தத்தில், தன் உமையாள் மீதான காதலை கிருஷ்ணா வெளிப்படுத்த, தன் வசீயின் குரலில், தன் மீதான அவன் காதலில், உருகி கரைந்து தான் போய்விட்டாள் உமையாள்.

கிருஷ்ணா தன் கழுத்தில் மங்களநாண் அணிவித்த பொழுதை விட, இத்தனை வருட காதல் கை கூடிய, இந்த பொழுதில் தான் அத்தனை நிறைவாய், ஆனந்தமாக உணர்ந்தாள் உமையாள்.

இத்தனை நேர அலைக்கழிப்பில் உமையாளின் முகம் சோர்ந்து போய் இருந்தாலும், இக்கணம் கிருஷ்ணாவின் காதலை பெற்றதால், அந்த மகிழ்ச்சியின் விளைவால், சோர்வையும் மீறி, ஒரு புது சோபையுடன் மிளிர்ந்தது அவளின் முகம்.

மின்னும் அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணா, அவளின் வழக்கம் போல, தன் தலையை வலது பக்கத்தில் சரித்து, தன் குழல்கள் ஒரு பக்க தோளில் அழகாக சாய, ஒரு கண்ணை மூடி,  ஆள்காட்டி விரலையும், கட்டைவிரலையும் ஒன்றாக அதரங்களின் அருகே கொண்டு வந்தவன், அதை அப்படியே மெல்ல விரித்து புன்னகை செய்ய சொன்னான்.

தன் செய்கையை தன் தலைவன் செய்ய, அது தலைவியின் முக தாமரையில், மெல்ல புன்னகை தோற்றுவிக்க, தன்னவளின் புன்னகையை கண்ட, கிருஷ்ணாவின் முகத்திலும் நிறைவான, மந்தகாச புன்னகையே.

காதல் கொள்வோம்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!