Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மாய பூ இவள் 4

கணபதியே துணை

ஆதி ,வேலை எல்லாம் முடித்துக்கொண்டு மாலை ஐந்தரை மணி போல் வீடு வந்துவிட்டான்.அப்போது தான் அவன் அன்னை அனைவருக்கும் தேனீர் குடுத்துக்கொண்டு இருந்தார்.

“மா , என்ன மா , இன்னும் கிளம்பாமல் இருக்கீங்க” 

“டேய் என்ன இப்போ , ஒரு அஞ்சு நிமிஷம் நான் கிளம்பிறேன். சரி , உனக்கு டீ வேணுமா டா .” என்றார் ஆதியின் அம்மா. 



Advertisement

“ம். வேணும் மா கொஞ்சம் ஸ்ட்ராங் ஆ வேணும் மா”  

அவரிடம் கூறிவிட்டு அங்கே சமையலறை ஒட்டியே இருக்கும் சிறிய உணவு மேசையில் அமர்ந்து தேனீர் பருகி கொண்டிருந்த சித்தியிடம்,

“நீங்க வரலையா சித்தி கோயிலுக்கு” , என்றான் ஆதி.

Advertisement

அவனின் சித்தி சாந்தி ,” வரேன் ஆதி, இன்னும் பத்து நிமிட சமையல் வேலை, முடிஞ்சா கிளம்பிடலாம் பா”.

Advertisement

ஆனால் ஆதிக்கு தெரியும், அவன் வீட்டு பெண்கள் ஐந்து நிமிடம் என்றால் அறுபது நிமிடம் சென்று தான் வருவார்கள்.

ஆதியின் அம்மா சந்திராக்கு , கோவிலுக்கு சென்றால் சாமியை எந்த வித இடையூறும் இன்றி நிம்மதியாக தரிசிக்க வேண்டும் . ஆகையால் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தான் வருவார். கோவிலுக்கு சென்று வந்தவுடன் உணவு உண்டு விட்டு உறங்கி விடுவார். இது தான் அவரின் இயல்பு. அவன் தங்கை என்றால் கிளம்பி வரவே ஒரு யுகம் ஆகிவிடும். சந்திராவும் சாந்தியும் வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு வர மணி ஆறரை ஆகிவிட்டது. வானம் இருளை பூசி கொள்ள துவங்கிய நேரம் என்பதால் காரிலேயே சென்று விடலாம் என்று காரை கிளப்பிவிட்டான் ஆதி. ஐந்து நிமிடத்தில் கோவிலை அடைந்து விட்டனர். நேராக சென்று சாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்து விட்டு பிரசாதம் வாங்கிக் கொண்டனர் . 

அந்த பூசாரியோ ,” அம்மா, இவங்க தான் பெரிய அம்மா சொன்ன தம்பிங்களா மா”. ஆதி குழப்பமாக இருவரையும் பார்க்க, அவன் அம்மாவோ பூசாரியிடம் “ஆமாம், இவன் தான் என் பிள்ளை. அத்தை இவன தான் சொன்னாங்க” என்று கூறவும் பூசாரி அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டார். ஆதி என்னவென்று அவன் அம்மாவிடம் கேட்க , அவன் அம்மாவோ “என்ன எதுவும் கேட்காத ஆதி எல்லாம் உங்க அப்பத்தா செய்ய சொன்னாங்க” என்றார்.விவரம் எதுவும் சொல்லாமல் இவ்வாறு கூறவும் ஆதிக்கு கோவம் வந்துவிட “அவங்க என்ன சொன்னாலும் செய்விங்களா மா” என்றிட. அவன் அம்மா அவனை உக்கிரமாக பார்த்து சுற்று புறத்தை சுட்டி காட்டினார். கோயிலில் பெரிதாக கூட்டம் இல்லையென்றாலும் ஓரிருவர் இருக்க தான் செய்தனர்.ஆதியின் குடும்பம் என்ன தான் இனிக்க இனிக்க பேசி பழகினாலும் . குடும்ப மானம் மரியாதையை மிகவும் மதிப்பவர்கள். அதற்கு பாதிப்பு வரும் வகையில் எதையும் செய்வதற்கு என்ன, யோசிக்கக் கூட மாட்டார்கள். இதற்கு மேல் என்ன பேசினாலும் அது வீண் என்று புரிந்து விட விட்டுவிட்டான் ‌. அவன் அம்மா பூசாரி சென்ற திசையில் அழைத்து செல்ல, ஆதிக்கு பூசாரி நின்ற தோரணையில் புரிந்து விட்டது எல்லோரும் சேர்ந்து இவனுக்கு வீபூதி அடிக்க போகிறார்கள் என்று. ஆதியின் மனதில்” ஏற்கனவே ஒருத்தி உனக்கு வீபூதி அடிச்சது பத்தாதுனு இப்போ இவுங்களும் உனக்கு வீபூதி அடிக்க போறாங்க ஆதி. முடியல ஆண்டவா என்ன எப்படியாவது காப்பாத்து ” என்று மனதிற்குள் மட்டுமே புலம்ப முடிந்தது. அதை வெளியே சொல்லி அதற்கு தனியாக யார் வசவு வாங்குவதென்று மனதில் வைத்துப் பூட்டிக் கொண்டான். 

Advertisement

பூசாரி , கையில் வீபூதியை எடுத்து, அதை அப்படியே ஆதியின் தலையில் வைத்து ஆட்டுக்கலை ஆட்டுவது போல், இட வலமாக இரண்டு தடவை ,பிறகு வல இடமாக இரண்டு தடவை என்று சுழற்றி விட்டு திரும்ப தன் கையை எடுத்து வாயின் அருகே வைத்து ஏதோ மந்திரம் சொல்ல ஆரம்பித்து விட்டார். ஆதிக்கு தலை கிறுகிறுக்க , தலையை உலுக்கி சரி செய்துக் கொண்டான். அவன் அம்மா ஏதோ சாமியே வந்து தன் மகனுக்கு அருள் சொல்வது போல் பயபக்தியுடன் நின்று இருக்க, இதையெல்லாம் பார்க்கவே ஆதிக்கு சலிப்பாக இருந்தது. அவன் திரும்பி அவன் சித்தியை பார்க்க அவரோ சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்று இருந்தார். 

ஆதி அவன் சித்தியிடம் ” என்ன சித்தி இது எல்லாம்” என்று சலிப்பாக கேட்டான். 

” உன் அப்பத்தா தான் நீ காலையில சாப்பிடவும் வரலை, ராத்திரியும் நீ சரியா தூங்காம உலாதிட்டு இருந்தனு சொல்லி , உன்ன ஏதாவது காத்து கருப்பு அடிச்சு இருக்கும்னு வீபூதி அடிக்க சொன்னாங்க ” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே கூறினார். அவர் கூறி முடிக்கவும் வீபூதி வந்து ஆதியின் முகத்தில் விழவும் சரியாக இருந்தது. அவன் பூசாரியை உக்கிரமாக பார்க்க, அவரோ அவன் அம்மாவிடம் ” ஒன்னுமில்ல மா ஏதோ காத்து கருப்பு அடிச்சு இருக்கு. தம்பிய ரெண்டு நாளைக்கு ஆறு மணிக்கு மேல வெளிய போகாம வீட்டுக்குள்ளே இருக்க சொல்லுங்க , அப்புறம் நான் கொடுக்கும் கயிறை அவங்க வலது கையில் கட்டி விடுங்க” .

இதை பார்த்த ஆதிக்கு ‘ முன்னாடி மோகினி பிசாசு, இப்போ காத்து கருப்பா , யப்பா ஆதி உனக்கு வர வர டிமாண்ட் அதிகமாய்ட்டே போதே, என்ன டா நடக்குது இங்க!!!’ என்று அவன் மனசாட்சியே அவனை எள்ளி நகையாட அதன் தலையில் தட்டி அதனை அமைதியாக இருக்க சொன்னான். என்ன தான் நகைச்சுவையாக இதனை எடுத்துக்கொள்ள முயற்சித்தாலும் சில நினைவுகள் வந்து அதை தடுத்து விடுகிறது .

‘ இங்கு பல பேர் , கடவுளுக்கும் , சாதிக்கும் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் , உயிரும் உணர்வும் உள்ள மனதிற்கு குடுப்பதில்லை ‘ என்ற நினைவே கசந்தது ஆதிக்கு. அவன் தலையில் முகத்தில் எல்லாம் வீபூதியாக இருக்க முகத்தை கழுவ குளக்கரை நோக்கி சென்றான். 

அவன் அம்மாவும் சித்தியும் எப்படியும் ஆதி கோயிலை சுற்றுவதற்கு வர போறது இல்லை என்று தெரிந்து அவர்களே கோயிலை சுற்றி வர சென்றார்கள்.

******************* ‌ ***************

இனியா , மாலை வீட்டிலுள்ளே நுழையும் போதே புத்துணர்ச்சியாக உணர்ந்தாள். பல நாட்கள் சென்று இன்று ஏதோ புது உலகத்தை பார்த்தது போல் இருந்தது அவளிற்கு. கொரோனா பரவியதால் வீட்டை விட்டு வெளியே வருவதையே தவிர்த்து விட்டாள்.மிக சொர்ப்பமாக முக்கிய வேலை, அவசரம் அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வருவாள். 

இப்போது எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதால் குழந்தைகளை எங்காவது அழைத்துச் செல்லலாம் என்று கோயிலுக்கு அழைத்துச் சென்றாள். கோயில் சென்று பார்த்தால் அங்கே பூசாரியை காணவில்லை. சுற்றி முற்றி தேடி பார்த்தால் அவர் ஒரு ஆடவனுக்கு விபூதி அடித்து கொண்டிருந்தார். பார்த்தவுடன் இனியாவிற்கு சிரிப்பு வந்துவிட இடம் வலமாக தலை அசைத்து சிரித்துக் கொண்டாள். இப்போதைக்கு அவர் வரமாட்டார் என்று உணர்ந்து குழந்தைகளை குளக்கரை அழைத்துச் சென்றாள். கடைசி படியில் நீர் நின்றுக் கொண்டு இருக்க அங்கேயே நிற்க வேண்டும் என்ற கட்டளையுடன் நிற்க வைத்து விட்டாள். குட்டி குட்டி மீன்கள் அவர்கள் கால்களை சுற்றி வந்து கடிக்க குழந்தைகள் குஷியாகி அந்த மீன்களோடு விளையாட ஆரம்பித்தனர். அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்காக நின்று கொண்டு இருந்த படிக்கு மேல் உள்ள படியில் இனியா அமர்ந்து விட்டாள். அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதே இனியாவிற்கு ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவு ரசனையாக இருக்கும் குழந்தைகளின் விளையாட்டு. நடு நடுவே ஷன்வியும் சாத்விக்கும் ‘ இத பாரு மா , அத பாரு மா’ என்று மழலை மொழியில் பேசும் போது இவளுக்கும் உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்ளும். என்னவோ சத்தம் கேட்டது என்று திரும்பி பார்க்க பூசாரி கோயிலுக்குள் நுழைந்தார்.நேரம் சென்று கொண்டு இருக்க சீக்கிரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்றாள் . படிகளில் ஏறும்போது ஷன்வி தூக்கிக் கொள்ள சொல்ல தூக்கும் போது யாரோ படிகளில் இறங்குவது போல் இருக்க , திரும்பி பார்ப்பதற்குள் அவன் குளக்கரையின் கடைசி படிக்கு சென்று விட்டான். யாரென்று பார்த்தால் வீபூதி அடிக்கப்பட்ட ஆடவன். சிரித்து கொண்டே சாமி கும்பிட்டு, கோயில் பிரகாரமும் சுற்றி விட்டு, வீட்டுக்கு புறப்பட்டு விட்டாள்.

ஆதி படிகளில் இறங்கும் போதே கண்டுக் கொண்டான் ஊருக்கு புதிதாக வந்தவர்கள் என்று. அவர்கள் முகத்தை பார்க்கலாம் என்றால் குட்டி பையன் முகம் மட்டும் தெளிவாக தெரிய , அவன் அம்மாவின் முகமும் பெண் குழந்தையின் முகமும் சரியாக தெரியவில்லை. முகத்தை கழுவி விட்டு,குளக்கரையில் இருந்து காரினுள் சென்று அமர்ந்து விட்டான். ஏதோ யோசனையில் இருக்க அவன் காரை உரசிக்கொண்டு ஒரு இரு சக்கர வாகனம் பறக்க , ‘ என்ன இது ரெண்டு குழந்தைகள வச்சுக்கிட்டு இந்த அம்மா இப்படி பறக்குது ‘ என்று அந்த முகம் தெரியாத பெண்ணை திட்டிக்கொண்டே செல்லும் அந்த வாகனத்தைப் பார்த்து இருந்தான் ஆதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!