Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி♥️39

யாதுமாகி #39

உலைகலனாய் கொதித்த மனதை கட்டுப்படுத்த இயலாது கொதித்துக் கொண்டிருந்தவன் மனையாளின் அழைப்பை கண்டு ஒரு நிமிடம் உடைந்து போனான்.

 அவள் குரலை கேட்டால் மனம் நொறுங்கி விடுமோ என்று தவித்தது.

போனை சைலன் மோடில் போட்டுவிட்டு ஜன்னல் கம்பியில் முகத்தை தேய்த்து பறந்துப்பட்ட ஆகாயத்தை பார்த்தான்.அது அவன் மனம் போல் கலங்கி நில்லாமல் நிர்மலமாய் இருந்தது.



Advertisement

 கட்டிலில் கிடந்த ஃபோன் மீண்டும் மீண்டும் கண் சிமிட்டி பளிச்சிட்டது. நேத்ரா அடுத்தடுத்து அழைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் என்ன செய்வாள் பாவம்! மனதை சமன்படுத்திக் கொண்டு முகம் கழுவி வந்தவன் ஃபோனை எடுத்துப் பார்த்தான் நான்கு தவறிய அழைப்புகள் நேத்ராவிடமிருந்து.

 சற்று நிதானித்து அவனே அழைத்தான். ஹலோ… என்னங்க போன் கால் அட்டென்ட் பண்ணாம என்ன பண்றீங்க? வீட்டுக்கு வந்துட்டீங்களா?

Advertisement

 இப்போதுதான் எழுந்தேன். வந்து சேரும் போது நைட் ஒரு மணிக்கு மேல ஆகிடுச்சு. ரொம்ப டயர்டா இருந்துச்சுமா இப்போ தான் எழுந்தேன்.

Advertisement

அச்சோ சாரிங்க.நீங்க லாங் டிராவல் போகும் போது டிரைவரை கூட்டிட்டு போக வேண்டியது தானே?

எனக்கு திக்திக்குன்னு நைட் எல்லாம் தூக்கமே இல்லை.

நைட் டிராவல் அவாய்ட் பண்ணுங்க ப்ளீஸ்!அவள் குரலில் அன்பு,அக்கறை, பயம் பதற்றம் எல்லாமே இருந்தது.

Advertisement

சரிம்மா என்றான் அவள் அன்பில் நெகிழ்ந்து.

என்னங்க அத்தை எப்படி இருக்காங்க? இப்போ பரவாயில்லையா? நடக்க முடியுதா? கைகாலுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே…

 அதெல்லாம் நல்லா இருக்காங்க! அவன் குரல் பிசிறிது.

என்ன வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு? கோல்டா?

 அது லேட்நைட் வந்து சரியா தூங்கலை இல்லையா அதுதான் கொஞ்சம் டயர்டா இருக்கு.

அப்போ சரி நீங்க குளிச்சு சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.

 பிரணவ் என்ன பண்றான்? நீ சாப்பிட்டியா?

குழந்தை அம்மா கூட விளையாடுறான். நான் சாப்பிட்டாச்சு. பிரணவ் வெஜ் சூப் நல்லா குடிச்சான் தெரியுமா? பருப்பு சாதம் நல்லா சாப்பிடுறான். தாய்க்கே உரிய பெருமை வழிந்தது அவள் குரலில்.

 அப்படியா?ஆர்வம் இல்லை அவன் குரலில்.

 அப்பா அம்மா ஈவினிங் அத்தையை பார்க்க வந்தாலும் வருவாங்க. நான் அவங்க கூட வந்துடவா?

வேண்டாம். நான் கொஞ்ச நேரத்தில் அங்கே வரேன் அப்புறம் பேசிக்கலாம்.

 சரி மணி 11 ஆகுது நீங்க பிரஷ் ஆகி சாப்பிடுங்க நேத்ரா அழைப்பை துண்டித்தாள்.

 கறந்த பாலை போல, மழைத்துளி போல தூய்மையானவள்.இவளை போய்…மீண்டும் ஆத்திரம் பொங்கியது அவனுக்கு.

 மாமியார் நலனில் அக்கறை காட்டும் நல்ல மருமகளாகவே அவள் இருக்கிறாள்.இந்த அம்மாவுக்கு தான் அவள் பாகற்காயாய் கசக்கிறாள்.

 சற்று நேரம் எதையும் யோசிக்காது கண் மூடி படுத்தவன் தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்து கொண்டான்.

 கார் சாவியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.

 சாப்பிட்டு போப்பா அன்னம் குரல் கொடுத்தார்.பசிக்கல பாட்டி,மனசும் வயிறும் நிறைந்து இருக்கு! நில்லாமல் போய்விட்டான்

அன்னம் கண்ணீர் விட…. வேணு ஊமையாய் அழுதார்.

“——————-”

 அப்பா, தியா அப்பாவும் அவங்க அம்மாவும் இப்போ வராங்க. நாங்க சாயந்திரம் கிளம்பனும் வினிதா தயங்கி நின்றாள்.

 ஏன் என்று வார்த்தையால் கேட்காமல் விழி வழியே கேட்டார்.

 அப்பா நாங்க வந்து நாலு நாள் ஆகுது. மிடறு விழுங்கினாள்.

சரிமா கிளம்புங்க! வினிமா இங்கே நடந்த எதுவும் உங்க வீட்டுக்கு தெரிய வேண்டாம் என்றார்.

ம்ம்ம்ம்ம்ம் என்று வலியும் வேதனையும் தலையாட்டினாள்

பெண் கொடுத்த இடத்திலாவது நம்ப மரியாதை தப்பிக்கணும் இல்லையா?

நொந்து கொண்டார் வேணு.

அவரால் இயல்பாக முடியவில்லை. நம் வீட்டுக்கு வாழ வந்த பெண்ணை இப்படி வதைத்துக் கொண்டிருந்தால் நம் வீட்டு பெண் வாழும் இடத்தில் ஏதாவது நடந்து விட்டால்? கர்மா திருப்பி தாக்கும் என்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டு.

“——————”

 வாடிய முகத்தை சிரமப்பட்டு சமன் செய்தான் விஷ்ணு.

 காரை போர்டிகோவில் நிறுத்தி மீண்டும் கண்ணாடியில் முகம் பார்த்தான்.கண்கள் சிவந்து முகத்தில் கவலை மேகம் சூழ்ந்து இருந்தது.

 டிஷ்யு பேப்பர் எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு கீழ் இறங்கினான்.

 குழந்தையை வாக்கரில் அமர்த்தி ஜூஸ் புகட்டிக் கொண்டிருந்தாள் நேத்ரா.

 உள்ளே நுழைந்த தகப்பனை கண்ட குழந்தை தத்தி தாவி துள்ளியது.

டேய் வாலு பையா…பொழுதுக்கும் உன்னை வைத்து மேய்க்கிறது நானு,நீ உங்க அப்பாவை கண்டதும் துள்ளி குதிக்கிறியா?மகனை செல்லமாய் கடிந்து கொண்டாள்.

 தன்னை நோக்கி வாக்கரை இழுத்துக் கொண்டு வரும் மகனை அள்ளி அணைத்து முத்தமழை பொழிந்தான்.

என் செல்வமே, என் வாழ்வின் அர்த்தமே, என் மோட்சமே, உன் பிறப்பை ஒரு பெண் கொச்சைப்படுத்தி விட்டாளே .. கண்ணீர் முட்டியது.

 தான் விதைத்து முளைத்த வித்துவை ஆரத்தழுவி கொண்டான்.

 குளிர்ச்சியான ஆரஞ்சு ஜூசை கொண்டு வந்து நீட்டினாள் நேத்ரா.

தேங்க்ஸ் என்று வாங்கிக் கொண்டவன் குழந்தையை மார்பில் அணைத்து கொண்டே குடித்து முடித்தான்.

சார் சாப்பிடல போலிருக்கு? முகத்தைக் கொண்டு அறிந்து கொண்டாள் நேத்ரா.

லைட்டா சாப்பிட்டேன்! அவள் முகம் காணாது பதிலுரைத்தான்.

 வீட்ல ஏதாவது பிரச்சனையா?

அதெல்லாம் ஒண்ணுமில்ல…கொஞ்சம் டயர்டா இருக்கு.

சரி வாங்க ரெஸ்ட் எடுங்க! உள்ளே அழைத்து சென்றாள்.

 நேத்ராவின் கல்மிஷம் இல்லா முகம் நோக்க துணிவின்றி குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டே கட்டிலில் சரிந்தான்.

குழந்தையின் ஸ்பரிசம் அவன் செல்கள் யாவிலும் உட்பகுந்து சிலிர்ப்பை, பூரிப்பை, குழைவை ஏற்படுத்தியது.

மனையாளின் ஸ்பரிசம் கொடுக்கும் சிலிர்ப்பு ஒரு விதம்,மக்கள் செல்வத்தின் ஸ்பரிசம் கொடுக்கும் பேரின்பம் இன்னொரு விதம்.

விஷ்ணுவின் கனத்த இதயம் அவன் பெற்ற பாலகனின் மென்மையான அழுத்தத்தில் கரைந்து கரைந்து காகிதம் போல் லேசானது.

 இதமான ஏசியின் சில்லிப்பு, குழந்தையின் பட்டுடல் ஸ்பரிசம் கடும் மன உளைச்சல் கடந்து அவனை அயர்ந்து கண் மூடச் செய்தது.

 அறைக்குள் வந்த நேத்ரா தகப்பனும் குழந்தையும் துயிலும் பேரழகை கண்டு லயித்து நின்றாள்.

நேத்ரா…சமையல் ரெடி! குரல் கொடுத்துக் கொண்டே வந்தார் வேதம்.

ம்ம்ம்மா அப்பாவும் பிள்ளையும் தூங்குறாங்க.டிஸ்டர்ப் பண்ணாதம்மா.

சரி அவங்க தூங்கட்டும் நீ வந்து சாப்பிடு!

 இல்லம்மா நானும் அவர் கூடவே சாப்பிட்டுக்கிறேன். நீ போய் ரெஸ்ட் எடும்மா தாயை அனுப்பி வைத்தாள்.

 அறையை தாழிட்டு, உறங்கும் தன் கணவன் அருகில் சென்று அவளும் படுத்துக் கொண்டாள்.

 ஏதோ ஒரு ஆழ்ந்த அமைதி அவளிடம்.என் வட்டம் இவ்வளவு தான் என்ற பெருமிதம், புலகாங்கிதம்.

 உறக்கத்தில் கரம் தளர்ந்து நேத்ரா மீது கை போட்டான். அவள் விரும்பி கணவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் .

 மென் உறக்கத்தில் மனையாளின் ஸ்பரிசம் கண்டு கொண்டவன் அவள் வாசத்தை சுவாசித்து இடையை வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

 தன் மனைவி,தன் குழந்தை இதுவே நிதர்சனம். என்று அவன் மனதிற்கு உரைத்தது.

 கணவன் முகம் பார்த்து சிரித்தவள் அவன் மீசையை திருகி ஒற்றை நரைமுடியை நிரண்டினாள்.

ஏய்…. இமை பிரிக்காது சிணுங்கியவன் அவளை மேலும் இறுக்கி அணைத்து இதழ் ஒற்றினான் இதழ் ஓரத்தில்.

 சாப்பிடலாமா? மீண்டும் அவன் மீசையை திருகிக்கொண்டே கேட்டாள்.

 கொஞ்ச நேரம் தூங்கிட்டு சாப்பிடலாம் என்றவன் மனைவி, மகவை அணைத்துக் கொண்டு கண்ணயர்ந்தான். ஏனோ அவனுக்குள் அப்படி ஒரு ஆத்மார்த்த அமைதி.

 தொலைந்த நிம்மதி கிடைத்தார் போல், இழந்த சொர்க்கத்தை மீட்டார் போல் அப்படி ஒரு நிம்மதி.ஆழ்மனம் அமைதி கொண்டது. தெளிவு கண்டது.

 இரண்டு மணி நேரத்திற்கு மேல் உறங்கியவர்கள் குழந்தையின் சிணுங்களில் கண் விழித்தனர்.

 வேதம் குழந்தைக்கு கீரை சாதம் ஊட்ட…நேத்ராவும் விஷ்ணுவும் சாப்பிட அமர்ந்தனர்.

 என்ன தட்டில் எத்தனை சோறு இருக்குன்னு எண்ணிட்டு இருக்கீங்களா?மனைவியின் கிண்டலில் நிலை பெற்றான்.

 உங்களுக்கு பிடித்த வெந்தயக்கீரை கூட்டு,வத்த குழம்பு, வாழைக்காய் பொடி கறி,நார்த்தங்காய் ஊறுகாய், தக்காளி ரசம், கெட்டி தயிர் இவ்வளவு இருக்கு. நீங்க பார்வை ஒன்றே போதும்னு இருக்கீங்க.

 கணவனை அதட்டி மிரட்டி வயிறு முட்ட சாப்பிட வைத்தாள்.

 வழக்கமாய் வந்தவுடன் கிளம்புகிறேன் என்பவன் இன்று அமைதியாக இருந்தான்.

 கணவன் முகம் சரியில்லை என்று உணர்ந்தவள் அவன் கரம் பற்றி தன்னுடைய கரத்தோடு பிணைத்துக் கொண்டவள் மென்மையாய் அவன் விரல் நீவினாள்.

என்னாச்சு லாயர் சார் இன்னைக்கு ரொம்பவே மூட் ஆஃப்ல இருக்காரு போல….?அக்கறையாய் வினவினாள்.

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா… அவள் தலை மீது தலை சாய்த்துக் கொண்டான்.

அவன் ஆறுதல் தேடியது அவளுக்கு அவ்வளவு ஆறுதல் கொடுத்தது.

 நடந்ததை நேத்ராவிடம் சொல்ல அவனுக்கு ஓரிரு நிமிடங்கள் கூட ஆகாது. அந்த கொடும் வார்த்தைகள் அவளை எவ்வளவு தூரம் வேதனைப்படுத்தும் என்று உணர்ந்தே அமைதி காத்தான்.

 இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பா வந்துடுவார் நம்ம வீட்டுக்கு தான் போறாங்க!

வேண்டாம்…யாரும் போக வேண்டாம்.

ஏன் அப்படி சொல்றீங்க? சம்மந்தி அம்மாவுக்கு உடம்புக்கு முடியலன்னா போய் பார்க்கிறது தானே ஊர் வழக்கம்.

 வேண்டாம்னு சொன்னேன்! அம்மா எக்கு தப்பா பேசி உங்க அப்பாவை டென்ஷன் பண்ணிடுவாங்க.தேவையற்ற பிரச்சனை வேண்டாம் ப்ளீஸ்.அப்புறமா போய் பார்த்துக்கலாம்.

நேத்ரா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!அது என்னன்னா… அப்பா நம்ம குடும்ப ஜோதிடர் சதாசிவம் கிட்ட பிரணவ் ஜாதகத்தை கணிக்க சொன்னாராம்.

 வர குரு பெயர்ச்சி வரை நமக்கு நேரம் சரியில்லையாம்.

 அய்யோ…என்ன சொல்றீங்க? பதறினாள் நேத்ரா.

 பயப்படற மாதிரி ஒன்னும் இல்லம்மா… குரு பெயர்ச்சி அடுத்த மாசம் 13ஆம் தேதி. இன்னும் நாற்பது நாள் தான் இருக்கு. அதுவரைக்கும் நீங்க இங்கேயே இருங்க.

 யாருக்கும் உயிருக்கு எதுவும் சேதாரம் இல்லைல்ல… கலவரமானாள்.

 அப்படியெல்லாம் இல்லம்மா. கொஞ்ச நாள் விலகி இருக்கணுமாம்.

நேரம் சரியில்லாம தான் அத்தைக்கு இப்படி எல்லாம் ஆகியிருக்கு போல…

அவ்வளவுதானே உண்மையை தானே சொல்றீங்க?ஏதாவது பரிகாரம் செய்யலாமா? மீண்டும் பதட்டத்துடனே கேட்டாள்.

 யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் இடம் மாறி இருந்தால் நல்லதுன்னு ஜோதிடர் சொன்னாராம்.

 சரிங்க நான் அப்பாகிட்ட சொல்லிக்கிறேன்.

நீ கவலைப்படாதே நேத்ரா, நான் அடிக்கடி வந்து போறேன்.

 உறுத்தலும் சங்கடமுமாய் தலை அசைத்தாள் .

“——————”

 என்ன மச்சி கோயம்புத்தூர் போன விஷயம் சக்சஸ் தானே?

டேய் நம்ம மச்சான் எடுத்த எந்த கேஸ்ல தோத்து இருக்கான்? வாசு பெருமையாய் நண்பனை அணைத்துக்கொண்டான்.

என்னடா முகமே ஒரு மாதிரி இருக்கு…வீட்டில் ஏதாவது பிரச்சனையா? கண்டு கொண்டான் சுரேன்.

அதெல்லாம் ஒன்னும் இல்லடா… கொஞ்சம் ரெஸ்ட்லெஸா பீல் பண்றேன்.

 என்னடா பிரச்சனை? மீண்டும் அதட்டலாய் கேட்டான் வாசு.

 முகமறிந்து கேட்கும் நண்பர்களை பெருமிதமாய் இரு கரங்களிலும் அணைத்துக்கொண்டான்.

இதுதான் நட்பு,சொல்லி தெரிவதில்லை ஆழ்மன உணர்வுகள்.

 அருமையான மனைவி,அழகான குழந்தை, ஆத்மார்த்தமான நண்பர்கள். நான் கொடுத்து வைத்தவன்! உள்ளுக்குள் நெகிழ்ந்து போனான்.

நண்பர்களிடம் என்னவென்று கூறுவான்? என்னை பெற்றவள் என் ஒழுக்கத்தை, என் மனைவியின் நடத்தையை, என் பிள்ளையின் பிறப்பை கொச்சைப்படுத்தி விட்டாள் என்றா கூற முடியும்?

 நேத்ராவிடம் கூறிய அதே கதையை நண்பர்களிடமும் கூறினான்.

 நேரம் சரியில்லை கொஞ்சம் விலகி இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யப் போகிறான் என்பதையும் கூறினான்.

உன் யோசனையும் நல்லாதான் மச்சி இருக்கு. இனிமேலாவது நீ தங்கச்சி கூட சந்தோஷமா வாழணும் மச்சி.நண்பர்கள் மூவரும் தோள் மீது கை போட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!