Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 7

அத்தியாயம் 7

“அம்மா நான் இன்னிக்கு பெர்மிஷன் போட்டுட்டு மூனு மணிக்கு எல்லாம் வந்துடறேன்” காலை உணவின் போது  அம்மாவிடம் கூறினான் ஹரி.



Advertisement

“ம்ம்”

“நீங்க நான் அப்பா மூனு பேரும் மட்டும் தான் போறோமா?”

Advertisement

Advertisement

“ம்ம்ம்”

“என்னம்மா நீ இப்படி சுரத்தே இல்லாம பதில் சொல்ற? எனக்கு கல்யாணம் ஆகணும்னு உனக்கு கூட ஆசை இல்லையா?”

Advertisement

“டேய் சும்மா டிராமா பண்ணாம சாப்பிடு..”

“ நீங்க நாம போக எல்லா ஏற்பாடும் செஞ்சுடறீங்களா?”

“நானா எல்லாம் எப்படி செய்ய? மணி இல்லாம கை உடைஞ்ச மாதிரி இருக்கு. அவ இருந்தா எல்லா ஏற்பாடுகளையும் அவளே செஞ்சிருப்பா”

ஹரிக்கும் அது புரிந்து தான் இருந்தது. யாரும் கேட்கும் முன்பே எல்லாம் சரியாக  செய்து வைத்துவிடுவாள்.

“நம்ம மணியை கல்யாணம் முடிஞ்சதும் அனுப்பி இருக்கணும் ம்மா”

“அடடா.. நீ சொன்னதால என் பொண்ணை அனுப்பினேன் நினைச்சிட்டியா? அட லூசு பயலே! உங்க கிட்ட இருந்து என் பொண்ணை இத்தனை நாளா ஏன் தள்ளி வைக்கலைன்னு இப்ப தான் தோணுச்சு.. அதுக்காக தான் இந்த சென்னை இடம் மாற்றம். மத்தபடி அங்கே ஒத்து வரலைனா, இல்லை எனக்கு மனசுக்கு பிடிக்கலைன்னா எப்ப வேணும்னாலும் திரும்ப இங்க கூட்டிட்டு வந்துடுவேன்” என்று கூறிக்கொண்டே வந்து அமர்ந்தார் சுந்தர்ராஜன்.

அவன் அவரை முறைத்து பார்க்கவும்,

“அப்பவும் இதை தான் சொன்னேன்.. இப்பவும் இதை தான் சொல்றேன்.. எனக்கு எல்லாம் நேத்து ஒரு பேச்சு, இன்னிக்கி ஒரு பேச்சு இல்லை மகனே.. வேணும்னா உங்க அம்மாவை கேட்டு பாரு”, என்று மனைவியை பார்த்து கண்ணடித்து சிரித்தார்.

பரிமளா தலையில் அடித்துக்கொண்டு முகத்தை திருப்பி கொண்டார்.

“மகாக்கு போன் பண்ணி கூப்பிட்டு இருக்கீங்களா?” என்றார் அடுத்த கேள்வியாக.

மகாலட்சமி, இவர்கள் வீட்டு மூத்த பெண். பரிமளாவின் அண்ணன் மகனை திருமணம் செய்து கொண்டு தஞ்சாவூரில் இருக்கிறாள். மகாவின் கணவர் வெங்கட், அட்வகேட் .. இரண்டு ஆண் பிள்ளைகள். பெரியவன் ஸ்ரீனிவாசன் பொறியியல் மூன்றாம் ஆண்டிலும், இளையவன் ஸ்ரீவத்சன் பொறியியல் முதலாம் ஆண்டிலும் படிக்கின்றார்கள். பக்கத்தில் இருந்தாலும் தேவையின்றி அம்மா வீட்டிற்கு அதிகம் வர மாட்டாள் மகா.

“நான் கல்யாணம் முடிவானதும் சொல்லிக்கலாம்னு இருந்தேன்” என்றார் பரிமளா சுரத்தின்றி.

மகா, வெங்கட் இருவரும் வந்தால், மணி எங்கே என்று கேட்பார்களே! இதுவரை பரிமளா அவர்களிடம் எதுவும் சொல்லி இருக்கவில்லை. இருவரும் தப்பு என்றால் முகத்திற்கு நேரே சொல்லும் ரகம். ராமின் விவாகரத்து முடிவை இருவருமே எதிர்த்தனர். அதனால் அவனிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள்.

“அவங்ககிட்ட சொல்லாம போனா நல்லா இருக்குமா பரிமளா? நீ விஷயத்தை  சொல்லு.. முடிஞ்சா வரட்டும், இல்லைனா நிச்சயத்துக்கு வரட்டும். ஆனா நாம சொல்லாம போக கூடாது, அது மரியாதையும் இல்லை”

“போயிட்டு வந்து சொன்னா தெரியவா போகுது?”

“ உங்க அப்பா மூலமா வந்த வரன். அப்ப உங்க அண்ணனுக்கு தெரியாமலா இருக்கும். அவருக்கு தெரிஞ்சா வெங்கட்க்கும் தெரிஞ்சிருக்கும் தானே?”

“ஆமா …”

“அப்பா சொல்றது சரி தானே ம்மா. அக்காவும் வந்தா நல்லா இருக்கும்தானே” என்றான் ஹரி.

“இப்ப நான் போன் பண்ணா.. கடைசி நேரத்துல கூப்பிட்டா நான் வர முடியாதுன்னு வேணும்னே இப்ப போன் பண்றியான்னு கேட்பாளே?”

“நியாயமான கேள்வி தானே பரிமளா?”

“உக்கும்.. டேய் நீ போன் பண்ணி சொல்றியா ஹரி?”

“நானே போன் பண்ணி எனக்கு பொண்ணு பார்க்க போறேன்னு சொன்னா நல்லா இருக்காது ம்மா..”

“ஏங்க…”

“ம்ம்ம் …”

“என்னங்க..“

“ம்ம்ம்..”

“உங்களைத்தான்..ஏங்க”

“ம்ம்ம்ம்”

“நீங்க என்ன உம்முன்னா சாமியா? எல்லாத்துக்கும் ம்ம் போட்டுக்கிட்டு இருக்கீங்க?”

“உனக்கு புருஷனா ஆனதுக்கு அப்புறம், இத்தனை வருஷமா என்னை அப்படி தானே ம்ம்ம் போட வச்சிருக்க?” 

“யாரு?  நானு.. உங்களை.. ரொம்பத்தான்.. இப்ப மகாக்கு போன் பண்ணி நீங்க விஷயத்தை சொல்லுங்க.. ப்ளீஸ்..”

நான் சென்னைக்கு போறதுக்கு முன்னவே மகாகிட்ட சென்னை போற விஷயத்தை சொல்லும்போது இதையும் மேலோட்டமா சொல்லி இருக்கேன்.. அதனாலே நீயே கூப்பிடு..”

‘சரியான நாரத சிகாமணி.. அப்படியே அவங்க அம்மா மாதிரி.. இவர் மட்டும் பொண்ணுகிட்ட நல்ல பேரு வாங்கணும்.. எதை சொல்லிவச்சாரோ’ என்று வாய்க்குள்ளே முனுமுனுத்தார்.

“செத்தும் கூட உன் வாயில இருந்து எங்க அம்மாவுக்கு மோட்சம் இல்லையா?” என்றார் போலியான வருத்தத்துடன்.

“உக்கும்”

வேறு வழி இன்றி பெரிய மகளுக்கு அழைத்தார்.

“ஹலோ.. மகா எப்படி ம்மா இருக்க?”

“என்னை எல்லாம் நியாபகம் இருக்கா ம்மா உனக்கு பரவாயில்லையே..” என்று ஆரம்பமே அசத்தலாக தான் இருந்தது.

“இல்ல மகா.. மணியை உங்க அப்பா திடீர்ன்னு சென்னை கூட்டிட்டு போயிட்டாரு.. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல..” 

“எப்படி எப்படி.. அப்பா திடீர்னு கூடிட்டு போய்ட்டாரு.. எங்கே? நீயும் உன் செல்ல பையனும் சொன்ன மாதிரி ஹாஸ்டல்கா?”

‘பாவி மனுஷன்.. ஒன்னு விடாம சொல்லி வச்சிருக்காரே!’ என்று மனதிற்குள் கணவனை பாராட்டிவிட்டு..

“இப்படி செய்யலாமான்னு தான் பேச்சு ஆரம்பிச்சுது.. அது எல்லாம் வேண்டாம்னு தானே சொல்லணும்.. அதை விட்டுட்டு இது தான் சாக்குன்னு அவளும் கிளம்பிட்டா.. இவரும் கொண்டு போய் ஆயா வேலை பார்க்க விட்டுட்டு வந்திருக்காரு..”

“அம்மா நீ பேசுறது உன் பொண்ண பத்தி.. உன் பேர பிள்ளைகளை பத்தின்னு நியாபகம் வச்சுக்கோ.. ஆயா வேலைன்னு சொல்றியே? மனசாட்சி இருக்கா ம்மா?”

“ஒரு ஆதங்கத்துல சொல்றது தான்.. அதை பிடிச்சிக்கிட்டு தொங்காத”

“உன் ஆதங்கத்தை எல்லாம் என் புருஷன் காதுல விழுகிற மாதிரி சொல்லி வச்சிடாத.. ஏற்கனவே என்னை அனுப்ப மாட்டேங்குறாங்க.. அப்புறம் நான் அம்மா வீடுன்னு ஒன்னு இருக்குன்னே மறந்துடு வேண்டியது தான்..”

“நான் தூக்கி வளர்த்த பையன்.. இப்ப மாப்பிள்ளை ஆனதும் மாப்பிள்ளை முறுக்கு காட்டுறானோ?”

“இங்க தான் இருக்காரு.. அவர் கிட்டவே கேளு” என்று போனை கணவரிடம் கொடுத்துவிட்டாள்.

‘அப்பா மாதிரியே போட்டு கொடுக்கிறதை பாரு’ என்று மகளையம் மனதிற்குள் அர்ச்சித்துவிட்டு 

“ஹலோ வெங்கட்” என்றார் பாசமாக.

“சொல்லுங்க அத்தை.. எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் வெங்கட்டு.. என்ன நம்ம மணியை தான் சென்னைல விட்டிருக்கோம். பாவம் ராம் பிள்ளைங்க ரெண்டும் பெத்தவங்க இல்லாம தவிச்சு போய் நின்னுச்சுங்க. அதான் மனசு கேட்காம கொஞ்ச நாள் மணி அங்க இருந்து பிள்ளைகளை பார்த்துக்கட்டும்னு..”

“உங்க அம்மாவுக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் டா ஹரி.. பார்த்தியா பெர்பார்ம்மன்ஸை”  என்று மகனிடம் கூறினார் சுந்தர்ராஜன் ரகசிய குரலில்.

“சரி அத்தை.. மணிக்கும் ஒரு மாறுதலா இருக்கும் தான். மாமா போனவாரம் எங்கிட்ட சொல்லிட்டு தான் போனாங்க..”

“நான் தான் சொல்ல சொன்னேன் வெங்கட்.. சரி இன்னிக்கு சாயந்தரம் நம்ம ஹரிக்கு ஒரு பொண்ணு பார்க்க போலாம்னு இருக்கோம். நீயும் மாகவும் வந்துடறீங்களா?”

“இன்னிக்கு போனும்னு இப்ப கூப்பிட்டா எப்படி வர? எனக்கு இன்னிக்கு கோர்ட்ல ஒரு முக்கியமான கேஸ் இருக்கு.. நீங்க பொண்ணை பார்த்துட்டு வாங்க.. பிடிச்சா அப்புறம் அடுத்த பேச்சு வார்த்தைக்கு நாங்க வர்றோம்…”

“சரிப்பா.. அப்ப நாங்க சாயந்தரம் போய்ட்டு வந்து பேசுறோம். வச்சிடறேன்” என்று வைத்துவிட்டார்.

“ஏங்க இங்க  நடந்ததை எல்லாம் ஒப்பிச்சிடுவீங்களா?” என்று கணவரை பார்த்து கோவமாக கேட்டு விட்டு பதில்லாமல் போகவும்.

“டேய், பொண்ணு பார்க்க போக வாங்க வேண்டிய பழம் பூ எல்லாம் லிஸ்ட் போட்டு தர்றேன், வரும்போது வாங்கிட்டு வந்திடு..”

“எங்க வாங்கணும்?”

“எங்கன்னா? கடையில தான்..”

அப்பா உதவுவாரா? என்று அப்பாவை பார்க்க,

“நேத்து ட்ராவல் செஞ்சது டயர்டா இருக்கு பரிமளா.. நான் கொஞ்சம் தூங்குறேன்.. மதியம் சாப்பிடற நேரத்துக்கு எழுப்பி விடு போதும்” என்று எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

“அம்மா நான் எப்ப கடைக்கு எல்லாம் போய் இதுலாம் வாங்கிட்டு வந்திருக்கேன்..” என்று சினுங்கினான்.

“நான் மட்டும் எப்படா போனேன்.. ரொம்ப வருஷம் ஆச்சு.. மணி தான் பெரும்பாலும் போவா.. அவ கிட்ட வேணும்னா கேட்டுட்டு போ.. எங்க நல்லா கிடைக்கும்னு சொல்லுவா” என்று ஒரு லிஸ்டை கொடுத்து விட்டு அவரும் உள்ளே சென்று விட்டார்.

மணியின் முகத்தை பார்த்து இவன் பேசியதாக அவனுக்கு நினைவே வரவில்லை. அவளை எப்பொழுதும் ஒரு வேண்டாத ஆளாக தான் பார்த்திருக்கிறான். அவள் படிப்பை நிறுத்தியதில் பெரும்பங்கு இவனையே சேரும்.. அதில் இருந்து மணியும் இவனிடம் நேரடியாக எதுவும் பேசியதே இல்லை.

அவளுக்கு அழைத்து கேட்க மனசாட்சி இடம் கொடுக்காததால் அவனே சென்று அவனுக்கு தெரிந்த அளவில் எல்லாம் வாங்கி வந்தான்.

இந்த சிறு வேலை செய்ததற்கே அம்மா மகன் இருவருமே களைத்து போயினர் என்பதே நிஜம்.

சரியாக மாலை ஆறு மணிக்கு இவர்கள் மூவரும் பெண் வீட்டிற்கு சென்றனர்.

“வாங்க வாங்க” என்று வாயெல்லாம் பல்லாக இவர்களை வரவேற்றார் பெண்ணின் தந்தை சடகோபன்.

“என்ன நீங்க மூனு பேர் மட்டும் தான் வந்திருக்கீங்க? வேற யாரும் வரலையா?”

“அது வந்து நீங்க தானுங்களே என் பொண்ணை ஹாஸ்டல்ல சேர்க்க ஐடியா கொடுத்ததே.. அப்புறம் பொண்ணை கூட்டிட்டு வர முடியாது இல்ல” என்றார் சுந்தர்ராஜன்.

இந்த நேரடி தாக்குதலை எதிர்பார்க்காமல் அவர் ஒரு நிமிடம் தயங்கி நின்றார்.

“நாங்க எங்க தயக்கத்தை தான் சொன்னோம்.. நீங்க அதை தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க போல? இப்படி உடனே செயல்ல இறங்குவீங்கன்னு தெரியாதுங்க..”

ஹரிப்ரசாத் இது எங்கே போய் முடியுமோ என்று கொஞ்சம் கலவரமாகவே அமர்ந்திருந்தான்.

“மத்த பசங்க வரலையா?”

“பெரிய பொண்ணு தஞ்சாவூர்ல இருக்கா.. நிச்சயத்துக்கு வந்துடுவாங்க.. இன்னொரு பையன் வேலை விஷயமா அமெரிக்கா போயிருக்கான்.”

“நான் ஒருத்தன் கேள்வியா கேட்டுட்டு இருக்கேன் பாருங்க. இது என் சம்சாரம் ராஜம்” என்று அவர் மனைவியை அறிமுகம் செய்தார்.

“எங்களுக்கு மூனு பொண்ணுங்க தான். பெரிய பொண்ணு.. சாம்பவி.. அவளை தான் நீங்க பார்க்க வந்திருக்கிறது. அடுத்தவ பார்கவி.. சின்னவ  வைஷ்ணவி..”

“எங்க பிள்ளைங்களை காணும்?”

“ரூம்ல இருக்காங்க “

“ரொம்ப பார்மலா எல்லாம் வேணாமே.. பிள்ளைங்களை வர சொல்லுங்க, சகஜமா இருக்கட்டும்” என்றார் சுந்தர்ராஜன்.

அவரது இந்த எதார்த்தமான பேச்சு ராஜத்திற்கு திருப்தியாக இருந்தது.

பக்கத்து அறையில் வெளியே பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த பெண்களுக்கும்  குஷியாக போனது. ராஜம் சென்று மூவரையும் அழைத்து வந்தார்.

“என்ன படிக்கிற டா?” என்று சின்ன பெண்ணிடம் கேட்டார் பரிமளா.

“நான் டென்த் படிக்கிறேன் ஆன்ட்டி..”

“நீம்மா?”

“நான் பி.காம் ப்ர்ஸ்ட் இயர் ஆன்ட்டி” 

“நீ வேலைக்கு போறியா ம்மா? என்றார் அடுத்து சாம்பவியை பார்த்து.

“ஆமா ஆன்ட்டி.. காலேஜ்ல க்ளர்க்கா இருக்கேன்”

“எந்த காலேஜ்”

அவள் காலேஜ் பெயரை மெல்ல சொல்லவும், “அட எங்க ஹரியும் அங்க தான் வேலை செய்யுறான்” என்றார் போலியான ஆச்சர்யத்தோடு.

சுந்தர்ராஜன் கஷ்டப்பட்டு வாய்க்குள்ளே சிரிப்பை அடக்கி கொண்டார். பின் ராஜம் காபி பலகாரம் கொண்டு வந்து கொடுத்தார்.

“எதுவா இருந்தாலும் தெளிவா பேசிடறது நல்லது. நாளைக்கு யாருக்கும் சங்கடம் வராது இல்ல.. நான் எப்பவுமே மனசுல படறதை பட்டுன்னு சொல்லிடுவேன்” என்று ஆரம்பித்தார் சடகோபன்.

மிகவும் பேச்சு சாதுர்யம் கொண்டவர் சடகோபன். எப்பொழுதுமே அவர் நினைத்ததையே எதிரில் உள்ளவர் செய்யும்படி பேசிடுவார்.

“ரொம்ப சரியா சொன்னீங்க.. நானும் அப்படிதான்” என்றார் சுந்தர்ராஜன்.

சாம்பவியும் ஹரியும் ஒருவரை ஒருவர் கலவரமாக யாரும் அறியாமல் பார்த்துக்கொண்டார்கள்.

“எனக்கு மூனும் பொண்ணுங்க.. பையன் இல்லைன்னு நான் ஒரு நாளும் நினைச்சதே இல்லை” என்றார் ஏதோ அவருக்கு மிகவும் பெருந்தன்மை என்பது போல.

“இதுல நீங்க நினைக்க என்ன இருக்கு?” என்று சுந்தர்ராஜன் கேட்டு அவரை பார்க்கவும்,

அவர் ஒரு  நிமிடம் ‘ங்கே’ என்று விழித்தார்.

“நான் என்ன சொல்ல வந்தேன்னா என் மூனு பிள்ளைங்களையும் நான் ஆண் பிள்ளைங்க மாதிரி தைரியமா வளர்த்திருக்கேன்”

“ஓ.. ஏன்.. பொண்ணுங்களை பெண் பிள்ளைங்க மாதிரியே தைரியமா வளர்த்திருக்கலாமே?”

ஹரி அவன் அம்மாவை பாவமாக பார்க்கவும்,

அவர் கணவனின் தொடையை மெல்ல கிள்ளி வைத்தார்.

“உங்க சம்பந்தத்தை சொன்னவங்க சொன்னாங்க.. இந்த பையன் தான் உங்களை பொறுப்பா பார்த்துகிறதா.. “

“எனக்கு நாலு பசங்களும் ஒரே மாதிரி தானுங்க.”

“இருந்தாலும் இவர் தானே உங்க கூட இருக்கிறாரு”

“ஆமாங்க” என்றார் பரிமளா இப்பொழுது.

“நம்மளை யார் பார்த்துகிறாங்களோ அவங்க நமக்கு ஸ்பெஷல் தான்.. என்ன நான் சொல்றது?” 

இவர் இப்ப என்ன சொல்ல வர்றாரு என்று பரிமளாவிற்கே குழப்பமாகி விட்டது.

ராஜம் ஒரு டென்ஷனோடு அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்.

“இல்லை, உங்க மத்த பிள்ளைங்க எல்லாம் அவங்க அவங்க வாழ்க்கைன்னு போயிட்டாங்க போல. இவர் தான் உங்க கூடவே இருக்காரு இல்ல”

“நாளைக்கு இவனுக்கும் கல்யாணம் ஆனத்துக்கு அப்புறம் அவன் குடும்பம் குழந்தைன்னு பார்க்க போறான்” என்றார் பரிமளா சமாளிப்பாக.

“நான் என் பொண்ணை அப்படி வளர்கலை ம்மா தங்கச்சி. அவ உங்களையும் சம்பந்தியையும் உட்கார வச்சு கவனிச்சுக்குவா”

“எங்களை  பார்த்தா அவ்வளவு வயசானவங்க மாதிரியா தெரியுது? நாங்க நடையுடையா தானுங்க இருக்கோம்” என்றார் சுந்தர்ராஜன்.

‘இவரை..’ என்று பல்லை கடித்துகொண்டார் சடகோபன்.

இவர் வாயை அடைக்கவும் ஒரு ஆள் இருக்கா, என்று பரவசமாக சுந்தர்ராஜனை பார்த்தார் ராஜம்.

“நீங்க தெளிவா பேசிடலாம்னு சொன்னதால சொல்றேன்.. எனக்கு நாலு பிள்ளைங்க.. பரம்பரை சொத்தை எல்லாம் நாலு பசங்களுக்கும் சரிசமமா பிரிச்சு உயில் எழுதியாச்சு.. அதே மாதிரி நாங்க இப்ப இருக்கிற வீடும் என் நாலு பசங்களுக்கும் சரி சமமா தான் பங்கு. கீழே உள்ள போர்ஷன் என் ரெண்டு பொண்ணுங்களுக்கும், மாடி போர்ஷன் ரெண்டு பசங்களுக்கும்.

நாங்க இருக்கிற வரை கீழே இருந்துபோம். அதே போல நாங்க இருக்கிற வரை எதையுமே விக்க முடியாதுங்க..”

“அது எப்படிங்க, உங்க பெரிய பையன், பெரிய பொண்ணு எல்லாம் நல்லா சம்பாரிச்சு நல்ல நிலைமையில் இருக்கிறாங்க.. இந்த பையனுக்கு நீங்க கொஞ்சம் கை தூக்கி விடணும்ல.” 

“நான் எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரி தானுங்க எல்லாம்  செஞ்சிருக்கேன். சொல்லப்போனா என் சின்ன பொண்ணுக்கு மட்டும் தான் நான் நியாயமா நடந்துக்கலை. இப்பதான் அதையும் சரி செய்ய பார்த்திட்டு இருக்கேன்”

“இந்த பையனுக்கு தான் வீடுன்னு சொன்னாங்களே? தனியா மாப்பிள்ளைக்கு வீடு இருக்கணும்னு நினைக்கிறது தப்பு இல்லையே?”

“உங்க கிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க.. அப்புறம் உங்க நினைப்பு தப்பா சரியான்னு நான் எப்படிங்க சொல்ல முடியும். அதை உங்க மனசாட்சி கிட்ட கேளுங்க..”

‘இதற்கு என்ன சொல்ல?’ என்று அவர் கடுப்பாக இருக்க..

“ஏம்மா அப்பா இப்படி வெடுக்குன்னு பேசுறாங்க?” என்று அம்மாவிடம் கிசுகிசுத்தான் ஹரி.

“டேய் அதை விடு.. அந்த அம்மா ஏன்டா சாமியை பார்க்கிற மாதிரி உங்க அப்பாவை பார்த்து நிக்குது?”

“யாரும்மா” என்று திரும்பி பார்த்தால் ராஜம் தான் சுந்தர்ராஜனை அப்படி பக்தி பரவசமாக பார்த்து நின்றுகொண்டிருந்தார். .

சுந்தர்ராஜனும் சடகோபனும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கையில் மற்றவர்கள் பார்வையாளர்கள் ஆனார்கள்.

“உங்களுக்கு என் பொண்ணு மாதிரி வெளியே தேடினாலும் கிடைக்காதுங்க.. நான் பெருமைக்காக சொல்லலை.. அதுவும் இல்லாமல் மாப்பிள்ளை பத்தி  விசாரிக்கும் போது  உங்க குடும்ப சங்கதி எல்லாம் தெரிஞ்சுதுங்க..” என்றார் கொஞ்சம் தெனாவட்டாக.

“பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருட்டா ஆகிடாதுங்க.”

“உங்க சொத்து பத்தி எல்லாம் எனக்கு அக்கறை இல்லைங்க. ஆனா பையனுக்கு மட்டும் தனியா வீடு இருந்தா எங்களுக்கு பொண்ணை கொடுக்க தயக்கம் இருக்காது பாருங்க”

“எங்க வீட்ல என் பையனுக்கு பங்கு இருக்கு.. அவனுக்காக அவன் குடும்பம் இருக்கு.. சீக்கிரமா அவன் சம்பாரிச்சு சொந்தமா வீடு வாங்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீங்க யோசிச்சே சொல்லுங்க.. ஒன்னும் அவசரமில்லை” என்று கூறி எழுந்து நின்றுவிட்டார்.

ஹரிக்கு கூட அப்பா சொன்னது சரி என்றே பட்டது. அவன் சுயநலம் பிடிச்சவன் என்றாலும் சுயமரியாதை இல்லாதவன் இல்லை.

இந்த இடத்தை முடித்து இவர் பிடியில் மாப்பிள்ளையை வைத்துக்கொள்ளலாம் என்ற சடகோபனின் எண்ணத்தில் ஒரு லாரி மண்ணை போட்டு மூடிவிட்டார் சுந்தர்ராஜன்.

“சரிங்க.. நீங்க சொல்றதும் சரிதான்.. நான் எனக்காக கேட்கலை. நாளைக்கு  பொண்ணும் மாப்பிள்ளையும் நல்லா இருக்கணும்னு தான் சொன்னேன்.”

“————-”

“உட்காருங்க அண்ணா” என்றார் ராஜம் மெல்ல. போயிடாதீங்க என்று இறைஞ்சியது அவரது பார்வை.

“எனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு. அதனால் உங்களுக்கு சம்மதம்னா  மேலே பேசலாம்” என்றார் சடகோபன்.

“உங்களுக்கு பிடிக்கிறதா முக்கியம். பொண்ணுக்கு பிடிச்சிருக்கான்னு கேளுங்க”

“நான் சொல்றதை என் பொண்ணு மீற மாட்டா” என்றார் கர்வமாக.

‘குடும்பமா சேர்ந்து முழு பூசணிக்காயை சோத்துல மறைக்குதுங்களே’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

“நீங்க என்ன எதிர்பார்க்குறீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்” என்றார் சடகோபன். 

“நாங்க வரதட்சனை எல்லாம் எதிர்பார்க்கிறவங்க இல்ல… உங்க பொண்ணுக்கு நீங்க செய்றது உங்க இஷ்டம். கல்யாண செலவு ஆளுக்கு பாதி.”

சாம்பவிக்கும் ஹரிக்கும் ‘அப்பாடா’ என்று இருந்தது. 

“கல்யாணத்தை சிம்பிளா செஞ்சா போதுமா?” என்றார் சடகோபன்.

“அது உங்க விருப்பம். எங்க குல தெய்வ கோவில்ல சிம்பிள்ளா செஞ்சாலும் எங்களுக்கு சம்மதம் தான், இல்ல பெரிய மண்டபம் பிடிச்சு செய்றதுனாலும் ஓகே தான். என்ன பரிமளா?” என்று சடகோபனிடம் ஆரம்பித்து மனைவியிடம் முடித்தார்.

“ஹரி.. நீ சொல்லுப்பா..” என்று பரிமளா மகனிடம் கேட்டார். 

ஹரி சாம்பவியை பார்த்தான்…

“எனக்கு அப்பா அம்மா என்ன சொன்னாலும் சரி தான்” என்றாள் பெண் மெல்ல.

“அப்படி எல்லாத்துக்கும் சரின்னு சொல்ல கூடாதும்மா.. சரியான இடத்தில நம்ம கருத்தை சொல்லணும். அது தப்போ சரியோ.. நடக்குதோ இல்லையோ..  பெண்களுக்கு முதலில் கருத்து சுதந்திரம் வீட்டில் இருக்கணும்” என்றார் சுந்தர்ராஜன்.

சாம்பவி, பார்கவி, வைஷ்ணவி மூவரும் கூட இப்பொழுது பரவசமாக சுந்தர்ராஜனை பார்த்து வைத்தனர்.

“நான் கிழிச்ச கோட்டை பிள்ளைங்க தாண்டாதுங்க” என்றார் சடகோபன் மீண்டும் பெருமையாக.

“கோட்டை எங்க வீட்டுக்குள்ள கிழிக்காம இருந்தா சரிதான்” என்றார் சுந்தர்ராஜன் நக்கலாக.

“நீங்க பிள்ளைங்களை தனிக்குடித்தனம் எல்லாம் வைக்க நாங்க சொல்ல மாட்டோம். வீட்டை பிரிக்கிற புத்தி எங்களுக்கு இல்லைங்க”

“நாங்க கீழ் போர்ஷன்லயும் ஹரியும் அவன் மனைவியும் மாடி போர்ஷன்லயும் இருக்கலாம்னு தான் முடிவு. சமையல் ஒன்னா ரெண்டாவான்னு மாமியாரும் மருமகளும் முடிவு செஞ்சுக்கட்டும்..”

எல்லாமே திட்டவட்டமாக சொல்லும் இவரிடம் என்னத்த சொல்ல என்று சடகோபன் மண்டையை ஆட்டி வைத்தார்.

ஆஹா.. எத்தனை வருஷமா என்னைய மண்டையை ஆட்ட வச்சிட்டு இருக்காரு.. நல்லா வேணும் என்று மகிழ்ச்சியாக கணவனின் இஞ்சி தின்ன முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார் ராஜம்.

மேலும் சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு, விரைவில் கல்யாண தேதியை முடிவு செய்வோம் என்று அங்கே இருந்து புறப்பட்டார்கள்.

————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!