Skip to content
Post Views: 3,569
இன்று இறுகி பாறையாகிப் போய் இருக்கும் பவித்ரா அன்று இலவம்பஞ்சு போல் கனமில்லா மனத்துடன் சுற்றி திரிந்தவள் தான்.
மாயவரம் என்று சொல்லக்கூடிய மயிலாடுதுறையில் இருந்து மூன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லதுக்குடி என்ற கிராமம். விவசாயம் செழிக்கும் சொர்க்க பூமி.
அந்த ஊரில் ஓரளவு செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவன் சங்கர நாராயணன். அவனுக்கு ஒரு அண்ணன் இரண்டு தங்கை.
சங்கர நாராயணன் படிப்பில் சுமார் தான். தனக்கு படிப்பு ஏறவில்லை என்று அவன் கவலைப்படவில்லை.
Advertisement
சிறுவயதிலிருந்தே மெக்கானிக் மூளை அவனுக்கு… எந்த மெஷினை பார்த்தாலும் அவன் கண்கள் ஆர்வமாய் அளவிடும். நெட் போல்ட் ஸ்பேனர் என்று அவன் கைகள் பரபரக்கும்.
வீட்டில் மின்விசிறி பழுதா…? தொலைக்காட்சி இயங்கவில்லையா…? கூப்பிடு சங்கரனை அவன் எதையாவது கிண்டி கிளறி ஓட வச்சுடுவான் என்று தேட ஆரம்பித்தனர்.
பத்தாம் வகுப்பு தட்டுத்தடுமாறி தேர்ச்சி பெற்றவன் ITI படிக்க போகிறேன் என்று தெளிவாக சொல்லி விட்டான். அன்றைய கால கட்டத்தில் ITI க்கு நல்ல மவுசு இருந்தது. இன்று IIT போல அன்று கிராமப்புற மாணவர்களுக்கு ITI தான் கை கொடுக்கும் படிப்பு.
Advertisement
வீட்டிலும் மறுப்பு சொல்லவில்லை… சங்கரனின் அண்ணன் பரமசிவம் பத்தாம் வகுப்பில் மூன்று பாடத்தில் தோல்வி அடைந்து படிப்புக்கு கும்பிடு போட்டு தந்தையின் விவசாயத் தொழிலுக்கு பக்க பலமாய் சேர்ந்து விட்டான்
Advertisement
மோட்டார் மெக்கானிக் படித்து முடித்த சங்கரன் மயிலாடுதுறையில் உள்ள
பட்டமங்களம் அருகில் முல்லை தெருவில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் தொழில் கற்றுக் கொள்ள சென்றான் (படிப்பறிவு வேறு… தொழில் அறிவு வேறு )
நாட்கள் இப்படியே செல்ல சங்கரனின் முதல் தங்கை செந்தாமரைக்கு திருமணம் முடிந்தது அடுத்து சங்கரனின் அண்ணன் பரமசிவத்திற்கு சொந்தத்திலே பெண் தகைந்தது.
Advertisement
தொழில் ஆர்வம் சங்கரனுக்கு அதிகம் என்பதால் இழுத்து போட்டு எல்லா வேலையும் செய்வான் .தொழில் கற்றுக் கொடுத்த மணவாளனுக்கு சங்கரனை மிகவும் பிடிக்கும்.
சங்கரனின் நேர்மை, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒழுக்கம்,தொழில் ஆர்வம், ஓடாத மெஷினையும் ஓட வைக்கும் அந்த புத்திக் கூர்மை…. மணவாளன் அடிக்கடி சொல்வதுண்டு உன் திறமைக்கு நீ மிகப்பெரிய ஆளாய் வருவாய் என்று…
மணவாளனின் தங்கை தமயந்தி அடிக்கடி மெக்கானிக் ஷாப்பிற்கு அண்ணனுக்கு சாப்பாடு கொண்டு வருவாள்… திருகு சொம்பில் டீ கொண்டு வருவாள்… சுட சுட வீட்டில் செய்யும் பலகாரங்களை eகொண்டு வருவாள்.மெக்கானிக் ஷாப்பிற்கு அடுத்த தெருவில் அவர்கள் வீடு.
கண்ணுக்கு லட்சணமாய் சாந்தமாய் இருக்கும் தமயந்தியை அவ்வளவு பிடித்து போனது சங்கரனுக்கு.
தமயந்தியும் எப்போதாவது அவனை பார்ப்பாள்… அந்த பார்வையில் எதுவும் வெளிப்படையாய் இருக்காது. ஆனால் சங்கரன் அவளை விழுங்குவது போல் பார்த்து வைப்பான்.
அவளுக்கு தெரியும் சங்கரனின் திறமை பற்றி. வீட்டில் வாய் ஓயாது அவள் அண்ணன் சங்கரன் புராணம் பாடுவானே… நம்ம மெக்கானிக் ஷாப்பே சங்கரனை நம்பி தான் இருக்கு என்பான்.
ஒர்க் ஷாப்பில் வேலை பார்ப்பது போக வீட்டில் இருந்தும் அக்கம் பக்கத்து மனிதர்கள் அவனை தேடி வந்தால் வேலை செய்து கொடுப்பான். அதிலும் அவனுக்கு கணிசமான வருவாய் வந்து கொண்டிருந்தது.
பரமசிவனுக்கு விவசாயம் தான் தொழில் அல்லவா… அவன் சேற்றில் உருண்டு புரண்டு சொற்பமாய் சம்பாதிக்க… அவனை விட நான்கு வயது இளையவன் நன்றாய் சாம்பாதிக்கிறானே என்று உள்ளுக்குள் குமைந்து போவாள் அண்ணி ஜெயலட்சுமி.
இத்தனைக்கும் தான் சம்பாதிக்கும் பணம் ஒத்த பைசாவை கூட தனக்கென்று எடுத்துக் கொள்ள மாட்டான் சங்கரன். மொத்தமாய் தந்தை ஆதிமூலத்திடம் கொடுத்து விடுவான்.
சங்கரனின் வருவாய் அந்த குடும்பத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துக் கொண்டிருந்தது என்பதை அனைவருமே அறிவர்.
“—————–“
இப்படியாய் நாட்கள் செல்ல…சங்கரனின் இரண்டாவது தங்கை
கலாவதிக்கு மாப்பிள்ளை தேட… மாப்பிள்ளை வீட்டாருக்கு கலாவதியோடு சேர்ந்து சங்கரனையும் பிடித்து விட்டது.
ஆம் அவர்கள் வீட்டில் திருமண வயதில் இருக்கும் அவர்கள் பெண்ணுக்கு சங்கரனை மாப்பிள்ளை ஆக கேட்டார்கள் அதாவது பெண் கொடுத்து பெண் எடுக்க விரும்பினார்கள்.
கலாவதிக்கு மாப்பிள்ளையை மிகவும் பிடித்து விட்டது… சினிமா ஸ்டார் கணக்காக இருப்பதாக எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.
தனக்கு இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லை என்று வெளிப்படையாக கூறிவிட்டான் சங்கரன்.
ஒரே வீட்டில் பெண் எடுத்து பெண் கொடுப்பது சரியாக வராது என்று மழுப்பி பார்த்தான்.
மாப்பிள்ளை நல்ல வசதி, அழகு இதைவிட வேறெங்கு தேட முடியும் என்று சங்கரனின் தந்தை
ஆதிமூலம் விடாப்பிடியாய் அவனை சமாதானம் செய்ய முயன்றார்.
வேறு வழியே இல்லாமல் தனக்குத் தமயந்தியை பிடித்திருப்பதை வெளிப்படையாக கூறிவிட்டான் சங்கரன்.
அவன் கூறிய பதில் யாருக்கும் உவப்பாய் இல்லை. மகனின் பிடி கடைசி வரை தன் கையில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஆதிமூலம்.
அவன் விருப்பத்திற்கு ஒரு பெண்ணை பார்த்து மணமுடித்து வந்தால் வந்த பெண் குடும்பத்தை பிரித்துக் கொண்டு சென்று விட்டால் இந்த குடும்பத்தின் கதி என்ன?
ஒட்டுமொத்த குடும்பமும் சங்கரனுக்கு எதிராகவே இருந்தது…
கலாவதிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. உடன்பிறந்த என் வாழ்வை பற்றி கவலைப்படாமல் அவனுக்கு பிடித்த பெண்ணை பற்றி யோசிக்கிறானே… அவன் சுயநலவாதி என்ற வெறுப்பு அவளுக்கு.
அண்ணி ஜெயலட்சுமிக்கு பற்றிக் கொண்டு எரிந்தது. கை நிறைய சம்பாதிக்கிறான் எவளோ வந்து அனுபவிக்கப் போகிறாள்… கொழுந்தன் கற்பக விருட்சம் அவன் கைநழுவி போய்விட்டால் இந்தக் குடும்பத்திற்கு ஏது பலம்…?
சங்கரன் தன் நிலையில் இருந்து எள்ளளவும் இறங்கவில்லை. வீட்டில் சூழ்நிலை சரியில்லை என்று உணர்ந்தவன் தன் விருப்பத்தை நேரடியாக தமயந்தியிடம் கூறிவிட்டான்.
அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை… எதுவா இருந்தாலும் வீட்டில் பேசிக்கோங்க என்றாள்.
நான் வீட்டில் பேசுவது இருக்கட்டும் முதலில் உனக்கு என்னை பிடித்திருக்கிறதா இல்லையா அதை சொல்… நீ சொல்லும் பதிலில் தான் நான் உன் வீட்டில் வந்து பேச முடியும்.
பேசா மடந்தையாய் அமைதியாய் தலை குனிந்து நின்றாள் தமயந்தி.
தமையா எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்… நாலு வருஷமா உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன்… நீ எனக்கு மனைவியாக வந்தால் என் வாழ்க்கை நல்லா இருக்கும் என்ற எண்ணம் என் மனதில் எப்போதோ பதிந்து விட்டது .
நீங்க அண்ணனிடம் பேசுங்க என்று நகரப் போனவளின் கரம் பற்றியவன் எனக்கு பதில் சொல்லிட்டு போ என்றான்..
ஏக்கமும் கலக்கமுமாய் தன்னையே ஆவலாய் பார்க்கும் அவன் விழிகளை கண்டவள் “பிடித்திருக்கு” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
“———–“
அடுத்து திடமான மனதுடன் மணவாளனிடம் பெண் கேட்டான் சங்கரன்.
சங்கரன் தன் தங்கையை மணக்க கேட்டது மணவாளனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனாலும் அவன் வீட்டு மனிதர்களுக்கு விருப்பம் இல்லையே…?
சங்கரா நீ ரொம்ப நல்லவன் நேர்மையானவன் உனக்கு என் தங்கையை கொடுப்பதில் எனக்கு முழு சம்மதம்.ஆனால் உன் வீட்டு மனிதர்கள் மனப்பூர்வமாய் வந்து பெண் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டான்.
தமயந்தி பெற்றோருக்கு வருத்தம் தான். அப்படி என்ன நம்ம பொண்ணுக்கு கிராக்கி இல்லை அந்த பையன் ஒசத்தி. நம் பெண்ணை விரும்பாத அந்த வீட்டில் தான் கொடுக்க வேண்டுமா…?
மணவாளனுக்கு தங்கையின் விருப்பம் புரிந்து விட்டதால் பெற்றோரை சமாதானம் செய்தான்.
அதுக்கு இல்லப்பா வேண்டாத குடும்பத்தில் மருமகளாய் போய் ஏன் கஷ்டப்படணும்? தமயந்தியின் அம்மா சுந்தராம்பாளுக்கு துளி கூட விருப்பம் இல்லை.
அதெல்லாம் எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை… நான் சமாளிச்சுக்குவேன் என்ற மகளை புதிதாய் பார்த்தார் அவளின் தாய்.
“——————–“
வீட்டில் யாரும் சங்கரனுடன் முகம் கொடுத்து பேசுவது இல்லை… எந்தெந்த வகையிலோ தங்கள் விருப்பமின்மையை தெரிய படுத்தினர். அவனும் மசிவதாய் இல்லை.
நான் எனக்கென்று எதுவும் ஆசைப்பட்டதிலை நான் ஆசைப்பட்டு கேட்டது தமயந்தி தான். அவ ரொம்ப நல்ல பொண்ணு.. நம்ம குடும்பத்தை அனுசரித்து நடந்துக்குவா… விடாது வாதிட்டான் சங்கரன்.
இப்படியே நாட்கள் செல்ல… கலாவதிக்கு கிராம நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஒரு வரன் வந்தது.
மாப்பிள்ளை மாநிறம் தான். குற்றம் குறை சொல்லி விட முடியாதபடி நல்ல குடும்பம்.
கலாவதிக்கு தான் மனம் நிறையவில்லை. சிவப்பாய் அழகாய் வந்த மாப்பிள்ளையை ஒதுக்கி விட்டு இந்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட சொல்கிறார்களே…
இதோ பாரு கலா மாப்பிள்ளை பற்றி நல்லா விசாரிச்சிட்டேன் அருமையான பையன்.. தோப்பு துறவுன்னு சொத்து சுகமும் இருக்கு அரசாங்க வேலையும் கையில் இருக்கு இதை விட வேற என்ன வேணும்? தங்கையை சமாதானப்படுத்த வந்த சங்கரனை முகத்தில் அடித்தார் போல் பேசி விரட்டினாள் கலாவதி.
என் வாழ்க்கையைப் பற்றி நீ பேச வேண்டாம்… ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேண்டாம் உன் வேலையை பாரு…! இவ்வளவு நாள் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டாள் கலா.
எது எப்படியோ கலாவதி திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.
இப்போதும் தமயந்தியை மருமகளாக ஏற்க சங்கரனின் குடும்பம் விரும்பவில்லை.
தமயந்தி தவிர வேறு எந்த பெண்ணும் வேண்டாம்… உங்களை மீறி நான் திருமணம் செய்யப் போவதில்லை. இப்படியே இருந்து விடுகிறேன் என்னை விட்டு விடுங்கள்… அழுத்தம் திருத்தமாய் கூறிவிட்ட மகனை எதுவும் செய்ய முடியவில்லை பெற்றவர்களால்.
சங்கரனின் அமைதியும் அழுத்தமும் பெற்றவர்களை அச்சுறுத்தியது… சங்கரனுக்கு இருபத்தியேழு வயது முடியப்போகிறது.வேறு வழியின்றி தமயந்தியை மருமகளாக ஏற்க வேண்டிய நிலை வந்தது.
வேறு இடத்தில் பெண் பார்த்து இருந்தால் எக்கச்சக்கமாய் நகையும் சீரும் கேட்டிருக்கலாம்… சாதாரண குடும்பத்தில் மகன் பெண்ணை தேடிக் கொண்டானே என்ற கவலை பெற்றவர்களுக்கு…
தமயந்தி வீட்டில் தங்களால் இயன்றவரை சீர் செய்தனர் ஆனால் அது நிறைவை கொடுக்கவில்லை சங்கரன் குடும்பத்தாருக்கு.
வேண்டா வெறுப்பாய் தமயந்தி சங்கர நாராயணன் திருமணம் நடந்து முடிந்தது.
முதல் இரவு அன்றே தன் குடும்பத்தை பற்றி தெளிவு படுத்தி விட்டான் சங்கரன்.
அண்ணன் விவசாயி… சொத்து சுகம் தான் இருக்கிறதே தவிர அதிலிருந்து பெரிதாய் வருமானம் இல்லை. ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரு குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கும் அண்ணனை அரவணைக்கும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று தெளிவு படுத்தினான்
தங்கைகளுக்கு சீர் செய்வதும் வயதான பெற்றோரை பராமரிப்பதும் நம் கடமை என்றும் கூறிவிட்டான்.
தமயா இது நம் குடும்பம். இந்த வீட்டில் உள்ளவர்கள் நம் மனிதர்கள்… எனக்காக அனைவரையும் அனுசரித்துக்கோ ! உன்னை குறைவின்றி பார்த்துக் கொள்வது என் பொறுப்பு என்று மனைவியின் கரம் பற்றினான்.
தன் கணவன் குடும்பத்தின் மீது இவ்வளவு பற்றுடன் பொறுப்பாக பேசுவது கண்டு தமயந்திக்கு மிகுந்த மகிழ்ச்சி.
அவளுக்கும் முன்பே தெரியும் இந்த வீட்டில் தன்னை விரும்பி மருமகளாக ஏற்கவில்லை. தனக்கு இங்கே மிகுந்த சங்கடங்கள் நிகழும் என்று.
தன்னை விரும்பி ஏற்றுக் கொண்டவனுக்காக தான் அனுசரித்து செல்வதில் தவறில்லை என்று தனக்கு தானே கற்பிதம் செய்து கொண்டாள்.
புது பெண்ணாக இந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைத்திருக்கிறாளே.. அடிப்படை மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இங்கு அவளுக்கு செட்டாக சில நாட்கள் ஆகும் என்றெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஜெயலட்சுமி தன் ஓரகத்தி புத்தியை அடுத்த நாளே காட்டத் தொடங்கி விட்டாள்.
இந்த பாருத்த இவ்வளவு நாள் ஒத்தையா எல்லா வேலையும் செய்தேன் இனியும் நான் அடுப்படியே கதியா கிடக்க முடியாது… உன் ஆசை மருமவளை இன்னைக்கு சோறாக்க சொல்லு என்று சிலுப்பிவிட்டு மீண்டும் போய் படுத்துக்கொண்டாள் ஜெயலட்சுமி.
அண்ணியின் பேச்சு சங்கரனுக்கு வருத்தமாக இருந்தது என்றாலும் வேறு வழி இல்லாமல் தமயந்தி அடுப்படிக்குள் நுழைந்து சமைக்க தொடங்கினாள்.
“————–“
மாமியார் சுசிலாவை விட தமயந்தியை நாவென்னும் கொடுக்கால் அதிகம் கொட்டியது ஜெயலட்சுமி தான்.
அவளுக்கு தமயந்தியை கண்டாலே எரிந்தது.
கண்ணுக்கு அழகாய் இருப்பதாலா? பாந்தமாய் வீட்டு வேலை செய்வதாளா? எல்லாவற்றுக்கும் மேலாக சம்பாதிப்பவனுக்கு மனைவியாக வந்து சேர்ந்ததாளா… ஏதோ ஒன்று…!
அந்தக் குடும்பத்தோடு தன்னை பொருத்திக் கொள்ள தமயந்தி பலவகையில் முயன்று கொண்டு தான் இருக்கிறாள்… யாரும் அவளை தங்கள் குடும்பத்தில் ஒருவளாக ஏற்றுக் கொள்ளாதது தான் வேதனை.
ஜெயலட்சுமியின் குழந்தைகள் சித்தி என்று ஆசையாய் ஓடினாள் இழுத்து பிடித்து நறுக்கென்று கொட்டினாள்.
சித்தியாமில்ல சித்தி.. என் கூட ஒட்டிட்டு பிறந்தாளா அவ ? ஜெயலட்சுமியின் அனல் கக்கும் பேச்சு அவளுக்கு வேதனையை கொடுத்தாலும் அவள் வெளியில் காட்டிக் கொண்டதில்லை.
போதா குறைக்கு பிறந்த வீட்டிற்கு நாள் கிழமைகளில் வரும் கலா பார்வையாலே பொசுக்கினாள் தமயந்தியை.
இந்த அழகிக்கு மயங்கி தான் அப்படி துள்ளினான் என்ற எரிச்சல் அவளுக்கு.
அந்த குடும்பத்தில் அவள் வாழ்வதே சங்கரன் என்று ஒற்றை மனிதனுக்காக தான்… தன்னை எதிரியாய் பாவிக்கும் அந்த மனிதர்களிடம் அவளும் அடங்கித்தான் சென்றாள். சங்கரனுக்காக.
சங்கரன் மனைவியை தேவதையாய் தாங்கினான்.
“—————–
திருமணம் ஆகிவிட்டது அடுத்து குழந்தைகுட்டி என்று வந்து விடும்… வருவாயை இன்னும் பெருக்க வேண்டும். எவ்வளவு நாளைக்கு பிறரிடம் வேலை பார்ப்பது?
மணவாளன் தங்கையின் கணவனாகிப் போன சங்கரனுக்கு இப்போது சம்பளம் இன்னும் கூட்டி தான் கொடுத்தான்.
ஆனாலும் சாதிக்க சம்பாதிக்க வேண்டிய வயது இது தான். தனக்கென்று தனியாய் ஒரு
ஒர்க் ஷாப் வைக்க விரும்பினான் சங்கரன்.
இடம் பார்த்து அட்வான்ஸ் கொடுக்க… தேவையான கருவிகள் வாங்க பணம் தேவை பட்டது.
என்னிடம் ஏது பணம் என்று கையை விரித்து விட்டார் ஆதிமூலம்.
17 வயதிலிருந்து சம்பாதித்து கொடுத்த மகன் தன் தொழிலுக்கு என்று பணம் கேட்க இல்லை என்று கையை விரித்து விட்டார் ஆதிமூலம்.
ரெண்டு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம்…! ரெண்டு பையனுக்கு செலவு பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கோம்… இவ்வளவு செலவிற்கும் பணம் எங்கிருந்து கொட்டுதாம்… வெடுக்கென்று பேசிய தந்தையை புதிதாய் பார்த்தான் சங்கரன்.
கால் காணியில் கத்தரி வெண்டையும் கால் காணியில் கோழி கொண்டை சாமந்தியும் பயிரிட்டு தனியே சேமித்துக் கொள்ளும் அண்ணனையும் அவனுக்குத் தெரியும்.
தினமும் எட்டிலிருந்து பத்து லிட்டர் பால் கறந்து ஸ்டோரில் ஊற்றும் பால் பணத்தை அம்மா என்ன செய்கிறார் என்றும் அவனுக்கு தெரியும்.
———–தொடரும் ——–
error: Content is protected !!