Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக💞42

தம்பி இந்த நேரம் மண் மனை வாங்க கூடாதுய்யா…. பூமாலை மகனுக்கு புரிய வைக்க தொடங்கினார்.

ப்ப்பா நம்ம சின்ன தாத்தா சொத்து…. நம்ம நிலத்தோட சேர்ந்த மாதிரி வருது. ஒரே வரப்பு உள்ள நிலம். அடுத்தவங்க வாங்கிட்டா நமக்கு கஷ்டம்.

பொண்டாட்டி கர்ப்பமா இருக்கப்போ இதெல்லாம் செய்யக் கூடாது.

சரி…. உங்க பெயரில் தான் எழுதப் போறேன்.



Advertisement

என்னப்பா சொல்ற?

நான் தானே வாங்க கூடாது நீங்க வாங்கலாமே?

அது எப்படி? நம்ம மருமக பொண்ணு உண்டாகி இருக்கிற நேரத்துல நான் வாங்குனா என்ன நீ வாங்குனா என்ன? எல்லாம் ஒன்னு தான்.

Advertisement

அப்பா இப்போதைக்கு அட்வான்ஸ் கொடுத்து நிறுத்தி வைக்க முடியாது அவங்களுக்கு உடனடியா பணம் தேவைப்படுது அவங்க பொண்ண மெடிக்கல் சேர்க்க பணத்துக்கு அலைஞ்சிகிட்டு இருக்காங்க.

Advertisement

நாம ஒன்னும் கொள்ளை அடிச்சு சொத்து வாங்கல…. கடவுள் கண்டிப்பா பாதகமா எதையும் நடத்த மாட்டார். உங்க பேரில் வாங்கி எழுதுறேன் குழந்தை பிறந்த பிறகு மாத்திக்கலாம்.

நீ என் பெயரில் வாங்கி எழுதினா உங்க அண்ணன் காரனுங்க நம்பனுமே! நான் சம்பாதித்து வாங்கினதா தானே நினைப்பாங்க…? மூனு பேருக்கும் பங்கு இருக்குன்னு வந்து நின்னுடுவானுங்க. அப்படிப்பட்ட ஆளுங்க தான் அவனுங்க. நிதர்சனத்தை பேசினார் பூமாலை.

அப்பா நான் முதலில் அண்ணன் கிட்ட பேசிட்டு தான் அட்வான்ஸ் கொடுப்பேன். பத்திரம் எப்படி எழுதணும்னு எனக்கு தெரியும்!

Advertisement

நீ எதை செய்தாலும் யோசிச்சு தான் செய்வ இருந்தாலும் ஜாக்கிரதையாக இருப்பா.

பணத்துக்கு என்ன பண்ண போற?

சேவிங்ஸ் கொஞ்சம் வச்சிருக்கேன், லோன் கொஞ்சம் ஏற்பாடு பண்ணி இருக்கேன் மீதி பணம் கொஞ்சம் புரட்ட வேண்டி இருக்கு. சுபி நகையை கொஞ்சம் அடகு வைக்கலாம்னு இருக்கேன்.

வேண்டாம் மன்னர்,வாயா வயிறா இருக்குற பிள்ளையோட நகையை அடக்கி வைக்கிறது சரியா படல, அவங்க பெத்தவங்க என்ன நினைப்பாங்க? என் செயின், வளையல், அட்டிகை எல்லாம் சும்மா தானே இருக்கு அதை வைத்துக்கோ என்றார் பாப்பாத்தி.

வேண்டாம்மா உங்க நகை வாங்கி அடகு வச்சு நான் சொத்து வாங்கி நாளைக்கு அது ஒரு பெரிய சொல்லா வந்து நிற்கும். திட்ட வட்டமாய் மறுத்தான் மன்னர்.

உண்மைதானே அண்ணன்கள் சொல்லிக் காட்டாவிட்டாலும் அண்ணிகள் வரிந்து கட்டிக்கொண்டு இதை ஒரு பெரிய பேசு பொருளாக மாற்றி விடுவார்களே…. சின்ன மகனுக்கு மட்டும் அக்கறை காட்டுவதாக பிரச்சனை வெடிக்கும்.

மன்னர் தான் எப்போதும் உஷாராச்சே….இப்போதும் அப்படியே செயல்பட்டான்.

“—————————–“

அண்ணன்கள் மூவருக்கும் கான்பரன்ஸ் கால் போட்டு பேசினான். தான் நிலம் வாங்கப் போவதையும் தந்தையின் பெயரில் தற்சமயம் எழுதப் போவதையும். லோன் ஏற்பாடு செய்திருப்பதையும், மனைவி நகைகளை அடகு வைப்பது வரை அனைத்தையும் கூறினான்.

அப்பா தான் பணம் வச்சிருக்காரே அவரே வாங்கட்டுமே என்றான் ஜெயராமன்…. அப்பா வாங்கினால் நான்கில் ஒரு பங்கு தனக்கு சேருமே என்ற உஷாரான புத்தி தான்.

இல்லண்ணே இது நான் வாங்கின நிலத்துக்கு பக்கத்து நிலம் ஒரே வரப்பு. நான் வாங்கினா எனக்கு சேர்ந்த மாதிரி வரும் அதை நாலு பங்கா போட்டா சரி வராது.

நம்ம ரங்கசாமி செட்டியார் நிலம் விக்கிற மாதிரி ஒரு பேச்சு போயிட்டு இருக்கு அது நாலு ஏக்கர் ஒரே சதுரமா அமைஞ்சிருக்கு அதை அப்பா வாங்கட்டும் அப்ப பார்த்துக்கலாம் என்றான்.

யாரும் மறுபேச்சு பேசும்படி மன்னரின் பேச்சு அமையாது. எல்லோரும் தலையாட்டினர். வேறு வழி!

உங்க தம்பி இருக்கானே எமகாதக பய உங்க அம்மா பெத்துச்சா செஞ்சுச்சா கடவுளுக்கு தான் தெரியும்! என்று வாயில் கை வைத்தாள் சங்கீதா.

சிரித்து விட்டான் ஜெயராமன்.

இப்போ என்ன பெரிய ஜோக் சொல்லிட்டேன் இளிச்சுகிட்டு உக்காந்திருக்கீங்க? மூத்தது மோழை,இளையது காளைன்னு சும்மாவா சொல்றாங்க…! கடுகடுவென்று பொரிந்து விட்டே போனாள் சங்கீதா.

“—————————“

சுப்பு அடுத்த மாசம் வளைகாப்பு இப்போ உன்னோட நகைகளை அடகு வைக்கிற சூழ்நிலை. உனக்கு கஷ்டமா இருக்கா? வருத்தமாய் கேட்டான்.

அப்படிலாம் இல்லை என்று உடனடியாக மறுத்தாள். அதிகபட்சம் ஆறு மாசத்துக்குள் மீட்டுக் கொடுத்து விடுவேன். எல்லா நகையும் வைக்க வேண்டாம்.வளையல்,டாலர் செயின்,நெக்லஸ், பிரேஸ்லெட் அது போதும்.

சரி ஆரம் இன்னொரு நெக்லஸ் கூட இருக்கு வேணும்னா கொண்டு போய் வையுங்க! டெய்லி போட்டுக்கிட்டேவா இருக்கேன்? என்று மனைவி பேசியது அவனை அவ்வளவாய் வியப்பில் ஆழ்த்தியது.

இதுவே உன்கிட்ட கேட்க எனக்கு சங்கடமா இருக்கு சுப்பு. வெளியில் கடன் வாங்கிடுவேன். இரண்டு வட்டிக்கு வாங்கினால் நமக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

ஏற்கனவே வீடு கட்ட பர்சனல் லோன் போட்டது இன்னும் முடியல…. இப்போ மேற்கொண்டு லோன் போட்டு இருக்கேன்.ஒரு ஆறு மாசத்துக்குள் மேனேஜ் பண்ணிட்டா ஃபர்ஸ்ட் லோன் கம்ப்ளீட் ஆயிடும். அதுக்கு மேல் டாப் அப் வாங்கி உன் நகையை மீட்டுக் கொடுத்துடுவேன்.

இந்த விளக்கம் எல்லாம் நான் உங்களை கேட்டேனா? நீங்க யோசிக்காம எதையும் செய்து விடுவீங்களா என்ன? சலுகையாய் கணவனின் தோள் சாய்ந்தாள்.

நான் வேணும்னா எங்க அண்ணாவை கேட்கவா? அண்ணாக்கு பெருசா எந்த கமிட்மெண்டும் இல்லை.

வேண்டாம் சுப்பு, இது ஒரு பெரிய தொகையும் இல்லை, இதுக்காக போய் அடுத்தவங்களை தொல்லை பண்ணவும் கூடாது அது சரியா வராது…. அவங்களுக்கு கமிட்மெண்ட் இல்லைன்னு நாம எப்படி சொல்ல முடியும்?

எப்போதும் சொந்த பந்தம் சுமூகமா நீடிக்கணும்னா உறவுகளுக்குள் கடன் வாங்குவதை தவிர்க்கணும் இது என்னோட பாலிசி என்றான்.

கணவன் பேச்சை கேட்டு குலுங்கி சிரித்தாள் சுபி.

இப்போ எதுக்கு சிரிக்கிற? புரியாமல் விழித்தான்.

இல்ல நமக்கு பையன் பிறந்து அப்படியே உங்களோட ஜெராக்ஸா இருந்தா எப்படி இருக்கும்னு யோசித்தேன் சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடியலை.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு மீண்டும் சிரித்தாள்.

கலாய்க்கிறீயா கழுத….காதை பிடித்து செல்லமாய் திருகினான்.

அந்த நிலத்தை உன் பெயரில் வாங்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை சுப்பு. ஆனா இப்போ மண்,மனை கிரயம் எதுவும் செய்யக்கூடாதாம்…. மிகவும் வருத்தம் கொண்டான்.

அதனால என்னங்க மாமா பேரில் இருந்தா என்ன?நம்ம பெயரில் இருந்தா என்ன?

அந்த நிலம் வாங்கி பூந்தோட்டம் வளர்க்கணும். அது என்னோட ரொம்ப நாள் ஆசை என்றான் செல்லமாய் மனைவியை கட்டிக்கொண்டு.

அப்படியே அங்கே சின்னதா ஒரு வீடு கட்டிட்டா பக்கத்துல பூந்தோட்டமும் இருக்கும் காய்கறி தோட்டமும் இருக்கும் மீண்டும் கிளுக்கி சிரித்தாள் சுபி.

அந்த ஐடியாவும் தான் இருக்கு உன்கிட்ட சொன்னா கலாய்ப்பியே அது தான் சொல்லலை…. அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

பரவாயில்லையே வரவர நான் ஜாடிக்கேத்த மூடியா மாறிக்கிட்டே வரேன் போல இருக்கே…. செல்லமாய் கணவனின் கன்னம் கடித்தாள்.

ஆமாம் இந்த மன்னர் மனசில் ஓடுவதெல்லாம் இந்த மகாராணிக்கு புரியுதுன்னா ஜாடிக்கேத்த மூடியா மாறிட்டேன்னு தான் அர்த்தம்! மெச்சுத்தலுடன் நெற்றியில் இதழ் பதித்தான்.

பூந்தோட்டம் வளர்த்து அந்த பூவைதினமும் பறித்து என் பொண்ணுக்கு வச்சு அழகு பார்க்கணும்! சொல்லும்போதே அப்படி ஒரு ஜொலிப்பு அவன் கண்களில்.

ஏன் நான் பூ வச்சிக்க மாட்டேனா?

கிழவிக்கு என்ன பூ வேண்டிகிடக்கு….. உதடு கடித்து சிரித்தான்.

எது…. கிழவியா? அவன் முடியை பிடித்து மாவாட்டினாள்.

“——————————“

ஒரு ஏக்கர் 14 லட்சமா? இதெல்லாம் ரொம்ப அதிகம் என்று அக்கம் பக்கத்தில் பேசிக்கொண்டனர்.

மன்னர் விடாப்பிடியாய் அதை வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.

பத்திரப்பதிவு செய்யும்போதே பூமாலை பெயரில் கிரயம் எழுதி பூமாலைக்கு பிறகு அந்த நிலம் அவரது இளைய மகன் மன்னர் மன்னனை சென்று சேர வேண்டும் என்று குறிப்பிட்டே எழுதி பத்திரப்பதிவு செய்திருந்தான்.

சொத்திற்கு உரிமை கொண்டாடி மற்ற மூன்று வாரிசுகள் வர முடியாது,அதேசமயம் சொத்து பிரிக்கும் போது பாக அட்டவணையில் இந்த நிலத்தை காட்ட வேண்டிய அவசியமும் வராது,அப்போதைக்கு பத்திர செலவு இருக்காது. எல்லாவற்றையும் யோசித்து திட்டமிட்டு மன்னர் இப்படி கிரையம் முடித்தான்.

பூமாலை உன் மவன் கில்லாடிக்கு கில்லாடி என்று பத்திரப்பதிவிற்கு சாட்சி கையெழுத்து போட வந்தவர்கள் சிரித்து விட்டனர்.

இளைய மருமகன் நிலம் வாங்கியதில் பெரிய சந்தோஷம் பூவராகனுக்கு.

நான் ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்க கூடாது சரியா? கணவன் மடியில் சாய்ந்து சலுகையாய் பேசிக்கொண்டிருந்தாள் சுபி.

தப்பா நினைக்கிற மாதிரி கேட்க போற…. சரி கேட்கணும்னு முடிவு பண்ணிட்ட கேட்டுவிடு! சிரிப்புடன் தலைக்கோதி விரல் பற்றி முத்தமிட்டான்.

கிராமத்திலேயே சொத்து சுகம் வாங்கிட்டு இருக்கீங்களே கடைசி வரை நம்ம இங்கேயே செட்டில் ஆகிடுவோமா? உள்ளுக்குள் அவ்வளவு பயம் அவளுக்கு.கடைசி வரை கிராமத்தில் இருந்து விடுவோமோ என்ற கவலை.

இப்போ எல்லாம் நீ என்னை சரியா புரிஞ்சுகிட்டு வரியே எங்கே என் மனசுக்குள் என்ன ஓடுது நீயே சொல்லு பார்ப்போம்! அவள் பக்கமே கேள்வியை திருப்பி விட்டான்.

குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு டவுன் பக்கம் போயிடலாம்னு உங்களுக்கு ஐடியா இருக்குன்னு நினைக்கிறேன். கணவன் முகத்தை ஆர்வமாய் பார்த்தாள்.

அடியே என் சமத்து பொண்டாட்டி என் சக்கரக்கட்டி வாரி அணைத்து முத்தமிட்டான்.

கணவனின் கொஞ்சலில் சிலிர்த்து விட்டாள்.

கரெக்டா சொல்லிட்டேனா? நம்ப முடியாமல் வெட்கத்துடன் பார்த்தாள்.

ஆமா என் எண்ணத்தை ரொம்ப சரியா சொல்லிட்ட…. ஒரு குழந்தை இல்லை இரண்டு குழந்தை பிறந்து கொஞ்சம் வளர்ந்த பிறகு படிப்புக்காக வேண்டி நம்ம கள்ளக்குறிச்சியில் செட்டில் ஆகிடுவோம்.

உங்களுக்கு வேற ஊரில் ட்ரான்ஸ்பர் ஆகிட்டா சார் என்ன பண்ணுவீங்க?

அதுக்குள்ள கள்ளக்குறிச்சியில் வீடு வாங்கிடுவேன்….. அம்மா அப்பா அடிக்கடி வந்து உன்னை பார்த்துக்குவாங்க.

சென்னை சைடு ட்ரான்ஸ்ஃபர் கிடைத்தால் போய்விடலாமே அங்கே பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கிடைக்குமே…

அங்கே ஷாபிங் வேணா போகலாம், அமைதியா வாழ சரியா இருக்காது. அந்த நசநசப்பும், நெரிசலும் இரைச்சலும் கிராமத்தில் நிம்மதியா வாழற நமக்கு சரியா வருமா?

அதுமடுமில்ல அங்கே விலைவாசி அதிகம். நகரத்தில் நாகரீகமாக

வாழறோங்கிற பேர்ல பொய்யான ஒரு வாழ்க்கை எல்லாம் நமக்கு வேண்டாம். இங்கே நல்ல படிப்பு கிடைக்காதுன்னு யார் சொன்னா? கள்ளக்குறிச்சியை சுற்றி எத்தனை பெஸ்ட் ஸ்கூல்ஸ் இருக்கு தெரியுமா?

ஊர் ஊரா மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு குடும்பத்தை இழுத்துகிட்டு அலையறது எனக்கு பிடிக்காது.

கள்ளக்குறிச்சியில் தான் செட்டில் ஆகறோம். அதுவும் என் ரிட்டையர்டுமென்ட் வரைக்கும். வேலை முடிந்த பிறகு கடைசியில் முடியனூருக்கே வந்துடுவோம். நம்மோட கடைசி காலம் நம்ம சொந்த ஊரில் தான். அது தான் நிம்மதி, ஆத்ம திருப்தி.

கணவனின் தெளிவான பேச்சு அவளை அமைதியாக செய்தது. இப்போதெல்லாம் பதிலுக்கு பதில் அவள் வரிந்து பேசுவதில்லை. ஏன் சொல்கிறான் என்று யோசிக்க தொடங்குகிறாள் அந்த அளவிற்கு பக்குவம் வந்திருக்கிறது.

“———————–“

இதோ வீட்டு வாசலில் பெரியதாய் பந்தல் போட்டு வாழைமரம் தோரணம் கட்டி சுப்ரஜாவின் வளைகாப்பு நிகழ்ச்சி இனிதே தொடங்குகிறது.

எல்லா குடும்பமும் வந்து சேர்ந்து விட்டது எழிலரசன் தீபாவை தவிர….

ஆம் தீபாவிற்கு நான் தள்ளி போயிருக்கிறது. 60 நாள் கூட ஆகவில்லை தொலைதூரம் பிரயாணம் செய்யக் கூடாது என்று மருத்துவர் சொல்லிவிட்டதால் அவர்கள் வரவில்லை.

குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

மன்னருக்கு குழந்தை வரப் போற ராசி தீபா உண்டாகிட்டா என்று எல்லோரும் பேச கேட்க சுபிக்கு அவ்வளவு ஆனந்தம்.

பாப்பாத்திக்கு இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது. இறைவனுக்கு மனதில் அவ்வளவு நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

தன் கர்ப்பத்தை உறுதி செய்து முதலில் தீபா கூறியது சுப்ரஜாவிற்கு தான்.

ஐந்தாம் மாதம் பூ முடிக்கும் போதே அவ்வளவு ஆறுதல் வார்த்தை கூறியிருந்தாள் சுபி.

அக்கா நீங்க வேணா பாருங்க ஒரு வீட்டில் ஒரு குழந்தை வந்தால் கூடவே இன்னொரு குழந்தை வருமாம். எங்க அண்ணி உண்டான மூன்று மாசத்துக்குள் நான் உண்டாகிட்டேன். நீங்க பாருங்க என் வளைகாப்புக்குள்ள நீங்க நல்ல செய்தி சொல்ல போறீங்க!என்று அத்தனை பெரிய நம்பிக்கை நிறைந்த வார்த்தையை பேசி ஆறுதல் படுத்தி இருந்தாள்.

மருத்துவர்களின் வைத்தியம் பலித்ததோ…சுபியின் வார்த்தை பலித்ததோ,எது எப்படியோ தீபா கர்ப்பம் தரித்து விட்டாள்.

எழில் மட்டும் வளைகாப்பு விழாவிற்கு வருவதாக தகவல் சொன்னான்.

அண்ணியை தனியாக விட்டு விட்டு நீ வர வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டான் மன்னர்.

சங்கிக்கா எனக்கு ஒரு டவுட்டு…. ஜாங்கிரியை பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு முக்கியமான ரகசியத்தை கேட்டாள் அஞ்சலி.

அப்படி என்ன டவுட் உனக்கு? ரகசியமாய் கேட்டாள் சங்கீதா.

இந்த சுபி வயிறு இவ்வளவு பெருசா இருக்கே ஒருவேளை ட்வின்ஸா இருக்குமோ? மன்னாரு பய திருஷ்டி ஆகிடும்னு வெளியில் சொல்லாமல் ரகசியமா வச்சிருக்கானோ….?

அடி போடி அவன் பொண்டாட்டிக்கு திணிச்சு திணிச்சு ஊட்டி அப்படி வளர்த்து வெச்சிருக்கான். எப்படியும் குழந்தை நாலு கிலோ இருக்கும் பாரு.

நானும் ரெண்டு பெத்தேன் ஒன்னு கூட ரெண்டரை கிலோ கூட இல்லை எலி குட்டி கணக்கா கிடந்ததுங்க…. பெரு மூச்சு விட்டாள் சங்கீதா. என் பையன் மட்டும் என்னவாம் இரண்டே கால் கிலோ தான் இருந்தான் என்றாள் அஞ்சலி.

மிகச் சிறப்பாக சாஸ்திர சம்பிரதாயத்துடன் சுப்ரஜாவின் வளைகாப்பு நடந்தேறியது.

எல்லோரும் மகிழ்ச்சியில் இருக்க சுபியின் முகம் மட்டும் வாடிக்கிடந்தது.

கடந்த ஒரு வாரமாகவே அவள் அப்படித்தான் இருக்கிறாள்.

காரணம் பெரிது தான். நான் வளைகாப்பு முடிந்து சாஸ்திரத்துக்கு அம்மா வீட்டுக்கு போய் அடுத்த நாளே வந்து விடுவேன் என்று வம்படியாய் நிற்கிறாள்.

அடி வாங்குவ.நீ அம்மா வீட்டில் தான் இருக்கணும்! நான் வாரம் ஒருமுறை வந்து பார்ப்பேன் என்று எடுத்து கூறினான் மன்னர்.

அவனுக்கு புரியாமல் இல்லை மனைவி தன் அருகாமையை எப்போதும் தேடுகிறாள் என்று. ஆனால் மாமனார் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்க வேண்டும் அல்லவா? ஊர் உலக சம்பிரதாயம் என்று ஒன்று இருக்கிறதே….

நான் போக மாட்டேன் மாட்டேன் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கண்ணீரில் கரைந்தாள்.

ஏய் சுபி குட்டி,சுப்பம்மா என்னடா இது சின்ன பிள்ளை மாதிரி அடம்பிடிக்கிற…? நீ இங்கே இருக்கிறது எனக்கு பிரச்சனை இல்லை.மாமாவுக்கு அது எவ்வளவு கௌரவ குறைச்சல்னு உனக்கு புரியுதா?

நீங்க என்ன சொன்னாலும் நான் உங்களை விட்டு போக மாட்டேன் இறுக்கி அணைக்க முயன்றாள் வயிறு இடையூறாக இருந்தது.

இந்தப் பொண்ணு ஒரு நாள் சொன்னா “எங்கிருந்து இந்த ஆளை பிடிச்சீங்கன்னு!” அவளைப் போலவே சொல்லி காண்பித்தான்.

ஆமா இப்ப சொல்றேன் இந்த ஆளை பிடிச்சிருக்குன்னு…. இந்த ஆளை பார்க்காமல் இருக்க முடியாதுன்னு அவன் சட்டையில் முகத்தை தேய்த்தாள்.

குட்டிமா டாக்டர் கொடுத்த டியூ டேட் இன்னும் இருபது நாள் தான் .

குழந்தை பிறந்த உடனே கூட்டிட்டு வந்துட போறேன் என்னால் மட்டும் நீ இல்லாம இருக்க முடியுமா? என்னென்னவோ பேசி ஏகப்பட்ட சமாதானம் கூறி அவளை ஒரு வழியாய் சம்மதிக்க வைத்திருந்தான்.

கணவன் முகம் பார்க்க கூடாது என்று சாஸ்திரம் சொல்லி கையோடு சுப்ரஜாவை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டனர்.

அன்று இரவே அவ்வளவு மூச்சடைத்தது மன்னருக்கு…. எழுந்து எழுந்து அமர்ந்து விட்டான்.பொட்டு உறக்கமில்லை… தன்னில் பாதியாய் தன்னோடு நெருங்கி படுத்திருக்கும் தன் மறுபாதியை அவன் உள்ளம் தேடி ஏங்கியது.

அந்தப் பெண் எவ்வளவு ஏங்கி இருப்பாள் என்று அவனுக்கு இப்போது துல்லியமாய் புரிந்தது.

“———————–“

மறுநாள் காலை டிபன் முடித்த கையோடு தாயிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான் மாமியார் வீட்டுக்கு.

பாப்பாத்திக்கு மகன் துள்ளிக் கொண்டு கிளம்புவதை கண்டு ஒரே சிரிப்பு.

உடனடியாக மருமகளுக்கு போன் செய்து தகவலை சொல்லி விட்டார்.உன் கணவன் உன்னை பார்க்க பறந்து வந்து கொண்டிருக்கிறான் என்று.

சுப்ரஜா அண்ணன் மகளோடு ஐக்கியமாகி இருந்தாள். ஆம் சுகன்யாவிற்கு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகிவிட்டது.

குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை வாசலின் மீதே பதிந்திருந்தது.

நடக்கட்டும் நடக்கட்டும் ரொமான்ஸ் கூடிகிட்டே போகுதுப்பா…. கிண்டல் அடித்து சிரித்தாள் சுகன்யா.

போங்க அண்ணி எங்க அண்ணன் உங்களை கொஞ்சுவதை விடவா என் புருஷன் ரொமான்ஸ் பண்ணிட்டாரு….? முகவாயில் இடித்துக் கொண்டாள் வெட்கத்துடன்.

யாரு உங்க அண்ணன்… ரொமான்ஸ்…. பண்ணிட்டாலும்! எந்த கடையில் விற்கிறதுன்னு சொல்லு நாலு கிலோ வாங்கி கொடுக்கிறேன். அப்படியாவது உங்க நொண்ணனுக்கு ரொமான்ஸ் வருதான்னு பார்ப்போம்…. இப்போது சுகன்யா முகவாயை தோளில் இடித்துக் கொண்டு போனாள்.

மகளும், மருமகளும் பேசுவதை கேட்டு நவமணிக்கு அப்படி ஒரு சிரிப்பு.

மருமகன் வரப்போகிறான் என்று தெரிந்து அசைவம் சமைக்க தொடங்கிவிட்டார் நவமணி. கணவனின் வருகைக்காக காத்திருந்தாள் சுபி.

அண்ணி இப்போ எதுக்கு பாப்பாவை தூக்குறீங்க? இங்கேயே தூங்கட்டும்.

எதுக்கு? நீயும் உன் புருஷனும் கொஞ்சிக்கிட்டு இருக்கும்போது இவ சிணுங்குவா எதுக்கு தேவையில்லாத கரடியா என் குழந்தை…

அய்யோ…அண்ணி….. உங்களை…. வெட்கம் வெட்கமாய் வந்து சிவந்து தலை குனிந்தாள் சுபி.

“—————————-“

பூ பழம் இனிப்பு வாங்கி வந்தவன் பையை சோபா மீது வைத்தான். வாங்க மாப்பிள்ளை என்று நவமணி அழைத்தது அவனுக்கு எங்கே கேட்டது?

நேரே மனைவியின் அறைக்குள் புகுந்தான்.

லேசாக கண்ணயர்ந்தவள் அவன் வாசத்தில் எழுந்தமர்ந்து விட்டாள்.

சுப்பு என்று சிரிப்புடன் கட்டிக் கொண்டான்.

நீ இல்லாமல் இருக்க மாட்டேன் என்றவள் இயல்பாக இருக்கிறாள். குட்டி தேவதையை கண்டவுடனே அவள் வெகு இயல்பாகி விட்டிருந்தாள். அவன் தான் மனைவிக்கு ஏங்கி உறக்கம் தொலைத்து விழுந்தடித்து வந்து நிற்கிறான்.

என்ன சுப்பு கன்னம் எல்லாம் ஒட்டி போன மாதிரி இருக்கு? கன்னம் பற்றி கண்களாலே எக்ஸ்ரே எடுத்துக் கொண்டிருந்தான்.

யோவ் போலீசு…. சத்தம் போட்டு பேசி அசிங்கப்படுத்தாத…. யாரு காதுலேயாவது விழுந்துடப் போகுது.நேத்து மதியம் தான் வந்தேன் அதுக்குள்ள நாலு கிலோ குறைஞ்சுட்டேனா? அவன் தோளில் இடித்தாள்.

இருந்தாலும் அவன் பார்வையில் திருப்தி இல்லை.

என்ன அப்படி பார்க்கிற? சிரிப்புடன் கேட்டாள்.

கிளம்பு ஊருக்கு போகலாம் என்றான்.

அவள் சிரிப்புடன் முறைக்க…

என்னடி சிரிக்கிற? நான் நைட் தூங்கவே இல்லை.

நான் என் மாமியார் வீட்டுக்கு போயிட்டா உங்க மாமனாருக்கு அது எவ்வளவு கௌரவ குறைச்சல்னு உங்களுக்கு புரியுதா?

அடியேய்…. புலம்பி அமர்ந்து விட்டவனை கண்ணீருடன் இறுக்கி அணைத்து முத்தமிட்டாள்.

அவள் மட்டும் இரவு உறங்கினாளா என்ன?

————-தொடரும்——–

 ஹலோ நட்பு சித்து செம ஹேப்பி💞 இந்த கதைக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் சத்தியமா எதிர்பார்க்கலை நாளையோடு மன்னரும் சுபியும் உங்களிடம் இருந்து விடை பெறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!