வீட்டிற்கு வந்த மங்கைக்கு அன்புவின் மீது கோபம், ஆத்திரம், எரிச்சல் என எல்லாமே பன்மடங்காகியது. அவன் பேசியதை இப்போது நினைக்கையிலும் அவளுக்கு இரத்த அழுத்தம் எகிறியது. எகிற வைத்திருந்தான் அன்பரசன்.
Advertisement
மாலை வீடு வந்த நேரத்திலிருந்தே அவளுக்கு அவன் பேசிய வார்த்தைகளே மண்டைக்குள் ஓடியது.
“என்னை பார்த்தா அவனுக்கு சீன் க்ரியேட் பண்றது போல் இருக்கா? பொது இடமா இருக்கப் போய் அமைதியா இருந்தேன், இல்லன்னா அந்த மூளை இல்லாத மண்டையில ஒரு முடி இல்லாமல் செய்திருப்பேன்” மனது அவனால் உருவாக்கப்பட்ட காயங்கள் ஆற்றும் வரை அவனை திட்டிக் கொண்டிருந்தாள்.
Advertisement
Advertisement
அதற்குள் அவன் அண்ணன் வந்து கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான்.
“பிடி நீ கேட்ட பாணி பூரி…” என அவள் கையில் பாணி பூரியை திணித்தான்.
Advertisement
“தேங்க்ஸ் டா அண்ணா…” என்றாள் புன்னகை பூத்த முகமாக.
“இன்னைக்கு என்ன நடந்துச்சு? யார் வம்பு பண்ணது?” என்று அவளின் நிலையறிந்து விசாரிக்க தொடங்கினான்.
“ஒன்னுமில்லையே னா” என்றாள் வேகமாய்.
“ஒன்னுமில்லாம தான் பாணி பூரி வாங்கிட்டு வர சொன்னியா? உன்ன பத்தி வீட்ல உள்ளவங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு…” என்றவன் நிறுத்த, மங்கை அண்ணனை தான் பார்த்தாள்.
மங்கைக்கு ஒரு பழக்கம் உண்டு. சந்தோஷமோ கவலையோ துக்கமோ கோபமோ அவையனைத்தையும் காட்ட தணிக்க அவளுக்கு உணவு வேண்டும். மற்ற நேரங்களில் எல்லாம் அவளுக்கு வேண்டுமானதை அவளே வாங்கி உண்பாள். ஆனால் இந்த மாதிரியான சமயங்களில் அவளுக்கு யாரேனும் வாங்கித் தர வேண்டும்.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் என்னை யாராவது இதிலிருந்து காப்பாற்றுங்கள் என சொல்லாமல் செல்வதே இதற்கான காரணம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கும்.சிலருக்கு மௌனம், சிலருக்கு இசை, சிலருக்கு பேச்சு என்பதுபோல் இவளுக்கு உணவு. உணவிருந்தால் போதும் மற்றவை எல்லாம் தேவையே இல்லை.
சிறு வயதிலிருந்து மங்கையை பார்ப்பவன், அவனுக்கு இவள் அத்துப்படி. மங்கை செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் பின்புலம் அறிந்தவன் சிலவற்றை தவிர்த்து.
“சொல்லு என்ன பிரச்சினைன்னு?” என்றான் மீண்டும்.
சற்று தயங்கினாலும் அண்ணனிடம் மறைக்காமல் அனைத்தையும் கூறியவள் ஒன்றை மட்டும் அவனிடமிருந்து லாவாக மறைத்து விட்டாள்.
“தேவையா உனக்கிது. இந்த மாதிரி எதாவது ஆகும்னு தான் முதல்லையே வேணாம்னு தடுத்தேன். நீயும் கேக்கல உன்ன பெத்தவரும் நான் சொன்னதை கேக்கல” என்றவன் மேலும் தொடர்ந்தவனாக,
“இது நீயா சூஸ் பண்ணது மங்கை. இதுல எந்த ப்ராப்ளம் வந்தாலும் அதை நீயா ஃபேஸ் பண்ணி தான் முன்னுக்கு வரனும். சும்மா தொட்ட தொண்ணூறுக்கும் கவலப்பட்டு யோசிக்க கூடாது புரியுதா” என அண்ணனாக தங்கைக்கு அறிவுரைகளை தாரளமாகவே வழங்கினான்.
“சரி, நீ சாப்பிடு. நான் போய் ரெஃப்ரெஷ் ஆகுறேன்” செல்ல பார்த்தவனை தடுத்து நிறுத்தினாள் பெண்.
“னா எனக்கு ஒரு முக்கியமான டவுட்?” கேட்கவும்,
“என்னது?” என்றான் தங்கையின் திருகுதாளம் அறிந்து.
“அது எனக்கு தொண்ணூறு கவலை மட்டும் தான் வருமா? தொண்ணூற்று ஒன்னு வந்தா என்ன பண்றது?” என்று பாவம்போல் முகம் வைத்து கேட்டவளின் தலையில் குட்டு வைக்க, அவளும் அடிக்க என மீண்டுமொரு ரகளை ஆரம்பமானது.
“அப்பா, அண்ணா அடிக்கிறான்” என ஓடிவர, அவள் பின்னாடியே கார்த்திக்கும் ஓடிவந்தான்.
இருவரும் தந்தையை சுற்றி சுற்றி ஓட, பெற்றவர்கள் இருவரும் மகிழ்வாக உணர்ந்தனர்.
இப்படியாக இருவரும் அவரவர் வருங்காலங்கள் வந்த பின்பும் இதே போல் பாசத்தோடு இருக்க வேண்டும் என அவசர வேண்டுதல்கள் வைத்தனர்.
பின்னர், மங்கை அன்னைக்கு சமையலில் உதவிகள் செய்ய, கார்த்திக் ஆஃபிஸ் வேலையை பார்த்தான்.
“ம்மா, உன்னோட சமையலை அடிச்சிக்க யாரும் இல்லை” என சொல்லியவாறே ஒரு சப்பாத்தியை உள்ளே தள்ள,
“பாப்போம் டி. இன்னும் எத்தனை நாளைக்கு இதை சொல்றன்னு” என்றவர் பேசியப்படியே சப்பாத்தியை தேய்க்க, மகள் அதனை சுட்டு எடுத்தாள்.
பின்னர் குடும்பமாய் அரட்டையடித்த படியே இரவு உணவை நால்வரும் முடித்தனர்.
அனைத்தையும் ஒதுக்கி வைத்த பின்னரே அவளது அறைக்கு வந்தாள். அதுவரையிலும் கேட்பாரற்று கிடந்த பாணி பூரியை பார்த்த பிறகு தான் அவளின் கோபமும் அதனுடன் தானாகவே அன்புவும் நினைவில் வந்தான்.
அன்புபின் நினைவை ஓரம் தள்ளியவள், காலையில் எடுத்த வீடியோக்களை சந்தோஷிடம் எடிட் செய்துவிடும் படி கூறிய மங்கை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலையில் எடுத்து புகைப்படத்தை தரவு செய்தாள்.
உணவின் புகைப்படங்களை போடுவதற்காகவே ஒரு ஐடி வைத்திருந்தவள், அதில் தான் இதனை பதிவிறக்கம் செய்தவள் இறுதியாக அவளுக்கு பிடித்தமான இடத்திற்கு சென்று தன்னை அதில் தொலைத்திருந்தாள்.
*******
இங்கே வீடு வந்த அன்புவிற்கு அவனின் நடவடிக்கைகள் மீது அவனுக்கே ஆத்திரமாக வந்தது.
அனைவரிடத்தும் அன்புடனும் அக்கறையுடனும் பழகுபவன் யாருடனும் தேவையில்லாமல் வாக்குவாதம் எல்லாம் வைத்துக் கொள்ளமாட்டான்.
ஆனால் இன்று நடந்ததை நினைக்கும் போது அவனுக்கு ஒரு வித எரிச்சலை உண்டாக்கியது.
இன்று யாரோ தெரியாத ஒரு பெண்ணிடம் இவ்வளவு கடுமையாக பேசிவிட்டு வந்ததை எண்ணி வெறுத்தவன், ஒரு மன்னிப்பு கூட கேட்காததில் தன்னையே நொந்து கொண்டான்.
இவ்விடயம் தன் மேகமலைக்கு தெரிந்தால் என்னவாகிறது என்று பயந்து உடனே ஒரே ஒரு மன்னிப்பை வேண்டினான்.
“சாரி டி மேகமலை. அந்த பொண்ணை தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிடு மா” என்றான் அவசரமாய்.
அதற்குள் அவனின் மொபைலிற்கு நோட்டிஃபிக்கேஷன் சத்தம் வரவும் அதனை எடுத்து பார்த்தான்.
அன்று அவனின் மேகமலையின் அழைப்பை தவர விட்டு தவறு செய்தது போல், இனியொரு முறை செய்திட கூடாது என்பதில் அவன் திண்ணமாய் இருக்க மொபைலை சைலென்டில் போடுவதையே நிறுத்தியிருந்தான்.
வந்திருந்த அறிவிப்பு சத்தத்தை பார்த்தவனுக்கு அது இன்ஸ்டாகிராம் என்பது தெரிய வர, உள்ளே சென்று பார்த்தான்.
அது ஒரு உணவின் புகைப்படங்கள் போடப்படும் பக்கம். ‘லாஸ்ட் அண்ட் ஹங்கர் ‘ என்பது அந்த பக்கத்தின் பெயர்.
உள்ளே சென்று பார்த்தான். இப்படியான பக்கம் ஒன்று இருக்கிறது என்பதே அவனின் மேகமலை மூலமாக தான் அறிந்திருந்தான். இது அவளுக்கு பிடித்த பக்கமும் கூட.
‘சில உணவுகள் சுவைக்காக அல்ல… சில நினைவுகளுக்காக!’ வரிகளோடு பாஸ்தா படத்தினை பதிவிட்டு இருந்தார்கள்.
பார்த்தவன் அதனை பார்த்தப்படி நின்றிருந்தான். அந்த வரிகள் என்னவோ அவனின் மேகமலையின் நினைவுகளை கொண்டுவந்தது.
இந்த பக்கத்தினை அறிந்த அந்த நாளிற்கு அவன் மனம் சென்றது.
நினைவலைகள்…
“சாரி டி. ட்ராஃபிக் அதான் லேட்டாகிடுச்சி” என்றவன் அவளுக்கு பக்கத்தில் வந்தமர்ந்தான்.
“போ அன்பு. இன்னைக்கு என்ன நாள்ளுன்னு தெரிஞ்சும் லேட்டா வந்திருக்க” என்றவள் முகம் தூக்கி வைத்துக்கொள்ள, அன்புவினால் மேகமலையின் முகம் தூக்குதலை தாங்க முடியவில்லை.
“மேகமலையே!!!”
“மேகமலை, திரும்பி பார் டா” என்றான் கெஞ்சலான குரலில்.
“முடியாது போ… நான் கோபம்” சிறு பிள்ளைப்போல் கோபித்துக் கொள்பவளை கட்டிக் கொள்ள கைகள் பரபரத்தது.
இருக்கும் இடமுணர்ந்து தன்னை கட்டுப்படுத்தியவன், அவளின் தாடையை பிடித்து தன்னை காண செய்தான்.
“முடியாது. உன்னோட கண்ணு என்னை மெசிமரைஸ் பண்ணிடும். நான் மாட்டேன்”
“பாருங்க மேகமலை” என்றவன் அவள் மெல்ல பார்வையை அவன் பக்கம் திருப்பவும் அவளுக்கு முன் ஒரு செயினை நீட்டியிருந்தான்.
“ஹே, வாவ்!!!” என்றவளின் கண்கள் பெரிதாய் விரிந்தது.
அவளின் முகத்தில் மின்னும் பரவசம் அவனை மகிழ்ச்சியடைய வைத்தது.
“பிடிச்சிருக்கா மேகமலை?” அவன் அவள் முகத்தை ஆராய்ந்தப்படி கேட்டான்.
அவள் அந்த செயினை மெதுவாக கைப்பற்றி, நெஞ்சத்தில் பற்றிக்கொண்டு, “பிடிச்சிருக்கே… ரொம்ப… ரொம்ப… தேங்க்ஸ், அன்பு!” என்றாள் காதல் மின்ன.
அவன் அவளின் பார்வையில் மூழ்க, இருவரின் கண்களும் காதலின் மெழுகுவர்த்தியாக மின்னியது!
“நான் வரும்போது என்னவோ பிசியா பார்த்திட்டு இருந்தியே என்ன அது?” என்றான் கேள்வியாக.
“ஹோ, அதுவா…”என்றவள் மொபைலை எடுத்து அவள் பார்த்திட்டு இருந்ததை காட்டினாள்.
“இது தான் அன்பு” என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தை காட்டினாள்.
“இதையா இத்தனை ஆர்வமா பார்த்திட்டு இருந்த?”
“ம்ம்ம்”
“இதுல என்ன இருக்கு. ஜஸ்ட் ஃபுட்டோட போட்டோஸ் மட்டும் தானே இருக்கு” என்றவனை முறைத்தவள்,
“ஃபோட்டோஸ் முக்கியமில்லை அந்த கேப்ஷன்ஸ் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னவோ இதோட வரிகள் எனக்கு பிடிக்கும்” என்றாள்.
அவளுக்கு பிடிக்கும் என்பதாலே அந்த பக்கத்தினை அவன் ஃபாலோ செய்திருந்தான்.
அவள் சிரித்தவண்ணம், “நீயும் ஃபாலோ பண்ணிட்டியா?” என்றவள்,
சிரித்துக் கொண்டே, “நீ யாரை வேணும்னாலும் ஃபாலோ பண்ணலாம், ஆனா உன் கண்கள் என்னைய மட்டுமே இரசிக்கணும்! காட் இட்” என எச்சரிக்கை விடும் குரலில் கூறினாள்.
அவள் சொன்ன வார்த்தைகளில் மறைந்திருந்த காதல், அவனின் இதயத்தை மெதுவாக அரவணைத்தது!
********
இப்போது நினைக்கையிலும் அன்று அவள் சொன்ன வார்த்தைகள் இப்போதும் கூட அவனை சிலிர்க்க வைத்து சிவக்க வைத்தது.
“ஐ மிஸ் யூ மேகமலை!!!” என்றவன் அந்த பக்கத்தில் போடப்பட்டிருந்த பழைய பதிவுகளை எல்லாம் பார்த்தப்படி இருந்தான்.
ஒவ்வொரு படத்திற்கும் கீழே இருந்த வரிகள் அவனை அந்த பக்கத்தினை விட்டு நகரவிடாது செய்திருந்தது.
அடுத்த காலை எழுந்தவன் நேரமாவதை உணர்ந்து வேலைக்கு அவசர அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தான்.
இரவு தாமதமாக தூங்கியதால் சற்று நேரம் கழித்தே எழும்பியிருக்க, வேகமாய் கிளம்பினான்.
நேரமானதை உணர்ந்து அறையை விட்டு வெளியே வந்தவனை சீதா அழைத்தார்.
“அன்பு, சாப்பிட்டு போ டா” என்றழைக்க,
“இல்ல, வேணாம். ஆஃபிஸ்ல பாத்துக்கிறேன்” என்றவன் நகரப் பார்க்க,
“ஒரு வாய் சாப்பிட்டுட்டு போ அன்பு. உனக்கு தான் கேண்டின் ஃபுட் ஒத்துக்காதே பா” என்க,
வேண்டாம் என்று சொல்ல திரும்பியவன் அவரின் கெஞ்சலான பார்வையில் மனதை மாற்றிக் கொண்டு உண்ண அமர்ந்தான்.
“உனக்கு பிடிச்சதை தான் செஞ்சிருக்கேன் பா. நல்லா சாப்பிடு ராசா” என்றவர் அவனுக்கு பிடித்த வெண்பொங்கலை வைத்தவர் கூடவே வேர்கடலை சட்னி வைத்தார்.
என்னவோ அன்புவிற்கு இந்த வேர்கடலை சட்னி மீது அப்படியொரு பிடித்தம். அது இருந்தால் போதும் வெறும் சாப்பாடாக இருந்தால் கூட சாப்பிட்டு கொள்வான்.
வேர்கடலை சட்னியை கண்டதும் மனம் கலங்கியது.
“வேர்கடலை சட்னி வேணாம். எடுத்துடுறீங்களா?” என்றான் யாரோ ஒருவரிடம் கேட்பது போல் கேட்டான்.
“என்ன தம்பி இப்படி யார்க்கிட்டயோ பேசுற மாதிரி பேசுற. நான் உன்னோட அம்மாடா ” என மகனின் விலகல் பேச்சில் கவலைக் கொண்டார்.
எதுவும் பேசாது அமைதியாக அவன் உண்ண, அதற்குள் நந்தினியும் தம்பிதுரையும் வந்திருந்தனர்.
நந்தினி இப்போது பிஜி இறுதி ஆண்டில் இறுதி செமெஸ்டரில் இருந்தாள்.
“அம்மா, என்ன ஸ்பெஷல் இன்னைக்கு வராதவங்க எல்லாம் வந்திருக்காங்க?” என்றாள் ஓரவிழியில் அண்ணனை பார்த்தப்படி, அன்புவோ அதை எதையும் கண்டுக்கொள்ளாது உணவில் கவனம் வைத்தான்.
“கொஞ்சமா சாப்பிடு ராசா. காலையில நீ சாப்பிடுறதே அதிசயம். அதுலயும் இப்படி வயித்துக்கு பத்தியும் பத்தாமலும் சாப்பிடாத பா” என்றார் மகனின் மீதுள்ள அக்கறையில்.
“போதும்” என்று முடித்துவிட்டான் ஒற்றை வார்த்தையில்.
தட்டை போட்டு கையை கழுவி வந்தவனை நிறுத்தினார் தம்பிதுரை.
“அன்பு, அடுத்த வாரம் அனு பிள்ளைகளை கூட்டிட்டு வரா. நீ தான் போய் கூட்டிட்டு வரணும் பா. பார்த்துக்க” சொல்ல,
“சரி ப்பா…” என்றவன் நகர்ந்துவிட்டான். அவனிற்கு அடுத்து நந்தினியும் கல்லூரிக்கு சென்றுவிட்டாள்.
அவன் சென்ற சிறிது நேரத்திலே தில்லையப்பன் சொன்ன தரகர் வீட்டிற்கு வர, அவரை வரவேற்று அமர வைத்தனர். அடுத்த பத்து நிமிடத்தில் தில்லையப்பனும் வந்துவிட்டார்.
“சீதா, நந்தினி ஃபோட்டோவை எடுத்திட்டு வா மா” என தில்லையப்பன் சொல்லவும், உடனே உள்ளே சென்றவர் புகைப்படத்தோடு ஜாதகத்தின் நகலையும் எடுத்து வந்து கொடுத்தார்.
“இந்தாங்க தரகரே, இது தான் பொண்ணு ஃபோட்டோ. ஒரு நல்ல இடமா வந்தா சொல்லுங்க” என தில்லை சொல்ல,
“கண்டிப்பா சார்…”
“என்ன மாதிரியான மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறீங்க?”
“என் பொண்ணை பார்த்துக்கிற நல்ல மாப்பிள்ளையா இருந்தா போதும். சொத்து இதெல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை. பையன் குடும்பம் நல்ல விதமா இருந்தா மட்டும் போதும்” என்றார் தம்பிதுரை.
“சரிங்க சார். நல்ல வரன் வந்தா உங்களுக்கு சொல்றேன். அப்போ நான் கிளம்புறேன்” என்று அனைவரிடமிருந்தும் விடைப்பெற்று சென்றார்.
“எல்லாமே நல்ல படியா நடக்கும் துரை. விசனப்பட்டுக்காத” என்றார்.
“நல்லது நடந்தா போதும் னா” என்று அவரும் முடித்துக் கொண்டார்.
அடுத்த வார இறுதியில் அனுராதா அவளின் பிள்ளைகளோடு சென்னை வந்திறங்கினாள்.