Skip to content
Post Views: 542
நேசம் 06
மண்டபத்திலிருந்து வீடு வந்ததிலிருந்தே செண்பகம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார்.
Advertisement
அன்னையை வீட்டில் விட்டுவிட்டு வேலை இருக்கு என்று சொல்லி மங்கை வெளியேறியதிலிருந்து அவருள் சிந்தனை தான். வழக்கமாக மகள் வெளியே சென்றாலும் கவலையாயிராத அவர், இப்போது ஏன் இப்படித் தவித்தார் என்று அவருக்கே புரியவில்லை.
மண்டபத்தில் நடந்த சில விஷயங்கள்தான் இதற்கு முழுமுதற் காரணமே.
Advertisement
Advertisement
அதிலும் மணப்பெண்ணின் அம்மா, “மங்கைக்கு வரன் ஏதும் பார்த்திட்டு இருக்கீங்களா என்ன? இன்னுமே அந்த யூட்டூய்பை கட்டிட்டு தான் சுத்திட்டு இருக்காளா?” என நேரடியாக கேட்டு விட, சங்கடமான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டார் செண்பகம்.
“ஆமாங்க. அவளுக்கு அது தான் பிடிச்சிருக்கு. நாங்களும் அவளுக்கு பிடிச்சதை செய்யட்டும்னு விட்டுட்டோம். எங்களுக்கு அவளோட சந்தோஷம் தான் முக்கியம்” என்றார் மகள் செய்யும் இந்த வேலை பிடிக்காமல் இருந்தாலும் அவளை வெளியிருப்பவர்கள் பேசுவதை அவர் விரும்பவில்லை.
Advertisement
“ஹோ! இப்பலாம் மாப்பிள்ளை கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. இதுல உங்க பொண்ணு வேற சொல்லிக்கிற மாதிரியான வேலையில இல்ல. சீக்கிரமா ஏதாவது பார்த்து முடிச்சுவிடுங்க” என்று தான் பேச வேண்டியது முடிந்தது என்பது போல் அவர் நகர்ந்துவிட்டார்.
அதுவரை, சிறு பிள்ளையாகவே நினைத்திருந்த தனது மகள், இப்போது திருமணத்திற்குத் தகுதியான வயதை எட்டிவிட்டாள் என்பதே அப்போது தான் மூளைக்கே எட்டியது.
அதுமட்டுமில்லாமல் அங்கிருந்த சிலரின் பார்வை மங்கையை தொடர்ந்ததும் அவளை குறித்து அங்கு பேச்சுக்கள் எழுந்தததையும் கேள்விப்பட்டாரே. அதிலேயே அவரின் முகம் சுருங்கிவிட்டது. அதிலும் மணமகளின் அன்னை பேசியது அவரை வெகுவாய் தாக்கியது. மகளை பெற்ற அன்னையாய் அவர் தவித்து போனார்.
இரவே இதைக் குறித்து கணவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தவர், சற்று ஓய்வெடுத்தப்பின் வீட்டு வேலைகளை பார்க்க துவங்கினார்.
இங்கே சந்தோஷை காண அவனது கடைக்கே வந்திருந்தாள் மங்கை.
சந்தோஷ் அவளின் கல்லூரியில் அவளுடன் ஒன்றாக படித்தவன். ஃபோட்டோக்ராஃபில் இன்ட்ரெஸ்ட் கொண்டதால் வீட்டின் அனுமதியோடு ஃபோட்டோ ஷாப் ஒன்று வைத்து நடத்தி கொண்டிருக்கிறான்.
“ப்ரோ…” என அவள் உள்ளே வர,
“வா ப்ரோ. மேரேஜ் முடிஞ்சதா?” வேலை செய்தபடியே அவன் விசாரிக்க,
“முடிஞ்சது. அதான் அம்மாவ வீட்ல விட்டுட்டு நேரா உன்ன பாக்க வந்துட்டேன்” என்றவள் சின்னதாக அவர்களுக்காக வைத்திருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து வந்து அமர்ந்தாள்.
“எடிட்டிங் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு ப்ரோ முடிஞ்சதா?” என தண்ணீர் குடித்தப்படியே கேட்க,
“ஆல்மோஸ்ட் ஓவர் தான் ப்ரோ. இன்னும் கொஞ்சம் வேலை தான் பேலன்ஸ். முடிச்சதும் வீடியோ போஸ்ட் போட்டுடலாம்” என்றவன் அந்த கொஞ்ச வேலை என்ன என்பதை அவளிடம் பகிர்ந்து கொண்டே வேலையை தொடர்ந்தான்.
மங்கையும் அவன் காட்டியதை பார்த்துக் கொண்டிருந்தாள். வீடியோ எடிட்டிங் குறித்தும், எந்த அங்கிலில் எடுத்து வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றியும் இருவரும் கலந்துரையாடினர்.
“சரி, ப்ரோ நீ சூப்பரா பண்ணிடுவன்னு தான் எனக்கு தெரியுமே. நீ முடிச்சிட்டு சொல்லு அவங்க கிட்ட வீடியோ காட்டி ஒகேன்னா போஸ்ட் போட்டுடலாம்” என்றவளுக்கு சந்தோஷ் மீது அவ்வளவு நம்பிக்கை.
“ஆமா, ஆல்ரெடி போஸ்ட் போட்ட வீடியோஸோட ரீச் எப்படி வந்திருக்கு?” என்று விசாரித்தவள் மேலும் தொடர்ந்தவளாக,
“காதலர் தினத்தன்று எடுத்த வீடியோ நல்ல ரீச் வந்திருக்கு போல!” மங்கை கணினி திரையில் புள்ளிவிவரங்களை கவனித்தபடி சொல்ல, சந்தோஷ் பெருமிதத்துடன் இளநகை புரிந்தான்.
“ரீச் ஆகலைன்னா தான் ப்ரோ அதிசயம். அதிலும் அந்த கடைசி டாக் தான் டாப் நாட்ச் ப்ரோ. இந்த வீடியோ ரீச் ஆக அது தான் மிகப்பெரிய காரணமே. அதுமட்டுமில்லாமல் நல்லா பிளானிங் பண்ணி, சரியான தலைப்பில் வீடியோ எடுத்தா கண்டிப்பா வைரல் ஆகும். உன்னோட கண்டென்ட் ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி இருக்கு. அதான் ரீச் நல்லா வந்திருக்கு.” என தோழியை பெருமையாக பேச, மங்கை புன்னகைக்க மட்டுமே செய்தாள்.
அவளுக்கு ஒரே இடத்தில் வேலை என்ற பேரில் பொருத்திக்கொள்வதில் விருப்பமில்லாதவள். ஒரே மாதிரியான விஷயங்களில் தொடர்ந்து மூழ்கி இருப்பதை வெறுப்பவள். ஏதாவது புதுமையை தேடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவள்.
அதிலும் அவள் துவண்டிருந்த இருந்த காலக்கட்டத்தில் அவளை காத்தது என்னவோ இந்த யூட்டூய்ப் சேனல் தான். அதனால் அதனை உயிர்ப்புடன் செய்து வருகிறாள்.
பின்னர் இருவருமாக அமர்ந்து அடுத்த என்ன எடுப்பது என்று கலந்தாய்வு செய்தனர். மதிய உணவை அங்கேயே முடித்தவள் வேலையிருக்கென்று சொல்லி கிளம்பிவிட்டாள்.
மாலையிலிருந்து செண்பகம் தன் மனதில் இருக்கும் சிந்தனையைப் பகிரவேண்டுமென்ற எண்ணத்துடன், கணவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் வேலை முடித்து கடையிலிருந்து வீடு வந்ததும், அவருக்காக காத்திருந்தது போல் அவர் வந்த சிறிது நேரத்திலேயே செண்பகம் பேச்சை மெல்ல ஆரம்பித்தார்.
“ஏங்க! நம்ம மங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாமா? அவளுக்கும் வயசாக ஆரம்பிச்சிடுச்சு. இப்ப பார்க்க ஆரம்பிச்சா ஒரு வருஷத்துல அவளுக்கு கல்யாணத்தை முடிக்க முடியும்” என அவர் பேச்சை தொடங்க,
“நானுமே யோசிச்சேன் செண்பகம். பாக்கலாம்” என செண்பகம் பேச்சிற்கு செவி சாய்க்கும் விதமாய் அவர் பேசவும்,
“இவளுக்கு முடிச்சா தான் அடுத்து கார்த்திக்கு பாக்க ஆரம்பிக்க முடியும்ங்க. அதுக்கு முதல்ல நம்ம ஜோசியரை போய் பார்த்துட்டு வந்திடலாம்” என்றார் அவர் சிந்தனையில் இருந்தவற்றை எல்லாம்.
“சரி செண்பகம். நீ சொன்னபடி ஜோசியரை பார்த்திடலாம். ஆனா மங்கைக்கு இப்போதைக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னா அவளை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். அதையும் இப்பவே சொல்லிடுறேன்” என அவர் அவரது முடிவினை ஸ்திரமாக சொல்ல,
“என்னங்க பேசுறீங்க நீங்க?”
“அவளோட வாழ்க்கை, அவள் தான் முடிவு செய்யணும் செண்பகம். நம்ம விருப்பத்துக்காக அவளோட வாழ்க்கையை வீண் செய்ய முடியாது. இது நம்ம பசங்களோட வாழ்க்கை” என்றுவிட்டார்.
செண்பகத்திற்கு கணவனின் இப்பேச்சில் உடன்பாடில்லை. இருப்பினும் அமைதியாய் அவர் பேச்சிற்கே சென்றார்.
மறுநாளே சந்திரசேகரும் செண்பகமும் ஜோசியரை பார்த்துவிட்டு வந்தனர். பிள்ளைகள் இருவரின் ஜாதகத்தை காட்டி கேட்டதற்கு திருமணம் விரைவிலே கூடி வரும் என்று சொல்லியிருக்க செண்பகத்திற்கு அப்படியொரு நிம்மதி.
இதைக்குறித்து அன்று இரவே பிள்ளைகளிடம் கேட்கவும் செய்தார். அவருக்கு இதனை தள்ளி போடுவதில் விருப்பமில்லை.
செண்பகம் உணவு தயார் செய்துக்கொண்டிருக்க, மங்கை வீட்டில் தன்னுடைய அடுத்த ப்ளானை பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.
“இன்னும் ஒருவாரத்துல நல்ல இடமா தேடனும் பா. இதுமட்டும் நல்லா போச்சுன்னா கண்டிப்பா ஃபாலோவர்ஸ் அதிகமாகிடும்” என அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டே போனாள்.
“சரிடா அம்மு. நீ பாரு உன்னால கண்டிப்பா முடியும்” என்று அவள் செய்யும் அனைத்திற்கும் ஒத்துழைப்பு கொடுத்தார்.
அப்போது தான் கார்த்திக்கேயன் வேலை முடித்து வீடு திரும்ப, தங்கையும் தந்தையும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து,” அடுத்து என்ன ப்ளான் போட்டுட்டு இருக்கீங்க மேடம்?” என்றான் தங்கையை சீண்டும் விதமாய்.
“பெருசா ஒன்னுமில்லை னா. அடுத்த எங்க வீடியோ ஷூட் பண்ண போறேன்னு பேசிட்டு இருக்கேன் னா” என்றவள் ஒவ்வொரு பேச்சிற்கும் அண்ணனை கூடவே சேர்த்தாள்.
‘அய்யோ என் பர்ஸ்’ என முன்கூட்டியே யோசித்தவனுக்கு தங்கையின் தில்லுமுல்லுகளை தான் அவன் அறிவானே.
“என்கிட்ட வந்த பிச்சுபுடுவேன் பிச்சு. நீயாச்சி உன் சேனலாச்சி என்ன விட்டுடு” என கைக்கூப்பி விட,
“ப்பா, இங்க பாருங்க ப்பா இவனை” தந்தையை உள்ளிழுக்க, அவர் ஏதும் பேசவில்லை அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தார்.
“நீ யார வேணாலும் கூப்பிட்டுக்கோ. நான் காசு தரதா இல்லை”
“அண்ணா! டேய் அண்ணா! எனக்கிருக்கிற ஒரே ஒரு அண்ணா நீ. தங்கச்சிக்கு நீ செய்யாம வேற யாரு செய்வா னா” மங்கை நீலிக்கண்ணீர் வடித்து ஆரம்பிக்க பார்க்க, அதற்குள் செண்பகம் வந்து தடையிட்டார்.
“கார்த்தி போய் ட்ரெஸ் மாத்திட்டு வா. முக்கியமான விஷயம் பேசணும்” என சொல்லி மகனை உள்ளே அனுப்பினார்.
அடுத்த சில மணி துளிகளில் உடை மாற்றி வந்தவன் அமர்ந்ததும்,”சொல்லுங்க மா என்ன பேசணும்?” என்றான் கேள்வியாக.
“மங்கை, உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு நானும் அப்பாவும் முடிவு பண்ணிருக்கோம். உனக்கு சம்மதமா?” என நேரடியாகவே கேட்டுவிட, திடிரென இப்படி ஒன்றை அன்னை கேட்பார் என்று அறியாத மங்கை திகைத்தாள்.
“என்ன திடீர்னு?”
“வயசு போயிட்டு இருக்கு மங்கை. உனக்கு பார்த்து முடிச்சா தான் இவனுக்கு ஆரம்பிக்க முடியும். யோசிச்சு சொல்லு” என்றதில் கார்த்திக்கேயனின் புருவங்கள் இடுங்கியது.
“அம்மா, என்ன பேசுறீங்க? அவளுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறது சரி. ஆனா அதுக்காக என்னைய காரணம் காட்டி அவளை கல்யாணத்துக்கு சம்மதம் கேக்குறதுல எனக்கு விருப்பமில்ல மா” என்றான் அன்னையின் இந்த பேச்சு பிடிக்கவில்லை எனும்விதமாய்.
“கார்த்தி நான் ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன்”
“இல்ல என்னைய வச்சி அவளோட கல்யாணத்தை பத்தி பேச வேணாம். அது நல்லதுக்கில்லை” என்றான் ஸ்திரமாக.
அன்னையும் அண்ணனும் பேசுவதை வேடிக்கை பார்த்திருந்த மங்கைக்கு ஏதும் பேசத் தோன்றவில்லை. அமைதியாகவே இருந்தாள்.
“அம்மு, நாங்க உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்தலை. உன்னோட விருப்பம் தான் எங்க விருப்பம்” சந்திரசேகர் சொல்ல, யோசிக்க ஆரம்பித்தாள் பெண்.
“நான் யோசிச்சு சொல்லட்டுமா” என்றவள் எழுந்து சென்றுவிட்டாள்.
அன்று இரவு முழுவதும் யோசித்தவள், காலையிலே அனைவரின் முன்பும் அவளின் பதிலை கூறினாள்.
“எனக்கு சம்மதம் தான். ஆனா என் கூட சேர்ந்து அண்ணனுக்கும் பாருங்க. யாருக்கு முதல்ல அமையுதோ அவங்களுக்கு முதல்ல கல்யாணத்தை முடிச்சிடனும். யாரோட கல்யாணத்தையும் யாருக்காகவும் நிறுத்தி வைக்க வேணாம்” என்றிட, அவள் சம்மதம் கூறியதே நிம்மதியாக இருந்தது பெற்றவர்களுக்கு.
“உன் விருப்பம் போலையே பார்த்திடலாம் டா” என்றார் சந்திரசேகரன்.
மகள் சம்மதம் கூறியதுமே உடனே தரகரை வரவழைத்து இருவரின் புகைப்படங்களையும் கொடுத்து அவர்களுக்கான துணையை தேட சொன்னார்.
*******
அன்புவின் வீட்டில் அனு வந்ததில் இருந்து மகிழ்ச்சி குறைவில்லாமல் சென்றது.
விஷ்ணுவின் கலாட்டாவில் அனைவரும் அன்புவின் மேலிருக்கும் மனக்கவலையை மறக்க தான் செய்திருந்தனர்.
சித்தியுடன் பல்லாங்குழி தாயம் போன்று விளையாடுவது, தாத்தாவுடன் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வது, அம்மாச்சியுடன் சமையலில் உதவிப்புறிவது என விஷ்ணு அனைவரையும் பரபரப்பாகவே வைத்திருந்தான்.
அன்புவையும் அவன் விடவில்லை. அவனையும் அவனின் இழுப்பிற்கெல்லாம் இழுத்துச் சென்றான்.
‘மாமா அங்க கூட்டிட்டு போ. மாமா இங்க கூட்டிட்டு போ’ என்று எதற்கும் எல்லாவற்றுக்கும் அவனின் மாமா அவனுக்கு தேவைப்பட்டான்.
மாமா ப்ரியன் விஷ்ணு. அன்பு இருந்தால் போதும் அவனுக்கு அனு கூட தேவையில்லை.
அனுவும் முகுந்தனும் பாசம் காட்டினாலும் அதில் கண்டிப்பும் இருக்கும். ஆனால் மாமாவிடம் பாசம் மட்டுமே. அதனாலே விஷ்ணுவிற்கு மாமா என்றால் அத்தனை இஷ்டம்.
அன்று மருமகனிற்காகவே வேலைக்கு விடுமுறை எடுத்தவன் அவனுடன் வெளியில் கிளம்பிருந்தான்.
“மாமா, எனக்கு கலர் செட் வாங்கி கொடுங்க” என்க,
“வாங்கி தரேன்” என்றான்.
“சூப்பர் மாமா நீ. லவ் யூ” என்றான் மாமாவின் மீதிருந்த அன்பில்.
பின்னர் விஷ்ணுவை க்ரோம்பேட் சரவணா ஸ்டோர்ஸ் அழைத்து வந்தவன், அவனுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி கொடுத்தான்.
“மாமா, அப்பா அம்மா திட்டுவாங்க” முகத்தை தொங்கப் போட்டு சொல்ல,
“நான் பேசிக்கிறேன் அதெல்லாம் திட்ட மாட்டாங்க. உனக்கு பிடிச்சதை வாங்கிக்க” என்றதும் விஷ்ணு சிரித்தான்.
இப்படியாக மாமாவும் மருமகனும் ஊர் சுற்றி திரிந்து மாலைப்போல் வீடு திரும்ப, அனு வந்திருப்பதை அறிந்த டோனி அவர்களை காண அவர்களது வீட்டிற்கு வந்திருந்தான்.
“வா டா டோனி” என நண்பனை வரவேற்று உள்ளே அழைத்து வந்து அமர சொன்னான்.
“டோனி அங்கில்!” என ஓடி வந்தான் விஷ்ணு.
“வா டா பையா” என அவனை தூக்கி ஒரு சுற்று சுற்றியவன், அவனிடம் நலம் விசாரித்தான்.
டோனி வில்லியம்ஸ் அன்புவின் பள்ளி கால வயது நண்பன். இரு குடும்பங்கள் பக்கத்து பக்கத்து தெருவில் வசிப்பவர்கள் தான்.
இருவரும் கதையளக்கும் நேரத்தில் அனு வந்துவிட, அவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தான் டோனி.
“என்ன டோனி னா, என் மகனை விசாரிச்ச நீங்க உங்க தங்கச்சியான என்னை டீல்ல விடுறீங்க?” முறைப்புடனே அவள் கேட்க,
“அப்படிலாம் செய்வேணா என்ன” என்றவன்,”எப்படி இருக்க அனு? முகுந்தன் ப்ரோ எப்படி இருக்காங்க?” என விசாரிக்க,
“நானும் நலம் என் புருஷனும் நலம் தான்” என்றாள்.
அதற்குள் விஷ்ணு மாமாவிடம் சென்றிருக்க, அன்புவின் கவனம் முழுதும் மருமகனின் மீதே.
“சொல்லு அனு என்னமோ பேசணும்னு சொல்லிருந்தியே?” என்றவன் நேராக விஷயத்திற்கு வர,
“நான் பெருசா என்ன பேசிட போறேன் எல்லாம் இந்த அன்புவை பத்தி தான்” என்றதும் டோனியின் பார்வை தன்னிச்சையாக நண்பனின் புறம் திரும்பியது.
“அன்புவை பத்தியா?” ஒன்றும் புரியாதது போல் கேட்க,
“புரியாத மாதிரியே நடிக்க கூடாது. நான் எதை கேக்க வரேன்னு உங்களுக்கே நல்லா தெரியும்” என்றவளின் பார்வை அவனை துளைத்தது.
“அது அவனோட வாழ்க்கை அனு. அவனா சொல்லாதப்ப நான் எப்படி சொல்றது” என டோனி தயக்கம் காட்ட,
“உங்களுக்கு இந்த குடும்பத்தோட நிலையை பத்தி நல்லாவே தெரியும். அம்மா அன்புவை நினைச்சு ரொம்பவே கவலை படுறாங்க. நீங்க யாருக்காவும் சொல்ல வேணாம் ஆனா அன்புக்காக அவனோட வாழ்க்கை மாற்றத்துக்காக சொல்லலாமே” என்றதும் நண்பனை பார்த்த டோனி, பெருமூச்செடுத்து அவனின் கடந்த காலத்தை சுருக்கமாக கூறினான்.
டோனி சொல்லியதை கேட்ட அனு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை யோசிக்க ஆரம்பித்தாள்.
“தேங்க்ஸ் அன்புவை பத்தி சொன்னதுக்கு” என டோனிக்கு தன் நன்றியை தெரிவிக்க,
“அன்பு வாழ்க்கை நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும். சரி எனக்கு நேரமாகுது அனு நான் கிளம்புறேன்” என்றவன் நண்பனிடமும் ஒரு வார்த்தை கூறிவிட்டு விடைப்பெற்றான்.
அவன் சென்ற நேரத்திலிருந்து அனுவின் சிந்தனைகள் முழுதும் அன்புவே.
திருமணத்திற்கு சென்று வந்ததிலிருந்து சீதாவின் மனதில் அனுவின் வார்த்தைகள் தான் ஓடிக்கொண்டிருந்தது.
அவனுக்கும் எப்படியாவது ஒரு திருமணத்தை முடித்து விட வேண்டுமென எண்ணினார். நினைத்த நேரத்தில் நினைத்த காரியங்கள் நடந்திடுமா என்ன?
விதியின் விளையாட்டில் அடுத்து வந்த சில தினங்களிலே அன்புவின் வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை சந்தித்தது. அதுவும் அவன் கனவிலும் நினைத்திராத வகையில்…
error: Content is protected !!