Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

72. மதுமதி - மதுரம் தூவும் மழையே

மழை – 5

“ட்ரீம் சவுண்ட்” என கருப்பு நிற பெரிய பலகையில் வெள்ளை நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த அந்த ஸ்டுடியோவிற்குள் நுழைந்தான் மதியூரன்.

வரவேற்பறையில் ஆணும் பெண்ணும் நின்றபடி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் சிரிப்புச் சத்தத்தின் அளவு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.



Advertisement

தயக்கத்தோடு அவர்கள் முன்னே போய் நின்றான். இருவரும் அவனை ஒருவிதக் கேள்வியோடு நோக்கினர்.

“ம… மா.. மதுரா மே… மே… ம்மப் பா… பா… பார்க்கணும். இ… இ… இங்கதான் வ… வ… வரச் சொல்லியிருந்தாங்க…” என்றான்.

Advertisement

Advertisement

அவளோ கடிகாரத்தையும் பக்கத்தில் நின்றவனையும் நமட்டுச் சிரிப்புடன் பார்த்தாள்.

அவனோ, “எதுக்காக அவங்களைப் பார்க்கணும்?” என்று கேட்டான்.

Advertisement

“க… க… கதை வா… வா… வாசிக்க எ… எ… என்னை வரச் சொல்லியிருந்தாங்க.”

“உங்களைக் கதை வாசிக்க வரச் சொன்னாங்களா?” என நக்கல் சிரிப்போடு கேட்டவன், அலைபேசியை எடுத்து மதுராவிற்கு அழைத்தான்.

அவனது நக்கல் சிரிப்பு மதியூரனுக்கு அவமானமாக இருந்தது. அப்படியே திரும்பிவிடலாம் என்றிருந்தது. ஆனாலும், உள்ளுக்குள் ஒரு மூலையில் உதித்த வைராக்கியம் அவனை அங்கிருந்து நகர விடவில்லை. எப்படியாவது தனது திறமையைக் காட்டிவிட வேண்டும் என ஓரமாய் துளிர்த்த நம்பிக்கை அவனை அங்கே பிடித்து வைத்தது.

மதியூரன் வந்த செய்தியைக் கேட்டதும் வேகமாக வெளியே வந்தாள் மதுரா! கதவைத் திறக்கும் அரவத்தில் திரும்பிப் பார்த்தான் மதியூரன்.

அலைபேசியில் கேட்ட இனிமையான குரலை வைத்து அவனொரு கற்பனை செய்து வைத்திருந்தான். ஆனால், மதுராவைக் கண்டதும் அவனது கற்பனை சுக்குநூறாக உடைந்தது. குரலை வைத்து நவீன அழகியைப் போல இருப்பாள் என்ற அவனது எதிர்பார்ப்பு பொய்யானது. சல்வார் அணிந்து, சடை பின்னி முன்னால் போட்டு, நெற்றியில் ஒற்றைப் பொட்டு வைத்து அதன் மேல் சின்னக் கீற்றாய் திருநீறு அணிந்து குடும்பப் பெண்ணாக வந்து நின்றாள்.

சட்டென உள்ளுக்குள் ஏதோ உடைவது போன்ற உணர்வு… தலையை உலுக்கிக் கொண்டவன், ‘வந்த வேலையைப் பார்க்காமல் என்ன இது?’ எனக் கடிந்துகொண்டு மனதைத் தட்டி அடக்கி அவளை நோக்கினான்.

“மிஸ்டர் மதியூரன்?”

“ம்ம்…”

“உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன். உள்ளே போலாம் வாங்க,” என்று முன்னே நடந்தாள். அவளைத் தொடர்ந்தான்.

“ஏய் பிளாக்கி! ஒன் வீக்தானே ஸ்டுடியோ கேட்டிருந்த! ஒன் வீக் போதுமா? இல்ல ஒன் மன்த் வேணுமா?” எனக் கேலிச் சிரிப்போடு கேட்டான் வரவேற்பறையில் இருந்தவன்.

அவன் கேட்ட கேள்வி இருவருக்குமே நன்றாகப் புரிந்தது. வீட்டிலேயே தனக்கெனக் கதைகளை வாசிக்க ஸ்டுடியோ அமைத்துக் கொண்டவள், அங்கே அவனை அழைத்து வாசித்திருக்கலாம். ஆனால், அந்நிய ஆணை வீட்டிற்கு அழைத்து, அதுவும் தனி அறையில் கதை வாசிக்க வைப்பது அவளுக்குச் சரியெனப் படவில்லை. அதற்காகத் தன் தோழியின் உதவியுடன் இந்த ஸ்டுடியோவில் பதிவு செய்ய அனுமதி கேட்டிருந்தாள். அதற்கு வாடகையும் தருவதாகச் சொல்லியிருந்தாள்.

மதியூரன் திக்கித் திக்கிப் பேசுவதால், ‘அவனுக்கு ஒரு வாரம் போதுமா?’ எனக் கேலி செய்தான் அவன்.

அவள் திரும்பி மதியூரனைப் பார்த்தாள். அவன் அவளை நிமிர்ந்து பாராமல் தலை குனிந்தபடி நின்றிருந்தான். கேலிகள் அவனுக்குப் புதியதல்ல. ஆயினும், முதலில் உண்டாகும் தடுமாற்றம், சட்டென வரும் கோபம், அதைத் தடுக்கும் விதமாக வரும் கண்ணீர்… இதையெல்லாம் தாண்டித் தேறி வரவே அவனுக்கு நேரமாகும். அந்தக் கேலியைத் தூசிப் போலத் தட்டிவிட்டுச் செல்ல இன்னும் அவன் பழகவில்லை. மதுராவிற்கு அவனது நிலை புரிந்தது.

“மிஸ்டர் மதியூரன்! நீங்க முன்னாடி போங்க, இதோ வந்துடுறேன்,” என்றவள் அவன் உள்ளே சென்றதும் பல்லைக் கடித்துக்கொண்டு அவனை நோக்கினாள்.

“ஒரு வாரம்தான் கேட்டிருந்தேன். உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் உள்ளே வாங்க, உங்க அண்டர் எஸ்டிமேஷன் (Underestimation) எப்படி இருக்குன்னு தெரிஞ்சுப்போம்,” என அவனை அழைத்தாள். அவனும் அவர்களது மூக்கை உடைக்கவே உடன் நடந்தான்.

குண்டூசி விழுந்தால் கூடத் துல்லியமாகக் கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது அந்த அறை. மூவரும் அறைக்குள் நுழைந்தனர்.

மதியூரனிடம் ஒரு சிறு காகிதத்தை நீட்டி, “முதல்ல மூச்சை நல்லா இழுத்து விட்டுக்கங்க மதியூரன்! மெல்ல நிதானமா வாசிங்க. இது ட்ரையல் தான். இதுக்கு அப்புறம் ரெக்கார்டிங் போகலாம்,” என்றாள் பக்கத்தில் நின்றவனை அசட்டையாகப் பார்த்துவிட்டு. அவனோ கேலிச் சிரிப்போடுதான் நின்றிருந்தான்.

அவனைப் பாராமல் மதுராவைப் பார்த்தவன், அவளது கண்ணசைவில் வாசிக்க ஆரம்பித்தான்.

கேலியாக வளைந்திருந்த உதடுகள் அப்படியே மெச்சத்தக்க வகையில் மாறின! ஒரு இடத்தில்கூட அவன் திக்கவில்லை, நிறுத்தவில்லை. ஏற்ற இறக்கங்களோடும் குழைவோடும், கம்பீரமாகவும் காகிதத்தில் வைத்த கண்ணை எடுக்காமல் மிகத் தெளிவாகத் தமிழ் உச்சரிப்போடு வாசித்து முடித்திருந்தான்.

தன் வாசிப்பில் அசந்து நிற்கும் அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்து, “எப்படி?” என்று கேட்டபோதுதான் அவள் தெளிந்தாள். உணர்ச்சி வசத்தில் கைகளைத் தட்டினாள். அவனுக்குக் கிடைத்த முதல் பாராட்டு அது!

“ஒரு மாசம் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்… நீங்க என்ன நினைக்கிறீங்க?” எனக் கைகளைக் கட்டிக்கொண்டு புருவம் உயர்த்தி வரவேற்பறைப் பையனைப் பார்த்துக் கேட்டாள்.

பதில் சொல்லத் தடுமாறியவன், “சாரி ப்ரோ! சாரி!” என அங்கிருந்து நகர்ந்தான்.

நிறைய கேலி, கிண்டல்களைக் கடந்திருக்கிறான் மதியூரன். அவர்களுக்கெல்லாம் அவன் பதிலடி கொடுத்ததில்லை. அமைதியாகக் கடந்து போவது தான் அவனது வழக்கம். அவனது தோழியோ, தாயோ கூட அவனுக்காகப் பேசியதில்லை. அவனைப் பகடி செய்பவர்களுடன் சேர்ந்து அவர்களும் கேலி பேசுவார்களே தவிர, அவனுக்காகக் குரல் கொடுத்ததில்லை.

இதுவே முதல் முறை தனக்கு ஆதரவாக ஒரு பெண் பேசுவது. முன்பின் தெரியாத பெண், வேலை நிமித்தமாகச் சந்தித்தவள் தனக்காகப் பேசுவதை நினைத்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

தன்னையே ஆச்சரியமாகப் பார்த்து நிற்பவனைக் கண்டு, “ஆர் யூ ஓகே?” எனக் கேட்டாள் மதுரா.

“ம்ம்…” என்றவனால் பேசவே முடியவில்லை.

“வாசிக்கலாமா?”

“ஆம்,” என்று தலையை அசைத்தவன், புன்னகையுடன் “தே… தே… தேங்க்ஸ் ம… மது… மதுரா!” என்றான்.

“ம்ம்… எதுக்கு?” எனப் புருவத்தைச் சுருக்கிக் கேட்டாள்.

“கே… கே .. கேலிப் பே… பே .. பேச்சுகளைக் கே… கே… கேட்டுப் பழகிப்போன எனக்கு, மு .. மு… முதல் முறையா ஆ .. ஆ…ஆதரவான பேச்சும் க… க…. கைதட்டலும் கிடைச்சிருக்கு. அ அதுவும் உங்களால… அ அ அதுக்குத்தான்,” என்றவனுக்குச் சட்டெனக் கண்கள் கலங்கின.

அவளும் சிரிப்புடன் தலை சாய்த்து, “வெளியே தெரியாத உங்க திறமைக்கு என்னால தரக்கூடிய சின்ன அங்கீகாரம் அவ்வளவுதான். இதுக்கே எமோஷனல் ஆனா எப்படி? உங்க திறமை உங்களை மென்மேலும் உயர்த்தும். இன்னும் நிறைய பாராட்டுகள் கிடைக்கும் மதியூரன் இதுக்கே கண்கலங்கலாமா? விடுங்க! கேலிப் பேச்சுகளால துவண்டு போகவும் கூடாது, பாராட்டுகளால தலைக்கனம் கொள்ளவும் கூடாது. இரண்டையும் சமமாக எடுத்துக்கிட்டு எல்லாத்தையும் கடந்து போகக் கத்துக்கணும்… இப்போ வாசிக்க ஆரம்பிக்கலாமா?” எனக் கேட்டு மைக்கைச் சரி செய்தாள்.

மதுராவையே பார்த்துக் கொண்டிருந்தான் மதியூரன். தாய் முதல் தோழி வரை அவனைத் தாழ்த்திப் பேசியே பழகியிருக்கிறார்கள். முதல் முறையாகத் தன் திறமையைப் பாராட்டி ஊக்கம் தருவது மதுராதான்.

 அந்த ஒரு சிறு பாராட்டு அவனுக்குள் பெரும் பலத்தைத் தந்தது.

இப்போதே கடகடவென மொத்தக் கதையையும் வாசிக்க வேண்டும் என்ற உத்வேகம் அவனுக்குள் பிறந்துவிட்டது. 

கதையில் மொத்தம் 50 அத்தியாயங்கள் இருந்தன. அவள் வாசிக்க வேண்டிய பகுதியையும் அவன் வாசிக்க வேண்டியதையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்தாள்.

வாசிக்கவும் எளிதாக இருந்தது. ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு அத்தியாயங்கள் என இருவரும் வாசிப்பதாக முடிவு செய்திருந்தனர்.

அவள் சுலபமாக வாசிக்க, அவனோ முதலில் கொஞ்சம் தடுமாறினான். பின் முழு மூச்சாக வாசிக்க ஆரம்பித்தான். பழக்கம் இல்லாததால் ஏற்பட்ட தடுமாற்றத்தை கண்டு அவனுக்கு மதுரா சொல்லிக் கொடுத்தாள். மதியம் வரை இருவரும் வாசித்தனர். மதிய வேளை தொடங்க, அதற்கு மேல் மதுராவால் வாசிக்க முடியவில்லை. அவளது எண்ணமெல்லாம் வீட்டில் இருக்கும் அன்னையிடம் செல்ல, முடித்துக் கொள்ள நினைத்தாள்.

ஆனால் மதியூரனுக்கோ இன்னும் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. இந்த வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற ஆவல். தனக்குப் பிடித்தமான ஒரு வேலை கிடைத்திருக்கும்போது அதில் தன் முழுத் திறமையைக் காட்ட வேண்டும் என்ற வேகம் அவனிடம் இருந்தது.

“மதியூரன் நேரமாச்சு! நாளைக்கு இன்னைக்கு வந்த அதே நேரத்துக்கு வந்துடுங்க, மிச்சத்தை வாசிச்சிடலாம்…” என்றாள் சோர்வுடன்.

அவனோ சோர்வு ஏதுமின்றி முழு ஆற்றலுடன் நின்றிருந்தான். அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மதுரா.

“எ… எ… என்னை அ… அ… அப்படிப் பா… பார்க்கிறீங்க?”

“உங்களுக்கு டயர்ட் (Tired) ஆகவே இல்லையா? எனக்குக் குரலே ஒரு மாதிரி ஆயிடுச்சு, கால் வலிக்குது! நீங்க காலையில பார்த்தது போலவே உற்சாகமா இருக்கீங்க,” எனப் பேசியபடியே வெளியே வந்தனர்.

அவனும் சிரிப்புடன் பதில் சொல்லாமல் அவளோடு வந்தான்.

“இது உங்க ஸ்டுடியோ இல்லையா?”

“இல்லை… நான் வழக்கமா வீட்டிலேயே வாசிப்பேன். அங்கே எனக்காக ஒரு ரூம் செட் பண்ணியிருக்கேன். இப்போ இரண்டு பேர் வாசிக்கிறதால ஸ்டுடியோதான் நல்லதுன்னு தோணுச்சு,” என்றாள். இருவரும் பேசியபடியே அவரவர் வாகனங்கள் அருகே வந்தனர். பின் புன்னகையுடன் விடைபெற்றனர்.

மதியூரன் புதிதாக வாசிப்பதால் ஒரு வாரம் ஆகும் என்று நினைத்தாள். ஆனால் அவனோ ஆர்வத்துடன் வாசித்து மூன்றே நாட்களில் தன் பகுதிகளை முடித்துவிட்டான். அவளுக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது.

பின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் இணைத்து முழு கதைத் தொகுப்பாக மாற்றி அதை ஆசிரியருக்கு அனுப்பி வைத்தாள். சொன்ன தேதிக்கு முன்னரே முடித்துவிட்டாள்.

 ஆசிரியரும் அவள் கேட்ட தொகையை அனுப்பி வைத்தார். அதை இரண்டு பங்காகப் பிரித்து மதியூரனுக்கும் கொடுத்தாள்.

முப்பதாராயிரம் ரூபாய் மொத்தச் சம்பளம். அதில் அவனது பங்கான பதினெட்டாயிரம் ரூபாயைத் தந்திருந்தாள். 

அவனது முதல் சம்பளம்… அதைக் கண்டதுமே அவன் கண்கள் கலங்கிவிட்டன. தன் உழைப்புக்குக் கிடைத்த முதல் ஊதியம். பல நிராகரிப்புகளுக்கு மத்தியில் அவனது திறமைக்குக் கிடைத்த வெகுமானம்.

“ந… ந… நன்றி…” என முழுதாகப் பேச முடியவில்லை அவனால்.

“மதியூரன்! ரொம்ப எமோஷனல் ஆகாதீங்க. இது ஒரு சின்ன ஆரம்பம்தான். உங்களுக்குத் திறமை இருக்கு, இதுவரைக்கும் அது வெளியே தெரியல, இனி தெரியும். நீங்க ஆசைப்பட்ட மாதிரியே நிச்சயமா ஒரு ‘வாய்ஸ் ஆக்டர்’ ஆவீங்க. அதற்கான முதல் படி இது. இன்னும் மென்மேலும் வளர என்னோட வாழ்த்துகள்!” என்று கையை நீட்டினாள்.

அவனும் அவளது கையைப் பற்றித் குலுக்கினான்.

“அ… அடுத்துக…க…கதை வா. . வாசிக்கணும்னா சொ… சொல்லுங்க, வ… வர்றேன்” என்றான்.

“தோடா ! வாசிக்க மாட்டேன், என்னை தொந்தரவு செய்யாதீங்க சொன்னவரா நீங்க… ?” எனக் கேலி செய்ய, அதில் வழிந்தவன், 

“சா சாரி ம… மது… மதுரா ! அன்னைக்கி நா… நா… கோ… கோ…கோபத்துல … பே… பேசிட்டேன்” என மன்னிப்பு கோர, 

“இட்ஸ் ஓகே ! சும்மா உங்களை கேலி செஞ்சேன்… கண்டிப்பா அடுத்த கதை வாசிக்க வாய்ப்பு வந்தால் கூப்பிடுறேன்” என்று சென்று விட்டாள். 

சம்பளம் வாங்கிய கையோடு வீட்டிற்குச் சென்றவன் தாய் முன் போய் நின்றான். தொலைக்காட்சியை மறைத்து நின்றதால் அவனைத் திட்ட வாய் திறந்தவர் முன், பணத்தை நீட்டினான். வாயைப் பிளந்து பார்த்தார் அவர்.

“ஏது இவ்வளவு பணம்?”

“நா… நான் வே வே… வேலைக்குப் போய் சா. சா சம்பாதிச்சது.”

“ஓ… ” கையில் வாங்கியவர் எண்ணினார். எட்டாயிரம் இருந்தது 

“பிச்சைக் காசுக்காக வேலைக்குப் போறியாக்கும்! எங்க அண்ணனுக்கு இதெல்லாம் ஒரு பணமே இல்ல! அவரு இவனைத் தன் வீட்டு மாப்பிள்ளையாக்கலாம்னு இருக்காரு, இவன் என்னடான்னா இந்த அற்பக் காசை நீட்டுறான்,” என்று சோபாவில் பணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தொலைக்காட்சியைப் பார்க்கலானார். 

 அதற்கு மேல் பேசாமல் அவரிடம் வாதாடாமல் பணத்தை எடுத்துக்கொண்டு அறைக்குள் வந்துவிட்டான்.

தாய் பேச்சால் மன வருத்தத்தில் இருந்தவனுக்கு இரண்டு நாள் கழித்து மதுராவிடமிருந்து அழைப்பு வந்தது. வேகமாக எடுத்தான்.

“அடுத்த கதை வாசிக்கலாமா மதியூரன்?” எனக் கேட்டாள். மதியூரன் மகிழ்ச்சியில் திளைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!