Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

72. மதுமதி - மதுரம் தூவும் மழையே

மழை 9

அறைக்குள் வந்து மடாரென கதவைச் சாத்திக்கொண்டவனுக்கு, இதயத்துடிப்பு அதிவேகமாகத் துடித்தது.

அப்படியே அந்தத் துடிப்பு நின்றுவிடக் கூடாதா என்று இருந்தது. “தினம் தினம் துடித்துக்கொண்டு என்னைக்கொல்கிறாயே!” என்று அதனோடு பேசியவன், மெத்தையில் வந்து அமர்ந்து தலையைப் பிடித்துக்கொண்டான்.

ஆணின் கண்ணீர் பிடித்தவர்கள் முன் மட்டுமே வெளிப்படும் என்பார்கள்; அவனுக்கோ பிடித்த இடம், நான்கு சுவர்கள் கொண்ட அவனது அறை மட்டும்தான். யாரிடமும் பகிராத வலியை அவைகளிடம் கொட்டித் தீர்ப்பான். ஆனால் இப்போது, புதிதாக உயிருள்ள ஒரு ஜீவன் அவனது அழுகையையும் சந்தோஷத்தையும் கேட்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

அர்ச்சனாவிடம் அதிகம் பகிராததைக்கூட மதுராவிடம் பகிரும் அளவிற்கு அவர்களுக்குள் நட்பு வளர்ந்திருந்தது. அர்ச்சனாகூட ஒருகட்டத்தில் பொறுமையிழந்து சலித்துக்கொள்வாள். ஆனால், சலிப்பின்றி மிகப் பொறுமையாகக் கேட்டு, அதற்குத் தீர்வும் தருவாள் மதுரா! அவளைப்போல ஒரு தாய் தனக்குக் கிடைத்திருக்கலாம் என்று சிறுபிள்ளையாய் மனமேங்கியது.



Advertisement

யாரோ ஒருவள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, பெற்ற தாய்க்கு இல்லை என்பதே அவனது ஆதங்கம்.

திக்குவாயாகப் பிறந்தது அவனது தவறில்லையே! அதனால் நிராகரிக்கப்படுவதில் அவனது தவறு என்ன இருக்கிறது? எதற்கும் லாயக்கற்றவன் என்று முத்திரை குத்திவிட்டார்.

அதோடு, அதிக விலைக்கு அவனை விற்கவும் தயாராகிவிட்டார். மாட்டைப்போலப் பேரம் பேசுகிறார். மகனின் உணர்வையோ மனதையோ புரிந்துகொள்ளாது, அவரது சுயநலத்துக்காக இன்னொரு வீட்டிற்கு அடிமையாக அனுப்ப நினைக்கிறார். மகனின் சந்தோஷத்தைவிட, அவனால் கிடைக்கப்போகும் வரதட்சணைக்குத்தான் மதிப்பு அதிகம்.

Advertisement

வெளியே இன்னும் அவர் கத்திக்கொண்டுதான் இருக்கிறார். இவன்தான் அவரிடம் வாதாடாமல் அறைக்குள் வந்து கதவைச் சாத்தினான்.

Advertisement

மதுரா கொடுத்த நம்பிக்கையுடன் வீடு வந்தவனுக்கு, தாய் கேட்ட கேள்வி நிலை குலைய வைத்தது.

“எவகூட தினமும் ஊர் சுத்திட்டு வர்ற நீ? வேலை தேடிப் போறேனு நினைச்சா, பொம்பளப் புள்ளகூட ஊர் சுத்திட்டு இருக்கியா?”

நாராசமாக இருந்தது அவரது கேள்வி.

Advertisement

“யா… யார்… கூடவும் ஊ… ஊர் சுத்தல. வே… வேலை வி… வி.. விஷயமாதான் வெ…வெ… வெளிய போ… போனேன்…” என கோபத்துடன் சொன்னான்.

“பொய் சொல்லாத, எதிர்த்த வீட்டு சியாமளா புட்டு புட்டு வச்சிட்டா! நீ ஒருத்தி பின்னாடி பைக்கில சுத்துறதும், அவ வீட்டுக்கு போறதுமா இருக்கியாமே! உண்மையச் சொல்லு, யாரவ?”

“அ… அ… அவங்க எ… என் ஃப்ரெண்டுமா…”

“ஆங்! ஃப்ரெண்டாம்! இப்படித்தான் அர்ச்சனாவையும் ஃப்ரெண்டுனு சொன்ன, அப்புறம் காதலிக்கிறேனு வந்து நின்ன! இவளையும் ஃப்ரெண்டுதான் சொல்ற, அப்புறம் காதலிக்கிறேனு வந்து நிப்பியா? கொன்னு போட்டுருவேன். உனக்கு ஒன்னுமில்லாதவளக் கட்டி வைக்கிற அளவுக்கு எனக்குப் பெரிய மனசு இல்ல. அப்படியும் அவதான் வேணும்னு கட்டிட்டு வாசல்ல வந்து நின்ன, வீட்டுப் படிய மிதிக்க விடமாட்டேன். வெளிய போய் வாழ்ந்தாலும் ரெண்டு பேரையும் நிம்மதியாவே வாழ விடமாட்டேன்; அவளை அசிங்கப்படுத்தி ஓட ஓட விரட்டி விட்டுடுவேன்! ஒழுங்கா என் அண்ணன் மகளைக் கட்டு!” என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்ல,

“எ… எ… என்னால முடியாது. நா… நா… நான் அ… அ… அவளைக் கல்யாணம் ப… ப… பண்ணிக்க மாட்டேன்…” என்று பிடிவாதம் பிடித்தான்.

“அப்போ உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காது. நடக்கவும் விட மாட்டேன்… என் பேச்சை நீ கேட்கலல, பார்ப்போம்டா நீ எப்படி கல்யாணம் பண்ணிட்டு வாழ்றேனு. உருப்படியா உன்னால ஒரு வேலைக்குப் போக முடியுதா? திக்குவாயா இருக்கிற உனக்கு யாருடா வேலை கொடுப்பா?! உனக்கு என்னடா திறமை இருக்கு! உன்னால எப்படிடா பொழைக்க முடியும்?

உன்னை என் அண்ணன் மருமகனா ஏத்துக்கிறதே பெருசு! எல்லா அந்தஸ்தும் சொத்தும் சேர்த்து தேவதையாட்டம் பொண்ணையும் தர்றேனு சொல்லுது, தாலி கட்ட உனக்கு வலிக்குதோ! இதோ பாரு, வெள்ளிக்கிழமை அண்ணன் வீட்டுக்குப் போறோம். அங்க போய் நீ கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொல்ற, இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று மிரட்ட,

அதற்கும் அவரிடம் பதிலுக்குப் பதில் பேசி வாதாடாமல் அறைக்குள் வந்துவிட்டான்… மீண்டும் மீண்டும் அவனுக்குள் ‘உனக்கு என்ன திறமை இருக்கு? திக்குவாயனுக்கு யாருடா வேலை கொடுப்பா?’ என்ற கேள்விகள் மட்டுமே ஓடின. அவனது அத்தனை நம்பிக்கையும் வற்றிப்போனது. மீண்டும் ‘தன்னால் முடியாது’ என்று உள்ளுக்குள் ஜெபிக்க ஆரம்பித்துவிட்டான்.

அன்று முழுவதும் அறைக்குள் அடைந்து பசியோடு கிடந்தவன், மறுநாள் காலையில் மதுராவின் அழைப்பில்தான் விழி திறந்தான்.

“ஹ… ஹ… ஹலோ துரா! எ… எ… என்ன இ… இந்த நேரத்துல?”

“சாரி யூரன், டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

“இ… இல்ல துரா! சொ… சொ… சொல்லுங்க.”

“உங்களுக்கு ஒருமுறை ஞாபகப்படுத்தத்தான் கூப்பிட்டேன். லேட் பண்ணிடாம சீக்கிரமா வந்துடுங்க” என்றாள்.

பெருமூச்சு விட்டவன், “துரா!” என்றான்.

“என்ன யூரன்?”

“எ… எ… என்னால முடியுமா?”

“ப்ச்… நிச்சயமா முடியும்! உங்களை நீங்க முதல்ல நம்புங்க! சீக்கிரமா வாங்க, காத்துட்டு இருக்கேன்” என்றாள்.

“ம்ம்…” என்று போனை வைத்தவனுக்கு, தாயின் வார்த்தைகள் மீண்டும் ஒலிக்க, காதுகளைப் பொத்திக்கொண்டான்.

பின் குளித்துக் கிளம்பி வந்தவனுக்கு அவர் எதுவும் சமைத்து வைத்திருக்கவில்லை. தாயைக் கண்டான். அவருக்கு மட்டும் சேமியா செய்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார். மணியைப் பார்த்தான். ஏதாவது சமைத்துச் சாப்பிடலாம் என்றால் நேரமில்லை; அங்கிருந்து சென்றுவிட்டான்.

மதுரா வீட்டிற்குத்தான் வந்தான். “வாங்க யூரன்! இதோ ஒரு டென் மினிட்ஸ்” என்று அவள் உள்ளே செல்ல, அவனோ மரகத்திடம் பேசிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

“சாப்பிட்டியாப்பா?” மெல்ல அவனது கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டார்.

கண்ணீர் இமையைத் தாண்டி வழிந்துவிடுமோ என்று பயந்தவன், கண் சிமிட்டி அதை மறைத்தபடி, “நீங்க?” என்றான்.

“இல்லப்பா, இனிமேதான் பாப்பா கொண்டு வருவா!” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இரண்டு தட்டுகளில் இடியாப்பத்தின் மேல் பாயா ஊற்றிக்கொண்டு வந்தாள்.

தாயிடம் ஒரு தட்டைக் கொடுத்துவிட்டு, மதியூரனிடம் ஒன்றைக்கொடுத்தாள். அவனோ அதிர்ந்தான்.

“நா… நா… நான் சா… சா… சாப்பிட்டேன் துரா!” என்று மழுப்பினான்.

“இருந்தாலும் இன்னைக்கு எங்களோடு இன்னொரு முறை சாப்பிடுங்க…” என்றவள், இன்னொரு தட்டில் இடியாப்பத்தை எடுத்துக்கொண்டு வந்து அவர்களோடு உண்டாள்.

மதியூரனுக்குப் பசி; வேகமாக இடியாப்பத்தை உள்ளே இறக்கினான். மேற்கொண்டு அவள் வைக்கத் தடுக்காமல் சாப்பிட்டான். இரு பெண்களும் அவன் பசியைப் புரிந்துகொண்டு எதுவும் கேட்கவில்லை. “போதும்” என்று அவனாகச் சொன்ன பின்தான் அவனை விட்டாள் மதுரா!

இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். நேராக ஸ்டுடியோவிற்கு வந்துவிட்டனர்.

அவனை நிற்கச்சொல்லிவிட்டு, இவள் மட்டும் மேனேஜரிடம் சென்றாள்.

“வாம்மா! ரெக்கார்டிங் ஆரம்பிச்சிடலாமா?” என்று கேட்டார்.

“ஆரம்பிக்கலாம் சார்! அப்புறம் சார்…” என்று மீண்டும் இழுக்க,

“என்னம்மா?”

“நேத்து ஒரு வாய்ஸ் அனுப்பியிருந்தேனே, நீங்ககூட கேட்டுட்டு அழைச்சிட்டு வரச் சொல்லியிருந்தீங்களே! அவரும் வந்திருக்கார் சார்” என்றாள்.

“அப்படியா, வரச்சொல்லும்மா” என்றார். அவனைக்கையசைத்து அழைக்க, அவனும் நடுக்கத்துடன் அவர் அருகே வந்தான்.

“சொல்லுங்க சார், உங்க பெயர் என்ன? என்ன படிச்சிருக்கீங்க? இதுக்கு முன்னாடி டப் பண்ணிருக்கீங்களா?”

“நா… நா… மதியூரன். வி… வி… விஷுவல் க.. க.. கம்யூனிகேஷன் ப… பா… படிச்சிருக்கேன். இ… இ… இ… இதுக்கு முன்னாடி வா… வா… வாசிச்சது இ… இ.. இல்லை” என்றான் பயத்தில்.

“நேத்து நீ அனுப்பினது இவரோட குரலா? எப்படிம்மா?”

“சார் பேசும்போதுதான் கொஞ்சம் திக்குவார். வாசிக்கும்போது கண்டிப்பா தெரியாது சார். ஒருமுறை வாய்ப்புக் கொடுங்க” எனக் கெஞ்சினாள்.

நாடியில் கைவைத்து யோசித்தவர், “சரிம்மா! முதல்ல உன் டப்பிங் முடிச்சிட்டு, பிறகு இவரைப் பேச வைக்கலாம். நீ வாம்மா” என்றார்.

“இதோ வர்றேன்” என்றவள், “யூரன், ரிலாக்ஸா இருங்க! என்னோட ரெக்கார்டிங் முடிஞ்சதும் நீங்கதான். தைரியமா இருங்க, வந்துடுறேன்” என்று அவனை விட்டுத் தூரம் நடந்தாலும், அவளது எண்ணமெல்லாம் அவனாகவே இருந்தது. அவனுடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

மனமில்லாமல் டப்பிங் அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கென்று கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டைப் பார்த்துவிட்டு, விளம்பரத்தில் பேசுபவர்களின் வாயசைவிற்கேற்பக் கொடுக்கப்பட்ட வசனங்களை அழகாகப் பேசினாள். இரண்டு மூன்று விளம்பரங்கள் அடுத்தடுத்துப் பேசி முடித்தவள், கண்ணாடித் தடுப்பிற்கு அந்தப் பக்கம் கையை உயர்த்திக் காட்டியதும் அவசர அவசரமாக வெளியே வந்தாள். மேனேஜரை நோக்கிச் சென்றவள், “சார், அவரை அழைச்சிட்டு வரட்டுமா?” என ஆர்வமாகக் கேட்டாள்.

“என்னம்மா நீ ரொம்ப ஆர்வமா இருக்க! வரச்சொல்லும்மா பார்க்கலாம்” என்றார் சிரிப்புடன். அவளும் வேகமாக மதியூரனை நோக்கிச் சென்றாள்.

இருக்கையின் ஓரத்தில் பயத்தில் அமர்ந்திருந்தான். அவனது காதில் தாயின் வார்த்தைகளே கேட்க, உள்ளுக்குள் நடுங்கி, பதற்றத்துடன் இருந்தான்.

அவன் தோளைத் தட்டி, “வாங்க யூரன்” என்றாள்.

அவள் கைகளைப் பற்றி, “எ.. என… எ… என்னால மு… முடியும்னு தோணல துரா! இ… இ… இங்கிருந்து போ… போயிடலாம்” என பயத்தில் திணறினான்.

“உங்களால முடியும் யூரன். இவ்வளவு தூரம் வந்துட்டுப் போகலாம்னு சொல்றீங்க! அப்படியே போனாலும் உங்களால் நிம்மதியா இருக்க முடியுமா? வாய்ப்பை விட்டுட்டோம்னு உங்க மனசாட்சியே உங்களைத் தூங்க விடாது! உங்களுக்கு வேலை கிடைக்குதோ இல்லையோ, இந்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துங்க யூரன், ப்ளீஸ்!” எனக் கண்களைச் சுருக்கிக் கெஞ்சினாள்.

தனக்காக இல்லையென்றாலும் அவளுக்காகப் பேச வேண்டும் என்று எண்ணியபடி அவளோடு சென்றான்.

மேனேஜரின் உதவியாளர் உள்ளே சென்று அனைத்தையும் கவனித்துவிட்டு வந்தவன், விளம்பரத்தை அவனுக்குப் போட்டுக் காண்பித்தான். அவனும் பார்த்துவிட்டுத் தலையசைக்க, அறைக்குள் அனுப்பி இருந்தார்கள்.

மைக்ரோபோனை மாட்டிக்கொண்டவன், ஒருமுறை மதுராவையும் பார்த்தான்… கண்களை மூடித் திறந்து நம்பிக்கை தந்தாள்.

“ரெடி, டேக் ஒன்” எனக் கண்ணாடிக்குப் பின்னே நின்று சொல்ல, இவனும் மைக்கை நெருங்கினான்.

தனக்கு முன்னே ஓடிக்கொண்டிருந்த ஒரு காபி விளம்பரத்தில்தான் பேச வேண்டும்…

“உங்க காலையை… இனிமையா தொடங்க ஒரு perfect choice…” இந்த வரிகளைத்தான் சொல்ல வேண்டும்.

காதோரம் வியர்வைத் துளிகளோடு தாயின் வேண்டாத வார்த்தைகள் ஒலிக்க, அந்த இரண்டு வரிகளைச் சொல்ல அத்தனை போராட்டம் உள்ளுக்குள்.

“உ… உங்க.. கா… கா… காலை” என அவன் தடுமாற, “கட்” என்றனர். இதேபோல இரண்டு மூன்று தடவை நடக்க, மேனேஜர் கோபமானார்.

“வாட் இஸ் திஸ் மதுரா! ஒரு திக்குவாயைக் கூட்டிட்டு வந்து பேசச் சொல்லி என் நேரத்தை நீ வீணாக்குற? நேத்து அனுப்பின வாய்ஸ்க்கும் இவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததுபோல இருக்கு! என் நேரத்தை நீ வீணாக்கிட்ட மதுரா” என அவளிடம் சத்தம் போட, அவளோ அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்க… உள்ளுக்குள்ளே தலைகுனிந்து நின்றான் மதியூரன். தாயின் வார்த்தைகள் அங்கே அவனது நம்பிக்கை, தைரியத்தை ஜெயித்துவிட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!