Skip to content
Post Views: 676
அத்தியாயம் 15
காலை எழுந்ததில் இருந்தே சலசலவென பேச்சு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
Advertisement
ரத்னாவும் எழிலும் தான் ரூமிற்குள் பேசி கொண்டிருந்தார்கள். இங்கே வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. கார்த்திக்கு உடல்நிலை இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. முதல் இரண்டு நாட்கள் மட்டுமே ரத்னா மகனுடன் ஹாலில் படுத்து கொண்டார். அதன் பிறகு எழிலுடன் ரூமிற்குள் தான் படுத்து கொள்கிறார்.
இரவும் நீண்ட நேரம் அறையில் பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் கேட்டது. இப்பொழுது மீண்டும் விடி காலையிலே பேச்சு சத்தம் கேட்கவும், அப்படி என்னத்த பேசுவாங்க என்று கார்த்திக்கு மலைப்பாக இருந்தது.
Advertisement
Advertisement
அம்மா இப்படி சிரித்து கலகலப்பாக பேசியது அப்பா இருந்த நாட்களில் தான் என்று மகனுக்கு தோன்றியது. அந்த எண்ணமே எழில் மீது ஒரு வித அன்பை ஏற்படுத்தியது.
நாளை முதல் கல்லூரிக்கு செல்ல இருக்கிறான். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக எதாவது உண்ண வேண்டும். காரம் உப்பு புளிப்பு என்று எதையும் நிறைய சேர்க்க கூடாது என்று மருத்துவர் கூறி இருந்தார்.
Advertisement
அதன் படி, கஞ்சி, இட்லி, குழைந்த சாதம், அவித்த காய்கறிகள், சூப் என்று சத்தான ஆகாரத்தை பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தார் ரத்னா.
எழிலரசி தான் சென்று பொருட்கள் எல்லாம் வாங்கி வருவாள். ‘உனக்கு ஹிந்தி தெரியுமா? தனியா எப்படி போவ?’ என்று பயந்த ரத்னாவை சமாளித்து வெளியே சென்று வருவதற்குள் போதும் போதும் என்றானது பெண்ணுக்கு.
“எங்க அம்மாவே பரவாயில்ல போலயே” என்றாள் கடுப்பாக ஒரு நாள்.
“என்னை நம்பி அனுப்பி இருக்காங்க எழிலு. நான் தானே உனக்கு பொறுப்பு” என்றார் ரத்னாவும் பதிலுக்கு வேகமாக.
“இங்க பாருங்க ஆன்ட்டி, என்னை உங்க பொறுப்புல அனுப்பலை, உங்களை தான் என் பொறுப்புல அனுப்பி இருக்காங்க. வீட்குள்ளவே இருந்தா, எப்படி எல்லாம் வாங்குறது? எப்படி சமைக்கிறது? எப்படி உங்க மகன் உடம்பை தேத்துறது? எப்படி ஊருக்கு கிளம்பறது?” என்று பதிலுக்கு மல்லுக்கு நின்றாள்.
ஆரம்பத்தில் முட்டிக்கொண்டாலும், எழிலின் நடவடிக்கைகளை பார்த்து அதன் பிறகு ரத்னா எதுவும் சொல்வது இல்லை.
இருட்டிய பிறகு தனியாக எல்லாம் செல்ல மாட்டாள். மிகவும் பொறுப்பான பெண். தைரியம் இருக்குமே தவிர அசட்டு துணிச்சல் இருக்காது. அதற்குள் அக்கம் பக்கம் எல்லாம் பேசி நட்பாகி, எங்கே என்ன கிடைக்கும், என்று விசாரித்து எல்லாம் வாங்கி வந்துவிடுவாள்.
“இன்னும் இரண்டு நாள் லீவ் போடுறியா கார்த்தி?” என்றார் ரத்னா.
“இல்லம்மா, கிளாஸ் மிஸ் ஆனா கஷ்டம். பக்கத்துல தானே, முடியலைன்னா வந்துடறேன்” என்று கூறி கல்லூரிக்கு கிளம்பினான்.
சூப், ஜூஸ், காய்கறிகள் முதற்கொண்டு, ரத்னா சமைத்திருந்த எல்லாவற்றையும் சின்ன சின்ன டப்பாக்களில் அழகாக பேக் செய்தாள் எழில்.
“இதே மாதிரி டப்பா நம்ம ஊருக்கு போகும் போது, விக்கிக்கும் தமிழுக்கும் வாங்கிட்டு போலாம் எழிலு” என்றார் ரத்னா ஆசையாக.
நேற்று தான் இதை எல்லாம் வாங்கி கொண்டு வந்திருந்தாள் எழில். அனைத்தையும் சிறிய லஞ்ச் பேக்கில் வைத்து கார்த்தியை வழி அனுப்பினார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது வெளியே போய்ட்டு வாங்களேன்” என்றான் கார்த்தி கிளம்புவதற்கு முன்.
ரத்னாவிற்குமே எழிலை எங்கேயாவது கூட்டி செல்ல வேண்டும் என்ற எண்ணம்.
“இன்னும் ரெண்டு நாளைக்கு வேண்டாம். நீங்க காலேஜ்ல சமாளிச்சுப்பீங்கன்னு தைரியம் வரட்டும், அப்புறமா போலாம்” என்றாள் எழில் அலட்டிக்கொள்ளாமல்.
கார்த்தி உதட்டில் அவனது மில்லிமீட்டர் சிரிப்பு பூத்தது.
எழிலின் இந்த எதார்த்தமான பாங்கு அம்மா மகன் இருவரையும் கவர்ந்தது.
அதன் பிறகு ரத்னா விக்கியுடனும் காமாட்சி அம்மாவுடனும் பேசினார்.
எழிலும் வீட்டிற்கு அழைத்து பேசிவிட்டு, இருவரும் சேர்ந்து காலை உணவை முடித்தனர்.
அன்று கல்லூரிக்கு சென்று வந்த கார்த்தி களைப்பாகத்தான் இருந்தான். இருபது நாட்களாவது காய்ச்சல் இருக்கும் என்று மருத்துவர் ஏற்கனவே கூறி இருந்தார்.
அன்று மாலை நெட்டை பார்த்து ப்ரோக்கோலி சூப் வைத்து கொடுத்தாள் எழிலரசி.
இந்த நேரத்தை பயனப்டுத்தி ரத்னாவிடம் சமையல் கற்றுக்கொண்டிருக்கிறாள். சிலது யூ ட்யூப் பார்த்தும் செய்வாள்.
“உன் கை மனம் ரொம்ப நல்லா இருக்கு எழிலு. நான் சொல்லி கொடுத்து சமைக்கிறதே, என்னை விட நீ நல்லா செய்ற” என்று மனமார பாராட்டினார் ரத்னா.
“எங்க அம்மாகிட்ட சொல்லுங்க ஆன்ட்டி” என்றாள் எழில் மகிழ்ச்சியாக.
“விக்கி பொறந்தப்ப கண்ணத்தான் பொண்ணு பொறக்கலைன்னு வருத்தப்பட்டாங்க எழிலு. ஆனா எனக்கு அப்படி வருத்தமே இல்ல, எந்த குழந்தையா இருந்தா என்ன அத்தான், ஆரோக்கியமா இருந்தா போதும்னு சொல்லுவேன். இப்ப உன்கூட இருக்க இந்த நேரத்துல, எனக்கும் ஒரு பொண்ணு இருந்திருக்கலாம்னு ஆசையா இருக்கு” என்றார் அவள் கன்னத்தை ஆசையாக தடவி கொடுத்து.
எழிலுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி கன்னத்தை அனுராதா தான் தடவி கொடுப்பார். ரத்னாவுடன் செலவழிக்கும் நேரம் அவளுக்கு அனுராதவை நினைவு படுத்தியது. அவருடன் இருக்கும் நெருக்கம் ரத்னாவுடன் ஏற்படுவதாக தோன்றியது. இந்த சூழல் அவளை அனுராதாவின் இழப்பில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக மீட்டது என்றே கூறலாம்.
விக்கி ரத்னாவிடம் “அம்மா என்னை பத்தி எல்லாம் கவலையே படாதே, இன்னும் ஒரு இரண்டு வாரம் இருந்து நல்லா ஊர் எல்லாம் சுத்தி பார்த்துட்டு வா.. இங்க என் காட்டுல மழை தான்.. ராஜ உபச்சாரம் தான்” என்று மகிழ்ச்சியாக கூறி இருந்தான்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு ரத்னா எந்த ஒரு கவலையுமின்றி, அடுத்து என்ன என்ற யோசனையின்றி, சரியாக செய்கிறோமா என்ற பயமின்றி இலகுவாக இருந்தார்.
ஒரு வாரம் சென்ற பிறகு, கார்த்திக்கு காலையிலேயே அனைத்தையும் சமைத்து கட்டி கொடுத்து அவனை அனுப்பி விட்டு, எழிலும் ரத்னாவும் ஊர் சுற்றி பார்க்க கிளம்பி விடுவார்கள்.
ஒருவாரம் லீவ் எடுத்ததற்கே கார்த்திக்கு படிப்பதற்கு நிறைய சேர்ந்து போய்விட்டது. அதனால் அவனால் இவர்களுடன் சனி ஞாயிறுகளில் கூட வர முடியவில்லை.
“ரொம்ப தேங்க்ஸ் எழிலு, எங்க அம்மாவை ரொம்ப வருஷம் அப்புறம் இப்படி ரிலாக்ஸ்டா பார்க்குறேன். என்னால உங்க கூட வர முடியல, நீ வந்திருக்கலைனா அம்மாவும் நானும் நிஜமாலுமே கஷ்டப்பட்டிருப்போம்” என்றான் உள்ளார்ந்து.
“இட்ஸ் ஓகே பாஸ்.. நான் கூட கொல்கத்தா பக்கம் எல்லாம் வந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி பார்த்தா நாம எல்லாருமே உங்க டைபாய்டு காய்ச்சலுக்கு தான் நன்றி சொல்லனும்” என்றாள் சிரித்து கொண்டே.
இவன் கல்லூரி வளாகத்தை சுற்றி பார்க்கவே இரண்டு தினங்கள் ஆனது. அதன் பிறகு அங்கே லோக்கலில் உள்ள கோவில்கள் பூங்கா என்று அனைத்தையும் பார்த்துவிட்டு, கொல்கத்தா சுற்றி பார்த்தனர்.
இவர்களுடன் ஹரியானா பையன், ருத்ரான்ஷ் நன்றாக ஒட்டிக்கொண்டான்.
தினமும் அவனுக்கும் சேர்த்து உணவுகளை எல்லாம் கொடுத்துவிட்டனர் ரத்னாவும் எழிலும்.
கார்த்தி எதற்கு என்று விழிக்கவும், “எல்லாம் ஒரு கால்குலேஷன் தான் பாஸ்” என்றாள் எழில் ஒற்றை கண்ணடித்துக்கொண்டு.
இவர்கள் கொல்கத்தா சுற்றி பார்க்க சென்ற பொழுதுகளில் அவனை கார்த்திக்கு துணைக்கு வைத்து விட்டு சென்றனர்.
“இது தான் அந்த கால்குலேஷனா?” என்று கார்த்தி சிரித்துக்கொண்டான்.
அடுத்த இரண்டு வாரங்கள் போனதே தெரியவில்லை.
கார்த்தி ஓரளவிற்கு இயல்பு நிலைக்கு திரும்பினான். “இனி ஜாக்கிரதையா பார்த்துக்கணும் கார்த்தி, உணவுல ரொம்ப கவனம் இருக்கணும். காசு பத்தி யோசிக்காத டா.. இன்னும் ரெண்டு மாசம் இந்த வீட்லயே இருப்பா, ருத்ரான்ஷையும் துணைக்கு சேர்த்துக்கோ. வீட்லயே சமைச்சு சாப்பிடு.. அப்புறம் ஹாஸ்டல் போயிக்கலாம்” என்றார் ரத்னா.
கார்த்தி தான் இவர்களை ஊருக்கு கிளம்புமாறு கூறினான். என்னதான் அங்கே எல்லாரும் பார்த்து கொண்டாலும், அம்மாவின் கடை, தம்பி என்று இவனுக்கு தான் கவலையாக இருந்தது.
அடுத்த இரண்டு நாட்கள், ரத்னாவும் எழிலும் கார்த்தி இலகுவாக சமைத்துக்கொள்ள எல்லாம் தயார் செய்தனர். சத்து மாவு , ராகி மால்ட், மாசாலா பொடி, பருப்பு பொடி என்று.
கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு கார்த்தி, ரத்னா எழில் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“ரொம்ப தேங்க்ஸ் எழில். நிஜமாலுமே நீ செஞ்ச இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்” என்றான் கார்த்தி.
எழில் பதில் சொல்லாமலே சிரித்து கொண்டாள்.
“அம்மா உங்க கையால ஒரு காஃபி குடிக்கணும்னு ஆசையா இருக்கு” என்றான் அன்னையிடம் ஆசையாக.
கார்த்திக்கு காய்ச்சல் வந்ததில் இருந்தே பால் சேரவில்லை. “உனக்கு சேறுமான்னு தெரியலையே” என்றார் அவர் சங்கடமாக.
“கொஞ்சமா கொடுங்க ஆன்ட்டி, ஒன்னும் பண்ணாது”, என்றாள் எழில்.
இவர்கள் இருவருக்கும் மட்டும் பால் வாங்கி வைத்திருந்தனர். இருக்கும் பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூவருக்கும் கலந்து கொண்டு வந்தார் ரத்னா.
கார்த்தி, கண்களை மூடி, காபியின் வாசனையை நுகர்ந்து பார்த்தான்.
ரத்னா ஆசையாக மகனின் முகத்தை பார்த்தார்.
“இப்படி தான் எழில் கண்ணத்தானும் செய்வாங்க. முதல்ல வாசனை தான் பிடிப்பாங்க”
“நாகு, உன் காஃபி வாசனையே போதும், குடிக்க கூட வேணாம்னு சொல்வாங்க” என்றார் அந்த நாட்களின் நினைவில். அவர் குரலே அவ்வளவு மிருதுவாக ஒலித்தது.
“உங்க கல்யாணம் காதல் கல்யாணமா ஆன்ட்டி? கண்ணத்தான்னு சொல்லும் போதே அப்படி உருகுதே உங்க வாய்ஸ்..”
கார்த்தி அமைதியாக இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு காஃபியை சொட்டு சொட்டாக ரசித்து குடித்துக்கொண்டிருந்தான்.
“எங்களது லவ் மேரேஜ் தான் எழிலு. சினிமால வர மாதிரி, சுவர் எல்லாம் ஏறி குதிச்சு ஓடி வந்தோம்..”
“அட! அப்படியா, சூப்பர்… நீங்க லவ் சொன்னீங்களா? இல்ல உங்க கண்ணத்தானா?”
“கண்ணத்தானுக்கு என்னை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும். ஆனா அவரா சொல்ல மாட்டாருன்னும் எனக்கு தெரியும். அதனால நான் தான் முதல்ல சொன்னேன்”
“பாருடா.. அப்புறம் எங்க மீட் பண்ணுனீங்க முதல்ல? உங்க கதையை கொஞ்சம் சொல்லுங்களேன். ஆனா சோகமாலாம் இருக்காது இல்ல? எங்க அத்தை மாமா லவ் ஸ்டோரி கேட்டு கடைசில ஓரே அழுகாச்சி சீன் தான்..”
“சே சே.. எங்க லவ் ஸ்டோரிலாம் ஒரே ஜாலி தான்.. பைட் சீன் லாம் இருக்கும்.. ஆனா அழுகாச்சி சீன் இருக்காது..”
கார்த்திக்கு அப்பா அம்மா காதல் கல்யாணம் என்று தெரியும். அதனால் சொந்தகாரர்கள் யாரும் அதிகம் வருவதில்லை என்றும் தெரியும். அப்பா இருக்கும் வரை அவர்கள் காதல் கதை எல்லாம் கேட்கும் வயசோ பக்குவமோ அவனுக்கு இருக்கவில்லை. அதன் பிறகு அவனுக்கு அம்மாவிடம் கேட்கவேண்டும் என்று தோன்றவுமில்லை. அவனை பொறுத்தவரை அப்பா அம்மா மிகவும் அன்யோன்யமான தம்பதியினர், அவ்வளவே.
எழில் கேட்கவும், அவனும் ஆசையாக கதைகேட்க அமர்ந்து கொண்டான்.
error: Content is protected !!