கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் சென்று இருக்கும், அவள் கோவிலுக்கு சென்று. ஆனால் இப்போது நினைத்தாலும் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது அங்கு கோவிலில் நடந்ததை நினைத்தால். முன்பெல்லாம் அவள் இப்படி இல்லை, அவளிடம் யார் பேசினாலும், அவள் கூறும் பதில்கள், ‘ஏன் டா பேச வந்தோம்’, என்று நினைக்க வைத்து விடுவாள். இப்போதும் அப்படி தான் நினைக்கிறார்கள் , ஆனால் அவள் தான் பதில் பேசாமல் அவர்களை கதற விடுகிறாள். அவள் இப்படி இறந்த காலத்திற்கும் , நிகழ் காலத்திற்கும் ஒப்பீடும் போதெல்லாம் ஒரு ஆங்கில வாக்கியம் ஞாபகம் வரும்.” TIME CHANGES AND PEOPLE DO CHANGES WITH TIME” . ஆனால் அவளிற்கு அப்போது தெரியவில்லை அவளே அந்த வாக்கியத்திற்கு உதாரணம் ஆவாள் என்று.
******************************
அன்று கோவிலில் அவள் பூசாரியிடம் அர்ச்சனை செய்ய சொல்லி விட்டு திரும்ப, சந்திராவும் சாந்தியும் வந்துக் கொண்டு இருந்தார்கள்.சந்திரா கயிறு கேட்கலாம் என்று பூசாரியை பார்க்க,அவரோ பூஜை செய்ய ஆயத்தமாகி கொண்டு இருந்தார். சரி மீண்டும் ஒரு முறை சாமியை தரிசிக்கலாம் என்று நினைத்து பூசாரியை அழைக்கவில்லை . அப்படியே அவர் எதிரே பார்க்க அங்கே இனியா அவள் குழந்தைகளிடம் எவ்வாறு சாமி கும்பிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.
சந்திரா தன் பக்கத்தில் நிற்கும் சாந்தியிடம் ” சாந்தி, அந்த முக்கு வீட்டுக்கு புதுசா குடி வந்த பொண்ணு தானே இது “.
” ம் . ஆமா கா. இந்த பொண்ணு தான்.”
” அக்கா அது மட்டும் இல்ல, அந்த பொண்ணு,இரண்டு குழந்தைங்க அப்புறம் தொணைக்கு குழந்தைகள பார்த்துக்க ஒரு வயசான அம்மா மட்டும் தான் வந்து இருக்காங்களாம். புது வீட்டுக்குப் பால் காய்ச்சும் போது கூட யாரும் வரல போல , கா. ஆனாலும் பாருங்களே இந்த பொண்ணுக்கு ரொம்ப தைரியம் தான் .புது இடம் புது மக்கள் என்று எந்த பயமோ தயக்கமோ இல்லை. என்ன சொல்லுங்க இந்த அளவுக்கு தைரியம் லாம் நமக்கும் இல்ல , நம்ம புள்ளைக்கும் இல்ல கா. ” சந்திராவுக்கு சாந்தி கூற வருவது சட்டென்று புரிந்து விட்டது.சந்திராவும் சாந்தி கூறுவதை ஆமோதிப்பது போல் தலை அசைத்து இனியாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.தங்கள் வீட்டு பிள்ளைகள் தங்கள் துணையின்றி ஒரு துரும்பை கூட அசைக்கமாட்டார்கள்.எதற்கு எடுத்தாலும் “அம்மா” வேண்டும் அவர்களுக்கு. ஆனால் இந்த பெண் வேலைக்கும் சென்று, குழந்தைகளையும் பார்த்து, சட்டென்று அவள் மேல் ஒரு பரிவு வந்து ஒட்டிக்கொண்டது. அவர் பார்த்தவரை வேலையை காரணம் சொல்லி குழந்தைகளின் வேலைகளை தவிர்ப்பதும், வேலையை காரணம் சொல்லி குழந்தைப் பிறப்பை தள்ளி வைப்பதும் ஈஸியான விஷயமாக போய் விட்டது.இதனால் தான் என்னவோ அவருக்கு அவளைப் பார்த்தவுடன் ஒரு வகை பாசம் வந்து விட்டது.அதற்குள் பூசாரியும் வந்து விட பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு, இனியா ஒரு தூணின் அருகே சென்று குழந்தைகளுடன் அமர்ந்துக் கொண்டாள். இவர்களும் பிரசாதத்தையும் கயிற்றையும் பெற்றுக் கொண்டு இனியாவிற்கு சற்று தள்ளி அமர்ந்தார்கள். சாந்தி தான் இனியாவிடம் முதலில் பேசினார்,
” அம்மாடி, நீங்க தான அந்த முக்கு வீட்டுக்குப் புதுசா குடி வந்து இருக்கீங்க.”என்றார்.இனியா அவரை திரும்பி பார்த்து ஆமோதிப்பதாக தலை அசைத்தாள். சாந்திக்கு கொஞ்சம் மனம் சுருங்கி விட்டது ” சரளமாக பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆமா இல்லை ஆவது சொல்லாம். சரி பட்டணத்தில் வளர்ந்த புள்ள அதான் அப்படி இருக்கும் போல . இங்க தான இருக்க போகுது,போக போக தெரிஞ்சுக்கும்.” என்று நினைத்துக் கொண்டு மேலும் பேச்சை வளர்த்தார் அவரிடம்.
” நான் சாந்தி,இவுக என் அக்கா சந்திரா. உன் குழந்தைகளா மா இவுங்க,அழகா இருக்காங்க” என்றார் சாந்தி.
“ஓ , சரிங்க மா” ,என்ற இனியா” உங்க வீடு எங்க மா இருக்கு.” என்று சாந்தியிடம் பேச்சை வளர்க்க வேண்டும் என்பதால் ஏதோ ஒரு கேள்வியை கேட்டாள்.
அதற்கு சாந்தி” இந்த ஊருல எங்க வீட தான் பெரிய வீடு என்று சொல்வாங்க ” என்று ஆரம்பித்த சாந்தி தன் புகுந்த வீட்டின் பெருமையை கூற ஆரம்பித்து விட்டார்.நடு நடுவே சந்திராவையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். எந்த பெண்தான் தனது வீட்டைக் குறை கூறுவாள். என்ன தான் வீட்டில் சின்ன சின்ன உரசல்கள் இருந்தாலும், மன நிறைவான வாழ்வு அவருடையது .
சாந்தி அனைத்தையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டு இருக்க. சந்திராவோ ,சாந்தியுடனும் இனியாவுடனும் பேசினாலும் அவரின் பார்வை சின்ன சிட்டுக்களை தான் வட்டமடித்தது. அவர்கள் அவரை மிகவும் ஈர்த்தார்கள். யாருக்கு தான் குழந்தைகளை பிடிக்காது. அதுவும் மழலைப் மொழியில் அவர்கள் எதாவது பிதற்றினால் இன்னும் இன்னும் அழகு. அவரால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை , ஆதிக்கு திருமணத்தைப் பற்றி பேச்சை எடுக்கும் போதே முடித்து இருந்தால், இந்நேரம் இவர்களைப் போல் ஒரு குழந்தையாவது பிறந்து இருக்கும் அல்லவா என்னும் யோசனை எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இவர் இந்த எண்ணங்களில் உழன்று கொண்டிருக்கும் போது இனியாவோ ஏற்கனவே கேட்டதை புதிதாக கேட்பது போல் பாசாங்கு செய்து கொண்டு இருந்தாள்.ஆம்,இனியாவிற்கு அவர்கள் குடும்பத்தைப் பற்றி ஓரளவுக்கு தெரியும்.இப்படி அங்க இருந்த மூவருமே ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க , சாந்தியோ அப்போது தான் இனியா கேட்ட கேள்விக்கு வந்தார்,” உங்க வீட்டுல இருந்து மூன்றாவது வீடு தான் எங்க வீடு மா. அப்புறம் உன் பேரு , உன் குழந்தைகள் பேரு என்ன மா.”
“ம். சரிங்க மா. நான் இனியா.என் பையன் பேரு சாத்விக். பொண்ணு பேரு ஷன்வி, மா.” என்றவள்
” சரிங்க மா . நான் கிளம்புறேன் வீட்டுக்குப் போய் குழந்தைகளுக்கு சாப்பாடு குடுக்கணும்.”
“சரி மா. நீ எப்படி மா வந்த .”
“என் வண்டில வந்தேன் மா.”
“சரி மா.பாத்து பத்திரமா போயிட்டு வா. “
இனியா அவர்கள் இருவருக்கும் பொதுவாக தலை அசைத்து விட்டு நகர்ந்தாள்.
அப்போது சந்திராவோ ” இன்னும் ரெண்டு வாரத்தில் மாரியம்மன் கோவில் காப்பு கட்டு . நல்ல சக்தி வாய்ந்த கோவில் மா.குழந்தைகள கூட்டிக்கிட்டு மறக்காம வந்துரு . “என்று இனியாவிடம் கூறினார்.
இனியாவும் அப்போது இருந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தாள், அவர் அவளை ஆராய்ச்சியாக பார்ப்பதும் தன் குழந்தைகளை பாசமாக பார்ப்பதையும்.
ஏதோ ஒன்று தனக்கு சாதகமாக நடக்கும் என்று நினைத்தாள். இதோ நடந்து விட்டதே. இனியாவை பொருத்த வரை இந்த ஆறு மாதத்துக்குள் அவள் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்பிட வேண்டும். அதற்கு மேல் ஒரு நாள் கூட இருக்க கூடாது.
ஆகையால் சந்திராவிற்கு சம்மதமாக தலை அசைத்து “என் வேலையை பொருத்து தான் மா, நான் வருவதும் வராமல் இருப்பதும். பார்க்கலாம் மா.”
சாந்தியோ ” இனியா மா , கேக்க மறந்துட்டேன் உன் வீட்டுக்காரர் பேரு என்ன மா. தம்பி என்ன மா பண்றார்.”
சற்று தயங்கினாலும் அவள் எதிர்பார்த்தது தான் என்பதால் மனப்பாடம் செய்து வைத்ததை சொல்லி விட்டு நகர்ந்தாள்.
“அவரு வெளிநாட்டுல வேலை பாக்குறாரு மா. அவரு பேரு ஆதித் மா.சரி மா . நான் போய்ட்டு வரேன்.”என்று சொல்லி கிளம்பிவிட்டாள்.
மனதில் இனம் புரியாத பயமும் படபடப்பாக வீட்டுக்கு வண்டியில் பறந்து விட்டாள். அப்போது தான் ஆதி அவளைப் பார்த்தது.
*********************************************
இன்று புதனாக இருக்க அவளுக்கு வேலைகளும் கம்மியாக இருக்க கல்லூரியில் இருந்து வீட்டுக்கு சீக்கிரமாக வந்து விட்டாள். பார்வதி அம்மாவிடம் குழந்தைகளை விட்டுட்டு வீட்டு வேலைகளை ஓரளவு முடித்து விட்டாள் . ஆறு மணி போல் குழந்தைகளை தயார் செய்து, அவள் கிளம்பும் போது தான் மிகவும் குழம்பி விட்டாள் . ஏதோ காதலனை சந்திக்க செல்லும் பெண் போல் அத்தனை படபடப்பாகவும் துள்ளல் உடனும் கிளம்பினாள். இந்த ட்ரெஸ் ஆ, அந்த ட்ரெஸ் ஆ, இந்த ஜிமிக்கி யா, அந்த ஜிமிக்கி யா என அனைத்தையும் போட்டு குழப்பி விட்டு கடைசியில் அவளுக்கு பிடித்ததை உடுத்தி விட்டு , ஒரு முறை கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். பார்வதி அம்மாள் அவள் தோற்றத்தை பார்த்து பெண்ணான அவரே அவள் அழகில் சற்று அசந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
அழகை ஆராதிப்பதில் தவறு இல்லையே. அவர் வேலைக்கு சேர்ந்த நாள் முதலாக பார்க்கிறார் அவளை, ஒரு நாள் கூட தன்னை சிரத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டதில்லை. மனம் சந்தோஷமாக இருந்தால் அனைத்தும் அழகாக இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டார்.
“அம்மாடி, இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க மா”
” பார்வதி,மா”, என்று அழகாக சினுங்கினாள் இனியா.
அவளுக்கு தெரியும் என்ன தான் வெளியே மகிழ்வாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளே செத்து கொண்டிருக்கிறாள்.
இன்றைய நாளுக்கு பிறகு அனைத்தையும் மாற்றம் பெற வேண்டும். இல்லை விதியின் விளையாட்டில் அனைத்தும் மாறி இருந்தால் இங்கு இருந்து உடனே கிளம்பிட வேண்டும் என்று நினைத்து இருந்தாள்.
கோவிலில் அவள் நினைத்தது போலவே எல்லாம் நடந்தது ஒன்றை தவற , அவள் மனது.
ஆதியை சந்தித்தவுடன் அவள் மனம் அவளிடம் இல்லை. மனம் எப்போது அவள் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடும் என்று தெரியாததால் உடனே வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.
“”அச்சோ அச்சோ
என்னை உன்னிடம்
தந்தேனே வழியினில்
தொலைத்தாயே
அன்பே அன்பே
என்னிடம் நானே இல்லாமல்
என்
சொல்வேனோ சொல்
ஹோ ஹோ””
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.