Skip to content
Post Views: 11,269
அத்தியாயம் 22
இன்னமும் கதவின் பக்கம் தான் இருவரும் நின்றிருந்தனர் அனன்யாவும் விவேக்கும்.
Advertisement
சிரித்தபடி நின்ற அர்ஜுன் விஜயலக்ஷ்மியைப் பார்க்க, அவள் டேபிளில் கவிழ்ந்து கொண்டதில் அப்படி ஒரு சிரிப்பு அவனுக்கு.
“என்ன டா பண்ற நீ?” என்று அனன்யா கேட்கவும் அவர்கள் அருகில் வந்தான் அர்ஜுன் தண்ணீருடன்.
Advertisement
Advertisement
“போன் பண்ண வேண்டியது தானே அனு? நேத்து தான் டாக்டர் ஃபுல் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க!” என்றபடி தண்ணீரை அர்ஜுன் நீட்ட, வாங்கிக் கொண்டு விஜயலக்ஷ்மி அருகில் சென்று அமர்ந்தாள் அனன்யா.
இன்னமும் டேபிளில் கவிழ்ந்து கிடந்த விஜயலக்ஷ்மி நிமிரவே இல்லை.
Advertisement
“மாமா!” என கதவருகேவே நின்ற விவேக்கைக் கண்டு சிறு வெட்கப் புன்னகை அர்ஜுன் கொடுக்க,
“நான் எதுவுமே கேட்கலையே டா!” என அவன் தோளில் கையிட்டு உள்ளே வந்தான் விவேக்.
“எந்திரி டி!” அனன்யா விஜயலக்ஷ்மியை சொல்ல, அர்ஜுனுக்கு புன்னகை தாளவில்லை.
“அண்ணி! நான் அப்பவே கிளம்புறேன் சொன்னேன்! இவங்க தான் கேட்கல!” என்றபடி எழுந்து விஜயலக்ஷ்மி சொல்ல,
“உனக்காக தான் அனு சமைச்சேன்! அதான் கொண்டு போறதுக்கு முன்னாடி கொஞ்சமா விஜியை சாப்பிட்டு பார்க்க சொன்னேன்!” என்றான் அர்ஜுனும் தொடர்ந்து.
“ஆக? என்ன சொல்ல வர்றிங்களாம் ரெண்டு பேரும்?” இன்னும் கறாராய் அனன்யா கேட்க,
“இன்னும் என்ன சந்தேகம் அனு உனக்கு?” என்ற விவேக்கை குறுக்கிட்ட அனு,
“இதெல்லாம் எனக்கு வேணாம்! வாயை திறந்து பதில் வேணும்! ஏற்கனவே பட்டது போதாதா?” என்றாள்.
“அனு!” விவேக் கண்டிப்புடன் அழைக்க,
“இப்ப ஏன் நீ டென்ஷன் ஆகுற அனு? நாங்களே வந்து பேசிருப்போம்! உன்னை ஏன் ஸ்ட்ரைன் பண்ணிக்குற?” என்றான் அர்ஜுனும் அனன்யாவை.
“கேட்டதை தவிர எல்லாத்துக்கும் பதில் வருது!” என்ற அனன்யா,
“நீ என்ன டி? இப்பவும் பேச மாட்டியா?” என விஜயலக்ஷ்மியிடம் கேட்க,
“அண்ணி! கல்யாணம் பண்ணிக்குறேன்!” தயங்கி தயங்கி வெட்கத்தோடு விஜயலக்ஷ்மி சொல்ல,
“சூப்பர்! இவளுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாருங்க மாமா!” அனன்யா உடனே சொல்ல,
“க்கா!” என அவள் முடிக்கும் முன் அர்ஜுன் அழைத்து முறைத்து நின்றான் அனன்யாவை.
“அப்படி பார்த்தா?” அனன்யாவும் திருப்பி கேட்க,
“சரிஈஈ! நானும் விஜியும் கல்யாணம் பண்ணிக்குறோம்! நீங்க தான் நடத்தி வைக்கணும்! போதுமா?” அர்ஜுன் கேட்டு அனன்யா முன் நிற்க,
“அப்படி சொல்லு டா!” என்று எழுந்து விவேக் அர்ஜுன் முன் வந்து கட்டிக் கொண்டான்.
“அண்ணி!” என விஜயலக்ஷ்மி அனன்யா தோள் சாய,
“நிஜமா தானே?” என்றாள் அனன்யா விஜயலக்ஷ்மியிடம்.
“சத்தியமா அண்ணி! நாங்க கல்யாணம் பண்ணிக்குறோம்!” என்றாள் அதில் விஜியும்.
உள்ளே வந்து இருவரையும் பார்த்ததுமே தெரிந்து கொண்டாள் தான் எனினும் அதை இருவரும் கூறி கேட்கும் போது தான் மனம் முழுதாய் நிம்மதியை அடைந்தது அனன்யாவிற்கு.
“நான் அப்பவே சொன்னேன்ல ரெண்டு பேரும் லவ் பன்றாங்கனு எனக்கு சந்தேகமா இருக்குன்னு! நீங்க தான் நம்பல” அனன்யா சொல்ல,
“அடியேய்! உன் தம்பி தான் விஜியை லவ் பண்ணி இருக்கான். விஜி ஒன்னும் விரும்பி வர்ல!” விவேக் பதில் தர,
“ஆமாமா! விரும்பாம தான் விடிஞ்சும் விடியாமலுமா கிளம்பினாளா அவனைப் பார்க்க?” அனன்யாவும் விடாமல் பேச,
“அனு அனு! ஏன்?” என்று அர்ஜுன் முறைக்க,
“இப்படி தான் டா! எதாவது ஏழரையை என்கிட்ட இழுக்கலைனா உன் அக்காக்கு தூக்கம் வராது! இன்னைக்கு மட்டும் அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு சொல்லட்டும்! இனி பார்த்துட்டு எல்லாம் இருக்கமாட்டேன்! இன்னும் நூறு நாள்கிட்ட இருக்கு டெலிவரிக்கு. நூறு நாளும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருவேன்! பார்த்துக்கோ!” என அர்ஜுனை மிரட்டினான் விவேக்.
“தேவையா?” என அர்ஜுன் பார்க்க, அங்கும் இங்கும் விழித்த அனன்யாவும்,
“இல்ல இல்ல! நீங்க சொல்றதெல்லாம் கேட்டு சமத்தா இருக்கேன்!” என்று சொல்ல, விவேக் நம்பவே இல்லை என்ற பார்வை பார்த்தான் மனைவியை.
“அக்காக்கு இவ்வளவு பயமா என்ன உங்க மேல?” அர்ஜுனும் சந்தேகமாய் கேட்க,
“என்னவோ பத்த வைக்க போறா! அதுக்கு முன்னாடி இப்படி தான் பொசுங்குற மாதிரி நடிப்பா!” விவேக் சொல்ல,
“அடுத்த மாசமே இவங்க கல்யாணத்தை முடிச்சுடுவோம்! நான் அங்க இங்கனு அசையவே மாட்டேன்! நீங்களே கல்யாண வேலை எல்லாம் பாருங்க! நல்லா கிராண்டா நடக்கணும்! ப்ளீஸ் ப்ளீஸ்!” என்று அவள்தன் எண்ணத்தை கூற,
“சொன்னேன்ல? இனி ஒரு வருஷத்துக்கு அவ பிளான் மைண்ட்ல ஓடிட்டு இருக்கும்! சரியான கேடி டா உன் அக்கா!” என்றான் விவேக் புன்னகைத்து.
அர்ஜுன் தான் அதில் அமைதியாகிவிட்டான். “ஓகே தானே விஜி? வேற யாரும் வேணாம்! நம்ம பேமிலி மட்டும்! ஆனா கிராண்டா இருக்கனும்! நிச்சயம் நின்னப்போ எல்லாம் என்னென்ன பேசினாங்க! அப்படிப்பட்டவங்க எல்லாம் வரவே கூடாது!” அனன்யா தன் எண்ணத்தை எல்லாம் சொல்ல,
“ஹே அனு!” என நிறுத்தி இருந்தான் அர்ஜுன்.
“என்ன டா? உன் பிளான் என்ன? உனக்கு ஓகேனா எல்லாரையும் கூப்பிட்டு நடத்தினாலும் எனக்கு ஓகே தான்!” அனன்யா சொல்ல,
“அதெல்லாம் நிறுத்தி நிதானமா பேசிக்கலாம்! இன்னுமொரு அஞ்சு மாசம் இல்ல ஆறு மாசம் போகட்டும்!” என்றான் அர்ஜுன்.
“ஏன் ஏன்?” அனன்யா கேட்க, விஜயலக்ஷ்மியும் கேள்வியாய் பார்த்தாளே தவிர்த்து அவன் முடிவு எதுவாயினும் அவளுக்கு இனி சம்மதம் தான்.
“சொன்னா கேளு அனு! உன் விருப்பப்படி கிராண்டா பண்ணலாம். ஆனா நீ உன் ஹெல்த்தை பார்த்துக்கணும் ஃபர்ஸ்ட்! நேத்து டாக்டர் சும்மா சொல்லல! மாமா கோவமும் நியாயம் தான். டெலிவரிக்கு அப்புறமாவே மேரேஜ் வச்சுக்கலாம்!” என்றான் அர்ஜுன்.
“சென் பர்சன்ட் கரெக்ட்!” என்ற விஜயலக்ஷ்மி,
“அண்ணி! இங்க இருக்குறது கயல் அத்தையாம்! அர்ஜுன் சொல்லிட்டாங்க! அவங்க இல்லாம எங்க கல்யாணமா? நோ வே!” என்றாள் அனன்யா வயிற்றில் கைவைத்து.
அனன்யாவின் எண்ணமும் அது தான். நிச்சயம் தனக்கு பெண்ணாய் அன்னையே தன்னிடம் வருவார் என்று தான் நினைத்திருக்கிறாள். அதையே சகோதரனும் சொல்லி இருக்க, இனி என்ன சொல்லிவிட முடியும் என பார்த்தாள் அனன்யா.
“அது மட்டுமா? அந்த பேபிமா வந்த அப்புறம் தான் உங்க தம்பி ஸ்வீட்ஸ் கூட…” என விஜயலக்ஷ்மி அர்ஜுனைப் பார்த்தபடி சொல்ல வர, வேகமாய் தலையசைத்த அர்ஜுன்,
“தொலைச்சுடுவேன் உன்னை!” என ஒற்றை விரலை நீட்டி மெதுவாய் சொல்ல ஏன் என பார்வையால் கேட்டவளை “ம்ம்ஹும்ம்!” என்று மட்டும் தலையசைத்து வைத்தான்.
“செண்டிமெண்ட்டா சொல்றான்! அப்புறம் என்ன அனு?” விவேக் கேட்க,
“சரி தான்! ஆனா எனக்கு இதுங்க மேல அவ்வளவு எல்லாம் நம்பிக்கை இல்லயே!” என வெளிப்படையாய் அனன்யா சொல்ல, அர்ஜுன் விஜயலக்ஷ்மி இருவரும் அமைதியாகிவிட்டனர்.
“ரெண்டும் பெத்த படிப்புன்னு பேரு மட்டும் தான். அதுவும் இவ டாக்டர் வேற! வெளில சொல்லிக்க முடியுமா குழந்தைங்க தெரியாம பண்ணிடுச்சுங்கன்னு? இவன் வாயே திறக்க மாட்டான்.. இவ ஊர்லயே இருக்க மாட்டா! இவங்கள நம்பி ஆறு மாசமா?” என கண்களை விரித்து அனன்யா ஆச்சர்யம் காட்ட,
“இல்ல அண்ணி! சத்தியமா இனி நான் பின்வாங்க மாட்டேன்! ஆறு மாசம் இல்ல ஆறு வருஷமே ஆனாலும் நான் காத்துட்டு இருப்பேன்! அர்ஜுனை மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்!” என விஜயலக்ஷ்மி சொல்ல, மென்னகை அர்ஜுனுக்கு.
“எது எது? ஆல்ரெடி நீங்க உடைச்ச ஆறு வருஷமெல்லாம் போதாதா? இன்னுமொரு ஆறு வருஷமா? வார்த்தைக்கு கூட சரியா கணக்கு சொல்ல மாட்றா விவேக்! இவளை எப்படி ஆறு மாசம் நான் காவல் பாத்துட்டு இருக்க?” அனன்யா கவலை போல சொல்ல,
“ப்ச்! விடு அனு! அதான் நான் இருக்கேனே!” அர்ஜுன் சொல்லவும்,
“நீ மட்டும் என்ன பண்ணிடுவியாம்?” என்று அனன்யா கேட்டாள்.
“இவ்வளவு நாள் டைம் இல்ல! இனிமே எடுத்துக்குறேன்!”
“என்ன டைம் டா?” விவேக் கேட்க,
“மாமா! நீங்களும் டியூப்லைட் மாதிரி கேட்குறீங்க? எங்களுக்குன்னு டைம் வேணாமா? நாங்க இந்த ஆறு மாசமும் எங்களுக்காக எடுத்துக்குறோம்!” என்றான் புன்னகையோடு அர்ஜுன்.
“ஓஹ்! தள்ளி நின்னு லவ்னா என்னனு தெரியாம லவ் பண்ணிட்டு இருந்தியே! அந்த லவ்வை பண்ண போறிங்களா ரெண்டு பேரும்?” என்று அனன்யா ராகம் போட்டு இழுத்து கேட்க,
“அண்ணி!” என அனன்யா தோளில் சாய்ந்து முகம் சிவக்க அர்ஜுனை விஜயலக்ஷ்மி பார்க்க, கண்களை சிமிட்டி புருவம் உயர்த்தினான் அவளிடம் அர்ஜுன்.
“மாமா! கொஞ்ச நாள் இவன் கூட டிஸ்டன்ஸ் மெய்ன்டைன் பண்ணுங்க! மாமா மாதிரி இல்லாம பிரண்ட்டா பழக்கி வச்சிருக்கீங்க இவனை! இவன் மொக்கை போடுறதை எல்லாம் கேட்க வேண்டியதா போய்டும் அப்புறம்!” என நிறுத்தாமல் கிண்டலை தொடர்ந்தாள் அனன்யா.
“நீ நிறுத்த மாட்ட! வா! முதல்ல சாப்பிடு! அப்புறமா பேசலாம்!” என்ற அர்ஜுன் அனைத்தையும் எடுத்து வைக்க,
“நீ வேணா அவளுக்கு ஊட்டி விடு! நான் என்னனுலாம் கேட்க மாட்டேன்!” என்று இன்னும் அனன்யா பேச,
“அச்சோ அண்ணி!” என விஜயலக்ஷ்மி தான் மாட்டிக் கொண்டாள்.
அர்ஜுன் புன்னகையோடு அவர்களுக்கு பரிமாறி தானும் அமர,
“ரொம்ப சந்தோசமா இருக்கு அர்ஜுன்! இது தான் நாங்க எதிர்பார்த்ததும்!” என்றான் விவேக்.
“இந்த ப்ரணித்தாவை…” என அப்போதும் அனன்யா பல்லைக் கடிக்க,
“விடு அனு! இப்பவும் நல்லது தானே நடந்திருக்கு?” என சமாதானம் செய்தான் விவேக்.
“இல்ல விவேக்! இதெல்லாம் எப்பவோ எவ்வளவோ சந்தோசத்தோட நடந்திருக்க வேண்டியது!” என அனன்யா கோபமாய் சொல்லவும் விஜயலக்ஷ்மி முகமும் வாட, அர்ஜுனைக் கண்டாள்.
சமாதானமாய் அர்ஜுன் அவளிடம் தலையசைக்க, “சில விஷயங்கள் எல்லாம் கடவுள் கையில தான்! ஏன் ப்ரணித்தா நினைச்சது நடந்துச்சா என்ன? கடைசில இவங்க மனசு தானே ஒத்துப் போச்சு? நாம நினைச்சதை கடவுள் கொஞ்சம் லேட்டா நமக்கு குடுத்துருக்கார்! ஒவ்வொண்ணுக்கும் எதாவது காரணம் இருக்கும்!” என்றான் விவேக்கும் மனைவியை சமாதானப்படுத்தி.
“சாப்பிடு அனு! எதுக்கு அதையே நினைச்சுட்டு!” அர்ஜுன் சொல்ல,
“நீ வேணா நல்லவனா இரு! ஆனா நான் நம்ம பெரிய மாமாவைப் பார்த்து பேச தான் போறேன்! ப்ரணி பண்ணினதை சொல்ல தான் போறேன்!” என்றாள் அனன்யா சாப்பிடபடி.
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்! நீ முதல்ல உன்னையும் குழந்தையையும் மட்டும் இனி பாரு! மாமா சொன்ன மாதிரி ஒரு நாலு மாசம் கொயட்டா இரு!” என்றான் அர்ஜுன்.
“அட போ டா!” என்ற அனன்யா ஏழாம் மாதம் வளைகாப்பிற்கு வரும் போது அவள் தாய்மாமாவிடம் ப்ரணித்தாவை கூறிவிட வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள்.
அதற்கு முன்பே அர்ஜுன் வேறு ஒன்றை நிகழ்த்தி விடுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.
சாப்பிட்டு விவேக் அனன்யாவுடன் விஜயலக்ஷ்மியும் கிளம்பத் தயாராக, மனமே இல்லை அர்ஜுனுக்கு அவளை அனுப்பிட.
“ஆபீஸ் போனுமா நீ?” என்றாள் அனன்யா அர்ஜுனிடம்.
“ஹ்ம்! இல்ல! நாளைக்கு தான். ஆமா! நீங்க ஏன் மாமா இன்னைக்கு போகல?” அர்ஜுன் கேட்க,
“எங்க விட்டா உன் அக்கா? காலையில விஜி சாப்பிடாம போய்ட்டா.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.. விஜி வந்ததும் என்னனு கேட்டுட்டு நீங்க ஆபீஸ் போங்கனு இவ சொன்னதை கேட்டு நானும் உக்காந்தது தான் மிச்சம்!” என்றான் விவேக்.
“உங்களுக்கு குழந்தை வர போகுது! உனக்கு கல்யாணமாக போகுது! இனியாச்சும் ஆம்பளையா பொறுப்பா வேலையை பாருங்க டா!” என்று போகிற போக்கில் அனன்யா சொல்ல,
“பார்த்தியா கொழுப்பை! விரட்டி விரட்டி வேலை வாங்கிட்டு… பேச்சை பாரேன்!” என்றான் விவேக். பேசியபடி அனைவருமே எழுந்து கதவு வரை நடக்க ஆரம்பித்து இருக்க, அனன்யா முன்னே சென்றிருந்தாள்.
“பேச்சோட பேச்சா அக்கா உங்களை டா’ன்னு சொல்லிட்டா மாமா! அதை நீங்க கவனிக்கலையா இல்ல கண்டுக்கலயா?” என அர்ஜுனும் கிண்டலாய் கேட்க,
“அப்படியா? இரு அவளை!” என வீரமாய் சென்றான் விவேக்.
அவர்களுக்கு பின்னே வந்து கொண்டிருந்த விஜயலக்ஷ்மி தன்முன் நின்றிருந்த அர்ஜுனை கவனிக்காமல் இடித்து நின்றுவிட,
“சாரி!” என்றாள்.
“என்ன டல்லாகிட்ட?” அர்ஜுன் கேட்க,
“இல்லையே!” என்றாள் உடனே.
“இல்லையே!” என்றான் அர்ஜுனும்.
“என்னவோ ஒரு மாதிரி… மிஸ் பண்ற மாதிரி…” என்று அவள் சொல்லவுமே ரசித்துப் பார்த்தவனின் பார்வை அவளில் அங்கும் இங்கும் என விழ,
“ப்ச்! நான் கிளம்புறேன்!” என்று நகர்ந்தவள் கைகளைப் பிடித்து,
“ஒரு நிமிஷம் வா!” என்று ஒரு அறைக்கு அழைத்து செல்ல,
“அர்ஜுன்?” என்றவள் அழைப்பை எல்லாம் கேட்காதவன் தன் அன்னை அறையில் அவர் புகைப்படத்தின் முன்வந்து நின்றான்.
பார்த்ததும் மீண்டும் கண்களில் தவிப்புடன் கண்ணீரும் எட்டிப் பார்க்க,
“இப்ப என்ன அழுகை?” என்று முறைத்தவன்,
“இன்னைக்கு ரொம்ப ஸ்பெஷல் நாள்! நேத்து மார்னிங் வரை நினைக்கல இப்படி ஒருநாள் வரும்னு! இன்னைக்கு அம்மாவை பார்க்கலைனா எப்படி?” என்றவன்,
“பார்த்திங்களா ம்மா?” என விஜயலக்ஷ்மியின் தோளில் கைவைத்து அவளோடு சேர்ந்து நின்று அன்னையிடம் பேச, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டவளுக்கு ‘தன்னால் தானே!’ என்ற இந்த ஒரு எண்ணத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.
“உங்களுக்கு புடிச்ச பொண்ணு! எனக்கும் புடிச்ச பொண்ணு! ஓகே தானே?” என்றான் அன்னையிடம்.
இத்தனை நாளும் அன்னையின் படத்தின் முன் அமைதியாய் வந்து நின்று செல்வானே தவிர்த்து பேச்சு வார்த்தைகள் வெளிவராது அவனிடம்.
இன்றைய மனநிலை முற்றிலும் வேறு! என்னவோ மனம் அத்தனை நிம்மதியை தேடி அலைந்து பெற்றிருந்த ஒரு மகிழ்ச்சி. அவளோடு அன்னையிடன் சென்று நிற்க சொல்லி மனம் சொல்லவும் இதோ! வந்து நின்றுவிட்டான்.
“ஓய்! என்ன?” அர்ஜுன் விஜயலக்ஷ்மியிடம் கேட்க,
“சந்தோசமாவும் இருக்கு! இவ்வளவு நாளும் மிஸ் பண்ணிட்டேனேன்னு பாரமாவும் இருக்கு!” என்றாள் சாய்ந்தபடியே!
தன் முன் நெற்றியை அவள் நெற்றியோடு முட்டிக் கொண்டவன்,
“அதுக்கு தான் இன்னும் டைம் இருக்கே! என் கூடவே நீ! உன் கூடவே நான்!” என்றான்.
“ஹ்ம்! ஆனா ஆறு மாசம்?” என்றதில் சிரித்தவன்,
“வேண்டாமா?” என்று கேட்க,
“கண்டிப்பா வேணும்! இந்த ஆறு மாசமும் நீங்க சொன்ன மாதிரி நமக்காக வேணும்! நிறைய பேசணும்! உங்களோட நான் மட்டும் இருக்கனும்!” என்றதில் அவனின் மெல்லிய புன்னகை அவளை தடுமாற வைக்கவும் எழுந்து கொண்டாள் மெதுவாய்.
“போய்ட்டு வா டா!” அவள் கன்னம் தட்டி அர்ஜுன் சொல்ல, கயல்விழி புகைப்படத்தை பார்த்தவள் தலையசைத்து வெளியே வந்தாள்.
“பச்ச குழந்தையை ஏமாத்துற மாதிரி ஏமாத்தி உங்களை அனுப்பி விட்டுட்டு உங்க தங்கச்சியை கடத்திட்டு போயிருக்கான்! நீங்களும் என்கிட்ட வந்து கேள்வி கேட்டுட்டு இருக்குறீங்க!” என தன் கணவனை இவர்கள் வருவதற்குள் ஒரு பிடி பிடித்துவிட்டாள் அனன்யா.
“அவன் தான் டி பெரிய வேலையா பார்த்து விட்டுட்டு போய்ட்டான்!” என விவேக் புலம்பியபடி நின்றான் மனைவியிடம்.
விஜயலக்ஷ்மியோடு அர்ஜுன் வரவும் விவேக் தன்னால் முடிந்த மட்டும் அர்ஜுனை முறைத்துப் பார்க்க, கொஞ்சமும் கண்டு கொள்ளவோ அசரவோ இல்லை அவனின் மாப்பிள்ளை.
“நீ வீட்டுல தனியா என்ன பண்ண போற? பேசாம அங்க வர்றியா மாமா வீட்டுக்கு?” காரில் அமர்ந்ததும் கேட்டாள் அனன்யா.
மகிழ்ச்சியான செய்தி தான் மகிழ்ச்சியான நாள் தான். ஆனாலும் வீட்டில் தனியே இருந்து இவன் எதையும் நினைத்து மனது வருந்தி இருந்து விடுவானோ என கேட்டாள்.
“வீட்டுல இருக்கவா ஆபீஸ் போகலைனு சொன்னேன்? கொஞ்சம் வெளில வேலை இருக்கு அனு! அப்புறமா வர்றேன்! நீங்க பத்திரம்!” என சொல்லி விஜயலக்ஷ்மிக்கும் தலையசைத்து அனுப்பி வைத்தான்.
அவர்கள் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் அர்ஜுன் தன் வீட்டில் இருந்து கிளம்பி வந்து நின்றது தன் தாய்மாமா வீட்டில் தான்.
**************************************
“ஏன்டா எல்லாரும் இப்படி இருந்தா பெரியவங்க நாங்க என்ன தான் பண்றது? அவளை நாலு கேள்வி கேட்கணும் நினச்சேன்! இப்படி நீங்களும் அவ கூட சேர்ந்தா?” என கலையரசி மகனையும் திட்ட,
“போனதும் சாப்பாடு போட்டு வாயை அடச்சிட்டான் மா! அதுல மறந்துட்டோம்! இப்ப என்ன? அதான் எல்லாம் நல்ல விஷயம் தான்னு சொல்றோம்ல?” என்று விவேக் சொல்ல,
“சந்தோசம் தான்! போன் போகவே இல்ல உங்களுக்கு! நீங்களாவது ஒரு போன் பண்ணிருக்கணும்ல? எனக்கு அர்ஜுன் மேல எந்த கேள்வியும் இல்ல! உன் தங்கச்சிய நினைச்சா தான் திக்குன்னு இருக்கு!” என்றார் கலையரசி நம்பாமல்.
“இப்பவே கூட நாள் குறிச்சு பத்திரிக்கை அடிச்சி எல்லாருக்கும் குடுத்து வையுங்க! யார் வேண்டாம்னு சொன்னா!” என்ற விஜயலக்ஷ்மி தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள் மருத்துவமனைக்கு.
“என்ன டா இப்படி சொல்லிட்டு போறா?” கலையரசி கேட்க,
“பின்ன அவளை எதாவது சொல்லிட்டே இருந்தா? அதான் நாளை குறிங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்கனு சொல்லிட்டு போறா!” என்று அனன்யா சொல்ல, சந்தானமும் தானும் ஒரு முறை அர்ஜுனிடம் பேசுவதாய் கூறி இருந்தார்.
“விஜி விருப்பத்தோட தான் ம்மா சம்மதம் சொல்லி இருக்கா! ரெண்டு பேருமே சந்தோசமா தான் இந்த முடிவுக்கு வந்திருக்காங்க! இனி வேற எதுவும் பேச வேண்டாம்!” என்றான் விவேக்கும்.
“அப்படினா உடனே நாள் பார்த்து கல்யாணத்தை பண்ணிடலாம் டா. விஜியை நான் நம்பல!” என கலையரசி சொல்ல,
“நான் தான் சொன்னேன்ல?” என கணவனைப் பார்த்தாள் அனன்யாவும்.
“நானும் அதை தான் சொன்னேன் த்த! அர்ஜுன் தான் டெலிவரிக்கு அப்புறம் பார்த்துப்போம்னு சொல்லிட்டான்!” என்றதும் கலையரசி கணவனைப் பார்க்க,
“அவன் சென்டிமென்ட்டா பேபி வரட்டும்னு நினைக்குறான் ம்மா! அதோட இன்னும் ஒரு மாசத்துல வளைகாப்பு வைக்கணும்! அடுத்து பிரசவம்! சோ எல்லாம் முடியட்டும்! கல்யாணத்தை கிராண்டா வச்சுப்போம்!” என்று விவேக் சொல்ல,
“சரி தான் டா! எதுக்கும் நான் அர்ஜுன்கிட்ட பேசி பாக்குறேன்!” என்றார் சந்தானம்.
“அப்போ வளைகாப்பு என்ன சிம்பிளா பண்ற ப்ளனா?” அனன்யா விழிகள் விரித்து முகம் சுருக்கி கேட்க,
“கண்டிப்பா சிம்பிளா தான் வைக்கணும் அனு! இதுக்கெல்லாம் அடம் பண்ணிடாத! குழந்தை பிறந்த அப்புறம் நிறைய விழா இருக்கு! எல்லாத்தையும் உன் விருப்பம் போல எவ்வளவு ஆளை கூப்பிட்டு மேளதாளத்தோட கூட வச்சுக்குவோம். ஆனா வளைகாப்புக்கு நம்ம குடும்பம் கூட நம்ம நெருங்கன சொந்தம் உன் அம்மா கூட பிறந்த சொந்தம்னு கொஞ்சம் போதும்! கண்ணு விழுகும் டி!” என்று கலையரசி சொல்ல,
“மாமா! அப்போ குழந்தையோட பேர் வைக்குற ஃபன்க்ஷன் வீட்டுல சூப்பரா பண்ணுவோம்! அப்புறம் ஃபர்ஸ்ட் பர்த்டேக்கு மண்டபத்துல அதுவும் பெரிய மண்டபத்துல பண்ணிடலாம்! இடையில அர்ஜுன் விஜி மேரேஜ்! ஹப்பா! ஒன் இயர் ஜாலியோ ஜாலி தான்!” என்று அனன்யா விவேக் கூறியது போல ஒரு வருடத்திற்கான கனவுகளையும் கணக்குகளையும் சொல்ல, விவேக் புன்சிரிப்புடன் மனைவியை தான் பார்த்து நின்றான்.
அன்னையிடம் சண்டை இடாமல் அவர் சொல்லைக் கேட்டு உடனே தன் அடுத்தக்கட்ட திட்டத்தை தீட்டிக் கொண்டவளை பிடிக்காமல் தான் போகுமா என்ன?
*******************************************
மாலை தீபக் வீட்டினுள் வரும் போது ஹாலில் தான் அமர்ந்து டிவியை பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
“என்ன டா இன்னைக்கு சீக்கிரமா வந்துட்ட போல!” என்று கேட்டு வந்த தீபக், மோப்பம் பிடித்தவன் “என்னவோ செம்ம ஸ்மெல் டா! அதுவும் இந்த வீட்டுல?” என்று சொல்லி சமையலறை செல்ல, அர்ஜுன் பதில் கூறவில்லை.
இன்னமும் தீபக்கிடம் நடந்ததையும் கூறவில்லை.
“இவனை!” என உள்ளே சென்று பார்த்துவிட்டு பல்லைக் கடித்து அர்ஜுன் முன் வந்து நின்ற தீபக்கை என்ன என அர்ஜுன் பார்க்க,
“விதவிதமா செஞ்சி கொட்டிக்கிட்ட! ஓகே! எனக்கு அதுல இத்துனுண்டு வைக்கணும்னு தோணல! அதுவும் கூட ஓகே! ஆனா சிங்க் முழுக்க பாத்திரத்தை போட்டு வச்சியே அது யாருக்கு டா?” என்று கேட்க,
“ப்ச்! அதுவா! விஜி வாஷ் பண்றேன்னு தான் சொன்னா! நான் தான் நீ பார்த்துக்குவன்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டேன்! பாவம்! வந்த அன்னைக்கே கஷ்டப்படுத்த கூடாதுல்ல?” என்று அர்ஜுன் கூறவும் முதலில் அர்ஜுன் பேச்சை முழுதாய் கவனிக்காத தீபக் பாத்திரங்களை நினைத்து மலைத்து நின்றுவிட்டான்.
தொடரும்..
error: Content is protected !!