சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தவன், கதவு திறக்கும் ஓசை கேட்டுத் திரும்பினான். இலக்கியா உள்ளே நுழைவதைக் கண்டதும், சட்டையை அப்படியே கையில் பிடித்தபடி அவளை அமைதியாகப் பார்த்தான்.
Advertisement
“ஸாரி… நான் உள்ள கதவு சாத்தி இருக்கும்னு நினைச்சேன்,” என்றவளின் குரலில் லேசான தடுமாற்றம்.
Advertisement
“பரவாயில்லை… இது உன் அறை தான்,” என்றபடி சட்டையைக் கொடியில் மாற்றிவிட்டு, ஒரு சாதாரண டீசர்ட்டை எடுத்து மாத்திக்கொண்டான் கலை.
Advertisement
இலக்கியா அறையின் ஒரு ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமரப்போக, கலை அவளைத் தடுத்தான்.
Advertisement
“அங்க எதுக்கு உக்காருற? கட்டிலில் போய் படு. நேத்து அசதியே அதிகமா இருக்கும்,” என்றவனின் குரலில் அதிகாரமும் இல்லை, அதே சமயம் அலட்சியமும் இல்லை. ஒருவித இயல்பான அக்கறை மட்டுமே இருந்தது.
இலக்கியா அவனை நிமிர்ந்து பார்த்தாள். “பரவாயில்லை செல்வா… எனக்கு தூக்கம் வரல. சும்மா உக்காந்திருக்கேன்.”
“நான் தோப்புக்கு போறேன். முத்து வந்திருப்பான். ஓ வேலை ஏதாச்சும் இருந்தா இங்கன பாருத்தா.” என்று சொல்லிவிட்டு அவன் வெளியே கூடத்தை நோக்கி நகரப்போக, இலக்கியாவின் குரல் அவனை நிறுத்தியது.
“செல்வா…”
அவன் திரும்பி, “என்னத்தா?” என்பது போல் புருவம் உயர்த்தினான்.
“கோவில்ல வச்சு… பிரிஞ்சுக்கலாம்னு சொன்னீங்களே, நிஜமாவா? நான் உங்க வாழ்க்கையை மறுபடியும் பாழாக்குறேன்னு எனக்கு நல்லாவே தெரியுது. ஆனா என் சூழ்நிலை…” என்றவள் தொண்டை அடைக்கப் பேச்சை நிறுத்தினாள்.
கலை அவளை நோக்கி இரண்டடி நடந்து வந்து நின்றான். அவளது முகத்தையே கூர்ந்து பார்த்தான்.
“பாழாக்குறது, பாழாகுறது எல்லாம் நம்ம கைல இல்லத்தா. விதி பண்ற கூத்து. முதல்ல உனக்குள்ள இருக்கிற குற்ற உணர்ச்சியை தூக்கிப் போடு. நீ வேணும்னே எதையும் பண்ணலன்னு எனக்குத் தெரியும். சஞ்சுவுக்கு உடம்பு சரியாற வரைக்கும், உன் சொத்து பிரச்சனை முடியற வரைக்கும் நீ இந்த வீட்டு மருமகளா தான் இருப்ப. அதுக்கு அப்புறம்… ஓ விருப்பம்,” என்றவன் குரலில் ஒருவித முதிர்ச்சி இருந்தது.
இலக்கியாவுக்குள் என்னவோ செய்தது. இவ்வளவு புரிதலோடு பேசும் இந்த மனிதனுக்கு, தான் மீண்டும் ஒரு ஏமாற்றத்தைக் கொடுக்கிறோமே என்ற எண்ணம் அவளை உறுத்தியது.இலக்கியா தவித்துப் போனாள். குடும்பத்தின் பிக்கல் பிடுங்கல்களில் இருந்து விடுதலை கிடைத்தது போல் இருந்தாலும் மனம் குற்றவுணர்வில் தவித்து கிடந்தது. மகன் அறியாமல் ஒரு திருமணம் அதுவே நெஞ்சை அறுத்தது.
“சரி, நான் போய் முத்து கூட என்ன ஏதுனு பார்த்துட்டு வர்றேன். ஏதாச்சும் வேணும் னா ஆத்தா கிட்ட கேளு போட்டுத் தருவாக, ” என்று கூறிவிட்டு கலை வெளியேறிச் சென்றான்.
அவன் சென்றதும், கட்டிலில் மெதுவாகச் சாய்ந்தாள் இலக்கியா. தனத்தின் கண்டிப்பான அன்பும், கலையின் எதிர்பார்ப்பில்லாத இந்த ஆதரவும் அவளது பாரமான மனதிற்குச் சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தன.
அறியாமலேயே அவளது விழிகள் அசதியில் மூடத் தொடங்கின.
வெளியே வந்த கலை, திண்ணையில் அமர்ந்திருந்த காத்தமுத்துவிடம் சென்றான்.
“என்னடா முத்து, வண்டி விசயமா கூப்பிட்டீயா?”
“ஆமாண்ணே… கடையில இருந்து போன் வந்துச்சு. வண்டி ஸ்பேர் பார்ட்ஸ் வந்துருச்சாம். சாயந்தரம் போய் எடுத்துக்கலாம்,” என்றவன்,
கலையின் முகத்தைப் பார்த்துவிட்டு, “என்னண்ணே… ரொம்ப யோசனையா இருக்க?” என்றான்.
“ஒன்னுமில்லைடா. இந்த புள்ளைய நெனைச்சாதான்” என்று பெருமூச்சு விட்டான் கலை.
“அண்ணே… மயினியைக் குறை சொல்லாதீங்க. மயினி பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. அவங்களுக்கு உங்க ஆதரவு தான் இப்போ பெரிய பலம்,” என்றான் காத்தமுத்து அழுத்தமாக.
“தெரியுதுடா… ஆனா அந்த புள்ள மனசுல எதையோ போட்டு ஒழப்பிகிட்டு கெடக்குது. இந்த கல்யாணமாவது அதுக்கு நிம்மதிய தரட்டும்,” என்றபடி கலை தன் ராயல் என்ஃபீல்டைத் துடைக்கத் தொடங்கினான்.
சூழ்நிலைகள் அவர்களைப் பிரிக்க நினைத்தாலும், விதி அவர்கள் இருவரையும் அறியாமல் ஒன்றை ஒன்று பிணைக்கத் தொடங்கியிருந்தது!
அழகினியனிடம் நேற்று மாலை தான் திருமணம் நடந்தது பற்றி கூறி இருக்க அவனுக்கு அத்தனை நிம்மதி.
“நல்ல பொண்ணு கலை. அவங்க மேரேஜ் வேண்டாம் னு சொன்னதால தான் நானும் அவங்க முடிவுக்கு மதிப்பு தந்து அமைதியா இருந்தேன். இல்லைனா ஓவி முன்னாடியே உங்க ரெண்டு பேர் கிட்டயும் இதுபத்தி பேச சொல்லி இருந்தா”என்றான் அவன் சந்தோஷ மனநிலையுடன்.
கலைச்செல்வன் வாழ்வில் ஒரு நல்லது நடந்து விடாதா என்று அழகன் ஏங்கிய நாட்கள் எத்தனையோ … அத்தனைக்கும் மகுடம் வைத்தாற் போல திருமண செய்தியை கூறவுமே அத்தனை ஆசுவாசம் அவனுள்.
“உன் கிட்ட நிறைய பேசணும் னு தோணுது. சொல்லணும்”என்று கலை தயங்க
“நீங்க எப்படி னு தெரியாது கலை. பட் உங்களை என் அண்ணன் ஸ்தானத்தில் தான் வச்சிருக்கேன். என் கிட்ட உங்களுக்கு தயக்கமே வேண்டாம். நீங்க மனசு விட்டு பேச மாட்டீங்களா னு தான் நான் எதிர்பார்க்கிறேன்”என்றதில் நெகிழ்ந்தவன் விரைவில் சென்னை வருவதாக கூற சரியென்று சம்மதித்தான் அழகன்.
“இனியன் சார் முகம் இப்போ தான் பல்ப் போட்ட மாதிரி பளிச்சுனு இருக்கு. என்ன சுமதிமா”என்று சுமதியிடம் சொல்லி மகிழ்ந்தாள் அவள்.
“இருக்காதா பின்னே. அவன் ஆசைப்பட்ட ஒரு விஷயம் நடந்திருக்கு”என்று சுமதிக்குமே கலை இலக்கியாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தான்.
*********
திருமணம் ஆகி ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது.
சஞ்சய் நல்ல உறக்கத்தில் இருக்க அவனருகே அமர்ந்திருந்தாள் இலக்கியா. சற்று தள்ளி தான் கலை நாற்காலியில் அமர்ந்து இருந்தான். வீட்டிலேயே கிடந்தவளை கட்டாயப்படுத்தி தான் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான்.
வெரோனிகா வேறு நான்கைந்து முறை சஞ்சய் அவளை பார்க்க வேண்டும் என்று கேட்பதாக அழைப்பு விடுத்து கூறி இருந்தார். அதற்கும் எந்த எதிர்வினையும் காட்டாது இருந்தவளை அதட்டி மிரட்டி தான் அழைத்து வந்திருந்தான்.
“இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி உங்களை கேட்டுட்டு தூங்கினான்”என்று வெரோனிகா கிளம்பி இருந்தார்.
பிள்ளை வெகுவாக சோர்ந்து தெரிய கலை கடுப்பாக”ஒனக்கு என்ன ஆச்சு னு தெரியலத்தா பிள்ளைய கூட நெனைக்காம என்னன்னு வெறிச்சு கெடந்த நீ. அவன் பாவம் இல்லையா அழுதுருப்பான் போலருக்கு பாரு மூக்கு செவந்து கெடக்கு”என்று கடிந்து கொள்ள இலக்கியா மௌனமாய் மகனைப் பார்த்தபடி அமர்ந்து விட்டாள்.
இந்த ஒரு வாரமாக அதிகமாக அழுகிறோமோ என்று தோன்றியது அவளுக்கு. எப்போதும் கண்கள் கலங்கிய நிலையிலேயே இருக்க சொல்ல முடியாத சங்கடம். கலையோ முடிந்த அளவுக்கு அவளை தொந்தரவு செய்யாமல் அவள் முன் வராமல் தோப்பிலும் சந்தியாவின் பெற்றோர் வீட்டிலும் இருந்து கொண்டான். பகல் நேரத்தில் வேலை இருக்கிறது என்று கிளம்பி விடுபவன் உணவருந்தி முடித்ததுமே ஆடை மாற்றிக் கொண்டு சந்தியா (இறந்து போன அவனின் முதல் மனைவி) வீட்டிற்கு சென்று விடுவான்.
“என்னய்யா இது இந்த நேரத்தில் போய் அங்கே போறேன் னு நிற்கிற”கணேசனும் தனமும் சங்கடமாக கேட்க
“அந்த புள்ளைக்கு மனசுக்கு ஆவல போலத்தா. அது அழுது பாத்துருக்கியா நீ. இப்ப எல்லாம் கண்ணு கலங்குன மாதிரியே இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கிறேன். அதுவரைக்கும் இப்படி”என்றவன் “அத்தைக்கு வேற ரொம்ப முடியலை தான. கூட இருந்தா மாமனுக்கு தெம்பா இருக்கும்”என்று அவர்களை சமாளித்து விட்டு கிளம்பி விடுகிறான்.
தனமுமே கணேசனின் அறிவுரையின் பெயரில் அவளை அதிகம் தொந்தரவு செய்வதில்லை தான். இத்தனைக்கும் திருமணம் ஆகி வந்ததில் இருந்து அவளுக்கு சமையலறை எங்கே இருக்கிறது என்று கேட்டால் கூட தெரியாது. அந்த அளவிற்கு தன்னை தனிமைபடுத்திக் கொண்டாள்
தனிமையில் அவள் சற்று இயல்பாய் இருக்கக் கூடும் என்று எண்ணியதற்கு மாறாக இன்னும் இன்னும் பித்து நிலைக்கு தான் போனாள் இலக்கியா.
கலை என்ற ஒருவன் எங்கே போகிறான் வருகிறான் என்று கூட கேட்பதில்லை அவள். இடையில் ஒரு நாள் செல்வமும் சங்கரியும் மட்டும் வந்து பார்த்து விட்டு சென்றனர். செல்வம் பணம் வேண்டும் என்று செக் புத்தகத்தில் கையெழுத்து கேட்க அதை கூட எந்த வித மறுப்பும் இன்றி கையெழுத்து போட்டு கொடுத்தாள்.
மகளை அதிகத்திற்கும் படுத்தி விட்டோமோ என்ற எண்ணம் அவருள்.
“என்னம்மா ஏன் ஒரு மாதிரியா இருக்க”என்று தாள மாட்டாமல் கேட்டு விட்டார் செல்வம்.
“எனக்கென்ன நல்லா தான் இருக்கேன் டாட். நீங்க நினைச்ச மாதிரி மேரேஜ் ஆகிடுச்சே அப்புறம் என்ன டோன்ட் வொரி. செக் புக் ல எப்போ வேணும்னாலும் வந்து சைன் வாங்கிக்கங்க கொஞ்ச நாளைக்கு அப்புறம் ப்ராப்பர்டி எல்லாம் உங்க பையன் பேருக்கு மாத்திடுறேன் கவலைப்பட வேண்டாம் நீங்க”என்றாள் படபடவென்று.
“டாட் இதுக்கு எல்லாம் ஃபீல் பண்ணாதீங்க. நான் நல்லா இருக்கேன் டூ குட் நீங்க ஹாப்பியா இருங்க”என்று சொல்லி அவர்களை கிளப்பி விட்டாள்.
இதோ இப்போது மருத்துவ மனையில் மகன் விழிப்பதற்காக காத்திருக்க கலையும் அவளோடு தான் இருந்தான்.
“நீங்க கிளம்பறதுனா கிளம்புங்க. அவன் இப்போதைக்கு எழ மாட்டான்”என்றாள்.
“எனக் தெரியும் நீ பேசாம உட்காரு”என்று அதட்டி விட்டு வெளியே எழுந்து சென்றவன் கால் மணி நேரம் கழித்து இளநீரோடு வந்தான்.
“ம்ம்க்கும்”என்று செருமியவன் “எளநீ கொண்டு வந்தேன் குடிச்சுட்டு அப்புறம் மகனை பாரு”என்று நீட்ட கையில் வாட்டர் பாட்டில் தான் இருந்தது.
அவனை நிமிர்ந்து பார்க்கவும் “டப்பால ஊத்தி வாங்கிட்டு வந்தேன். கூட்டோட குடிக்க தெரியுமோ தெரியாதோனு தான்”என்று விளக்கம் கொடுக்க மீண்டும் அதே பார்வை அவளிடம்.
“நான் குடிச்சாச்சுத்தா நீயி குடி”என்றான் அவள் பார்வை உணர்ந்து.
அவள் குடித்து முடிக்கவும் சஞ்சய் எழுந்து கொள்ளவும் சரியாக இருந்தது.