Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 12

அத்தியாயம் 12

ராஜீவன் ராமமூர்த்தியின் புல்லட்டைத் தொட்டுப் பார்த்தபடி நின்றிருந்தான். அந்த வண்டியின் கைப்பிடியில் இன்னும் தந்தையின் கைரேகைகள் இருப்பது போல அவனுக்குத் தோன்றியது.

அந்த நொடியில் அவன் மனதிற்குள் பல கேள்விகள் எழுந்தன.ஒரு மனிதன் இறந்த பிறகு என்ன ஆகிறான்?ஒரு மனிதனுக்கு ஏன் இறப்பு  வருகிறது?

ஒருவர் இறந்தபின் அவரது உடலை தீயில் எரிக்கிறோம்,இல்லையென்றால் மண்ணில் புதைக்கிறோம்.ஆனால் அவருடைய உயிர் எங்கே போகிறது?
இந்த கேள்விகளுக்கு அவனிடம் பதில் இல்லை.



Advertisement

ஒரு மனிதர் இறந்த பின் அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள் மட்டும் நம்மிடம் தங்கிவிடுகின்றன.அவர்கள் பேசிய வார்த்தைகள்…சொல்லிக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்… அவர்கள் பின்பற்றிய கொள்கைகள்… நம்மீது காட்டிய அளவு கடந்த அன்பு… நம்மை பட்டை திட்டிய தருணங்கள்… நம்மை அணைத்துக் கொண்ட அந்தக் கைகள்…எல்லாமே அப்படியே நினைவுகளாக மாறிவிடும்.

அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற பிறகும்… எங்காவது இருந்து நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா?நாம் அவர்களை நினைத்து அழுவது அவர்களுக்குத் தெரியுமா?

“அப்பா…” என்று மனதிற்குள் அழைத்தால்… அந்தக் குரல் அவரைச் சென்றடையுமா?என்ற அவனின் கேள்விகளுக்கு காலம் எந்தப் பதிலும் சொல்லாமல் நின்றது.

Advertisement

ராஜீவனின் விரல்கள் மீண்டும் அந்தப் புல்லட்டின் கைப்பிடியைத் தடவின.
ஒரு நொடி கண்களை மூடியவன்… தந்தை அந்தப் புல்லட்டில் அமர்ந்து,
“ராஜீவா… வா, போலாம்…”என்று அழைப்பது போல உணர்ந்தான்.

Advertisement

கண்களை வேகமாக திறக்க…எதிரே இருந்தது… வெறுமையான புல்லட் மட்டுமே.அந்த வெறுமையைப் பார்த்தபடி ராஜீவன் அசைவின்றி நின்றான்.

ரஞ்சிதா, சித்தார்தை காலை கடன்களை முடிக்க வைத்து,பல் துலக்கி..தலைக்கு எண்ணெய் வைத்து வாரிவிட்டு…பாலை சூடாக்கி டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள்.

ஒரு நொடியில் பாலைக் குடித்து காலி டம்ளரை அவளிடம் நீட்ட,”என் செல்லம்” என அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.பதிலுக்கு அவனும் ரஞ்சிதாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

Advertisement

பைக் அருகில் நின்ற ராஜீவனைப் பார்த்தவன் வேகமாக ஓடிச் சென்று, தன்னால் முடிந்த பலத்தை கொண்டு அவனை தள்ளிவிட்டு,”பேட்பாய்…போ… தாத்தா பைக்… போ.. போ..என அவனை விரட்டினான்.

தான் இத்தனை நாட்களாக விலக்கி வைத்த வாழ்க்கை…தற்போது தன்னை விலக்கி வைப்பதாக  ராஜீவன் உணர்ந்தான்.எந்த எதிர்வினையும் காட்டாது,அமைதியாக வாசல்படி மீது அமர போனவன்..”ராஜீவா நம்ம குல தெய்வம் வாசல்படியிலதான் இருக்கும். அங்கே உட்காரதே.”என்ற ராம மூர்த்தியின் குரல் கேட்க…ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

சித்து,”தாத்தா…தாத்தா…வா…தாத்தா”
என மழலை மொழியில் அழைத்துக் கொண்டிருந்தான்.

இளஞ்சிவப்பு நிற டீசர்டும் டிரவுசரும் அணிந்திருக்க…அவனது நிறத்திற்கு அது எடுப்பாக தெரிந்தது. ராஜீவன், தானும் மாநிறம் ரஞ்சிதாவும் மாநிறம் இவன் நம் அம்மாவை போல நல்ல நிறம் என்று எண்ணிக் கொண்டே அவனது டீசர்டில் எழுதியிருந்த வாசகங்களைப் படித்தான்.

“டோன்ட் கன்ட்ரோல் மீ. ஐ அம் தி பாஸ்!” இரண்டு புருவங்களையும் மேலே உயர வைத்தது அவனது மகனின் டீசர்ட் வாசகம்.

வண்டியின் மீது ஒரு பட்டாம்பூச்சி அமர வர “களுக் “என சிரித்தபடி ,இரண்டு கைகளையும் தட்டி.. வாயில் வைத்துக் கொண்டே,”பட்டர் பை”என அதைப் பிடிக்க பறந்தான் சித்தார்த்.அது இவன் கையில் மாட்டினால் ரெக்கையை பிடுங்கி விடுவான் என சிட்டாக பறந்து விட்டது.

கரண்ட் கம்பி மீது அமர்ந்திருந்த காகம் “கா.. கா..”என கரைய இவனும் அதைப் போலவே கரைந்தான்.கேட்டின் வெளியே இரண்டு நாய்கள் “லொள் லொள்”என குரைக்க…இவனும் குரைத்தபடி வெளியே செல்ல முயல… ராஜீவன் அவனுக்கு முன்னால் வந்து கேட்டை சாற்றி தாழ்ப்பாள் போட்டான்.

காலை வெயில் சித்தார்த்தின் முகத்தில் விழுந்து,அவனது கண்களை கூசச் செய்ய…கண்களை இரண்டு கைகளாலும் தேய்த்துக் கொண்டு… மீண்டும் “பேட் பாய்! பேட் பாய்!” என அவன் காலில் இரண்டு அடி வைத்து அவனைத் தள்ளி விட்டு உள்ளே வந்தான்.

“ராஜீவா, மகன் கூட காலைலே விளையாட ஆரம்பிச்சுட்டியா?”என அவன் வீட்டில் வாடகைக்கு குடி இருக்கும் அம்பிகா வயதுடைய பெண் கேட்க…அசடு வழிய சிரித்த படி “ஆமாங்க அம்மா” என தலையாட்டினான்.

பின் அந்தப் பெண் அழுக்கு உடைகளை துவைக்க..பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி, சோப்பு பவுடரை கலக்கி நுரையை வர வைத்து… துணிமணிகளை எடுத்து வர உள்ளே சென்றார்.

அதுவரை அவரது செய்கைகளை ஆயிரம் கேள்விகளோடு ஆராய்ச்சி பார்வை பார்த்தவன்…உற்சாகமாக அந்த நுரைகளில் இரண்டு கைகளையும் வைத்து தட்டி தட்டி தன்மேல் இரைத்து விளையாட ஆரம்பித்தான்.

“இவனை” என பல்லை கடித்து கொண்டு அவனை நோக்கி நடக்க…
“பேட்பாய்!” என முகத்தை சுருக்கி அவனை விட்டு சில அடிகள் தள்ளி ஓடினான்.

ரவையையும்,சேமியாவையும் நெய்யில் வறுத்து,வாணலியில் எண்ணெய் ஊற்றி,கடுகு தாளித்து…கேரட்,பீன்ஸை சித்துவின் கடவாய்ப் பற்கள் எளிதாக அரைக்கும் வகையில் சிறியதாக நறுக்கி…அதையும் சேர்த்து வதக்கினாள் ரஞ்சிதா.பின் சரியான அளவில் தண்ணீர் ஊற்றி அது கொதித்ததும் உப்பை சரிபார்த்து நெய்யில் வறுத்து வைத்திருக்கும் ரவையையும், சேமியாவையையும் கொட்டி பக்குவமான கிச்சடியை தன் மகனுக்கு தயார் செய்தாள்.

மகன் பசி தாங்கமாட்டானே என அவசர அவசரமாக ஒரு தட்டில் போட்டு அவனை தேடி வர…அவன் நின்றிருந்த கோலம் அவளுக்கு கோபத்தை தந்தது.தட்டை ஒரு சேரில் வைத்தபடி,வேகமாக சித்தார்த்தை நெருங்கி…அவனது கன்னத்தை கிள்ளியபடி,”உனக்கு தினமும் இதே வேலையா?இப்போதானே குளிச்சு ட்ரஸ் போட்டு விட்டேன்.”என அவனை இழுத்து வந்து வெயில் படும்படி நிற்க வைத்தாள்.

இந்த இடத்தை விட்டு நகர கூடாது.ட்ரஸ் காய வெச்சிட்டுதா உள்ளே வரனும். புரிஞ்சுதா?

அவள் கூறியது என்ன புரிந்ததோ தெரியவில்லை.அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு…பவ்வியமாக “சரி” என்றவாறு தலையை ஆட்டியவனை பார்த்த ராஜீவனுக்கு…இவ்வளவு நேரம் இவனா இத்தனை குறும்புகளையும் செய்தான் என்ற கேள்வி எழுந்தது.

தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற ரஞ்சிதாவை…”நஞ்சினா ச்சாரி”என்றான்.

“உன் சாரி எல்லா எனக்கு வேண்டா… டிரஸை காய வெச்சிட்டு தான் அந்த இடத்தை விட்டு நகரனும்” என மீண்டும் ஒரு முறை எச்சரித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

பத்து நிமிடம் கடந்தும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.அவனை பார்த்த ராஜீவனுக்கே பாவமாய் இருந்தது.

“எதுக்டீ என் பையனே இப்படி வெய்யில்லே நிக்க வெச்சிருக்க”என உரிமையாய் கேட்க ஒரு நிமிடம் ஆகாது அவனுக்கு.ஆனால் கேட்கும் உரிமையை  இதுவரை அவன் எடுத்துக் கொண்டதில்லை.தற்போது எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை.

மகன்தான் தன்னை ஒரு வில்லனாக பார்க்கிறான் என்றால்..ரஞ்சிதா அவனை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. திருமணம் ஆன நாளில் இருந்து அவளை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்.காலை போடும் டீ முதல்.. ஏன் தற்போது பையனுக்கு வைக்கும் பெயர் வரை தன்னுடைய கண் அசைவுக்கு காத்திருப்பவள்.இன்று “துஷ்டனை கண்டால் தூர விலகு” என்பதை போல அவனை விட்டு விலகி செல்கிறாள்.

அதற்காக காரணம் புரியாதவன் அல்லவே.அனைத்திற்கும் காரணம் தான் என்பதும்,தன்னுடைய பிடிவாதம் என்பதும் நன்கறிவான்.மகனுடைய விலகலும்,மனைவியுடைய விலகலும் அவனுக்கு உள்ளூர ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை தர…இல்லையில்லை” நான் ஸ்டேடியாக இருக்கிறேன்” என அவனது முதிர்ச்சியடையாத இன்னொரு மனம் சமாதானப்படுத்தியது.

தண்ணீரில் நனைந்த டீசர்ட் ஒருவழியாக சிறிது காய…அருகில் இருந்த திண்டில் அமர போனான்.அந்த திண்டின் ஓரத்தில் செவ்வெறும்புகள் வரிசையாய் உணவை எடுத்துக் கொண்டு தங்கள் இருப்பிடத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அந்த காட்சி கண்ணில் பட்டதும் அதன் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்து… அதை கையால் பிடித்தான் சித்தார்த். ஒரு எறும்பு தன் கொடுக்கால் அவனது கையை கடிக்க…”அம்மா” என அழ ஆரம்பித்தான்.

ராஜீவன் எழுந்து அவனருகில் போவதற்குள்… ரஞ்சிதா ஓடி வந்து அவனை தூக்கிக் கொண்டாள்.

“ஒன்னு இல்லம்மா அழாதே” என கையை நீவி விட்டு..அவனை சமாதானப் படுத்தினாள்.பின் மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு…துணியை மாற்றி… கிச்சடியை ஊட்டி விட…”யம்மி!”என கன்னங்கள் புடைத்துக் கொள்ளும் அளவிற்கு சிரித்தபடி சொல்லி உணவை வாங்கிக் கொண்டான்.

உணவை உண்டு முடிக்க ராஜசேகர் குடும்பத்தினர் உள்ளே நுழைய… அவர்களை பார்த்ததும் உற்சாகம் மிகுதியானது சித்தார்த்திற்கு.

ராஜசேகரிடம் உதட்டை பிதுக்கியபடி.. இரண்டு கைகளையும் விரித்துக்காட்டி “தாத்தா நோ” என கூற, அவருக்கு வேதனை கண்ணீராக வெளியேறியது. வயதில் மூத்தவன் நான் இருக்க… தம்பியை, ஏன் காலம் அழைத்துக் கொண்டது? என்ற துக்கம் தொண்டையை அடைத்தது.

அனைவருக்குமே துக்கம்தான்.. ஒவ்வொருவரும் வேறு வேலையில் கவனம் செலுத்தி அதை மறக்க முயல.. இந்த சிறுவனுக்கு எதைச் சொல்லி மறக்க வைப்போம்?எதைச் சொல்லி உண்மையை புரிய வைப்போம் என்ற கவலையும் வாட்டியது.

அவரது அமைதி ஜெகனுக்கு புரிய.. சித்தார்த்தை தோளின் மீது தூக்கி வைத்து விளையாட்டு காட்ட ஆரம்பித்தான்.பதிலுக்கு அவனும் உற்சாகமாக கைகளைத் தட்டிச் சிரித்தபடி விளையாடினான்.

அம்பிகாவின் நிலை மிகவும் மோசம்தான்.இறுதிவரை இவர்தான் என்ற நம்பிக்கையை…ஆழமான அன்பை…சுகமான நினைவுகளை… இருவரும் சுமந்த கனவுகளை… ஆசைகளை… ஒரு நொடியில் முற்றுப்புள்ளி வைத்து விடைபெற்ற கணவனை நினைத்து நினைத்து அழுதே வற்றிப் போனார்.யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்பு.”நாங்கள் இருக்கிறோம்” என உறவுகள் சொன்னாலும்…அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் இல்லை.

ரஞ்சிதா சமைத்து வைக்க..ராஜீவன் சாப்பிட வைத்தான்.ராம மூர்த்தி குடும்பம் அவரை தனிமையில் இருந்து வெளியே கொண்டுவர ஒருவர் மாற்றி ஒருவர் அவர் அருகிலேயே இருந்தனர்.

இரவு பார்வதியும் பத்மாவும் துணைக்கு படுத்துக் கொள்ள…ராஜீவன் தன் அறை நோக்கி சென்றான்.

ஸ்வெட்டர் போட்டுவிட்டு சித்துவை தூங்க தயார் படுத்திக் கொண்டிருந்தாள் ரஞ்சிதா.இவன் உள்ளே நுழைய அம்மா,”பேட்பாய்”என அவனை காட்ட…’அப்படியெல்லா சொல்லக் கூடாது’ என மகனை அதட்டினாள்.

“நோ ம்மா… பேட்பாய் தாத்தா”என சொல்ல வந்தவன்..அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை..

ரஞ்சிதா அவனை திசை திருப்ப,”அம்மா இப்போ என்னோட கன்னுக் குட்டிக்கு ஒரு கதை சொல்ல போறேன்”என சொல்ல…

“ஆ!….”என கத்தியபடி அவளை அணைத்துக் கொண்டு கதை கேட்க தயாரானான் சித்து…அவனோடு ராஜீவனும் தயாரானான்.

என்னதான் டீவி பார்த்தாலும்,பேப்பரை படித்தாலும்,லேப்டாப்பை வைத்து கன்ஸ்ட்ரக்ஸன் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்தாலும் ஒரு கண் ரஞ்சிதா மேலும்,சித்தார்த் மேலும் வைத்துக் கொண்டான்.

நொடி கூட நிற்காத கால்கள்… எதையாவது செய்து ரஞ்சிதாவிடம் அடி வாங்குவது…என்ற மகனின் துறுதுறுப்பும்…

அவன் பின்னால் ஓடியே ஓய்ந்து போனாலும்…அந்த அலுப்பை காட்டாமல் மகனை அரவணைக்கும் மனைவியும் இதுவரை அவன் பார்க்காத பக்கத்தை அவனுக்கு உணர்த்தினர்.

அது அவனுக்கு பிடித்திருக்க… அவர்களோடு எப்படி ஒன்றுவது என தெரியாமல் குழம்பினான்.

–கவிதை எழுதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!