அகல்கவி 15
அகல்கவி சிலையமுதே 15
Advertisement
“உரிமை இருக்குதான் இல்லன்னு சொல்லல, அதுக்காக பொருத்தம் இல்லாம எப்படி கட்டிக்கொடுக்குறது.. நான் இப்படி பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அண்ணே, உங்க பொண்ணு பள்ளி படிப்ப கூட முடிக்கல. ஆனா என் பையன் இன்ஜீனியரிங் படிச்சிருக்கான். படிப்புல மட்டுமில்ல எந்த விதத்துலயும் அவ கொஞ்சமும் யுவனுக்கு பொருத்தம் இல்லாதவதான். அப்படி இருக்குறப்போ என்னால எப்படி ஏத்துக்க முடியும் சொல்லுங்கண்ணே”
Advertisement
என்று சாரதா நாக்கில் நரம்பில்லாமல் பேச, முத்துப்பாண்டியோ தங்கையிடமிருந்து இத்தகைய வார்த்தைகளை எதிர்பார்க்கவே இல்லை.
Advertisement
“சாரதா…” அவர் அடக்கப்பட்ட கோபத்தோடு ஏதோ பேச வர, அதற்குள் அவரைக் குறுக்கிட்டு, “அம்மா…” என்று அந்த வீடே அதிரக் கத்தினான் யுவனாதித்.
Advertisement
ஆனால் சாரதா அதிரவில்லை. மாறாக மகனை தீப்பார்வைப் பாத்தார் அவர்.
“என்னடா, என்னை விட அவ இப்போ உனக்கு முக்கியமா போயிட்டால்ல, மகாராணி அந்தளவுக்கு உன்ன மயக்கி வச்சிருக்காளா?” என்று கோபக் குரலில் கேட்க, “போதும் நிறுத்துங்க, வார்த்தைய அளந்து பேசுங்க.. இந்த கல்யாணத்த நானும் எதிர்பார்க்கலதான். ஆனா அவ கழுத்துல தாலிய கட்டினதும் என்ன ஆனாலும் அவளோடதான் என்னோட மீதி வாழ்க்கைன்னு நான் முடிவு பண்ணிட்டேன். நீங்களும் என்னை அப்படிதான் வளர்த்திருக்கீங்க. உங்க வளர்ப்பு தப்பில்லம்மா” என்றவனின் குரல் தழுதழுத்தது.
சாரதாவுக்கு மகனின் வார்த்தைகளில் மறுபேச்சு பேச முடியவில்லை. சிறு தடுமாற்றத்தோடு அவர் அறைக்குள் சென்று கதவை அடித்துச் சாத்த, முத்துப்பாண்டியிடம் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்டார் சிவலிங்கம்.
“அவ பேசினதுக்கு நான் மன்னிப்பு கேக்குறேன் மச்சா…” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அவர் கையை கீழிறக்கிய முத்துப்பாண்டி, “என்ன மச்சான் நீங்க, மன்னிப்பெல்லா கேட்டுக்கிட்டு.. நான் சொன்னப்போ உடனே என் பொண்ண உங்க மருமகளா ஏத்துக்கிட்டீங்க, அந்த நல்ல மனசு யாருக்கு வரும்?” என்றார் புன்னகையோடு.
“நம்ம பசங்க சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்” என்ற சிவலிங்கம் முதல் தடவையாக மனைவி சகோதரனோடு சிரித்துப் பேசியிருக்கிறார்.
பொன்னியால் நடப்பதை நம்பவே முடியவில்லை. சாரதாவின் வார்த்தைகளால் ஒருபக்கம் மனம் வேதனையில் துடித்தாலும் இன்னொருபுறம் சிவலிங்கம் பேசிய விதத்தால் சந்தோஷத்தில் மிதந்தது.
ஆனால், யுவனின் நிலைதான் பரிதாபம்!
‘க்கும்! இதுங்களா தப்பா புரிஞ்சுக்கிட்டு அவளுக்கு என்னை கட்டிக்கொடுத்து இப்போ… என் வாழ்க்கையில நடக்குறத என்னாலயே தடுக்க முடியாம இருக்கு’ என உள்ளுக்குள் புலம்பியபடி அமைதியாக நின்றுக்கொண்டான்.
அன்றே முத்துப்பாண்டியும் பொன்னியும் ஊருக்கு திரும்பிச் சென்றுவிட, அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் அன்றிரவு..
வேலை விட்டு வந்த யுவனோ அகல்யாவைத் தேடி சமையலறையை எட்டிப் பார்த்தவன், சுற்றிமுற்றி விழிகளை சுழலவிட்டு அகல்யாவை தேடியவாறு குளியலறைக் கதவை படாரென திறக்க, “ஆஆ…” என்ற கத்தலில் பதறிவிட்டான் அவன்.
அங்கு குளியலறைக்குள் டவலோடு நின்றுக்கொண்டிருந்த அகல்யாவோ இவனை எதிர்பார்க்காததில் பயந்து போய் கத்திவிட, முதலில் பதறியவன் பின்னரே அவள் நின்றிருந்த கோலத்தை விழி விரித்து பார்த்தான்.
இனம்புரியாத உணர்ச்சிகள் அவனுக்குள் தாறுமாறாய் சுரக்க, அவன் கதவை சாற்றாமல் அப்படியே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த பெண்ணவளுக்கோ ஒருபக்கம் முகம் சிவந்திருந்தாலும் இன்னொருபுறம் அத்தனை சங்கடமாக இருந்தது.
“என்ன இப்படி வெறிச்சு பார்த்துட்டு இருக்கீங்க மாமா, வெளியில போங்க” அவள் திரும்பி நின்றுக்கொண்டு வார்த்தைகள் தடுமாற சொல்ல, அப்போதே தான் செய்யும் காரியம் உணர்ந்து, “சா.. சாரி அகலு” என்றவன் வேகமாக அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்த அகல்யாவுக்கு அவனைப் பார்ப்பதே சங்கடமாகத்தான் இருந்தது.
உள்ளுக்குள் புலம்பியபடி நெற்றியை நீவி விட்டவாறு அமர்ந்திருந்த யுவனோ, அவள் வந்ததைக் கவனித்ததுமே, “அது.. அது வந்து அகலு.. நான் ஒன்னு வேணும்னு வரல, தெரியாம.. அது எப்படி…” என்று அவள் விழிகளைப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி திக்கித்திணற, அவளுக்குமே அதேநிலைதான்.
“ப.. பரவாயில்ல மாமா, நான் எதுவும் நினைச்சுக்கல. நீங்க குளிச்சுட்டு வாங்க, அதுக்குள்ள ஏதாச்சும் பண்ணிடுறேன்” என்றுவிட்டு உள்ளே ஓடப் போனவளை, “கொஞ்சம் இரு..” என்று தடுத்த யுவன், “வெளியில போலாமா?” என்று கேட்க, அவளுக்கோ ஆச்சரியம்.
” நெசமாவா கேக்குறீங்க.. போகலாம் மாமா” என்ற அகல்யா வேகவேகமாக தயாராகி அவனுக்காக காத்திருந்தாள்,
அவளும் எத்தனை நாட்கள்தான் வீட்டிற்குள்ளயே முடங்கிக் கிடப்பாள்!
யுவனும் குளித்து உடை மாற்றிவிட்டு வந்தவன் அவளை அழைத்துக்கொண்டு முதல் வேலையாக இரவுணவிற்காக ஹோட்டலுக்குதான் சென்றான்.
வீட்டு சாப்பாடே பழக்கப்பட்ட அகல்யாவுக்கு ஹோட்டல் உணவு பெரிதாக பிடித்தம் இல்லையென்றாலும் அவனுக்காக கஷ்டப்பட்டு மென்று விழுங்கிக்கொண்டாள்.
அவனும் வயிறார உண்டவன் பின் அவளை அழைத்துக்கொண்டு பீச்சிற்கு செல்ல, இவர்களின் நேரத்திற்கு பெரிதாக ஆட்கள் இல்லாது ஓய்ந்துப் போயிருந்தது அந்த இடம்.
“நல்லா இருக்கு மாமா.. இங்க வந்ததுலயிருந்து இப்படி நிம்மதியா எங்கேயாவது போகணும்னு தோனிட்டே இருந்துச்சு. இப்போதான் மனசுக்கே இதமா இருக்கு” என்று மணலை வருடிக்கொண்டே நடந்தவாறு அவள் சொல்ல, ஓடி வரும் கடலலைகளைப் பார்த்தவனோ, “நீ இன்னும் யுகாவதான் காதலிக்கிறியா அகல்?” என்று கேட்டான் சட்டென்று.
அந்த கேள்வியில் அவனை சடாரென நிமிர்ந்துப் பார்த்தாள் அகல்யா.
“அது.. யுகா மாமாதான் என்னோட மொதல் காதல். அவர எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எப்போவும் என் மனசுலதான் இருப்பாரு. ஆனா…” என்று அவள் பேசி முடிக்கவில்லை, “போதும் சும்மாதான் கேட்டேன்” என்று குறுக்கிட்டவனுக்கு ஏனென்று தெரியாத ஒரு கோபம் உள்ளுக்குள் எழுந்தது என்னவோ உண்மைதான்.
அகல்யாவோ புருவ முடிச்சுகளோடு அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொள்ள, “ஆமா.. எத்தனை நாளைக்கு இப்படியே இருக்குறதா உத்தேசம்? வீட்டுல சும்மா இருக்குறதுக்கு எங்கேயாச்சும் வேலைக்கு போலாமே..” என்றான் எங்கோ பார்த்த வண்ணம்.
அதில் அவனை அதிர்ந்துப் பார்த்தவள், “எதே வேலைக்கா! நான் பத்தாங்களாஸ கூட தாண்டினது கிடையாது. கணக்கு சுட்டு போட்டாலும் வராது.. என்னை போய் வேலைக்கு போக சொல்றீங்களே மாமா..” என்று பாவமாய் சொல்ல, சலிப்பாக விழிகளை உருட்டியவன், “அப்போ தையல், கேக் மேக்கிங், எம்ப்ராய்டெரின்னு ஏதாச்சும் தெரியுமா.. வீட்டுலயிருந்தே வேலை பார்க்கலாமே” என்று கேட்டான் பதிலுக்கு.
அவனின் கேள்வியில் பின்னந்தலையை சொரிந்தவாறு, “இல்ல மாமா, அதெல்லா எனக்கு தெரியாது.. ஏதோ கொஞ்சோண்டு சமைப்பேன் அவ்வளவுதான்” என்று இறுதி வசனத்தை பெருமையாகச் சொல்ல, அவளை ஒற்றைப் புருவத்தைத் தூக்கி முறைத்துப் பார்த்தான் யுவன்.
“அப்போ உனக்கு என்னதான்டீ தெரியும்.. கடவுளே!” என்று சலிப்பாக விழிகளை உருட்டியவாறு திரும்பியவனின் விழிகள் எதேர்ச்சையாக ஒரு திசையைப் பார்த்துவிட்டு பிதுங்கி விடுமளவிற்கு விரிந்துக்கொள்ள, வேகமாக அகல்யாவின் கரத்தைப் பற்றி முன்னே இழுத்துச் சென்றான்.
“மாமா என்னாச்சு? ஏன் என்னை இப்படி இழுத்துட்டு போறீங்க? சொல்லுங்க மாமா..” என்று அவள் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றவாறு கேட்டுக்கொண்டே போக, “கொஞ்சநேரம் அமைதியா இருக்கியா.. வீட்டுக்கு போனதும் சொல்றேன்” என்று கடிந்துக்கொண்டவாறு வேகமாக செல்ல முயன்றான் யுவன்.
ஆனால், அதற்குள் அவனை நெருங்கியிருந்தனர் சிதம்பரமும் அவனுடைய ஆட்களும்.
“அட தம்பி கொஞ்சம் நில்லுங்களேன்.. எதுக்கு இப்படி அவசரமா ஓடுறீங்க.. ஓஹோ.. இதுதான் சாரோட வைஃபோ?” என்று அவன் பேசிக்கொண்டே அவர்களை நெருங்க, அகல்யாவை தன் கை வளைவுக்குள் வைத்தவாறு அவனை நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு முறைத்துப் பார்த்தான் யுவனாதித்.
“இங்க பாருங்க, நம்ம பிரச்சனை வேலையோட முடிஞ்சு போச்சு.. அன்னைக்கு பண்ண தப்ப ஒத்துக்காம ஐயாவுக்கும் நீ மறுபேச்சு பேச போய்தான் அவர் உன்ன வேலைய விட்டே தூக்கிட்டாரு. அதுக்காக ஆளுங்கள கூட்டிட்டு வந்து இப்படி நடந்துக்குறது உங்களுக்கு நல்லதுக்கில்ல. வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க”
என்றவன் அகல்யாவை அழைத்துக்கொண்டு அவர்களை கடந்து செல்லப் போக, “ஹாஹாஹா… பாருங்கடா தம்பி பேசுறத..” என்று சொல்லி கத்திச் சிரித்தான் சிதம்பரம்.
“உன்னாலதான் அந்த ஆளு என்னை வேலைய விட்டு தூக்கினான். அத்தனை பேர் முன்னாடி என்னை அடிச்சு அவமானப்படுத்தின உன்ன சும்மா விட்டுருவேன்னு நினைச்சியா..” சிதம்பரம் மிரட்டலாக சொன்னதும் பக்கத்திலிருந்த அவனுடைய ஆட்களும் யுவனை நோக்கி வர, இவனுக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“மாமா.. யாரு இவங்க? ஏன் இப்படிலாம் பேசுறாங்க..” என்று அகல்யா பதற்றப்பட, “அகலு, ஒன்னுஇல்ல நீ பயப்படாத..” என்ற யுவனுக்கு தனக்கு என்ன நேர்ந்தால் என்ன, தன்னவளை பாதுகாத்தால் போதுமென்றுதான் அக்கணம் தோன்றியது.
“வேணாம் சிதம்பரம், நம்ம பிரச்சனைய இன்னொருநாள் பார்த்துக்கலாம். எங்கள விட்டுரு” என்று அவன் பின்னே நகர்ந்தபடி பற்களைக் கடிக்க, சிதம்பரமோ இதை விடுவதாக இல்லை.
உடனே யுவன் அகல்யாவை இழுத்துக்கொண்டு ஓடப் போக, அவனை பாய்ந்து பிடித்த சிதம்பரத்தின் அடியாளொருவனோ அவனை அடிக்க வர, அவன் கரத்தை முறுக்கி தள்ளிவிட்டான் யுவன்.
ஆனால், சிதம்பரம் முகத்தில் குத்தியதும் அதை எதிர்பார்க்காது மணலில் விழுந்தவன், “அக.. அகல்யா..” என்று அழைத்த வண்ணம் அவளைத் தேட, அடுத்தகணம் “ஆஆ…” என்ற சிதம்பரத்தின் அலறலில் வேகமாக திரும்பிப் பார்த்தான்.
அங்கு சிதம்பரத்தை தரையில் தள்ளி அவன் கரத்தை முறுக்கியவாறு அகல்யா நின்றுக்கொண்டிருக்க, அவளுடைய செய்கைக்கும் முகத்திற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல, “யுவா மாமா…” என்று பயந்த குரலில் வந்தன அவளுடைய வார்த்தைகள்.
யுவனுக்கோ தான் பார்ப்பது நிஜம்தானா என்ற அதிர்ச்சி.. அவனுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்திருந்தன.
“அகல்யா..” என்று குறையாத அதிர்ச்சியோடு அவன் அழைக்க, சிதம்பரம் தரையில் கிடப்பதைப் பார்த்துவிட்டு அகல்யாவை நோக்கி வேகமாக சென்றனர் சிதம்பரத்தின் ஆட்கள்.
அவளோ ஜாக்கி சானின் ஒன்று விட்ட தங்கை போல அவர்களின் பிடியிலிருந்து லாவகமாக தப்பித்த வண்ணம் முகத்திற்கு முன்னே இரு கரங்களை வைத்து கார்ட் பொசிஷனில் நின்றுக்கொண்டு கராத்தே சண்டை போட, நடப்பதை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் யுவனாதித்.
அவனுக்கு மட்டுமல்ல சிதம்பரம் மற்றும் அவனுடைய ஆட்களுக்கும் கூட ஒருபக்கம் அதிர்ச்சி இன்னொருபுறம் சிறு பெண்ணிடம் அடி வாங்குவதில் உண்டான கோபம் என அடுத்து செய்வதறியாது அந்த இடத்தைவிட்டே ஓடியிருந்தனர்.
அகல்யாவோ மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தவள் அவர்கள் சென்ற மறுகணம் ஓடிச்சென்று தன்னை மீறி பயத்தில் யுவனை அணைத்துக்கொள்ள, அவன்தான் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான்.
“மாமா, உங்களுக்கு ஒன்னுஇல்லல்ல… நான் ரொம்ப பயந்தே போயிட்டேன். அவ.. அவங்க என்னை தொட வந்தாங்களா.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல… ஏதோ ஒரு வேகத்துல கைய இப்படி வச்சு சண்டை போட்டு…” அவள் அழுதுக்கொண்டே திக்கித்திணறி பேசிக்கொண்டே போக, அவளை திகைப்போடு பார்த்தவன், “இப்போ நீ என்ன.. என்ன பண்ண அகலு?” என்று கேட்டான் குறையாத அதிர்ச்சியோடு.
“அது.. அது வந்து மாமா..” என்று தடுமாறியவளோ பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொள்ள, விழிகளை சுருக்கி அவளை உற்றுப் பார்த்தான் யுவன்.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் வீட்டிலிருந்தனர் இருவரும்.
மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி ஹாலில் யுவன் நின்றிருக்க, அவன் முன்னே தலை குனிந்தபடி பாவமாய் நின்றிருந்தாள் அகல்யா.
“எத்தனை வருஷமா சண்டை போட கத்துக்குற?” என்று அவன் கழுகுப் பார்வைக்கொண்டு அவளைத் துளைத்தெடுக்க, அவனின் ஊசித் துளைக்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாது பார்வையை தாழ்த்தியே நின்றிருந்தவள், “சின்ன வயசுலயிருந்து..” என்றாள் காற்றிற்கும் வலிக்காத குரலில்.
அதில் அரண்டு போன யுவனுக்கு தலை வலியே வந்துவிட்டது.
“என்னடீ சொல்ற, சின்னவயசுல உன்கூடதானே இருந்தேன், எந்த கேப்ல நீ போய் இதை கத்துக்கிட்ட? என்ன பொய் சொல்றியா.. ஒழுங்கா உண்மைய சொல்லு..” என்று அவன் அவளை நோக்கி ஒரு அடி முன்னே வைத்து கேட்க, அதில் பயந்தபடி பின்னே நகர்ந்தவளைப் பார்க்க அவனுக்கு ‘ஙே’ என்றிருந்தது.
“மறுபடியும் இன்னசன்ட் மாதிரி என்கிட்ட நடிக்காத அகலு, ஒழுங்கா வாய திறந்து பதில் சொல்லு..” அவன் அடக்க முடியாத கோபத்தில் கத்திக் கேட்க, “அது வந்து மாமா… சின்ன வயசுல நம்ம ஊருல ஒரு கராத்தே மாஸ்டர் இருந்தாரு உங்களுக்கு நியாபகம் இருக்கா.. அவர் பசங்களுக்கு கத்து கொடுக்குறத பார்த்து எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும்.. அதனால மரத்துக்கு பின்னால ஒளிஞ்சு நின்னு அவர் கத்து கொடுக்குறத பார்த்துட்டே இருப்பேன்..” என்று அவள் பேசி முடிக்கவில்லை, அவளை குறுக்கிட்டான் யுவன்.
“ஓஹோ… பார்த்தே கத்துக்கிட்டியா! நம்ப முடியல்லையே!” என தாடியை தடவி விட்டவாறு அவன் சந்தேகமாகக் கேட்க, “ச்சே ச்சே! அப்படிலாம் இல்ல. நான் ஒளிஞ்சு நின்னு பார்க்குறத அவர் கவனிச்சுட்டு எனக்கு கத்து கொடுத்தாரு. காசு கூட வாங்கல தெரியுமா… அப்போ நான் சின்ன பொண்ணு, காசு வாங்காம சொல்லி கொடுக்குறாருன்னு அப்பா பெருசா கண்டுக்கல. ஆனா வயசுக்கு வந்ததுக்கப்பறம் அப்பா விடல.. ஆனா…” என்று நிறுத்தியவள் திருதிருவென திருட்டு முழி முழித்தாள்.
யுவனோ அவளின் முழியை புரியாமல் பார்த்தவாறு, “ஆனா என்ன..” என்று கடுகடுத்த குரலில் கேட்க, “அப்பறம்.. யுகா மாமாதான் அப்பாக்கு தெரியாம என்னை அழைச்சுட்டு போவாரு.. இது அம்மாவ தவிர வேற யாருக்கும் தெரியாது மாமா” என்று சொல்ல, யுவனுக்கு தலை சுற்றாத குறைதான்.
-Sheha zaki

