“அஸ்வத் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்.. நாலு மணிக்குள்ள அங்க இருக்கணும்.. அதுக்கு அப்பறம் ராகு காலம் ஆரம்பிச்சிடு்ம். மணி இப்போவே மூணே கால் ஆச்சு..” என்று தன் கைக் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே ராமன் கேட்க,
Advertisement
“தேனியை தாண்டியாச்சு பா.. இனி மாக்சிமம் ஒரு டென் மினிட்ஸ்” என்று அஸ்வத் பதிலளித்தான்.
Advertisement
அதுவரையில் அமைதியாக இருந்த மதுரம் இப்போது வேகமாக, “டேய் அஷு அப்போ வண்டியை ஒரு ஓரமா நிறுத்து.. காத்துல தலை எல்லாம் கலைஞ்சு போச்சு.. மேக் அப் கூட ரொம்ப நேரம் ஆனதும் டல் ஆய்டுச்சு.. நான் போய் டச் அப் பண்ணிட்டு வந்துடுறேன்..” என்று அவர் பரபரப்பாக,
Advertisement
ராமனை முந்திக்கொண்டு வினோத், ” பாட்டி உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை.. உன்னையவா பொண்ணு பார்க்க வராங்க.. வர வர உன்னோட அட்ராசிட்டி எல்லையை தாண்டி போய்கிட்டு இருக்கு.. முடியலை எங்களால” என்று அவன் பாவமாய்க் கூறினான்.
அதெற்கெல்லாம் அசந்தால் அது மதுரம் பாட்டி அல்லவே.
Advertisement
அவன் கூற்றை கண்டுகொள்ளாமல், ” டேய் அஷு அதோ அந்த புளியமரத்து கிட்ட நிறுத்து” என்று தன் பேரனிடம் கூறிக்கொண்டிருந்தார்.
அவரைப் பற்றி தெரிந்த அஸ்வத்தும், காரை நிறுத்தாமல் அவர் ஓய மாட்டார் என்று உணர்ந்து காரை அவர் சொன்ன இடத்தில் நிறுத்தி விட்டு மெதுவாய் காரில் இருந்து இறங்கினான்.
பிறந்ததில் இருந்து நகரத்திலே வளர்ந்த அவனிற்கு இந்த மண்மணம் மாறாத கிராமத்தின் தூய காற்று அவனை வேறொரு உலகத்திற்கு இழுத்துச் சென்றது.
பச்சைப் போர்வை போர்த்தியதைப் போல் திரும்பும் இடமெங்கும் வயல்வெளிகள் கண்களைக் குளிரவைக்க, இவ்வளவு வெயிலிலும் வெப்பத்தை சற்றும் கடத்த முடியாதபடி சாலையில் இரு மருங்கிலும் வரிசையாய் அமைந்துள்ள மரங்களின் குளுமையும் அவன் மனதை மிகவும் குளிர்வித்தது.
நகரத்தின் போக்குவரத்து நெரிசலில் அடித்து பிடித்து வண்டி ஓட்டிப் பழகிய அவனிற்கு, ஆளில்லா இந்த சாலை மிகவும் பிடித்திருக்க, பெண்ணைப் பிடிப்பதற்கு முன்பே பெண்ணின் ஊரை மிகவும் பிடித்துவிட்டது அவனிற்கு.
அவன் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த நேரத்திற்குள் மதுரம் தன்னுடைய அலங்காரத்தை முடித்துக் கொண்டு வண்டியில் ஏறி விட, ராமன் தான் பரபரத்தார்.
“அஸ்வத் வந்து வண்டியை எடு.. சீக்கிரம் போகலாம்.. இன்னும் அவனோட வண்டியைக் காணோம்.. நம்மதான் ஃபர்ஸ்ட்” என்று அவர் ஏதோ ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் ஓடி தங்கப்பதக்கம் வென்றதைப் போல் பெருமையுடன் கூற, வினோத் அவரை ஏதோ வினோதமான ஜந்துவைப் பார்ப்பதைப் போல் பார்த்து வைத்தான்.
பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஐந்தே நிமிடத்தில் அம்மாபட்டி கிராமத்தை அடைந்திருந்தனர்.
” அம்மாபட்டி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது ” என்ற வாசகம் பொறித்த பதாகை அவர்களை வரவேற்றது.
“அடேய் அஜய் அங்க பாரு நமக்கு முன்னாடி அவங்க கார் உள்ள ரீச் ஆய்டுச்சு.. இதுக்கு தான் சொன்னேன் அப்பறம் சாப்பிட்டுக்கலாம்னு என் பேச்சை யாரு கேட்குறா?? இனி அந்தாளு வேற நக்கலா சிரிப்பானே.. எனக்குண்ணு வந்ததும் சரியில்லை வாய்ச்சதும் சரியில்லை.. சீக்கிரம் அந்தக் காரையாச்சும் ஒழுங்கா முந்தி போ.. பொண்ணு வீட்டுக்காச்சும் நம்ம முன்னாடி போகணும்.. சீக்கிரம் போ டா” என்று பரமசிவன் அவர் மகனைப் பணிக்க,
கடுப்புடன் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்திய அஜய், பின் பக்கம் திரும்பி அவரை நன்றாக முறைத்தான்.
” டேய் போகச் சொன்னா காரை நிப்பாட்டிட்டு என்னை என்னடா லுக்கு விட்டுட்டு இருக்க” என்று அவர் எகிற,
” போ போன்னா அது என்ன என் மாமன் மச்சான் வீடா.. ஏதோ இதுக்கு முன்னாடி பல தடவை வந்த மாதிரி சொல்றீங்க.. போ போன்னு விரட்டுனா அட்ரஸ் யாரு உங்க தாத்தாவா சொல்லுவாரு..சும்மா கடுப்பை கிளப்பிகிட்டு இருந்திங்க இங்கேயே கிடங்கன்னு காரை பூட்டிட்டு போய்டுவேன்” என்று மிரட்டினான் அஜய்.
அவனின் இந்த பேச்சு அவருக்கு கோபத்தைக் கிளப்பினாலும், தனக்கு காரியம் ஆக வேண்டும் என்பதால் கோபத்தை மறைத்துக் கொண்டு, “சரி சரி.. அதோ அங்க இருக்காங்க பாரு அவங்க கிட்ட போய் சந்தன பாண்டியன் வீடு எங்கன்னு கேட்டுட்டு வா போ” என்று கெத்தை விட்டுக் கொடுக்காமல் அவர் கூற,
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று முணுமுணுத்த அஜய், ஜீவாவைப் பார்த்து , “டேய் போய் கேட்டுட்டு வா போ” என்று விரட்டினான்.
“ஒரு இன்ஸ்பெக்டரை ரொம்ப இன்சல்ட் பண்றீங்க டா.. உங்களுக்கு எடுபுடி வேலை பார்க்க தான் ஏக்மோர்ல இருந்து என்னை அள்ளிப் போட்டுகிட்டு வந்தீங்களா டா” என்று புலம்பிக் கொண்டே அங்கிருந்த அந்த ஊர்ப் பெரியவர்களிடம் சென்றான் ஜீவா.
மீசையே மூன்று அங்குலத்துக்கு புதர் போல் வளர்த்து வைத்திருந்த அந்த பெரியவர்களைக் காண ஜீவாவிற்கு லைட்டாக உதறல் எடுத்தாலும், அதை மறைத்துக் கொண்டு அங்கிருந்த நல்வரிடமும் பொதுவாய், ” அய்யா இங்க சந்தன பாண்டியன் சார் வீட்டுக்கு எப்படி போகணும்” என்று கேட்டான்.
அவர்களில் ஒருவர் தன் மீசையை நீவி விட்டுக் கொண்டே, “இங்க சந்தனம்லாம் விக்கிறது இல்லை தம்பி.. தப்பான இடத்துக்கு வந்துட்டிங்க.. இப்படியெல்லாம் வெளிய கேட்டுகிட்டு இருக்காதீக.. போலீஸ் பிடிச்சுட்டு போய்டும்.. போய் வேற சோலியை பாருங்க தம்பி” என்று அவனுக்கு அறிவுரை வழங்கினார்.
“நாசமாய் போச்சு!!! காது வேற அவுட்டா.. இந்த புதருக்குள்ள காது இருக்கா இல்லையான்னு வேற தெரியலை.. அட்ரஸ் கேட்காம போனா அந்தாளு வேற என் காது பஞ்சர் ஆகுற வரை கத்துவாரு ” என்று நொந்து கொண்ட ஜீவா, இன்னும் சப்தமாக, “இங்க… சந்தன பாண்டி.. சந்தன பாண்டியன் அப்படின்னு ஒருத்தர் இருக்காருல.. அவர்.. வீட்டுக்கு .. வீட்டுக்கு எப்படி போகணும்??” என்று சைகையோடு கேட்க,
இப்போது வேறொருவருக்கு அவன் ஏதோ வழி கேட்கிறான் என்பது வரையில் புரிந்தது.. பாண்டியன் என்கின்ற சொல் வேறு அவர் காதில் விழுந்தது.
அப்போது தான் சுந்தர பாண்டியன் அங்கிருந்த கடையில் இருந்து பெண் பார்க்க வருகிறார்கள் என்று கூறி குளிர் பானங்கள் வாங்கிச் சென்றிருக்க, அவரைத் தான் கேட்கிறார் என்று அவராய் ஒரு அனுமானத்திற்கு வந்தார்.
” ஓஹோ SP தம்பி வீட்டுக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கீகளா??” என்று அவர் கேட்க,
சந்தன பாண்டியனைத் தான் சுருக்கமாக SP என்று கூறுகிறார் என்று நினைத்த ஜீவாவும், ” ஆமா என் தெய்வமே!! உங்களுக்காச்சும் புரிஞ்சுதே.. அவர் வீட்டுக்கு எப்படி போகணும்” என்று மீண்டும் சப்தமாக அவன் கேட்க,
அவரும், “இப்படியே நேரா போய் நொட்டாங்கை பக்கம் திரும்பினா வலது பக்கம் மொத வீடே அவுக வீடுதேன்.. போங்க போங்க.. பொண்ணு அம்சமான புள்ளை.. ஆனா என்ன பாவம் படிப்புத்தேன் வராது” என்று அவர் வழியைக் கூற,
“ரொம்ப நன்றி அய்யா” என்று கையெடுத்துக் கும்பிட்ட ஜீவா வேகமாக தங்கள் காரை நோக்கி விரைந்தான்.
அஜய்யிடம் வழியைக் கூறிவிட்டு, பரமசிவன் பக்கம் திரும்பியவன், ” என்ன அப்பாங் பொண்ணு ஏதோ IAS ன்னு அளந்து விட்டிங்க.. அந்த தாத்தா சொல்றாரு பொண்ணுக்கு படிப்பே வராதுன்னு” என்று நக்கலாக வினவ,
அவனை முறைத்த பரமசிவன், “டேய் கிராமத்துக்காரங்களுக்கு IAS னா தெரியுமா இல்லை IPS னா புரியுமா.. அவர் ஏதோ சொல்றாருன்னு இங்க வந்து உளறி குட்டையை குழப்பாம அமைதியா இரு” என்று அவனை அதட்டினார்.
அதற்குள் அஜய் அவர் சொன்ன வீட்டின் முன் சென்று வண்டியை நிறுத்தியிருக்க, தன் அண்ணனை வென்று விட்ட பூரிப்புடன் காரில் இருந்து இறங்கினார் பரமசிவன்.
“டேய் அஸ்வத் என்னடா நம்ம சம்பந்தி வீட்டுக்கு முன்னாடி போய் அவன் காரை நிறுத்தியிருக்கான் அட்ரஸ் ஒழுங்கா கேட்டியா” என்று ராமன் தாம் தூம் என்று குதிக்க,
“இல்லைப்பா அவர் ரைட் சைட் ஃபர்ஸ்ட் வீடுண்ணு தான் சொன்னாரு.. ஆனா இவங்க ஏன் அங்க நிறுத்துறாங்கன்னு புரியலை” என்று அஷ்வத்தும் குழம்ப,
வினோத்தோ, “டேய் அவனே ஃபுல் போதைல மட்டையாகி கிடக்கான் அவன் சொல்றதை நம்பிகிட்டு.. அவன் கிட்ட போய் கேட்டா இப்படித்தான் இரு” என்றவன்,
அங்கு ஓரமாய் நின்று கொண்டிருந்த பெரியவரைப் பார்த்து, “அய்யா இங்க SP வீடு எது ரைட்டா லெஃப்டா??” என்று கேட்க,
ரைட் , லெஃப்ட் என்றால் எந்தப்பக்கம் என்று புரியாமல் குழம்பினாலும் அசலூர்காரனிடம் தன் மரியாதையை விட்டுக் கொடுக்க விரும்பாமல், “லெப்புட்டு” என்று கூறிவிட்டு அவன் அடுத்து கேள்வி கேட்கும் முன் அங்கிருந்து கிளம்பி ஓடி விட்டார்.
“பார்த்தியா அவன் தப்பா வழி காட்டிருக்கான்.. லெஃப்ட் சைட் இருக்க வீடு தான் நாம வந்த வீடு.. போ போய் அங்க நிறுத்து வண்டியை” என்று கெத்தாய் மொழிந்தான் வினோத்.
அதற்குள் கார் சப்தம் கேட்டு சுந்தர பாண்டியன் வீட்டில் இருந்து பாதி ஊர் மக்கள் வாசலுக்கு வந்து விட, அங்கு நின்றிருந்த அஜய்யின் குடும்பத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான ??” என்று அங்கிருந்த மூத்த பெண்மணி விசாரிக்க, ஜீவாவும் இதற்கு முன் ஏற்பட்ட அனுபவத்தில் ஜாக்கிரதையாக சப்தமாகவே, ” ஆமா பாட்டி இதோ இவன் தான் மாப்பிள்ளை” என்று கூற,
காதை தேய்த்து விட்டுக் கொண்ட அந்த பெண்மணி, “மாப்பிள்ளை வூட்டுக்காரவகளுக்கு காதுல கோளாறு போல அதான் இம்புட்டு சத்தமா பேசுறாக.. எதுக்கும் நம்ம பாண்டியன் கிட்ட சொல்லி இன்னும் நல்லா விசாரிக்க சொல்லோனும்..” என்று முணுமுணுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் அந்த பெண்மணி.
“மச்சி கெழவிக்கி கொழுப்பை பார்த்தியா??” என்று கடுப்புடன் ஜீவா மொழிய, அவனைக் கண்டு நகைத்தான் அஜய்.
அப்போது அங்கு வந்த சுந்தர பாண்டியன் அனைவருக்கும் பொதுவாக வணக்கம் வைத்து, பரமசிவம் தான் மாப்பிள்ளையின் தந்தையாக இருக்கும் என்ற யூகத்தில், ” வாங்க வாங்க .. எல்லாரும் உள்ள வாங்க வெளியவே நின்னுகிட்டு இருக்கிங்க.. ” என்று வரவேற்க,
மீனாட்சியும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்ற நேரம் எதிர் வீட்டில் ஆர்ப்பாட்டமாய் பட்டாசு வெடிக்கும் சப்தம் காதைக் கிழித்தது.
சந்தன பாண்டியன் தான் தன் வருங்கால மருமகனை வரவேற்க தடபுடலாக ஏற்பாடு செய்து ஆரவாரமாக பட்டாசு வெடிக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவர் காதில் புகை வந்தது.
ஒன்று பரமசிவம் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை .. அந்த இன்னொருவர் சுந்தர பாண்டியன்.
ஆம் சந்தன பாண்டியனின் முன்னாள் சகோதரனும் இந்நாள் எதிரியுமான சுந்தர பாண்டியன் தான் அவரின் இந்த ஆரவாரத்தைக் கண்டு காதில் புகை வர நின்றிருந்தார்.
25 வருடங்களுக்கு முன் காதலித்து மீனாட்சியை திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக பெற்றோரிடம் இருந்து தன்னை பிரித்து வைத்த அண்ணனின் மேல் தீராத கோபம் கொண்டிருந்தார் சுந்தர பாண்டியன்.
தன்னை வீட்டை விட்டு துரத்திய அண்ணனின் கண் முன்னே பெரிதாய் சாதித்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற சபதத்தோடு அவரின் எதிர் வீட்டையே வாங்கி அங்கு வசித்து வருகிறார் சுந்தரம்.
தன் அண்ணனை அனைத்திலும் வென்று விட வேண்டும் என்று ஒரு வெறி அவருக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருக்க, அவரிடம் ஒரேயொரு விஷயத்தில் மட்டும் தோற்றுப் போய் விட்டார் அவர். அது கீதாஞ்சலியின் படிப்பு தான்.. சந்தனபாண்டியணின் மகள் அஞ்சலி அனைத்திலும் முதல் மாணவியாக திகழ்ந்து இப்போது IAS பரீட்சை எழுதி முடித்துருக்க, கீதாவோ பத்தாம் வகுப்பே பத்து முறை எழுதியும் பாஸ் ஆகவில்லை. அதனால் சந்தன பாண்டியனின் கேலிக்கு உள்ளான இவருக்கு மகளின் மீது ஏக கடுப்பு.. அதானல் தான் இப்போது அவளின் திருமண விஷயத்திலாவது அண்ணனை தோற்கடித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர், தேடிக் கண்டுபிடித்து கீதாவிற்கு சென்னையின் முக்கியமான கார்டியாலாஜிஸ்டை தனக்கு மருமகனாக தேர்ந்தெடுத்த உள்ளார்.
சந்தனபாண்டியனால் வரவேற்கப்பட்ட ராமன் தன் தம்பியை, ‘ மரியாதையை பார்த்தாயா? ‘ என்பது போல் எகத்தாளமாய் பார்க்க, பரமசிவன் எதுவும் பேசாமல் விடுவிடுவென சுந்தர பாண்டியனின் வீட்டிற்குள் நுழைந்தார்.
அவரைத் தொடர்ந்து சுந்தரபாண்டியனும் தன் அண்ணனை முறைத்து விட்டு உள்ளே போக, அதை திருப்தியாக பார்த்தா சந்தன பாண்டியன், ராமன் குடும்பத்தை அதன் பின்பே உள்ளே அழைத்துச் சென்றார்.
போகும் முன் அஜய் திரும்பி அஷ்வத்தைப் பார்க்க, சரியாக அவனும் அதே நேரம் திரும்பினான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்ள, அஜய் அஷ்வத்தைப் பார்த்து கண்ணடித்து, ” ஆல் தி பெஸ்ட்” என்று கூறி விட்டு தன் வருங்கால மாமனாரின் வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தான்.
மீசைக்கார மாமனார்களுக்கு மருமகன் மாறிவிட்ட விஷயம் தெரிய வரும்போது இதே வரவேற்பு கிடைக்குமா??