Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அங்கணம் நின்றான் அந்தியூறான்

அங்கணம் நின்றான் அந்தியூரான் -1

அத்தியாயம் – 1

1980ல்… இருந்து நாமும்…

அந்தியூர் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள, ஈரோடு மாவட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு சின்ன கிராமம்.இரு புண்ணிய நதிகளான காவேரியும், பவானியும் கலந்து நின்று கதை பேசுவது இவ்வூரின் பெருமைகளில் ஒன்று.

ஊரின் பெருமையைக் கொண்டே கர்வம் கொள்ளும் மனிதர்கள் இங்கு ஏராளம் அல்லவா. அதில் நமது தணிகாலசமும் ஒன்று.அந்தியூரை பிறப்பிடமாகக் கொண்டவன், தற்போது ஈரோட்டில் வசித்து வருகிறான்.துணி தயாரிப்பு இவர்களது குல தொழில்.



Advertisement

தொழிலை கொண்டு அவன் மட்டுமே ஈரோட்டில் வாசம்.தாய், தந்தை, தான் பெற்ற மகள், தனக்கு வந்த தற்போதைய மனைவி என்று அனைவரும் அந்தியூரில் தான் வசித்து வருகிறார்கள்.ஐந்து அக்கா மார்களை கொண்டவன் என்றால் அவனது பொறுப்பையும், பொறுமையும் எண்ணி கொண்டே அவனை கொஞ்சமே கொஞ்சம் கணிக்க பாருங்கள்.

எல்லாம் இருக்கட்டும் ‘அது என்ன தற்போதைய மனைவி?’. ஆம் முன்னாள் மனைவியின் பெயர் செல்வி பெரிய அக்காளின் இளைய மகளை தான் திருமணம் செய்து கொண்டான்.தாய் மாமன் மீது கொண்ட தீர காதலால் தணிகாசலத்தை கரம் பிடித்தாள் செல்வி.

ஆசை,மோகம்,காதல்,அன்பு,கனிவு, என்று நிறைவாகச் சென்ற வாழ்க்கையில் குழந்தை வரம் மட்டும் வம்பு செய்ய.அதற்கும் ஆறு வருடம் காத்திருந்தார்கள்.வழமை போல் பேச்சுக்கள் தொடங்கியது உற்றார், ஊரார் என்று இறுதியில் அது நின்ற இடம் குழந்தைக்காக மறுமணம். இதுவும் வழமை தானே,ஆனால் புரிதல் கொண்டு தம்பதிக்கு இந்தப் பேச்சு அர்த்தமற்றதாகத் தோன்ற இருவருமே அதனை அழகாக கையாண்டு நின்றார்கள்.

Advertisement

ஒருவர் தடுமாறினாலும் பிரிவு தான் என்ற நிலை இருந்தும்.அழகாகக் கை கோர்த்து எனக்கு நீ! உனக்கு நான்! என்று நின்றனர்.பேச்சுகள் மட்டுமே தொடர்ந்தது செவியை இறுக்கப் பூட்டி கொண்டனர் தம்பதிகள்.மேலும் மூன்று வருடங்கள் பேச்சுக்கள் தான். இவர்கள் காதலை பார்த்து கரைந்த கடவுளே வரத்தையும், சாபத்தையும் ஒருங்கே கொடுத்தார் போலும்.வரமாகப் பெண் பிள்ளை குடுத்து விட்டுச் சபாகமாக மனைவியை எடுத்து கொண்டார்.

Advertisement

செல்வி குழந்தையை பெற்றெடுத்த நொடி இவ்வுலகம் விட்டு சென்று விட்டாள்.இதனை யாருமே எதிர்பார்க்க வில்லை அனைவரும் அதிர்ந்து நின்றனர்.அத்தனை உறுதி கொண்ட தணிகாசலனே மனைவியின் இறப்பை ஏற்று கொள்ள முடியாமல் தளர்ந்து போயி விட்டான்.

அதன் பின் அவன் வாழ்க்கையே மாறி விட்டது.மகளைக் கண்ணாகப் பார்த்து கொள்ளாதது போல் தெரிந்தாலும் மகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தான் செயல் பட்டான்.ஏன் என்றால் செல்வியின் மறு பிறவி அவனது மகள்.

நடையில் தொடங்கிப் பாவனை வரை அப்படியே செல்வி தான்.மனைவியைக் கொண்டு வலி மறைத்து நின்றவன்,மகளை தோழியாக எண்ணி தூரமிருந்து ரசித்து வந்தான்.பத்து வயது மகளை வைத்துக் கொண்டு தற்போது தான் மறுமணம்.அதுவும் தனது மகள்கள் பண்ணிய கூத்தின் கணம் தாங்காமல் ஈரோட்டில் இருந்து பிடித்து வந்து விட்டார் தணிகாசலத்தின் தந்தை சிவராமன்.

Advertisement

ஒரே சமூகம் கொண்ட நண்பனின் தங்கை மகள் இந்தப் பெண் விசாலாட்சி. தந்தை இல்லாத பெண் ஒரு அண்ணன். விசாலாட்சிக்கும் அவளது அண்ணனுக்கும் ஒரு வயது தான் இடைவெளி.அம்மா, தாய் மாமன், அத்தை என்று  அளவான குடும்பம்.விசாலாட்சி அண்ணன் சம்பாத்தியத்தில் தான் எல்லாம்.

செல்வ செழிப்பு இல்லை என்றாலும் அவர்கள் வரையில் உள்ளதை கொண்டு நல்லதை செய்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.குணம் கொண்ட அமைதியான மனிதர்கள், அதில் விசாலாட்சி மட்டும் தனி ரகம் துரு துருவென இருப்பாள் பெண்.இப்போது  திருமணம் முடிந்து பெரும் அமைதியாகி போனது.

சரி நடப்புக்கு வருவோம்!…

“விசா!.. விசா!.. தலை பின்னி விடு பள்ளி கூடத்துக்கு நேரம் போகுது பார்” தனது அம்மாச்சி அதாவது தணிகாசலத்தின் மூத்த அக்கா ராணியின் குரலில் கத்தி வைத்தாள் இளைய செல்வி.அதாவது  தணிகாலசம் மற்றும் செல்வியின் மகள் முழுப் பெயர் செல்வகுமாரி.

“இன்னொரு முறை விசா பாஸ்ப்போர்ட்ன்னு கூப்பிட்ட நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது. என்னால தலையைப் பின்னி விட முடியாது போடி அந்தாண்ட” அவளுக்கு மேல் கத்தி வைத்தால் விசாலாட்சி.

“ஏய்! என்ன ரொம்ப பண்ணுற விசாலாட்சினு கூப்பிட எனக்கு நேரமில்லை. அதான் சுருக்கி ‘கையை ஒருவிதமாகக் குவித்துக் காட்டி’ விசா சொல்லுறேன் என்க” அவள் சொன்ன அழகில் ஒரு நொடி மயங்கி நின்றாள் விசாலாட்சி.

செல்வகுமாரி அத்தனை அழகு தாமரை நிறம், முல்லை பூ வரிசை பற்கள்.பார்க்கவே மஹாலக்ஷ்மி போல் இருப்பாள்.அவள் அழகின் மீது எப்போதும் விசாலாட்சிக்கு மயக்கம் உண்டு.ஆனால் மகளிடம் சொல்ல மாட்டாள்.ஏன் என்றால் இவர்கள் இருவரும் அம்மா, மகள் இல்லை அக்காள், தங்கை.

அது போல் தான் இருவரும் அடிக்கடி சண்டை பிடித்து கொள்வார்கள். இவர்கள் பேசிக் கொள்ளும் அழகை கண்டு மறுமணம் எதற்குச் செய்தோம் என்ற நிலையில் அவ்வீட்டின் பெரியவர்கள் இருவரும் முழித்து நின்றனர்.

“இங்க பார்! நீ! வர.. வர ரொம்பப் பண்ணுற பள்ளி கூடத்துக்கு நேரமாச்சு அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” குமாரி பிஞ்சு விரல் நீட்டி விசாலாட்சியை மிரட்ட.அதற்கும் அவள் நக்கல் செய்தாள்.

“இப்போ மட்டும் நீ என்ன மனுசியா?”

“ஏய்!.. விசா உனக்கு அவுளோதான் பார்த்துக்கோ”

“பாருடா சரிதான் போடி வெள்ளை எலி”அதற்கும் அலட்டி கொள்ளாமல் பதில் சொன்ன விசாலாட்சி மீண்டும் அறைக்குள் நுழைந்து கொள்ள.பள்ளிக்கு நேரமாவதை எண்ணி பயத்தில் கண்ணில் நீர் நிறைந்து விட்டது செல்வ குமாரிக்கு.

அவள் அழுக தயாராகும் முன்னே ஓடி வந்து தலையைப் பின்னி விடத் தொடங்கினர் சிவகாமி. பார்வை அங்கே அமர்ந்திருந்த சிவராமனை எரித்தது.இத்தனை நேரம் மருமகள் மற்றும் பேத்தியின் கூத்தையும் ரசித்தவாறு இருந்தவர் மனைவியின் பார்வையில் தடுமாறி முகத்தை மறுபக்கம் திரும்பி கொண்டார்.

“பிள்ளைக்கு வேண்டி கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து நித்தமும் இங்க சக்காளத்தி சண்டை தான்.இதுங்க கூட மல்லுக்கட்டி என்ற உசுரே போயிடும் போல” கணவனை முறைத்தவாறு புலம்பி கொண்டே பேத்தியை கடிந்து கொள்ள தொடங்கினார்.

“ஏய் குமாரி! இந்தக் கூத்து நடக்கும்னு எண்ணி தானே. நான் பின்னி விடுறேனு சொன்னேன். எங்க அம்மாகிட்ட போறேன்னு ஆட்டிகிட்டு போன, இப்போ பாரு வரட்டும் உங்க அப்பன்.அவனைக் கண்டாக்கா மட்டும் பதிவிசு பச்சை மிளகாய் கணக்கா இருக்குறது. நீங்க பண்ணுற கூத்து அவனுக்குத் தெரிய மாட்டேங்குது அந்த அளவுக்கு சின்னவ ஒரு தினுசு நடிப்பு, பெரிய ஒரு தினுசா நடிப்பு வைக்கிறது.

இனி என்னால உங்களை சமாளிக்க முடியாது.ஒன்னு அவன் இங்க இருக்கனும். இல்ல நீங்க இரண்டு பேரும் அங்க போகணும். இந்தத் தடவ நான் விடுறதா இல்லை.விடியலுக்குத் தொடங்கிக் கருக்கல் வரை வம்பு தான்”

இருக்கும் கோபத்தையெல்லாம் பேத்தியின் முடியில் காட்டி அழகாகச் சடை போட்டு விட்டுக் கணவனிடம் திரும்பிய சிவகாமி “நல்ல வேடிக்கை பாருங்க சாமி. இன்னும் நாலு சனத்தைக் கூட்டி வந்து நடுக் கூடத்துல குந்தி வச்சு நல்ல பாருங்க”

“நான் என்னடி..” மேலும் பேச போனவரை தடுத்த சிவகாமி.

“நீர் செஞ்ச வரை போதும்!… போதும்!.. ஒரே கல்யாணம் பண்ணி வச்சு முடிச்சு விட்டாச்சு.என் உசுரே போகுது. நானுந்தான் வளர்த்தேன் சாமி ஆறு பொட்ட பிள்ளைங்க என் கண் அசைவுக்கு பயந்து நிக்குமுங்க.கண்ணாலமாகி பேரன், பேத்தி எடுத்து கூடப் நான் குரல் உசத்தி பேசுனா பயந்து நிக்கிறாளுக,

ஆனா இங்க? இரண்டு பொட்டச்சிங்கள சமாளிக்க முடியலை. எல்லாம் உங்களால” என்றவர் வசை பாடி கொண்டே இருக்க.சிவராமன் வேகமாகப் பேத்தியை அழைத்துக் கொண்டு படியில் இறங்கி விட்டார்.

சுமார் பத்து படிகளைக் கொண்ட அரண்மனை அமைப்பு கொண்ட வீடு அது.அவரது வேகத்தைக் கண்டு பதறிய சிவகாமி பேச்சை நிறுத்தி விட்டு, “ஐயோ! சாமி பார்த்து போங்க விழுந்து வாரிக்கிட்டு வராதீங்க” என்று பதற.

அதையெல்லாம் காதில் வாங்காமல் ஓடியே விட்டார்கள் தாத்தாவும், பேத்தியும்.கணவனது விளையாட்டில் அதுவரை இருந்த இறுக்கம் தளர மெல்லமாகச் சிரித்துக் கொண்டாள் சிவகாமி.ஏழு பிள்ளைகளைப் பெற்ற அழகான தம்பதியினர் தான் சிவகாமி மற்றும் சிவராமன்.

இவர்கள் குடும்பம் அந்தியூரில் செல்வ செழிப்பான குடும்பம் என்பதால் இருவருக்கும் பெரிதாக எந்தக் கஷ்டமும் வந்ததில்லை.கண்ணீர்,கவலை எல்லாம் இரண்டாம் தலைமுறை தலையெடுத்து தான் தெரிந்தது.அதுவும் இந்தப் பத்து ஆண்டுகள்.. சொல்லவே முடியவில்லை.

ஆறு மகள்களுக்கு பின் எதிர்பாராமல் கிட்டிய வரம் தான் தணிகாசலம்.செல்வம் பெற்ற குடும்பம் என்பதாலோ இங்கு இத்தனை பெண் பிள்ளைகள் என்ற மலைப்பே இல்லை இருவருக்கும்.அவர்களைப் பொறுத்த மட்டில் அனைத்துப் பெண் பிள்ளைகளும் மகாலட்சுமியே,

ஆனால் மகனின் வாழ்க்கை தான் பெரும் உறுத்தலாகி போனது. தணிகாசலத்தை எண்ணினால் கவலை, கண்ணீர்  தான். மகனை எண்ணி ஒரு பெருமூச்சுடன் சிவகாமி உள்ளே செல்ல. அங்கே வாசலை பார்த்துக் கொண்டே நின்று இருந்தால் விசாலாட்சி. மருமகளைக் கண்டதும் போன கோபம் திரும்ப வர “இப்போ என்ன உனக்கு?” என்றதும் கண்ணில் இருந்து தாரை தாரையாக நீர் வழிய பதறி விட்டார்.

வேகமாக மருமகளை நெருங்கியவர் அவளது முகம் பற்றி “அம்மாடி விசாலாட்சி என்ன இது?”

“நான் எங்க வீட்டுக்கு போறேன் அத்தை” என்றதும் ஐயோவென்று வந்தது அவருக்கு.உண்மையில் விசாலாட்சி விடயத்தில் அனுபவம் கூட கை கொடுக்காமல் சோர்ந்து தான் போகிறார் சிவகாமி.

“இதையே சொல்ல கூடாதுனு சொல்லி இருக்கேன் தானே. இனி இப்படி பேச்சு வந்துச்சு கொன்னுடுவேன் பார்த்துக்கோ. படுத்தி வைக்காதீங்கடி அம்மா ஒரு பக்கம், மகள் ஒரு பக்கம்னு” மருமகளையும் பேத்தியையும் எண்ணி சலித்துக் கொண்டார் சிவகாமி.

அவர் சொல்வதிலும் காரணம் உண்டு. இரு பெண்களும் ஏன்? எதற்கு? என்று காரணம் இல்லாமல் அடித்துக் கொண்டு அழுவார்கள்.அப்படி சண்டை வலுத்தது என்றால் சின்னவள் அப்பாவிடம் செல்ல வேண்டும் என்பாள்.பெரியவள் அவள் தாயிடம் செல்ல வேண்டும் என்பால்.

இதில் இரண்டு பட்டு போவது என்னவோ சிவகாமி தான்.விசாலாட்சியின் குணத்தை சிவகாமியால் கணிக்கவே முடியவில்லை. அவளைப் பாம்பு என தாண்டவும் முடியாது விழுது என மிதிக்கவும் முடியாது பல சமயம் தடுமாறி நின்றார்.

கணிப்புக்கு அப்பாற்பட்ட பிறவி விசாலாட்சி.உண்மையில் இவர்களைச் சமாளிப்பது தான் சிவகாமிக்கு தற்போதைய தலை வேதனை.அவரும் எத்தனை நாள் தான் பொறுத்து போவது சலித்து விட்டது அதான் இன்று கொஞ்சம் கூடுதல் கடுமை காட்டிக்கிறார்.

“நீ என்ன பாப்பாவா? எப்போ பார் சண்டை, அழுக அப்புறம் அம்மா கிட்ட போறேன்னு சொல்ல வேண்டியது.இப்போ நீ தானே அவகிட்ட சண்டை இழுத்து வச்ச. அவ தான் அழுது கிட்டு போறா அதுக்கு எதுக்கு உனக்கு அம்மா?” ஏகத்துக்கும் திட்டி வைக்க படக்கென தலையைக் குனிந்து கொண்டாள்.

சிவகாமிக்கு அவளது சிறு பிள்ளை செய்கையில் அதுவரை இருந்த கோபம் மறைந்து சிறு புன்னகை பிறக்க “அந்தச் சின்னக் குட்டி மாதிரியே நடி. இன்னும் இரண்டு நாள் போகட்டும் ஏன்புள்ள வரான். நான் அவன் கிட்ட பேசிக்கிறேன்” என்றதும் முகத்தைச் சுருக்கி கொண்டு மாமியாரை பார்க்க.

“என்ன பார்வை வேண்டி கிடக்கு.இனியெல்லாம் பாவம் பார்த்தேன் நான் பாவியாகி போக வேண்டியது தான்.அம்மா, பொண்ணு மாதிரியா சண்டை போடுறீங்க? எப்பா!.. பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு அம்மா, பொண்ணை நான் பார்க்கல”

ஏற்கனவே உன்னை தணிகாக்கு கட்டி வச்சதுக்கு என் பொண்ணுங்க எல்லாம் என் மேல கோவமா இருக்காளுங்க. அத்தனை பேரை எதிர்த்து தான் உன்னை கட்டி வச்சார் உன் மாமனார்”

“ஏன் அத்தை?” புருவத்தை உயர்த்திக் கொஞ்சம் கேலி தோணியில் கேட்க அதில் எரிச்சல் கொண்டவர்.

“ஹ்ம்ம்!.. என் பேத்திகளைக் தணிகாக்கு கொண்டு வரலன்னு தான்”

“ஏன் அத்தை? நீங்க செய்யல நானே கூட அம்மா கிட்ட கேட்டேன். கல்யாணம் ஆகி இரண்டு மாசம்தான் ஆகுது இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் உனக்கே தெரியும் சொன்னாங்க” தாயிடம் பேசியதை அப்படியே மாமியாரிடம் பகிர்ந்து கொள்ள.

அதிர்ந்த சிவகாமி “இவ என்னாமா இங்க பொழைக்கப் போறன்னு தெரியலையே?” குடும்பம் அரசியல் அவரைப் பயம் காட்டி வைக்கப் பதறிப் போனார்.

” அம்மா கிட்ட பேசுனதை எல்லாம் யாருகிட்டயும் சொல்லி வைக்கக் கூடாது”

“நான் அப்படி எல்லார் கிட்டையும் சொல்ல மாட்டேன், ஆனா காரணம் தெரிய வேண்டி உங்க கிட்ட கேட்டேன்” அவள் பேச்சு சிறு தெம்பை கொடுக்க.

“முதல் பேத்தி குழந்தை இல்லாம இருந்தது, செத்தது, எல்லாம் ஒரே ரெத்தம், தாய் மாமன் உறவுல திருமணம், என்னவோ சொன்னாங்க.நாங்கெல்லாம் உறவுல தான் அப்போ கல்யாணம் பண்ணிப்போம். உன் மாமனாரும் எனக்குச் சொந்த அத்தை மகன் தான்.எங்களுக்கு ஒண்ணுமே இல்லை ஏழு பிள்ளை பெத்து நல்லா தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம்.ஆனா இப்போ காலம் மாறி போகுது இல்லையா அதான் பயம் வந்திருச்சு”

“ஓ! ஆமா நான் கேள்வி பட்டிருக்கேன், எங்க அப்பா எங்க அம்மாக்கு சொந்த தாய் மாமன் தான்”

“சொன்னாங்க உங்க அம்மா.சரி இப்போ இந்த பேச்சே வேணாம். நீ போயி உன் அறையைச் சுத்த படுத்து நாளை மறுநாள் வந்து நிற்பான். நீ இப்படி போட்டு வச்சிருந்தா வந்து திட்டி வைப்பான்.அப்போ கண்ணை கசக்கிட்டு வந்து நிக்காத போ!.. போ!..”

“இன்னும் இரண்டு நாள் இருக்கு தானே பார்த்துக்கலாம் அத்தை” என்றவள் செல்ல போக. அவளது கையைப் பிடித்துத் தடுத்த சிவகாமி கொஞ்சம் தயங்கி கொண்டே.

“ரொம்ப நாளாவே உங்கிட்ட கேட்கனும் எண்ணிருந்தேன் விசாலாட்சி தப்பா எடுத்துக்காத.நான் கேட்குறதுக்கு உண்மையா பதில் சொல்லனும்”

“என்ன அத்தை சொல்லுங்க கண்டிப்பா நான் உண்மை தான் சொல்வேன்”

“உனக்கு குமாரிய பிடிக்கலையா? இல்ல என் மகனை பிடிக்கலையா? எதுவா இருந்தாலும் சொல்லிடு இல்ல குமாரிக்காக கல்யாணம் பண்ணாங்கன்னு எண்ணி வைக்கிறியா?அப்படி இருந்தா சொல்லு? குமாரிய நான் வளர்ந்துப்பேன்” என்று சொல்ல.எதுவும் பேசாமல் சில நொடிகள் சிவகாமியை ஆழ்ந்து பார்த்தவள் பின்பு அழகாகச் சிரித்து.

பதில் சொல்லாமல் சிவகாமியை கடந்து செல்ல.மீண்டும் தலையைப் பிடித்துக் கொண்டு புலம்ப தொடங்கி விட்டார் சிவகாமி, “இப்படி சிரிச்சா நான் என்னானு எண்ணி வைக்குறது. இது சரி வராது வரட்டும் அவன்” வாய்விட்டு சொன்னவர்.அவர்களை எண்ணி கொண்டே அன்றாட வேலைக்குள் நுழைந்து கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!