Skip to content
Post Views: 1,454
அத்தியாயம் 25
“என்ன டா சொல்ற?” கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரித்தபடி நந்தா கேட்க,
Advertisement
“அய்யோ சிரிக்காதிங்க மாமா.. நான் செம்ம டென்ஷன்ல இருக்கேன்!” என்றவன் பால்கனியில் நின்று எதிர்வீட்டை தான் பார்த்தபடி நின்றிருந்தான் காதில் ப்ளூடூத்துடன்.
ஆரா இறங்கியதும் வீட்டிற்குள் வந்த ரகுவின் எதிரே அகிலன் மருத்துவமனைக்கு செல்ல தயாராய் வர,
Advertisement
Advertisement
“இந்த காரை எடுத்துட்டு போ அகி! வரும் போது என் பைக் எடுத்துட்டு வா.. மாமாகிட்ட கீ இருக்கட்டும்!” என்று சொல்லி வேகமாய் மொபைலை எடுத்து நந்தாவிற்கு அழைத்தபடி மேலே சென்றவன் தான். அவன் பேசிய பேச்சில் நந்தாவே அதிசயித்தான் ரகுவை நினைத்து.
இன்னுமே நந்தா சிரிப்பை அடக்க முடியாமல் நிற்க, “நிஜமா தான் சொல்றேன் மாமா.. என் காதலை பிரச்சனைனு சொல்றா.. அவ எப்படி அப்படி சொல்லலாம்? இன்னொன்னு என்னவோ உளறினாளே! ஹான், மத்ததை தூக்கி போடுன்றா.. அவ மத்ததுன்னு சொன்னது என் மனசு மாமா.. விஷ் வேற தாய்மாமான்னு!” என்று சொல்ல,
Advertisement
“டேய் ரகு!” என்று சிரித்த நந்தா,
“அதுக்காக அவ்வளவு பேசுனியா அந்த பொண்ணுகிட்ட.. பாவம் டா.. பார்த்தாலே தெரியுது.. இன்னஸண்ட் ரகு!” என்று ஆராத்யாவிற்கு ஆதரவாய் பேசியவன் உறங்கும் மனைவி அருகில் வந்து ட்ரிப்ஸ் முடிந்ததா என பார்த்துவிட்டு மீண்டும் வெளியே வந்தான்.
“எது இன்னஸண்டா? அவ பேசின பேச்சுக்கு…” என்று கோபமாய் முடிக்காமல் விட,
“சொல்லு! பேசின பேச்சுக்கு.. இப்பவே வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணனும்னு தோணுதா?” என்று நந்தா புன்னகையை அடக்கிக் கொண்டு கேட்க,
“அப்படி தோணுச்சுனா கூட பரவாயில்லயே.. அவளையே தூக்கிட்டு போய் தாலி கட்டிட்டா என்னனு தோணுது!” என்றவன் பேச்சில் ‘அவ்வா’ என வாயில் கை வைத்துவிட்டான் நந்தா.
“அடப்பாவி! உன்னை எவ்வளவு நல்லவன்னு நான் நினச்சேன்.. நீ விட்டா மாமான்னு கூட பாக்காம என்னையே பொண்ணை கடத்த சொல்லுவ போலயே! ஒரு பிசினஸ்மேன் பண்ற வேலையா இது? இது மட்டும் உன் அக்காக்கு தெரிஞ்சது….”
“மாமா!” என்று தலையசைத்து தன் பேச்சை நினைத்து தானே அசடாய் சிரித்து, அதை மாமாவிடம் கூறியதற்கு வேறு தனியாய் வெட்கம் கொண்டு நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு நீவி மென்னகை சிந்த,
“சரி அதான் பேசிட்டியே! அப்புறம் என்ன? போய் தூங்க வேண்டியது தானே?” என்றான் நந்தா.
“ப்ச்! ரொம்ப பேசிட்டோமோனு எனக்கே ஹர்ட் ஆகுது மாமா.. பாவம் ஆரா! ஆனா நான் சாஃப்ட்டா சொல்லி இருந்தாலும் அவளுக்கு புரியாது.. அவ மனசுல வேற என்னவோ இருக்குமோனு தோணுது.. என்னனு சொன்னா தானே தெரியும்? ப்ச்! அந்த கோபத்துல தான் அதிகமா பேசிட்டேன்.. அழுதாளா என்னனு தெரியல..” என்று ஆரா வீட்டைப் பார்க்க, அங்கே மேலே முழுதாய் அனைத்து விளக்குகளும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
“ம்ம் நீ இப்ப கொஞ்ச நாளாவே அதிகமா தான் பேசுற! ஆனா பேச வேண்டிய இடத்துல பேசி தானே ஆகணும்?” என்ற நந்தா,
“ஏன்டா நான் பாவம்னு சொன்னேன் முறைச்ச.. இப்ப பாவம் ஆரான்ற! ஷ்யப்பா! லவ் பண்றவனுக்கு பிரண்ட்டா மட்டும் இல்ல மாமனாவும் இருக்க கூடாது போலயே!” என்று கிண்டல் பேச,
“ம்ம் ஏன் பேச மாட்டிங்க? வேற யார்கிட்ட நான் ஷேர் பண்ண முடியும்? அதான் கூப்பிட்டேன்.. தர்ஷி, பேபி எல்லாம் என்ன பன்றாங்க? அகி கிளம்பிட்டான் இப்ப சாப்பாடு கொண்டு வந்திடுவான்..” என்று பேச்சை திசை திருப்ப, நந்தாவும் அதற்கு ஒத்து வந்தான்.
யாரிடமாவது பேசி விட்டால் தன் பாரம் கொஞ்சம் குறையாதா என நினைத்த ரகுவிற்கு நொடியும் தாமதம் இன்றி மனதிற்குள் நந்தா முகம் தோன்ற, அழைத்து பேசி வைத்த பின் நிஜமாய் கொஞ்சம் இலகுவாய் தான் இருந்தது.
‘ஆரா பேசினத்துக்கு வேற என்ன பதில் பேச முடியும்? யாரா இருந்தாலும் கோபம் வர தான் செய்யும்.. எனக்கு கோபம் வந்தது எல்லாம் தப்பு இல்ல.. புரிஞ்சு வான்னு சொன்னா பிரச்சனை மன்னாங்கட்டினு வாய்க்கு வந்ததை பேசுறா.. இனி பேசுவ!’ என மீண்டுமாய் தனக்கு தானே ஒரு புலம்பலை போட்டுவிட்டு தான் தூங்கவே முடிந்தது ரகுவிற்கு.
ஆராத்யாவிற்குமே ஒரு பொட்டு தூக்கமில்லை. அவள் நினைப்பிற்கும் நினைத்ததற்கும் மாறாய் ரகு அவள் முன் இருக்க, அவன் பேச்சுக்கள் யாவும் பெரும் பயத்தை மனதுள் இழுத்தது.
அவன் பேசிய பேச்சுக்களை விட அவன் மனம் அந்த வார்த்தைகளில் தெரிந்திருக்க, இவன் வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை சொன்னதை செய்வான் என்பதை புரிய வைத்தது. அது மேலும் நடுக்கத்தை தான் கொண்டு வந்தது.
எத்தனை யோசித்தாலும் அவனிடமே சென்று விடேன் என்று கெஞ்சும் மனதின் பேச்சை மட்டும் கேட்பதாய் இல்லை ஆராத்யா.
மனம் தனக்கு வேண்டியதை மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கும்.. மூளை தான் நிஜத்தை எடுத்து சொல்லும்.
ஆசைக்கு செய்துவிட்டு பின் அனைவரின் பார்வைக்கும் தான் கேலிக்கு உள்ளாகி நிற்பதை எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
நந்தா தர்ஷினி அருகே அமர்ந்து ரசித்து பார்த்திருந்த அந்த தருணம் இப்பொழுதும் கண்களுக்குள் நிற்க, அவரை எப்படி சந்தேகம் கொள்ள முடியும்? என்று கேள்வி கூடவே ரகுவின் நியாயமான கேள்வியும் நியாபகத்தில்.
எல்லாரும் எப்பவும் சரியா இருப்பாங்களா? என்று தான் கேட்டதன் விளைவு தான் நந்தாவை வைத்து ரகு அப்படி பேசியது என்று புரிந்தாலும் தன்னால் ரகுவுக்கு முழு மனதோடு சம்மதம் சொல்ல முடியும் என்று மட்டும் தோன்றவே இல்லை.
‘இப்ப என்ன செய்யலாம்னு இருக்க ஆரா?’ தன்னைத் தானே கேட்டுக் கொண்டவளுக்கு பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது.
உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் மனது அவளை மாற்ற போராட, அதன் பேச்சை கேட்கவே மாட்டேன் என இருந்தவளுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாக தான் முடிந்தது.
உறக்கம் சரியாய் வராமல் இருந்த ஆராத்யா, அடுத்த நாள் காலை எழுந்ததும் பேருந்தில் தான் செல்ல வேண்டும் என்ற நினைவில் அம்பிகாவிற்கு முன்பே எழுந்து சமையலை தானே செய்துவிட்டு சீக்கிரமே கிளம்பியும் வந்துவிட்டாள்.
ஸ்ருதி கணவன் வந்திருக்கும் நேரம் என்பதால் அந்த நேரங்களில் அவர்களுடன் பெரும்பாலும் இருப்பதில்லை ஆராத்யா. அவர்களுக்கான தனிமையில் தலை கொடுப்பதில்லை.
இப்பொழுதும் அம்பிகாவிடம் கூறிவிட்டு கிளம்ப தயாராக, “இன்னும் மூணு மாசத்துல மாப்பிள்ள வந்து ஸ்ருதியையும் அஜயையும் அங்கேயே கூட்டிட்டு போறாராம் ஆரா! அது விஷயமா தான் வெளில கிளம்பிட்டு இருகாங்க நினைக்குறேன்.. இன்னும் ரூம்ல இருந்து வெளில வரல!” என்ற அம்பிகாவிற்கு சந்தோசம் தான் என்றாலும் மகளை பிரிவதில் கவலை இல்லாமல் இல்லை.
“ஏற்கனவே எதிர்பார்த்தது தானே ம்மா? அவங்க சந்தோசமும் முக்கியம் இல்லையா? உங்களையும் தானே கூப்பிடுறாங்க!” என்று புன்னகையுடன் ஆராத்யா கேட்க,
“நமக்கெல்லாம் அங்க சரிப்பட்டு வராது டா.. நம்ம சாவு நம்ம இடத்துல தான் இருக்கனும்.. என்னவோ வயசாகிட்டு இல்ல.. அதுல எல்லாம் மனசு ஒத்து வரல.. அதான் சொந்த ஊருல ஒரு ஓட்டு வீடு இருக்கே! என் ஒருத்திக்கு அது போதும்.. இந்த பய அஜய் தான் காலுக்குள்ளயே சுத்தி வருவான்.. எப்படி தான் பார்க்காம இருக்க போறேனோ?” என்றவரின் ஏக்கமும் புரியாமல் இல்லை.
“அஜய் இல்லாம எனக்குமே என்ன பண்ண போறேன்னு தெரியல ம்மா.. உங்க கஷ்டம் புரியுது!” என்றவளுக்கு இன்னும் மூன்றே மாதத்தில் தனிமை என்ற நினைவு கலக்கத்தை கொடுக்காமல் இல்லை.
“நான் ஒருத்தி! வெளில கிளம்புன பொண்ணை புடிச்சு பேசிகிட்டு இருக்கேன்.. சாப்பிட்ட தான? பார்த்து போய்ட்டு வா!” என்று சொல்லவும் சரி என தலையசைத்தவள் அம்பிகாவைப் பற்றிய நினைவோடு வெளியே வந்தாள்.
அந்தந்த வயதில் துணை என்று இல்லை என்றால் தன் இஷ்டம் என்று சந்தோஷப்பட முடிவதில்லை.. இதோ அம்பிகா கூறினாரே! ‘இருக்கும் வரை அங்கே இருந்துவிட்டு போகிறேன்!’ என்று.
வாழ்க்கை குறித்த ரசனையை அனுபவிக்க ஆணோ பெண்ணோ தன் வாழும் காலம் வரை ஒரு துணை தேவை தானே என தோன்ற, அம்பிகாவை நினைத்து கவலை கொண்டவளுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு பின் தான் என்ன செய்ய போகிறோம் என தோன்றவில்லை.
அந்த நினைவில் வெளியே வர, அவளது வண்டி அங்கே நிற்கவும் அதை எதிர்பாராதவள் எதுவோ தோன்ற திரும்பிப் பார்க்க அங்கே நந்தா நின்றான்.
தர்ஷினியோடு இரவு மருத்துவமனையில் இருந்தவன் காலை அகிலனோடு அம்மாவும், அத்தை மகேஸ்வரியும் சாப்பாடு எடுத்து வரவும் அவர்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு குளித்து கிளம்பி வரலாம் என வந்திருக்க,
ரகு வந்ததும் சொல்லி இருந்தான் ஆராத்யா வண்டியை எடுத்து வந்ததை.
வீட்டின் வாசலில் நின்ற நந்தா ஆராத்யா வெளியே வருவதை பார்த்ததும் தானும் கேட் அருகே வர, அவள் பார்க்கவும் அனைத்தும் கூறினான்.
“வண்டி சரி ஆகிடுச்சு மா.. நைட்டே மெக்கானிக் எடுத்துட்டு வந்துட்டான்.. லேட் நைட் ஆகிடுச்சு.. அதான் உன்கிட்ட சொல்ல முடியல!” ரகு சொல்லியதை அப்படியே நந்தா சொல்ல,
“தேங்க்ஸ் ண்ணா!” என்றவள் மறக்காமல்,
“எவ்வளவு ஆச்சு?” என்று கேட்க,
“அது தெரிலயே! ரகுகிட்ட தான் கேட்கணும்!” என்று அவள் முகம் பார்க்க,
“ஓஹ்! ஓகே ண்ணா! நான் சார்கிட்ட கேட்டுக்குறேன்.. தர்ஷ், ஏஞ்சேல் எப்படி இருக்காங்க!”
“ம்ம் நல்லா இருக்காங்க!” என்று புன்னகையோடு சொல்ல, அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள் வண்டியில்.
நந்தாவும் ரகுவிடம் சொல்ல, “எப்ப பாரு இதே வேலையா போச்சு இவளுக்கு! எவ்வளவு கேட்டாலும் குடுத்துடுவாளாமா?” என்று ரகு பொங்க,
“அடேய் யப்பா! காலையிலே உங்க ஆட்டத்துக்கு நான் வரல டா சாமி.. சும்மா அந்த பொண்ணுகிட்ட வம்புக்கு நீக்காத.. அது சொந்த பைக்.. தன்மானம், சுயமரியாதை இருக்குற எல்லாரும் கேட்குறது தான்.. அதுவும் இவ்வளவு அந்த பொண்ணை பத்தி தெரிஞ்சும் நீ குதிக்கலாமா? ரிலாக்ஸ்சா டீல் பண்ணு டா!” என்று சொல்லி இருந்தான் நந்தா.
‘ப்ச்! இவ என்னை என்ன பண்ணிட்டு இருக்குறா தெரியுமா?’ என முணுமுணுத்துக் கொண்டவனுக்கு அதை நந்தாவிடம் சொல்ல முடியவில்லை.
அடுத்த நாளும் ரகு அலுவலகம் செல்லவில்லை. விஷாலிடம் அழைத்து நடப்பவற்றை கேட்டுக் கொண்டும் அவனுக்கு சிலவற்றை தெளிவுபடுத்திக் கொண்டும் இருந்தான்.
புது ப்ராஜெக்ட் வேலைகளும் கொஞ்சம் தாமதமாகி இருக்க, தங்களுடன் இணையும் புதிய குழுவிற்கு அந்த தொழில் சம்மந்த வேலைகளை கற்று கொடுப்பதற்காக என இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுடன் ரகுவுமே வெளிநாடு செல்ல வேண்டிய நிலை.
ஆராத்யா வருகை குறித்து ரகுவும் இன்னும் எதுவும் பேசாமல் இருக்க, ஆராத்யாவும் அதை பேசவில்லை என்றதும் விஷாலும் எதுவும் பேசவில்லை ரகுவிடம் அதைப் பற்றி.
ஆனால் வேலைகள் மட்டும் கொஞ்சம் அதிகமாகி இருக்க, அதில் மற்றவர்களை பிஸியாக்கி இருந்தான் தொடர்பில் இருந்தே.
முடிந்தவரை வீட்டில் இரவு நேரத்தில் என்று வேலையை கவனித்தாலும் தர்ஷினி வீடு திரும்பும் வரையாவது குடும்பத்துடன் நேரம் செலவிட கணக்கிட்டு அதற்கேற்றபடி வேலையையும் பகிர்ந்து இருந்தான் விஷால் மூலம்.
மாலை நான்கு மணி அளவில் கலந்தாய்வு இருப்பதாக விஷால் ஆபீஸ் மெயில் மூலம் தகவல் அனுப்பியவன் “நியூ ப்ராஜெக்ட் கேண்டிடெட்ஸ் ஒன்லி” என்றும் அனுப்பி வைத்தான்.
“அதை நேர்ல கூப்பிட்டு அவங்களுக்கு மட்டும் சொல்றது தானே? இதுக்கு ஒரு மெயில் வேற!” என்ற விக்ரமிற்கு,
“அது ஒன்னும் இல்ல டா.. நாளைக்கு ராம் சார் வந்து நேத்து என்ன பண்ணீங்கனு கேட்டா இந்த மெயிலை தூக்கி காட்டி எஸ்கேப் ஆகிடலாம் இல்ல.. அதுக்கு தான் டி எல் அனுப்பி இருப்பார்!” என்று சொல்லி இருவரும் சிரித்தனர்.
“ஆமா ஆரா ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ண போறதா சொன்னாளே என்னாச்சு?” பிரேம் கேட்கவும் தான் விக்ரமும் நியாபகம் வந்தவனாய்,
“எனக்கும் எதுவும் தெரியல.. கார்த்திகிட்ட தான் கேட்கணும்!” என்றான்.
“அதான் ஆரா வந்துட்டாளே! அவகிட்டயே கேட்டுடலாம்..” என்று சொல்லி இருவரும் அவள் அருகே வர,
“என்ன டா ரன் பண்ணிட்டிங்களா என்ன? பிரீயா சுத்துறீங்க?” என்று பார்த்ததும் கேட்டாள் கார்த்திகா.
“விஷால் சார் வெளில போய்ட்டார்.. அதான் நாங்க எழுந்துட்டோம்!”
“அதானே பார்த்தேன்.. பிரேம்! இங்க என்ன எரர்னு பாரேன்!” என்று கார்த்திமா தன் கணினி முன் அழைக்க,
“விஷால் சார் வந்த அப்புறம் என்கிட்ட கேளு.. இதை வச்சு கூட கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்குவோம்” என்றவன் அமைதியாய் வேலையில் இருந்த ஆரா அருகே வந்தான்.
“ஆரா!” என்று அழைக்கவும்,
“சொல்லு டா!” என்றவள் கவனம் முழுதும் கணினியில் இருக்க,
” நியூ ப்ராஜெக்ட் என்னாச்சு?” என்றதில் வேலையை நிறுத்தி அவர்கள் புறம் திரும்பினாள்.
“ஆமா டி! நானும் மறந்துட்டேன்.. அன்னைக்கு ராம் சார் எங்க டிஎல்லை கடிச்சிடுவாரோனு பார்த்தேன்.. அவ்ளோ கத்தினார் நீ வர்றனு சொன்னதும்..” என்று இரு பொருளாய் கார்த்திகா கூற,
“சார் ஓகே சொல்லிட்டாரா ஆரா? அப்ப நீ ஃபாரின் போறியா?” என்றான் விக்ரம்.
“ம்ம்ஹும்.. போகல!” என்றவள் மீண்டும் வேலையில் திரும்ப,
“சார் வேண்டாம்னு சொல்லிட்டாங்களா?” என்றாள் கார்த்திகா.
“இல்ல.. நானே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.. நான் இப்ப போனா அவனுக்கு பயந்து போற மாதிரி இருக்குமே! அதான்.. ” இவர்கள் புறம் திரும்பாமலே அவள் பதில் சொல்ல,
“என்ன டி உன் சொந்த கம்பெனி மாதிரி வர்றேன் வரலனு விளையாடுற.. ராம் சார் நீ வர்றனு நினைச்சுட்டு இருந்தா? அதுக்கான ப்ரோசீஜர் பார்ப்பாங்க தானே?” கார்த்திகா கேட்க,
“அவங்க தான் எதுவும் சொல்லலனு டிஎல் சொன்னாரே!” ஆராத்யா.
“சரி தான்.. ஆமா நீ தெளிவா தானே இருக்க?” என்று கேட்கவும் ஆரா அமைதியாய் இருக்க,
“எங்கேயோ இடிக்குதே!” என்றாள் கார்த்திகா பிரேம் விக்ரமைப் பார்த்து.
“உனக்கு அடிக்கடி இடிச்சிக்கும்..” விக்ரம் சொல்லிவிட்டு,
“எதுக்கும் டிஎல்கிட்ட ஒரு டைம் பேசிடு ஆரா! அப்புறம் ராம் சார் மறுபடியும் அவரை தான் வச்சி செய்வார்!” என்று சொல்லி,
“கார்த்தி! காபி போலாமா?” என்று கார்த்திகாவிடம் கேட்க,
“ஆரா! வா போலாம்!” என்று அவளையும் அழைத்துக் கொண்டு நால்வருமாய் சென்றனர்.
எப்படியும் ரகு சம்மதம் சொல்லி இருக்க மாட்டான் என்றொரு நம்பிக்கை ஆராத்யாவிற்கு. அன்று குழப்பத்தில் கோபத்தில் பயத்தில் தானும் வருவதாய் சொல்லியிருக்க, இப்பொழுது ரகு சொன்னதை போல ஓடி ஒழிந்து என்ன ஆக போகிறது என்றொரு மனநிலை.
ஆராத்யா நினைத்ததை போல தான் ரகுவும் ஆராத்யாவை அந்த குழுவினுள் நுழைக்கவில்லை. பெயர் பட்டியலுடன் அனைவரும் கிளம்ப தேவையானவை என சில குறிப்பு அவன் விஷாலிடம் கொடுக்கும் பொழுது அதில் நால்வருடைய பெயர்களோடு ரகு பெயரே இருக்க, ஆராத்யா கேட்கவில்லை என்றதும் விஷாலும் அதை பெரிதுபடுத்தவில்லை.
தர்ஷினி குழந்தை பிறந்த மூன்றாம் நாள் அன்று மாலை கல்பனா அகிலனுடன் வீட்டிற்கு கிளம்பி இருக்க, நந்தா தாய், தந்தையை ஊருக்கு அனுப்பி வைக்க தர்ஷினியின் வீட்டிற்கு சென்றிருந்தனர். ரகுவும் மகேஸ்வரியும் இருக்க, தர்ஷினி எழுந்து அமர்ந்து தாயுடன் பேசிக் கொண்டிருந்தாள் குழந்தையைப் பற்றி.
ஆராத்யா வந்ததும் அறைக் கதவை திறக்க, உள்ளே அதன் அருகிலேயே மொபைலைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ரகு திரும்பிப் பார்த்துவிட்டு ஆராத்யா தான் என்றதும் குனிந்து கொள்ள,
“வா ஆரா!” என்ற தர்ஷினி அழைப்பில் தான் ரகுவிடம் இருந்து பார்வையை திருப்பினாள் ஆராத்யா.
“தூங்கிட்டாங்களா மேடம்!” என்று குழந்தையை பார்த்தபடி தர்ஷினி அருகே அமர்ந்து ஒரு கவரை நீட்ட,
“என்ன ஃபர்மாலிடி எல்லாம்?” என்றாள் தர்ஷினி.
“தர்ஷ்க்கெல்லாம் அதுல எதுவுமில்ல.. நான் ஏஞ்சேலுக்கு தான் ட்ரெஸ் வாங்கிட்டு வந்தேன்..” என்று குழந்தையைப் பார்த்தே கூறியவள்,
“அழுறாளா? உங்களுக்கு இப்ப ஓகேவா? இன்னும் வலி இருக்குதா?” என்று கேட்க,
“ஆமா நைட்னா தூங்குறதே இல்ல.. பகல்ல ஓரளவு ஓகேவா இருக்குறா..!”
“நீ ஏன் டா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு அலையுற?” என்று மகேஸ்வரி கேட்க,
“இதுல என்ன ம்மா இருக்கு? நான் வேற யாரை இப்படி எல்லாம் பார்க்க போறேன்?” என்று சாதாரணமாய் சொல்லி தர்ஷினியைப் பார்த்து கண் சிமிட்ட, மகேஸ்வரியோடு, ரகுவுமே ஆராவின் புறம் திரும்பி இருந்தனர் அவள் பதிலில்.
“என்ன பேச்சு ஆரா இதெல்லாம்?” என்ற தர்ஷினி,
“ஆமா பிரியாணி என்னாச்சு?” என்று கேட்டு வைக்க,
“நான் என்ன பண்றது? அதுக்குள்ள ஏஞ்சல் அவசரப்பட்டு வெளில வந்துட்டாங்களே! விடுங்க.. இன்னொரு ஆறு மாசம் தானே? அப்புறம் எல்லாம் சாப்பிடலாம்ல?” என்று கேட்டு சிரிக்க,
“அது சரி! ஒரு பிரியாணிக்கு நான் ஆறு மாசம் வெயிட் பண்ணனுமா?” என்று சிரித்தாள் தர்ஷினி.
ஆராத்யா அங்கே இருந்த ரகுவை கண்டு கொள்ளவே இல்லை. அவள் கவனம் முழுதும் தர்ஷினியோடு குழந்தையிடம் மட்டுமே இருக்க, ரகுவும் பேசவில்லை என்றாலும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் அவர்கள் பேச்சை.
“இரு டா ம்மா.. நான் போய் உனக்கு எதாவது வாங்கிட்டு வர்றேன்..!” என்று மகேஸ்வரி எழுந்து கொள்ள,
“இல்ல ம்மா.. நான் வரும் போது தான் காபி சாப்பிட்டேன்!” என்று ஆராத்யா மறுக்க,
“அடடா நம்பிட்டேன்.. காபி தானே? சாப்பிடலாம்.. ம்மா நீங்க இருங்க.. ரகு நீ போய் வாங்கிட்டு வா!” என்று தர்ஷினி சொல்ல,
“அய்யோ தர்ஷ் ப்ளீஸ்!” என்றாள் ஆராத்யா.
இடையே மருத்துவர் வருவதாக சொல்லி செவிலியர் வந்து அனைவரையும் வெளியே இருக்க சொல்ல, மகேஸ்வரி மட்டும் உள்ளே இருக்க அனுமதி தரவும்,
“ரகு! இந்த பிளாஸ்க்ல பால் வாங்கிட்டு வா.. சக்கரை வேண்டாம்.. தர்ஷிக்கு குடுக்கணும்.. ஆரா நீயும் கூட போய் எதாவது குடிச்சுட்டு வா!” என்று மகேஸ்வரி சொல்ல, மருத்துவரும் வந்துவிட்டார்.
வெளியே வந்து ஆரா சுவர் ஓரமாய் நின்று கொள்ள,
“வா!” என்று அழைத்தான் ரகுவே.
“இல்ல பரவால்ல சார்! நான் கிளம்பனும்.. டாக்டர் போகவும் சொல்லிட்டு கிளம்புறேன்..” என்று சொல்ல,
“ஒன்னும் பிரச்சனை இல்ல.. உன் காசுலயே காபி சொல்லிக்கோ.. அதான் மெக்கானிக் காசுக்கு ட்ரெஸ்ஸோட வந்துட்டியே!” என்றவன் முன்னே செல்ல, சட்டென்று புரிந்ததில்,
“அச்சோ அதெல்லாம் இல்ல சார்! நான் தர்ஷி பாப்பாக்காக தான் நானா வாங்கினேன்.. அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல!” என்றபடி அவன் பின்னே ஓடினாள்.
“எப்பவும் இப்படி தான் பேசுவியா?” என்று கேட்டபடி நடையை நிறுத்தாமல் வேகமாகவே சென்றான் ரகு..
அவளுக்கு அது வேகம் தான். அவன் நடைக்கு இவள் ஓட வேண்டி இருந்தது.
“என்ன?”
“அதான் என்னவோ சொன்னியே வேற யாரை பார்க்க போறேன் இந்த மாதிரின்னு!”
“நிஜம் தானே? நான் வேற யாரை…” என்று சொல்ல வந்தவள், இவனிடம் ஏன் சொல்ல வேண்டும் என்பதை போல பேச்சை நிறுத்த, திரும்பிப் பார்த்தவனும்,
“இவனெல்லாம் ஒரு ஆளா.. இவனுக்கு பதில் சொல்லனுமா? ஆபீஸ்ல தானே இவன் எம்டி.. இதானே உன் மண்டையில ஓடுது?” என்று கேட்டும் நடக்க,
“அய்யோ அப்படிலாம் இல்ல சார்..” என்றவள் அவனின் பேச்சில் பேச முடியாமல் தவித்தாள்.
“சிட்!” என்று ஒரு இடத்தை காண்பித்துவிட்டு, பிளாஸ்க்குடன் அவன் உள்ளே செல்ல,
“வாயில சனி தான் டி உனக்கு.. இன்னைக்கு வராமலே இருந்திருக்கலாம்!” என தனக்கு தானே சொல்லிக் கொண்டவள்,
“இல்ல இல்ல! தர்ஷ்காக தானே வந்தேன்.. பேபியை பார்க்க தான் நான் வந்தேன்..” என்றும் தனக்கே சொல்லிக் கொள்ள, எதிரே இருந்த டேபிளுக்கு அடுத்து இருந்த சேரில் வந்து அமர்ந்தான் ரகு.
“சோ! ஹாப்பி தானே? இன்னும் ஒரு ஒரு மாசம் என் தொந்தரவு இருக்காது..” என்று ரகு ஆரம்பிக்க,
“சார்?” என்றாள் புரியாமல்.
“விஷால் சொல்லல?” ரகு கேட்க, இல்லை என்று அவள் தலையாட்டவும்,
“நியூ ப்ராஜெக்ட் விஷயமா நானும் அப்ராட் போறேன்.. அதான் உனக்கு ஹாப்பியா இருக்குமே?” என்று அவன் சொல்லவும், புதிய தகவல் தான் என்றாலும் பதில் கூறவில்லை அவள்.
காபி வரவும் அவள் எடுத்துக் கொள்ள, தானும் தன்னுடையதை எடுத்துக் கொண்டவன் அமைதியாய் பருகி முடித்தனர்.
ஆராத்யா எழுந்து கொள்ள, “ஆரா!” என்றவன் அழைப்பில் அவள் நிமிர்ந்து பார்க்க,
“நீ எதாவது….” என்று கேட்க வந்து,
“ப்ச்! நத்திங்!” என்று கிளம்பிவிட்டான்.
பேச என்னென்னவோ இருந்த போதும் பேசும் காலம் நெருங்கிடாமல் இருக்க, இப்படி நேரமும் இருவரையும் சோதித்துக் கொண்டிருந்தது சந்திக்க வைத்து.
error: Content is protected !!