Skip to content
Post Views: 13,202
நீங்காத உறவே!…
அத்தியாயம் 19
அங்கு பிரபாவை அவர்கள் எதிர்பார்க்க வில்லை. யாரும் கேட்காமல், காணாமல் என்னவும் பேசி கொள்ளலாம் என்று எண்ணம். தனக்கு பிடிக்காதவர்கள் பற்றிய அவதூறு பேச்சு ஒருவகையில் மனதை ஆறுதல் படுத்தும்.. அவ்வாறுதான் ரோகினையும் நிறை மேல் உள்ள காட்டத்தையும், பொறாமையையும் அவளை பேசுவதன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். தான் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் அது மற்றவர்களுக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. நிறையை பேசி தன் மனதுக்கு ஆறுதல் தேடிக் கொண்டாள் ரோகினி.
அந்த நேரம் பிரபா வருவான் என்றோ தாங்கள் பேசியதை கேட்பான் என்றோ எதிர்பார்க்கவில்லை. திகைத்து போய் எழுந்து நிற்க. அவர்கள் அருகில் வந்தவன் பார்வையிலே அவர்களை கூசி போக செய்தான். எவ்வளவு மோசமான இவர்களோடு நிறை நாட்களை கடத்தி இருக்கிறாள்.
Advertisement
“தம்பி.. அது வந்து” என்று சினேகா ஆரம்பிக்க,
“மூச்.. என்ன பொம்பள நீயெல்லாம்.. யாரும் பாக்காம என்ன வேணாலும் பேசலாமா? பேசுற வார்த்தையில் சுத்தம் வேணாம்? மனசு முழுதும் அவ்வளவு அழுக்கு. கொஞ்சமும் வாய் கூசாமல் எப்படி ஒரு பொண்ண தப்பா பேச முடியுது. வார்த்தையை விடும்போது உன் மனசாட்சியே உன்னை காரி துப்பல” ரோகினி முகத்தை திருப்பி கொண்டாள்.
கையோடு பிடி பட்டாச்சு. பிரபாவிற்கு பதில் கொடுக்க நாக்கு துடித்தது. ஆம், நான் சொன்னது தான் உண்மை என்று சொல்லத்தான் நினைத்தாள். ஆனால் அது உண்மையல்ல நிறை எப்படிப்பட்ட பெண் என்று தெரியும். அவனுக்கு இணையாக வார்த்தையை விட்டால் எல்லோரும் வந்து வாக்குவாதம் ஆகிவிடும். தப்பு தன் மேல் திரும்பும் என்பதால் அமைதியாகி போனாள்.
Advertisement
பிரபாவின் வார்த்தையில் சினேகாவும் கூனிக்குறுகி போனாள். ரோகினி பேசும்போதே என்ன இப்படி பேசுகிறார் என்று நினைத்தவள்தான். தற்போது பிரபாவும் கேள்வி கேட்க, பதில் பேச முடிய வில்லை. ஏதோ ரோகினியோடு சேர்ந்து கொண்டு நிறைய புறணி பேசுவாள். அதுவும் சாதாரண சின்ன சின்ன விஷயங்கள்.. ரோகிணி அளவுக்கு நிறை மேல் அவளுக்கு வன்மம் எல்லாம் கிடையாது.
Advertisement
ரோகினி, சினேகா இருவரையும் பார்த்தவன்,
“ உலகத்திலே ரொம்ப மோசமான விஷயம் அடுத்தவங்க படுக்கையறையை எட்டி பாக்குறது. நீங்க பேசுனது கூட அந்த வகைதான். வாழ்க்கையில் இதைவிட கேவலமா உங்களால் நடந்துக்கவே முடியாது. ஒரு ஆம்பள நான், எனக்கு உங்க முன்னாடி நிக்க வெக்கமா இருக்கு. எவ்வளவு தூரம் தரம் கெட்டு இறங்கி பேசுறீங்க”
“நீங்க ரெண்டு பேரும் எங்க அண்ணன் மனைவி. எங்க அண்ணன் அளவுக்கு உங்கள நான் மரியாதையா நடத்தணும். அப்படித்தான் இவ்வளவு நாளும் நான் நடந்தேன். நம்ம அண்ணன் மனைவிகன்னு உங்களை பார்த்து மரியாதையா இரண்டு அடி தள்ளி நின்னா, நான் உங்களுக்கு தத்தி, ஒன்னும் தெரியாதவன், விவரமில்லாதவன். சரி.. உங்க பாஷைல அண்ணன் மனைவி கிட்ட எப்படி நடந்துக்கணும். என் அண்ணனுக்கு இணையா மரியாதை வச்சு நடத்தினேன் உங்களை…”
Advertisement
“உங்களோடு பேசினால் என் தரம் குறைந்து போய்விடும். நிறை ஏன் ஆரம்பத்திலிருந்து உங்களை விட்டு தள்ளி நின்னான்னு எனக்கு இப்பதான் புரியுது. நானே அவகிட்ட சொல்லுவேன் குடும்பம்ன்னா அப்படி தான் இருக்கும். அண்ணிங்க கூட சேர்ந்து இருன்னு.. ஆனா, உங்களை மாதிரி ஆட்களை விட்டு சொந்தமா இருந்தாலும் பத்தடி தூரம் தள்ளி நிற்கணும்”
இருவரும் ஒரு வார்த்தை அவனை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால், பிரபாவின் பேச்சு அவர்களுக்கு அவ்வளவு வலியை கொடுத்தது.
“பொண்ணுங்களை கை நீட்டுவது, அனவசியமா பேசுறதெல்லாம் எனக்கு பிடிக்காது. ஆனா, நான் உங்களை வர்ன் பண்றேன். இனி ஒரு முறை என் குடும்பத்தை பத்தின பேச்சு உங்க வாயிலிருந்து வரக்கூடாது. நான் யாருன்னு என் மனைவிக்கும், நிறை யாருன்னு அவ புருஷன் எனக்கும் தெரிஞ்சா போதும். தரம் கெட்ட மனிதர்களோட தரங்கெட்ட பேச்சுக்களை என் காதுல நான் வாங்கிக்கிறது கிடையாது. ஆனா, என்னோட அமைதி என் மனைவிக்கு இருக்காது”
“சாமின்னு நீங்கயெல்லாம் என்னத்தை வணங்குறீங்க. எப்படி கொஞ்சமும் பயமில்லாமல் உங்களால் பேச முடியுது. சாமி கூட நல்லது செய்ய யோசிக்கும்”என்றவன் அவர்களை நிமிர்ந்து கூட பார்க்காது ஒதுங்கி செல்ல, முகம் கருத்துப் போய் நின்றார்கள் இருவரும்…
உண்மையில் பிரபா மிக மரியாதையானவன். அவனே அவ்வளவு வார்த்தையை விட்டு இருக்க தாங்க முடியவில்லை. காணாமல் தானே பேசுகிறோம் என்று இஷ்டத்திற்கு பேசி வைத்ததற்கு கண்கலங்கி நின்றனர்.
அப்போதுதான் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வீரசிவா, மனைவி அழுவதை பார்த்து அவள் அருகில் வந்தான்.. கணவனை அங்கு கண்டதும் முகத்தை தூக்கிக்கொண்டு அவள் மேலே சென்று விட,
“என்ன ஆச்சு சினேகா. ஏன் இவ அழுகுற? உன் கண்ணும் ஏன் கலங்கி இருக்கு” என்றான்.
“அது வந்து மாமா ரோகினி அக்கா நிறையை என்னவோ சொல்ல போய், அதைக் கேட்டுட்டு பிரபா தம்பிக்கு ரொம்ப கோபம். எங்க ரெண்டு பேரையும் பயங்கரமா திட்டிட்டாரு. அதுதான் அக்கா ரொம்ப அழுகுறாங்க” ரோகிணி பேசியதை எப்படி சொல்ல என்று அவள் தவிக்க,
என்ன நடந்தது என்று கேட்காமல் வேகமாக மனைவியை காண சென்றான் வீரசிவா. நிறை கர்ப்பம் தெரிந்ததிலிருந்து ஒரு மாதிரி தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள் ரோகிணி.
“என்ன சொன்னான் என் தம்பி?”
“நான் ஒன்னும் புதுசா எதுவும் பேச கிடையாது. எப்பவும் போல ஏதோ நாங்க ரெண்டு பேரும் பொம்பளைங்க பேசிக்கிட்டோம். அதைக் கேட்டுட்டு வந்து அண்ணன் பொண்டாட்டின்னு நினைப்பு கூட இல்லாம எப்படி பேசினான் தெரியுமா உங்க தம்பி?” என்று அழுதவள்,
“என்ன பொம்பளை நீன்னு மரியாதை இல்லாமா பேசுறான். உன் மனசு முழுக்க அழுக்கு, உன்னோடு பேசினா என் தரம் குறஞ்சிடும்ங்குறான். எனக்கு அண்ணின்னு மரியாதை கொடுக்க மாட்டானாம்” என்றதும் அதிர்ந்து போன வீர சிவா,
“என்ன சொல்ற, என் தம்பியா அப்படி பேசுனது”
“ஆமா, அவன் பொண்டாட்டி சொல்லி கொடுத்து இருப்பா… அவ மாசமா இருக்கா, நான் மலடி” என்று அழுத்தமாக சொல்ல,
பதறி போனவன், “ என்ன பேசுற வாய மூடு.. அவன் உன்னை அப்படி சொன்னான்னா?” கோபம் தம்பி மீது திரும்பியது.
“கடவுள் எனக்கு பிள்ளை வரம் தராதாம். ரெண்டு நாள் தள்ளி போயிருக்கு.. இரும்பு பலகையை தூக்கி எம் மேல எரியிரான். அண்ணன்னு உங்க மேல கொஞ்சம் கூட பயமில்லை. வீட்டுக்கு மூத்தவனா எவ்வளவு செஞ்சு இருப்பீங்க” ஆவேசமாக கேட்டாள்.
அப்படியாவது தன்னை மேலும் கணவன் துருவ மாட்டான் என்று நினைத்திருக்க, அவனோ வேகமாக படியில் இறங்கி கீழே சென்றான். ரோகினையும் பின்னோடு சென்று பார்க்க,
“பிரபா” என்று கத்தினான்.
அப்போதுதான் முகத்தை கழுவி துடைக்க துண்டை எடுத்தான், அண்ணன் சத்தம் கொடுத்ததும் வெளியே வந்து பார்க்க,
“அண்ணிகிட்ட என்னடா பேசின? அம்மா ஸ்தானத்துல வச்சு பார்க்க வேண்டி இவகிட்ட என்ன பேசி வச்சிருக்க.. என் தம்பியாடா நீ?” ஓங்கி கன்னத்தில் ஒரு அரை விட, எதிர்பார்க்காததால் அடித்ததும் விழுந்து விட்டான் பிரபா.
வெளியே நின்று பார்த்திருந்த சினேகா, ரோகினி இருவரும் பயந்து போனார்கள்.
இது எதுவும் தெரியாமல் நிறை அப்போதுதான் கீரை ஒடித்து மடியில் கட்டிக் கொண்டிருந்தாள்.
“அடியே நிறை! உன் புருஷனுக்கும், உன் மச்சானுக்கும் சண்டை போல… மூத்தவன் உன் புருஷனை போட்டு அடிக்கிறான். சீக்கிரம் வா..” என்று சத்தம் கேட்க.
பதறிப் போய் மடியில் இருந்ததை எல்லாம் தவற விட்டாள். “என்ன சொல்ற” என்றவள் வீட்டை நோக்கி ஓட தொடங்கினாள்.
வாசலில் நின்று பார்க்கும்போதே கணவன் அடி வாங்குவது தெரிய,
“ஐயோ! அவரை ஏன் அடிக்கிறீங்க” வேற சத்தமே இல்லை அவளிடம்.. நெஞ்சு படபடத்தது. நிலை படியில் கால் இடித்து கொண்டது கூட அவள் உணர வில்லை.
ஓடி வந்து புருஷனை தாங்கி ஒரு கையால் வீரசிவாவை மறித்தாள்.
“நிறை நீ தள்ளி போ.. உனக்கு கல்யாணம் ஆயிட்டா நீ எனக்கு தம்பி இல்லை என்று ஆயிடுமா? என்னடா திமிர் பேச்சு இதெல்லாம்..”
“மாமா, எதுன்னாலும் பொறுமையா பேசுங்க. தயவு செஞ்சு அவர் மேல கை வைக்காதீங்க” என்று கத்தினாள்.
தள்ளி நின்று பார்த்திருந்த ரோகினியோ, சினேகாவோ அதை தடுக்கவில்லை. அவர்களுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையாகும் என்று நினைக்கவில்லை. பயந்து போய் பார்த்து இருந்தார்கள்.
“ரோகிணி என்ன சொன்னாலும் நான் என் தம்பி பக்கம் தான் நின்னு பேசி இருக்கேன். அவனுக்கு ஒரு நிலையான வேலை இல்லை. நாம கடைசி வரைக்கும் அவனுக்கு துணையா நிக்கணும்னு நான் நினைச்சு இருக்கேன். கடைசில என் பொண்டாட்டி கிட்ட என்னெல்லாம் பேசி வச்சிருக்கான்” என்று வீர சிவா கத்த,
“எனக்கு எதுவும் தெரியாது மாமா. அவர பத்தி உங்களுக்கு தெரியாதா? எதுக்கு அடிக்கிறீங்க. திரும்ப ஒரு அடி அவர் மேல கை வச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்”
“அவன் என் தம்பி. தப்பு செஞ்சா நான் அடிக்கத்தான் செய்வேன்”
“உங்க தம்பின்னா கை நீட்டுவீர்களா? என்ன தைரியத்தில் அவர் மேல கை வச்சீங்க” அவளும் ஆவேசமாக கத்தினாள்.
“நிறை!..”
“வாய மூடுங்க. ஒரு வார்த்தை நீங்க பேசக்கூடாது” அவள் சொல்லும் போதே, விசயம் கேள்வி பட்டு வீரணன், கல்யாணி, ராகவன் எல்லோரும் வந்து விட்டார்கள்.
“அவர் தப்பே செஞ்சு இருந்தாலும் அவர் பொண்டாட்டி என்கிட்ட தானே நீங்க சொல்லி இருக்கணும். உங்க வீட்டு ஆளுகிட்ட சொல்லி இருக்கணும்.. அவர் மேல கை வைக்கிற அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது” கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது நிறைக்கு…
“என்னடா பெரியவனே என்ன ஆச்சு” மற்றவர்களும் வீரசிவாவை கேட்க, நிறைக்கும் கொதித்து போனது.
அடிவாங்கி நிற்கும் தன் கணவனை அவர்கள் கண்டு கொள்ளவில்லையே?…
“அம்மா, அவன் பேசுனதுக்கு இதோட விட்டேன் என்று சந்தோஷப்படுங்க” வீரசிவா சொன்னதும், தாங்க முடியவில்லை நிறைக்கு…
“இதுவரைக்கும் தான் என்னோட பொறுமை. என்ன திமிரா பேசுறீங்க.. எங்க அடிங்க பார்ப்போம் நான் நிக்கிறேன். என் புருஷன் மேல கை வைங்க..”
“நிறை என்ன இது? அவன் தான் கோபத்துல இருக்கான்னா, நீயும் சூழ்நிலை புரியாம சண்டைக்கு நிக்கிற” என்றார் கல்யாணி.
“அப்படித்தான் நிப்பேன் என் புருஷன் மேல கைய வச்சா, நான் அமைதியா போனுமா? அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க சொல்லுங்க பாப்போம்” என்றவள், சிவாவை பார்த்து,
“நீங்க ஆம்பளை தான். உங்களோட என்னால போட்டி போட முடியாது. ஆனா, நீங்க பத்தடி அடிக்கும்போது நான் ஒத்த அடியாவது உங்களை திருப்பி அடிக்க மாட்டேன். அந்த அளவுக்கு வலு உள்ள பொம்பளை தான் நான்…” கோபம் குறையாமல் சொன்னாள்.
“நிறை அமைதியா இரு” என்றான் கணவன்.
“கட்டின பொண்டாட்டி முன்னாடி புருஷனை போட்டு அடிக்கிறீங்களே, அவ மனசு என்ன பாடுபடும்ன்னு கொஞ்சமாவது யோசிச்சிங்களா? அப்படி என்ன கண்ணுக்கு தெரியாத வெறி.. உங்க பொண்டாட்டிய ஏதோ சொன்னாருன்னு தான அடிச்சீங்க. அப்ப நீங்க என் புருஷன் மேல கை வச்சதுக்கு”
“செல்வி இரு என்னன்னு பேசுவோம்” என்றார் வீரணன்.
“இனி பேசறதுக்கு என்ன இருக்கு அவர் வீரத்தை எம்புருஷன் மேல தான் காட்டணுமா?” மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்தது,
“என் தம்பின்னு சொல்றாரே.. அந்த தம்பி ஒரு பொண்ணோட புருஷன், ஒரு பிள்ளைக்கு தகப்பன். அதை கொஞ்சமாவது நீங்க நெனச்சீங்களா? அப்படி அடிக்கிறீங்க.. அவரே முடியாதவர். அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா என் நிலைமை, என் வயித்துல வளர பிள்ளையோட நிலைமை?” என்றதும் வீர சிவா தடுமாறினான்.
“நிறை” என்றதும்,
“பேசாதீங்க மாமா நீங்க.. அவர் அடிக்கும்போது என் நினைப்பு உங்களுக்கு வரலையா? நாம எல்லாம் ஒன்னா தான வளர்ந்தோம். என்னை யோசிச்சாவது நீங்க அமைதியா இருந்திருக்கலாமே மாமா. என் புருஷன் மேல கை வச்சிருக்கீங்க. என் நெஞ்சு எப்படி எரியும். என்னால இதை மறக்க முடியுமா? இனி சகஜமா நமக்குள்ள ஒரு உறவு தான் வருமா?”
கல்யாணி தான், “அப்படி என்னதான்டா நடந்துச்சு கூடப்பிறந்தவன் மேலே கை வைக்கிற அளவுக்கு?”
நிறை பேசியதிலிருந்தே ஒரு மாதிரி தடுமாற்றத்தில் இருந்தவன் தாய் கேட்டதும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்.
என்ன வீர பிரபாகரனா அப்படி பேசியது.. யாராலும் நம்ப முடியவில்லை. நிறையும் நம்ப வில்லை. அவள் நேராக சினேகா அருகில் தான் போய் நின்றாள்.
“என் வீட்டுக்காரர் அப்படித்தான் பேசினாரா? எதுனால அப்படி பேசினாரு? ரோகினி என்ன சொன்னாங்க” என்று கேட்டாள்.
எல்லோர் பார்வையும் அவள் மீது திரும்ப, அவளுக்கு மிகுந்த பயமாகி போனது. தற்போது என்ன சொல்ல? ரோகினியும் ஒரு மாதிரி பதட்டத்தில் இருந்தாள். பிரபா கூட ஆடிப் போனான். பேசிய பேச்சுக்களை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறார்கள். முழுதாக தப்பு இவன் மேல் என்று திருப்பி விட்டார்களே!…
வீர சிவா, சினேகாவை பார்த்தான், “என்ன நடந்துச்சுன்னு உண்மையை மட்டும் சொல்லு சினேகா. நாம எல்லாம் சொந்தம், ஒரே குடும்பம். நாளைக்கு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து பேசணும். தப்பு யார் மேல இருந்தாலும் ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது. உண்மை என்னவோ அதை சொல்லு”என்றதும் எதையும் மறைக்க வில்லை சினேகா.
ஏற்கனவே பிரபா பேசியதிலே பயத்திலும் குற்ற உணர்விலும் இருந்தவளுக்கு தற்போது நடப்பதை பார்த்ததும் உண்மையை சொல்வதே சிறந்தது என்று தோன்றி விட்டது. அதனால் எதையும் மறைக்காமல் ரோகினி பேசியது, அதற்கு பிரபாகரன் கொடுத்த பதில் என்று எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்.
ஒரு பத்து நிமிடத்திற்கு யாருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ரோகினி கொஞ்சம் வாய் என்று தெரியும். ஆனாலும் இந்த அளவுக்கு இறங்கி பேசுவாள் என்று இன்று தான் பார்க்கிறார்கள்.
“அடி பாதகத்தி, எட்டு வருஷமா பிள்ளை இல்லாம இருந்த போதும் உன்னை ஒரு வார்த்தை நாங்க சொன்னது இல்லையே?.. உன் மனசுல இவ்வளவு வஞ்சகம்மா? அண்ணன் தம்பிக்குள்ள சண்டை இழுத்து விட்டு குளிர்காய நினைக்கிறாயா? இனி என் மகனுக்கு நீ வேணா போடி வெளியே” கோபத்தில் கத்தினார் கல்யாணி.
வீரசிவா நிமிர்ந்தே மனைவியை பார்க்க வில்லை. எந்த அளவுக்கு தரங்கெட்டு போனாள். மனதளவில் நொந்து போனான். எல்லோருக்குமே ரோகினி பேசியது அதிர்ச்சியை கொடுக்க, நிறை அதை பெரிதாக எடுக்கவில்லை.
அவள் தற்போதும் நேராக பார்த்தது வீர சிவா வைத்தான், என் கணவனை அடித்ததற்கு என்ன பதில்?
“நிறை” என்றான். அவனுக்கு பேச்சே வர வில்லை.
“சாக்கடை கிட்ட இருந்து சந்தனத்தை எதிர்பார்க்க முடியாது. அது என்னை பாதிக்கலை. ஆனா, உங்க கிட்ட நான் இதை எதிர்பார்க்கல. உங்களுக்கு இளையவரா இருந்தா, நீங்க கை வைக்கலாமா? அவருக்குன்னு இருக்குற குடும்பத்தை நீங்க யோசிக்கவே இல்லையே. ஏன்?”
“நிறை” குற்ற உணர்வில் தலைகுனிந்து நின்றான்.
“எப்பவும் இவரை பார்த்தா ஏன் ஒரு இளக்காராம். நாங்க தான் உங்க வழிக்கே வரலையே. நாங்க உண்டு எங்க வேலை உண்டு என்று அமைதியாக தான இருக்கோம். அப்படி என்ன உங்க பொண்டாட்டிக்கு எங்க மேல? நீங்க பணக்காரங்களா இருந்தா அது உங்களோட? தம்பின்னு எந்த கஷ்டத்துலயாவது உங்க கிட்ட கைநீட்டி நின்னு இருக்காரா? எங்களுக்கு எவ்வளவோ தேவை இருக்கு. உங்க கிட்ட இருந்த நாங்க எதையுமே எதிர்பார்க்கலையே”
“நான் இந்த வீட்டுக்கு கல்யாணம் ஆகி வந்த போது, மேல இருக்கிற வீட்டை எடுத்து கட்டினது மத்த பசங்க தான். அதனால அவங்க தான் அங்க சொகுசா இருக்கணும்னு சொல்லிட்டாங்க. இதுவரைக்கும் நானும், அவரும் ஒரு நாளாவது மேல ஏறி வந்திருப்போமா?”என்றதும், வீட்டில் உள்ள மற்றவர்கள் வித்தியாசமாக பார்த்தார்கள்.
“எங்களுக்கு என்ன ஒதுக்கி வைத்தீர்களோ அதுல தானே நாங்க இருக்கோம். அது கூட உங்க பொண்டாட்டிக்கு பொறுக்கலையா? நாம பேசறது நியாயமே இல்லன்னு தெரிஞ்சாலும் தப்பா பேசுறது. அவங்க அப்படித்தான்னு பதிய வைக்கிறது. என்ன கேவலமான புத்தி இது?…”
“நிறை, என்னடி பேசுற. நாங்க என்ன உன்னை ஒதுக்கி வச்சோம்”
“வீட்டுக்கு வர்ற மருமகளுக்கு எவ்வளவு நகை போட்டீங்க அத்தை”
கொஞ்சம் தடுமாறியவர், “உனக்கு செய்யும் போது வீட்டில் கொஞ்சம் கஷ்டம் நிறை”
“எல்லாருக்கும் பத்து பவுன் போட்டீங்க. எனக்கு அஞ்சு பவுன் தான் போட்டீங்க. ஏன்னா நான் சும்மா வந்தவ”
“அப்படி இல்லை நிறை”
“எனக்கு அது பிரச்சனை இல்ல அத்தை. நாங்க இப்படி ஒத்த ரூம்ல குடி இருக்கிறதோ, எந்த வசதியும் இல்லாம இருக்கிறதோ எங்களுக்கு பிரச்சனையே கிடையாது. நாங்க நல்லாத்தான் இருக்கோம். ரோகினிக்கு என்ன வந்தது. அதை ஏன் சொல்லிட்டே இருக்கணும். நான் சும்மா வந்தவளா இருக்கட்டும், என் புருஷனும் விவரம் இல்லாதவரா, நிலையான வேலை இல்லாதவரா இருக்கட்டும். அது எங்களுக்குள்ள? எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம்”
“எங்களை பத்தின விமர்சனம் அவங்களுக்கு தேவையா? நாங்க எப்படி குடும்பம் நடத்தனும்னு அவங்களுக்கு விளக்கம் கொடுக்கணுமா? அசிங்கமா இல்லை. அவங்க பேசுனதுக்கு என்னால பதில் கொடுக்க முடியும். தராதரம் பார்த்து அமைதியா இருக்கேன். ஒரே வீட்ல இருந்தாலும் யார்கிட்டயும் எந்த பிரச்சனையும் பண்றது இல்லை. நாங்க ரெண்டு பேரும் காலைல போனா நைட்டு தான் வீட்டுக்கே வாரோம். என்ன இருக்கோ அத வச்சு எங்க பொழப்ப நாங்க பார்க்கிறோம். மாசமா இருக்கும்போது கூட வெளியில் தான் பாத்ரூம் போகணும், தண்ணி எடுத்து தான் சமைக்கணும், கல்லுல தான் துணி துவைக்கணும். என்னைக்காவது மத்த ரெண்டு மருமகள் மாதிரி என்னை நடத்துல, எனக்கு வசதியான வீட்ல குடி வைக்கலன்னு குறை சொல்லி இருக்கானா?”
யாருக்கும் என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. நிறை பேசுவதெல்லாம் ஞாயம் தான். இவர்கள்தானே என்று ஒரு ஆசால்ட் இருந்தது உண்மைதான்.
“எங்களுக்குன்னு நீங்க என்ன எல்லை வகுத்தீர்களோ அதுல நாங்க நின்னுக்கிட்டோம். அப்படி என்ன உங்க பொண்டாட்டிக்கு எங்க மேல?.. சினேகா மாதிரி அவங்களுக்கு ஈடு கொடுத்து அவங்க சொல்றதுக்கு பின்னாடி நிற்கல.. ரோகிணி பேசினதுக்கு நான் கவலை படல. நீங்க நடந்துக்கிட்டது தான் எனக்கு கோபம்” என்றதும் தலை குனிந்து போனான் சிவா.
“இதுதான் உங்க கூட்டு குடும்பமா? இதுதான் நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கிறதா? நீங்க இந்த குடும்பத்துக்கு மூத்தவர் உங்க அம்மா அப்பாவுக்கு அப்புறம் நீங்க சொல்றத நாங்க கேட்கணும்? உங்களுக்கு அந்த தகுதி இருக்கா?”
“நிறை” என்றான் ராகவன்.
“என்ன பார்த்தீங்க நீங்க எங்களுக்கு.. இதுவரைக்கும் கஷ்டம்னு நாங்க உங்க கிட்ட வந்து நிற்கவே இல்லையே. கல்லுன்னு இருக்கிறத கரைச்சு குடிச்சுட்டு எங்க வீட்டுல நாங்க இருக்கிறதுக்கே இவ்வளவு பேச்சு. நாளைக்கு சொந்தமன்னு உங்க வீட்டு படிய மிதிப்போமா நாங்க?..”
“நிறை வார்த்தையை விடாத” என்றார் கல்யாணி. வீரணன் தளர்ந்து போய் அமர்ந்து விட்டார். அவராலே தன் மூத்த மருமகளை நம்ப முடியவில்லை.
“எம் புருஷனும் ஆம்பள தானே. அவரால திருப்பி அடிக்க முடியாதுன்னா நினைக்கிறீங்க. எட்டு வருஷத்துக்கு இளையவர் உங்க மேல கை வச்சா உங்களுக்கு எவ்வளவு அசிங்கம். ஆனா, அவர் எவ்வளவு பொறுமையா நிதானமா நின்னாரு.. அவர்கிட்ட இருக்கிற பெருந்தன்மை உங்ககிட்ட இருக்கா? நீங்க பொறுப்பான மூத்த மகனா?” என்றவள்,
“போதும் உங்க சகவாசம். இனி, எங்களுக்கு உங்க உறவே வேண்டாம். இதோட போதும்… நாங்க செத்தாலும் சாகுறோம். இனி சொந்தம்ன்னு வந்துராதீங்க” என்று ஆவேசமாக சொல்லியவள் வேகமாக உள்ளே சென்று விட்டாள்.
அவள் பின்னோடு தான் பிரபா வந்தான்.
“நிறை” என்று தோள் தொட, அவன் கையை தட்டி விட்டாள்.
“நிறை என்ன இது?”
“பேசாதீங்க. உங்க கிட்ட பேசவே எனக்கு விருப்பம் இல்லை. என்ன மனுசன் நீங்க”
“நான் என்ன பண்ணேன் நிறை”
“அந்தாளு அடிக்கிராரு, பேசாம மரம் மாதிரி வாங்கி நிக்கிரீங்க. ஒரு அடியாவது திருப்பி அடிக்க வேணாமா?”
“நிறை எங்க அண்ணன் புரியாம” என்று தொடங்கும் போதே,
“நீங்க முடியாதவர்.. நாலு நாள் தொடர்ந்து மழைல வேலைக்கு போன, பத்து நாள் படுத்துபீங்க. உங்க உடல் நிலை பத்தி நீங்க யோசிக்கவே இல்லையே.. உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன். வயித்துல புள்ளைய வச்சுக்கிட்டு ஹாஸ்பிடல் வீடுன்னு என்னால ஓட முடியுமா? நம்ம வருமானம்? அப்படியே ஏதாவது ஆச்சுன்னா நீங்க சொந்தம் என்று சொல்ற எல்லாரும் ஒரு மாசம் தான். காலத்துக்கு நானும் என் பிள்ளையும் தானே வலிய சுமக்கணும்”
“நிறை, ஏன் இப்படி எல்லாம் பேசுற”
“நம்ம உடம்ப நம்ம பார்த்துக்கணும் நமக்கு பொண்டாட்டி புள்ள இருக்குன்னு நீங்க யோசிக்கவே இல்லையே” என்றவள் எழுந்து வெளியே செல்ல, அவள் பின்னாடியே வந்தான் பிரபா.
வெளியே திண்ணையில் வானத்தை பார்த்து அமர்ந்து விட்டாள். கணவன் அருகே வர,
“தயவு செஞ்சு என்னை நெருங்காதீங்க. எனக்கு என்னவோ நெஞ்சு பாரமா இருக்கு. நான் கொஞ்சம் தனியா இருக்கணும். நீங்க போங்க”
மனைவி மிகவும் பாதிக்கப்பட்டு விட்டாள் என்று உணர்ந்தவன், “நிறை, உன்னை விட்டு நான் எங்க போவேன்”
“எனக்கே இப்ப எல்லார் மேலயும் கோபம். கோவிச்சுட்டு வீட்டை விட்டு போகணும்னு தான் நினைக்கிறேன். போகப் போக்கிடும் இல்லாம வீட்டுக்கு வெளியே வந்து உட்கார்ந்து இருக்கேன். தயவு செஞ்சு என்னை கொஞ்சம் தனியா விடுங்க. நான் அழுகணும்…” கணவன் திகைத்து போய் பார்க்க,
“வீட்ல இவ்வளவு பிரச்சனை… ஒரு வாரம் எங்க அம்மா வீட்டுல என் புருஷனோட போய் வரக்கூட எனக்கு சூழ்நிலை இல்லை. அம்மா வீட்ல தான் நமக்கு ஆதரவு இல்லை. புருஷன் விடாது நமக்கு துணை நிற்கும்ன்னு நெனச்சேன். எந்த உறவுமே எனக்கு ஆதரவு கொடுக்கல… எனக்கு ஒரு மாதிரி வலிக்குது. நான் அழுகணும்.. கூட நிக்கிறேன் அரவணைக்கிறேன்னு நீங்க எதுவும் பண்ணாதீங்க ப்ளீஸ்… என்னை தனியா விடுங்க. கொஞ்ச நேரம் போனா நானே சரியாயிடுவேன்” என்றவள் முட்டிக்காலில் தலையை கவுந்து கொண்டாள்.
பிரபாக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருமணம் ஆனதிலிருந்து அவளோடு தான் சேர்ந்து நின்று இருக்கிறான். சத்தம் போட்டு எல்லாம் அழுகவில்லை. ஆனால், கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது.
அங்கு வீட்டில் உள்ளேயும் சத்தம் வர, வீர சிவா தான் ரோகினியை அடிதான், ராகவன் சினேகாவை அடிக்க கையை ஓங்கினான், கல்யாணி என்னவோ கத்தினார். எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் அளந்தவன், தங்கள் அரை கதவை அடைத்து, மனைவியின் நிழல் உருவம் தெரியுமாறு அமர்ந்து கொண்டான்.
இதுதான் முதல் முறை மனைவி தன்னை விட்டு தள்ளி நிற்பது. கணவனை கூட அருகில் விடாமல் வானத்தைப் பார்த்து இவளுக்கு என்ன அழுகை!…
நிறைய அழுது தான் கொண்டிருந்தாள். என்னவென்றே தெரியாமல் ஏதேதோ நினைத்து அழுகை. தன் குடும்பம், கணவன் குடும்பம், வாழ்க்கை, எதிர்காலம், கடந்து வந்த வலி… என்னவோ அழுகை மட்டும் தான்.
error: Content is protected !!