Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனாய் மாறிய அன்பனே"

அசுரனாய் மாறிய அன்பனே 4

பகுதி 4

        அப்பா என்னுடைய ஸ்கூலுக்கு நிறைய டொனேஷன் அட்வான்சா கட்டி இருந்ததால் போன வருடம் வரை அதே ஸ்கூலில் தான் படித்தேன். அதற்கு மேல் அவங்களால் எதுவும் பண்ண முடியல. எனக்கு கார்டியன் ஆக இருந்த ஃபாதர் லூயிஸ் ரொம்ப நல்ல மனுஷன். அவர் தான் எனக்கு அனுமதி கேட்டு ஒரு வருடம் தங்க வைத்து இருந்தார்.  

      அதற்கு மேல் அங்கு தங்க முடியாது என்ற நிலை வந்த போது தான் அவர் என் கிட்ட வந்து பேசினார். “ஹரி.. என்ன பண்ணட்டும் . அப்பா உன்னை இங்கு சேர்க்கும் போது தமிழ்நாட்ல மாங்குடி தான் உனக்கு சொந்த ஊர் என்று போட்டு இருக்கார். அங்க யாரும் இருக்காங்களா? அங்க போய் உன்னை விடட்டுமா என்று கேட்டார். 



Advertisement

      நான் பதினொன்று தான் முடித்து இருந்தேன். அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் என்பதால் எங்களுக்கு பெரிதாக எந்த உறவும் கிடையாது. அப்பாவின் ஊர் மாங்குடி. அங்கு அந்த பாட்டியை ஒன்று ரெண்டு முறை போய் பார்த்து இருப்பேன்.  

Advertisement

        ஆனால் அந்த சூழ்நிலையில் எனக்கு அதை தவிர வேறு வழி இல்லாமல் போய் விட்டது. என்னை ஃபாதர் லூயிஸ் இங்க கொண்டு வந்து விட்டுச் சென்று இருந்தார். 

Advertisement

      வேதனையுடன் கேட்டுக் கொண்டு இருந்த அகல்யா “அப்படியா.. பாட்டி நல்ல டைப்பா”.. என்று கேட்டாள்.  

Advertisement

    பாட்டி நல்ல டைப் தான். ஆனா ரொம்ப வயசானவங்க. அப்பா இறந்த செய்தி அவங்களை ரொம்ப பாதிச்சு இருந்தது. அப்பா பாட்டிக்காக வாங்கிக் கொடுத்து இருந்த வீட்டையும் கோர்ட் எடுத்துக்குச்சாம். அதனால் சின்ன வீட்ல தான் வாடகைக்கு இருந்தாங்க. 

        “என்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க. ஒரு மாசம் நல்லா தான் போச்சு. நானும் இங்க ட்வல்த் ஸ்டாண்டர்ட் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். பாட்டிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமல் போய் அவங்களும் போய்ச் சேர்ந்துட்டாங்க.  

        அப்புறம் அக்கம் பக்கம் இருக்கவங்க தான் என்னை இந்த ஆசிரமத்தில் சேர்த்து விட்டாங்க. ராஜ வாழ்க்கை வாழ்ந்தவன் சட்டென குடிசைக்கு வந்து இருந்தேன். எல்லா வித மக்களுடனும் பழகத் துவங்கினேன். அவங்க என்னை விசித்திரமா பார்த்து என்னை ஒதுக்கத் தான் செஞ்சாங்க. முதல்ல ரொம்ப கஷ்டமா இருந்தது.   

       ஏசியில் தூங்கி பழகியவன் இப்போ கட்டாந் தரைக்கு பழக்கப் படுத்திக் கிட்டேன். கடவுள் எனக்கு எழுதி வச்சிருக்கிற இந்த கஷ்டமான நாட்களையும் தைரியமா கடந்திடனும்.. என்று நான் எனக்குள்ளே சமாதானம் செய்து கொள்வேன். இப்போ எல்லாமே பழக்கம் ஆயிடுச்சு. ஹாஸ்டல் ஃப்ரெண்ட்ஸ் கூட இப்போ வன்மத்தை காட்டுவது இல்லை. என்று சின்ன சிரிப்பு சிரித்துக் கொண்டவன்.. 

            “இன்னைக்கு நான் பூஜ்ஜியம் அகல். என்னை நிச்சயம் உங்க வீட்டில் ஏத்துக்க மாட்டாங்க. அந்த நினைப்பை தூக்கிப் போட்டு விடு” என்றான்.  

     அவன் கதையைக் கேட்டவளுக்கு கண்களில் நீர் நிறைந்து விட்டது. உண்மையில் அகல்யா முன்பை விட இப்போது தான் அவனை அதிகம் நேசிக்கத் துவங்கி இருந்தாள்.   

     அவள் கண்களில் நீர் வழிந்து விட.. “அகல் யாராவது பார்த்திடப் போறாங்க”.. என்று அவள் கையை லேசாக அழுத்தி இருந்தான்.  

         “ஹரி.. இந்த நிமிஷம் சொல்றேன் கேட்டுக்கோ .. எனக்கு கல்யாணம் என்று ஒண்ணு நடந்தா அது நிச்சயம் உன் கூட தான். என் மனது எந்த ஜென்மத்திலையும் மாறாது.”.. என்று சொல்லி விட்டு ஓடி இருந்தாள். 

     அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்த ஹரி மனதில் ஒரு சலனம் . அன்புக்காக ஏங்கி தவிப்பவனுக்கு அதை உதறித் தள்ளுவது அத்தனை எளிதில்லையே. அவன் மனதிலும் காதல் வந்து இருந்தது. ஆனால் பயம் . அவன் நேசிப்பவர்கள் எல்லாம் அவனை விட்டு போய் விடுகிறார்களே. இவளும் போய் விடுவாளோ என்ற பயம்.    

        ஆனால் அகல்யா விடுவாளா?.. அவனை விரட்டி விரட்டி காதலித்து. அவன் வாயாலே அவளைக் காதலிப்பதாகச் சொல்ல வைத்து இருந்தாள். ஹரி பன்னிரெண்டாம் வகுப்பில் வணிகவியல் பாடம் தான் எடுத்து இருந்தான். அதில் நல்ல மதிப்பெண் தான் வாங்கி இருந்தான்.   

        கோவையில் ஓர் அரசுக் கல்லூரியில் அவன் படிக்க இடம் கிடைத்து இருந்தது. அங்கேயே தங்க இடமும் கிடைத்து இருந்தது. அவன் ஸ்காலர்ஷிப் பணம், உதவிப் பணம் கொண்டு அவன் செலவுகளை சமாளித்துக் கொண்டான்.  

       அகல்யாவுக்கு ஹரியை பிரிந்து வாழ்வது கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லையே. ஹரி தன் நண்பர்கள் ஃபோன் மூலம் வாரம் ஒரு முறை அவளுடன் பேசுவான். ஒரு ஜவுளிக் கடையில் அவனுக்கு பகுதி நேர வேலை கிடைத்தது. மாலை கல்லூரி முடிந்ததும் அங்கு செல்லத் துவங்கி இருந்தான்.  

     இப்படியே நாட்கள் செல்ல.. அகல்யாவும் பன்னிரண்டாம் வகுப்பை முடித்து இருந்தாள். நிறைய செவிலியர் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து இருந்தாள். அதிலும் கோவை கல்லூரிகளில் தேடி பிடித்து விண்ணப்பித்து இருந்தாள்.  

     அவள் யோகத்திற்கு கோவையில் கிடைத்தது. ஹரியை அடிக்கடி பார்க்கலாம் என்று அவள் மனம் துள்ளிக் குதித்தது. அவன் மனமும் உற்சாகம் கொண்டது. ஆனால் அவள் வீட்டில் தெரிந்து விடுமோ என்று பயமும் சேர்ந்து கொண்டது.  

     அதனால் அகல்யா அடம் பிடித்தாலும் “இல்ல அகல்.. இந்த சமயத்துல உங்க வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும். ஃபோன் பேசிக்கலாம். மாதம் ஒரு முறை மட்டும் சந்திக்கலாம்”. என்று கறாராக சொல்லி விடுவான். அதிலும் அவன் சுண்டு விரல் கூட அவள் மேல் பட்டு விடாது.  

                “நீ. ரொம்ப தாண்டா பண்ற”.. என்று சொன்னவள் அவன் அசந்த நேரம் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து ஓடி விடுவாள்.  

     அவள் முத்தம் அவன் உணர்வுகளை தட்டி எழுப்பத் தான் செய்யும். ஆனாலும் தன் கட்டுப்பாட்டை இழக்க மாட்டான்.   

      ஹரி அவன் பி.காம் படிப்பை படித்து முடித்து இருந்தான். அவனுக்கு கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்று படிப்பதில் தான் ஆர்வம் அதிகம். ஆனால் அதற்கு நிறைய பணம் வேண்டுமே. ஒருவருடம் ஏதாவது வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.  

        அன்று மாலை தன் ஆசையை ஹரி சொல்ல.. அப்படியா என்று கேட்டுக் கொண்டவள் அடுத்தநாள் காலையே அவனுக்கு ஃபோன் அடித்தாள்.  

            “ஹரி.. நான் நிறைய பேர் கிட்ட விசாரிச்சேன்டா. அந்த வேலையில் ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டமாம். ரொம்ப அரசியல் இருக்குமாம். படித்து தெருவுல தான் நிறைய பேர் கடை போட்டு இருக்காங்களாம். நமக்கு காசும் ரொம்ப முக்கியம் ஹரி அதனால் கம்ப்யூட்டர் கோர்ஸ் படி”.. என்றாள். 

        அவள் சொல்லுவதும் நியாயம் தானே என்று யோசித்தவன். அதற்கும் விசாரித்தான். எது படிக்க வேண்டும் என்றாலும் குறைந்தது ஓர் லட்சமாவது கையில் இருக்க வேண்டும். ஒரு வருடம் வேலை பார்த்து அடுத்த வருடம் படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டான்.  

       அகல்யாவும் “ஆமா ஹரி இந்த ஊரில் நிறைய வேலை வாய்ப்பு இருக்கும் தேடிப் பார் என்றாள்.  

     பெட்ரோல் பங்க் வேலை, ஜவுளிக்கடை வேலை, ஃபுட் டெலிவரி வேலை என்று எது என்றாலும் சம்பளம் கம்மியாகவே சொன்னார்கள்.  

    அப்போது அவன் நண்பன் ஒருவன் அவன் தெரிந்தவர்கள் நடத்தும் ஹோட்டலில் ஒரு வேலையைப் பரிந்துரைத்தான். அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல். செஃபுக்கு உதவியாக இருக்க வேண்டும். ஆனால் நல்ல சம்பளம். ஹரிக்கு பிடித்த வேலை ஆயிற்றே. அதனால் உடனே ஒத்துக் கொண்டான்.  

     அன்று மாலை சந்தோசமாக அகல்யாவை சந்தித்து வேலை கிடைத்து இருப்பதைச் சொன்னான். அவள் முகம் சோர்ந்து போனது. 

          “உனக்கு என்ன டீ பிரச்சனை?”.. என்று அவன் கேட்க. 

          “உனக்கு வேற நல்ல வேலையே கிடைக்கலையா?.. போயும் போய் ஒரு சமையல்காரனாக வேலை பார்க்கப் போறியா ? இந்த வேலை வேண்டாம் ஹரி”.. என்றாள்  

         “இதுல என்ன டீ தப்பு இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை தெரியுமா. எனக்கு ஹாஸ்பிட்டல் எனறாலே அலர்ஜி. அதுக்காக நான் உன்னை நர்சுக்கு படிக்க வேண்டாம் என்று சொன்னேனா?. என் சுதந்திரத்தில் நீ தலையிடக் கூடாது அகல்யா”.. என்றான் முதல் முறை அவளிடம் கோபமாக.  

     அகல்யா மனதுக்குள் பூகம்பமாய் வெடித்துக் கொண்டு இருந்தாள்.. “அப்ப உனக்கு என்னை விட அந்த வேலை தான் முக்கியமா”.      

           “நானும் அதே கேள்வியைத் தான் உன் கிட்ட கேட்கிறேன். உனக்கு நான் முக்கியமா உன் வேலை முக்கியமா “.. என்றான். 

           ‘சீ.. போடா”.. என்று கோபமாக சென்று விட்டாள்.  

      அவனுக்கும் அவள் மீது அத்தனை கோபம். இருவரும் ஒரு வாரம் பேசிக் கொள்ளவே இல்லை. ஹரிக்கு புது வேலை பிடித்துப் போக.. அந்த செஃப் உணவு தயாரிக்கும் முறையை ஆர்வமாக மனதில் பதித்துக் கொண்டான். அந்த செஃப் அத்தனை நேர்த்தியாக அத்தனை சுவையாக சமைப்பது கண்டு ஆச்சரியபடுவது மட்டுமல்லாமல் மனதில பதித்து மாலை வீட்டுக்கு வந்து சமைத்தும் பார்ப்பான். 

         அகல்யாவிடம் பேசாமல் இருப்பது கஷ்டமாகத் தான் இருக்கும். இருந்தாலும் இந்த விஷயத்தில் அவன் அவளுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அவளாகவே பேசட்டும் என்று காத்து இருந்தான்.  

     அதே போல அன்று மாலை அவளே அழைத்தாள். “என்ன.. சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது. ஒருத்தி பேசவே இல்லையே என்ற கவலை எல்லாம் இல்லை” 

      “ ஹே.. ராட்சசி. உன்னைத் தாண்டி நினைச்சிட்டே இருக்கேன். எனக்குன்னு இருக்க ஒரே உறவு நீ தான். எப்ப ஃபோன் போடுவன்னு கையில் வச்சிட்டே இருந்தேன்.  

        “ஏன் ஃபோனைப் பார்த்திட்டு இருக்க நேரத்துக்கு என்னைக் கூப்பிட்டா உங்க கவுரவம் குறைஞ்சிடுமா?”.. என்று கேட்டாள். 

     “இல்ல அகல். என் விருப்பத்துக்கும் நீ மரியாதை கொடுக்கணும்”.. என்றான் நிதானமாக.  

       “ம்ம்.. எப்படி போவுது புது வேலை”.. என்றாள் இப்போது சமாதானமாக. 

       “சூப்பரா இருக்கு டீ. நீ இனி சமைக்கவே வேண்டாம். உன்னை உட்கார வச்சி நானே உனக்கு சமைத்து தர்றேன்”.. என்றான். 

   “சரி விடு. நீ சந்தோஷமா இருந்தா சரி தான்”.. என்று சொல்ல.. இருவரும் சமாதானம் ஆகி இருந்தார்கள். 

       தொடரும். 

இந்த கதை உங்களுக்கு பிடித்

து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே.

அன்புடன் லக்ஷ்மி. 

     

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!