பொதுவாக எல்லா திருமணங்களும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. சிலர் அந்தச் சொர்க்கத்தையே பூவுலகில் உண்டாக்கி திருமணம் செய்துகொள்வர். அப்படி ஒரு சொர்க்கத் திருமணத்தைத் தான் காண நாம் செல்கிறோம்.
Advertisement
சொர்க்கம் என்று ஏன் வர்ணித்தேன் என்றால், அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்களை வைத்துத்தான். அத்தனை அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. பார்த்ததும் மணமக்கள் மனத்தில் பதிந்தார்களோ இல்லையோ அந்த அழைப்பிதழ் மனத்தில் பதிந்து விடும். பத்திரிகையைப் பத்திரமாக பீரோவில் பூட்டி வைத்துக் கொள்வோம்.
தங்க நிற பேழை அது.. அதன் மேல் பெரிய எழுத்துக்களில் பார்த்திபன் – விஷாலினி என்ற பெயரும், முல்லைக் கொடி போன்ற கொடிகளும் மலர்களும் செதுக்கப்பட்டிருந்தன. நம் விரல்களால் பேழையைக் கண்களை மூடிக்கொண்டு தொட்டாலும் கொடியின் அழகை உணர முடியும். அதில் வடிக்கப்பட்டிருக்கும் ஓவியத்தையும் மணமக்களின் பெயர்களையும் தான்.
Advertisement
Advertisement
அதன் மேல் கட்டியிருந்த சிவப்பு நிற சரிகைகள் கொண்ட ரிப்பனைத் திறந்ததும் நமக்கு ஜோடியாக, ஒருவரை ஒருவர் அணைத்தபடி, காதல் கவி பாடிய மணமக்களின் புகைப்படம் தான் இருந்தது.
பெட்டிக்குள் தான் அழைப்பிதழ் இருந்தது. அதில் இன்னாரின் மகனுக்கும், இன்னாரின் மகளுக்கும், இந்தத் திகதியில், இந்த இடத்தில் இன்னார் தலைமையில் திருமணம் எனத் தெளிவாக எழுதி அவ்வண்ணமே கோரும் என உறவினர்களின் பெயர்களும் ரயில் வண்டியின் பெட்டி போல் வரிசையாக அச்சிடப்பட்டிருந்தன.
Advertisement
பெரிய புத்தக வடிவில் இருந்த அதன் பக்கங்கள், நிச்சயம் அட்டை போல் கனமானதாக இருந்தது. காகிதம் போல் மெல்லிசாக இல்லை. சிறிய இரண்டு சிமிழில் ஒன்றில் குங்குமமும் மற்றொன்றில் மஞ்சளும் இருக்க, வெற்றிலை பாக்குடன் அந்த ஆடம்பரத் திருமணத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் அது.
கண்டிப்பா பத்திரிகைக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பார். ஏனெனில் நம் கையில் இருக்கு அந்த அழைப்பிதழின் விலை இருபது நூறு ரூபாய் தாள்களுக்குச் சமம். ஒரு குடும்பத்திற்கு ஒன்று என்று நூறு பத்திரிகை அச்சிட்டால் கூட சில லட்சங்கள் செலவாகும்.
நாமும் இல்லாத சட்ட காலரைத் தூக்கி விட்டுக்கலாம். ஏனெனில் நம்மிடமும் ஒரு பத்திரிகை இருக்கிறது. காஸ்ட்லி கெஸ்ட் தான் நாமும். ஆதலால் தைரியமாக மண்டபத்துக்குள் செல்லலாம்.
பெரிய கேட்… ஏறி குதித்து உள்ளே செல்ல வேண்டும் என்றால் மலை ஏற தெரிந்திருக்க வேண்டும். அது தெரியவில்லை என்றாலும் கவலையில்லை. நம்மிடம் தான் அழைப்பிதழ் இருக்கிறதே. அது போதும்.. சில நூறுகள் மதிப்பிருக்கும் அந்த பொன் போழையைக் காட்டினால் கேட் திறந்து கொள்ளும். நமக்கு அனுமதி இலவசம்..
வாருங்கள் எங்கும் நில்லாது சென்று திருமணத்தைக் கண்டு ரசிப்போம்.
ராட்சசனோ என்று பயம் கொள்ளும் அளவிற்குப் பெரிய குபேர வடிவிலான பொம்மை ஒன்று, இரு கரங்களையும் தூக்கி டேபிள் ஃபேன் போன்ற ஒன்றை வைத்துகொண்டு நின்றது. அந்த ஃபேனின் முன் நின்றால் சில் என்ற காற்றுடன் பன்னீர் சாரல் நம்மை நனைக்கும்..
தங்கநிற பலூன். திருமணத்திற்காக பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். ‘கல்யாணத்த முடிச்சிட்டு போகும் போது, அதுல இருந்து ரெண்டு பலூன ஆட்டைய போட்டுட்டு போகணும்.. பிள்ளைங்களுக்கு விளையாட யூஸ்புல்லா இருக்கும். ‘
வரவேற்பு கம்பளத்தில் இருந்து ஆங்காங்கே தொங்கிய மலர்களும், திரை சீலைகளும் தங்கம் தான். தங்கம் என்றால் முழுதாக தங்கம் கிடையாது. தங்க நிறம். தகதக வென மின்னி நம் கண்களைக் கூச செய்யும்.
மண்டபத்தில் ஒரு பக்கம் எண்ணிலடங்கா கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அந்த இயந்திர நான்கு கால் வாகனத்திற்கு போட்டியாக நான்கு கால்கள் தெரிந்தன. அவ்வப்போது அசைந்து ‘நான் உயிருள்ள ஜந்து…’ எனக் காட்டியது. அந்தக் கருநிற கால்களுக்குச் சொந்தக்காரன் கஜேந்திரன்.
அதான் யானை… பட்டத்து இளவரசன் போல் யானையின் மீது மாப்பிள்ளை வந்திறங்கியிருக்கிறார்.
‘ஐயோ!! லேட்டாக வந்துவிட்டோமா? கல்யாணம் பண்ண வேண்டிய மாப்பிள்ள வந்திட்டாரு. அப்ப கல்யாணம் முடிஞ்சிருச்சா! அந்த வருங்கால மகா ராஜா, மகா ராணி கழுத்தில் தாலி கட்டுறத பார்க்க முடியாதா?
வாங்க சீக்கிரம் போகலாம்..
மாப்பிள்ளை வந்து ரொம்ப நேரம் ஆச்சா!! எனப் பயப்பட தேவையில்லை. மாப்பிள்ளை இப்பொழுது தான் வந்திருக்கிறார்.
எப்படிச் சொல்கிறேன் என்றால் மணமகனின் வருகையை மணமகளுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக வெடிக்கப்பட்ட பட்டாசை வைத்து தான்.
ஆடம்பர திருமணம் என்று சொல்லும் போது பட்டாசு இருக்காதா!! டென் தவுசன் வாளா!! பத்தாயிரம் சிறிய சீனி பட்டாசுகளை ஒன்று சேர்ந்து பூ கட்டுவது போல் கட்டி சிவகாசியில் இருந்து பிரத்யேகமாக ஆர்டர் போட்டு வரவைத்த சரத்தைப் பற்ற வைத்தால் குறைந்தது பத்து நிமிடங்களாவது தொடர்ந்து வெடிக்கும்…
இப்போது இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் வெடித்து சிதறிய பட்டாசைச் சுற்றி இருக்கும் காகிதத்தில் இங்கு, இன்னும் மின்னிக் கொண்டும், புகையை கிளப்பிக் கொண்டும் இருப்பதால், மாப்பிள்ளை இப்போது தான் வந்துள்ளார்.
‘எப்படி நம்ம புத்திசாலித்தனம்.. ‘
தாலி கட்டுவதற்குள் இருவரையும் ஜோடியாக பார்த்து விட்டு பந்திக்கி செல்வோம். சாப்பாடு நன்றாக இருந்தால் மொய் கவரை நீட்டுவோம். இல்லையே கண்டும் காணாதது போல் சென்று விடலாம்.
பழனி படிக்கட்டில் பாதியைக் கடன் வாங்கி வைத்திருப்பது போல் பல படிக்கட்டுகள். பட்டு சேலையைத் தூக்கி கொண்டு ஏறுவதற்கு சிரமமாக இருந்தாலும் ஏறி சென்று மணமக்களை பார்த்து விட வேண்டும் என்ற உத்வேகத்தில் வேகமாக பாதி படிக்கட்டு ஏறிச் சென்றால் நம்மை வரவேற்க யாரும் இல்லை.
ஒரு டேபிளில் மூன்று தட்டுகள். ஒன்றில் கற்கண்டு. ‘அதா யாரும் இல்லையே. தட்ட மட்டும் விட்டுட்டு கற்கண்டைத் தூக்கிட வேண்டியதுதான்.’
மற்றொன்றில் பன்னீர் ரோசா.. இல்லை பட்டன் ரோஸ்… தெரியல ரோசாப்பூ இருக்கு. வேணுங்கிறவங்க எடுத்து தலைல நட்டு வச்சிக்கங்க.
அடுத்து என்ன!! சந்தனமும் குங்குமமும் தான். சந்தனத்த எடுத்து மெல்லிசா பொட்டுக்கு மேல ஒரு கோடு போட்டு. அதன் நடுவில் டிராபிக் சிக்னல் மாதிரி குங்குமத்தை எடுத்து ஒட்டி வைத்துவிட்டு. யாரும் வரவேற்கவில்லை என்றாலும் பரவாயில்லை நாம உள்ள போலாம்.
‘ஏன்னா நம்ம கிட்ட தா இன்விடேஷன் இருக்கே.
வாங்க..
என்னங்க எல்லாரும் ஸ்டாண்ட் அப் நிக்கிறாங்க!! இது கல்யாணம் வீடா! இல்லை ஆர்மி பரேடா? மண்டபம் மாத்தி வந்திட்டோமா?’ என நாம் யோசிக்கும் வண்ணம் அனைவரும் எழுந்து நின்று கொண்டிருந்தனர். அவர்களைத் தள்ளி விட்டு விட்டு முன்டி அடித்துக்கொண்டு மணமக்களைப் பார்த்தால்…
மாப்பிள்ள வேற யாருக்கோ தாலி கட்டீட்டு இருக்காரு. என்ன கொடுமங்க இது?
அட அந்தப் பொண்ணு அதா விஷாலினி. அதுவும் புது மணமக்களுக்குப் பக்கத்துல தான் நிக்கிது. அதுவும் கண்ணுல தண்ணிய வச்சிட்டு.
ஒருவேளை தாலிய மாத்தி கட்டீட்டானோ!!
கெட்டி மேள சத்தங்களுடன் நாதஸ்வர இசையும் ஓங்கி ஒலித்து அந்த மண்டபத்தை, மக்களுடன் சேர்ந்து நிறைந்து கொண்டது. பார்த்திபன் தன் வலிய கரத்தால் அருகில் இருந்த பெண்ணவளுக்கு மங்கள நாணை அணிவித்து. ‘இன்று முதல் நீயும் நானும் வேறல்ல.. ஓர் உயிர் தான்..’ என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சொல்வது போல் இருந்தது அவன் தாலி கட்டும் காட்சி.
ஏன் பிடிக்கவில்லையா?
பிடிக்காமல் எதற்கு தாலி கட்ட வேண்டும். இவனின் கை கால்களைக் கட்டி மிரட்டி யாராவது இந்தத் திருமணத்தை நடத்துகிறார்களோ?
யாரிடம் கேட்பது? ம்… இதோ இவர் தான் மாணிக்கவேல். உட்காந்திருக்கும் மணமகன் பார்த்திபனின் தந்தை.
“ஸார் என்னாச்சி? ஏ பொண்ணு மாறிப்போச்சி?” என நாம் கேட்டால் முறைத்துக் கொண்டு அந்தழ் பக்கமாக சென்று விட்டார்.
“இவன பிள்ளையா பெத்ததுக்கு நான் படுற அவமானமும் வேதனையும் இருக்கே. அத வெளில சொல்லிட முடியாது. என்னோட பேர கெடுக்குறதுக்குன்னே மகனா வந்து பிறந்து தொலச்சிருக்கான். ” எனப் புலம்பியபடியே சென்றார்.
‘இப்ப நாம என்ன கேட்டுட்டோம்னு இவரு தங்கமான பையன திட்டுறாரு. தாலிய மாத்தி கட்டுனது எல்லாம் குத்தமா!!
சரி இவரு வேண்டாம் டென்ஷன் பார்ட்டியா இருக்காரு. நாம ஏதாவது லேடிஸ் கிட்ட கேக்கலாம். இதோ மங்களகரமா சிவப்பு புடவைல நகக்கட விளம்பர மாடல் மாதிரி அள்ளி அடிச்சி நகைய போட்டுட்டு வர்றாங்களே அவங்க கிட்ட கேப்போம்.’
அவங்க தான் மாலதி… மாலு… பார்த்திபனின் சித்தி… அதாவது சித்தப்பாவோட வைஃப்..
” அம்மா பொண்ணு மாறிடுச்சே ஏன்?”
“இந்த வீட்டுல எது தான் மாறல எல்லாமே மாறித்தா இருக்கு. ச்ச… இந்த மனுஷன்ட்ட படிச்சி படிச்சி சொன்னேன். அவன கண்டிங்க அந்தப் பொண்ணு கூட வரமொற இல்லாம ஊர் சுத்திட்டு கொடக்கான், ஒன்னு கொடக்க ஒன்னு ஆச்சின்னா நம்ம குடும்ப மானம் போய்டும்னு… போய்டுச்சில்ல. இப்ப அவமானப்பட்டு நிக்கிறது யாராம். நாங்க தான. அந்தச் சிறுக்கி எங்க வீட்டு பையன வளச்சி போட்டு கல்யாணமும் பண்ணிக்கிட்டா. இனிமே என்ன நடக்கப்போதோ!!” என, நம்மிடம் எப்படி என்றே சொல்லாமல் கண்ணீர் கடலை கட்டவிழ்த்து விட,
வேற யார்க்கிட்டக் கேக்கலாம். ம்… இந்த மொற ஓட்டேஜ் ஹோம்க்குப் போற ஆளுங்களா இல்லாம, யூத்தா பாத்து கேப்போம். இதோ நமக்கு பதில் சொல்லணும்னே ஒரு ஜீவன் ஓடி வந்திட்டு இருக்கு.
“ஸார்… ஸார்… நீங்களாச்சும் சொல்லுங்க. இந்த பொண்ணு யாரு? ஏ திடீர்னு மாப்ள வேற பொண்ணு கழுத்துல தாலி கட்டுனாரு? விஷாலினி ஏன் அழுத்திட்டே இருக்கு? அரமணி நேரத்துக்கு முன்னாடி என்ன நடந்தது? ஸார்… ஸார்…”
ச்ச… கொஞ்சம் கூட மரியாதையே தெரியாத ஆளா இருப்பான் போல. பேசிட்டு இருக்கும் போதே போய்ட்டான்… இப்ப யாருகிட்ட, மாத்தி நடந்த அந்தக் கல்யாண கதைய கேக்குறது.
அட! மாப்ளயே எழுந்து வர்றாரு!!
“மாப்ள… மாப்ள… ஏன் மாத்தி தாலிய கட்டுனீங்க? பத்திரிகைல ஒரு பொண்ணு கூட க்ளோசப்ல, கட்டி பிடிச்சிட்டு நின்னுட்டு, இப்ப வேற பொண்ணு கழுத்துல தாலி கட்டி பொண்டாட்டியா ஆக்கிக்கிட்டீங்களே ஏன்?” என்ற நமக்கு பதில் சொல்லாது வேகவேகமாக பழனி படிக்கட்டில் இறங்கி, பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த தன் காரை ஓட்டிக் கொண்டு சென்றே விட்டான்.
“பார்த்தி… பார்த்தி… ” எனக் கத்திக் கொண்டே ஓர் இளைஞன் வர,
இவன் மட்டும் நமக்கு கதைச் சொல்லிட போறானாக்கும். வாங்க நாம வந்த வேலைய பாப்போம். பொண்ணு மாறிப் போச்சின்னு மாணிக்கவேல் பந்தி போடாம விட்டுட மாட்டாருன்னு நம்புவோம். வர்ற வாசத்த வச்சி பார்த்தா, இலைல சாம்பார் சோறு தான் போடுறானுங்க போல.
“அதெல்லாம் பிரியாணி தான் போடுறோம்.. உங்களுக்கு இப்ப என்ன வேணும்?” பார்த்தியை அழைத்தபடி வந்த இளைஞன்.
“உங்கிட்ட கேட்டா மட்டும் பதில் கிடைச்சிடுமா என்ன! ஆல்ரெடி நாலு பேர்க்கிட்ட கேட்டு மூக்கொடஞ்சி போனதுதா மிச்சம். உங்கிட்டையும் அதே கேள்விய கேட்டு ஒட்டி வச்ச மூக்க திரும்பி உடச்சிக்க விருப்பம் இல்ல. அதுனால நான் சாப்டுட்டு வீட்டப் பாத்து போகப் போறேன். “
” கேக்க வேண்டியவங்கள விட்டுட்டு கண்டவங்க கிட்ட கேட்டா!! அப்படி தான் உடையும். பரவாயில்லை. எங்கிட்ட அதே கேள்வி கேளுங்க. நான் உங்களுக்கு கிரிஸ்டல் கிளியரா பதில் சொல்றேன்.”
“யாரு நீயா! ஆமா நீ யாரு? கல்யாண வீட்டுல செருப்பு திருட வந்தவெங்கிட்டலாம் நான் கேள்வி கேக்குறது இல்ல.”
“ஹலோ… மரியாத மரியாத.. நான் இந்த வீட்டு மருமகெ. அதுவும் மூத்த மருமகெ. இப்ப உங்கள கடந்து போனானே பார்த்திபன்… அவனோட அக்காளுக்கு வாழ்க்கை குடுத்து வாழ வச்சிட்டு இருக்குற வீட்டோட மாப்பிள்ள.” எனக் கெத்தாக சொன்னவனைப் பார்க்க அப்படி தெரியவில்லை.
“யாரு நீ மருமகனா!! டிரெஸ்ஸு அப்படி ஒன்றும் நல்லா இல்லயே. செருப்பு திருட வந்தவெ கணக்கில்லா இருக்கு.”
அப்போது அந்த பக்கம் சென்று கொண்டிருந்த மனிதன், அதா ஒரு யூத் நம்ம கேள்விய கூட காதுல வாங்காம போச்சே… அந்த ஜீவன் தான்.. அவனை இவன் அழைத்து,
“யோவ்! சகல சொல்லுய்யா.. நாம ரெண்டு பேரும் இந்த வீட்டு மருமகன்க தான்னு இந்தம்மாட்டா சொல்லு.” எனச் சாட்சிக்கு அழைத்தான் அவன். வந்த புதியவன் புன் சிரிப்புடன் கடந்து செல்ல, அவனின் பின்னால் அவனின் மனைவி.
அதான் மாப்பிள்ளையின் அக்கா மயூரி, “ராம்.. ராம்.. ” எனச் செல்லும் தன் கணவனின் பெயரைக் கத்திக் கொண்டே ஓடினாள்.
“அப்ப நீங்க நிஜமாவே இந்த வீட்டு மருமகனா…”
“எஸ்… மை நேம் இஸ் சந்ரு… சந்திரபிரகாஷ். இதோ நிக்கிதே தட் பஞ்சு மிட்டாய் கலர்ல சேல கட்டி ஒரு பொண்ணு. அதுக்கு புருஷனா கடந்த ஐஞ்சி வர்ஷமா வேல பாக்குறேன். பை த வே எம்பொண்டாட்டியோட பேரு நேகா. மை லவ்வபுல் வைஃப்.” என நகம் கடித்து வெட்கப்பட,
“தம்பி இதெல்லாம் வேண்டாம்.. பயமா இருக்கு. அப்றம் அல்லா கோயிலுக்கு தான் நான் போகணும்.. “
“எங்க வேண்னாலும் போங்க எனக்கு என்ன வந்தது.. ” எனச் சொல்லி நடக்க,
” தம்பி… தம்பி… தம்பி… கதை சொல்லிட்டு போங்க..”
“என்ன கத? “
“அது பத்திரிகைல இருந்த பொண்ணு கூட நடக்காம ஏன் வேற பொண்ணு கூட கல்யாணம் நடந்தது. எதுனால பொண்ணு மாறுச்சின்னு பார்த்திபனோட கல்யாண கத. “
” அதுக்கு ஒரு மணி நேரம் ஆகும் பரவாயில்லையா?”
“ஒருமணி நேரமா!! அப்ப சாப்டுட்டு வந்து கத கேக்கவா… பசி…”
“சரி வாங்க..”
“தம்பி…”
“இப்ப என்ன? “
“அது பந்தில பாயாசம் பால் பாயாசமா? இல்ல பருப்பு பாயாசமா? ஏன்னா பால் பாயாசத்துல அப்பளத்த நொறுக்கி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கு……ம்.. ” சந்ரு முறைக்க,
“காமண்நேரத்துல வந்து கத கேக்குறேன் தம்பி… வந்திடுறேன்..”
சந்ரு சொல்லப் போற கதைய அடுத்த அத்தியாயத்துல இருந்து கேப்போம்…