Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 1

கலாட்டா – 1

“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே



Advertisement

உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ

உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு”

Advertisement

Advertisement

அன்றலர்ந்த மலராய் புலர்ந்தும் புலராமலும் இருந்த அந்த அதிகாலை வேளையில், தேனி மாவட்டம் அம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அந்த வீட்டை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வீக குரல் நிறைத்திருந்தது.

“ஏண்டி காப்பி கொண்டு வராம இன்னும் என்னத்த செஞ்சுட்டு இருக்கவ??” என சுப்ரபாத ஒலியை மீறி தன் கட்டைக் குரலால் கர்ஜித்துக் கொண்டிருந்தார் சந்தன பாண்டியன், அந்த வீட்டிற்கு மட்டுமல்லாது அந்த கிராமத்திற்கும் தலைவர்.

Advertisement

அவரின் குரலில் அடுப்படியில் இருந்து கையில் காபி குவளையுடன் அரக்க பறக்க ஓடி வந்தார் அவரின் துணைவியார் காமாட்சி.

“எதுக்கு இப்படி ஓட்டப்பந்தயத்துல ஓடியறவ மாதிரி ஓடியற.. எங்குட்டாச்சும் விழுந்து வைக்கவா?? பாத்து மெதுவா வா..” என சந்தனபாண்டியன் ஒரு அதட்டல் போட,

அந்த அதட்டலில் ஸ்விட்ச் போட்டார் போல் அவர் மனைவியின் கால்கள் நின்றது, பின் பயந்து கொண்டே வந்து அவர் கையில் காபியைக் கொடுத்தவர் தயங்கிக் கொண்டே, ” என்.. என்னை மன்னிச்சுக்கிடுங்க.. இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரக வராகன்னு உள்ள பலகாரம் சுட்டுகிட்டு இருந்ததுல நீங்க வந்ததை கவனிக்கலை” என தாமதத்திற்கு மன்னிப்பு வேண்டியவர், மனதிலோ, “இவர் கதவை தொறந்து வர வரைக்கும் கண்ணு பூத்துப் போய் அதையே பார்த்துகிட்டு உக்காந்தா பொழைப்பை யாரு பார்க்குறது… ஏன் சமையக்கட்டுக்கு வந்து காபி கொடுன்னு கேட்டா துரைக்கு கவுரவம் கொறஞ்சிருமோ.. ” என்று தன் கணவனிற்கு அர்ச்சனை செய்தாலும் வெளியே முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டார்.

தன் ஆசை மனைவியின் மங்களகரமான முகம் வாடிப்போவதைக் கண்ட சந்தனபாண்டியனின் மனமும் வாட, முகத்தை எப்போதும் போல் கடினமாக வைத்துக் கொண்டு, “எல்லா வேலையும் நீ ஒருத்தியா செஞ்சிட்டு இருக்கியாக்கும்.. உனக்கு எத்தனைவாட்டி சொன்னாலும் புத்தி வராது.. துணைக்கு ராசாத்தியை கூப்டுக்கோ.. நம்ம கவனிப்புல மாப்பிள்ளை வீடு அசந்து போயிரோணும் சொல்லிப்புட்டேன்.. போ போய் வேலையைப் பாரு, நான் போய் வயலை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துருறேன்” என அவரை விரட்டியவர், கிளம்பும் முன் “நீ எதாவது சாப்பிட்டு வேலையைப் பாரு, பின்ன மயக்கம் போட்டு விழுந்துட்டா உனக்காரு வைத்தியம் பார்க்க” என தன் அக்கறையும் அதட்டலாகவே மொழிந்துவிட்டு வெளியே கிளம்பினார்.

அவர் அகன்றதும், “ரொம்பத்தான் அக்கறை” என்று நொடித்துக் கொண்ட காமாட்சியும் தன் வேலைகளில் மூழ்கிப் போனார்.

சந்தனபாண்டியன் – அம்மாபட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவரும், அந்த ஊரின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரும் ஆவார். விவசாயத்தை முதல் தொழிலாக கொண்டுள்ள இவர் டிராவல்ஸ் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகின்றார். மேலும் போடி மலைகளில் ஏலக்காய் தோட்டமும் இவருக்கு சொந்தமாக உள்ளது. அன்பைக் கூட அடாவடியாகக் காட்டும் இவருக்கு சாந்தமே உருவாக உற்றவளாகி வந்தவர் தான் காமாட்சி அம்மாள். கணவன் சொல்லே மந்திரம் என வாழும் ஓர் அப்பாவி(?) இல்லத்தரசி. இந்த அடாவடி சந்தனபாண்டியனே அடங்கிப் போகும் ஜீவன் இந்த உலகில் ஒருவர் உள்ளாராயின் அது அவரின் செல்லமகள் அஞ்சலியிடம் மட்டும் தான். சந்தனபாண்டியனிற்கு இரு மகள்கள் அஞ்சலி, அபிநயா. மூத்தவள் அஞ்சலியைத் தான் இன்று பெண் பார்க்க வருகிறார்கள். இவர்களைப் பற்றி கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம் இப்போ கதைக்கு போகலாம் வாங்க..

“மீனு மீனம்மா என்ன பண்ணிக்கிட்டு இருக்க கிட்சன்ல இந்நேரத்துக்கு??” என தன் சிம்மக்குரலால் கேட்டுக்கொண்டே மாடிப்படிகளில் இருந்து இறங்கி ஜாக்கிங்க் செல்ல தயராகி வந்து கொண்டிருந்தார் சுந்தர பாண்டியன்.

கணவனின் குரல் கேட்டு மலர்ந்த முகத்துடன் கையில் அவருக்கான அருகம்புல் சாறுடன் கிட்சனை விட்டு வெளியே வந்தார் மீனாட்சி.

வயது ஐம்பதை நெருங்கிவிட்டது என கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாவரும் நம்ப முடியாத அளவுக்கு அந்த மதுரை மீனாட்சி அம்மனைப் போல் தெய்வீக அழகுடன் தன்னை நோக்கி வந்த மனையாளை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த கடமை தவறாத காவல் அதிகாரி.

“இந்தாங்க குடிங்க” என அவர் கைகளில் டம்ளரைத் தந்தவர், அவர் பார்வையில் நாணம் மேலோங்க அதை மறைக்கும் பொருட்டு கோவமாக கேட்பது போல், “இப்போத்தான் இளமை திரும்புறதா நினைப்பா உங்களுக்கு?? இன்னும் அப்படி என்ன பார்வை வேண்டி கெடக்கு??” என கேட்டாலும் குரல் என்னவோ குழைவாகத் தான் வெளிவந்தது.

“அப்படித்தான் நினைக்கிறேன் மீனு.. வயசாக வயசாக தான் நீ மெருகேறிட்டே போற..நம்ம கல்யாணத்துல பார்த்ததை விட இப்போ தான் ரொம்ப அழகாயிருக்க மீனும்மா.. உன் கிட்ட இருந்து கண்ணை எடுக்கவே முடியலை” என அவர் ரசனையுடன் கூற,

அவர் கூற்றில் விழைந்த வெட்கத்தால், சிவந்த கன்னங்களை மறைக்க மிகவும் போராடினார் மீனாட்சி.

அதை ரசித்துப் பார்த்த சுந்தர பாண்டியன் விசிலடித்துக் கொண்டே, “அடப் பாருடா.. என் பொண்டாட்டிக்கு வெட்கம் வேற வருதே” என்று  கிண்டல் செய்ய,

அவரை முறைக்க முயன்று தோற்ற மீனாட்சி, “ச்சீ போங்க” என்று எஃகு போல் இறுகிப் போய் திண்மையாய் இருந்த அவரின் புஜங்களில் தன் மென்கரம் கொண்டு அடித்தார்.

“நம்ம பொண்ணை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க.. இன்னும் விவஸ்தையே இல்லாம என்னை சைட் அடிச்சிட்டு இருக்கிங்க… உங்களுக்கெல்லாம் எவன் தான் போலீஸ்ல வேலை கொடுத்ததோ” என்று தலையில் அடித்துக் கொண்ட மீனாட்சி, இன்னும் அங்கு நின்றால் ஒரு வேலையும் ஓடாது என்றுணர்ந்து தன் கணவனிடமிருந்து தப்பித்துக் கிளம்பி தன் வேலைகளைப் பார்க்கச் சென்றார்.

“நம்ம பேரப்பொண்ணுக்கே கல்யாணம் வச்சாலும் என் காதல் மாறாது மீனு” என்று சுந்தர பாண்டியனின் குரலும் மீனாட்சியை பின்தொடர, மதுரை மல்லியைப் போல் மீனாட்சியின் முகமும் சந்தோஷத்தில் மலர்ந்து அந்த வீடெங்கும் மணம் வீசியது.

சுந்தர பாண்டியன் – தேனி மாவட்டத்தின் SP. நேர்மை தவறாத அந்த கண்ணியமான காவல்காரனையே 25 வருடங்களாய் காதல் சிறையில் அடைத்து வைத்திருக்கும் அவரின் காதல் மனைவி தான் மீனாட்சி. இவர்களின் காதலுக்கு பரிசாய்  கிடைத்தவள் தான் ‘கீதாஞ்சலி’. சுந்தரபாண்டியன்- மீனாட்சி தம்பதியரின் ஒரே ஒரு செல்ல(?) புதல்வி. அவளைத் தான் இன்று பெண்பார்க்க சென்னையிலிருந்து வருகின்றனர்.  மாப்பிள்ளைக்கு இவளைப் பிடிக்குமா?? இல்லை இவளால் பைத்தியம் பிடிக்குமா?? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்னை அடையாரில் அமைந்துள்ள அந்த அழகான தனி பங்களா அதிகாலையிலே பரபரப்புடன் காணப்பட்டது.

“சீதா!!! இன்னும் எவ்ளோ நேரம் தான் கிளம்புவீங்க??? நீங்க இப்படி ஆடி அசைஞ்சு கிளம்புனா நம்ம நாளைக்குத் தான் பொண்ணு பார்க்க போய் சேருவோம்” என்று வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தார் ராமன் – சென்னையின் மிகப் பிரபலமான கிரிமினல் வழக்கறிஞர்.

“இதோ வந்துட்டோம்.. அஞ்சே நிமிஷம்” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார் ராமனின் மனைவி சீதா, இவர் பிரபல வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்.

“ஐஞ்சு நிமிஷம் ஐஞ்சு நிமிஷம் சொல்லி இதோட ஐம்பது நிமிஷம் ஆச்சு.. அப்படி என்னதான் பண்ணுவீங்களோ.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை” என்று அவர் சலித்துக் கொள்ள, சரியாக அதே நேரம் பக்கத்து வீட்டில் இருந்து வெளி வந்தார் பரமசிவன்.

அமைதியான அந்த அதிகாலை வேளையில் ராமனின் குரல் அவருக்கும் எட்டியிருக்க வேண்டும், அதனாலோ என்னவோ ஒரு எள்ளல் சிரிப்புடன் அங்கு காரில் சென்று ஏறிக்கொண்டிருந்த தன் மனைவியிடம், “தனம் உன்னை மாதிரி பொறுப்பான மனைவி கிடைக்க நான் புண்ணியம் பண்ணிருக்கனும்… சீக்கிரம் கிளம்பலாம் அப்போதான் நம்ம பொண்ணு வீட்டை கரெக்ட் டைமுக்கு ரீச் பண்ண முடியும்.. நாம மத்தவங்க மாதிரி பேருக்கு மட்டும் பங்க்ச்சுவலா இல்லாம செயல்லயும் இருக்கணும்” என்று மறைமுகமாக ராமனைத் தாக்கிவிட்டு அவர் முறைப்பதைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து தன் குடும்பத்துடன் கிளம்பியிருந்தார் பரமசிவன்.

பரமசிவனின் இந்தப் பேச்சு வேறு எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் இருக்க, மேலும் உக்கிரமான ராமன், “சீதாஆஆஆ!!! இப்போ நீங்க வரிங்களா இல்லை நான் கிளம்பவா??” என்று கர்ஜிக்க,

பொறுமையாய் உள்ளிருந்து பைகளை எடுத்துக் கொண்டு வந்த சீதா, “மாப்பிள்ளையே இங்க இருக்கப்போ நீங்க மட்டும் எப்படி போவீங்க.. சும்மா எதையாவது உளறிகிட்டு இருக்காம வாங்க கிளம்பலாம் லேட் ஆச்சு” என்று அவரைத் தாண்டி காருக்குச் செல்ல,

அவர் பின்னாலே வந்த அவர்களின் மகன் அஸ்வத் கிருஷ்ணாவும் அவனின் நண்பன் வினோத்தும் பொங்கி வந்த சிரிப்பை மறைத்துக் கொண்டு சீதாவைப் பின் தொடர்ந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து கடைசியாய் வீட்டில் இருந்து வெளியேறிய ராமனின் தாயார் மதுரம், தன் மகனைக் கண்டு, “டேய் ராமா இந்த சேலைக்கு இந்த லிப்ஸ்டிக் கலர் மேட்சிங்கா இருக்கா?? இல்லை மாத்தனுமா??” என்று கையில் வைத்திருந்த போனில் தன் முகத்தை பார்த்துக் கொண்டே கேட்க,

கண்களில் கணல் தெறிக்க அவரை நோக்கிய ராமன், “அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்.. ஒழுங்கா போய் வண்டில ஏறிடுங்க அதான் உங்களுக்கு நல்லது” என்று மிரட்ட,

“போடா போடா ரசனை கெட்டவனே.. டாங்க்கிக்கு தெரியுமா கேம்பர் ஸ்மெல்” என்று தன் மகனைத் திட்டிக் கொண்டே காரில் சென்று ஏறிக் கொண்டவர் யாரையும் கண்டுகொள்ளாமல் தன் ஐபோனுடன் ஐக்கியம் ஆகிவிட்டார்.

அவரை முறைத்துக்கொண்டே காரில் ஏறிய ராமன், டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த தன் மகனிடம், “என்ன பண்ணுவியோ தெரியாது அந்த பரமசிவன் காருக்கு முன்னாடி நம்ம கார் தேனியை ரீச் பண்ணிருக்கணும்… அவனுக்குப் பின்னால நான் போனாதா சரித்திரமே இருக்கக் கூடாது.. என்ன புரிஞ்சதா” என்று ஆணையிட,

” அம்மா!! ” என்று பாவமாய் அஸ்வத் பின் சீட்டில் இருந்த தன் அன்னையைப் பார்க்க, அவரோ தலையில் அடித்துக் கொண்டே, ” எங்குட்டோ குறுக்கு வழியில் போய் உன் அப்பா குறுக்கு எழும்பை உடைச்சாலும் பரவாயில்லை..  சீக்கிரம் போடா .. உங்க அப்பாவுக்கு உயிரை விட கவுரவம் தான் பெரிசு” என்று கடுப்புடன் மொழிந்தவர் கணவனின் முறைப்பை கண்டுகொள்ளாமல் கண்களை மூடி அமர்ந்துவிட்டார்.

“உங்க வீனாப்போன கவுரவத்துக்கு என்னை ஏண்டா காலங்காத்தால எழுப்பி இப்படி காவு குடுக்க கூட்டிட்டு போறிங்க??” என்று முன்சீட்டில் அமர்ந்திருந்த வினோத் காரின் வேகத்தைக் கண்டு பயத்தில் புலம்ப,

அதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே காரை லாவகமாய் செலுத்திக் கொண்டிருந்த அஸ்வத், “நீ என்னோட நண்பன்ல அப்போ அனுபவிச்சு தான் ஆகணும் செல்லம்” என்று கிண்டல் செய்தான்.

இருவரையும் முறைத்த ராமன், “டேய் வெட்டிக் கதை பேசாம வேகமா வண்டியை ஓட்டு டா” என்று அதட்டினார்.

அவரின் கத்தலில் காதைக் குடைந்து கொண்ட வினோத், ” ஏண்டா உங்கப்பா எப்போ பாரு லவுட் ஸ்பீக்கரை முழுங்குன மாதிரி கத்திகிட்டே இருக்காரு.. உங்கம்மா ரொம்ப பாவம் டா” என்று சீதாவிற்காக வருந்தினான்.

அவனின் கிண்டலுக்கு பதிலளித்தாலும் முன்னால் சென்று கொண்டிருக்கும் தன் சித்தப்பாவின் காரை எட்டிப் பிடிப்பதிலும் கவனமாய் இருந்தான் அஸ்வத் கிருஷ்ணா.

ஆம் பரமசிவன், ராமனின் உடன் பிறந்த தம்பி தான். பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட உப்பு சப்பில்லாத ஒரு சண்டையின் காரணமாக இருவரும் பிரிந்து எலியும் பூனையுமாக எதற்கெடுத்தாலும் போட்டி போட்டுக்ககொள்வதை இன்று வரை  தொடர்கின்றனர்.

வாசுதேவ கிருஷ்ணன் – மதுரம் தம்பதியரின் குழந்தைகள் தான் ராமனும் பரமசிவனும்..

இருவரும் சிறுவயதில் இருந்தே ராம – லக்ஷ்மணன் போல் ஒற்றுமையாகத் தான் வளர்ந்து வந்தனர். அண்ணன் எது சொன்னாலும் அதையே வேதவாக்காக எடுத்து வாழ்ந்து வந்தார் பரமசிவன். ராமனோ தம்பியே உலகம் என்று அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடினார். அண்ணனைப் பின்பற்றி பரமசிவனும் வழக்கறிஞர் ஆக, ராமன் அவருக்கு சட்டத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுக்கும் ஆசான் ஆனார்.   திருமணம் கூட தங்களைப் பிரிக்கக் கூடாது என்றெண்ணி ஒரே வீட்டில் பெண்ணெடுத்து அக்கா தங்கையை திருமணம் செய்தனர் அண்ணன் தம்பி இருவரும். இப்படி ஒற்றுமையாய் இருந்த இருவரின் மேல் யார் கண் பட்டதோ சிறிதாய் எதற்கோ தொடங்கிய சண்டை இறுதியில் இருவருக்குமிடையே சேர்க்க முடியா பிளவை உண்டு பண்ணியிருந்தது. இவர்களின் சண்டையினால் சொத்தை மட்டும் அல்லாது பெற்றோரையும் பங்கு போட்டுக் கொண்டனர்.

தாயை ராமன் வைத்துக் கொள்ள, தந்தையை பரமசிவன் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.

இவர்களின் சண்டையால் பாவம் பெரியவர்கள் தான் தங்கள் இணையை பிரிந்து வாழ்(டு)கின்றனர்.

ராமன் – சீதா தம்பதியரின் ஒரே செல்ல புதல்வன் தான் அஸ்வத் கிருஷ்ணா. ஆறடிக்கும் சற்றே அதிகமாய் ஆளை அசத்தும் அழகுடன் அந்த மாயக்கண்ணனின் மனம் மயக்கும் சிரிப்பை தனக்கு அடையாளமாகக் கொண்டவன். அனைவரையும் அனுசரித்து போகும் பாங்கும், இன்முகமாக பழகும் தன்மையும் அவனை நோக்கி அனைவரையும் ஈர்த்தது. மென்மையான இதயம் கொண்டதாலோ என்னவோ அவன் இப்போது சென்னையின் முக்கிய இதய நோய் நிபுணர்களில்(cardiologist) ஒருவராக திகழ்கிறான். சிறுவயதில் இருந்தே இவனுடன் படித்து இவனைப் போலவே இதய நோய் நிபுணராக உள்ள வினோத் தான் இவனின் ஆருயிர் நண்பன்.

பரமசிவன் – தனலட்சுமியின் சீமந்த புத்திரனின் பெயர் – அஜய் கிருஷ்ணா சுருக்கமாக AK. அஸ்வத்தைப் போல் உருவத்தைக் கொண்டிருந்தாலும் குணத்தில் இருவரும் எதிர் எதிர் துருவங்கள்.

அஸ்வத் அமைதி என்றால் அஜய் அடாவடி. அனைவரையும் பேசியே மயக்கிவிடும் வாய்ஜாலக்காரன். பிராணிகளின் மேல் கொண்ட பிரியத்தால் அதையே தன் கெரியராக எடுத்து இப்போது கால்நடை மருத்துவராக உள்ளான். இவனின் குறும்புத் தனத்தை எல்லாம் சமாளித்து இத்தனை வருடமாய் இவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் அந்த அப்பாவி ஜீவனின் பெயர் ஜீவா.. அஜய்யின் உற்ற நண்பன். ஜீவா மந்தைவெளி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறான்.

பரமசிவத்திற்கு தெரிந்தவர் ஒருவர் அஜய்யிற்கு தேனியின் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஒரு வரன் கொண்டு வர, பெண் ‘IAS’ தேர்வை எழுதி விட்டு ரிசல்டுக்காக காத்திருப்பது தெரியவர, அதுவே அவரை ஈர்த்தது.. மேலும் குடும்பப் பின்னணியும் திருப்திகரமாக இருந்ததனால் அவரும் இந்த சம்பந்தத்திற்கு சம்மதித்தார்.

அஸ்வத்திற்கு முன்னால் அஜய்க்கு திருமணம் செய்து தன் அண்ணனை தலைகுனிய வைக்க வேண்டும் என்று நினைத்து அவர் துரிதமாக அனைத்தையும் நடத்த திட்டமிட, இந்த விஷயம் ராமனின் செவிகளை எப்படியோ எட்டி விட, அவரும் தன் தம்பி பார்த்த அதே ஊரில் பெண்ணெடுத்து தன் தம்பியை வென்று விட வேண்டும் என்று தீவர பெண் தேடும் படலத்தில் இறங்க, அவர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் திருப்திகரமான ஒரு சம்பந்தம் கைகூடியது.. பெண் பெரிதாய் படிக்கவில்லை என்றாலும் அவளின் குணநலன்கள் தரகர் சொல்லிக் கேட்ட வரையில் திருப்திகரமாக இருக்க, மேலும்  பெண்ணின் தந்தை SP என்பது வேறு ராமனை அந்த சம்பந்தத்திற்கு சம்மதிக்க வைத்தது.

ஒருவரை ஒருவர் தோற்கடிக்கும் முயற்சியில் நேரில் சென்று எதையும் விசாரிக்காமல் இருவரும் இன்று போட்டி போட்டுக் கொண்டு அவசரகதியில் பெண்பார்க்க கிளம்பி சென்று கொண்டு இருந்தனர்.

இவர்களின் இந்த பயணத்தில் யார் யாரை வெல்லப்போகிறார்கள்? யார் யாரிடம் தோற்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!