Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனாய் மாறிய அன்பனே"

அசுரனாய் மாறிய அன்பனே 6

பகுதி 6 

      ஹரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரே தவிப்பாக இருந்தது. அவள் எண்ணுக்கு முயற்சிக்கவே பயமாக இருந்தது. அகல்யாவின் தோழி விஜி எண்ணுக்கு அழைத்து விவரத்தை கூறினான். அவளுக்கு ஏற்கனவே இவர்கள் காதல் விஷயமும் தெரியும் ஹரியையும் தெரியும் என்பதால் அவள் உதவியை நாடினான். 

               “விஜி .. அங்க என்ன நிலவரம் என்று தெரியல. நீ அவளுக்கு சாதாரணமா பேசுற மாதிரி அவள் நம்பருக்கு போட்டுப் பாரு. அவங்க அம்மா ரொம்ப கோபத்தோடு அவளை அடிச்சு தான் கூட்டிப் போனாங்க. பாவம் அகல்யா அவங்க கிட்ட என்ன சித்திரவதை எல்லாம் அனுபவிக்கிறாளோ”.. என்று வேதனையுடன் கூறினான். 

                   “அண்ணா.. நீங்க கவலைப்படாதீங்க. அதெல்லாம் நம்ம அகல்யா தைரியமா சமாளிச்சிடும். இந்த வாரம் பரீட்சை இருக்கு. அது விஷயமாக பேசுற மாதிரி பேசுறேன். “.. என்று விஜி சொல்லி ஃபோனை வைத்து இருந்தாள். 



Advertisement

           பதட்டத்துடன் காத்து இருந்தவனுக்கு அடுத்த பத்தாவது நிமிடத்தில் விஜி அழைத்து இருந்தாள். அடுத்த நொடியே கைகள் நடுங்க அழைப்பை ஏற்றான். 

              “விஜி.. சொல்லுமா”.. என்று அவன் குரல் தழுதழுக்க.. 

               “அண்ணா.. ஃபோனை முதலில் அவங்க அம்மா தான் எடுத்தாங்க. என்கிட்டயும் கோபமா தான் பேசினாங்க. இன்னும் ஒரு பரீட்சை மட்டும் இருக்கு ஆண்ட்டி அவளை அனுப்பி வைங்க என்று சொன்னேன். அவள் படிச்சி கிழிச்சது போதும். அவளுக்கும் மாணிக்கத்துக்கும் சீக்கிரமே கல்யாணம் நடக்கப் போவுது. 

Advertisement

    அவள் படிச்சி என்ன ஆகப் போவுது. “.. என்று தான் கத்தினாங்க.     பக்கத்துல அகல்யா அழும் சத்தமும் கேட்டுச்சு. 

Advertisement

     அந்நேரம் அவள் தங்கச்சி கவுசல்யா தான்.. “அம்மா.. அக்கா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டுப் படிச்ச படிப்பை அப்படியே விட சொல்லுறீங்களா. கல்யாணத்துக்கு அப்புறம் உங்க அண்ணன் மகன் வேற பொம்பளையைச் சேர்த்துக் கிட்டு எங்க அக்காவைத் தெருவுல விட்டா அவள் என்ன பிச்சை எடுப்பாளா? யோசிங்க அம்மா. மாணிக்கம் மாமா ஏற்கனவே அந்த ரகம் தான். எங்க அக்காவுக்கு என்று படிப்பு வேணாமா?”.. என்று கோபமாக கேட்டு இருந்தாள். 

      என்ன தான் வீரலட்சுமிக்கு அகல்யா மீது கோபம் இருந்தாலும்.. கவுசல்யா சொன்னதை அப்படியே ஒதுக்க முடியவில்லை. அவள் சொன்னது நூறு சதவீதம் உண்மை ஆயிற்றே. அவள் மட்டும் நன்றாக படித்து இருந்தால் அவள் அண்ணன் குடும்பம் தயவு இல்லாமல் பெரிய வேலைக்கு போய் இருக்கலாமே என்று எத்தனை நாட்கள் வருந்தி இருக்கிறாள். 

           “ஏ கவுசி.. உன் பேச்சை கேட்டு..அவளை பரீட்சை எழுத விடறேன் என்று வை.. ஒருவேளை அந்த பையன் இவளைக் கூட்டிப் போக வந்துட்டா என்ன பண்றது”.. என்றார் வீரலட்சுமி காட்டமாக. 

Advertisement

     “இல்லம்மா.. அப்படி எதுவும் நடக்காது. நான் அக்காவைக் கூடவே கூட்டிப் போயிட்டு வந்து விடறேன்”.. என்றாள் கவுசல்யா. 

         “சரி.. மாமாவும் உன் கூட வருவான். நீ அப்ப அவள் சிநேகிதி லைன் தான இருக்கா.. கொடு.. என்று வாங்கியவர். “இங்க பாரு விஜி.. நாங்க பேசினது எல்லாம் கேட்டீல.. அப்படியே போய் அவன் கிட்ட ஏதாவது தகவல் சொன்ன.. உன் ஆத்தா அப்பனுக்கு நீ பிள்ளையா உசுரோட இருக்க மாட்ட. ஜாக்கிரதை”.. என்று ஃபோனை துண்டித்து இருந்தார். 

      என்று விஜி அத்தனையும் ஹரி இடம் சொல்லி முடித்து இருந்தாள். 

           “அண்ணா.. உண்மையில் அவங்க அம்மா பயங்கர டெரரா தான் இருக்காங்க. பாவம் அகல்யா. நீங்க எதாவது பண்ணி அவளைக் கூட்டிப் போய் விடுங்க அண்ணா. நல்லவேளை பரீட்சை எழுத ஒத்துக் கிட்டாங்க. இந்த சந்தர்ப்பத்தை விட்டா அகல்யா வீட்டை விட்டு வெளியே வர வாய்ப்பே இல்லை. “.. என்று விஜி சொல்ல. 

                                “இல்லம்மா.. இப்ப அகல்யா நல்லபடியா பரிட்சை எழுதிட்டு போகட்டும். இந்த நேரத்தில் நாம ஏதாவது செஞ்சா அவங்க அம்மா கோபம் உன் மேலயும் கவுசி மேலயும் திரும்பும். அவங்க நம்பிக்கையை உடைக்க வேண்டாம். நான் அதுக்கு அப்புறம் எப்படி அகல்யாவை அங்க இருந்து தூக்குறது என்று பிளான் போட்டுக்கிறேன்.”. என்றான். 

       பரீட்சைக்கு முதல் நாள் யாருக்கும் தெரியாமல் ஹரியை அழைத்து இருந்தாள் அகல்யா. 

       “ஹரி”.. என்று அவள் விசும்பலுடன் அழைத்த நொடி மொத்தமாக உடைந்து விட்டான் அவன். கிட்டத்தட்ட.. ஒரு வாரத்திற்குப் பின் அவள் குரலைக் கேட்கிறான். அவனுக்கு என்று இருக்கும் ஒரே உறவு அவள்!!. அவளைப் பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாகத் தோன்றியது. 

        அவளை இழந்து விடவே கூடாது என்று மனம் கதறியது. “அகல்.. எப்படி டீ இருக்க.. நீ ஒரு வாரம் பேசாம நான் செத்தே போயிட்டேன் டீ”.. என்று அவன் முடிப்பதற்குள் அவன் குரல் கரகரத்துக் கொண்டு வந்தது. 

           “ஹரி.. என்னை எப்படியாவது உன் கூட கூட்டிட்டு போய் விடுடா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நாளைக்கு பரிட்சை முடிச்சதும் நான் பின் பக்கம் வழியா வரேன்”.. என்றாள். 

          “இல்ல அகல்.. வேண்டாம். அவசரப்படாத. நாளைக்கு நாம ஏதாவது இப்படி யோசிப்போம் என்று தான் மாணிக்கம் நினைச்சு இருப்பான். நான் அதுக்குப் பதிலா வேற ஒரு திட்டம் யோசிச்சு வச்சு இருக்கேன்”.. என்று அவன் சொல்ல. 

     “நல்ல ஐடியா தான் ஹரி. ஆனா அப்படி பண்ணா எங்க மாமாவுக்கும் மாணிக்கத்துக்கும் பயங்கர கோபம் வரும். அதுலயும் எங்க அம்மா கோபத்துல நம்மளை வெட்ட வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை.”.. என்று அவள் திகிலுடன் கூற. 

         “வேற வழி இல்லை கண்ணம்மா. என்னால உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. நாம நிம்மதியா வாழ்க்கையை தொடங்கனும்னா இந்த கண்டத்தை தாண்டி தான் ஆகணும்.”.. என்றான். 

      அவனின் அந்த உறுதியான பேச்சில் பெண்ணவளின் கலக்கம் மெல்ல விலகிப் போனது. மனதை ஒரு நிலைப்படுத்தி படித்து விட்டு தூங்கச் சென்றாள். 

       மறுநாள் காலை மாணிக்கம் அவளையும் கவுசியையும் சேர்த்து தான் அழைத்து சென்றான். கிட்டத்தட்ட நான்கு காரில் அவன் அடியாட்கள் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தார்கள். கல்லூரியைச் சுற்றி காவல் போட்டு கிட்டத்தட்ட முற்றுகை இட்டுக் கொண்டார்கள். 

     கல்லூரி வாசல் வரை மூவருமாக செல்ல.. அதற்கு மேல் மாணிக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்ப்பார்த்த மாணிக்கமோ.. “நான் வர மாட்டேன். ஆனா அவள் தங்கச்சி பரீட்சை நடக்கிற இடத்துக்கு வாசல்லே உட்கார்ந்து இவளைப் பார்த்திட்டு இருப்பா”.. என்றான் மிரட்டலாக. 

          “வேண்டாம் முடியாது”.. என்று சொல்ல தான் நினைத்தார் அந்த நிர்வாகி. ஆனால் அவன் இடுப்பில் செருகி இருந்த பெரிய கத்தி அச்சுறுத்த.. அதுவும் ஆளும் கட்சியின் சால்வை போட்டுக் கொண்டு திமிராக பேசுபவனிடம் எதுக்கு வம்பு என்று “சரி இந்த சின்ன பொண்ணு மட்டும் போகட்டும்”.. என்று அனுமதி கொடுத்தார். 

    அகல்யாவும் கவுசல்யாவும் உள்ளே செல்ல போக..“நில்லுங்க!!.. ஏ புள்ள கவுசல்யா.. உன்னை நம்பி தான் உன் அக்காவை அனுப்புறேன். உங்க அக்கா மட்டும் என் கண்ணுல மண்ணைத் தூவிட்டு அவன் கூட ஓடினா.. அப்புறம் நான் உன் கழுத்துல தாலி கட்ட வேண்டி இருக்கும். ஜாக்கிரதை!”.. என்று மாணிக்கம் சொல்ல.. 

       இரு பெண்களுக்கும் அதிர்ச்சியில் நாக்கு வரண்டு போனது. “இல்ல மாமா.. பரிட்சை எழுதிட்டு நான் நேரா இங்க வந்துடுவேன்”.. என்று அழுத்தமாகச் சொன்னாள் அகல்யா. 

          “ம்ம்.. சரி போங்க”.. என்று அவன் சொல்ல.. இருவரும் கல்லூரி வளாகத்துக்குள் நடக்கத் துவங்கினர். 

    “அக்கா.. என்னை கைவிட்றாத!!”.. என்று கவுசி கண்களில் நீர் வழிய அகல்யா கரத்தை பற்றி இருந்தாள். 

        “என்னைப் பத்தி என்ன நினைச்ச கவுசி!!.. உன்னை இந்த அரக்கன் கிட்ட காவு கொடுத்திட்டு நான் மட்டும் ஹரியோட சந்தோஷமா வாழ்வேன் என்று நினைச்சியா. “.. என்று அவள் விழிகளிலும் நீர் கோர்த்துக் கொள்ள.. 

     “எனக்கு தெரியும்கா.”.. என்று விழிகளில் நீரை துடைத்துக் கொண்டவள்.. “சரி.. நீ எதையும் யோசிக்காம நல்ல படியா பரிட்சை எழுதிட்டு வா”.. என்று கவுசி சொல்ல.. 

         “ சரி டீ !!. உன்னால தான் அம்மா என்னை பரிட்சை எழுதவே சம்மதிச்சு அனுப்புச்சு. உன்னை எப்பவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்”.. என்று பரிட்சை ஹாலுக்குள் சென்று இருந்தாள் அகல்யா. 

       அவள் மனதுக்குள் ஹரி யோசித்தது எவ்வளவு சரி என்று இப்போது புரிந்தது. அவள் நல்ல படியாகவே பரிட்சை எழுதி முடித்து வந்து இருந்தாள். 

      அவர்கள் ஊர் வந்து சேரும் வரை வேட்டை நாய் போல நாலா புறமும் தன் பார்வையை சுழட்டிப் பார்த்துக் கொண்டு வந்தான் மாணிக்கம். 

       காரில் பின் சீட்டில் இரு பெண்களும் எந்த கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டு வர.. அதுவும் எரிச்சலை கொடுத்தது. இதுக என்ன திட்டம் போட்டு இருக்குதுக என்று தெரியலையே . என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டான் மாணிக்கம். 

        இப்படியே ஒரு வாரம் செல்ல அகல்யா இப்போது எல்லாம் சாதரணமாக இருக்கத் துவங்கி இருந்தாள். கவுசல்யா தன் படிப்பைத் தொடர அவள் படித்துக் கொண்டு இருந்த கோவை கல்லூரியின் ஹாஸ்டலுக்கு சென்று இருந்தாள். அவள் தந்தை வழக்கம் போல வேலைக்குச் சென்று இருந்தார். வீரலட்சுமி தான் இன்னமும் அவள் மாற்றத்தை நம்ப முடியாமல் தன் விடுப்பை தொடர்ந்து கொண்டு காவலுக்கு வீட்டிலேயே இருந்தாள். 

       டி.வி பார்ப்பது,சத்தமாக பாட்டு கேட்டு ரசிப்பது. ஏதாவது காமெடியை போட்டு ரசித்து சிரிப்பது என்று அகல்யா உற்சாகமாக வலம் வந்து கொண்டு இருந்தாள். அவளை விசித்திரமாக பார்த்த வீரலட்சுமி.. மறுநாளே தன் தந்தையையும் அண்ணனையும் பரிசம் போட அழைத்தாள். அவர்கள் தட்டு வரிசையோடு பெண் பேச வர.. அகல்யா அலட்டிக் கொள்ளாமல் எழிலாக புடவை அணிந்து சிரித்த முகத்துடன் வந்து நின்று இருந்தாள். 

         அனைவரும் கூடி இருந்ததால் மாணிக்கம் அகல்யாவிடம் இருந்து தள்ளியே நின்று கொண்டான். ஆனாலும் அவன் பார்வை எரிச்சலைக் கொடுக்கத் தான் செய்தது. ஆனால் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் மலர்ந்த முகத்துடன் நின்று இருந்தாள். 

               “என்னத்தா.. வர்ற ஐப்பசி பத்து நல்ல நாளாக இருக்கு. அன்னைக்கு கல்யாணத்தை வச்சிடலாமா..”.. என்று வீரலட்சுமியின் அண்ணன் வேல்முருகன் கேட்க. 

    “எதுக்கு அண்ணே இத்தனை நாள் செண்டு வக்கிற. ஐப்பசி முத தேதியே நல்ல முகூர்த்த நாளாய் இருக்கே”.. என்றார் வீரலட்சுமி. அவருக்கு பயம்.!! எத்தனை நாட்கள் தான் மகளை ஓடிப் போகாமல் காவல் காக்க முடியும்? 

           “அவசரப்படாத லட்சுமி. அன்னைக்கு ஒரு முக்கியமான ஜோலி இருக்கு. நம்ம ஊருக்கு மந்திரி வர்ரார். நம்ம ஊர் கோவிலில் சாமி கும்பிட்டு அம்பது ஜோடிக்கு இலவசமா தாலி கொடுத்து கல்யாணம் பண்ணி வைக்கப் போறார். எனக்கும் அய்யனுக்கும் ஏகப்பட்ட வேலை இருக்கு.”.     

          “அண்ணே .. என்ன அண்ணே . இப்ப இருக்க நிலைமையில் நம்ம பிள்ளை கல்யாணம் தான முக்கியம்”. என்று வீரலட்சுமி சொல்ல.. 

      அதுவரை அமைதியாக இருந்த அவள் தந்தை.. “வேல்முருகன் சொன்னா ஒரு அர்த்தம் இருக்கும் தாயி. எங்களுக்கு இது ஒரு முக்கியமான மீட்டிங். நாங்க இதை சிறப்பா செஞ்சா தான் உன் அண்ணனுக்கு எம்.எல் ஏ சீட் கிடைக்கும். இதை முடிச்சதும் கல்யாண வேலையை சிறப்பா செஞ்சிடலாம். 

        நீயும் உன் அண்ணியும் நாளைக்கே கூட டவுனுக்கு போய் ட்ரஸ், நகை எடுக்கிற வேலை எல்லாம் ஆரம்பிச்சிடுங்க. “.. என்று அவள் தந்தையே உறுதியாக சொல்ல.. அதற்கு மேல் எப்படி அவளால் மறுத்து பேச முடியும்? 

       அகல்யா முகம் அப்சஸன் பட நாயகி போல வெளியில் சிரித்த படி இருந்தாலும்.. உள்ளுக்குள் எப்படி இவர்களிடம் இருந்து தப்பிக்கப் போகிறோம் என்று பூகம்பமாய் வெடித்துக் கொண்டு இருந்தது. 

தொடரும். 

   இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!