Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iravin Panithuli

அத்தியாயம் 1.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 1

ஒவ்வொரு இரவிலும்

மீதமிருக்கும் பனித்துளியின்

மொத்த உருவம் என்னவள்!!!



Advertisement

 

காதலனைக் கண்டதும் எப்படி காதலி முகம் சிவப்பாளோ அது போல உருமாறுகிறது சிவந்த வானம். பகலவன் புறப்பட தயாராகிறான்.

 

Advertisement

இதமான தென்றல் வந்து தழுவியதும் நாணம் கொண்டு மலர்கிறது புது மலர்கள். புதிதாக மலர்ந்த அத்தனை மலர்களும் காலை வேளையை சிறப்படையச் செய்கிறது. விடிவதற்கு முன்னமே பறவைகள் இறை தேடி தங்களின் கூட்டை விட்டு பறந்து செல்கின்றன.

Advertisement

 

அவ்வளவு அழகான காலைப் பொழுதில் எந்த நிதானமும் இல்லாமல் சென்னை நகரம் சிறப்பாக செயல் பட ஆரம்பிக்கிறது. சென்னையில் எங்கு நிதானம் இருக்கிறது? எப்போதும் அங்கே ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்குமே? சென்னை என்பது மக்களின் வேடந்தாங்கல் போல?

 

Advertisement

எப்படி இளைப்பாற பறவைகள் வேடந்தாங்கல் வருகிறதோ அது போல பிழைக்க பல ஊரில் இருந்து மக்கள் குடியேறும் இடம் தான் சென்னை.

 

விடிந்தது கூட தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் காயத்ரி. அவள் பக்கத்தில் அவளது தங்கை சௌமியா. அவளும் நன்கு தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

 

“ஏய் காயு எந்திரி டி, மணி என்ன ஆச்சுன்னு பாத்தியா? இத்தனை நாள் மாதிரி இன்னைக்கும் தூங்கிட்டு இருக்க? இன்னைக்கு காலேஜ் திறக்குறது நினைவு இருக்கா இல்லையா? முதல் நாளே லேட்டா போக போறியா? ஏய் சின்னக் குட்டி உனக்கும் ஸ்கூல்க்கு நேரமாகுது பார்? நைட் ரெண்டு மணி வரைக்கும் அக்காவும் தங்கையும் அரட்டை அடிக்க வேண்டியது. காலைல சூரியன் முகத்துல அடிக்கிறது கூட தெரியாம தூங்க வேண்டியது. ஏண்டி இப்படி பண்ணுறீங்க?”, என்று குரல் கொடுத்துக் கொண்டே சட்னியை தாளித்து கொட்டினாள் கலாவதி.

 

அந்த இல்லத்தின் அரசி கலாவதி தான். தன்னுடைய கணவர், தன்னுடைய மக்கள் என்று அழகான கூட்டுக்குள் வாழும் பறவை.

 

“என்ன டி காலைலே உன் சத்தம் வெளிய கேக்குது? தெருவுல போறவன் எல்லாம் நின்னு கேட்டுட்டு போறான்? எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க?”, என்று கேட்ட படி உள்ளே வந்தார் கலாவதியின் கணவர் முருகேசன்.

 

முருகேசன் கலாவதி தம்பதியருக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் காயத்ரி, இப்போது தான் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு காலேஜில் அடி எடுத்து வைக்கப் போகிறாள். அவளுக்கு அடுத்து சௌமியா. பதினொன்றாம் வகுப்பு படிக்கிறாள்.

 

முருகேசன் டிரான்ஸ்போர்ட் ஆபீஸில் வேலை செய்கிறார். காலாவதி குடும்பத் தலைவி. இருவரும் படிக்கும் போதே கலப்பு திருமணம் செய்ததால் இரு பக்க உறவுகளும் அவர்களை இன்று வரை ஏற்றுக் கொள்ள வில்லை.

 

பெற்றோருக்கு இரண்டு மகள்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.

இரண்டு பிள்ளைகளுக்கும் தங்களின் பெற்றோர்களை தவிர்த்து வேறு உலகம் கிடையாது. தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று எந்த உறவுகளையும் தெரியாமல் வளர்ந்தவர்கள். முருகேசன் எப்போதுமே இருவருக்கும் செல்லம் அதிகமாக கொடுப்பார். கலாவதி தான் அப்ப அப்ப அவர்கள் தலையில் குட்டி அவர்கள் கொட்டத்தை அடக்குவாள். காயத்ரியும் சௌமியாவும் நெருக்கமான தோழிகள் போல தான்.

 

எப்போதுமே இருவரும் அக்கா தங்கைகள் போல பழக மாட்டார்கள். இருவருமே பயந்த சுபாவம் கிடையாது. காயத்ரியிடம் கொஞ்சம் நிதானம் இருப்பாள் என்றால் சௌமியாவோ படபடவென்று வெடிக்கும் அழகான பட்டாசு.

 

மொத்தத்தில் வேளச்சேரியில் இருக்கும் இவர்கள் வீடு அழகான குருவிக் கூடு. இரண்டு அறை, ஒரு ஹால், கிட்சன், சாமிரூம், மொட்டைமாடி கொண்ட வீடு தான் இவர்களுடையது. வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் உள்ளதால் வீட்டை சுற்றி இருக்கும் இடத்தில் சில மரங்கள் மற்றும் செடிகளை வைத்திருந்தாள் கலாவதி.

 

சமையலுக்கு தேவையான கருவேப்பிலை, மல்லியிலை, புதினா, தக்காளி, கத்திரிக்காய் போன்றவைகளும் எழுமிச்சை, கொய்யா, முருங்கை போன்ற மரங்களும் அந்த வீட்டுக்கு தனி அழகைக் கொடுத்தது.

 

அந்த அந்த சீசனில் பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவைகளையும் நட்டு வைத்து விடுவாள்.

 

அன்று தான் காயத்ரி முதல் முதலாக காலேஜ் செல்லவிருக்கிறாள். ஆனால் அவளோ இன்னும் எழுந்து கொள்ளவே இல்லை.

 

“பெருசா என்னோட சத்தம் கேக்குதுன்னு சொன்னீங்களே? நீங்க அப்படியே தாலாட்டு பாடி உங்க பொண்ணுங்களை எழுப்புங்க. முதல் நாளே லேட்டா போனா நல்லாவா இருக்கும்? அப்ப இருந்து கத்திக்கிட்டு இருக்கேன்? ரெண்டு பேரும் இன்னும் எழுந்த பாடில்லை. கடைசில என்னமோ நான் தான் எல்லாம் லேட்டா செஞ்ச மாதிரி என்கிட்ட முகத்தை தூக்குவாங்க”, என்று கணவரையும் ஒரு கடி கடித்தாள் கலாவதி.

 

“சரி சரி, நான் எழுப்புறேன். பாப்பாவை நான் காலேஜ்க்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னேன் தானே? அதனால தான் அவ தூங்குவாளா இருக்கும். இந்த சின்னக் குட்டிக்கு தான் ஸ்கூல்க்கு நேரம் ஆச்சு”, என்று சொல்லிக் கொண்டே அவர்களை எழுப்பச் சென்றார்.

 

“எல்லாம் நீங்க கொடுக்குற இடம் தான். எப்பவுமே செல்லம் கொடுத்துட்டு இருந்தா எப்படி?”, என்ற புலம்பலோடு மூவருக்கும் தனி தனி பாத்திரத்தில் மதிய சாப்பாடை அடைத்து வைத்தாள்.

அறைக்கு சென்ற முருகேசனுக்கோ சிறு குழந்தை போல் தூங்கும் அந்த மலர்களை எழுப்ப மனதில்லை. திடீரென்று இருவரும் மிகவும் வளர்ந்து விட்டது போல அவருக்கு தோன்றியது.

 

“சௌமி குட்டி எந்திரிடாம்மா. ஸ்கூல் வந்துரும் குட்டிம்மா. பாப்பா நீயும் காலேஜ் கிளம்பணும். எந்திரிங்க டா. டைம் ஆச்சு பாருங்க”, என்று எழுப்பினார்.

 

தந்தையின் பாசமான எழுப்புதலில் இரண்டு மக்களும் எழுந்து கொண்டார்கள். ஆளுக்கு ஒரு பக்கம் அவரைக் கட்டிக் கொண்டு குதூகளித்தார்கள். அதன் பின் இருவரையும் கிளம்பச் சொல்லி விட்டு அவர் ஆபீஸ் கிளம்பச் சென்றார்.

 

அக்கா தங்கை இருவரும் கிளம்ப ஆரம்பிக்க அங்கே அழகான செல்ல சண்டைகள் அரங்கேறியது. குளிக்க சண்டை, கிளம்ப

சண்டை என்று ஆரம்பித்து சிறிது நேரத்தில் வீடே போர்க்களமாக இருந்தது. தன்னுடைய வேலையை முடித்து விட்டு வந்த கலாவதிக்கு அவர்களின் அக்கப்போர் ரசிக்கத் தோன்றினாலும் அதை வெளியே காட்டாமல் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு அவர்களை கிளம்ப வைத்தாள்.

 

சௌமிக்கு தலை சீவி விட்டு மூவருக்கும் காலை உணவைப் பரிமாறினாள். ஸ்கூல் பஸ் வந்ததும் சௌமியா கிளம்பி விட்டாள்.

அதன் பிறகு காலேஜில் எப்படி கவனமாக இருக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று தன்னுடைய மூத்த மகளுக்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்தாள்.

 

காயத்ரிக்கு அன்னையின் அறிவுரையில் ரத்தம் வராத குறை தான். பின் கலாவதியிடம் சொல்லி விட்டு முருகேசனும் காயத்ரியும் கிளம்பினார்கள். அனைவரும் சென்ற பிறகு தான் “அப்பாடா”, என்று அமர்ந்தாள் கலாவதி.

 

காலையில் இருந்து அனைவரையும் கிளம்ப வைப்பதற்குள் மூச்சு திணறிப் போனாலும் அவளுக்கு மனதுக்கு இதமாகவே இருந்தது. பல இல்லத்தரசிகளின் நிலை இது தானே? பிள்ளைகளுக்கு செய்யும் போதே மதிய சமையலும் முடிந்து விட்டதால் டி‌வி பார்க்க அமர்ந்து விட்டாள்.

 

——-

 

“அம்மா, இன்னும் சாப்பாடு கட்டலையா? நேரம் ஆச்சு? ஏன் தான் இப்படி சோம்பேறியா இருக்கியோ? நேத்தே படிச்சு படிச்சு சொன்னேன்ல காலேஜ் போகணும்னு?”, என்று கத்திக் கொண்டிருந்தான் தீபக்.

 

“அடங்குடா. நீ மட்டும் ஏண்டா இப்படி இருக்க? அவன் அவன் காலேஜ் எப்படா கட் அடிக்கணும்னு பிளான் பண்ணுறாங்க? நீ என்னடான்னா இந்த குதி குதிக்கிற? ஏண்டா இப்படி சரியான படிப்ஸா இருக்க?”, என்று தன்னுடைய தம்பியை வாரிக் கொண்டிருந்தாள் அவனுடைய அக்கா ரேவதி.

 

திருப்பி அவளை எதையோ சொல்லப் போனவனின் கண்களில் அவளுடைய மேடிட்டிருந்த வயிறு பட்டதும் அவன் முகத்தில் இதம் பரவியது.

 

தன்னுடைய அக்காவை பாசமாக பார்த்தான் தீபக். ரேவதி திருமணத்திற்கு முன்பானால் “அடங்கு டி”, என்று சொல்லி அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்திருப்பான்.

 

ஆனால் இப்போது அப்படிச் செய்யத் தோன்றாமல் அவளைப் பார்த்து சிரித்தவன் “வர வர உனக்கு வாய் கூடிப் போயிருச்சுக்கா. எல்லாம் அத்தான் கொடுக்குற செல்லம் தான். என் மருமகன் வெளிய வரட்டும். அப்புறம் பாரு. உனக்கு இருக்கு”, என்று அன்பாக மிரட்டினான்.

 

“ஆமா ஆமா நீயே ஒரு டம்மி பீஸ். இதுல உன் மருமகனை வச்சு நீ என்னை மிரட்டப் போறியா? ரெண்டு பேரையும் அடி பின்னிருவேன். இல்லைன்னா என் மகனே உன்னை அடக்கிருவான் டா”, என்று ரேவதி சொல்ல “இவன் என்னைக்கு அடங்குறது? அந்த நாள் வருமா என்ன? ஸ்கூல் படிக்கும் போதே அந்த வருத்து வந்தான். இப்ப சார் காலேஜ் வேற? அடங்கி இருப்பானா? இந்தா டா டிபன் பாக்ஸ். இன்னைக்கு வெரைட்டி ரைஸ் தான் வச்சிருக்கேன்”, என்று சொல்லி அவன் கையில் கொடுத்தாள் மீனாட்சி.

 

தீபக் தன்னுடைய தாயை முறைத்து பார்க்கும் போது “கிளம்பிட்டியா டா? போகலாமா?”, என்று கேட்ட படி வந்தார் ராகவன்.

 

“அப்பா நீ எங்க வர? நான் என்ன சின்ன பையனா? எனக்கு தனியா போக தெரியாதா? அதெல்லாம் நான் போய்க்குவேன். நீ உன்னோட வேலைக்கு போ”, என்றான் தீபக்.

 

“நீ சின்ன லொல்லை இல்லைன்னு எல்லாருக்கும் தெரியும். இன்னைக்கு ஒரு நாள் நான் விடுறேன். சாயங்காலம் காலேஜ் பஸ்ல ஏறி வந்துரு. கிளம்பு கிளம்பு”, என்று சொல்லி விட்டு வண்டியை எடுக்க சென்றார்.

 

“இவர் பொறுப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையே?”, என்று முணங்கிய தீபக் “வரேன் மா, போயிட்டு வரேன்க்கா”, என்று தன்னுடைய அம்மா மற்றும் அக்காவிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான்.

 

ராகவன் பேங்க் மேனேஜராக பணிபுரிகிறார். அவருடைய மனைவி மீனாட்சி பக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறாள்.

 

இவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவள் ரேவதி, அவளுக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. அவளுடைய கணவர் பெயர் ரத்னவேல். ரத்னவேல் ஒரு ஆட்டோமொபைல் இஞ்சீனியர். ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறான்.

 

ரேவதிக்கு இப்போது ஒன்பதாவது மாதம் என்பதால் வளைக்காப்பு போட்டு கூட்டி வந்து விட்டார்கள்.

 

ரேவதிக்கு அடுத்து பிறந்தவன் தான் தீபக். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு இன்று தான் காலேஜில் சேரப் போகிறான். எப்போதும் படிப்பு படிப்பு என்று இருக்கும் சரியான புத்தகப் புழு. நன்கு படிக்கிற பிள்ளைகள் எப்போதும் அமைதியாக இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருப்போம். ஆனால் தீபக்கோ எந்த அளவுக்கு நன்கு படிப்பானோ அந்த அளவுக்கு சரியான வாயாடி.

 

அவனைப் பார்த்து மீனாட்சி எப்போதும் சொல்லும் வாசம் “வாய் இல்லைன்னா உன்னை நாய் கூட மதிக்காது டா”, என்பது தான்.

 

இவர்கள் குடும்பமும் சென்னை வாசிகள் தான். இவர்கள் வீடு நங்கநல்லூரில் இருக்கிறது.

 

—–

 

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற பொறியியல் கல்லூரி…. இன்று தான் முதல் வருட மாணவர்களுக்கான வகுப்பு ஆரம்பிக்கிறது. அதனால் எங்கும் மாணவர்கள் கூட்டம் கண்ணை நிறைத்தது.

 

பல ஏக்கரில், அடர்ந்த மரங்களுக்கு இடையில் அழகாக வீற்றிருந்தது இந்த இடம். அங்கே இருக்கும் மரங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் எங்கும் பசுமையாக இருந்தது.

 

முதலாம் ஆண்டு மாணவர்கள் என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் மிரட்சியுடனும் ஒவ்வொருவராக உள்ளே அடி எடுத்து வைத்தனர்.

 

இது வரை இருந்த பள்ளி பருவம் அவர்கள் மனதில் உற்சாகத்தை மட்டுமே கொண்டு வந்து கொண்டிருந்தது. ஆனால் இனியோ அவர்கள் வாழ்வின் அடுத்த கட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!