Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iravin Panithuli

அத்தியாயம் 1.2 : இரவின் பனித்துளி!!!

இது வரை பள்ளியில் இருந்த கட்டுப்பாடுகள் எல்லாம் காலேஜில் இருக்காது. மொத்தமாக கட்டுபாடுகள் இல்லை என்று சொல்ல முடியாது. தளர்வுகள் அதிகம் உண்டு.

 

இது வரை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கூண்டு கிளிகளாக இருந்தவர்கள் இனி சிறகடித்துப் பறக்கும் சுதந்திரத்தைக் பெற்றிருந்தார்கள்.

 



Advertisement

இது வரை வெகுளிகளாகச் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் கூட காலேஜ் வந்ததும் வேங்கையாக மாறும் நிகழ்வுகளும் நடக்கும். அவர்களுக்கு வால் முளைத்தால் கூட ஆச்சர்யம் கிடையாது.

 

அவர்களின் எதிர்கால வாழ்க்கை எந்த திசையில் செல்லப் போகிறது என்பதை முடிவெடுக்கும் இடமும் காலேஜ் தான்.

Advertisement

 

Advertisement

அது போக புது புது உறவுகள், நட்பு, காதல் என்று மலர்வதும் இங்கே தான். பலரின் வாலிபக் கனவுகள் உருவாவதும் இங்கே தான்.

 

முருகேசன் வண்டியை அண்ணா யூனிவர்சிட்டி முன்பு நிறுத்தியதும் கீழே இறங்கினாள் காயத்ரி. “நான் உள்ள வரவா பாப்பா? இல்லை நீ போயிருவியா?”, என்று கேட்டார் முருகேசன்.

Advertisement

 

“நான் போய்ருவேன் பா. அன்னைக்கே வந்து பாத்தோம் தானே? நீங்க கிளம்புங்க”, என்று சொல்லி மகள் புன்னகைத்ததும் பல பத்திரங்களைச் சொல்லி விட்டு அங்கே இருந்து கிளம்பினார் முருகேசன்.

 

பிரம்மாண்டமாக இருந்த அந்த கேட்டினுள் நுழைந்தாள் காயத்ரி. பயத்துடன் அடி எடுத்து வைத்தவள் அங்கிருந்த இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்த படியே முன்னேறினாள்.

 

அங்கிருந்த மரங்கள் அடர்ந்த சூழ்நிலை ஒரே நேரத்தில் இதத்தையும் பயத்தையும் கொடுத்தது.

 

கட்டிடம் கண்ணுக்கு தெரியும் இடம் வந்ததும் எந்த பக்கம் போக என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க “ஏய் பொண்ணு இங்க வா”, என்ற குரல் அவளை அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் நிறுத்தியது.

 

குரல் வந்த பக்கம் திரும்பி பார்த்தாள். ஐந்தாறு மாணவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தனர்.

 

தன்னைத் தான் அழைக்கிறார்கள் என்று உறுதியாக தெரிந்தாலும்  ஒரு வேளை வேற யாரையாவது கூப்பிடுறாங்களோ என்று எண்ணி திரும்பி பார்த்தாள்.

 

“ஹலோ, வேற யாரையும் இல்லை. உன்னைத் தான் கூப்பிடுறோம். இங்க வா”, என்று மீண்டும் அங்கிருந்து குரல் கேட்டது. அங்கிருந்த ஆறு பேரில் யார் பேசியது என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

 

பயத்துடன் அவர்களை நோக்கி அடி எடுத்து வைத்தாள். “பயப்படாத டி, அவங்க ரேகிங்க் பண்ணுறாங்கன்னு நினைக்காத. இப்படி பேசுறவங்க தான் நாளைக்கு என்ன உதவினாலும் செய்வாங்க”, என்று சொன்ன தன்னுடைய தங்கை சௌமியா குரலை நினைவில் கொண்டு வந்தாள்.

 

அதனால் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர்கள் அருகில் சென்று நின்றாள். என்ன தான் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் ஒரு பயப் பந்து உருளத் தான் செய்தது.

 

“கூப்பிட்ட உடனே வரத் தெரியாதா? என்ன ஆடி அசைஞ்சு வர? என்ன உனக்கு பைல்ஸ் பிராப்லமா?”, என்று கேட்டான் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன். அவன் கேள்வியில் முகம் சுளித்து அவனைப் பார்த்தாள் காயத்ரி.,

 

சாதாரணமாக அவர்கள் பேசியிருந்தால் அவளும் நட்புடன் கை குலுக்கியிருப்பாள். பார்த்த முதல் நாளே ஒரு பெண்ணிடம் இண்டீசண்டாக அவன் பேசியதும் அவனை முறைத்து பார்த்தாள்.

 

“டேய் மச்சான் அந்த பொண்ணு உன்னை முறைக்குது டா”, என்று மற்றொருவன் சொல்ல முதலில் பேசியவனோ “ஏய் என்ன முறைக்கிற?”, என்று அவளிடம் எகிறினான்.

 

“நான் முறைக்க எல்லாம் செய்யலை. ஒரு சின்ன குழப்பம். அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்”, என்று நிமிர்வாகவே பதில் சொன்னாள் காயத்ரி.

 

“என்னது உனக்கு குழப்பமா? என்ன குழப்பம்?”

 

“உங்க ஊர்ல பைல்ஸ் வந்தா இப்படித் தான் நடப்பாங்களோ?

உங்களுக்கும் பைல்ஸ் வந்த அனுபவம் இருக்கு போல? அதான் இப்படி கேக்குறீங்களா?”, என்று அவனை நக்கலாக கேட்டாள் காயத்ரி.

 

அவன் பதிலுக்கு கோபமாக ஏதோ சொல்ல வரவும் “இருங்க நான் பேசிறேன். நான் இது வரை பைல்ஸ் வந்தவங்களை பாத்ததே இல்லை. கொஞ்சம் நடந்து காட்டுறீங்களா?”, என்று இன்னும் நக்கலாக கேட்டாள்.

 

அனைவரும் அவளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளிடம் கேள்வி கேட்டவனோ கோபத்தில் பொங்கி விட்டான்.

 

“ஏய் என்ன திமிரா? சீனியர் கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது? கொஞ்சமும் மரியாதை இல்லாம பேசுற? பர்ஸ்ட் இயர் தானே நீ? எங்களை பகைச்சிக்கிட்ட அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா?”, என்று அவன் மிரட்ட அவன் நண்பர்கள் அவனை சமாதானப் படுத்த ஆரம்பித்தார்கள். காயத்ரியோ அவர்களை கெத்தாக பார்த்த படி நின்றாள். அதுவும் அவனை முறைத்த படியே நின்றாள். இம்மியும் அவள் முகத்தில் பயம் இல்லை.

 

அப்போது “இங்க என்ன பிரச்சனை?”, என்ற புது குரல் கேட்டது. அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அங்கே நின்றான் தீபக். அனைவரும் அவனை ஆராய்ச்சியாக பார்க்க நிதானமாக காயத்ரி அருகில் வந்து நின்றான்.

 

“டேய் நீ யாரு டா?”, என்று கேட்டான் சீனியர்களில் ஒருவன்.

 

“என்னோட பேர் தீபக். இங்க தான் பர்ஸ்ட் இயர் சேந்துருக்கேன்”

 

“டேய் என்னங்க டா நடக்குது? இந்த வருச ஜூனியர் எல்லாம் ஒரு மார்கமா இருக்காங்க? இந்த பொண்ணு அப்படி பேசுது. இவன் இவ்வளவு தெனாவெட்டா இவனே வந்து பேசுறான்? உன்னை யாரும் பஞ்சாயத்துக்கு கூப்பிட்டாங்களா? நீயா வந்த? நீயா என்ன பிரச்சனைன்னு கேக்குற?”, என்று கேட்டான் ஒருவன்.

 

“ஹலோ சார், இங்க நடக்குறது பஞ்சாத்தும் இல்லை. நீங்க நாட்டாமைகளும் இல்லை. ஏன்னா இங்க ஆலமரமும் இல்லை. உங்க பக்கத்துல செம்பும் இல்லை”, என்று தீபக் சொல்ல காயத்ரி வாயை மூடி சிரித்தாள். அவளுக்கும் அவன் யார் என்று தெரியவில்லை. ஆனாலும் தன்னைக் காப்பாற்ற தான் வந்திருக்கிறான் என்று புரிந்தது. கூடவே தன்னைப் போல நக்கலாக பேசும் அவனை விழி விரித்துப் பார்த்தாள்.

 

“டேய், ஒழுங்கா போயிரு. இல்லை எங்க கிட்ட அடி வாங்கிட்டு தான் போவ பாத்துக்கோ?”, என்று மிரட்டினான் ஒருவன்.

 

“அடிப்பிங்களோ? சட்டம் தெரியுமா தெரியாதா? ரேக்கிங்க் தடை செய்யப் பட்டிருக்கு. இதுல என் மேல கையை வச்சீங்க அப்புறம் நான் வேற மாதிரி முடிவு எடுக்க வேண்டியிருக்கும்”

 

“டேய் நாங்க எங்க டா ரேகிங்க் பண்ணுனோம்? பேர் கேக்க தான் டா கூப்பிட்டோம். அதுக்குள்ள சட்டம் ரூல்ஸ்ன்னு பேசுற? எப்பா சாமி, நாங்க எதுவும் கேக்கலை. நீங்க போங்க சார்”, என்றான் ஒருவன்.

 

“அது…. அந்த பயம் இருக்கட்டும்”, என்று அவர்களிடம் சொன்ன தீபக் காயத்ரியைப் பாத்து “வா கிளாஸ்க்கு போகலாம்”, என்று அழைத்தான்.

 

“அவளை எங்க டா கூப்பிடுற? அவ பேரைக் கூட கேக்கலை. அவ இங்க தான் இருப்பா. நீ மட்டும் போ”

 

“அவளை கூப்பிட தான் நான் இங்கயே வந்தேன்”

 

“அவ யாரு டா உனக்கு? ஹீரோ கெத்துக் காட்ட வந்தியா? ஒரு வேளை பாத்த உடனே…அவ மேல லவ்….?”, என்று சீனியர்களில் ஒருவன் கேட்டான்.

 

“ஹலோ ஹலோ சீனியர் சார். கொஞ்சம் அடங்குங்க. நாங்க ஒண்ணும் முதல் தடவையா இப்ப பாக்கலை. சின்ன வயசுல இருந்து நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துட்டு தான் இருக்கோம். என்னோட அத்தை பொண்ணு தான் இவ”, என்று தீபக் சொன்னதும் அனைவரும் வியப்பாக பார்த்தார்கள்.

 

காயத்ரியோ அதிர்ச்சியில் பெப்பே என்று அவனை திரும்பி பார்த்தாள். அவளுக்கு அவன் யாரென்றே தெரியாது. அவனை அவள் பார்த்த நினைவும் இல்லை. அப்படி இருக்க அவன் அப்படிச் சொன்னால் அதிர்ச்சி வரதா?

 

அவள் பார்வையைக் கண்ட தீபக் “இந்த முட்டைக் கண்ணி இப்படி பாத்து நான் சொன்னது பொய்ன்னு காட்டி கொடுத்துருவா போல?”, என்று எண்ணி அவளிடம் கண்ணைக் காட்டினான்.

 

அதில் தெளிந்தவள் தன்னுடைய முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டாள்.

 

“பொய் சொல்லாத டா. நீயே இப்ப தான் அந்த பொண்ணை பாக்குற. அவளைக் காப்பாத்த பொய் சொல்றியா?”, என்று கேட்டான் ஒருவன்.

 

“நான் ஏன் பொய் சொல்லணும்?”

 

“பொய் இல்லைன்னா அவ பேரைச் சொல்லு பாப்போம்”

 

“அவ பேர் காயத்ரி. வீட்டு அட்ரெஸ் எதுவும் வேணுமா?”, என்று தெனாவெட்டாக தீபக் கேட்க மீண்டும் அவளுக்கு அதிர்ச்சி தான்.

 

“ஏய் உன் பேர் காயத்ரியா?”, என்று ஒருவன் கேட்க இன்னொருவனோ “மச்சி, அவ பேகை வாங்கி பாரு டா. அவளும் பொய் சொன்னாலும் சொல்வா”, என்றான்.

 

“ஏய் பொண்ணு, உன்னோட பேகைக் கொடு”, என்று கேட்டு அவள் பேகைப் பிடுங்கி அதில் இருந்த ஒரு நோட்டை திறந்து பார்த்தான்.

 

அதில் இருந்த ஒரு புது நோட்டில் காயத்ரி என்று அவள் பெயர் இருக்கவும் அவன் சொன்னது உண்மை தான் என்று நினைத்தார்கள்.

 

“சரி சரி ரெண்டு பேரும் கிளம்புங்க”, என்று சொல்லி அவர்களை போகச் சொன்னான் ஒருவன்.

 

“இவனுக்கு எப்படி என் பேர் தெரியும்?”, என்ற யோசனையோடு அவனுடன் நடந்தாள் காயத்ரி.

 

அவள் எதுவோ கேக்க வரவும் “நீ, முன்னாடி போ. நான் வரேன்”, என்று சொல்லி விட்டு அவன் காலேஜ் பஸ் பத்தி கேட்க ஆபீஸ் ரூம் பக்கம் சென்று விட்டான்.

 

அவனைப் பற்றியே குழப்பத்திலே தன்னுடைய கிளாசை விசாரித்து வகுப்பறைக்குள் சென்றவள் ஒரு மாணவியில் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

 

அனைவரும் அவரவர் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது தீபக் அந்த கிளாசுக்குள் நுழைந்தான்.

 

“இவனும் நம்ம கிளாஸ் தானா?”, என்று எண்ணி அவளைப் பார்த்தாள் காயத்ரி. ஆனால் அவனோ அவள் பக்கம் திரும்பவே இல்லை. அன்றைய நாள் அறிமுகம், திறமை வெளிப்படுத்துதல் என்று கழிய அவனிடம் பேசும் சந்தர்பம் அவளுக்கு கிடைக்கவே இல்லை. அவன் பேர், ஊர் மட்டும் தெரிந்து கொண்டாள்.

 

கிளாஸ் முடிந்ததும் அவனிடம் கேட்கலாம் என்று அவள் எண்ணியிருக்க அன்றைய நாள் முழுவதும் அவன் அவளை திரும்பி கூட பார்க்க வில்லை. “எண்ண இவன் கண்டுக்காம இருக்கான்? அப்ப நம்ம மட்டும் எதுக்கு அவன் கிட்ட பேசணும்?”, என்று எண்ணி அவனிடம் பேசும் எண்ணத்தை விட்டுவிட்டாள்.

 

சராசரி வகுப்புகள் ஆரம்பித்து நாட்கள் அழகாக நகர்ந்தன. ஒவ்வொருவருக்கும் இந்த காலேஜ் இனிமையான நினைவுகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. புதிய புத்தகம், புதிய படிப்பு, தமிழில் படித்தவர்கள் ஆங்கிலம் புரியாமல் முழிப்பது என்று வித்தியாசமான அனுபவமாக நாட்கள் நகர்ந்தது.

 

காதல் தொடரும்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!