Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Mazhaiyaagi Vaa

மின்னல் மழையாகி வா – 11

அத்தியாயம் – 11

ஜென்சி கதவை திறக்கும்முன் தானே அது திறக்கப்பட மறுபக்கம் நின்ற தேவிபிரியாவை கண்டு அவள் தயக்கமாய் பார்க்க அவளை இங்கு எதிர்பார்க்காத அவரும் புருவங்கள் முடிச்சிட யோசனையாய் பார்த்து,

“ஜென்சி இங்க..” என்று அவர் கேட்கும்போதே,

“நீங்க ஏன் வந்தீங்க..” என ஜோஷ்வாவின் வார்த்தைகள் எரிச்சலாய் வந்து விழுந்தது. அதில் மகனிடம் திரும்பிய தேவி அவன் இருந்த கோலம் கண்டு நெஞ்சம் பதற,



Advertisement

“என்னடா இப்படி அடிப்பட்டு இருக்கு..” என்று பதட்டமாய் அருகில் வந்தார்.

“என் கேள்விக்கு இது பதில் இல்ல.. நீங்க ஏன் இங்க வந்தீங்க..” என்று அப்பொழுதும் கடுகடுவென பேசியவனை கண்டு,

“ஏன் வந்தேன்னா.. நீ இந்த மாதிரி இருக்கும்போது நான் வராம வேற யாரு வருவா..! பெத்த மனசாச்சே.. உன்னை மாதிரி கல்லா இருக்க முடியுமா..” என்றபோதே அழுகை எட்டி பார்க்க,

Advertisement

“இந்த ட்ராமா போட தான் வந்தீங்களா..?? நிறையவே பார்த்தாச்சு.. ஸோ நோ யூஸ்..” என்று அலட்சியமாய் ஜோஷ் சொல்லவே ஜென்சிக்கே கோபம் வந்தது.

Advertisement

அம்மா – மகன் இடையில் பேசகூடாது என்பதால் அவள் அமைதி காத்தாலும் அவள் விழியால் அவனை முறைக்க தவறவில்லை.

“உனக்கு எல்லாமே நாடகமா தான் தெரியும்… பாசம்,வலி எல்லாம் உணர்றவனா நீ..?? உணர்ந்தால் இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருப்பியா..” என்று கலங்கி குரலில் கோபமாய் கூறியவரிடம்,

“பாசமா..?? அவ்வளவு பாசம் உள்ளவங்க.. உங்க புருஷனோட சண்டைபோட்டு அவரை மீறியா பார்க்க வந்திருக்கீங்க.. அவருக்கு தெரியாம தான வந்தீங்க.. இந்தா.. இவ்ளோ தான் உங்க ஸோ கால்ட் பாசம்..” இகழ்ச்சியாய் சொல்லிய வார்த்தைகள் அவரை சரியாய் குத்தியது.

Advertisement

உண்மை தான்…!! காலையிலே ஜோசஃப் விபரம் சொல்லியபோது உடனே அவரால் கிளம்ப முடியவில்லை. கணவருக்கு தெரிந்தால் இங்கு வர ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவர் இல்லாத சமயத்தில் யாருக்கும் தெரியாமல் ஜோசஃப்பின் துணையுடன் வந்திருந்தார்.

மகனின் மீது கொண்ட கரிசனத்தைவிட கணவனின் கோபத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்பதை அவன் சொல்லி காட்டியது கஷ்டமாய் இருந்தாலும்,

“அவர் கோபம் நியாயமானது தானே..!! நீ கொஞ்ச நஞ்சமா அவருக்கு செஞ்ச..?? கேவலம் பணத்துக்காகவும் சொத்துக்காகவும் அப்பான்னு கூட பார்க்காம அந்த மனுஷனை அசிங்கபடுத்துன.. உன்னால எவ்வளவு வேதனை பட்டு இருப்போம்.. அதெல்லாம் சீக்கிரம் மறந்திட முடியுமா..!!” என்றார் ஆற்றாமையாய்..

உணர்ச்சிகள் தொலைத்த முகத்தோடு கடினமான குரலில்,

“யாரும் எதையும் மறக்க வேண்டாம்.. நான் சுயநலவாதி தான்.. நீங்க ரொம்ப நல்லவங்க.. பாதிக்கபட்டவங்க.. என்னை நியாயமான காரணத்தோட வெறுக்குறவங்க.. ஐ டோட்டலி அக்ரி.. பட்.. அந்த நிலைல அப்படியே இருக்கணும்.. இப்ப தீடீர்னு வந்து நீங்க வைக்கிற இந்த பாசம்,பாயசம் தான் தேவையில்லைன்னு சொல்றேன்…” என்றவன் ஊசியாய் குத்திய தலைவலியில் முகம் சுளித்து,

“இப்ப இங்க இருந்து  வெளியே போறது தான் எனக்கு நீங்க செய்யிற மிக பெரிய உதவியா இருக்கும்.. ப்ளீஸ்..” என்று சொல்ல கண்களை துடைத்து கொண்டு எழுந்த தேவிப்ரியா எதுவும்  பேசாமல் வெளியே செல்ல தலையை திருப்பி கண்களை மூடியவன் விழியோரமும் கண்ணீரின் தடயம்..!!

சுவரோடு சுவராய் அத்தனையையும் பார்த்து நின்ற ஜென்சியை சில நொடிகளுக்கு பின் தான் உணர்ந்தவன்,

“நீ அப்போவே கிளம்புன… இன்னும் போகலையா…” என்றான் கரகரப்பான குரலில்…

அதற்கு பதிலே சொல்லாமல் கைகட்டி அவனை பார்த்து, “அவங்களை சொல்ற.. ஆனால் நீ தான் ஒரு நிலைல இல்ல ஜோஷ்வா… பேசுறதை பேசிட்டு இப்ப எதுக்கு இந்த கண்ணீர்..” என்று சொல்ல,

“இந்த தலைல யாரோ நின்னு குதிக்கிறா மாதிரி செம பெய்ன்.. அதுல கண் கலங்காம என்ன செய்யும்..”

என்று சாதாரணமாய் சொல்ல நினைத்தாலும் அது முடியாமல் குரலில் பிசிறு தட்டியது. அவள் அப்படியே நிற்கவும் ஜோஷ்வா தானாகவே,

“நீ என்னை ஒரு நாலு தடவை பார்த்து இருப்பியா..?? என் செயல்களுக்கு பின்னாடி ஏதோ இருக்கும்னு நீ யோசிச்ச தானே..!! என்னை பெத்தவங்களுக்கு ஏன் அது தோணல ஜென்சி.. நம்பிக்கையே இல்லைனா இந்த அக்கறை மட்டும் எதுக்கு..??” என்று சொல்லவும் அவளுக்கே என்னவோ போல் ஆனது.

அவளும் மற்றவர்கள் போல தான் அவனை எண்ணி இருந்தாள். ஆனால் தாமஸ் மூலம் அவனை பற்றியும் அந்த ஆராய்ச்சி பற்றியும் தெரிந்துக் கொண்ட பின்பு தான் அவளுக்கு வேறு கோணத்தில் யோசிக்க தோண்றியது. எனவே, 

“மே பீ.. நீ சொன்னா மாதிரி நான் வெளியே இருந்து பார்க்கிறேன்.. அதனால என்னால க்ளியரா யோசிக்க முடியுது.. அவங்க அப்படி இல்லையே.. ஸோ எமோஷ்னலா தான் பார்ப்பாங்க.. எதுவா இருந்தாலும் உன் தரப்பை நீயே சொல்லாமல் அவங்களே புரிஞ்சுக்கணும்னு ஏன் எதிர்பார்க்கிற ஜோஷ்வா..” என யோசித்து வார்த்தைகளை கோர்த்து அவள் கூற,

“நானே சொல்றதா..” என்று கேட்டு சிரித்தவன், 

“எல்லா இடத்திலும் எல்லாத்தையும் உடைச்சு பேசிட முடியாது ஜென்சி.. சரி விடு.. அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது..” என்று சொன்னது அவளை கோப்படுத்த,

“ம்ச்.. சும்மா புதிராவே பேசாத ஜோஷ்.. என்ன புரியாது..?? உன் சயிண்டிஸ்ட் மூளை அளவு யோசிக்கலனாலும் என்னோட கம்பியூட்டர் அறிவுக்கும் எல்லாம் புரியும்.. ஜெஸ்ட் ஸ்பில் இட் அவுட் மேன்..”

என்று எரிந்து விழுக அவள் கோபமாய் சொன்னதில் ‘சயிண்டிஸ்ட்..’ என்று குறிப்பிட்டதை அவன் கவனிக்கவில்லை.

மூக்கு நுனி சிவக்க ஆத்திரமாய் அவள் முறைத்து நின்ற தோரணை அவனை வெகுவாய் ஈர்க்க வலியை மீறி அவனிடம் புன்னகை அரும்பியது.

“ம்ம்ம்ம்.. சொல்லணும் அவ்வளவு தானே.. சொல்லலாம்… சொல்றேன்.. ஆனால் பதிலுக்கு நானும் ஒன்னு எதிர்பார்ப்பேனே..”

என்று ஏற்ற இறக்கத்தோடு அவன் சொன்னதில், ‘எதாவது ஏடாகூடமாய் கேட்க போறானோ…’ என்று கண்களை சுருக்கி பார்க்க,

“இன் ரிடென்… உன் லவ் ஸ்டோரியை நீ சொல்லணும்..”

என்று சொல்லவும், “அய்யோ.. இந்த டாபிக்கை விடவே மாட்டானா..” என்று சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல் வந்தது.

“போடாங்…” என கைநீட்டி திட்டிவிட்டு திரும்பி செல்ல,

“காத்திருப்பேன் ஜென்சி… இந்த உடைஞ்ச கையோடையும் காலோடையும்.. நீ திரும்ப வருவேன்னு எதிர்பார்த்து.. என்னை ஏமாத்திடாத..” என்று சத்தமாய் அவன் கூறியதனை கேட்டாலும் நிற்காமல் வெளியே வந்துவிட்டவள் செவிலியரை அழைத்து,

“அவருக்கு ரொம்ப பெய்ன் இருக்கு சிஸ்டர்.. ரெஸ்ட் எடுக்க சொன்னால் கேட்க மாட்டார்.. ஸ்லீப்பிங் பில்ஸ் மாதிரி எதாவது கொடுத்து தூங்க வைக்க முடியுமா..” என்று விசாரிக்கவும் தவறவில்லை.

“நானும் காலைல இருந்து சொல்றேன் மேம்… அவங்க பாடி கண்டிஷனுக்கு இவ்வளவு ஸ்ரெய்ன் பண்ண கூடாதுனு.. பட் கேட்கவே மாட்றாங்க… போலீஸ், விசாரணைனு வரவங்களை தடுக்கவும் முடியல.. இத்தனை விசிட்டர்ஸ் அலோவ் பண்ணது தெரிஞ்சால் டாக்டர் என்னை ரொம்ப திட்டுவாங்க மேம்.. என்ன பண்ணறதுனு தெரியாம தான் முழிச்சுட்டு இருந்தேன்.. நீங்க சொன்னா மாதிரி டாக்டரிடம் கேட்டுகிட்டு செய்றேன் மேம்..”

என அப்பெண் தன் இக்கட்டான நிலையை சொல்ல தலையசைபோடு ‘எல்லாரையும் படுத்தி தான் வைப்பான்..’ என்று மானசீகமாய் அவனை வஞ்சியபடி நகர்ந்தவள் தன் அன்னைக்கு போனில் அழைத்தாள்.

“இன்னும் எவ்வளவு நேரம் ஜென்சி..?? நீ வருவ வருவனு பார்த்துட்டு இருக்கோம்.. ஃபோன் பண்ணாலும் எடுக்கல.. என்ன தான் நினைச்சுட்டு இருக்க..” என்று பொரிந்தவரை தடுத்து,

“மாம்… இருங்க.. இருங்க.. என்ட்ரென்ஸ்ல நிற்கிறேன்.. கிளம்பலாம் வாங்க” என்க,

“கிளம்பலாமா..?? நீ காலைல இருந்து ஒன்னுமே சாப்பிடலையே ஜென்சி..” என்று கேட்கவும்,

“ம்ச்.. வாங்க மாம்.. வீட்டுக்கு போய் பார்த்துகலாம்..”

என்று அழைப்பை துண்டித்து வெளியே வர அங்கு வாயிலில் தேவிப்ரியா நிற்பதனை கண்டாள்.

இதனை ஓரளவு அவள் யூகித்து தான் இருந்தாலும் அருகில் ஜோசஃப்பும் நிற்பதனை எதிர்பார்க்கவில்லை.

அவன் திருமணத்திற்கு பிறகு இன்று தான் நேரில் அவனை பார்க்கிறாள். இளைத்து கண்களின் கீழ் கருவளையமும் சுருக்கமும் சவரம் செய்யாத தாடியும் என உடல்நிலை சரியில்லாதவன் போல் இருக்க அவன்மீது நேசித்த நெஞ்சம் அத்தனையையும் ஒரே பார்வையில் உள்வாங்கியது.

‘இவன் ஏன் இப்படி இருக்கான்..”

என்று கவலை கொண்டவளாய் அவர்களை நெருங்க அவளை ஜோசஃப் முறைத்து நின்றதிலே அவனிடம் தேவிப்ரியா தான் உள்ளே இருந்ததை சொல்லிவிட்டார் என்று புரிந்தது.

“ஹாய் ஆன்ட்டி.. சாரி.. அங்க நீங்க பேசிட்டு இருந்தீங்க.. அதான் இடைபுகுந்து பேச வேணாம்னு அமைதியா இருந்தேன்..” என அவன் பார்வையை தவிர்த்து தேவியிடம் பேச,

“அது பரவாயில்லை ஜென்சி.. நீ இங்க எப்படி..?”

என்று அவர் கேட்க  பதில் சொல்ல அவளுக்கும் பெரிதாய் தயக்கமில்லை.

“ஜோஷ்வாவை எனக்கு தெரியும் ஆன்ட்டி… லிசாவிற்கு கொஞ்சம் ஹெல்த் இஸூ.. அதுக்காக ஹாஸ்பிட்டல் வந்தோம்.. எதர்ச்சையாய் ஜோஷை பார்த்தேன்..”

என்று சுருக்கமாய் சொல்ல ‘எப்படி அவனை தெரியும்..’ என்று கேட்காமலே விட்டுவிட்டார். இன்று நடந்ததில் சோர்வுற்று இருந்தவருக்கு வேறெதிலும் கவனமில்லை.

இன்னமும் கலங்கி இருந்த அவர் கண்களை பார்த்தபோது அவளுக்கே பாவமாய் இருக்க,

“சீக்கிரமே உங்களை அவன் புரிஞ்சுப்பான்.. அவன் பேசினதை நினைச்சு வருத்தபடாதீங்க ஆன்ட்டி..” என்று ஆறுதலாய் சொல்ல,

“அவன் குதர்க்கமா பேசுறது எனக்கு புதுசு இல்ல ஜென்சி.. ஆனால் இப்படி உடம்பு முடியாம இருக்கும்போது கூட இருந்து பார்த்துக்க யாருமில்லாதவன் போல தனியா இருக்கான்.. பார்த்தும் என்னால எதுவுமே செய்ய முடியாத நிலைல நான் இருக்கேன்..” என்ற அவரின் தாயுள்ளம் புரிய,

“காத்திருப்பேன் ஜென்சி..” என்று கடைசியாய் அவன் சொன்னது வேறு தேவையின்றி நினைவில் வந்து தொலைத்தது.

அதே சமயம்  எஸ்தர்வும் லிசாவும் வரவே அவர்களை நெருங்கி தேவி லிசாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜோசஃப்பும் ஜென்சியும் இங்கேயே நின்றனர்.

ஜோஷ்வா அலுவலகத்தில் வந்தன்று சொன்னபோது கூட அவன் நம்பவில்லை. ஆனால் இன்று அவன் சொன்னது போல எதாவது இருக்குமோ என்று சந்தேகம் தோன்றியது.

அன்னை இருந்தவரை வாயே திறக்காமல் அவளையே முறைத்து நின்றவன் இப்பொழுது,

“புது உறவு எல்லாம் வந்ததால தான் இத்தனை நாள் என்னை அவாய்ட் பண்ணியா ஜென்சி.. நான் கூட என்மேல தான் ஏதோ தப்பு இருக்குமோன்னு நினைச்சேன்..” என்று குத்தலாய் பேசினான்.

‘அடப்பாவி எதை எங்க கொண்டு போய் சேர்கிறான் பார்..’ என்று எண்ணியவள் அதனை விளக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டாள். இல்லையேல் ‘அப்போ என்னை தவிர்க்க காரணம் என்ன..’ என மீண்டும் ஆரம்பிப்பான் என்று தெரியும்..!

“தப்பா பார்த்தால் எல்லாமே தப்பா தான் தெரியும்… உங்களுக்குள்ள சண்டைன்னா நான் ஜோஷ்ட்ட பேச கூடாதா என்ன..?? உங்க பிரச்சனை உங்க வரைக்கும்.. அவனிடம் பேசுவதும் பேசாததும் என் விருப்பம் ஜோ.. நீ என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் தான்.. அதுக்குனு நீ என்ன சொன்னாலும் நான் கேட்கணும்னு இருக்கா..?”

“நான் என்ன சொன்னாலும் நீ கேட்கணும்னு சொல்லல ஜென்சி.. ஆனால் ஜோஷ்வா விஷயத்தில் மட்டும் ஜாக்கிரதையா இருனு தான் சொல்றேன்.. துரோகம் பண்றதும் முதுகுல குத்துறதும் அவனுக்கு புதுசு இல்ல.. நீ அவன் மேல ஃபீலிங்க்ஸ் வளர்த்துட்டு கடைசியா மனசு ஒடைஞ்சு போயிடுவியோன்னு கவலையா இருக்கு ஜென்சி..”

என்று அவள் புரிந்துக் கொள்ள வேண்டுமே என்ற தவிப்போடு ஜோசஃப் கூறினான்.

‘உன்மேல ஃபீலிங்க்ஸ் வளர்த்து ஏற்கெனவே என் மனசு சுக்கு நூறாகிடுச்சு ஜோ.. .இனி உடைய என்ன இருக்கு..’

என்று சொல்ல துடித்த நாவை அடக்கி,

“ஃபீலிங்க்ஸ்.. மண்ணாங்கட்டி எல்லாம் எதுவும் அவன் மேல எனக்கு இல்ல.. அது வரவும் வராது..” என்று திட்டவட்டமாய் கூறியவள் மேலும் அதனை தொடரவிடாமல்,

“நீ ஏன் இப்படி பஞ்சத்தில் அடிப்பட்டவன் மாதிரி இருக்க.. உனக்கென்ன ஆச்சு..” என்றாள் உண்மையான அக்கறையோடு..

“ஒன்னும் இல்ல.. நல்லா தான் இருக்கேன்..” என்று சொல்லும்போதே அதில் தொய்வு இருந்தது.

“நல்லா இருக்க லட்சணமா இது..?? நீ சொல்லலைனா என்ன.. நான் ஆன்ட்டிடையே கேட்டுகிறேன்..” என்று சொல்லி அவள் திரும்ப,

“ஜென்சி.. வேணாம்.. அம்மா ஏற்கெனவே ரொம்ப கவலைல இருக்காங்க.. நீயும் தான் பார்த்து இருப்பியே அவன் எப்படி பேசியிருக்கான்னு.. இதில் என்னை பத்தி கேட்டு இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம்..” என்று தடுத்தவன்,

“இவனை மாதிரி ஒரு எமகண்டத்தை வைச்சுகிட்டு எங்க நல்லா இருக்கிறது.. முதல்ல எங்களை மட்டும் தான் உரண்டை இழுத்தான்.. இப்ப ஊர்ல உள்ளவனை எல்லாம் இழுக்குறான்.. சும்மா விடுவானுங்களா.. இப்ப பார்..” என்றான் அவன் மீதிருந்த அப்பட்டமான எரிச்சலோடு..

“அப்போ இப்படி நடக்கும்னு ஏற்கெனவே தெரியுமா ஜோ..”

“ஏன் தெரியாம.. இவனை என்னவோ செய்ய போறானுங்க தெரியும்.. டாட் இந்த விஷயத்தில் தலையிடாதன்னு சொன்னாங்க.. ஆனாலும் மனசு கேட்காம இவனை கண்காணிச்சுட்டு தான் இருந்தேன்.. இந்த அக்‌ஷிடெண்ட் எப்படி நடந்துச்சு தெரில.. கர்த்தர் புண்ணியத்துல தப்பிச்சான்.. ஆனால் எல்லா தடவையும் இப்படி தபிக்க முடியுமா..”

“அவனுக்கு எதுவும் ஆக கூடாதுனு அக்கறை இருக்கு.. ஆனால் அவன் கிட்ட எதாவது நியாயம் இருக்கலாம்னு ஏன் தோணல ஜோ..”

ஜோஷ்வா சொன்னதனை மனதில் வைத்து அவனுக்கு எடுத்து கொடுக்க,

“நியாயமா.. அவனிடமா..?? தான் தான் முதன்மையா இருக்கணும் என்ற ஆணவம்.. தனக்கு மட்டுமே எல்லாம் கிடைக்கணும்னு பேராசை.. இதை தவிர என்ன காரணம் இருக்க முடியும்..”

அவனோ மறுயோசனையே இன்றி பட்டென்று பதில் கொடுத்தான்.

“ம்ச்.. ஆத்திரத்தோடவே எல்லாத்தையும் பார்க்காத ஜோ.. நிதானமாய் பிரச்சனையில இருந்து தள்ளி நின்னு யோசிச்சு பார்… உனக்கு புரியலாம்..”

என்று மட்டும் கூறியவள் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அன்னையிடம் செல்ல பின் இருவரிடமும் பொதுவாய் விடைபெற்று கிளம்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!