Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iravin Panithuli

அத்தியாயம் 12.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 12

உலகின் எந்த மூலைக்குச்

சென்றாலும் எந்தன் நினைவுகள்

உன்னையே வட்டம் அடிக்கும்!!!



Advertisement

 

அவர்கள் கிளாசில் இருந்த சுசீலா என்ற பெண்ணின் தந்தை டிராவல்ஸ் வைத்திருந்ததால் அவர்களின் பஸ் புக் செய்யப் பட்டது.

இந்த ஆண்டு ஊட்டி செல்ல ஏற்பாடானது. வர மாட்டேன் என்று பிகு செய்தவர்களை அவர்களின் நண்பர்கள் வரச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

Advertisement

 

Advertisement

காயத்ரியும் நான் வரலை என்று பிடிவாதம் பிடிக்க நந்தினி தான் கெஞ்சிக் கொண்டிருந்தாள். கடைசி வரை அவள் வரவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க நந்தினி தானும் வர வில்லை என்றாள்.

 

நந்தினி குருப்பில் இருந்த மதனுக்கும் நந்தினிக்கும் இடையே நட்பா காதலா என்ற பட்டிமன்ற உறவு போய்க் கொண்டிருந்தது. அதனால் நந்தினி வர வில்லை என்றதும் அவன் அவளிடம் வரச் சொல்லிக் கெஞ்ச வேறு வழியில்லாமல் சம்மதித்த நந்தினி காயத்ரியிடம் மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தாள்.

Advertisement

 

“பிளீஸ் நந்து, நீ வேணும்னா போ. எல்லாருமே உன்கிட்ட நல்லா தானே பேசுறாங்க. உனக்கு நான் இல்லைன்னா தனிமையா எல்லாம் தெரியாது. போயிட்டு வா. என்னை விடு”, என்றாள் காயத்ரி.

 

“இப்ப நீ எதுக்கு வர மாட்டேன்னு சொல்றன்னு சொல்லு. முன்னாடி எல்லாம் நாம போகணும்னு ஆசைப் பட்டோம் தானே?”, என்று கேட்டாள் நந்தினி.

 

“அது அப்ப, அவன் பண்ணுறதை நீ பாத்த தானே? எதிரியைப் பாக்குற மாதிரி முகத்தை திருப்பிட்டு போறான். நானா பேசப் போனாக் கூட கண்டுக்காம போறான். லேப்ல வச்சு என்கிட்ட பேசுறதே இல்லை. என்னை என்ன செய்ய சொல்ற? எனக்கு எரிச்சலா வருது”

 

“காயு, டூர் போறப்ப அவன் கிட்ட பேச உனக்கு வாய்ப்பு கிடைக்கும் டி. அப்ப உன் பக்க விளக்கத்தை அவன் கிட்ட சொல்லு. கண்டிப்பா அவன் பேசுவான்”, என்று நந்தினி சொல்ல காயத்ரி யோசிக்க ஆரம்பித்தாள். முடிவில் அவனிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற ஆசையில் போக சம்மதம் சொன்னாள்.

 

அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. அவர்களுடன் ஒரு லேடீ ஸ்டாப், ஒரு ஜென் ஸ்டாப் செல்வது என்று முடிவு எடுக்கப் பட்டது.

 

அன்றைய நாளும் வந்தது. அனைவரும் ஏறி அமர்ந்ததும் பஸ் ஊட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என்று கலகலப்பாக இருந்தது. ரெப் என்கிற முறையிலும், எப்போதுமே கலகலப்பானவன் என்ற முறையிலும் தீபக் அனைத்துக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டான். ஆனால் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தது காயத்ரி மட்டுமே. அவள் வந்ததே போதும் என்று எண்ணி அவளை நந்தினியும் தொல்லை செய்ய வில்லை. ஆசிரியர்கள் இருவருமே இளம் வயதினர் என்பதால் கட்டுப்பாடுகள் வேறு குறைவாக இருந்தது. பேருந்து பயணம் அவ்வளவு சந்தோசமானதாக இருந்தது.

 

ஊட்டியில் அதிகாலை குளிரில் வந்து இறங்கினார்கள். மலைகளின் இளவரசி, பெயருக்கு ஏற்றார் போல கம்பீரமாக காட்சி அளித்தாள்.

 

தங்களுக்கு என்று ஒதுக்க பட்ட அறைக்கு அனைவரும் சென்றனர். ஒருவர் பின் ஒருவராக குளித்து முடித்து காலை உணவை முடித்தவர்கள் சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டார்கள். முதலில் தொட்டபெட்டா போவது தான் அவர்கள் பிளான்.

 

ஆனால் அவர்களுடன் வந்த ஸ்டாப்போ “நாம இங்க வந்தது சந்தோஷமா இருக்க தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, நம்ம சொல்லிட்டு வந்த காரியமும் நடக்கணும். அதனால முதல்ல ஒரு பேக்டரி விசிட் போயிட்டு அப்புறம் எங்க வேணும்னாலும் போகலாம்”, என்று சொன்னதால் முதலில் அவர்கள் ஏற்கனவே பேசியிருந்த தொழிற்சாலைக்கு சென்றார்கள்.

 

அதன் பின் தொட்டபெட்டா, ரோஸ் பார்க், பொட்டானிக்கல் கார்டன் என்று சுற்றிப் பார்த்தார்கள். அழகான பூங்காக்களில் சுற்றி அமர்ந்து தங்களின் திறமைகளை வெளிப் படுத்தி சந்தோசப்பட்டார்கள்.

 

பின் காட்டெஜ் வந்து  ரெஃப்ரெஷ் செய்து இரவு உணவை உண்டார்கள். அதன் பின் கேம்ப் பையர்க்கு ஏற்பாடானது. சிறிது நேரம் பாசிங்க் தி பார்சல் கேம் விளையாடினார்கள். பார்சல் யார் கையில் இருக்கிறதோ அவர்களுக்கு சில செல்ல தண்டனைகளும் வழங்கப் பட்டது. ஏதாவது ஸ்டாப் மாதிரி கிளாஸ் எடுக்க சொல்வது,  கவிதை சொல்ல சொல்வது, பாட்டுப் பாடச் சொல்வது, டேன்ஸ் என்று உற்சாகமாக சென்றது.

 

காயத்ரி அப்போதும் தன்னுடைய குரல் வளத்தால் அனைவரையும் மயக்க நிலைக்கு கொண்டு சென்றாள். அவளுடைய பாடலும் சுற்றி இருந்த ஏகாந்தமும் அனைவரையும் கட்டிப் போட்டது.

 

ஆனால் அவள் மனது மட்டும் சோகத்தில் உறைந்திருந்தது. அன்று முழுவதுமே காயத்ரியால் தீபக்கிடம் பேச முடியவில்லை. கேம்ப் பயர் முடிந்ததும் அனைவரும் அவரவர் அறைக்கு சென்றார்கள்.

 

குளிர் அதிகமாக இருந்ததால் இழுத்து மூடித் தூங்கினார்கள். அடுத்த நாள் மேலும் சில இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு பின் விலை மலிவாக இருக்கும் ஒரு ஷாப்பிங் காம்ப்லெக்ஸில் நுழைந்தார்கள்.

 

அனைவரும் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

 

அப்போது தான் மதன் நந்தினிக்கு கிஃப்ட் வாங்குவதையும், நந்தினி மதனுக்கு கிஃப்ட் வாங்குவதையும் காயத்ரியும், மதனின் நண்பர்கள் நான்கு பேரும் கண்டு கொண்டார்கள்.

 

காய்த்ரி நந்தினியிடம் “யாருக்கு டி இந்த கிஃப்ட்?”, என்று விசாரிக்க “எனக்கு மதனை ரொம்ப பிடிச்சிருக்கு”, என்று வெட்கத்துடன் சொன்னாள் நந்தினி.

 

ஆனால் தீபக் மற்றும் அவனுடைய நண்பர்கள் மதனிடம் விசாரிக்க மதன் சாமானியமாக அவன் காதலை ஒப்புக் கொள்ள வில்லை. ஆனால் நண்பர்கள் அடித்த கிண்டலில் அவனும் நந்தினியை பிடிச்சிருக்கு என்று சொல்லி விட்டான். மாற்றி மாற்றி கிஃப்ட் கொடுத்துக் கொண்டார்கள். ஆனால் காதலைச் சொல்லாமலே அவர்களின் காதல் அவர்களுக்கு புரிந்தது.

 

அன்று முழுவதுமே தீபக் தனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கித் தருவான் என்று காத்திருந்தாள் காயத்ரி.

 

அன்று இரவு வரை எதுவும் நடக்க வில்லை என்றதும் யாருக்கும் தெரியாமல் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். அன்று இரவு காட்டெஜ் வந்ததும் இழுத்து மூடிப் படுத்து விட்டாள். இரவு உண்ண அழைக்கும் போது கூட அவள் வர வில்லை.

 

அனைவரும் உணவு உண்டு கொண்டிருக்கும் போது “நந்து காயு எங்க?”, என்று கேட்டான் தீபக்.

 

“உன்னால் தான் டா அவளுக்கு காச்சலே”, என்று எண்ணியவள் “அவளுக்கு உடம்பு சரியில்லை தீபக். சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டா. வா தீபக் நாம எல்லாரும் சாப்பிடலாம்”, என்றாள்.

 

“அவளுக்கு உடம்புக்கு என்ன ஆச்சு?”

 

“பீவர்னு நினைக்கிறேன்”

 

“என்ன இவ்வளவு சாதாரணமா சொல்ற? டேப்லெட் போட்டாளா?”

 

“இல்லை, யார் வாங்கித் தருவா?”

 

“என்கிட்ட கேக்க வேண்டியது தானே?”

 

“நான் அப்படித் தான் அவ கிட்ட கேட்டேன். ஆனா அவன் எனக்குன்னா வாங்கித் தர மாட்டான். நாம தான் நாளைக்கு ஊருக்கு போய்ருவோம்ல? நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டா. நீ ஒரு வேளை அவளுக்கு வாங்கித் தர மாட்டியோன்னு நினைச்சிட்டா போல?”

 

“ஏன் இப்படி பேசுற நந்து?”

 

“நான் என்ன சொல்லிட்டேன். எனக்கு பசிக்குதுப்பா. வேணும்னா நீயே போய் அவளை சாப்பிட கூட்டிட்டு வா. இந்தா ரூம் கீ. உள்ள வச்சு பூட்டிட்டு வந்துட்டேன்”, என்றதும் அதை வாங்கிக் கொண்டு சென்றான் தீபக்.

 

அவளை காணச் செல்வது ஸ்டாப் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்று அவனுக்கு கலக்கமாகவும் இருந்தது.

 

கதவு திறக்கப் பட்டதும் நந்து தான் என்று எண்ணி திரும்பி பார்த்த காயத்ரி அறைக்குள் தீபக் வருவான் என்று எதிர் பார்க்க வில்லை. அவனைக் கண்டதும் அவள் கண்கள் மீண்டும் கலங்கத் துவங்கியது.

 

அவள் தலை குனிந்த படி அழ அவனுக்கு தான் சட்டென்று பேச்சு வர வில்லை. பின் தன்னை சமாளித்துக் கொண்டவன் “காயு சாப்பிட வா”, என்றான்.

 

“எனக்கு வேண்டாம்”

 

“வான்னு சொல்றேன்ல வா”

 

“நீ இப்ப ரெப்பா சொல்றியா? இல்லை என்னோட பிரண்டா சொல்றியா?”

 

“கண்டிப்பா நான் ரெண்டாவும் சொல்லலை. இப்ப எதுவும் பேச வேண்டாம். முதல்ல சாப்பிட வா”, என்று அவளிடம் சொன்னவன் மனதுக்குள் “நீ என் பொண்டாட்டி டி”, என்று எண்ணிக் கொண்டான்.

 

“நிஜமாவே எனக்கு பசிக்கலை. சாப்பிட முடியலை”, என்றாள் காயத்ரி.

 

“கச்சல், அதிகமா இருக்கா?”, என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கி அவள் நெற்றியில் கை வைத்தான் தீபக். முதல் முறையாக அவனது அருகாமையில் அவள் மனம் நெகிழ்ந்தது. அதுவும் அவன் தொட்டப் பிறகு தான் அவள் உடல் இன்னும் சூடு ஏறியது. அவள் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது.

 

தான் தொட்டதும் அவள் முகம் சிவந்ததும் தான் தன்னுடைய அருகாமையை அவள் ரசிக்கிறாள் என்பதே அவனுக்கு புரிந்தது. “இவ்வளவு ஆசையை வச்சிக்கிட்டு தான் அன்னைக்கு அப்படிச் சொன்னியா?”, என்று எண்ணியவனுக்கு அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை கைக் கட்டி பார்க்கத் தான் முடியவில்லை.

 

அவளைக் கட்டிக் கொண்டு அவளுடைய காச்சலைக் குறைக்க அவன் மனது ஆசைப் பட்டது. இதற்கு மேல் இங்கே இருந்தால் அன்று போல் ஏதாவது ஆகும் என்று எண்ணியவன் “சரி இரு, நான் டேப்லெட் கொண்டு வரேன்”, என்றான்.

 

“எனக்கு வேண்டாம்”

 

“ஏன்?”

 

“எனக்கு காச்சல் வந்ததுக்கு காரணமே நீ தான். என்னை ஏண்டா இப்படி படுத்துற? என்னைப் பாத்து மட்டும் முகத்தை திருப்பிட்டு போற? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இங்க எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. ஆனா நான் மட்டும் நிம்மதியாவே இல்லை. அன்னைக்கு என்ன நடந்ததுன்னு என்னை சொல்லக் கூட விட மாட்டிக்கிற., அன்னைக்கு….”

 

“அதைப் பத்தி பேச வேண்டாம். இப்ப என்ன நான் பேசாம இருக்குறது தானே பிரச்சனை? நான் உன்கிட்ட பேசுறேன் போதுமா? இனி நாம முன்னாடி மாதிரி பேசலாம். அன்னைக்கு நடந்தது அன்னையோட முடிஞ்சிருச்சு”

 

“இல்லை.,.. அன்னைக்கு….”

 

“அதை பேச வேண்டாம் காயு… இனி நான் உன்கிட்ட பேசுவேன். இப்ப சாப்பிட வரியா?”

 

“நிஜமாவே எனக்கு சாப்பிட முடியலை”

 

“சரி. நான் நந்து கிட்ட பாலும் மாத்திரையும் கொடுத்து விடுறேன். காச்சல் சரியாகிரும்”

 

“சரி, அப்புறம் இந்தா. இது என்னோட கிஃப்ட். பிரிச்சு பாரு”, என்று சொல்லி ஒரு கவரை எடுத்துக் அவனிடம் கொடுத்தாள்.

 

“நான் இதை அப்புறம் பாக்குறேன். இப்ப எல்லாரும் எனக்காக வெயிட் பண்ணுவாங்க. நான் வரேன்”, என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.

 

அவன் பேசிய பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனாலும் அவன் கண்களில் ஒரு வித ஒட்டாத் தன்மையே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவனை சரி செய்யலாம் என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அது அவளால் முடியுமா? அவன் மாறுவானா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 

காதலை போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை. உயிருடன் இருக்கும் கடைசி நாள் வரை நம்மை கொன்று கொண்டே இருக்கும் என்ற உண்மை புரிந்து தான் அவளிடம் இருந்து விலகியிருக்கிறான் தீபக்.

 

அடுத்த நாள் அனைவரும் ஊருக்கு கிளம்பினார்கள். பஸ் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. பாதி பேர் முழுத் தூக்கத்திலும் பாதி பேர் அரைத் தூக்கத்திலும் இருந்தார்கள்.

 

பஸ்ஸில் இருந்து அனைவரும் இறங்கிக் கொண்டிருக்கும் போது யாருக்கும் தெரியாமல் அவள் கையில் ஒரு பார்சலை கொடுத்தான் தீபக். அதில் அவள் முகம் மலர்ந்தது. சந்தோசத்துடன் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். போகும் போது இருந்த வருத்தம் இப்போது அவளை விட்டுச் சென்றிருந்தது.

 

ஆனால் இப்போது வரை அவள் மனதில் காதல் இருக்கிறதா இல்லையா என்று சொல்லாமல் தவிக்க விடுகிறாளே என்று கோபம் இருந்து கொண்டே இருந்தது அவனுக்கு. அதுவும் மனம் முழுவதும் காதலை வைத்துக் கொண்டு நண்பனாக அவளிடம் நடிக்க வேண்டி இருக்கிறதே என்று அவன் மனம் ஊமையாக அழுதது. ஆனால் அவளே காதலை சொல்லாமல் அதைப் பற்றி இனி அவளிடம் பேசப் போவதில்லை என்ற முடிவில் தெளிவாக இருந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!