Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iravin Panithuli

அத்தியாயம் 13.2 : இரவின் பனித்துளி!!!

தீபக் அவள் வரவுக்காக ஆவலாக காத்திருந்தான். என்ன தான் போனாப் போறா என்று சொல்லி விட்டாலும் அவன் மனது துவண்டது அவனுக்கு தான் தெரியும். அடுத்த நாள் புன்னகையுடன் வேலைக்கு வந்தவளைக் கண்டு அவனுக்கு தான் வயிறு எரிந்தது.

 

“அடப்பாவி, பிக்ஸ் ஆகிருச்சா? இவ்வளவு சந்தோஷமா இருக்கா?”, என்று எண்ணியவனின் பார்வை அவளையே தொடர்ந்தது.

 



Advertisement

அவன் பார்வையையும் அவன் கோபத்தையும் தவிப்பையும் காயத்ரி உணர்ந்தே இருந்தாள். அவளுக்கும் அவனிடம் பேச ஆசை தான். ஆனால் நேற்று முடிக்காத வேலைகள் இருந்ததால் அவளால் அவனிடம் பேச முடியவில்லை.

 

அன்று மாலை அனைவரும் வேனில் ஏறும் போது காயத்ரியும் அவர்களுடன் ஏறினாள்.

Advertisement

 

Advertisement

“என்ன காயு, முகம் சந்தோஷமா இருக்கு? உன்னை இவ்வளவு ஹேப்பியா நான் பாத்ததே இல்லை. மாப்பிள்ளை ஓகே சொல்லிட்டாரா?”, என்று கிண்டல் அடித்தான் மதன்.

 

அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று தன்னுடைய காதுகளை கூர்மையாக்கிக் கேட்டுக் கொண்டிருந்தான் தீபக்.

Advertisement

 

“இல்லை, நானே அவங்களை வர வேண்டாம்னு சொல்லச் சொல்லிட்டேன்”, என்றாள் காயத்ரி. தீபக் மனதுக்குள் அப்பாடா என்று உணர்ந்தான்.

 

“என்ன சொல்ற நீ? எதுக்கு?”, என்று மதன் கேட்க “மதன் நீ கொஞ்சம் என்னோட சீட்டுக்கு வாயேன். நான் கொஞ்ச நேரம் அங்க உக்காரணும்”, என்று சீட் மாறி அமர அழைத்தாள்.

 

“இப்பவாது பேசத் தோணுச்சே. சந்தோஷம். டேய் நீ காரியத்தைக் கெடுத்துறாத டா”, என்று முனங்கிக் கொண்டே மதன் எழுந்து வந்து காயத்ரி சீட்டில் அமர்ந்தான். காயத்ரி தீபக் அருகில் அமர்ந்தாள்.

 

தன்னருகில் வந்து அமர்ந்தவளை வியப்பாக ஒரு பார்வை பார்த்தான் தீபக். அதன் பின் அவனும் எதுவும் பேச வில்லை. அவளும் பேசவில்லை. ஏதாவது பேசுவார்கள் என்று எண்ணி அவர்களை திரும்பி பார்த்த மதன் அவர்கள் இருவரும் அமைதியாகவே இருக்கவும் “இவங்க தேரவே மாட்டாங்க”, என்று தலையில் அடித்துக் கொண்டு அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேச ஆரம்பித்தான்.

வெகு நாட்கள் கழித்து கிடைத்த அருகாமை இருவருக்கும் தித்திப்பாக இருந்தது. காயத்ரியோ அவனிடம் எப்படி பேச என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

 

இருவரும் அருகருகே அமர்ந்திருந்ததால் அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் அவனுடைய கால் அவள் கால் மீது உரசிக் கொண்டு இருந்தது. முதல் முறை திகைத்து அவளைப் பார்க்க அவள் விலகவே இல்லை என்றதும் அவனும் அப்படியே அமர்ந்திருந்தான்.

 

அவள் மனதில் இருந்த காதல் அவனுக்கு புரிந்தாலும் அதை அவளாக சொல்ல வேண்டும் என்று எதிர் பார்த்தான்.

 

“நீ இப்படி எதிர் பாத்துட்டே இரு. அவங்க வீட்ல அவளுக்கு வேற மாப்பிள்ளை பாக்கட்டும்”, என்று மனசாட்சி குரல் கொடுக்க அவளிடம் பேச முடிவெடுத்தான்.

 

அவள் தன்னை பரிதவிப்பாய் பார்த்துக் கொண்டிருப்பதை அவனும் உணர்ந்தான். அவளை பார்த்து திரும்பி அமர்ந்தான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் அவனிடம் எதையோ சொல்ல ஆரம்பிக்க “என்ன?”, என்று கேட்டான்.

 

“ஒண்ணும் இல்லை”

 

“நேத்து என்ன ஆச்சு?”

 

“இதைக் கேக்க உனக்கு இவ்வளவு நேரமா? எதுக்கு தீபு அமைதியா

இருக்க?”

 

“நான் என்ன சொல்லணும்னு நீ எதிர் பாக்குற காயு?”

 

“என்னை பொண்ணு பாக்க வந்தா உனக்கு ஓகே வா?”

 

“அது எனக்கு ஓகேவா இல்லையான்னு உனக்கு தெரியாதா?”

 

“இப்படி புதிரா பேசினா நான் எப்படி எடுத்துக்குறது? எதையும் நேரடியா சொல்லிட்டா பிரச்சனை இல்லையே?”

 

“வார்த்தைகள் வராதப்ப, அதை செயல்ல காட்டுறது தப்பு இல்லைன்னு எனக்கு தோணுது”, என்று அன்று முத்தம் கொடுத்ததைப் பற்றி பேசினான் தீபக்.

 

“அதுவும் புரியலைன்னா நீ தான் புரிய வைக்கணும். எனக்கு என்ன முடிவு எடுக்கன்னு தெரியலை. அவங்க பொண்ணு பாக்க வரது எனக்கு காலைல தான் தெரியும். பதட்டத்துல கிளம்பி  வந்துட்டேன்.  அப்புறம் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனா வீட்ல போய் என்ன சொல்றது நான்னு டென்சன்ல தான் வீட்டுக்கு கிளம்பிட்டேன்”

 

“வீட்ல என்ன கேட்டாங்க?”

 

“ஒண்ணுமே கேக்கலை. கேட்டா என்ன பதில் சொல்லன்னு தெரியலை. நான் என்ன சொல்லன்னு நீ தான் சொல்லணும்”

 

“என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்ல?”

 

“இப்படி பேசாத தீபு. அன்னைக்கு நடந்ததுல உன் மேலயும் தப்பு இருக்கு. என்னோட பக்க நியாயத்தை கேக்க மாட்டிக்க”

 

“என் மேல தான் எல்லா தப்பும்னு நான் ஒத்துக்கிட்டேன். அதைப் பத்தி பேச வேண்டாம்”

 

“இப்படி இருந்தா நான் என்ன தான் பண்ணுறது? சரி நான் இப்ப வீட்ல போய் உன்னைத் தான் கல்யாணம்  பண்ணிக்க போறேன்னு சொல்லப் போறேன். அப்படி சொல்லவா வேண்டாமா?”, என்று அவள் கேட்டதும் அவன் கண்கள் மின்னியது. அவளை திரும்பி பார்த்தான்.

 

“என்ன பாக்குற? சொல்லவா?”

 

“சரி”, என்று எழுந்த சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு சாதாரணமாக சொன்னான்.

“என்ன சாதாரணமா சொல்ற? நீ என்னோட பேச்சுக்கு மதிப்பே கொடுக்கலைன்னு தோணுது தீபு”

 

“நான் என்ன செய்யணும்னு எதிர் பாக்குற? கல்யாணம் என்னை பண்ணிக்க போறேன்னு வீட்ல சொல்லப் போறேன்னு சொன்ன. . சரின்னு நான் சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு”, என்று அவன் கேட்டதும் அவனை முறைத்தாள் காயத்ரி.

 

“சரி சரி முறைக்காத. பழைய விஷயங்களை எல்லாம் பேசி குழப்பிக்க வேண்டாம். இப்ப முதல்ல நம்ம கல்யாணம் நடக்கணும். நான் முதல்ல எங்க வீட்ல பேசுறேன். என்னோட அம்மா அப்பா உங்க வீட்ல பேசுவாங்க. உன் ஸ்டாப் வரப் போகுது. நீ இப்ப இறங்கணும்.பாய்”, என்று சொன்னவனின் பேச்சை எந்த லிஸ்டில் எடுக்க என்று தெரியாமல் குழம்பினாள் காயத்ரி.

 

அவளுடைய ஸ்டாப் வரப் போகவும் குழப்பத்துடனே அவள் எழ முயல சட்டென்று அவள் கரத்தை பற்றிக் கொண்டான். அதிர்வாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காத. பேசி புரிய வைக்க இப்ப ரெண்டு பேருக்குமே நேரம் இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் பொறுமையா பேசிக்கலாம்”, என்றான் தீபக்.

 

“பேசினால் புரியாதுன்னு எதுவுமே இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடியே தெளிவா பேசி புரிய வச்சிட்டா குழப்பமே இருக்காது. என்ன பண்ணலாம்னு யோசி. நான் கிளம்புறேன். பை”, என்று சொல்லி விட்டு இறங்கி விட்டாள்.

 

அவள் இறங்கியதும் அவள் அருகே வந்து அமர்ந்த மதன் “என்ன டா சொன்னா?”, என்று கேட்டான்.

 

“நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்”

 

“என்னது? அஞ்சு நிமிசத்துல கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டீங்களா? ஒண்ணு ரெண்டு பேரும் பேசாம இருந்து கொல்றீங்க? இல்லைன்னா பேசியே கொல்றீங்க? நீ அவ கிட்ட லவ்வை சொல்லிட்டியா டா?”

 

“இல்லை”

 

“அப்ப அவ அவளோட காதலை ஒத்துக்கிட்டாளா?”

 

“இல்லை”

 

“அடேய், அப்புறம் எப்படி டா கல்யாணம்?”

 

“அதெல்லாம் அப்படித் தான். சரி சரி என் ஸ்டாப் வருது. நான் இறங்குறேன். நாளைக்கு பாப்போம்”, என்று சொல்லி விட்டு இறங்கி விட்டான்.

 

மண்டை குழம்பிய படி நந்தினியை அழைத்தான் மதன்.

 

“சொல்லு டா”

 

“நந்து, எனக்கு ஒரு குழப்பம்”, என்று ஆரம்பித்து தீபக் சொன்னவற்றைச் சொன்னவன் “நீ காயு கிட்ட என்னன்னு கேட்டுச் சொல்லேன்”, என்றான்.

 

“மனுசனா டா நீ? எனக்கு போன் பண்ணிட்டு நான் என்ன செய்றேன்னு கூட கேக்காம வேற கதையை பேசிட்டு இருக்க? நான் கூட என் ஆளுக்கு என்னோட நினைவு வந்து தான் போன் பண்ணிட்டானோன்னு ஒரு நிமிஷம் வானத்துல பறந்துட்டேன். சரியான சாமியார், என்கிட்ட என்ன பேசலாம், என்னை எப்படி பாக்கலாம்னு யோசிக்காம …. உன்னை எல்லாம். போனை வச்சிறு சொல்லிட்டேன். வேணும்னா நீயே காயு கிட்ட கேட்டுக்கோ. ஊருல உள்ள எல்லாரும் கல்யாணம் பண்ண போறாங்க. ஆனா உன்னை லவ் பண்ணி நான் மட்டும் இன்னும் சிங்கிலா இருக்கேன். போடா”, என்று சொல்லி வைத்து விட்டாள்.

 

மீண்டும் தலையை பிடித்த படி அமர்ந்து விட்டான் மதன். நந்தினி, மதன் இருவர் வீட்டிலும் அவர்கள் காதல் தெரிந்ததே. நந்தினி வீட்டில் அவர்கள் படித்து முடித்த உடனே திருமணத்தை நடத்த எண்ண மதனோ தனக்கு சில பொறுப்புகள் இருக்கிறது என்று தட்டிக் கழித்தான்.

 

முதல் பொறுப்பான அவனுடைய அக்காவுக்கு திருமணத்தை நடத்தி வைத்தான். அதன் பின் ஒரு வீடும் கட்டி விட்டார்கள். இப்போது திருமணம் பற்றி பேசினால் தங்கை கல்யாணம் என்று அவளை இழுத்தடித்தான்.

 

அவனது தங்கை இப்போது தான் காலேஜ் முதல் வருடம் படிக்கிறாள். அதனால் ஏற்கனவே கடுப்பில் இருந்த நந்தினி இன்று பொரும்பி தள்ளி விட்டாள். இருவர் வீட்டிலும் திருமணம் பற்றி பேச முடிவெடுத்தான் மதன். அன்று வீட்டுக்கு சென்றதும் வீட்டில் பேசி ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவெடுத்தார்கள்.

 

வீட்டுக்கு சென்ற தீபக் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்க அவனைப் பார்த்த ராகவன் “என்ன டி ஆச்சு? உன் புத்திரன் ஒரு மார்கமா உக்காந்திருக்கான்?”, என்று மீனாட்சியிடம் கேட்டார்.

 

அவரை முறைத்து பார்த்த மீனாட்சி “தீபக் கண்ணா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டாள்.

 

“அம்மா, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறியா?”, என்று சட்டென்று கேட்டதும் அவன் கேள்வியை இருவருமே எதிர் பார்க்க வில்லை.

 

“டேய், அதுக்குள்ள கல்யாணமா? இப்ப அதுக்கு என்ன டா அவசரம்?”, என்று கேட்டாள் மீனாட்சி.

 

“பின்ன இப்ப பண்ணாம முப்பது வயசுலயா பண்ண? இப்பவே பண்ணினா தானே நீங்க உங்க கொள்ளுப் பேரனை எல்லாம் பாக்க முடியும்?”, என்று அவன் கேட்டதும் மீனாட்சி பாவமாக ராகவனைப் பார்த்தாள்.

 

“நல்லா வளத்துருக்க டி உன் பிள்ளையை”, என்றார் ராகவன்.

 

“ஆமா ஆமா, அவன் முதல் மார்க் வாங்கிட்டு வந்தா உங்க மகன். இப்படி தப்பு பண்ணினா உன் பிள்ளைன்னு சொல்ல வேண்டியது”, என்று சொல்லி முறைத்தாள் மீனாட்சி.

 

“உங்க சண்டையை அப்புறம் வச்சிக்கோங்க. என்னோட கதைக்கு வாங்க. இப்ப எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா முடியாதா? நான் தான் வேலைக்கு எல்லாம் போற பெரிய மனுசனா ஆகிட்டேன்ல?”, என்று தீபக் சொன்னதும் “பொண்ணு யாரு டா?”, என்று கேட்டார் ராகவன்.

 

“வேற யாரு? நம்ம காயத்ரியா தான் இருக்கும். அப்படித் தானே டா…..”, என்று உளறி நாக்கைக் கடித்துக் கொண்டாள் மீனாட்சி.

 

ராகவன் அவரை முறைத்துப் பார்க்கவும் “எனக்கு தெரியாதுங்க, ரேவதி தான் சொன்னா”, என்று மீனாட்சி பாவமாக சொல்லவும் ரேவதியை போனில் அழைத்தார் ராகவன்.

 

அதை எடுத்த ரேவதி “அப்பா சொல்லுங்க”, என்றாள்.

 

“எனக்கு தெரியாம இந்த வீட்ல என்னன்னமோ நடக்குது. இதுக்கு நீயும் கூட்டு அப்படித் தானே?”

 

“ஐயோ அப்பா என்ன சொல்றீங்க? நான் ஒண்ணுமே பண்ணலையே? என்ன ஆச்சுப்பா?”, என்று பதறினாள் ரேவதி.

 

“அது என்னன்னு உன் அம்மாவே சொல்வா. உன் அம்மா கிட்ட கொடுக்குறேன். நாளைக்கு உன் தம்பிக்கு பரிசம் போட போகணும். மாப்பிள்ளையையும் அரவிந்த் குட்டியையும் அழைச்சிட்டு வீட்டுக்கு வா”, என்று சொல்லி மீனாட்சியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

 

மீனாட்சியும் தீபக்கும் சிரித்துக் கொண்டார்கள். “அம்மா அக்கா கிட்ட பேசிட்டு காயு வீட்டுக்கும் தகவல் கொடுத்துரு”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான் தீபக்.

 

“அம்மா, இருக்கியா இல்லையா? ஹலோ ஹலோ”, என்று கத்தினாள் ரேவதி.

 

“இருக்கேன் டி சொல்லு”

 

“என்ன மா பண்ணித் தொலைச்ச? அப்பா என்னைத் திட்டுறார்?”

 

“அது ஒண்ணும் இல்லை டி. தீபக் லவ் பத்தி நீ தான் சொன்னேன்னு உங்க அப்பா கிட்ட சொல்லிட்டேன்”

 

“அடப்பாவி அம்மா, சரியான ஓட்டை வாய் நீ. என்னை எதுக்கு அப்பா கிட்ட கோத்து விட்ட?”

 

“தெரியாம சொல்லிட்டேன் டி. அவர் உன் மேல கோபம் எல்லாம் பட மாட்டார். சரி நீ கிளம்பி வா”

 

“சரி மா, காயு வீட்ல பேசிட்டியா?”

 

“இப்ப தான் பேச போறேன்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு கலாவதியை அழைத்தாள்.

 

அவளிடம் விஷயத்தை சொன்னதும் அதை எதிர் பார்த்தவள் போன்று முருகேசனிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்கி அவர்களை பெண் பார்க்க வரச் சொன்னாள் கலாவதி.

 

அடுத்த நாள் பெண் பார்க்கும் படலத்துடன் நிச்சயதார்த்தமே முடிவடைந்தது. வெகு நாட்கள் கழித்து பட்டுப் புடவையில் அதிக அலங்காரத்துடன் இருந்தவளை கண் எடுக்காமல் பார்த்தான் தீபக்.

இருவருக்கும் தனியாக பேச வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அன்று அவர்களால் அது முடியவில்லை.

 

ஜோசியரிடம் நல்ல நாள் கேட்டு இரண்டு மாதம் கழித்து திருமணம் என்று பெரியவர்கள் முடிவு செய்தார்கள். நாட்கள் அதன் பின் நகர்ந்தது. தீபக்கும் காயத்ரியும் கூட வேலை பார்க்கும் இடத்தில் பேசத் தான் செய்தார்கள். ஆனால் அவர்களுக்குள் இருந்த பனித்திரை மட்டும் அப்படியே இருந்தது.

 

நிச்சயம் முடிந்தது என்று எண்ணி அவளை தொட்டு பேசி, சீண்டி விளையாடினால் அது இயல்பாக இருந்திருக்கும். ஆனால் அவனோ அவளை நெருங்காமல் கண்களில் மட்டுமே காதலை வழிய விட்டுக் கொண்டிருந்தான். அதனால் இருவருக்குள்ளும் காதல் கல்யாணம் என்று சந்தோஷம் இருந்தாலும் அந்த சந்தோஷம் முழுமையாக இல்லாதது போல இருந்தது.

 

அதை பேசித் தீர்க்க இருவரும் முனையவில்லை. திருமணத்திற்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவன் சொன்னதால் அவளும் அந்த பேச்சை எடுக்க வில்லை.

 

ஆனால் ஆபீஸ் நண்பர்கள் மத்தியில், கல்லூரி நண்பர்கள் மத்தியில் அவர்களின் திருமண செய்தி சந்தோசத்தைக் கொடுத்தது.

 

காதல் தொடரும்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!