அத்தியாயம் 1_ 2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:7,040
வேண்டாத விருந்தாளியாக அவர்கள் வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக முடங்கினாலும் அவளை படிக்க வைத்த குடும்பம் ஆயிற்றே. அவர்கள் நினைத்திருந்தால் தன்னிடம் இருந்து சொத்தை எல்லாம் அபகரித்து விட்டு தன்னை படிக்க வைக்காமல் வீட்டு வேலைக்காரியாக ஆக்கியிருக்கலாம்.
ஆனால் அப்படிச் செய்யாமல் சிறந்த கல்வியை கொடுத்த அவர்களுக்கு அவள் திருப்பி செய்ய வேண்டாமா? அதனால் தான் அவளுடைய மாமா அழைத்ததும் ஊருக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
Advertisement
என்ன தான் அவர்களுக்காக சென்று கொண்டிருந்தாலும் தன்னோட வாழ்க்கையை விட்டுக் கொடுக்கணுமா என்ற கேள்வியும் அவளுக்குள் வந்தது. இப்படி இரு வேறு போராட்டத்தில் அவள் மனம் அலை பாய்ந்தது.
சங்கரன் மற்றும் வேணியின் குணங்களை எண்ணி மனதுக்குள் அவர்கள் மேல் சில சமயம் வெறுப்பும் வரும். அவளும் மனுஷி தானே? ஆனால் அதை வெளியே காட்ட மாட்டாள். இதுவும் கடந்து போகும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அமைதியாக இருந்து விடுவாள்.
Advertisement
Advertisement
அவளது அம்மா அப்பா சேர்த்து வைத்த சொத்து தான் இன்று சங்கரன் வீட்டில் அவளுக்கு இடம் கிடைக்க வழி செய்து கொடுத்தது. ஒரு வேளை அவள் ஒன்றும் இல்லாதவளாகி இருந்தால் அவளை இந்த மாமா குடும்பமும் ஏற்றுக் கொண்டிருக்காது. அவளது அப்பாவின் வழி சொந்தங்களும் ஏற்றுக் கொண்டிருக்காது. தன்னுடைய தாய் தந்தை சேர்த்து வைத்த சொத்து இல்லையென்றால் தான் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம் என்ற உண்மை அவளுக்கு தெரியும்.
செத்தும் அவளை வாழ வைத்து விட்டு சென்று விட்டார்கள் அவளைப் பெற்றவர்கள். இப்போது ரேகாவிடம் இருக்கும் ஒரே சொத்து அவளது வீடு தான்.
Advertisement
அந்த வீட்டையும் சங்கரன் விற்க முற்பட்ட போது ரேகாவின் தந்தையுடன் பிறந்த பெரியப்பா “இங்க பாருப்பா, என் அண்ணன் மகள் விவசாயம் செய்ய மாட்டான்னு சொல்லி அவங்க இடத்தை வித்த. ஆனா இப்ப வீட்டையும் விக்க நினைக்கிறது தப்பு. என் அண்ணன் மகளுக்கு என் அண்ணன் கட்டின வீடு போய் சேரனும். அதனால அதை விக்க முடியாது. அப்படி விக்க நினைச்சா நான் எனக்கும் பங்கு இருக்குனு சொல்லி ஸ்டே வாங்கிருவேன்”, என்று மிரட்டினார்.
“இல்லை பெரிய மச்சான், ரேகாவை கடைசி வரை நான் தான் பாத்துக்கப் போறேன். அவ பெரியவளா ஆனதும் அவளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்துருவேன். இந்த ஊர்ல இருக்குற வீட்டில் யாரும் வந்து இருக்க போறது இல்லை. வம்பா போறதுக்கு வேற யாருக்காவது உபயோகப் படும்ல?”, என்று தேன் தடவி பேசினார் சங்கரன்.
“நீ சொல்றது சரி தான் சங்கரா. ஆனா நீ நாளைக்கே என் அண்ணன் மகளை வீட்ல இருந்து விரட்டி விட்டா அவ எங்க போவா சொல்லு. எனக்கு வாச்சிருக்குற ராட்சசி என் தம்பி செத்தப்பவே என்கிட்ட அவளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரக் கூடாதுன்னு சொல்லிட்டா. அதனால தான் நீ அவளைக் கூட்டிட்டு போனதுக்கு நான் பேசாம இருந்தேன். அனேகமா என் தம்பி மகளை நான் தான் பாத்துருக்கணும். என் நேரம் அப்படி ஆகிப் போச்சு. ஆனா எல்லாத்தையும் இழந்துட்டு அவ ஒண்ணும் இல்லாதவளா தெருவுல நிக்கக் கூடாது. அப்படி அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா என் தம்பி ஆத்மா சாந்தி அடையாது. நான் சொல்றது தான் கடைசி. இந்த வீட்டை விக்குறதைப் பத்தி நீ பேசுறதைக் கேள்விப் பட்டாலே கேஸ் போட்டுருவேன்”, என்று தெளிவாக சொல்லி விட்டார்.
மனம் நொந்து போன சங்கரன் பல முறை அதை விற்று விடலாம் என்று ரேகாவிடம் பேச்சை ஆரம்பித்திருக்கிறார். அவர் அந்த பேச்சை ஆரம்பிக்கும் ஒவ்வொரு முறையும் “அங்க எங்க அம்மா அப்பா வாழ்ந்துட்டு இருக்காங்க மாமா, அதை மட்டும் கேக்காதீங்க”, என்று உறுதியாக சொல்லி விடுவாள் ரேகா.
அந்த வீடு அவள் பிறந்த போது கட்டிய வீடாம். அந்த வீட்டைப் பற்றிய பல கதைகளை அவளுடைய தாய் தந்தை சொன்ன நினைவு அவளுக்கு இருக்கிறது. அவளைப் பொறுத்தவரை அது வெறும் வீடு அல்ல. அவளுடைய பெற்றவர்களின் நினைவுச் சின்னம்.
அவர்கள் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டின் இப்போதைய விலை லசங்களில் இருக்கும். அதை விற்க அவளுடைய அத்தையும் மாமாவும் அவளிடம் மல்லுக்கு நிற்க அவளுடைய உறுதியில் அவர்கள் தான் பின் வாங்க வேண்டி இருந்தது.
அப்படி அவளை கட்டம் கட்டி பார்த்துக் கொண்டிருந்த அவளின் மாமா குடும்பம் தான் அவளை இப்போது அடுத்த சிக்கலில் சிக்க வைத்திருக்கிறது.
பழைய விஷயங்களை எண்ணி பஸ்ஸில் அமர்ந்திருந்த ரேகாவுக்கு அம்மா அப்பாவை நினைத்து கண்கள் கலங்கியது. வேகமாக பெய்து கொண்டிருந்த மழை நின்ற பாடில்லை. ஊத காற்றும் வேகமாக வீசியது. குளிர் கூடிக் கொண்டே இருந்தது. வாசல் ஒட்டிய சீட்டை தேர்ந்தெடுத்த தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி இப்போது நொந்து கொண்டாள்.
வாழ்க்கை தனக்காக என்ன வைத்திருக்கிறது என்று அவளுக்கு தெரியாது. அவளுடைய நன்றிக் கடன் முடிவில் அவளுக்காக காத்திருப்பது எது என்று தெரியாது. வாழ்வா சாவா என்ற போராட்டம் தான். அதுவும் அவள் மனம் விரும்பி ஏற்கும் போராட்டம்.
அதில் இருந்து அவளால் தப்பிக்க முடியும் தான். ஆனால் முழு மனதாக அதை செய்ய ரேகாவால் முடியவில்லை. அவள் ஊருக்கு அதிகாலையில் போய் சேர்ந்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளுக்கு திருமண முகூர்த்தத்தை குறித்து வைத்திருந்தார்கள் அவளின் மாமனும் அத்தையும்.
ஆம் விடிந்தால் ரேகாவுக்கு திருமணம். திருமணத்தை பற்றி ஓராயிரம் கனவுகள் ரேகாவுக்கு இருந்தது. ஆனால் இன்றோ அவள் கனவுகள் அனைத்தும் சுக்கு நூறாக சிதறி போயின.
விடிந்தால் திருமணம், ஆனால் அவள் முகத்தில் எந்த சந்தோஷமும் இல்லாமல் இறுக்கம் தான் இருந்தது. விருப்பமே இல்லாத திருமணத்தில் கல்யாணக் களை எப்படி வருமாம்? இந்த நிமிடத்தில் பெற்றவர்கள் இல்லாத வலி மிக தீவிரமாக அவள் மனதில் எழுந்தது. அம்மா அப்பா இருந்திருந்தால் அவளுக்கு இப்படி ஒரு நிலை வருமா?
ஏற்காடு பஸ் ஏறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வு அவளுக்கு நினைவில் வந்தது. வேலை முடிந்து ஹாஸ்டல் அறைக்கு வந்த ரேகாவை அழைத்தார் அவளுடைய மாமா சங்கரன்.
வேண்டா வெறுப்பாக அதை எடுத்தாள் ரேகா. ஏனென்றால் அவர் அழைத்தாலே சம்பளப் பணத்தைப் கேட்பதற்காக தான் இருக்கும். அவளும் முழுவதுமாக கொடுக்காமல் மாதம் மாதம் கொஞ்ச தொகையை கொடுத்துக் கொண்டிருந்தாள்.
இந்த மாசமும் அதற்கு தான் அழைக்கிறார் போல என்று எண்ணிய ரேகா “சொல்லுங்க மாமா”, என்றாள்.
“ரேகா எப்படி இருக்க மா?”, என்று கேட்டார் சங்கரன். அவர் கேள்வியில், அதில் இருந்த அக்கறையில் ஒரு நொடி போனை தவற விட தெரிந்தாள் ரேகா. “இவரா இப்படி பாசமா கேக்குறது?”, என்ற கேள்வி எழுந்தது ரேகாவுக்கு.
தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு “நல்லா இருக்கேன் மாமா சொல்லுங்க”, என்றாள்.
“நீ உடனே கிளம்பி ஊருக்கு வா மா”
“ஆன்…. ஊருக்கா? எதுக்கு மாமா? எனக்கு நாளைக்கு லீவ் இல்லையே?”
“லீவ் போட்டுரு மா. நீ வந்தே ஆகணும்”
“அப்படி அவசரமான விஷயம் என்ன மாமா?”
“உனக்கு நாளைக்கு கல்யாணம்”, என்று அவள் தலையில் இடியை இறக்கினார் சங்கரன்.
“மாமா…. நீங்க… நீங்க என்ன சொல்றீங்க?”, என்று அதிர்ந்து போய் கேட்டாள் ரேகா.
“உன்னை என் மகளா நினைச்சு தான் ஏற்பாடு பண்ணிட்டேன். நீ என் பேச்சை தட்ட மாட்டேன்னு நம்புறேன். சீக்கிரம் கிளம்பி ஊருக்கு வா மா. இல்லை உனக்கு உன்னோட விருப்பம் தான் முக்கியம்னா நீ வர வேண்டாம். உன்னால நான் சொந்த பந்தத்துக்கிட்ட அவமானப் பட்டுக்குறேன். ஆனா ஒண்ணு நீ வராம போனா உன்னோட அம்மா அப்பாவை தான் எல்லாரும் தப்பா பேசுவாங்க”
“அம்மா அப்பாவையா? என்ன மாமா சொல்றீங்க?”
“ஆமா மா, நீ இப்ப கிளம்பி வரலைன்னா அக்கா மகளை பாசமா வளத்து கட்டி வைக்கணும்னு நினைச்சேன், அவ எங்க பேச்சைக் கேக்காம சுயநலமா இருக்கான்னு நான் அழுதுட்டு தான் இருப்பேன். அப்படி நான் அழும் போது கல்யாணத்துக்கு வந்த நம்ம சொந்தக்காரங்க எல்லாம் நன்றி கெட்ட பொண்ணுன்னு உன்னையும், செத்து போன உன் அம்மா அப்பாவையும் தான் நன்றி கெட்டவங்கன்னும் ஊர் சனம் பேசும். அப்புறம் உன் விருப்பம். அப்புறம் என் தங்கச்சி ரொம்ப நல்லவ. அவளுக்கு இப்படி ஒரு பொண்ணான்னு நானே கேப்பேன். ஊரும் கேக்கும்”, என்று சொல்லி அவளை குழப்பி விட்டு போனை வைத்து விட்டார்.
இதுவும் ஒரு பிளாக்மெயில் தான். “நீ வரலைன்னா உன்னையும் உன்னோட அப்பா அம்மாவையும் ஊர் பேசும்”, என்று சொல்லி அவளை பிளாக்மெயில் செய்து விட்டு போனை வைத்து விட்டார் சங்கரன்.
அவர் சொன்னதைக் கேட்டு தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் ரேகா. அம்மா அப்பாவை குறை சொல்லும் நிலைமையை ரேகாவால் எப்படி உருவாக்க முடியும்? கல்யாணம் என்றதும் கண் காணாத இடத்துக்கு ஓட வேண்டும் என்று எழுந்த எண்ணத்தை அவரது பேச்சு மறக்கடித்தது.
உடனே ஊருக்கு கிளம்பியும் விட்டாள். கிளம்பும் போது அவருக்கு வருகிறேன் என்று தகவலும் சொல்லி விட்டாள். ஆனால் மனம் முழுவதும் போராட்டமாக இருந்தது. சிறிது நேரத்தில் ஏற்காடில் இறங்கவும் போகிறாள். அதன் பின் அவளது வாழ்க்கை கடவுளின் கையில். முகம் தெரியாத ஒருவனுடன் சற்று நேரத்தில் அவளுக்கு திருமணமாம். சுயநலம் பிடித்த சங்கரன் மாமா பார்த்த மாப்பிள்ளை எப்படி நல்லவனாக இருக்க முடியும்? அதுவே பயமாக இருந்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் இறங்கினாள். மணி நான்கு ஐம்பது என்பதால் இருட்டாகவே இருந்தது. மழை நின்றிருந்தாலும் குளிர் அதிகம் இருந்தது. ஏற்காடில் இருந்து அவளது ஊருக்கு ஜீப் பிடித்து தான் போக வேண்டும்.
ஏற்கனவே சங்கரன் அவளுக்கு வண்டி அனுப்புவதாக சொல்லியிருந்தார். அதனால் அவள் ஜீப்பைத் தேடி கண்களை சுழற்ற அவள் அருகே நெருக்கமாக வந்து நின்றது ஒரு ஜீப். அவள் அதிர்ந்து விழிக்க “உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லி உன் மாமா அனுப்பினார்”, என்றான் ஓட்டுனர் இருக்கையில் இருந்த வாலிபன்.
அவள் அவனை சந்தேகமாக பார்க்கவும் “என்ன உன்னை கடத்திட்டு போக வந்திருக்கேன்னு நினைக்கிறியா? சந்தேகம் இருந்தா உன் மாமாக்கு போன் பண்ணிக் கேளு”, என்று சொன்னவனின் குரலில் கர்வமும் திமிரும் வெளிப்பட்டது.
உடனே தன்னுடைய மாமாவை அழைத்து விஷயத்தை சொல்ல அவரும் “நான் தான் அனுப்பினேன், உடனே அவர் கூட வா”, என்று சொல்லி போனை வைத்தார் சங்கரன். அவர் குரலில் நேற்று இருந்த பரிவு இப்போது இல்லை. ரேகாவுக்கு அனைத்துமே மர்மமாக இருந்தது.
தன்னுடைய வாழ்க்கை இனி தன் கையில் இல்லை என்று புரிந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “வா ஏறு”, என்று அவன் சொன்னதும் அவன் அருகே ஏறி அமர்ந்தாள் ரேகா. ஜீப் மெதுவாக கிளம்பியது. அவர்களின் வாழ்க்கையும் தான்….