Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எனைச் சுற்றி ஏகாந்தம்

அத்தியாயம் 3-2 : எனைச் சுற்றி ஏகாந்தம்

சரோஜா மகன் இப்படி செய்வான் என்று தெரியாமல் மனம் குமுறினாள். எப்படியாவது அவனை வர வைக்க அவள் பிளான் செய்தால் அவனோ அதை எல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் வேலையில் கவனம் வைத்தான்.

 

விஷயம் அறிந்து சிதம்பரம் அவனை அழைத்து “ஏன் டா மாப்ள இப்படி பண்ணின? அதுவும் அஞ்சு வருஷம் காண்ராக்ட் போட்டுருக்கியாம்? இப்படி அங்க போய் உக்காந்துட்டா கல்யாணம் எப்படி முடிப்ப? நான் உனக்கு பொண்ணு பாக்க மாட்டேனா டா? எங்க கிட்ட கூட சொல்லாம போய்ட்டியே?”, என்று கேட்டார்.

 



Advertisement

“எல்லாம் அஞ்சு வருஷம் கழிச்சு பாத்துக்கலாம் மாமா. எனக்கு இப்ப தேவை நிம்மதி தான்”

 

“வயசு போய்ரும் மாப்ள”

Advertisement

 

Advertisement

“போனா போகுது மாமா. பாத்துக்கலாம்”, என்று சொல்லி போனை  வைத்து விட்டான். எப்போதும் போல் மொத்தமாக பணம் அனுப்பாமல் தேவைக்கு மட்டும் வீட்டுக்கு பணம் அனுப்பி வைத்தான். மீதியை சேமித்தான்.

 

தேவிக்கு வரன் பார்க்க ஆரம்பித்தாள் சரோஜா. அதை தேவி மூலம் கேள்விப் பட்ட தமிழ் “இந்த அண்ணனை உனக்கு பிடிக்குமா தேவி?”, என்று கேட்டான்.

Advertisement

 

“ஆமாண்ணா”

 

“அப்படின்னா நீ அண்ணா சொல்ற பையனைத் தான் கட்டிக்கணும். எனக்கு அம்மா மேல நம்பிக்கை இல்லை. எனக்காக கொஞ்சம் பொறுமையா இருப்பியா டா?”

 

“கண்டிப்பாண்ணா. அம்மாவை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும். நீ கவலைப்படாம இரு”, என்று சொல்லி விட்டாள்.

 

சொன்னது போல சமாளித்துக் கொண்டு தான் வருகிறாள். படித்து முடித்து விட்டு அருகில் இருந்த கம்பெனியில் சூப்பர் வைசர் போஸ்டுக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.

 

அவளுக்கு சிதம்பரம் எவ்வளவோ வரன் பார்த்து விட்டார். ஆனால் அதற்கு சரோஜா விட வில்லை. “நீ எப்படி என் மகளுக்கு வரன் பாக்கலாம்?”, என்று அவள் சண்டை போட சிதம்பரம் வேறு வழியில்லாமல் ஒதுங்கித் தான் போனார். சிதம்பரம் பார்க்கும் வரனை சரோஜா தடுத்தால் சரோஜா பார்க்கும் வரனை தேவி தடுத்தாள்.

 

“மாப்பிள்ளை இதுக்கெல்லாம் தீர்வு நீ இங்க வந்தா தான் நடக்கும்., உன் அம்மாவை நீ தான் அடக்கணும்”, என்று சொல்லி விட்டார் சிதம்பரம்.

 

அதற்கு பின்னும் மூன்று வருடங்கள் ஆகி விட்டது. இதற்கிடையில் சிதம்பரத்தின் இன்னொரு வீட்டை அவர் விற்க போவதாக சொல்ல அதை தான் வாங்கிக் கொள்வதாக சொல்லி விட்டான் தமிழ். ஏனென்றால் சரோஜா பெயரில் இருக்கும் வீட்டை தமிழ் கேட்டால் சரோஜா தருவாளா என்று கூட தெரியாது. அதனால் அந்த வீட்டுக்கான பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். அந்த பணத்தை வைத்தே அந்த வீட்டை கொஞ்சம் புதியது போல மாற்றம் செய்தார் சிதம்பரம்.

 

அந்த வீடு தமிழ் பெயருக்கு இன்னும் மாற வில்லை. அவன் வந்து ஒரு கையெழுத்து போட்டால் வீடு அவன் பெயருக்கு மாறி விடும். இந்த விஷயம் சரோஜாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். இது தான் தமிழ் வாழ்க்கையில் இது வரை நடந்தது.

 

இப்போது அவனுக்கு வயது முப்பத்தி இரண்டு. இன்னும் இரண்டு மாதத்தில் அவனுக்கு முப்பத்தி மூன்று வயது பிறக்கப் போகிறது. இன்னும் மூன்று மாதங்களில் அவன் இந்தியா செல்லப் போகிறான். இதற்கு பின்னர் தான் போய் அவன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு பின் அவனுக்கு என்று பெண் தேட வேண்டும்.

 

இந்த வயதில் அவனைத் திருமணம் செய்ய பெண் சம்மதிப்பாளா? அழகு மொத்தமும் போய் விட்டதோ? லேசாக வழுக்கை ஆரம்பித்து விட்டதோ என்று பல கவலைகள் அவனை அக்ரமிக்க அன்றைய தூக்கத்தை இழந்தான். இது தான் தமிழ் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள். பணத்துக்காக பெற்ற மகனையே விலை பேசும் தாயை அவனால் ஒரு சதவீதம் கூட மன்னிக்க முடிய வில்லை.

 

ஆனால் சரோஜாவோ தெளிவாக இருந்தாள். மகன் வாழ்க்கை அவள் கையில் தான் இருக்கிறது என்ற இறுமாப்பு இருந்தது. என்னைக்கு இருந்தாலும் தமிழ் இந்தியா வந்தால் வீட்டுக்கு தான் வர வேண்டும் என்பது அவள் நம்பிக்கை. சாவது போல டிராமா செய்து நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. சரோஜா சொல்வதை அவன் கேட்காமல் போனால் தேவியை வைத்தாவது அவனை வழிக்கு கொண்டு வர காத்திருந்தாள் சரோஜா.

 

அடுத்த நாள் வேலைக்கு லீவ் என்பதால் காலையிலே செந்திலும் தமிழும் வெளியே சென்று நேரத்தை செலவழித்தார்கள். பின் ரூமுக்கு வந்து வீட்டினருக்கு அழைத்து பேசினார்கள்.

 

ஒரு வழியாக தமிழ் ஊருக்கு வரும் நாளும் வந்தது. செந்திலிடம் பிரியா விடை பெற்றான். அவனும் கூடிய விரைவில் ஊருக்கு வருவதால் வந்த பிறகு பார்க்க வேண்டும் என்று பேசி வைத்து விடை பெற்றார்கள்.

 

தமிழ் சென்னைக்கு விமானம் ஏறி விட்டான். தமிழின் வாழ்க்கையையும் தேவியின் வாழ்க்கையையும் பெற்ற தாயிடம் இருந்து அவன் காப்பாற்றுவானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

அவன் ஊருக்கு வருவதை யாரிடமும் சொல்ல வில்லை. இனி வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று பல குழப்பங்கள் அவனைச் சூழ்ந்திருந்தது.

 

சென்னை விமான நிலையத்தில் இறங்கியவன் திருநெல்வேலிக்கு பஸ் ஏறினான். திருநெல்வேலியில் இறங்கியவன் அவனுடைய ஊருக்குச் செல்ல மற்றொரு பஸ்ஸில் ஏறி அமர்ந்தான்.

 

அவனது ஊருக்கு அடிக்கடி பஸ் கிடையாது என்பதால் அங்கேயே பேருந்து நிறைந்து விட்டது. அதற்கு பின் தான் பஸ் கிளம்பியது. அடுத்த நிறுத்தத்தில் அந்த கூட்டத்துக்குள் முண்டி அடித்துக் கொண்டு ஏறினாள் கயல்விழி.

 

இதை விட்டால் அடுத்த பேருந்துக்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் ஏறிவிட்டாள். ஒரு கையில் சாப்பாட்டு பை இருக்க மற்றொரு கையில் ஹேன்ட் பேக் இருந்தது.

 

உள்ளே ஏறி சாப்பாட்டு பையை காலுக்கு இடையில் வைத்துக் கொண்டவள் பேருந்து கம்பியைப் பிடித்த படி நின்று கொண்டாள். அவளைப் பார்த்த தமிழுக்கு அவள் அழகை விட துல்லியமாக தெரிந்தது அவளது முகத்தில் இருந்த சோர்வு தான். உண்மையிலே அவள் அப்படி தான் இருந்தாள். மாதாந்திர பிரச்சனையாலும் அன்று முழுவதும் வேலையில் எழுந்த அலுப்பினாலும் எப்போதடா சென்று படுப்போம் என்று தான் அவளுக்கு தோன்றியது.

 

“பாவம் இந்த பொண்ணு ரொம்ப டயர்டா தெரியுது”, என்று எண்ணிய தமிழுக்கு எழுந்து சீட் கொடுக்க ஆசை தான். ஆனால் தனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் எழுந்து கொள்வாரா என்று தெரியாதே. அதனால் அமைதியாக அமர்ந்து கொண்டான். வெளியே வேடிக்கை பார்த்தவன் அவளையும் மறந்து விட்டான்.

 

அடுத்த நிறுத்தத்தில் கயல்விழி அருகே ஒரு சீட் காலியாகியது. அப்பாடி என்ற நிம்மதியுடன் அதில் அமர்ந்து கொண்டாள். கொஞ்சம் கூட்டமும் குறைந்தது. ஆங்காங்கே சிலர் நின்றனர் அவ்வளவு தான். அப்போது ஒரு பெண் குழந்தையுடன் அந்த பேருந்தில் ஏறினாள்.

 

பேருந்தில் சீட் கிடைத்ததும் சந்தோஷப் பட்ட கயல்விழி ஒரு பெண் குழந்தையுடன் வரவும் எழுந்து கொள்ள மனமில்லாமல் அந்த குழந்தையை மடியில் வைத்துக் கொள்வதற்காக கேட்டாள்.

 

“இல்லை வேண்டாம்”, என்று அந்த பெண் வெடுக்கென்று முகத்தை வைத்துச் சொல்ல கயலுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

 

அப்படியும் மனது கேட்காமல் “நீங்க உக்காருறீங்களா?”, என்று கேட்டு விட்டாள்.

 

“ஒண்ணும் தேவை இல்லை”, என்று மீண்டும் அந்த பெண் எரிச்சலுடன் சொல்ல கயலுக்கு ஒன்றும் புரிய வில்லை. அங்கிருந்த யாருக்கும் புரிய வில்லை. ஆனாலும் அமைதியாக இருந்தார்கள். பின் சீட்டில் அமர்ந்திருந்த தமிழும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

 

ஆனால் அந்த பெண் கயலை முறைத்த படியே இருக்க சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள் “என்ன ஆச்சுங்க?”, என்று தயக்கத்துடன் கேட்டாள்.

 

“ஒண்ணும் இல்லை”, என்று மீண்டும் வெடுக்கென்று சொல்ல இவள் என்ன லூசா என்று தான் கயலுக்கு தோன்றியது.

 

“வேணும்னா உக்காருங்கன்னு சொன்னேன்ல? எதுக்கு முறைக்கிறீங்க?”, என்று கயல்விழி கேட்க “என்ன எனக்கு பிச்சை போடுறியா? பெரிய இவளா நீ? பிள்ளையோட நிக்குறேன் உனக்கு எழுந்துக்கணும்னு தெரியாது? உக்காருறீங்களான்னு கேட்டுகிட்டு இருக்க? இது என்ன உன் அப்பா வீட்டு பஸ்ஸா? நீயெல்லாம் படிச்சவளா?”, என்று ஆரம்பித்து ஆஊ என்று அந்த பெண் கத்த கயல்விழிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

 

அவள் பேச்சில் சுள்ளென்று கோபம் வந்தாலும் எழுந்து நின்று அந்த பெண்ணுக்கு சீட் கொடுத்தாள். அதில் அந்த பெண் அமர்ந்த பின்னும் அவளை முறைத்த படியே இருக்க கயலுக்கு எரிச்சலாக வந்தது.  அதுவும் அந்த பேருந்தில் இருந்த அனைவரும் அவளையே பார்ப்பது போல இருக்க தன் மீது தவறு இல்லை என்று தெரிந்த பிறகும் ஒரு மாதிரி தான் இருந்தது. அனைவரும் அந்த பெண்ணுக்கு இவள் சீட் கொடுக்க வில்லை என்று இவளை தவறாக நினைப்பது போல ஒரு பிம்பம் எழுந்து ஏற்கனவே சோர்ந்து இருந்தவளை மேலும் சோர்ந்து போக வைத்தது.

 

வயிறும் இடுப்பும் சேர்ந்து வலிக்க வேறு செய்தது. ஊருக்கு இன்னும் நாப்பது நிமிஷம் நின்று கொண்டே செல்ல வேண்டும் என்பதால் கம்பியில் சாய்ந்து அவள் நிற்க “ஏய் தள்ளி நில்லு, உன் கால் என் மேல படுது”, என்று கத்தினாள் அந்த பெண்.

 

இப்போதும் அனைவரும் அவளையே பார்க்க கயலுக்கு கண்கள் கலங்கும் போல இருந்தது. அவசரமாக விலகி அடுத்த சீட் அருகே போய் நின்று கொண்டாள்.

 

அப்போதும் அனைவரும் வேடிக்கை பார்க்க இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த தமிழ் “ஹலோ மேடம், நீங்க பண்ணுறது உங்களுக்கே ஓவரா தெரியலை?”, என்று சுள்ளென்று கேட்டான்.

 

அந்த பெண் பின் பக்கம் திரும்பி அவனைப் பார்க்க இப்போது கயல் மட்டும் அல்ல அனைவருமே தமிழைத் தான் பார்த்தார்கள்.

 

“நான் என்ன செஞ்சேன்?”, என்று அந்த பெண் கேட்க “இல்லை இது என்ன உங்க அப்பா வீட்டு பஸ்ஸா? ஏறினதுல இருந்து ஓவரா அராஜகம் பண்ணுறீங்க? நீங்க வந்த உடனே அந்த பொண்ணு உக்காருறீங்களான்னு தானே கேட்டுச்சு? நீங்க வேண்டாம்னு சொல்லிட்டு அப்படி பேசுறீங்க? இப்ப கால் படுதுன்னு அதிகாரமா வேற சொல்றீங்க? இவ்வளவு நேரம் நீங்களும் அந்த பொண்ணை இடிச்சிட்டு தானே இருந்தீங்க? நான் மட்டும் இல்லை இங்க இருக்குற எல்லாரும் இங்க நடக்குறதை நோட் பண்ணிட்டு தான் இருக்கோம்? கைல குழந்தை இருந்தா உங்க மேல இரக்கம் வந்துருமா?”, என்று கேட்டான்.

 

“ஏய் என்ன நீ அவளுக்கு வக்காளத்தா?”, என்று அந்த பெண் எகிற “ஏமா அந்த தம்பி கேக்குறதுல என்ன தப்பிருக்கு? நாங்களும் கவனிச்சிட்டு தான் இருக்கோம். என்னமோ நீ ஏறி வந்த உடனே உனக்கு சீட்டை கொடுக்கணுமோ? முதல்ல நீ எந்திரி. ஒழுங்கா நின்னுட்டு வா. இல்லைன்னா கீழே இறங்கி அடுத்த பஸ்ல உக்காந்துட்டு வா”, என்று சொன்ன ஒரு பாட்டி கயல் புறம் திரும்பி “நீ வந்து உக்காருமா. நம்ம செய்யுற உதவியை உதவியா நினைக்கிறவங்களுக்கு தான் நாம உதவி செய்யணும். இப்படி மதிக்காதவங்களுக்கு செய்ய கூடாது”, என்றார்.

 

“இல்லை பாட்டி பரவால்ல”, என்று சொன்ன கயலுக்கு இப்போது மனதில் அப்படி ஒரு நிம்மதி. யாரும் தன்னை தவறாக நினைக்க வில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

 

அந்த பெண் இப்போது அவமானத்தில் அமர்ந்திருக்க அதற்கு பின் யாரும் எதுவும் பேச வில்லை. அடுத்த நிறுத்தத்தில் தமிழின் அருகில் இருந்த ஆள் எழுந்து செல்ல “ஏங்க இங்க வந்து உக்காருங்க. நான் எழுந்துக்குறேன்”, என்று கயலை அழைத்தான் தமிழ்.

 

அவன் அருகே சென்றவள் அவனை அந்த ஜன்னல் சீட்டில் இருந்து எழுந்து வெளியே வர விடாத படி அவசரமாக அவன் அருகிலே சென்று அமர்ந்து கொண்டாள். அவனும் எதுவும் பேசாமல் மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தான்.

 

சிறிது நேரம் அவர்களைப் பார்த்தவர்கள் பின் வேறு வேறு பக்கம் திரும்ப “ரொம்ப தேங்க்ஸ்”, என்று அவனைப் பார்த்துச் சொன்னாள் கயல்விழி.

 

சிறு சிரிப்புடன் அவளைப் பார்த்தவன் “அது தேவையில்லை. ஆனால் அந்த பொண்ணுக்கிட்ட நறுக்குன்னு கேட்டுருக்க வேண்டியது தானே?”, என்று கேட்டான்.

 

“யாரையும் எதுத்து பேசி பழக்கம் இல்லை. அதான் அப்படியே விட்டுட்டேன். அது மட்டும் இல்லாம எல்லாரும் என்னையே பாக்கவும் ஒரு மாதிரி இருந்தது. அதான், ஆனா நீங்க பேசினதும் எனக்கு அவ்வளவு நிம்மதியா இருந்துச்சு”, என்று அவளுடைய உண்மையான மனநிலையைச் சொன்னாள்.

 

“இனி கொஞ்சம் மாற முயற்சி பண்ணுங்க. ஏன்னா இந்த உலகத்துல வாய் இருந்தா தான் பிழைக்க முடியும்”

 

“சரி”, என்று சொன்னவள் மனதிலோ “தேவையில்லாம எதுத்து பேசி நிறைய விழுப்புண்களை வாங்கிவிட்டேன். இனியும் வாங்க மனதில் தெம்பில்லை”, என்று எண்ணிக் கொண்டாள்.

 

தொடரும்…..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!