Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iravin Panithuli

அத்தியாயம் 6.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 6

கருமையான இரவு வானில்

காவியம் பாடும் அழகான

நிலவு மகள் நீதானோ?!!!



Advertisement

 

“யாரும் இறங்காதீங்க”, என்று டிரைவர் சொன்னது, பஸ் கிளம்பியது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை. அவள் அதை உணரவும் இல்லை.  அவளுக்கு நினைவில் இருந்தது ஒன்று மட்டுமே. அது அவனின் கரம் அவள் வயிற்றில் இருப்பது மட்டுமே.

 

Advertisement

வேகமாக அவன் கரத்தை தட்டி விட்டவள் திரும்பி அவனை தீர்ப்பார்வை பார்த்தாள். அப்போது பஸ் சென்று கொண்டிருக்கிறது என்பதைக் கூட அவள் உணர வில்லை.

Advertisement

 

அவளுக்கு நினைவில் இருந்தது எல்லாம் “இவன் என்னைப் பத்தி என்ன நினைச்சான்? திடீர்னு அத்தை பையன்னு சொல்றான், கண்ணடிக்கிறான். இப்ப இடுப்புல கை வைக்கிறான்? அந்த அளவுக்கு நான் இளிச்ச வாயா போய்ட்டேனா?”, என்பது மட்டும் தான்.

 

Advertisement

இந்த நினைவுகள் அனைத்தும் மேல் எழும்பி அவள் கோபத்தை இன்னும் அதிகப் படுத்தியது. அவள் திரும்பியதும் தேங்க்ஸ் என்று சொல்வாள், உடனே நாமும் அவளிடம் நட்பாக பேச ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணிய தீபக் அவளுடைய கோபத்தைக் கண்டு திகைத்து விழித்தான்.

 

அவன் திகைத்து விழிக்கும் போதே “து, நீ இப்படி கீழ்தனமா இருப்பேன்னு நினைக்கவே இல்லை”, என்று சொல்லி விட்டு பஸ் நின்றதால் கீழே இறங்கி சென்று விட்டாள். அவன் செய்கையை அவளால் நம்ப முடியவில்லை. “இப்படிச் செஞ்சிட்டானே?”, என்று எண்ணி அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

அவனோ அசைய மறந்து அதே இடத்தில் நின்றான். அப்போது பின்னால் நின்ற சீனியர் ஒருவன் “இறங்குப்பா தம்பி, போய் தான் அசைன்மெண்ட் எழுதணும்”, என்று சொன்னதும் தான் இறங்கி கீழே வந்தான். அப்போதும் அவன் கண்கள் போகும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தது.

 

அடுத்த அடி எடுத்து வைக்கத் தோன்றாமல் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து விட்டான். இப்படி நடக்கும் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை. அவள் கீழே விழுந்து விடக் கூடாது என்பதற்காக தான் அவன் அவளை அப்படி பிடித்தது.

 

ஆனால் அவள் முகத்தில் இருந்த வெறுப்பு அவனை திகைக்க வைத்தது. அவளுடையை நட்பை யாசிக்க வந்தவனுக்கு அவளுடைய வெறுப்பு பயங்கர வலியைக் கொடுத்தது. அதை விட அந்த து என்ற சொல் அவனை அப்படியே நொறுக்கிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

 

தன்னை எவ்வளவு கீழ்தனமாக நினைத்திருந்தால் தன்னைப் பார்த்து அப்படி பட்ட சொல்லை சொல்லியிருப்பாள் என்று எண்ணி அவனுக்கு மனது வலித்தது.

 

அவன் பக்கம் நியாயம் இருந்ததால் அவனுக்கும் கோபம் வந்தது. “என்னைப் பாத்து துன்னு எப்படி அவ சொல்லலாம்? இனி அவ பக்கமே திரும்ப கூடாது”, என்று எண்ணி கிளாசுக்கு எழுந்து சென்றான். ஆனால் அவள் பக்கம் இருந்த நியாயத்தையும், அவன் பக்கம் இருந்த தவறையும் எண்ண தவறி விட்டான்.

 

அவன் கிளாசுக்கு சென்ற போது அவனுடைய நண்பர் பட்டாளம் அவனுக்கு ஆரவாரமாக வரவேற்பு கொடுத்தது. அன்று தான் பங்ஷன் என்பதால் அனைவருமே கொஞ்சம் கிராண்டாக வந்திருந்தார்கள்.

 

அவனுடைய நண்பர்கள் அவனை சூழ்ந்து பேசிக் கொண்டிருக்க அவன் பார்வையோ தன்னால் காயத்ரியை நோக்கிச் சென்றது. அவளோ அவன் பக்கம் திரும்பவே இல்லை. அதில் இன்னும் காயப் பட்டுப் போனான். அவள் மீது கோபம் இருந்தாலும் அதையும் மீறி அவள் மீது தவிப்பே அதிகம் இருந்தது.

 

அவளுக்கோ அவனை நல்லவன் என்று நம்பிய நம்பிக்கை பொய்த்து போன ஏமாற்றம். அதனால் அவனை பார்க்க கூட விரும்பவில்லை. மற்ற நாளாக இருந்திருந்தால் அவன் கிளாசுக்குள் நுழைந்ததில் இருந்து ஒரு முறையாவது அவனை திரும்பி பார்த்திருப்பாள்.

 

தீபக் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன டா ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டான் மதன்.

 

“ஒண்ணும் இல்லை மச்சி, இன்னைக்கு பங்ஷன் நினைச்சு கொஞ்சம் டென்ஷன். நம்ம டிப்பார்ட்மெண்ட் ஸ்டாப் எல்லாரும் இருப்பாங்க. அதான். சரி டா, எல்லாரும் வரும் போது நீங்க வாங்க. என்னை சீனியர் அண்ணா சீக்கிரம் வரச் சொன்னாங்க. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து வெளியே சென்றான்.

 

அப்போதும் அவளை திரும்பி பார்க்க அவளோ அவன் புறம் திரும்பக் கூட இல்லை. அவனும் அதன் பின் செமினார் ஹால் சென்று விட்டான்.

 

அவனுக்கு வரிசையாக வேலைகள் இருக்க விழாவும் ஆரம்பித்தது. ஸ்டுடண்ட்ஸ், ஸ்டாப் அனைவரும் அங்கே கூடி விட்டார்கள்.

 

இரண்டாம் வருட சீனியர்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். முதலில் ஹெச்.ஓ.டியை பேச அழைத்தார்கள்.

 

“வெரி குட் மார்னிங் ஸ்டுடண்ட்ஸ், முதலாம் ஆண்டு மானவர்களுக்கு என்னோட அன்பான வரவேற்புகள். இந்த நாள் உங்களுக்கான நாள். நிறைய நிறைய தயக்கங்கள் உங்களுக்குள் இருந்தாலும் அதையும் மீறி உங்க திறமையை நீங்க காட்டனும். இன்னைக்கு உங்க திறமையை காட்டுறதுல தான் உங்களோட தனித்தன்மை வெளிப்படும். இன்னைக்கு ஒரு பொண்ணோ ஒரு பையனோ மேடை ஏறி நல்லா பாடுறீங்கன்னு வச்சிக்கோங்க, நாளைக்கு ஏதாவது விழால இந்த பொண்ணு நல்லா பாடும், அந்த பையன் நல்லா பாடுவான்னு எங்களால கண்டு பிடிக்க முடியும். அதனால தயக்கத்தை விரட்டுங்க முதல்ல”

 

…..

 

 

“அப்புறம் நீங்க எல்லாம் புதுசா பூத்த பூ மாதிரி. நிறைய கனவுகளுடன் இந்த காலேஜ்க்கு வந்துருப்பீங்க. இன்னைக்கு பூத்து இன்னைக்கு காஞ்சு குப்பைக்கு போற பூவா நீங்க இருக்க கூடாது. நாளைக்கு ஒரு செடியையே உருவாக்குற விதையா நீங்க மாறனும். வரப் போற நாலு வருஷம் நீங்க இங்க தான் படிக்க போறீங்க. எல்லாரும் நல்ல நண்பர்களாவும் ஒற்றுமையாவும் இருக்கணும். இங்க வந்துருக்குற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். இந்த இடம் நீங்க உங்க கனவுகளை ஜெயிக்கிறதுக்கான வழிகாட்டியா இருக்கும்”

 

….

 

“எல்லாத்தையும் புரிஞ்சு படிக்கணும். அதே நேரம் அதை ஜாலியாவும் படிக்கணும். இப்ப நீங்க புரிஞ்சு படிச்சீங்கன்னா அது உங்களுக்கு கடைசி வரை மறக்காது. அப்புறம் முக்கியமான விஷயம், இந்த நாலு வருஷமும் உங்க வால் தனத்தை எல்லாம் குறைச்சிக்கோங்க. உங்க வாலை எல்லாம் சுருட்டி வைக்க சொல்லலை. அடுத்தவங்களை கஷ்டப் படுத்தாம கொஞ்சமா எஞ்சாய்மெண்ட் பண்ணிக்கோங்க. அப்புறம் நிறைய பிரண்ட்ஸை உருவாக்குங்க. உங்களோட நண்பர்கள் உங்களுடன் இருந்தால் உங்களுக்கு வர கஷ்டங்கள் கூட பனி போல விலகி விடும். உங்க எல்லாரைப் பத்தியும் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன். ஆல் தி பெஸ்ட்”, என்று சொன்ன மரியா மேம் கீழே சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.

 

“முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் வரவேற்பு கொடுக்குறோம். எங்க கிளாஸ் பொண்ணுங்களை விட இந்த வருஷம் பொண்ணுங்க சும்மா அழகா தான் இருக்காங்க”, என்று வினித் சொன்னதும் “ஏய், இதெல்லாம் ஓவர்”, என்று அங்கே ஆராவாரம் ஆரம்பித்தது.

 

“ஓகே ஓகே சும்மா சொன்னேன் பிரண்ட்ஸ். என்கூட சண்டைக்கு எல்லாம் வந்துறாதீங்க. இன்னைக்கு நிகழ்ச்சிக்கு வருவோம். முதல்ல முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க எங்களின் வெல்கம் டேன்ஸ்”, என்று சொன்னதும் நடனம் ஆரம்பித்தது.

 

அதன் பின் சீனியர் மாணவர்களின் நடனம், பாட்டு,  நாடகம் என்று தூள் கிளப்பினார்கள்.

 

விழா சீராக நடந்து கொண்டிருக்க கிளாஸ் ரெப்பாக அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருந்தான் தீபக். அனைவரிடமும் புன்னகை முகமாக பேசி பழகுவதால் சீனியர்ஸ் அனைவரும் அவனை தம்பி தம்பி என்று பாசமாக கவனித்துக் கொண்டார்கள். விழா நடக்கும் போது தங்களுடனே அமர வைத்துக் கொண்டார்கள்.

 

அங்கே இங்கே அலைவதில் அந்த டிபார்ட்மெண்ட் கண் முழுவதுமே அவன் மேல் தான் இருந்தது.

 

ஆனால் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தாலும் இடை இடையே தீபக் காயத்ரியை கவனிக்கவும் தவற வில்லை. அவள் பாராத போது அவளை பார்த்துக் கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டான்.

 

சில முறை அவனை திரும்பி பார்த்தவளோ அவன் பார்வையைக் கண்டு அவனை முறைக்க தான் செய்தாள். நீரில் பூத்த நெருப்பாய் அவளுக்குள் அவன் மீதான் கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவளின் அந்த கோபத்தை வெறுத்தான் தீபக்.

 

அவளுக்கோ நிகழ்ச்சியில் எந்த கவனமும் செல்ல வில்லை. அவன் முதல் முறை கண்ணடித்த போதே அவளுக்கு கோபம் தான் ஆனால் இன்றோ அவன் வரம்பு மீறி நடந்ததாக பட்டது. ஆனால் யாரிடமும் அவளால் அவனைப் பற்றி குறை சொல்ல முடியவில்லை. மனதுக்குள் வைத்து குமைந்து கொண்டிருந்தாள்.

 

நந்தினி கூட பல முறை “எதுக்கு டல்லா இருக்க?”, என்று கேட்டு விட்டாள். ஆனால் “ஒண்ணும் இல்லை, லேசா தலை வலி”, என்று சொல்லி சமாளித்தாள் காயத்ரி.

 

அந்த கோபத்திலும் அவன் பார்வையில் இருந்த அடி பட்ட வலியும் இப்போதும் தன்னை தீண்டி செல்லும் அவனுடைய பார்வையும் அவளை எதுவோ செய்தது. அவன் எப்படிப் பட்டவன் என்றே அவளுக்கு புரியாமல் இருந்தது. அவளுடைய எண்ணம் முழுவதும் அவனே ஆக்ரமித்திருந்தான்.

 

சீனியர்ஸ் நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலாம் ஆண்டு மாணவர்களை அழைத்தார்கள்.

 

முதலில் அமர்ந்திருப்பது படி வரிசையாக அழைக்க சில மாணவ மாணவிகள் தயங்கி எழுந்து வராமல் இருந்ததால் விருப்ப பட்டவர்கள் வரலாம் என்று சொன்னார்கள்.

 

தினேஷ் சென்று கராத்தே செய்து காண்பித்தான். அது மட்டுமல்லாமல் அவன் வாங்கிய பெல்ட்களைப் பற்றி சொன்னான்.

 

அடுத்தது விக்னேஷ் சென்று நடனமாடினான். அதன் பின் மதனும் நிர்மலும் சேர்ந்து கவுண்டமணி செந்தில் காமெடி செய்து அசத்தினார்கள்.

 

பெண்கள் பிரிவில் சிலர் வந்து பாட்டு, நடனம் என்று செய்தார்கள். நந்தினி தன்னுடைய துப்பட்டாவை டேன்ஸ் கிளாசில் செய்வது போல குறுக்காக வைத்து மறைத்து மின்சாரக் கண்ணா பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடினாள். அவளுடைய ஆட்டத்தைக் கண்டு அனைவரும் வியந்தார்கள்.

 

கைத் தட்டி பாராட்டவும் செய்தார்கள். மதனோ அவள் நடனத்தில் மெய் மறந்து அமர்ந்திருந்தான்.

 

அடுத்தது காயத்ரி முறை. காயத்ரிக்கு எழுந்து செல்லவே விருப்பம் இல்லை. அதனால் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆனால் நந்தினி அவளை விட வில்லை.

 

“இது தான் நமக்கான திறமையை காட்டுற இடம் காயு. கொஞ்ச நேரம் உன்னோட தலை வலியை ஒத்தி வச்சிட்டு உன் திறமையை காட்டு டி. எனக்கு கூட உனக்குள்ள என்ன திறமை இருக்குனு தெரியாது. போ போ”, என்று சொல்லி விரட்டி விட்டாள்.

 

அவள் மேடை ஏறி மைக் பிடித்ததும் தீபக் கண்கள் அங்கே இங்கே அசைய வில்லை. அவள் மீதே நிலைத்திருந்தது.

 

காயத்ரி, தீபக் நினைவுகளை ஒதுக்கி விட்டு தான் மேடை ஏறினாள். ஆனாலும் அவள் மனதில் சந்தோஷம் வரவில்லை. அதனால் யமுனை ஆற்றிலே என்ற பாடலை தேர்ந்தெடுத்து பாடினாள்.

 

அவளுடைய சோகமான மனநிலைக்கு அந்த பாடல் அப்படி சரியாக பொருந்தியிருந்தது. அவளுடைய குரல் வளம் சிறப்பாக இருக்கும் என்பதால் பள்ளியில் படிக்கும் போதே அவள் தான் சிங்கிங் டீமில் இருந்தாள் என்பதால் இப்போது அவளுக்கு மேடை பயம் எல்லாம் இல்லை.

 

கண்களை மூடி யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடு நான் ஆட… என்று பாட, செமினார் ஹால் முழுவதுமே அமைதியில் உறைந்திருந்தது.

 

தீபக்குமே அவளுடைய பாடலில் அசந்து தான் போனான். இதற்கு முன்னரும் பலர் பாட்டு பாடினார்கள் தான். ஆனால் இவளுடைய குரலைப் போல் யாரோடதும் இல்லை.

 

அவளுடைய குரலில் ஒரு தனித் தன்மையும் கேட்பவர்களை வசீகரிக்கும் தன்மையும் இருந்தது.

 

பாடல் முடிந்த பின்னர் காயத்ரி கண்களை திறக்கும் போது கைத் தட்டில் அந்த அறையே அதிர்ந்தது. அதைக் கண்டு புன்னகைத்தவாறே மைக்கை அவள் சீனியரிடம் கொடுக்க “உங்க வாய்ஸ் ரொம்ப அருமை காயத்ரி. எங்களுக்காக திருப்பி ஒரு முறை இந்த பாட்டை பாடணும்னு கேட்டுக்குறோம்”, என்று மீண்டும் அவளிடமே மைக்கை கொடுத்தான் வினித்.

 

“ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்…”, என்று மற்றவர்களும் கத்த “அதே பாட்டை பாடினா, எல்லாருக்கும் போர் அடிச்சிரும். அதனால வேற பாட்டை பாடுறேன்”, என்று சொல்லி “எங்கே எனது கவிதை”, என்ற பாடலைப் பாடினாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!