Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 6.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

அவர்கள் மூவரையும் ஆட்டோவில் ஏற்றிய அமர் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு அவர்களை மருத்துவமனைக்கு பின் தொடர்ந்தான்.

 

அங்கு அவளுக்கு முதலுதவி நடக்க எல்லா செலவுக்கும்  அமர் தான் பணம் கொடுத்தான். பின் மீண்டும் அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

 



Advertisement

தன்னை தேடி வந்தவளுக்கு இப்படி ஆனது அவ்வளவு வருத்தமாக இருந்தது அமருக்கு.

 

பிரியாவை எண்ணி அவ்வளவு கோபமும் வந்தது. தனக்கு என்ன ஆனாலும் பொறுத்துக் கொள்வான். அதே அவளுக்கு ஒன்று என்றால் எப்படி பார்த்துக் கொண்டிருப்பான்?

Advertisement

 

Advertisement

அடுத்த இரண்டு நாளில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஒரு சிறிய விபத்தில் சிக்கி கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் பிரியா. எப்படி ஆனது என்று அவள் உணரும் முன்னே இது நடந்திருந்தது.

 

அவளால் இரண்டு லேப் எக்ஸாம் வேறு எழுத முடியாமல் போனது. இதை அமர் தான் செய்திருப்பான் என்று அவளுக்கு மட்டும் நன்கு தெரியும். ஆனால் எதுவும் செய்ய முடிய வில்லை.

Advertisement

 

அந்த செமஸ்டர் அப்படியே கடக்க அதற்கு பின் வந்த நாட்கள் ரதி மற்றும் அமர் இடையே காதல் அதிகரித்தது. உரிமையாக காதலாக பேசுவது அவளுக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லியுமே அமர் கொஞ்சம் விலகி தான் இருந்தான்.

 

அதற்கு காரணம் கேட்டதற்கு “எனக்கு என் மேலயே நம்பிக்கை இல்லை ரதி. நான் உன்னை விட்டு தள்ளி இருக்குறது தான் ரெண்டு பேருக்குமே நல்லது. என்னை இப்படியே விடு”, என்று சொல்ல அதற்கு பின் அவள் என்ன செய்வாளாம்?

 

இருவரும் நிறைய பேசினார்கள். என்ன பேசினார்கள் என்று கேட்டால் அவர்களுக்கே தெரியாமல் தான் போனது. நாள் ஆக ஆக ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை என்ற அளவுக்கு இருவருக்குள்ளும் காதல் அதிகரித்தது.  அவனது பிறந்த நாளுக்கு வெள்ளியில் அவனுக்கு மோதிரம் வாங்கி பரிசளித்தாள். அதை அவளையே போட்டு விடச் சொல்லி சந்தோஷப் பட்டான் அமர். தங்கமோ வைரமோ கொடுக்காத திருப்தியை அந்த வெள்ளி அவனுக்கு கொடுத்தது. அவனைப் பொறுத்த வரை அது பொக்கிஷம்.

 

அவளுக்கும் ஏதாவது வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருக்கும். ஆனால் அவள் வீட்டில் பிரச்சனை வரும் என்று மறுத்து விடுவாள். அதுவே அவனுக்கு மனதுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவ்வளவு ஆசை அவனுக்கு. அதற்கான தருணம் தான் இல்லை.

 

காதலர்கள் தங்கள் உலகில் பயணித்துக் கொண்டிருக்க தம்பியின் காதலை முதலில் தெரிந்து கொண்டது சாணக்கியன் தான். அன்று மிகப் பெரிய மன உளைச்சலில் இருந்தான் சாணக்கியன். ஏனென்றால் காலையில் தான் ஸ்னேகா மயங்கி விழுந்து விட அவன் தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.

 

அங்கே அவள் குழந்தை உண்டாகி இருப்பதாக சொல்ல பட அப்போதிருந்து ஆட ஆரம்பித்து விட்டாள் ஸ்னேகா. குழந்தைக்காக அநேகம் பேர் தவம் இருக்க அவளோ இந்த குழந்தை இப்போது வேண்டாம் என்று அடம் பிடித்தாள்.

 

சாணக்கியன் எவ்வளோ பேசிப் பார்த்தும் அவள் அடமாய் இருக்க இதே சூழ்நிலையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மனதில்லாமல் அவளை அவளது தந்தை வீட்டில் விட்டவன் “என்ன முடிவு எடுக்கணுமோ உன் அப்பா கிட்ட சொல்லிட்டு எடுத்துக்கோ. நான் இதை என் வீட்ல சொல்ல மாட்டேன். ஏன்னா அவங்க என்னை ஒரு ஆம்பளையா பாக்குறாங்க. உன் விஷயத்துல நான் முடிவு எடுக்க தெரியாத முட்டாளா இருக்கேன்னு தெரிஞ்சா என்னை அசிங்கமா தான் பாப்பாங்க”, என்றவன் சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

நேராக வீட்டுக்கு வந்தவன் அவர்களது அறைக்குள் செல்ல ஏனோ அங்கிருக்கும் பொருள்கள் எல்லாம் அவளுக்கு ஸ்னேகாவை நினைவு படுத்த மூச்சு முட்டுவது போல இருந்ததால் தம்பியைத் தேடிச் சென்றான்.

 

“வா அண்ணா”, என்று அமரும் அழைக்க இருவரும் சிரித்த படி பேசிக் கொண்டிருக்க அப்போது அமர் பாத்ரூம் எழுந்து சென்றான்.

 

அப்போது பார்த்து அவனது ஃபோன் சத்தம் கொடுக்க எடுத்துப் பார்த்தான். அதில் ரதியிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது.

 

“துணி துவைக்க போயிருந்தேன் பா. அதான் உங்க கால் பாக்கலை. சாரி..”, என்று அனுப்பி இருப்பது வரை தான் அவன் கண்ணில் பட்டது.

 

அப்படியே போனை வைத்து விட்டு தம்பியின் வருகைக்காக காத்திருந்தான். அமரும் வெளிய வந்ததும் முதலில் எடுத்துப் பார்த்தது போனைத் தான். தம்பியை மெதுவாக நோட்டம் விட்டான் சாணக்கியன்.

 

ரதியிடம் இருந்து மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தவன் சிறு புன்னகையுடன் அவளுக்கு பதில் அனுப்பிய படி அண்ணனுடன் பேச ஆரம்பிக்க அமரின் நடவடிக்கை சாணக்கியனைக் குழப்பியது.

 

“என்ன டா அமரா உன் முகத்துல ஏதோ பெரிய வித்தியாசம் தெரியுதே?”, என்று கேட்க திடுக்கிடலுடன் அண்ணனைப் பார்த்தவன் ஏதேதோ சமாளித்தான். ஆனாலும் சாணக்கியனுக்கு நிச்சயம் தெரிந்தது தம்பி பொய் சொல்கிறான் என்று. ஆனால் அதற்கு மேல் எதுவும் கேட்டு அவனை தொல்லை செய்ய வில்லை.

 

ஸ்னேகா அடுத்த நாளே அவளது வீட்டில் இருந்து வந்து விட்டாள். அவளது தந்தை என்ன சொன்னாரோ உடனே குழந்தையை பெற்றுக் கொள்ள சம்மதித்தாள். “என்ன சொல்லியிருப்பார்? உன் மகன் தான் அரசியல் வாரிசு. அதனால் கலைக்காதேன்னு சொல்லியிருப்பார். சுயநல பிசாசுங்க”, என்று எண்ணிக் கொண்டான் சாணக்கியன்.

 

தருமர், சகுந்தலா, அமர் மூவருக்குமே அது சந்தோஷம் தான். சாணக்கியனுக்கும் சந்தோஷம் தான் என்றாலும் அவனுக்கு ஸ்னேகாவைக் கண்டாலே எட்டிக் காயாக கசக்க தான் செய்தது.

 

அந்த அளவுக்கு அவளைப் படுத்தி எடுக்க மாசமாக இருப்பவளை வார்த்தையால் கூட காயப் படுத்த கூடாது என்று முடிவு எடுத்தவன் அவளை விட்டு ஒதுங்கியே இருந்தான். இதில் அமர் வேறு குழந்தை வரப் போகும் சந்தோஷத்தை கொண்டாட ரதி மற்றும் திவ்யாவுக்கு இனிப்பு வழங்க திவ்யாவின் உணர்வுகளைக் கேட்கவும் வேண்டுமா? அந்த இனிப்பு அவளுக்கு ஒரு துளி கூட தித்திப்பைத் தர வில்லை. அவன் பக்கம் நியாயம் தான் என்று அவள் மூளை சொன்னாலும் சாணக்கியன் மீது ஒரு தீராத கோபம் ஒன்று உருவானது.

 

அப்படியே மாதங்கள் கடக்க அமர் அப்போது கடைசி செமஸ்டரில் இருந்தான். அப்போது தான் ரதிக்கு பிறந்த நாள் வரப் போவது நினைவில் வந்தது.

 

அதை சிறப்பாக கொண்டாட அவன் மனம் துடித்தது.இது வரை அவளுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்ததால் வரப் போகும் நாளை அவளை மறக்க முடியாத படி செய்ய வேண்டும் என்று எண்ணி ஏதேதோ யோசித்து என்ன என்னவோ பிளான் செய்தான்.

 

அதற்கு நிச்சயம் திவ்யா உதவி தேவை என்று புரிந்து அவளிடம் கேட்டான். அவளுக்கோ அக்காவை கல்லூரியை கட் அடித்து விட்டு அவனுடன் தனியே அனுப்ப வேண்டுமா என்று அவ்வளவு தயக்கமாக இருந்தது.

 

ஆனால் காதலித்து இத்தனை மாதங்கள் ஆன போதும் இப்படி எப்போதும் நடந்ததில்லை, அவர்களும் தனியே எங்கேயும் சந்தித்து கொள்ள வில்லை என்பதால் கொஞ்சம் யோசித்தாள்.

 

ரதியிடம் கேட்டதற்கு முடியவே முடியாது என்று தான் சொன்னாள். ஆனால் அமருக்கோ ஒரு நாள் முழுக்க அவளுடன் இருக்க அவ்வளவு ஆசை.

 

“பிளீஸ் டி, ஒரு நாள் தானே?”, என்று கெஞ்சி கேட்டே சம்மதம் வாங்கினான்.

 

அந்த நாளும் வந்தது. இரவு பன்னிரெண்டு மணிக்கு முதல் வாழ்த்துச் சொன்னது அமர் தான்.

 

காலையில் சிறிது பயத்துடன் தான் கிளம்பினாள். பஸ் ஸ்டாண்ட் வந்ததும் ஆயிரம் பத்திரம் சொல்லி ரதியை அவனுடன் அனுப்பி விட்டு கல்லூரிக்குச் சென்றாள் திவ்யா. அங்கே நடக்கப் போவது தெரிந்தால் அக்காவை அனுப்பி இருக்க மாட்டாளோ என்னவோ?

 

தன்னுடைய வண்டியில் அவளை ஏற்றிக் கொண்டு அவளுடனான முதல் பைக் பயணத்தை ரசித்த அமர் அவள் அமைதியைக் கண்டு “பயப்படாத ரதி மா, கண்டிப்பா காலேஜ் முடியுற டைம் நீ திவ்யா கூட வீட்டுக்கு கிளம்பிருப்ப. என்னை நம்பு டி”, என்று சொல்ல அரை மனதாக சரி என்று சொன்னாள்.

 

முதலில் கோவிலுக்கு தான் அழைத்துச் சென்றான். அங்கே சாமியை மனம் உருக வேண்டியவர்கள் அடுத்து சென்றது மகாபலிபுரம் தான். அங்கு உள்ள சிற்பங்களை எல்லாம் ரசித்துப் பார்த்து விட்டு கடலை நோக்கி சென்றார்கள். அவன் அதீத அன்பில் ரதியும் அனைத்தையும் மறந்து அவன் காதலில் திளைத்தாள்.

 

ஒருவர் மீது மற்றவர் தண்ணீரை வாறி இரைத்த படி விளையாடியது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது இருவருக்கும்.

 

மதியம் இரண்டு மணிக்கு தான் அங்கு உள்ள ரிசார்ட்க்கு அவளை அழைத்துச் சென்றான். உடை ஈரமாக இருக்க அவளுக்கு என வாங்கிய சேலையை முதல் பரிசாக கொடுத்தவன் “ஈர டிரஸை காயப் போடு மா. இதை மாத்திக்கோ. நான் லஞ்ச் சொல்லிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

 

அவன் செய்கையில் புன்னகைத்தவள் அவன் கொடுத்த சேலையை ஆசையாக வருடி உடுத்தி விட்டு ஈர உடையை உலர்த்தப் போட்டாள்.

 

மதிய உணவு சொல்லி விட்டு அறைக்குள் வந்தவனுக்கு அவள் அழகில் மூச்சடைத்த உணர்வு தான். அந்த ரோஜா வண்ண சேலையில் அவள் ரோஜாவாகவே மலர்ந்திருக்க “கடவுளே சாப்பிட்டுட்டு கிளம்பிறணும்”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

 

அவளை நெருங்கியவன் “அழகா இருக்க டி”, என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொள்ள அவளுக்கு தான் சப்பென்று போனது. தன்னவனின் வர்ணிப்பை அதிகம் எதிர் பார்த்தாள் பெண்.

 

“இனி வர எல்லா பிறந்தநாளும் உனக்கு சந்தோஷமா அமையணும் டி கண்ணம்மா”, என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க அவளும் அவன் மார்பில் உரிமையாக சாய்ந்து கொண்டாள்.

 

அப்போது மதிய உணவும் வந்து விட இருவரும் பிரிந்தார்கள். அவளுக்கு பிடித்த அனைத்தும் அங்கே இருந்தது.  முதல் வாயை அவன் அவளுக்கு ஊட்டி விட அவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அவளும் அவனுக்கு ஊட்டி விட எவ்வளவு சாப்பிட்டார்கள் என்று அவர்களே அறிய வில்லை.

 

உணவு முடிந்து கட்டிலில் சாய்ந்த படி அமர்ந்திருந்த அமர் அவளையும் அருகே அமர வைத்த படி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

 

“நேரம் ஆகப் போகுது. வீட்டுக்கு போகலாமா?”, என்று கேட்டாள் ரதி. ஏனென்றால் வெளியே சுற்றிய போது கூட இல்லாத பயம் இப்போது இந்த நான்கு சுவருக்குள் அவளுக்கு வந்திருந்தது.

 

“கொஞ்ச நேரம் இரு டி. இன்னொரு நாள் எப்ப வருமோ தெரியாது?”, என்ற படி அவள் தோள் வளைவில் கை போட்டு அவன் சாதாரணமாக கதை பேச அவளுமே அந்த பேச்சை ரசித்தாள்.

 

ரதிக்கு இப்படியே இந்த உலகம் நின்று விடாதா என்று இருந்தது. அவளுக்குமே இந்த நாள் அழகிய நாள் தான். அவனுடன் காலை உணவு, மதிய உணவு, கோவிலுக்கு போனது, அவன் தந்த நெற்றி முத்தம், அவன் மார்பில் தலை சாய்த்தது என அதிக சந்தோஷ நினைவுகளைக் கொடுத்திருந்தான்.

 

“என்ன டி எதுவுமே பேச மாட்டிக்கிற? ஏதோ யோசிக்கிற?”

 

“எனக்கு இப்படியே இருந்துறக் கூடாதானு இருக்கு, நம்ம கல்யாணம் எப்ப நடக்கும்னு ஆசையா இருக்கு? எனக்கு உங்க கிட்டயே இருக்கணும் போல இருக்குப் பா”

 

“எனக்கும் அடிக்கடி தோணும் டி”, என்றவன் அவள் கையைப் பற்றி வருடிய படியே “கண்டிப்பா நம்ம ஒண்ணா இருக்குற நாள் சீக்கிரம் வரும் டி. அப்புறம் எப்பவும் நீ என் கைக்குள்ள தான் இருப்ப”, என்றான்.

 

இருவர் முகமும் வெகு அருகில் இருக்க ஒரு மாதிரி சிலிர்ப்பு இருவருக்குமே. அடிவயிற்றில் மின்னல் தெரிப்பது போல உணர்வு.

 

“போகலாமா?”, என்று கேட்டாள் ரதி. அவளுக்கே ஒரு மாதிரி இருக்கையில் அவன் எப்படி சும்மா இருப்பான் என்று பயமாக இருந்தது.

 

“கொஞ்ச நேரம் இருக்கலாமே?”, என்று சொன்னவனின் குரல் அவ்வளவு கிசுகிசுப்பாக வந்தது.

 

அவன் பேச்சிலும் பார்வையிலும் தொண்டைக்குள் எதுவோ அடைத்துக் கொள்வது போல இருந்தது.

 

“பிளீஸ் போகலாமே?”, என்றாள் மீண்டும். அவள் கோபமாக சொல்லி இருந்தால் கிளம்பி இருப்பானோ என்னவோ? அவள் தவிப்புடன் சொல்ல அவனால் அங்கிருந்து அசைய கூட முடியவில்லை.

 

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!