Skip to content
Post Views: 49
கண்ணாமூச்சி – 7
மெய்நிகர் உலகின் விஷ்வாவுடனான அந்தச் சந்திப்பு நிலாவை நிலைகுலையச் செய்திருந்தது. ‘விக்’ கடற்கரையின் கருப்பு மணலில் விஷ்வாவின் கைகளைப் பற்றி நடந்த அந்த நொடிகள், அவனது பார்க்காவின் கதகதப்பு, அவன் மூச்சுக்காற்று அவள் கழுத்தில் உருவாக்கிய சிலிர்ப்பு… இவை அனைத்தும் வெறும் கற்பனை பிம்பங்கள்தான் என்று அவளது மூளை எச்சரித்தாலும், ஒரு பெண்ணாக அவளது இதயம் அந்த நெருக்கத்தை ரகசியமாக ரசித்தது.
நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தின் கட்டுப்பாடுகளுக்குள் வளர்ந்ததால் அவளது மனம், “இதென்ன முன்பின் தெரியாத ஒரு ஆண்மகனிடம் இத்தனை நெருக்கம்?” என்று அவளைச் சாடினாலும், விஷ்வாவின் மீதான அன்பு அந்தச் சலனங்களை எல்லாம் மெல்லத் தோற்கடித்தது.
மறுபுறம், நிலாவின் வீட்டில் ஒரு புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது. நிலாவின் அண்ணனுக்காக வேண்டியிருந்த நேர்த்திக்கடனைச் செலுத்த, அவளது பெற்றோர் தங்கள் பூர்வீக கிராமத்திற்குச் செல்லத் தீர்மானித்தனர்.
Advertisement
“நிலா… நாளைக்கு அதிகாலையிலேயே நாம கிளம்பணும். குலதெய்வம் கோவில்ல பூஜைக்கு சொல்லிருக்கோம், உங்க அண்ணன் பேருல அர்ச்சனை பண்ணி அந்த வேண்டுகோளை முடிச்சுட்டு வந்துடலாம், உனக்கும் அடுத்த வாரத்துல இருந்து இன்டர்ன்ஷிப் ஆரம்பிக்குதுல்ல, அப்பறம் லீவ் போட முடியாதுன்னு சொன்னியே,” என்றார் ரங்கநாதன்.
சென்னையில் இந்தப் பரபரப்பு என்றால், ஐஸ்லாந்தில் விஷ்வா உச்சக்கட்ட வேலையில் இருந்தான். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளைப் படமாக்க இரவு நேரப் படப்பிடிப்புகள் திட்டமிடப்பட்டிருந்தன. நிலாவைச் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை அவனைக் குடைந்துகொண்டே இருந்தது.
அன்று மாலை, கிராமத்திற்குப் புறப்படும் ஆயத்தங்கள் நடந்துகொண்டிருக்க, நிலா எப்படியாவது விஷ்வாவை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று துடித்தாள். இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழ வேண்டும் என்பதால், வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே ஹெட்பேண்டை மாட்டிக் கொண்டு மெய்நிகர் உலகிற்குள் நுழைந்தாள்.
Advertisement
ஆனால் விதி அவளுக்குச் சாதகமாக இல்லை. அவள் மெய்நிகர் உலகிற்குள் நுழைந்து விஷ்வாவைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே, “நிலா! நிலா… என்ன பண்ற உள்ள? சீக்கிரம் வந்து துணிகளை எல்லாம் பேக் பண்ணிட்டுப் படு. நாளைக்கு நாலு மணிக்கெல்லாம் வண்டி வந்துரும்,” என்று தங்கம்மாவின் குரல் அறை வாசலில் கேட்டது.
Advertisement
“ஐயோ அம்மா வந்துட்டாங்க… விஷ்வா, நான் கிளம்பணும், ஸாரி…” என்று பதறியவள், விஷ்வா பதில் சொல்வதற்குள் அவசர அவசரமாக ஹெட்பேண்டைக் கழற்றிவிட்டாள்.
அங்கே மெய்நிகர் உலகில் விஷ்வா அதிர்ச்சியில் உறைந்து நின்றான். பாதிச் சந்திப்பில் நிலா திடீரென மறைந்தது அவனுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது.
நிலா திடீரென மறைந்த அந்த விநாடி, ஐஸ்லாந்தின் விக் கிராமத்துக் கடற்கரையில் தனித்து விடப்பட்ட விஸ்வநாத்திற்குள் ஏமாற்றமும், கோபமும் ஒரு சேர எரிமலையாய் வெடித்தன. தன் கைகளில் இருந்த அவளது விரல்களின் கதகதப்பு மறைந்து, வெறும் பனிக்காற்று மட்டுமே எஞ்சியிருந்த அந்த ஏகாந்த வெளியில், அவன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பித்துப்பிடித்தவன் போல அலைந்தான். அவளது வருகைக்காகக் காத்திருந்த ஒவ்வொரு நிமிடமும் அவனுள் ஏமாற்றத்தை அதிகமாக்கியது. ‘ஏன் இப்படிச் செய்தாள்? இப்படி திடீரென்று நிலா ஏன் மறைந்துவிட்டாள்?’ என்ற கேள்வி அவனது காதல் மனதை உலுக்கியது.
Advertisement
இரவு முழுவதும் தூக்கம் கெட்டு, விடிய விடிய விழித்திருந்தான். ஒருவேளை செயலியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்குமோ என்று நினைத்தான். ஆனால் அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. குழப்பத்திலும் கோபத்திலுமே அவன் மனம் உழன்று கொண்டிருந்தது.
மறுநாள் காலை, ஐஸ்லாந்தின் அந்தப் புகழ்பெற்ற பனிப்பள்ளத்தாக்கு பகுதியில் க்ளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்புத் தளம் தயாராகியிருந்தது. ஆனால், விஷ்வாவின் மனநிலை முற்றிலும் தலைகீழாக மாறியிருந்தது.
வழக்கமாக கேரவனில் இருந்து புன்னகையுடனும், அனைவருக்கும் வணக்கம் சொல்லியபடியும் இறங்கும் விஸ்வநாத், இன்று கடுகடுப்பான முகத்துடன், கண்கள் சிவக்க இறங்கினான். அவனது உடலசைவுகளில் ஒரு விசித்திரமான பதற்றமும், கோபமும் அப்பட்டமாகத் தெரிந்தன.
அவனது இந்தத் திடீர் மாற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் அசிஸ்டன்ட் டைரக்டர்களே.
“ஷாட் ரெடி சார்…” என்று தயக்கத்துடன் வந்த அசோசியேட் டைரக்டரை ஏறிட்டுப் பார்த்த விஷ்வா, “ஸ்கிரிப்ட் பேப்பர்ல இருக்குற டயலாக்ல இன்னும் அசோசியேஷனே வரல, அதுக்குள்ள என்ன ஷாட் ரெடி? ஒர்க் பண்ணிட்டு கூப்பிடுங்க!” என்று எரிந்து விழுந்தான்.
அங்கிருந்த லைட்மேன்கள், கேமரா உதவியாளர்கள் என அனைவரும் விஷ்வாவின் கோபத்திற்குப் பயந்து நடுங்கினர். சின்ன ஒரு ஒளியமைப்பு மாறுபாட்டிற்கு கூட, “டைம் வேஸ்ட் பண்றீங்க” என்று விஷ்வா கத்தியபோது செட்டில் நிசப்தம் நிலவியது. எப்போதுமே ஸ்பாட்டில் கலகலப்பாக இருக்கும் இயக்குநர் கூட இன்று விஷ்வாவை நெருங்கத் தயங்கினார். அவனுள் இருந்த நிலாவின் பிரிவு தந்த ஏக்கம், ஒட்டுமொத்தப் படப்பிடிப்புத் தளத்தையும் ஒரு போர்க்களமாக மாற்றியிருந்தது.
அந்தப் படத்தின் நாயகியான நயனிகா, கோலிவுட்டின் முன்னணி நடிகை. பல ரசிகர்களின் கனவு நாயகி. ஆனாலும் விஸ்வநாத்தின் மீது அவளுக்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது. அவனது அந்த கம்பீரமும், திரையுலக அந்தஸ்தும், ஆண்மையும் அவளைப் பலமுறை சுண்டியிழுத்திருந்தன.
இன்று செட்டில் விஷ்வா கோபமாக இருப்பதை அறிந்தவள், அவனது கோபத்தைத் தணித்து, அவனிடம் நெருங்குவதற்கு இதுதான் சரியான சமயம் என்று கணக்கிட்டாள்.
தன் ஒப்பனையைச் சரிசெய்துகொண்டு, கையில் ஒரு பிரத்யேகமான சூடான ஆர்கானிக் கிரீன் டீ கப்புடன் விஷ்வாவின் தனிப்பட்ட கேரவனுக்குள் நுழைந்தாள் நயனிகா.
“ஹே விஷ்வா… என்னாச்சு? இன்னைக்கு செட்ல எல்லாரும் உன் கோபத்தைப் பார்த்து நடுங்கிட்டு இருக்காங்க. ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கீங்களா? இந்தாங்க… உங்களுக்காக ஸ்பெஷலா கொண்டு வந்தேன், குடிச்சா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்,” என்று தன் கிசுகிசுப்பான குரலில் பேசிக்கொண்டே, அவனது சோபாவிற்கு மிக அருகில் நெருங்கி அமர்ந்தாள்.
அவளது உடலிலிருந்து வீசிய அந்த விலையுயர்ந்த பிரெஞ்சு வாசனை திரவியத்தின் மணம், விஷ்வாவிற்கு நேற்று இரவு மெய்நிகர் உலகில் நிலாவிடமிருந்து வீசிய அந்த எளிய நந்தவனத்து மல்லிகைப் பூவின் வாசனையைத்தான் நினைவூட்டியது. அந்த ஒப்பீடே அவனுக்குள் எரிச்சலைக் கூட்டியது.
நயனிகா மெதுவாகத் தன் கையை நீட்டி, விஷ்வாவின் தோள் மீது லேசாகத் தட்டி, அவனது விரல்களைத் தீண்ட முயன்றாள். அவளது கண்களில் இருந்த அந்த அதீத கவர்ச்சியும், அணுக்கமும் எத்தனையோ ஆண்களை வீழ்த்தியவை. ஆனால் விஷ்வாவிடம் அது வேலை செய்யவில்லை.
“ம்ப்ச், தேங்க்ஸ் நயனிகா. எனக்கு எதுவும் வேண்டாம். இப்போ எனக்கு டயலாக் படிக்கனும், கொஞ்சம் தனியா இருக்க விடுறீங்களா?” என்று அவளது முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல், தன் கையில் இருந்த ஸ்கிரிப்ட் பேப்பருக்குள் கண்களைப் புதைத்துக் கொண்டான் விஷ்வா. அவளது கையை அடியோடு புறக்கணித்துத் தள்ளி நின்றான்.
ஒட்டுமொத்தத் திரையுலகமே தன் அழகின் பின்னால், பைத்தியமாகி அலைந்து கொண்டிருக்க, விஸ்வநாத் தன்னை ஒரு சாதாரணப் பொருட்டாகக் கூட மதிக்காமல், அவனை நெருங்க முயலும் தன் அத்தனை முயற்சிகளையும் அடியோடு புறக்கணித்தது நயனிகாவின் பெண்மைக்கு ஏற்பட்ட பெரும் அவமானமாகத் தோன்றியது. அவளது அகம் சுக்குநூறாக உடைந்தது. கன்னங்கள் அவமானத்திலும் கோபத்திலும் சிவந்தன.
அவள் கையில் இருந்த டீ கப்பை அங்கிருந்த மேஜை மீது சத்தமாக வைத்துவிட்டு, கேரவனின் கதவை பலமாகச் சாத்திவிட்டு வெளியேறினாள். ஆனால், அந்த அவமானம் அவளுக்குள் ஒரு புதிய வெறியை விதைத்தது.
“என்னைப் பார்த்தா உனக்குச் சாதாரணமாகத் தெரியுதா விஸ்வநாத்? எந்த ஒரு விஷயத்தையும் தோத்து எனக்குப் பழக்கமில்லை. இந்த நயனிகாவோட அழகையும், அன்பையும் நீ இவ்வளவு மட்டமா நிராகரிச்சிருக்கக் கூடாது. நீ யாரை மனசுல வச்சுட்டு இப்படி நடந்துக்கிறன்னு எனக்குத் தெரியாது… ஆனா, சீக்கிரமே உன்னை என் கால்ல விழ வைப்பேன். இந்த விஸ்வநாத் எனக்கானவன் மட்டும்தான்!” என்று தனக்குள்ளேயே சபதம் எடுத்துக் கொண்டாள்.
அவளது மனதில் விஷ்வாவின் மீதிருந்த ஈர்ப்பு, இப்போது எப்படியாவது அவனை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆபத்தான பிடிவாதமாக மாறத் தொடங்கியிருந்தது!
அதே நேரம் சென்னையில் இருந்து கிராமத்தை நோக்கிய பயணம் விடியற்காலை நான்கு மணிக்கே தொடங்கியது. காரின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலாவிற்குள் ஒரே குழப்பம். “கிராமத்துல வீட்டைச் சுத்தி எப்பவும் யாராவது இருப்பாங்களே… அங்கே எப்படித் தனியா இந்த ஹெட்பேண்டை போட்டுட்டு விஷ்வாவைப் பார்க்க முடியும்? யாராவது பார்த்துட்டா என்ன பண்றது?” என்ற கவலை அவளை வாட்டியது. விஷ்வாவைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கம் அவளது கண்களில் நீராகத் ததும்பியது.
கிராமத்திற்குச் சென்றதும் ரங்கநாதனின் குடும்பமே வாசலில் நின்று அவர்களை அன்புடன் வரவேற்றது. நிலாவின் பாட்டி கோமதி அம்மாள் அவளை ஓடி வந்து அணைத்துக் கொண்டார். அவளது மாமா, அத்தை என உறவினர்கள் அனைவரும் அன்பைப் பொழிந்தனர்.
“என் செல்லப் பேத்தி எவ்வளவு இளைச்சுப் போயிட்டா பாரு,” என்று கவலைப்பட்ட பாட்டி அவளுக்குப் பிடித்தமான உணவுகளைச் சமைத்துப் பரிமாறினார். தன் கையாலேயே உருண்டை பிடித்து நிலாவிற்கு ஊட்டினார். சுடச்சுடச் சோறும், மணம் கமழும் காரக்குழம்பும், மொறுமொறுப்பான கத்தரிக்காய் வதக்கலும் நிலாவின் நாவிற்கு ருசியாக இருந்தாலும், அவளது மனம் “விஷ்வா சாப்பிட்டிருப்பாரா? அவருக்கு யாரு சமைச்சு போடுவா? அவங்க அம்மா சமைப்பாங்களா” என்று அவனுக்காக ஏங்கியது.
அன்று இரவு, அனைவரும் தூங்கிய பிறகு, நிலா மெதுவாகத் தன் பையிலிருந்து ஹெட்பேண்டை எடுத்தாள். கிராமத்து வீட்டின் கொல்லையில் இருந்த அந்தப் பெரிய திண்ணையில் படுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மெய்நிகர் உலகிற்குள் புகுந்தாள்.
நிலாதான் முதலில் இணைந்ததால், இன்று சந்திப்பு நிகழும் இடத்தை அவளது மனமே தேர்ந்தெடுத்தது. அவளது ஆழ்மன விருப்பப்படி, அந்த இடம் அவளது கிராமமாக மாறியிருந்தது.
பச்சைப் பசேல் என விரிந்த வயல்வெளிகள், தென்னை மரங்கள், தூரத்தில் கேட்ட கோவில் மணி ஓசை என அந்தக் கிராமமே ஒரு கவிதை போல இருந்தது. அந்திப் பொழுதின் தங்க நிறக் கதிர்கள் மெல்லத் தணிந்து, ‘சோல்மேட்’ செயலியின் அல்காரிதம் நிலாவின் நினைவலைகளில் இருந்து அந்தப் பேரழகுக் கிராமத்தை விஷ்வாவின் கண்களுக்கு முன்னால் வார்ப்படமாக இறக்கியது. அது சென்னையிலிருந்து சரியாக மூன்று மணிநேரப் பயணத் தொலைவில், செய்யாற்றுப் படுகையின் வளமான மண்ணில் அமைந்திருக்கும் ஒரு தொன்மையான கிராமம்.
முடிவில்லாமல் விரிந்து கிடக்கும் பச்சைப் பசேல் நெல்வயல்களும், அதன் வரப்புகளில் கம்பீரமாய் நின்று தலையசைக்கும் நெடிய தென்னை மரங்களும், பம்புசெட்களில் இருந்து பீறிட்டுக் பாயும் தண்ணீரின் சலசலப்பும் காற்றில் ஒரு மண்வாசனையைக் கலந்திருந்தன.
ஊரின் எல்லையில், பல்லவர் காலத்துக் கருங்கல் கட்டுமானங்களுடன் கூடிய பழமையான வீடுகளும், அவற்றின் அகலமான திண்ணைகளும் முற்றங்களும் அந்த மண்ணின் மாறாத பாரம்பரியத்தைப் பறைசாற்றின. தூரத்தில், நூற்றாண்டு பழமைவாய்ந்த அரசமரத்தின் இடுக்கில் இருந்து எழுந்த குலதெய்வம் கோவிலின் மணி ஓசையும், மாலையில் மலர்ந்திருந்த மல்லிகைப் பூக்களின் நறுமணமும் சேர்ந்து, ஐஸ்லாந்தின் உறைபனியில் தவித்துக் கொண்டிருந்த விஷ்வாவை அப்படியே அக்மார்க் தமிழ்நாட்டின் கிராமிய எழிலுக்குள் வாரி அணைத்துக் கொண்டது.
“வாவ் நிலா… இதுதான் உன் ஊரா? எவ்வளவு அழகா இருக்கு!” என்றான் அந்த இயற்கை அழகில் மயங்கி. பச்சைப் பசேலென்றிருந்த வயலில், ஒரு பம்ப்செட்டுக்கு அருகில் இருந்த மேடையில் அமர்ந்தபடி அவனுக்காகக் காத்திருந்தாள் நிலா.
ஆவலுடன் காத்திருந்த விஷ்வாவின் கண்களை மொத்தமாகக் கட்டிப் போட்டது நிலாவின் இன்றைய தோற்றம்.
சென்னையின் நவீன உடைகளில் அவளைப் பார்த்தவனுக்கு, இன்று அவளது கிராமத்துத் தோற்றம் ஒரு அமரிக்கையான வசீகரத்தை, பேரழகை அவளுக்குத் தந்தது.
நிலா இன்று ஒரு அழகான நீல நிறத்தில் சிவப்பு நிற பார்டருடன் கூடிய பட்டுப் பாவாடையும் சிவப்பு நிற பட்டுத் தாவணியும் அணிந்திருந்தாள். அவளது அடர்ந்த கார்மேகக் கூந்தல் நேர்த்தியாகப் பின்னப்பட்டு, அதில் பாட்டியின் நந்தவனத்துப் புதிய மல்லிகையின் மல்லிகைச் சரத்தைச் சூடி அதில் ஒரு சரம் அவளது வலது தோளில் சதிராடிக் கொண்டிருந்தது. அந்த மல்லிகையின் மெல்லிய நறுமணம் விஷ்வா சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சிலும் பரிணமித்து அவனது உள்ளம் நிரப்பிக் கொண்டிருந்தது.
அவளது மீன் போன்ற கண்களில் இன்று மை இன்னும் சற்று அடர்த்தியாக, எடுப்பாகத் தீட்டப்பட்டு தூண்டில் இல்லாமலேயே விஷ்வாவை அவள்பால் சுண்டி இழுத்துக் கொண்டிருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவளது நெற்றியில் குலதெய்வம் கோவிலின் பிரசாதமான திருநீற்றின் கீற்றும், புருவங்களுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய குங்குமப் பொட்டும் அவளுக்கு ஒரு தெய்வீகமான, அக்மார்க் கிராமத்துத் தனத்தையும், அத்தனை நேர்த்தியான குடும்பப் பாங்கான அழகையும் தந்திருந்தது.
அவளது இந்த எளிய, பேரழகான தோற்றத்தில் விஷ்வா மொத்தமாகத் தன் நிலையை மறந்து சொக்கிப் போய் நின்றான்.
இன்னைக்கு உன்னோட இந்த லுக்… ஐ ஜஸ்ட் கான்ட் டேக் மை ஐஸ் ஆஃப் யூ (I just can’t take my eyes off you). இந்த பாவாடை தாவணி, மல்லிகைப் பூ, நெத்தியில இருக்குற விபூதி… நீ அவ்வளவு அழகா, ரொம்ப டிவைனா இருக்க நிலா!” என்றான் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த ரசனையோடு.
விஷ்வாவின் இந்த நேரடியான பாராட்டில் நிலா அப்படியே நாணத்தில் உறைந்து போனாள். அவளது கன்னங்கள் சிவக்க, விஷ்வாவின் முகத்தைப் பார்க்க முடியாமல் மெல்லத் தலையைக் குனிந்து கொண்டாள் நிலா.
விஷ்வா அவளது அழகைத் தன கண்களால் பருகியபடி, அவளருகில் வர, நிலா அக்கறையுடன் அவனைப் பார்த்து “சாப்பிட்டீங்களா, விஷ்வா?” என்றாள்.
விஷ்வா ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான். எத்தனையோ பேர் அவனிடம் “படம் எப்படி வந்திருக்கு?”, “அடுத்த புராஜெக்ட் என்ன?” என்று பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்களே தவிர, இத்தனை அக்கறையோடு, இத்தனை எளிமையாக “சாப்பிட்டாயா?” என்று கேட்டு அவனை ஒருவர் கேட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.
அவன் திரையுலக வாழ்க்கையில் நுழைந்த பிறகு, உண்மையாகவே அக்கறையோடு இப்படிக் கேட்கும் உறவு அவனுக்கு இல்லாமலேயே போயிருந்தது. அதனால்தானோ என்னவோ நிலாவின் அந்தக் கேள்வி அவனது இதயத்தை மென்மையாய் வருடியது.
விஷ்வாவின் வாடிய முகத்தைப் பார்த்ததுமே அவன் பசியோடு இருப்பதை நிலா உணர்ந்தாள்.
“உங்களைப் பார்த்தாலே தெரியுதே உங்களுக்குப் பசிக்குதுன்னு… வாங்க சாப்பிடலாம், உங்களுக்காக பாட்டியோட ஸ்பெஷல் காரக்குழம்பும் கத்திரிக்காய் வதக்கலும் கொண்டு வந்திருக்கேன்,” நிலா தன் மடியில் வைத்திருந்த ஒரு சிறிய தூக்குச்சட்டியைத் திறந்து, அதில் இருந்த புளிப்பும் காரமும் நிறைந்த மணம் கமழும் காரக்குழம்பு சாதத்தைத் தன் விரல்களால் பிசைந்தாள்.
அவள் காட்டிய அந்த அதீத அன்பும் பாசமும், அந்த சாதத்தின் ருசியை இன்னும் பன்மடங்கு கூட்டியது. அவள் சோற்றை நன்றாகப் பிசைந்து, ஒரு சிறிய உருண்டையாக்கி, அதன் மீது ஒரு மொறுமொறுப்பான கத்தரிக்காய் வதக்கலை வைத்து,
“கை நீட்டுங்க, விஷ்வா,” என்றவள் அந்த உருண்டை சாதத்தை அவன் நீட்டிய உள்ளங்கையில் வைத்தாள். “ஹ்ம்ம், சாப்பிடுங்க. நல்லா இருக்கும்,” என்றாள்.
விஷ்வா பல வருடங்களாக லோ கார்ப் டயட்டில் இருப்பவன். அரிசி சாதத்தைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், நிலாவின் கையால் அந்த உருண்டையை வாங்கி வாயில் வைத்தபோது, அவனுக்குக் கிடைத்த அந்தத் திருப்திக்கு அளவே இல்லை. நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்த அந்த சாதத்தின் காரமான, புளிப்புச் சுவையும் மொறுமொறுப்பான கத்திரிக்காய் வதக்கலின் ருசியும் அவனது நாவிற்குப் புதிய உயிரைத் தந்தது.
“ரொம்ப டேஸ்டா இருக்கு நிலா… நிஜமாவே எனக்கு ரொம்ப பசியா இருந்தது, எவ்ளோ நாளாச்சு தெரியுமா இப்படி சாப்பிட்டு, எப்போ பார்த்தாலும் உப்பு சப்பில்லாத டயட் சாப்பாடு சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு தெரியுமா?” என்று அவன் நெகிழ்ந்து சொன்னான். கவளம் கவளமாக தூக்குச்சட்டியில் இருந்த சாதமும் கத்திரிக்காய் பொரியலும் நிமிடங்களில் காணாமல் போயின.
விஷ்வா ருசித்துச் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டே அவனுட வளவளத்துக் கொண்டிருந்த நிலா, பேச்சின் ஊடே, “நாளைக்கு எங்க கிராமத்துக் கோவில்ல பூஜை விஷ்வா. அண்ணாவுக்காக எங்க அம்மா வேண்டுதல் வெச்சிருந்தாங்க, அதான், எங்க குலதெய்வம் கோவில் ரொம்ப விசேஷமானது, தெரியுமா?” என்றாள்.
“அப்படியா? எனக்கும் உன்கூட வரணும்னு ஆசையா இருக்கு நிலா… நான் என் வாழ்க்கையில ஷூட்டிங்கிற்காகத் தவிர, நிஜமா ஒரு கோவிலுக்குள்ள போயே ரொம்ப வருஷம் ஆகுது,” என்றான் விஷ்வா ஏக்கத்துடன்.
நிலா அதிர்ச்சியடைந்தாள். “என்ன விஷ்வா சொல்றீங்க? நீங்க கோவிலுக்குப் போறது இல்லையா? சாமில்லாம் கும்பிட மாட்டீங்களா, விஷ்வா?”
விஷ்வா மெலிதாகப் புன்னகைத்தான். “சின்ன வயசுல அப்பா அம்மாகூட கோவிலுக்குப் போயிருக்கேன், நிலா. இப்போவும் வீட்ல ஒரு சின்ன முருகர் படம் வெச்சிருக்கேன். முடியும்போது சின்னதா விளக்கேத்துவேன், சாமி கும்பிடுவேன். ஆனா கோவிலுக்குப் போறதில்லை. போனா நிம்மதியா சாமி கும்புடணும், ஆனா இப்போ என் நிலைமை… ஒரு பொது இடத்துக்குப் போனா கூட்டம் கூடிடும். நிம்மதியா சாமி கும்பிட முடியாது. அதனாலேயே நான் போறதைத் தவிர்த்துடுறேன்,” என்றான் ஏக்கமாக.
நிலாவின் மனம் உருகியது. “கவலைப்படாதீங்க விஷ்வா. நாளைக்கு உங்களை எங்க கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறேன். அது ஒரு காட்டுக்குள்ள, ஒரு சின்ன நீரோடைக்கு பக்கத்துல இருக்கு. ரொம்ப அழகான இடம். எனக்கு ரொம்ப பிடிக்கும் அங்க போக. அங்கே யாருமே இருக்க மாட்டாங்க, நாம அங்க போய் நிம்மதியா சாமி கும்பிடுவோம்…” என்று வாக்குக் கொடுத்தாள்.
அந்த நம்பிக்கையான வாக்குறுதியுடன் அன்றைய சந்திப்பு முடிந்தது. விஷ்வா அடுத்த நாள் சந்திப்பிற்காகத் தவிப்புடன் காத்திருந்தான். ஆனால், அடுத்த நாள் நிலாவால் வர முடியவில்லை. கோவில் பூஜையின் பரபரப்பில் அவளால் ஹெட்பேண்டைத் தொடக்கூட நேரம் கிடைக்கவில்லை.
ஐஸ்லாந்தில், நிலாவின் வருகைக்காகக் காத்திருந்த விஷ்வா, அவள் வராததால் சொல்லொண்ணாத் துயரத்திலும் ஏக்கத்திலும் ஆழ்ந்தான். நிஜ உலகின் அந்தப் பனிப்பாறைகளை விடக் குளிர்ச்சியான ஒரு தனிமை அவனைச் சூழ்ந்து கொண்டது.
கிராமத்துக் குலதெய்வம் கோவில் பூஜை மிகவும் விமர்சையாக நடந்து முடிந்தது. உறவினர்களின் சளசளப்பு, பாட்டியின் பாசமழை, அண்ணனுக்கான சிறப்பு அபிஷேகம் எனப் பகல் பொழுது முழுமையாகக் கரைந்திருந்தாலும், நிலாவின் அகம் விஷ்வாவை நோக்கியே அலைபாய்ந்தது. நேற்றைய தினம் கொடுத்த வாக்கை எப்படிக் காப்பாற்றுவது? அவனால் தனியாக பொது இடங்களுக்குச் செல்ல முடியாது என்று சொன்ன அந்த ஏக்கம், நிலாவைத் தூங்கவிடாமல் வதைத்தது.
அன்று நள்ளிரவு, கிராமத்து வீடே அடங்கி, தூக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் நிலா மெதுவாக எழுந்து திண்ணைக்கு வந்தாள். சுற்றிலும் மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சமும், தூரத்தில் கேட்ட வண்டுகளின் ரீங்காரமும் மட்டுமே அவளுக்குத் துணையாக இருந்தன. நடுக்கத்துடன் நியூரல் ஹெட்பேண்டை மாட்டிக் கொண்டு மெய்நிகர் உலகத்துக்குள் அவள் உள்நுழைந்தாள்.
விஷ்வா எப்போதுமே இணைப்பில் இருந்தான் போல! அவளது அலைவரிசை துளிர்த்த அடுத்த விநாடியே, அவனது ‘User_Beta_01’ சுயவிவரம் மெய்நிகர் உலகிற்குள் பிரசன்னமானது.
ஆனால், இம்முறை அவனது முகம் நேற்றுப் பார்த்தது போல் மகிழ்ச்சியாக இல்லை. கடுகடுவென, ஏமாற்றத்தின் விளிம்பில், ஒருவிதத் தவிப்போடு நின்றிருந்தான்.
“ஸாரி விஷ்வா… நேத்து என்னால வர முடியல. கோவில் விசேஷத்துல எல்லாரும் கூடவே இருந்தாங்க, அதான்…” நிலா குற்ற உணர்ச்சியோடு அவனது கைகளைப் பற்ற முயன்றாள்.
விஷ்வா அவளது கைகளைத் தட்டிவிடவில்லை, ஆனால் லேசாகத் தள்ளி நின்றான். “வாக்குக் கொடுத்திட்டு இப்படி ஏமாத்துறது உனக்கு விளையாட்டா இருக்கா நிலா? நான் நேத்துலருந்து, உன்னோட அந்தக் கிராமத்துக் கோவிலைப் பார்க்கணும்னு எவ்வளவு ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன் தெரியுமா? ஆனா நீ வராம என் மொத்த நாளையும் பாழாக்கிட்ட!” அவனது ஆற்றாமை அவனையறியாமல் கோபமாக வெடித்தது.
நிலா அவனது கோபத்தைக் கண்டு மிரளவில்லை. மாறாக, அவனது பிடிவாதத்திற்குப் பின்னால் இருந்த தனிமை அவளுக்குப் புரிந்தது. “கோவிச்சுக்காதீங்க விஷ்வா… இதோ, நான் சொன்ன அதே காட்டுக் கோவிலுக்கு உங்களை இப்போ கூட்டிட்டுப் போறேன். என் கூட வாங்க,” என்று அவனது பெரிய கரங்களைத் தன் சிறிய விரல்களால் கோர்த்து இழுத்தாள்.
அவனது விரல்களுடன் பின்னியிருந்த நிலாவின் வெண்டைப்பிஞ்சு விரல்களைப் பார்த்த விஷ்வாவின் கோபம் சற்று தணிந்தாலும், அவள் இழுத்த இழுப்புக்குப் போகாமல் ஸ்திரமாக நின்றான். தான் முன்னே நகர முயன்றும் முடியாமல் போக, திரும்பி விஷ்வாவைப் பார்த்த நிலா, லேசாக உதடு சுளிக்க, அதைக் காணத் தாளாதவன் அடுத்த இழுப்புக்கு அவள் பின்னே செல்லத் தொடங்கினான்.
அடுத்த சில கணங்களில், அந்த மெய்நிகர் அல்காரிதம் நிலாவின் நினைவலைகளில் இருந்த குலதெய்வம் கோவிலை அப்படியே இருவருக்கும் முன்னால் வார்ப்படமாக இறக்கியது.
அது ஒரு அடர்ந்த காடு. பிரம்மாண்டமான ஆலமரங்களும், வேப்பமரங்களும் வானத்தை மறைத்திருக்க, அந்தி நேரத்து சூரிய ஒளி இலைகளின் இடுக்கில் கசிந்து தரையில் புள்ளிகளாய் விழுந்து கிடந்தது. பச்சைப் பாசிகள் படர்ந்த கற்களுக்கு நடுவே, ஒரு மெல்லிய சலசலப்புடன் படிகம் போன்ற தெளிந்த நீரோடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓடையின் கரையோரம், கருங்கற்களால் ஆன ஒரு சிறிய, பழமையான சுயம்பு லிங்கக் கோவில் நின்றது.
கோவிலின் வாசலில் இருந்த பித்தளை மணியில் காற்றில்லாமலே ஒரு மெல்லிய நாதம் ஒலித்தது. சுற்றிலும் மலர்ந்திருந்த காட்டுப் பூக்களின் நறுமணம் காற்றில் மிதந்து வந்தது.
“வாவ்…” விஷ்வாவின் எஞ்சியிருந்த கோபமும் அந்த அழகான காட்சியில் சூரியனைக் கண்ட பனிப்பாறையைப் போல ஒரு நொடியில் உருகி மறைந்தது. அவன் அடியெடுத்து வைக்க, அவனது கால்கள் அந்த ஈரமான புல்வெளியின் மென்மையை, ஓடை நீரின் குளுமையை அப்படியே அவனது நரம்புகளுக்குக் கடத்தின.
“இதுதான் எங்க காட்டுக்கோவில் விஷ்வா. இங்க உங்களைத் தொந்தரவு பண்ண யாரும் இல்லை. உங்க மனசுல இருக்குற அத்தனை பாரத்தையும் இந்தச் சாமி முன்னாடி நிம்மதியா இறக்கி வைக்கலாம்,” என்றாள் நிலா, அவனது தோளோடு தோள் உரசி நின்று.
விஷ்வா மெதுவாகக் கோவிலின் கருவறையை நெருங்கினான். அகல் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் அந்தச் சிறிய சிவலிங்கம் ஜொலித்தது. அவன் தன் இரு கரங்களையும் கூப்பிக் கண்களை மூடினான்.
அவனது திரையுலகப் பயணம், நாலாபுறமும் சூழ்ந்திருக்கும் போலித்தனமான புகழ்ச்சிகள், பொய் வேஷம் போதும் போலி முகங்கள், தனிமையின் கோரப் பற்கள் என அவனது அத்தனை ரணங்களும் அந்த அமைதியில் அவனது நினைவுக்கு வந்தன. அவனையறியாமல் அவனது இடது கண் ஓரத்தில் ஒரு துளிக் கண்ணீர் கசிந்து கன்னத்தில் இறங்கியது.
அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்த நிலாவின் இதயம் அவனது கண்ணீரைக் கண்டு துடித்தது. ஒரு ரசிகையாகத் தூரத்திலிருந்து பார்த்த சூப்பர் ஸ்டார் விஸ்வநாத் வேறு; இதோ தன் முன்னால் கண்களில் கண்ணீர் துளிர்க்க நிற்கும் இந்த எளிய விஷ்வா வேறு. அவளது கை தன்னிச்சையாக விஷ்வாவின் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது.
விஷ்வா சட்டென்று கண் திறந்து நிலாவைப் பார்த்தான். அவனது சாக்லேட் நிறக் கண்களில் இப்போது கோபமில்லை; மாறாக, ஒரு தீராத காதலின் தாகம் மட்டுமே இருந்தது.
“நிலா… எனக்கு இந்த உலகம் தராத நிம்மதி உன்கூட இருக்கும்போது கிடைக்குது. உன்னோட இந்த அருகாமை எனக்குக் கொடுக்குற இந்த அமைதியை, என் கோடி ரூபாய் பங்களாவும், என்னோட இமேஜும் தரல. நீ நிஜமாவே எனக்கு முன்னாடி இருந்தா, உன்னை என் வாழ்நாள் முழுக்க என் கூடவே வச்சுப்பேன்,” என்று அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்தி, மிக ஆழமான குரலில் கூறினான்.
அவர்களுக்கிடையேயான தூரம் சுருங்கியது. காட்டின் குளுமைக்கும், அகல் விளக்கின் மங்கலான மஞ்சள் ஒளிக்கும் நடுவே, இருவரின் மூச்சுக்காற்றுகளும் ஒன்றோடொன்று கலந்தன. நிலா நாணத்தால் தன் கண்களை மூடிக்கொள்ள, விஷ்வா அவளது நெற்றியில் தன் இதழ்களை மென்மையாகப் பதித்தான். அது விர்ச்சுவல் உலகத்தின் எல்லையைத் தாண்டி, இருவரின் ஆன்மாவையும் உலுக்கிய ஒரு நிஜமான ஸ்பரிசமாக மாறியது.
விஷ்வாவின் இதழ்கள் தன் நெற்றியில் மென்மையாகப் பதிந்த அந்த விநாடி… நிலாவின் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. அது வெறும் கணினி நிரல்கள் உருவாக்கிய உணர்வு என்று அவளது அறிவு கூவினாலும், அவளது நரம்புகளும் ஆன்மாவும் அதை அப்பட்டமான நிஜமாகவே ஏற்றுக்கொண்டன. அந்த முதல் முத்தத்தின் தீராத அதிர்வும் சிலிர்ப்பும் அவளது உடலை நடுங்க வைக்க, தாங்க முடியாத நாணத்துடனும் பயத்துடனும் நிலா தன் நெற்றியில் இருந்த நியூரல் ஹெட்பேண்டை சட்டென்று கழற்றினாள்.
கண்கள் திறந்தபோது, விர்ச்சுவல் காடும் ஓடையும் மறைந்து, கிராமத்து வீட்டின் இருள் சூழ்ந்த கொல்லைத் திண்ணை அவள் கண்முன் வந்தது.
ஆனால், அவளது அதிர்ச்சி அத்தோடு முடியவில்லை. திண்ணையின் ஓரத்தில், கையில் ஒரு பித்தளைச் செம்பில் தண்ணீருடன் நின்று, நிலாவையே விசித்திரமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் அவளது பாட்டி!
பதற்றத்தில் உமிழ்நீரை விழுங்கியா நிலா, ஹெட்பேண்டை தன் மடிக்குள் மறைக்க முயன்றாள்.
“என்ன நிலாக்கண்ணு… இந்த நட்டநடு ராத்திரியில தூங்காம இங்க வந்து உட்கார்ந்திருக்க? நெத்தியில என்னமோ பெருசா கருப்பா மாட்டிக்கிட்டு, தனியா கண்ணை மூடிட்டுச் சிரிச்சுக்கிட்டே இருக்கே? என்னாச்சு உனக்கு?” பாட்டியின் குரலில் சந்தேகமும் ஆச்சரியமும் கலந்திருந்தது.
நிலாவின் இதயம் பல கிலோமீட்டர் மாரத்தான் ஓடிவிட்டு வந்தது போல் வேகமாக அடித்துக் கொண்டது. முகம் முழுக்க இன்னும் விஷ்வாவின் ஸ்பரிசம் தந்த சிவப்பும் நாணமும் அப்படியே இருக்க, அதை மறைக்கப் போராடினாள்.
“அது… அது வந்து பாட்டி… அது காலேஜ் பாடம் பாட்டி. ஆன்லைன்ல புதுசா ஒரு கிளாஸ் படிக்கச் சொல்லியிருக்காங்க. பகல்ல இங்க எல்லாரும் போக வர இருக்குறதுனால ஒரே சத்தமா இருக்கா, அதான் இப்போ இந்த மெஷினை மாட்டிக்கிட்டு யாருக்கும் தொந்தரவு இல்லாம படிச்சுட்டு இருந்தேன் பாட்டி!” என்று அவசர அவசரமாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டாள்.
“இந்தக் காலத்துப் படிப்பு ஏதேதோ விசித்திரமா இருக்கு போ… பாடம் படிக்கவா அப்புடி சிரிச்சுக்கிட்டு இருந்தா” என்று பாட்டி முணுமுணுத்துக் கொண்டே நகர்வதைப் பார்த்தவள், அதற்கு மேல் அங்கே நின்றால் தன் முகம் உண்மைகளைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று பயந்து, தன் பையையும் ஹெட்பேண்டையும் சுருட்டிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினாள்.
தன் அறைக்குள் நுழைந்தவள், கதவை அவசரமாக உள் பக்கமாகத் தாழிட்டு, அதன் மீது அப்படியே சாய்ந்து கொண்டாள். இருண்ட அந்த அறைக்குள், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றிருந்தவளின் நெற்றியில் இன்னும் விஷ்வாவின் இதழ்கள் தந்த அதே வெதுவெதுப்பு அப்படியே தங்கியிருந்தது. கண்கள் தானாக மூடிக்கொள்ள, அந்த மெய்நிகர் உலகம் தனக்குள் கிளப்பிவிட்டிருந்த காதலின் மாயாஜால உணர்வுகளில் அவள் முழுமையாகத் திளைத்தாள். அது கானல் நீர் என்று தெரிந்தும், அந்த விர்ச்சுவல் உலகத்தில் பிறந்த நிஜமான காதலுக்குள் நிலா இப்போது முழு மனதாக, ஆழமாக மூழ்கத் தொடங்கியிருந்தாள்!
error: Content is protected !!