Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெந்து தணிந்தது காதல்!

அத்தியாயம் – 6

அதே அக்டொபர் மாதத்தின் மற்றொரு நாள். சீக்கிரமே இருள் குவிந்து விட்ட அந்த நேரத்தில் அந்தப் பெரிய உணவகத்தின் முதலாளியின் முன்பு நின்றிருந்தான் ஷிவ்.

முகமெல்லாம் ஓர் அசட்டுச் சிரிப்புடன் தன்னையே பார்த்திருந்த ஷிவ்வை கொஞ்சம் நக்கலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த உணவகத்தின் உரிமையாளன் ஜோஷுவா.

“என்ன ப்ரோ.. ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கறோம் போல..” என்று கேட்க, அந்த அசட்டுச் சிரிப்பு மாறாமலேயே, “ரொம்ப சோதிக்காதடா.. ரொம்ப வருஷம் ஆகிடுகிச்சு தான்.. உன்கிட்ட பயங்கரமா சீன் போட்டுட்டேன் தான்..

இப்போ அதே உன்கிட்ட தான் வந்து கெஞ்சிட்டு இருக்கேன்.. கொஞ்சம் பார்த்து பண்ணு..” என்று கெஞ்ச, அந்த ஜோஷுவாவோ..



Advertisement

“இல்ல ப்ரோ.. அந்த சந்திரகீர்த்தி எல்லாம் ஒரு ஆளா? அவ்ளோ பெரிய ஸீன் இல்ல அவளுக்கு.. அந்த பொண்ணுக்காகவெல்லாம் நீ இங்க சர்வர் வேலை பார்க்க வேண்டாம்..” என்று நவிராவுக்காக அவள் அந்த உணவகத்துக்கு வரும் அந்த நாட்களில் மட்டும் அவனது உணவகத்தில் சர்வராக வேலை செய்யக் கேட்டு வந்தவனை இன்னுமே சீண்டினான்.

“அடேய்.. இப்போ என்னடா? ஏதோ ஒரு நாள் தெரியாத் தனமா உன்னோட ரெஸ்டாரண்டை தப்பா பேசிட்டேன்.. அதுவும் நீ, நவிரா உன் ரெஸ்டாரண்ட்ல சாப்பிட வருவானு சொன்னப்போ ரொம்பவே டீஸ் பண்ணிட்டேன்.. அதுக்கு சாரி கேட்கணும்! அவ்வளவு தான?” என்றவன், தலைக்கு மேலே கையெடுத்துக் கும்பிட்டு..

“இங்க பாரு.. எங்க ஊர் முறைல கையெடுத்துக் கும்பிட்டு சாரி கெடுக்கறேன்.. சாரி டா.. இந்த நேரத்துல பழி வாங்காத ப்ளீஸ்..” என்று கூற, ஜோஷுவாவோ சிரித்துவிட்டான்.

Advertisement

“ஹேய் விடுடா.. சும்மா கொஞ்ச நேரம் உன்ன வச்சு ஃபன் பண்ணலாம்னா, அதுக்குள்ளே சாரி அது இதுன்னுட்டு..

Advertisement

உனக்கென்ன, அந்த சந்திரகீர்த்தி இங்க வரப்போ மட்டும் நீ சர்வரா இருக்கணும். அதுவும் அவங்களுக்கு மட்டும்? சரி.. பெர்மிஷன் க்ரான்டட்!

ஹாப்பி?” என்று கேட்க, ஷிவ்வோ அவனை சந்தோஷத்துடன் அணைத்துக் கொண்டான்.

“சரி சரி.. சீக்கிரம் போய் பிளாக் அண்ட் பிளாக்ல வா..” என்று அவனது உணவகத்தின் சீருடையில் வரும்படிக் கூற, உடனடியாக உடைமாற்றும் அறைக்கு ஓடினான் ஷிவ்.

Advertisement

உடை மாற்றி அவன் வரவும், அவனுக்கு சைகை செய்தான் ஜோஷுவா.

அவன் சைகையின்படி வெளியே பார்த்தால் காரை பார்க் செய்துவிட்டு அந்த ரெஸ்ட்டாரன்ட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் நவிரா.

அவள் வரவும், மெனு கார்டை கையில் ஏந்தியபடி அவளுக்கு முன்பாக நின்றவன், எதுவும் பேசாமல், “ப்ளீஸ் கம் திஸ் வே மேம்!” என்று மட்டும் கூற, அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தாள் அவள்.

எப்பொழுதுமே இந்த உணவகத்தில்.. இங்கு மட்டுமல்ல, வேறு எந்த உணவகத்திலுமே அவளுக்குத் தனிப்பட்ட கவனிப்பு இருக்கும். ஆனால் அதெல்லாம் ரொம்பவும் திகட்டுவது போல இருக்கும்.

ஆனால் இந்த உணவகத்தில் மட்டும் தான் ஒரு நட்புடன் கூடிய கவனிப்பு இருக்கும்.

ரொம்பவும் சாதாரணமாக, வெறுமனே கஸ்டமரை கவனிப்பது போலவும் இருக்காது தான். அதே சமயம் ஆஹா.. ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்து, தரையில் கால் படாத கவனிப்பும் இருக்காது.

அதனால் தான் தன் தனிமையை போக்க இந்த உணவகத்துக்கு அவள் வாரம் ஒரு முறையேனும் வருவது.

ஒரு சாதாரணளாக இருக்க விரும்பியே இங்கு அவள் வந்தாலும், அவளது நட்சத்திரப் புகழால் அது ஓரளவுக்குத் தான் சாத்தியப்படும்.

ஆனால்..இது.. இவன்! இவனுக்குத் தன்னை அடையாளம் தெரிகிறதா என்று கூடத் தெரியவில்லை நவிராவுக்கு.

இவனை இதற்கு முன்பாக இங்கே அவள் பார்த்ததில்லை தான். ஆனால் அப்படிப் பார்க்காததாலேயே தன்னை அவன் கண்டுகொண்டானா, இல்லையா என்ற சிறு குழப்பம் வந்தது அவளுக்கு.

ஆனால் அதை அப்பொழுது அவள் பெரிதாகக் கண்டு கொள்ளாவிட்டாலும், மனதுக்குள் அவனது போக்கு சிறு சலனத்தை ஏற்படுத்தத் தான் செய்தது.

ஆனால் அங்கிருந்த ஜோஷுவாவுக்கோ பெரும் குழப்பம்!

காலில் விழாத குறையாக நவிராவைப் பார்க்கும் சந்தர்ப்பத்துக்காக அப்படித் துடித்தவன், இப்பொழுது நேரில் பார்க்கும் பொழுது முகத்தில் துளி சந்தோஷத்தைக் கூட காட்டிக் கொள்ளாது இருக்கிறானே? என்று எண்ணியவன், அவனையே அவசரமாய் அழைத்துக் கேட்டான்.

“டேய் இடியட்.. இந்த சந்திரகீர்த்தியை பார்க்க அவ்வளவு தவிச்ச? இப்போ அவ நேர்ல வந்து நிக்கறப்போ முகத்துல சந்தோஷத்தைக் கூட காட்டிக்காம நிக்கற?” என்று அவன் ஆச்சர்யப்பட, அவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான் ஷிவ்!

“டேய்.. என்னடா.. எதுக்கு சிரிக்கற?” என்று அவன் மீண்டும் கேட்க, அவனது தோளைத் தட்டி மீண்டும் சிரித்த ஷிவ்வோ,

“எல்லாத்துலயும் ஒரு கணக்கு இருக்கு ப்ரோ..” என்று அலட்சியமாகக் கூறினான்.

ஆனால் அதுவும் ஜோஷுவாவுக்குப் புரியவில்லை.

“ஏய்.. எதுக்குடா சம்மந்தமே இல்லாம சிரிக்கற சொல்லுடா?” என்று அவன் கேட்க, சிரிப்பு மாறாமலேயே பதில் கூறினான் ஷிவ்.

“டேய்.. நவிராவ பார்த்ததுமே எல்லாரும் என்ன செய்வாங்க? ‘ஹையோ.. நவிரா..’ அப்படின்னு அவங்க கால்லயே விழுந்துடுவாங்க இல்லையா?

அப்படி விழுந்தா, நவிராவுக்கு நான் பத்தோட பதினொன்னு. ஆனா இப்படி நான் இருந்தா, யாருடா இவன்னு அவ நினைப்பா.. அதுக்காகத் தான்.” என்று அவன் கூற, ஜோஷுவாவோ வாயின் மீது கை வைத்தான்.

“அடப்பாவி.. காலேஜ் டைம்ல ஷிவ்.. ஷிவ்ன்னு ஒரு ரோபோட் இருந்துச்சு.. அவனாடா நீயி?” என்று போலியாய் ஆச்சர்யப்பட, ஷிவ்வோ..

“போ ப்ரோ.. எனக்கு வெட்கமா வருது.. அப்பறம் என் நவிரா அங்க எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. சோ நான் அங்க போறேன்.. பை..” என்று கூறிவிட்டு துள்ளலுடன் செல்ல, அவனை ஆச்சர்யமாய் பார்த்தான் ஜோஷுவா.

அவளுக்கு வேண்டியதை எல்லாம் பரிமாறிவிட்டு, அவளும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும் வரையில் அவளையே பார்த்திருந்தான் ஷிவ்.

முதலில் அவளது குரல் கேட்டு அவனுக்குள் தடம்புரண்ட அவனது இதயம், இன்னமும் சீராகவில்லை.

முதலில் அவளது குரலில் மயங்கி ஒரு ரசிகனாகத் தான் அவளைப் பின்தொடர நினைத்தான் அவன்.

ஆனால் அன்றிலிருந்து, இதோ அவளை மீண்டும் சந்திக்கும் இந்த ஒரு வாரத்துக்குள் அவளது நினைவு அவனது உள்ளத்தின் பேராழத்துக்குள் வேரூன்றியது.

இப்பொழுது மீண்டும் அவளைக் காணும் போது தன்னை சாதாரணமாக வைத்துக்கொள்ள அவன் பெரும்பாடு தான் பட்டுப்போனான்.

இதுவரை அவள் யாருடனும் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டதில்லை. இப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களே, இது போன்ற நட்சத்திரங்கள் எப்பொழுதும் மக்கள் மத்தியில் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நட்சத்திரங்களை இணைத்து வைக்கின்றனர்.

அனைத்தும் பணத்திற்காகத் தான்!

இரண்டு பிரபலங்கள் காதலிக்கிறார்கள், ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள் என்பது மக்களிடையே அதிகமாக விற்பனையாகும் செய்தி.

அதன் மூலம் அந்த இரண்டு பிரபலங்களும் எப்பொழுதும் மக்கள் மத்தியில் பேசு பொருளாகவே இருக்கின்றனர். அதனால் இருவருக்கும் அதிக வாய்ப்புகள் வருகின்றன.

அதனால் வருமானமும் கூடுகிறது, புகழும் கூடுகிறது.

ஆனால் இப்படிப்பட்ட வியாபார யுக்தி மிகவும் சகஜமாகிவிட்டு அந்த நாட்டு நட்சத்திர வாழ்வில், அப்படி எதிலுமே நவிரா சிக்கவில்லை என்று தெரிகிறது. அவளது வளர்ச்சியெல்லாம் அவளே முயன்று உருவாக்கிக் கொண்டவை தான்.

இதையெல்லாம் இந்த ஒரு வாரத்தில் மட்டுமே ஷிவ் அறிந்து கொண்ட விஷயங்கள்.

ஆனால் இன்னுமே அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் வந்தது அவனுக்கு. அதனால் தான் இந்த வழியிலாவது அவளை நெருங்கலாம் என்று நினைத்து காய்களை நகர்த்தியது.

இப்பொழுது ஒரு முறை அவளை அருகில் பார்த்ததுமே அவனுக்கு அவளை அத்தனையாய் பிடித்துப் போனது.

சோலோ டேட் என்பார்களே.. அது போல அவளை அவளே உணவகத்து அழைத்து வந்திருக்கிறாள், அவளது இருப்பை அவளே ரசிக்கிறாள். தான் தனியாக இருக்கிறோம்.. தனிமையில் இருக்கிறோம் என்பது போன்ற எந்தவொரு குறிப்பும் அவளது உடல்மொழியில் வெளிப்படவில்லை.

கூடவே, வேறுவிதமாக தான் ஒரு பெரிய பாடகி என்ற கர்வத்துடன், “ஏய்.. அதைக் கொண்டு வா.. இதைக் கொண்டு வா..”என்ற ஏவல்களோ இல்லை.

அவள் தன்னைச் செலுத்தும் விதம் அவனுக்கு பிரம்மிப்பை ஊட்டியது. இங்கே அவள் எதற்காகவும், யாருக்காகவும் நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

அத்தனை இயல்பாகவும், அதே சமயத்தில் அத்தனை நிமிர்வாகவும் இருக்கும் அவளை, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதே அவ்வளவு புத்துணர்ச்சியாக இருந்தது அவனுக்கு.

இப்பொழுதும் அவள் சாப்பிட்டுவிட்டு, தான் கொண்டு வந்திருந்த டேப்லட்டை எடுத்து பையில் வைத்துக்கொண்டு கிளம்பும் லாவகத்தையும் ரசித்துக் கொண்டிருந்தவன், அவள் கிளம்பியதும் தானும் ஜோஷுவாவிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

இவருடைய காரும் ஒரே இடத்தில் தான் நிறுத்தப்பட்டிருந்தது.

அவள் பெரிய செலிபிரிட்டி என்பதால் அந்த வி.ஐ.பி பார்க்கிங் இடத்தில் அவளது கார் இருக்க, ஷிவ்வோ ரெஸ்டாரன்டின் முதலாளியுடைய நண்பன் என்பதால் அந்த பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தியிருந்தான்.

ரெஸ்டாரண்ட் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் தான் பார்க்கிங் இருக்க, லிப்ட் மூலமாக முதலில் நவிரா கீழே வந்திருக்க, ஷிவ்வோ படிக்கட்டின் மூலமாக கீழே வந்தான்.

அந்த பார்க்கிங் லாட்டில் அப்பொழுது ஒருவருமே இருக்கவில்லை.

சுற்றி இருக்கும் அமைதி நவிராவுக்குப் பழக்கமா என்று தெரியவில்லை. ஆனால் அந்த அசாத்திய அமைதி ஷிவ்வுக்கு மனதில் வெகு லேசாக உறுத்தியது.

அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நவிராவோ தனது ஹாண்ட்பாகிற்குள் கை விட்டு எதையோ துழாவிக் கொண்டிருக்க, அவளுக்கு இரு கார்கள் தள்ளிப் பின்னே வந்த கொண்டிருந்த ஷிவ்வோ, சுற்றி யாரவது இருக்கிறார்களா என்று பார்ப்பதற்காகத் தலையைத் திருப்பினான்.

அவன் தலையைத் திருப்பிய சமயம் அவனுக்குப் பின்புறமாக இருந்து துப்பாக்கியின் குண்டொன்று அவனைத் தாண்டிச் சென்றது.

“ஏய்..” என்று அவன் அதிர்ந்து கத்தியபடி பார்த்தால் அந்த துப்பாக்கி குறிபார்த்தது, நவிராவைத் தான்!

ஆனால் ஒரு நூலளவு இடைவெளியில் அவள் தோள்பட்டையை உரசிச்ச சென்ற அந்த குண்டு சிறிதளவு அவளது ரத்தத்தையும் வெளியேற வைத்திருந்தது.

அதைக் கண்ட ஷிவ்வோ நொடியில் அவளிடம் விரைந்து, அவளைப் பிடித்து இழுத்து இரு கார்களுக்கு நடுவே மரைத்தபடி அமர்ந்து, அவளது தலையத் தன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டான்.

நவிராவோ, குண்டு பட்ட வலியிலும், அதைவிடத் தன்னை கொல்லவே போகிறார்கள் என்ற பயத்திலும் உடலெல்லாம் வேர்வையில் குளிக்க, மூச்சுவிடக் கூட சிரமப்பட்டு, “யா.. யார் அவங்க? எ.. என்னைக் கொல்லப் போறாங்க..” என்று பிதற்ற ஆரம்பித்தாள்.

அவளது பதட்டத்தை உணர்ந்த ஷிவ்வோ, தனது அணைப்பினை இறுக்கமாக்கி.. “பயப்படாதீங்க நவிரா.. உங்களுக்கு எதுவும்.. எதுவும் ஆக நான் விடமாட்டேன்..” என்று கூற, என்னவோ அவளையும் அறியாது அவனது வார்த்தைகளில் பெண்ணின் மனம் சற்று ஆசுவாசப்படத் தான் செய்தது.

ஆனால் எதிரில் இன்னமும் ஆபத்து இருக்கிறதே? நவிராவின் காருக்குள் அவள் சென்றுவிட்டால், துப்பாக்கி குண்டு துளைக்காத கார் அது என்பதால் பிரச்சனை இருக்காது என்று அறிந்தவன்,

“உங்க கார் எங்க இருக்கு?” என்று அவளிடம் கேட்க, நவிராவோ.. நடுங்கும் தன் உதடுகளை கண்களை இறுக மூடித் திறந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு..

“இன்னும் ஒரு கார் தள்ளி இருக்கு. ஆனா.. அது என் கார்னு தெரிஞ்சு இவங்க ஏற்கனவே அதை பஞ்சர் செய்திருக்கவும் சான்சஸ் இருக்கு.. சே.. என் பிஸ்டல் கூட கார்லயே இருக்கு..” என்று கூற, அதற்குள் போலீசுக்கு அழைத்திருந்தான் ஷிவ்.

அவர்களிடம் நிலவரத்தை சத்தமின்றி அவன் கூறக் கூற, அந்தக் கொலையாளி மெல்ல இவர்களை நோக்கி வரும் சத்தம் கேட்டது.

போலீசாரிடம் பேசியபடியே காருக்கடியில் குனிந்து பார்த்தான் ஷிவ்.

அவர்கள் ஒளிந்திருந்த காருக்கு, ஒரு கார் முன்னால் தான் அவன் நின்றிருந்தான். இன்னும் இரண்டெட்டு எடுத்து வைத்தால், இவர்களைச் சுட்டுவிடும் தூரத்தில் தான் இருந்தான் அவன்.

அந்த நேரத்தில் ஷிவ் ஒரு முடிவெடுத்தான்!

மெல்ல நவிராவின் காதருகே சென்றவன், “நான் ‘வன்’ சொன்னதும் உங்க காரை அன்லாக் செஞ்சு அதுக்குள்ளே போய்டுங்க..” என்று கூற, அவனை அதிர்ந்து பார்த்தாள் அவள்.

“நா.. நான் மட்டும் போகணும்னா? அப்போ நீங்க?” என்று அவள் கேட்க, ஷிவ்வோ வேகமாக..

“நான் சொன்னதை மட்டும் செய்ங்க.. த்ரீ.. டூ.. வன்..” என்று என்று இறுதி வார்த்தையைக் கூறும்போது அந்தக் கொலையாளியின் மீது பாய்ந்திருந்தான்.

கையில் துப்பாக்கியுடன் இருந்தவன் மீது எந்த தைரியத்தில் அவன் பாய்ந்தானோ தெரியவில்லை. ஆனால் நவிராவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பது தான் அவனது அப்போதைய எண்ணமாக இருந்தது.

இவன் மீது பாய்ந்ததும் அந்தக் கொலையாளியின் துப்பாக்கி தூரமாய் விழுந்தது தான். ஆனால் அவன் இடுப்பில் வைத்திருந்த அந்தக் கூர்மையான கத்தியை எடுத்துத் தன்னைப் பின்புறமாக இருந்து அழுத்திப் பிடித்திருந்த ஷிவ்வின் கழுத்தைப் பார்த்து ஒரு சீவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!