Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒற்றை ஜன்னல்

ஒற்றை ஜன்னல் – 17

“துளசி… அம்மாவுக்காகப் பாக்காத எனக்குத் தனியா போக ஒரு மாதிரி இருக்கு அதுக்காகவாது வாடி,  என் பசங்களை பாக்கணும்னு கூடவா உனக்கு இல்ல இந்தக் கல்யாணத்தை சாக்கு வெச்சு வந்தா பிள்ளைங்களையும் பாக்கலாம்” என்றாள் துர்க்கா.

 

 



Advertisement

“ஊருக்குப் பிள்ளைங்களை கூட்டிட்டு வரும்போது பாத்துக்குறேன் இப்போ வர முடியாது, நான் அங்க வந்தா சரியா வராது என்னோட இந்த நிலைமைக்குக் காரணமே அவங்கதான் அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு நான் அங்கவந்து நிக்கணுமா” என்றாள் துளசி.

 

Advertisement

 

Advertisement

“இதுக்குமேல என்ன என்ன சொல்லனு தெரியல யோசிச்சு சொல்லு இன்னும் ரெண்டுநாள் இருக்கு” என்ற துர்க்கா அதே நேரத்தில் தாயையும் அழைத்திருந்தாள்.

 

Advertisement

 

கான்பிரன்ஸ் காலில் இருந்த சாந்தா “எதுக்குடி அவளைக் கூப்பிடுற இவளால  பட்ட  அவமானம் போதாதா எல்லாரும் அவ்ளோ கேள்வி கேக்குறாங்க பதில் சொல்லி மாலல இவளுக்கென்ன புருஷன்கிட்ட தாலியை கழட்டி குடுத்துட்டு விவாகரத்தும் குடுத்துட்டு கண்காணாம போய் ஒக்காந்துகிட்டா நான் தானே பதில் சொன்னேன்”.

 

 

“இப்போ அங்க எல்லா சொந்தமும் வருவாங்க எல்லார்முன்னடியும் மறுபடியும் அசிங்க படனும் ஒன்னும் தேவையில்லை நீயே போயிட்டு வந்துடு” என்க.

 

 

துளசிக்கு அத்தனை ஆத்திரம் வந்தது “அசிங்கப்படுற அளவுக்கு என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன் நீங்களும் உங்க அக்காவும் அவங்க மகளும் சேர்ந்து செஞ்சதுக்கு நான் பழி சுமக்கணுமா, கல்யாணத்துக்கு நான் போவேன் நீங்களும் உங்க அக்காவும் என்ன செஞ்சீங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லவேன்”.

 

 

“என்னைப் பத்தி பேசிப் பேசி  எல்லார்க்கும் சலிச்சுப்போச்சு இந்த மூணு வருஷத்துல என்னைப் பத்தி அக்கு வேறு ஆணிவேரா பிரிச்சு மேஞ்சிட்டாங்க, இப்போ அவங்களுக்கு என்னைப்பத்தி புதுசா பேச ஒண்ணுமில்ல நான் போய்  அவங்க எல்லார்க்கும் பேசறதுக்கு விஷயத்தைக் குடுத்துட்டு வரேன்”.

 

 

“உங்கள பத்தி பேசட்டும் உங்க அக்கா மக அருமையை பேசட்டும்  மாப்பிள்ளைக்கும் அவங்க வீட்டுஆளுங்களுக்கும் தெரியட்டும் எல்லாரும் பேசட்டும் என்னைப்பத்தி பேசும்போது உங்களுக்குக் குளுகுளுன்னு இருந்துச்சுல்ல கையைக் கட்டி வேடிக்கை தானே பாத்தீங்க இப்போ நானும் அதே மாதிரி பாக்குறேன்”.

 

 

 

“உண்மையாவே என்னைப் பெத்தியா… என் வாழ்க்கை வீனா போனதுக்கு முதல் காரணமே நீதான் ஒரு எடத்திலாயாவது எனக்காக நீ நின்னியா என்னைப் பத்தி கவலை பட்டிருக்கியா” என்றவள் குரல் இறுதியில் உடைந்துவிட அலைபேசியை அப்படியே அமர்த்தினாள்.

 

 

சாந்த்தா விக்கித்து பேச்சு இல்லாமல் நிற்க “எதுக்குமா தேவையில்லாம முடிஞ்சத பத்தியே பேசிட்டு  இருக்க அவளும் தனியாவே இருக்கா நீயும் பார்கவி வீடே கதின்னு அங்கபோய் கிடக்குற, உன் மாப்பிளை கூடக் கேட்டாரு என்ன உங்க அம்மா வெளிநாட்டை பாத்ததும் சின்ன மக கூடவே செட்டில் ஆயிட்டாங்க”.

 

 

“நமக்கும்தான் ரெண்டு புள்ளை பிறந்தது மொத கொழந்தையை மட்டும்தான் அஞ்சு மாசம் பாத்துக்கிட்டாங்க ரெண்டாவது பிள்ளைக்கு உங்க அம்மா பத்துநாள் தானே நின்னாங்க, சின்னவளுக்கு மட்டும் என்ன இவ்ளோ கரிசனை… உங்க அம்மா வந்து நிக்கனும்னா நாமளும் ஏதாவது வெளிநாட்டுல போய்ச் செட்டில் ஆகணுமான்னு கேட்டாரு” என்றவள்.

 

 

“அப்புறம் அம்மா முக்கியமான விஷயம் ஊர்ல நீ இருக்குறதேயில்லை நம்ம வீடு பூட்டியே கிடக்கு அதை வித்து எங்க பங்கைக் குடுத்துடு, ஒரு இடம் விலைக்கு வருது வாங்கி டியூஷன் சென்டர் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் உன் மாப்பிளை ரொம்ப நாளா என்கிட்டே சொல்லிட்டே இருக்கார் நீ கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லாயிருக்கும்” என்க.

 

 

“என்னடி பேசுற அதை வித்துப் பங்கு குடுத்துட்டு நான் எங்க போக எனக்கு வீடு வேண்டாமா” என்றார் சாந்தா.

 

 

“நீ பார்கவிகூடத்தானே இருக்க அப்புறம் என்ன பிரச்சனை கொஞ்சநாள் எங்ககூடயும் வந்து இரு தனியா அவ்ளோ பெரிய வீட்டில எப்படி இருப்ப” என்றதும் சாந்தாவிற்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது.

 

 

கணவன் என்ற உறவு இருந்தவரை அவருக்குக் கிடைத்த மரியாதையே வேறு அவர் முடியாமல் படுக்கையில் இருந்தாலும் அவரின் மனைவியாகச் சாந்தாவின் வார்த்தைக்கு மதிப்பிருந்தது.

 

 

“எப்போவது வந்து தங்க எதுக்கு அவ்ளோ பெரிய வீடு அதும் பூட்டியே கிடக்கு எங்களுக்கு அவசரமா தேவைப்படுது சீக்கிரம் முடிச்சு குடு இல்லனா அப்புறம் நீயே அவர்கிட்ட பேசிக்கோ” என்றாள் துர்கா, துளசியின் பேச்சோடு இதும் சேர்ந்து மண்டை வெடித்தது சாந்தாவிற்கு.

 

 

துளசிக்கு என்ன முயன்றும் கண்ணீர் கரை உடைத்தது ‘இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த வார்த்தைகளைக் கேட்க வேண்டும் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன், ஆசை பட்டது ஒரு குற்றமா அவனை மறக்க முடியாமல் இவனையும் ஏற்க முடியாமல் எவ்வளவு வேதனை’.

 

 

 

இந்தப் பிரிவு அவளுக்கு எவ்வளவு பெரிய நிம்மதியை தந்திருக்கிறது ஏன் அவள் மனதை யாருமே புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் ஒரு பெண் கணவனோடு வாழ மறுத்து வந்துவிட்டால் அவள் ஒழுக்கம் கெட்டவளா திமிர் பிடித்தவளா அகம்பாவமா… வேறு காரணங்கள் இருக்காதா எப்படி பட்ட கொடுமையானாலும் சகித்துக்கொண்டு வாழவேண்டுமா ஒரு நடைப்பிணமாக.

 

 

விவாகரத்து பெற்று வந்துவிட்டால் அவளுக்கென்று ஆசைகள் இருக்காதா மனதில் காதல் இருக்காதா… இருக்க கூடாதா… துளசியை ஓட வைத்துக்கொண்டிருப்பது தமிழின் நினைவுகளே அவனோடு பகிர்ந்துகொண்ட  அழகான நொடிகளே.

 

 

யாருக்கும் பாதிப்பில்லாத நினைவுகள், அவனைத் தேடி போகப்போவதில்லை அவனுடைய திருமண வாழ்வில் இடைஞ்சலாகத் தான் போகப்போவதில்லை ஆனால் அவனுடைய நினைவுகளை மறக்கவேண்டிய அவசியம் இல்லையே விழிகளைத் துடைத்துக்கொண்டவள் திருமணத்திற்கு அணிந்துசெல்ல நல்ல ஒரு புடவை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

 

 

அவளை அழைத்துச்செல்ல வேண்டாம் என்று சாந்தா சொன்னதற்காகவே அவள் செல்ல முடிவெடுத்தாள், ப்ரியாவின் திருமணம் முடிவாகியிருந்தது அவள் விதித்த நிபந்தனைகளுக்கு எதிர்பதமாக மாமியார் மாமனார் ஒரு நாத்தனார் என்று மாப்பிளை வீடு இருந்தது, அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டிலே இருந்தனர்.

 

 

மாப்பிள்ளைக்குத் தங்கை என்றால் உயிர் அவளுடைய பொறுப்பு அனைத்தும் அவனைச் சேர்ந்தது முடிந்த வரை இந்தச் சம்மந்தம் வேண்டாம் என்று மறுப்பை தெரிவித்து பார்த்தாள் ப்ரியா, ஒன்றும் வேலைக்காகவில்லை.

 

 

“சொத்து பத்து நிறைய உண்டு, நல்ல சம்பளம் மாப்பிளை பார்க்கவும் நன்றாக இருக்கிறான் அதோடு உனக்கும் வயது ஏறிக்கொண்டே போகிறது ஏற்கனவே திருமணம் நின்று போனது வேறு வெளியில் நிறைய பேருக்குத் தெரிந்துவிட்டது அதனாலேயே நிறைய வரன் தட்டி போய்விட்டது இவர்கள் பெரிதாக அதைப் பற்றிக் கவலைப்படவில்லை இதற்குமேல் என்னாலும் அப்பாவாலும் வரன் தேட முடியாது” என்றுவிட்டார் ஜெயந்தி.

 

 

 

அப்படித்தான் இந்தத் திருமணம் மண மேடைவரை வந்திருக்கிறது, மண்டப வாசலில் தங்களை காத்து நின்ற தங்கையை விழிவிரித்து பார்த்தாள் துர்கா, மைசூர் சில்க்கில் மெல்லிய பார்டர் வைத்த மஞ்சள் புடவை கட்டியிருந்தாள் நீண்ட கூந்தலை பின்னலிட்டு பூச்சூடி நின்றாள் வேறு அலங்காரம் ஒன்றுமில்லை.

 

 

அத்தனை நிமிர்வு கம்பீரம்… கொஞ்சம் மெருகேறியிருந்தாள், அவளுடைய தோற்றம் ஒரே நாளில் மாறியதல்லவே வேலை கிடைத்து போகத்தொடங்கிய புதிதில் தோற்றமோ உணவோ அவளுக்குப் பெரிதாகப் படவில்லை இரண்டு முறை மயங்கி விழுந்தபிறகு அவளுடன் ஹாஸ்டல் அறையில் தங்கியிருந்தவர்கள் அவளை நன்றாகப் பார்த்துக்கொண்டனர்.

 

 

கொஞ்சம் உடல்நிலை தேறியதும்  “துளசி உங்ககிட்ட பேசணும்” என்றார்கள்.

 

 

அவள் கேள்வியாக அவர்களைப் பார்க்க “உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எங்களுக்குத் தெரியாது, எங்களுக்கு இருக்குற பிரச்சனையைவிட உங்களுது பெருசான்னும் தெரியாது, உங்க பிரச்சனை எங்களுக்கோ எங்களுது உங்களுக்கோ தெரியவேண்டியதில்லை ஆனா ஒரு விஷயம்”.

 

 

“இந்த வயித்துக்கு நேரத்துக்குச் சாப்பாடு குடுக்கவும் நாலு முழம் துணி வாங்கி மானத்தை மறைக்கவும்தான் நாம கஷ்டப்படுறோம் எங்களுக்கு ஏன்னு கேக்க நாதியில்லை அவளுக்கு நான் எனக்கு அவ அவ்ளோதான், எங்கள்ல ஒருத்தருக்கு ஏதாவது ஆச்சுன்னா அடுத்தவங்க அநாதை”.

 

 

“வந்தநாள்ல இருந்து உங்களுக்கும் பெருசா யாரும் இருக்குற மாதிரி தெரியல உங்களை நீங்கதான் பாத்துக்கணும் நாம படுத்துட்டாலும் நம்மள நல்லா பாத்துக்க ஆள் இருக்கணும்னா ஒன்னு நல்ல சொந்தத்தோட பிறந்திருக்கணும் இல்ல காசோட பிறந்திருக்கணும் நமக்கு அந்தக் குடுப்பினை இல்லாதப்போ நம்மள நாமதான் பாத்துக்கணும்”.

 

 

 

“உள்ளுக்குள்ள எவ்ளோ வருத்தம் இருந்தாலும் அதை வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்ல, நாம நம்மள மதிப்பா உணர்ந்தாதான் மத்தவங்களும் நம்மள அப்படி பாப்பாங்க” என்று அவளுக்குப் புரியும்படி எடுத்துக்கூறினர்.

 

 

இரண்டு நாட்கள் ஓய்வில் அவர்கள் பேசியதை மீண்டும் மீண்டும் சிந்தித்துப்பார்த்தாள் அதன் பிறகு தன்னை மெல்ல மெல்ல மாற்றிக்கொண்டாள் கிடைப்பது என்னவானாலும் நேரத்திற்கு சாப்பிட தொடங்கினாள் உடையிலும் கவனம் வைத்தாள்.

 

 

யாரிடமும் கையேந்தாமல் தன்னுடைய உழைப்பில் கிடைக்கும் ஒரு பிடி உணவு அது தரும் தன்னம்பிக்கையே பெரிதல்லவா தன்னாலே நிமிர்வு வந்துவிட்டது, உறவுகளின் பேச்சுக்களை கடந்துபோக பழகிவிட்டாள் ஒருகட்டத்தில் அவர்களே அவளை விட்டுவிட்டு வேறு புதிய விவாதங்களுக்குச் சென்றுவிட்டார்கள் சாந்தா மட்டும் நேரம் கிட்டும்போதெல்லாம் அவளைக் குத்திக்கொண்டிருந்தார்.

 

 

ஜெயந்திக்கு துளசியை பார்த்ததும் முகம் மாறியது “வாங்க வாங்க” என்று துர்காவையும்  அவள் கணவனையும் வரவேற்றவர் அவளைப் பார்த்து முறைக்க அவளும் அவரை அப்படியே அழுத்தமாகப் பார்த்துவைத்தாள்.

 

 

“இவளை எதுக்கு கூட்டிட்டு வந்த” என்றவரின் கையைப் பிடித்து இழுத்துச்சென்ற துர்கா அவள் சாந்தாவிடம் பேசியதை கூறி “அவ பாட்டுக்கும் அமைதியா இருந்துட்டு போய்டுவா நீங்க அவளை ஏதாவது பேசுனீங்க மொத்தமா எல்லாத்தயும் போட்டு ஒடைச்சுடுவா”.

 

 

“முன்னமாதிரி இல்ல இப்போல்லாம் அப்போ அப்போ திருப்பிக் குடுத்திடுறா வீணா ஏதும் பிரச்சனை வேண்டாம்” என்க, மனத்தே இல்லாமல் அமைதியாக மணமேடைக்கு சென்றார் ஜெயந்தி.

 

 

திருமணம் முடிந்து பரிசு கொடுக்கத் துர்கா மேடையேறத் துளசி செல்லவில்லை அங்கு உணவும் உண்ணவில்லை.

 

 

“ரூம்க்கு வாடி” என்ற அக்காவிடம் “இல்ல நாளைக்கு வேலைக்குப் போகணும் கிளம்புறேன்” என்றவள் பிள்ளைகளுக்குத் துணி தின்பண்டங்கள் என்று அனைத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.

 

 

வீட்டை விற்பதை பற்றிய விவாதம் பெரிய அளவில் நடந்தது ஊரில் விசாரித்தவரை அதிகபட்சம் வீட்டோடு சேர்த்து என்பது லட்சம் சொன்னார்கள் “நானும் பார்கவியும் ஆளுக்கு முப்பத்தஞ்சு எடுத்துக்குறோமா துளசிக்கு அஞ்சு உன் பேர்ல அஞ்சு போட்டுக்கலாம்” என்றாள் துர்கா.

 

 

“அவளுக்கு அஞ்சா? ஏண்டி மத்தவங்க கேள்வி கேக்க மாட்டாங்களா, உங்க பெரிய தாத்தாவே போதும் பஞ்சாயத்தை கூட்ட துளசிக்கு அநியாயம் பன்றோம்னு வரிஞ்சுக்கட்டி வந்துடுவார், அதோட அவளுக்கும் உரிமைப்பட்ட சொத்து அவளே இதுக்கு ஒத்துப்பாளா தெரியல” என்றார் சாந்தா.

 

 

“மா என்னையும் பார்கவியையும் புகுந்த வீட்டில கேப்பாங்க அதோட ரெண்டு பிள்ளைங்களை பெத்து வெச்சுருக்கோம் அவளுக்குக் குடும்பமா குட்டியா, நீ என்னடி சொல்ற” என்றாள் துர்கா பார்கவியிடம்.

 

 

“ஆமா மா இவங்களும் கல்யாணம் நடந்தப்போ ஏதும் பெருசா கேக்கல ஆனா வெளிநாட்டுல வேலை பாக்குற மாப்பிள்ளைன்னா எவ்ளோ கேப்பாங்க இந்தப் பணம் கிடைச்சா எனக்கும் கொஞ்சம் கௌரவமா இருக்கும்” என்றாள் பார்கவி.

 

 

“சரி” என்ற சாந்தா வீட்டை விற்க ஆட்களை ஏற்பாடு செய்தார் இடையில் துளசியின் காதுக்கும் தகவல்கள் சென்று சேர்ந்தது, அவள் பெரிய தாத்தாவிடம் ஒரு உதவியைக் கேட்டிருந்தாள்.

 

 

நான்கு மாதங்களுக்குப் பிறகு பார்கவி மற்றும் குடும்பத்துடன் சாந்தா ஊர் வந்து சேர்ந்தார், வீட்டை வாங்குபவர் நேரில் வந்து ஒருமுறை வீட்டைப் பார்த்துப் பேசிச் சென்றார் அதன்படி அடுத்த ஒருவாரத்தில் பத்திரப்பதிவு நடத்த ஏற்பாடானது.

 

 

மகள்கள் அனைவரும் அன்று வீட்டில் குழுமியிருந்தனர் “பத்துமணிக்கு அங்க இருக்கணும் எல்லாரும் சாப்பிடுங்க கிளம்பலாம்” என்றார் சாந்தா.

 

 

“என் பங்கு எவ்ளோ” என்றாள் துளசி.

 

“இப்போ எதுக்கு அது சைன் பண்ணி காசுக் கைக்கு வந்ததும் உனக்குக் காசு கொடுப்போம்” என்றார் சாந்தா.

 

“என் பங்கு எவ்ளோ கேட்டேன்” என்றாள் அவள்.

 

“அஞ்சு” என்றாள் துர்கா.

 

“ஏன்?”.

 

“ஏன்னா நீ தனியாத்தானே இருக்க செலவு இல்லையே பெரிசா எங்களுக்குக் குடும்பம் இருக்கு” என்றாள்.

 

“தனியா இருந்தா எனக்குப் பசிக்காதா செலவு இருக்காதா இல்ல ஆசைதான் இருக்காதா, நீங்கக் குடும்பமா இருக்குறது நான் தனியா இருக்குறது எல்லாம் அவங்க அவங்க இஷ்டம் அதுக்கும் சொத்தைப் பிரிக்குறதுக்கும் சம்மந்தம் இல்ல என் பங்கு எனக்கு வரணும்” என்றவள் தாயை அழுத்தமாய் பார்க்க.

 

“ஆளுக்கு இருபத்தஞ்சு எடுத்துக்கோங்க என் பேர்ல அஞ்சு போட்டுருங்க” என்றார் சாந்தா, துர்காவும் பார்கவியும் அவளை அதிருப்தியாய் பார்த்து நின்றனர், கையெழுத்து இட்டு முடிந்ததுமே பணம் கைக்கு வந்துவிட்டது.

 

தன்னுடைய  பங்கை அப்படியே பெரியதாதாவிடம் கொடுத்த துளசி “எப்போ வரணும்” என்க.

 

 

 

“நாளைக்கு முடிச்சிடலாம்” என்றார் அவர்.

 

 

“என்னடி” என்ற தாய்க்கு எந்தப் பதிலும் அவள் கூறவில்லை மறுநாள் வேலை முடித்து அவள் வந்த பிறகே தெரிந்தது அதே ஊரில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒற்றை படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை அவள் பெயரில் வாங்கியிருக்கிறாள் என்று.

 

 

 

ஒரு ஹால், அடுக்களை கொஞ்சம் பெரிய படுக்கையறை என்று அடக்கமாக இருந்தது, வீட்டைச் சுற்றி  இடமும் இருந்ததது.

 

 

“இவளுக்கு என்ன பைத்தியமா இங்க எதுக்கு வீடு வாங்கிருக்கா” என்றாள் துர்கா, என்றால் துளசியின் எண்ணமே வேறாக இருந்ததது வீட்டின் ஒரு சாவியை தான் வைத்துக்கொண்டவள் ஒன்றை பெரிய தாத்தாவிடம் கொடுத்தாள்.

 

 

தாயின் அருகில் வந்தவள் “இது என் அப்பா பிறந்து வாழ்த்து சாம்பலா மறைஞ்சு போன இடம் இங்க கண்டிப்பா அவர் இருக்கார் உனக்கு இந்த ஊரை விட்டுப் போறது சுலபமா இருக்கலாம் என்னால முடியல, இப்போ வீட்டை வித்து குடுத்துட்டியே நாளைக்கே உன்னைப் பாத்துக்க மாட்டோம்னு உன் பொண்ணுங்க ரெண்டு பேரும் வெளில அனுப்பிட்டா சுருண்டு படுத்துக்க உனக்குன்னு ஒரு கூரை இருக்கா” என்றவள்.

 

 

 

“எனக்குச் சரியான தாயா நீ இல்ல ஆனா நான் விஜயகுமார் வளர்ப்பு எங்கயும் சோடைபோகமாட்டேன் பெரிய தாத்தா கிட்ட இருக்குற சாவி உனக்கானது, இந்த ஊருக்கு நீ எப்போ வந்தாலும் இந்த வீடு உனக்காக இருக்கும் யார்கிட்டயும் போய் நிக்காம இந்த வீட்டில நீ உரிமையோடு தங்கலாம் உன் கடைசி காலம்வரைக்கும் உன்னை யாரும் இங்கேயிருந்து வெளில போகச் சொல்லமாட்டாங்க” என்க கேட்டு நின்றவுடன் பிறந்தவர்களின் முகமே செத்துவிட்டது.

 

 

சாந்தா நிறையும் விழிகளோடு மகளைப் பார்த்துநிற்க “வாரத்துல ஒரு நாள் ஆள் வெச்சு சுத்தம் செய்யச் சொல்லுங்க தாத்தா நான் பணம் குடுத்துடுறேன், அப்புறம்  இன்னைக்கு ராத்திரி நான் கிளம்பிடுவேன் அதுக்குமுன்னாடி அடுப்படிக்கு தேவையான கொஞ்சம் சாமானை மட்டும் வாங்கி வெச்சுட்டு போறேன்” என்றவள் சாந்தாவின் புறம் திரும்பி.

 

 

“அந்த வீட்டில இருக்குற எந்தப் பொருளும் எனக்கு வேண்டாம் உன் பொண்ணுங்களுக்கு  குடுத்தது போக மிச்சத்தை வித்துடு” என்றதோடு கிளம்பி சென்றுவிட்டாள், சாந்திதாவிற்கு அதன் பிறகு எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

 

 

‘அவள் சொல்லிச்சென்ற அனைத்தும் உண்மைதானே நாளையே தன்னை பாரமாக இவர்கள் நினைத்து உதாசீன படுத்தினால் பெரிய மகளிடம் போ சின்ன மகளிடம் போ என்று பந்தாடினால் தனக்கு ஒரு போக்கிடம் இருக்கிறதா? அவளுக்கு மீண்டும் மீண்டும் அநியாயம் செய்துவிட்டேனா’ என்று அதே சிந்தனைதான்.

 

 

அக்காவும் தங்கையும் உனக்கு எனக்கென்று பொருட்களைப் போட்டி போட்டுப் பிரித்துக்கொண்டனர், அதோடு அங்கேயே தங்கியிருந்து அவர்களுக்குத் தேவையில்லாத பொருட்கள் அனைத்தையும் விற்று அந்தப் பணத்தையும் பங்கிட்டுக்கொண்டனர்.

 

 

அன்று இரவே துளசி சென்னைக்கு திரும்பிவிட்டாள், வந்து ஒருவாரம் ஆகிறது அன்று ஞாயிற்று கிழமை வண்டலூர் பூங்காவரை சென்றுவிட்டு வந்துகொண்டிருந்தாள், ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள் “செங்கல்பட்டு ஒன்னு” என்ற குரலில் திரும்பிப் பார்க்க.

 

 

நடத்துனரிடம் பயணசீட்டை  வாங்கிக்கொண்டு அமர இடம் தேடிய தமிழ்ச்செல்வனின் விழிகள் தன்னையே இமைக்காமல் பார்த்திருக்கும் துளசியின் மீது பதிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!