Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 17

நேற்று அரவிந்தனிடம் பேசிவிட்டு வந்ததிலிருந்து ரக்‌ஷி ஒருநிலையில் இல்லை.  அவளது மனம் பித்து பிடித்தது போல் தவித்துக் கொண்டிருந்தது.  எப்படியாவது அரவிந்தனிடம் இருந்து கனிமொழியை பிரித்துவிட வேண்டும், அவன் கனிமொழியை நினைக்கவே கூடாது என அவள் மனம் ஆங்காரம் கொண்டு அலைந்தது.

அதுமட்டுமில்லாமல் ரக்‌ஷி பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளை அப்படியே பாதியில் விட்டு சொல்லிக் கொள்ளாமலே அரவிந்தன் கிளம்பிச் சென்றது, அவளுக்கு ஆங்காரத்தைக் கொடுத்தது.  ஆத்திரம் அறிவை இழக்க செய்யும் என்பது போல, என்ன செய்கிறோம் என தெரியாமலே அமுதினிக்கு போன் போட்டு பேசியிருந்தாள்.

ரக்‌ஷி பேசுவதைக் கேட்டு முதலில் அமுதினிக்கு ஒன்றும் புரியவில்லை.  அப்பொழுதுதான் வேலையில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தவள், ரக்‌ஷியிடம் இருந்து போன் வரவே சந்தோஷமாகவே, “ஹாய் ரக்‌ஷி எப்படியிருக்க?” என எடுத்து பேசினாள்.

இதுவரை ரக்‌ஷி அவளிடம் போனில் எல்லாம் பேசியதில்லை, அந்த அளவு இருவருக்குமிடையே பழக்கமும் இல்லை.



Advertisement

அன்று வீட்டிற்கு வந்த போது அமுதினியின் போன் நம்பர் கேட்டு வாங்கியிருந்தாள்.  ரக்‌ஷியின் பெயரை டிஸ்பிளேயில் பார்த்ததும் ஆச்சர்யத்துடன் போனை அட்டென்ட் செய்து பேசினாள் அமுதினி.

அமுதினியின் நல விசாரிப்புகளுக்கு கூட பதில் சொல்லாமல், எடுத்தவுடனே அழுகை கலந்த சத்தத்துடன் திட்டுவது போல ரக்‌ஷி பேச ஆரம்பித்ததும் ஒன்றும் புரியவில்லை அமுதினிக்கு.

போக போக அவள் பேசியது புரியும் போலிருந்தாலும் ஏதோ உளறுகிறாள் என்று நினைத்தவள், இவளது அழுகையுடன் கூடிய சத்தமான பேச்சின் வீரியம் அவளை குத்தி கிழிக்க ஆரம்பித்தது.

Advertisement

அமுதினிக்கோ, முதலில் என்ன சொல்றா இவள்?  இரண்டு நாளைக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தப்ப கூட நல்லாதான மரியாதையா பேசனா..?  இப்ப என்ன ஆச்சு இவளுக்கு? ஏன் இப்படி கத்தறா..?  இதுல அழுகை வேற? என அவளுக்கு மிதமிஞ்சிய குழப்பமும் யோசனையும்.

Advertisement

ஆனால் அடுத்தடுத்து ரக்‌ஷியிடமிருந்து வந்த  வார்த்தைகள் எல்லாம் அவள் பொறுமையையும் நிதானத்தையும் சோதிப்பது போல வந்திருந்தது.

ரக்‌ஷிக்கு நேற்று அரவிந்தன் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் நடுவில் அப்படியே எழுந்து சென்றது ஆத்திரத்தைக் கொடுத்து, அவளின் ஆவேசத்தை தூண்டிவிட்டது.

அந்த கோவத்தில் தான் என்ன பேசுகிறோம்?  அதனால் என்ன நடக்கும்?  எதிராளியின் மனது இதனால் எத்தனை வேதனையடையும் என எதனையும் நினைத்து பார்க்காமல் பட படவென வார்த்தைகளை கொட்டியிருந்தாள்.

Advertisement

ஏன்? தான் இப்படி பேசுவதை வீட்டினருக்கு அமுதினி சொன்னால் என்ன ஆகும் என கொஞ்சம்கூட யோசிக்கவில்லை.  அந்த அளவுக்கு அரவிந்தன் மேலிருந்த ஆசை அவளை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது.  இதில் கனிமொழியின் மேலிருந்த பொறாமை வேறு புத்தியை செயலிழக்க வைத்து ஏறுக்கு மாறாக செய்யக் கூடாததை எல்லாம் செய்ய வைத்துக் கொண்டிருந்தது.

“எத்தனை நாளா ப்ளான் பண்ணீங்க? நல்ல வசதியான இடமா பார்த்து பிடிக்கனும்னு.  இதுல நீங்க மட்டும் இல்லாம உங்க தங்கச்சி வேற கூட்டா?  நீங்க மட்டும் தான் ப்ளான் பண்ணீங்களா? இல்ல உங்க குடும்பமேவா?”

“இருந்தாலும் இருக்கும்.  அதான் பார்த்தாலே தெரியுதே?  எங்க அத்தை ஹாஸ்பிட்டல்ல நல்ல பேர் எடுக்கற மாதிரி வேலை செஞ்சு சீன் போட்டு, எங்க அத்தையை அட்ராக்ட் பண்ணி, வீட்டுக்கு கொலுவுக்கு வந்து நல்லவ மாதிரி ஆக்ட் குடுத்து, அவங்கள கவர் பண்ணி எங்க அத்தை வீட்டுக்கே மருமகளா வந்துட்ட”.

“ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது.  பொண்ணுங்கனாலே தூர ஓடுற என் கௌதம் மாமாவையே வளைச்சு போட்டிருக்கேன்னா, நீ எந்த அளவு தில்லாலங்கடியா இருந்திருப்ப?  கேடிதான்” என நக்கலாக சிரித்தவள், “நீ ஒருத்தி மட்டும் போதாதுன்னு அடுத்து உன் தங்கச்சியா?  எங்க அத்தையோட மொத்த சொத்தையும் அமுக்க ப்ளான் பண்றீங்களா?  சூப்பர், அதுக்கு நான் விடமாட்டேன்” என ஆங்காரமும் அழுகையும் சேர்ந்த குரலில் கத்தினாள்.

அமுதினி, “ஏய்… வாயை அடக்கி பேசு.  என்ன பேசற நீ?  முதல்ல யார் கிட்ட பேசறோம்னு தெரியுதா?” என்றாள் கோவத்தை அடக்கிக்கொண்டு பல்லைக் கடித்தவாறே.

சின்ன பொண்ணு என்னவோ…, ஏதோ தெரியாம பேசறான்னு பொறுமையா இருந்தா… வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவாளா… என கோவம் வந்திருந்தது அமுதினிக்கு.

“ஏன் தெரியாம?  நல்லா தெரியும்.  உன்னையும் தெரியும் உன் குடும்பத்தையும் தெரியும்.  மாசா மாசம் சம்பளம் வாங்கி, வரவுக்கும் செலவுக்கும் கணக்கு பார்த்து காலத்தை ஓட்டற உங்களுக்கே இந்த திமிர் இருந்ததுன்னா, உங்கள மாதிரி ஆளுங்களுக்கு சம்பளம் குடுக்கற எங்கள போல ஆளுங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.  அதெல்லாம் நல்லாவே தெரியும் உன்னையும் உன் குடும்பத்தையும் பத்தி.  குடும்பத்தை பத்தி பேசுனதும் ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ”.

“என்ன?  வேலைக்கு போய், சம்பாதிச்சு,  சேர்த்து வச்சு கல்யாணம் பண்ண வேலைக்கு ஆகாதுன்னு, குறுக்கு வழில ப்ளான் பண்றீங்களா? அக்காவும் தங்கச்சியும்.  நீங்க இரண்டு பேர் மட்டும் தானா இல்ல, இன்னும் ஒருத்தி கல்யாணம் பண்ணிட்டு போனாளே அவளும் அப்படிதானா?”

“அதானே, அவள் மட்டும் என்ன யோக்கியமா? பணக்கார இடம்னு தெரிஞ்சதும், அக்காவுக்கு வந்த மாப்பிள்ளைன்னு கூடப் பார்க்காம, மயக்கி கல்யாணம் பண்ணிகிட்டவதானே அவளும்”.

“அவள் எப்படிப்பட்ட கேடியா இருந்திருப்பா?  கூட பொறந்த அக்காவுக்கே துரோகம் பண்ண குடும்பமாச்சே?  உங்ககிட்ட எல்லாம் நல்லதை எதிர்பார்க்க முடியுமா?” என வார்த்தைகளால் குதறியிருந்தாள் அமுதினியை.

“ஒழுங்கா உன் தங்கச்சி கிட்ட சொல்லி வை. என் வழில வந்தா சும்மாயிருக்க மாட்டேன்.  என்ன புரியலையா?  இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா? அவள் என் அரவிந்த் மாமா பின்னாடி அலையறததான் சொல்லிட்டிருக்கேன்”.

“நல்லா ஞாபகம் வைச்சுக்கோ.  எனக்கும் என் அரவிந்த் மாமாக்கும் தான் கல்யாணம்.  இது இன்னைக்கு நேத்து இல்ல.  நாங்க சின்னப் பிள்ளையா இருக்கறதுல இருந்தே எங்க வீட்டு பெரியவங்க பேசி முடிவு பண்ணது.  இதை கலைக்கணும்னோ, இல்ல மாத்தணும்னோ நினைச்சீங்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று கத்திவிட்டு போனை அவளாகவே கட் பண்ணிவிட்டாள்.

ரக்‌ஷி போன் வைத்தும் அமுதினி அப்படியே திக்பிரமை பிடித்துப்போய் அமர்ந்திருந்தாள்.  அவள்  இன்னும் காதில் கத்திக் கொண்டிருப்பது போன்ற பிரமையில் உணர்வற்று உட்கார்ந்திருந்தாள்.

ரக்‌ஷியின் நாராசமான பேச்சைக் கேட்டு அமுதினி இடிந்து போயிருந்தாள்.  கண்களில் இருந்து தானாகவே கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.  அவள் பேசின ஒவ்வொரு வார்த்தையும் இடியின் முழக்கம் போல் காதில் திரும்ப திரும்ப ரீங்காரமாகிக் கொண்டேயிருந்தது.

தன்னுணர்வு இல்லாமல் எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியவில்லை.  வெகு நேரம் அழுது கொண்டேயிருந்தவள் அப்படியே உறங்கியும் இருந்தாள்.

அமுதினிக்கு தன் மீதே கழிவிரக்கமானது.  ரக்‌ஷி கனியைப் பற்றி அரவிந்தனைப் பற்றி பேசியது எல்லாம் கூட பின்னுக்கு சென்றது.

தனது குடும்பத்தைப் பற்றியும், தங்கைகளைப் பற்றியும் பேசியதுதான் தாங்கவே முடியவில்லை.  ஆத்திரத்துடன் கூடிய அழுகை தொண்டையை அடைத்தது.

கௌதமை வீட்டில் பெரியவர்கள் பார்த்திருந்தாலும் அவளுக்கும் பிடித்துதானே திருமணம் செய்து கொண்டாள்.

ஒருவேளை ரக்‌ஷி சொல்வதுபோல் கௌதமிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ?  அதனால்தான் இன்னும் தன்னிடம் இயல்பாக பழகவில்லையோ என்ற சந்தேகம் முதன்முறையாக அழுத்தமாக எழுந்தது அவளுக்குள்.

அமுதினிக்கு தன்னை நினைத்தே அசிங்கமாக இருந்தது.  ஒரு சின்ன பெண் அவள் தன்னை இப்படி பேசியது நினைத்து அவமானம் பிடுங்கித் தின்றது.

ரக்‌ஷி பேசியதை வைத்து ஏதோ இவளே கௌதமை போர்ஸ் செய்து திருமணம் செய்துகொண்டது போல மனதில் உருவகம் செய்து கழிவிரக்கம் கொண்டு சுருண்டுவிட்டாள் மனதில்.

ஏற்கனவே அமுதினிக்குள் ஒரு சின்ன தடுமாற்றம் உண்டு, கௌதம் தன்னை நெருங்காததை நினைத்து.  இப்போது இத்துடன் அதுவும் சேர்ந்து அவளை பதம் பார்த்திருந்தது.

திருமணத்திற்கு பின்னான கணவனின் ஒதுக்கம் அவளை அச்சுறுத்திய போதெல்லாம், ஷ்யாமளாவின் மீதிருந்த மதிப்பும், கணவனின் மீதிருந்த பிடித்தமும் அவளை பொறுத்து போக வைத்தது.

அதுவும் சில நாட்களாக ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது.

திருமணமான இத்தனை மாதத்தில் கௌதம் அவளிடம் பேசிய தருணங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அப்போ நிஜமாவே அவங்களுக்கு என்னை பிடிக்கலயா?  அத்தை வற்புறுத்தினதினால என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா என  உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள்.

முதன் முதலாக நேற்றுதான் கணவன் மனைவி இருவரும் தனிமையில் சேர்ந்தாற்போல வெளியில் சென்று வந்தது.

நேற்று கணவன் தன்னிடம் காட்டிய கனிவிலும் அக்கறையிலும்  அவனின் ஒதுக்கத்தை மறந்து சற்று நெகிழ்ந்திருந்தவள், இன்றைய ரக்‌ஷியின் பேச்சில் துவண்டு விட்டிருந்தாள்.

எப்போதும் அமுதினி இரவு வீட்டினர் எல்லாம் வேலை முடித்து வரும்வரை முழித்திருந்து அவர்களுக்கு டின்னர் செய்து பரிமாறி விட்டுதான் உறங்கச் செல்வாள்.  ஷ்யாமளா வந்ததிலிருந்து அமுதினி கீழேயே வரவில்லை. ஒருவேளை வேலை முடித்து வந்த அசதியில் உறங்கிவிட்டாள்போல. ரெஸ்ட் எடுக்கட்டும் என நினைத்து அவளை தொந்தரவு செய்யாமல் விட்டிருந்தார்.

இரவு உணவுக்கு கூட கீழே வராமல் அப்படி என்ன செய்கிறாள் என மேலே அவளது அறைக்குச் சென்று பார்த்தார்.  அறைக் கதவு பூட்டியிருக்கவில்லை.  இலேசாக திறந்த மாதிரி தான் இருந்தது.  கதவை இரண்டு முறை தட்டிப் பார்த்தும் சத்தம் வரவில்லை என்பதால் கதவைத் திறந்து பார்த்தார்.

சோபாவில் அவள் படுத்திருப்பது மட்டும் தெரிந்தது அவருக்கு.  ஷ்யாமளா அறைக்கு உள்ளே செல்லவில்லை.  ஏன் இங்க படுத்து தூங்கறா என அறையின் வெளியிலேயே நின்று பார்த்தவர், அவள் தூக்கத்தை கெடுக்க விரும்பாமல், கதவை மூடிவிட்டு திரும்பவும் வந்து விட்டார்.

அரவிந்தன் வேலையில் இருந்து வந்ததும் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தார்.  அவன் இருந்த மனநிலையில் எதையும் கவனிக்கவில்லை.  நல்ல பசியில் இருந்தான்.  ஆதலால் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்.

சரியாக அந்த நேரம் கௌதம் வீட்டின் உள்ளே நுழைந்தான்.  அரவிந்தன் உண்டு கொண்டிருந்ததையும் ஷ்யாமளா பறிமாறிக் கொண்டிருப்பதையும்  பார்த்தவன் கேள்வியாக புருவத்தை சுருக்கி “ஏன்? ம்மா… நீங்க உட்கார்ந்திருக்கீங்க, இன்னும் தூங்காம?  அமுதினி எங்க?” என்றான்.

அவனைப் பார்த்தவர் “அனி தூங்கறா.  அதான் தொந்தரவு பண்ண வேணாமேன்னு, நானே டிபன் பண்ணிட்டேன்.  நீயும் சாப்பிட வா கௌதம்” என்றார்.

“ஈவ்னிங் ஸ்னாக்ஸ் சாப்பிட்டதே டம்னு இருக்கு ம்மா. பசியில்ல” என்றவன் மேலே அறைக்கு சென்றுவிட்டான். அப்பொழுது தான் அரவிந்தனும் கவனித்தான், அமுதினி அங்கு இல்லாததை.

அறையே கும்மிருட்டாக இருந்தது, அறைக்குள் நுழைந்து லைட்டைப் போட்டவனுக்கு, என்னாச்சு இவளுக்கு? நைட் லேம்ப் கூட போடாம தூங்கறா? என மனைவியின் அருகே சென்று நின்று பார்த்தான்.

சோபாவில் படுத்திருந்தவளது உடல் முழுதும் வேர்வையில் நனைத்திருந்தது. ஒரு கையில் போனைப் பிடித்த வாக்கில் தலைக்கு தலையணை கூட இல்லாமல் படுத்திருந்தாள்.

கண்கள் வீங்கி முகம் சிவந்து உப்பியிருந்தது.  கன்னத்தில் அழுததற்கான கண்ணீர் தடம் காய்ந்து இருந்தது.  அதைப் பார்த்து நெற்றி சுருக்கி யோசனையாக அவளருகே குனிந்தவன், அவளது கையில் இருந்த மொபைலை எடுத்து அங்கிருந்த மேசையில் வைத்து திரும்ப அவளிடம் வந்து நின்று பார்த்தான்.  அழுதாளா…?  ஏன்?  என்னாச்சு? ஈவ்னிங் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பும்போதுகூட நல்லாதான இருந்தா, அப்புறம் ஏன் அழுதிருக்கா? என யோசித்தவன், அதுவும் முகமெல்லாம் வீங்கி சிவந்து போற அளவுக்கு அப்படி என்ன ஆச்சு?  அம்மா ஏதாவது சொன்னாங்களா?  அதான் அழுதாளா என சிந்தித்தவன் அவளுக்கு ஏசியை போட்டுவிட்டு, உடையை மாற்றிக் கொண்டு அறைக் கதவை மூடிக் கொண்டு கீழே சென்றான்.

ஷ்யாமளாவும் அரவிந்தனும் இன்னும் அங்கேதான் இருந்தனர்.

அன்னையிடம் கேட்கலாம் என சென்றவனுக்கு தடுமாற்றம் வந்தது.  என்னன்னு ஷ்யாமளாவிடம் கேட்பது என்று தயங்கி நின்றான்.

இவனைப் பார்த்தவர் “என்னப்பா எழுந்துட்டாளா?  சாப்பாடு அங்கேயே வேணா… எடுத்துட்டு போய் குடேன் கௌதம்”. என்றார்.

“இன்னும் சாப்பிடலையா அவள்?” என்றான்.

“தெரியலையே.  நான் வந்ததுல இருந்து கீழயே வரல.  சரி சாப்பிடவாது கூப்பிடலாம்னு போனால் சோபாவிலயே படுத்து தூங்கிட்டிருந்தாள்.  டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு வந்துட்டேன்” என்றார்.

அப்ப அம்மாவும் எதுவும் சொல்லலயா.  என்னாச்சு?  ஏன் அழுதிருக்கா… என சிந்தனை ஓடியது கௌதமுக்கு.

“இல்ல, பாலாவது தரவா, கொண்டு போறியா?” என கேட்டார் ஷ்யாமளா.

“இல்லம்மா தூங்கட்டும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்…” என்றவன் மேலே சென்று விட்டான்.

அமுதினியின் அருகில் வந்து நின்று அவளையே சில நொடிகள் பார்த்திருந்தவன், “ஒரு தலையணையை எடுத்து அவளது தூக்கம் கலையாதவாறு மெல்ல தலையை தூக்கி வைத்து விட்டு, அவனும் சென்று படுத்துவிட்டான்”.

படுத்தவாக்கில் அமுதினியையே பார்த்திருந்தவனுக்கு, ஏன்? என்னாச்சு? ஏன் அழுதா? என்ற குழப்பத்தில் கண்ணெடுக்காது அவளையே பார்த்திருந்தான்.  மனைவியின் அழுகை அவனையும் இம்சிக்கதான் செய்தது.

ஒருவேளை நான் அவகிட்ட சரியா பேசறது இல்ல, பழகறது இல்லன்னு அழுதிருப்பாளோ.

தெரிஞ்சே அவளை ரொம்ப இம்சை பண்றேன்.  எனக்காக இல்லைன்னாலும் என்னை நம்பி வந்த அவளுக்காகவது என்னை நான் மாத்திக்கனும் என நினைத்தவன், மனைவியை பற்றிய சிந்தனையிலேயே உறங்கியிருந்தான்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!