Skip to content
Post Views: 3,415
அத்தியாயம் 7
விட்டு விட்டுச் செல்லும்
அலையை பார்த்த படி காத்திருக்கிறது
என் காதல் கரை!!!
Advertisement
எந்த ஒரு ஆணும் ஆவலுடன் எதிர்பார்க்கும் முதலிரவு. ஆனால் எரிச்சலுடனும் கோபத்துடனும் அமர்ந்திருந்தான் விக்ரம். அவன் ஆசைப் பட்ட திருமணம் தான், அவன் விரும்பிய பெண் தான் அவனுக்கு மனைவியாகியிருக்கிறாள். ஆனால் முழு சந்தோஷம் அவனுக்கு இப்போது இல்லை.
ரேகாவுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்ற கனவு அவனுக்கு நிறைய இருந்தது. ஆனால் அவன் கனவு எல்லாம் பொய்த்து போனதைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. அவன் கற்பனை அனைத்தும் இனி நடக்காதே என்பது தான் அவனுடைய இப்போதைய எரிச்சலுக்கு காரணம்.
Advertisement
Advertisement
இப்போதிருக்கும் மன நிலையில் கண்டிப்பாக அவளுடன் சேர்ந்து தன்னால் வாழ முடியாது என்று அவன் உணர்ந்தே இருந்தான். அவன் மனதில் இருக்கும் கோபம் முதலில் போக வேண்டும். அதன் பின்னர் தான் அவளுடன் அவனால் வாழ முடியும். இந்த கோபம் கடைசி வரை அவனை விட்டு போகுமா போகாதா என்று கூட அவனுக்கு தெரியாது. ஆனால் அவனுக்கு இப்போது பொறுமையாக இருப்பதை தவிர வேற வழியே இல்லை.
“எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவ கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கணும். அவளை வார்த்தையால காயப் படுத்தக் கூடாது. நான் அவ கிட்ட பேசாம இருந்தா அவளே என்கிட்ட பேசாம ஒதுங்கி போயிருவா. ஆமா அவ கிட்ட பேச்சே குடுக்க கூடாது. கோபத்துல அவளை ஏதாவது திட்டினா அது எனக்கும் தான் வருத்தமா இருக்கும். அவளையும் கஷ்டப் படுத்தி நானும் கஷ்டப் படுறதுக்கு மௌனமாவே இருக்கலாம்”, என்று எண்ணி அவளிடம் பேசக் கூடாது என்று தீர்மானம் எடுத்தான் விக்ரம்.
Advertisement
ஏனென்றால் இருக்கும் கோபத்தில் அவளை கட்டாயம் காயப் படுத்தி விடுவோம் என்ற பயம் அவனுக்குள் இருந்தது. சுற்றி சுற்றி அவளைப் பற்றியே நினைவுகளே அவனுக்கு எழுந்தது. அதனால் அந்த அறைக்குள் இருப்பது மூச்சடைப்பது போல இருந்தது விக்ரமுக்கு.
அறையின் பின் பக்க கதவை திறந்து கொண்டு பால்கனியில் வந்து நின்றான். முகத்தில் ஜில்லென்று குளிர் காற்று பட்டதும் அவன் மனப் புழுக்கம் கொஞ்சம் குறைவது போல இருந்தது. அப்போது அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்க்காமலே ரேகா தான் வருகிறாள் என்று எண்ணிக் கொண்டான். மீண்டும் கதவை அடைக்கும் சத்தத்தில் “உள்ள வந்து கதவை பூட்டுறா போல?”, என்று எண்ணிய விக்ரமுக்கு எங்கே திரும்பி அவளைப் பார்த்தால் ஏதாவது விபரீதமாக ஆகி விடுமோ என்ற பயம் வந்தது. அதனால் திரும்பாமலே தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றான்.
என்ன தான் அவளைத் திரும்பிப் பார்க்க கூடாது என்று நின்றாலும் அவள் தன்னுடைய அறைக்கு வந்தது அவனுக்கு ஒரு வித நிறைவையும் தந்தது. அவள் அவனுடைய அறையில் இருக்கிறாள் என்பதே அவனுக்கு பிரம்மிப்பைக் கொடுத்தது. எத்தனை நாள் கனவு இது? அவனுடைய மனம் கவர்ந்தவள் இன்று அவன் மனைவி. என்பதே அவனுக்கு அவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்தது.
கூடவே “இவ ஏன் நல்லவளா இல்லாம போனா?”, என்ற கேள்வியும் எழுந்தது. திரும்பினால் கட்டாயம் அவளிடம் கோபமாக பேசி விடுவோம் என்று எண்ணி அப்படியே நின்றான்.
அறைக்குள் வந்த ரேகா அந்த அறையைச் சுற்றி கண்களை ஓட்டினாள். மிகப் பெரியதாக இருந்தது அந்த அறை. சினிமாவில் எல்லாம் வருவது போல அறையின் நடுவில் பெரிய கட்டில் போடப் பட்டிருந்தது.
அந்த கட்டில் முழுக்க பூக்களால் அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. அறையில் இருந்த பூக்களின் நறுமணம் அவள் மனதை மயக்கியது. அவனை எங்கே என்று தேடினாள். பால்கனியில் கைகளைக் கட்டிக் கொண்டு முதுகு காட்டி நின்றிருந்தான் விக்ரம்.
அகன்ற தோள்களும், விறைப்பான உடலும் என ரோமானிய சிற்பம் போல நின்றவனை ஒரு நொடி பார்த்த படி நின்றாள் ரேகா. இந்த ஆணழகன் எனக்கானவன், எனக்கு மட்டுமே சொந்தமானவன் என்று கர்வம் அவளுக்கு வந்தது.
“எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்ப ரேகா? அவன் கிட்ட போய் பேசு”, என்று மனசாட்சி குரல் கொடுத்தாலும் ரேகாவுக்கு அவனை நெருங்க பயமாக இருந்தது.
“இப்படி பயந்துட்டே எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்? அவன் யாரு, உன்னோட கணவன் தானே? அவன் என்ன கோப பட்டாலும் உன்னோட மனநிலையை அவனுக்கு விளக்கிச் சொல்லு. அதை விட்டு இப்படி தள்ளி நின்னால் ஆச்சா?”, என்று கேள்வி கேட்டது அவள் மனது.
“ஆமா ஆமா பேசணும். என்னைப் பத்தி புரிஞ்சிக்கிட்டான்னா என் மேல கோப பட மாட்டான். ஏற்கனவே எல்லாரும் இவன் காலேஜ்ல வச்சே என்னை விரும்பிருக்கான்னு சொல்றாங்க? அப்ப எப்படி என்னை வெறுப்பான்? கோப பட்டாலும் தாங்கிக்கிட்டு அவன் கிட்ட என் மனசை புரிய வைக்கணும். அப்புறம் அவன் கூட சந்தோஷமான வாழ்க்கை வாழனும்”, என்று எண்ணிக் கொண்டே கையில் இருந்த பால் சொம்பை அங்கிருந்த டேபிள் மீது வைத்து விட்டு பால்கனி நோக்கி அடி மேல் அடி வைத்து நடந்தாள்.
அவள் காலடி ஓசை தன்னை நோக்கி வருவதை உணர்ந்த விக்ரமோ “இன்னைக்கு இவ என்கிட்ட வாங்கிக் கட்டிக்காம போக மாட்டா போல”, என்று எண்ணிக் கொண்டு திரும்பாமலே நின்றான்.
அவனுக்கு பின்னே சற்று இடைவெளி விட்டு நின்ற ரேகா அவனை எப்படி அழைக்க என்று தயக்கமாக நின்றாள். இருக்கும் சூழ்நிலை புரியாமல் “அத்தான்னு சொல்லு, மாமான்னு சொல்லு, இல்லைன்னா என்னங்கன்னு கூப்பிடு”, என்று அவள் மனதே அவளைக் கலாய்த்துக் கொண்டிருந்தது.
அதை அடக்கியவள் ஆழ்ந்த மூச்சை வெளியீட்டு தன்னுடைய டென்சனைக் குறைத்தாள். அதே நேரம் அவள் என்ன செய்யப் போகிறாள், என்ன பேசப் போகிறாள் என்று எண்ணி டென்ஷன் அதிகமானது விக்ரமுக்கு.
தைரியத்தைக் கூட்டி “விக்ரம்”, என்று அழைத்தாள் ரேகா. அவள் அத்தான், மாமா என்று அழைத்திருந்தாலாவது ஒரு சிரிப்போடு அவளைத் திரும்பிப் பார்த்திருப்பான்.
ஆனால் இப்போதோ உணர்ச்சிகளற்ற குரலில் “என்ன?”, என்று திரும்பாமலே கேட்டான்.
“உள்ள வாங்களேன், உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”
“எனக்கு பேச ஒண்ணும் இல்லை. பேசுற மனநிலையிலயும் நான் இல்லை. நீ போய் படு”, என்று தன்மையாகத் தான் சொன்னான். அவளும் சரி என்று போயிருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு “பிளீஸ் விக்ரம், கொஞ்சம் பேசலாமே? காலைல இருந்து உங்க கிட்ட பேசணும்னு வெயிட் பண்ணுறேன். ஆனா எனக்கு சான்ஸ் கிடைக்கவே இல்லை. ஒரு அஞ்சு நிமிஷம்.. பிளீஸ்”, என்றாள்.
“ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா? பேச ஒண்ணும் இல்லைனு சொல்றேன்ல? போய் படு போ”, என்றவன் குரலில் சிறு எரிச்சல் தென்பட்டது.
“பிளீஸ் விக்ரம் ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம். என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே எனக்கு புரியலை. எனக்கு காலைல உங்களை பாத்தப்ப சத்தியமா நீங்க தான் மாப்பிள்ளைன்னு தெரியாது. கொஞ்சம் என் பக்கம் இருந்து யோசிச்சு பாருங்க. பிளீஸ், என்கிட்ட பேசுங்க”, என்று அவள் சொன்னதும் “ஷட்டப் ஓகே”, என்று கத்திய படியே திரும்பினான் விக்ரம்.
அவன் கத்தியதும் மிரண்டு ஒரு அடி பின்னே வந்தாள் ரேகா. அவள் அவனை பயப் பார்வை பார்க்க அவனோ வெறுப்புடன் பார்த்தான். ஜீப்பில் வைத்து இப்படி நேருக்கு நேர் பார்க்கும் போது இருவர் கண்களிலும் மயக்கமும் காதலும் இருந்தது. ஆனால் இப்போதோ அவள் பார்வையில் பயமும் அவன் பார்வையில் வெறுப்பும் மட்டுமே இருந்தது.
“பேசு பேசுன்னு இப்ப வந்து சொல்ற? காலைல நான் பேச வந்தப்ப என்னை பேச விட்டியா டி? பெரிய இவ மாதிரி என்னை பேச விடாம செஞ்ச. இப்ப நான் எதுக்கு உன்கிட்ட பேசணும்? பேச மாட்டேன். எதுவும் பேச மாட்டேன். உன்னைச் சுத்தி என்ன நடக்குது, நான் யாரு, எனக்கு உன்னை எப்படி தெரியும்னு எந்த கேள்விக்கும் நான் உனக்கு விடை சொல்ல மாட்டேன். நான் சொல்லாம உனக்கு எதுவும் தெரிய வராது. யோசிச்சு யோசிச்சு சாவு. ஏன்னா நீ ஒரு சுயநலவாதி. சந்தர்ப்பவாதி. உன்னைப் பாக்கவே எனக்கு பிடிக்கலை. தயவு செஞ்சு என்கிட்ட பேசி என்னை
வெறுப்பேத்தாத. இது தான் நான் உனக்கு கொடுக்குற தண்டனை”, என்று சொல்லி விட்டு விறுவிறுவென்று அறைக்குள் நுழைந்தான்.
அவனை இப்போது சமாதானப் படுத்த முடியாது என்று உணர்ந்த ரேகா அவன் பின்னேயே வந்து “பாலாவது குடிங்க. வீணா போயிரும்”, என்றாள்.
“என்னோட வாழ்க்கையே வீணாப் போச்சு. இதுல இந்த அரை லிட்டர் பால் வீணாப் போறது பெரிய விஷயமே இல்லை ஓகே”, என்று விரக்தியாக சொன்னான்.
“எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க? எனக்கு கஷ்டமா இருக்கு. கொஞ்சம் பேசினா எல்லாமே சரியாகிரும் விக்ரம்”, என்று அவள் கேட்டதும் “அப்ப நீ என்னை பேச விட்டுருக்கணும். செஞ்சியா நீ?”, என்று அவனும் பதிலுக்கு கேட்டான்.
“தப்பு தான். அதுக்கு மன்னிப்பு வேணும்னா கேக்குறேன்”, என்று தாழ்ந்த குரலில் சொன்னாள்.
error: Content is protected !!